ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/இராசீவ் காந்தி நலனுக்காக இரண்டு பெரிய வேள்விகள்

விக்கிமூலம் இலிருந்து

இராசீவ்காந்தி நலத்துக்காக இரண்டு பெரிய வேள்விகள்!

நாட்டு மக்கள் நலனுக்காக என்று கூறிக்கொண்டு, இராசீவ் காந்தி நலம்பெற வேண்டும் என்று அண்மையில் தில்லியில் இரண்டு பெரிய வேள்விகளை(யாகங்களை)ச் செய்திருக்கின்றனர், அரசைச் சார்ந்தவர்கள், மக்களின் வரிப்பணம் எந்தெந்த வகையில் பாழடிக்கப் பெறுகின்றது என்று நன்கு உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

தில்லி, ‘சப்தர்சங்’ வீதி 15ஆம் எண் குடியிருப்பில் இந்த வேள்வி நடந்தது.

இதன் பொருட்டு, பெங்களூரிலிருந்து தனிச்சிறப்புத் தொடர்வண்டியில் 200 சடங்காசிரியர்கள்(புரோகிதர்கள்) தில்லிக்கு அழைத்து வரப்பெற்றனர்.

அவர்களுடன் சமையல்காரர்கள் பலர், நாதசுரக் குழுவினர், தொலைக்காட்சிப் படப்பிடிப்புக் குழுவினர் என்று சிறியதொரு கூட்டமே தில்லி வந்திருந்தது.

வேள்வியை நடத்த 10 ஆயிரம் தேங்காய்கள், ஏறத்தாழ 2,250 அயிர எடை(கிலோ) தூய்மையான ஆவின் நெய் தில்லிக்குக் கொண்டுவரப் பெற்றன.

பூசைக்கென 4000 உருபா மதிப்புள்ள பூக்கள் நாள்தோறும் வானூர்தி வழியாகத் தில்லி வந்திறங்கியது.

வேள்வியில் ஈடுபட்ட சடங்காசிரியர்(புரோகிதர்)களுக்கு நாள்

ஒன்றுக்கு 100 உருபா முதல் 250 உருபா வரை காணிக்கையாக வழங்கப் பெற்றிருக்கின்றது.

இது தவிர ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டு வேட்டி, பட்டு மேலாடை, இரண்டு இணை நூல் வேட்டிகள், துண்டுகள் ஆகியவையும் தரப்பெற்றிருக்கின்றன.

சடங்காசிரியர்(புரோகிதர்)கள் தில்லியில் பல்வேறு உயர்விடுதிகளில் தங்க வைக்கப் பெற்றுள்ளனர். வேள்வி நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர மூர்த்தியின் வளமனைக்கு நாள்தோறும் சிறப்புப் பேருந்துகளில் மிகுந்த பாதுகாவலுடன் அழைத்துவரப் பெற்றனர். வேள்வி முடிந்த பிறகு அச் சடங்காசிரியர்களும் அவர்களுக்கு அவர்களுடன் வந்த பிறரும் தில்லி நகரைச் சுற்றிப் பார்க்கவும், அரித்துவாரம், இரிசிகேசம் ஆகிய புண்ணிய இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன.

வேள்வி நடந்த இடத்திற்குத் தலைமையமைச்சர் வந்து வேள்வியைத் தொடங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன. ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அவ்வேற்பாடு தவிர்ந்துபோய், வேள்வி செய்த சடங்காசிரியர்களே தலைமையமைச்சரின் இல்லத்துக்கே சென்று அவருக்காகச் சில சடங்குகளைச் செய்துள்ளனர்.

இந்த வேள்வியின் ஒரு பகுதியாக ஓர் இலக்கம் கொழுக்கட்டைகள் பிள்ளையாருக்குப் படைக்கும் லட்ச மோதக் கணபதி ஓமம் என்னும் வேள்வியும் நடத்தப் பெற்றது.

இந்த வேள்வியைத் தலைமை தாங்கி நடத்திய ‘சாமா பட்’ என்பவர், இதுபோன்ற மிகப் பெரிய வேள்வி வடமாநிலத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகே நடத்தப்படுவதாகவும், மகாபாரதப் போருக்குப் பிறகு தருமரின் நலனுக்காக உதிட்டிரர் நடத்திய அரசசூய வேள்விக்குப் பிறகு நடத்தப்படும் பெரிய வேள்வி இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேள்வியில்லாமல், குருசேத்திர நகரில் சில அனைத்துலகத் தரகு வாணிகங்களில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படும் சந்திரசுவாமி என்பவரும் ‘சகச்ர சண்டி மகா யக்ஞம்’ என்னும் ஒரு பெரும் வேள்வியையும் 5 சடங்குப் பண்டிதர்களைக் கொண்டும் நடத்தினார் என்றும் கூறப் பெறுகிறது.

‘நீர்ச்சீலை’ (கோவணம்) கட்டாத ஊரில் நீர்ச்சீலை கட்டியவன் பித்தன் என்னும் பழமொழிப்படி நாடு நடந்து போய்க் கொண்டுள்ளது.

- தமிழ்நிலம், இதழ் எண். 93, 1987