ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/கோயில்களில் உள்ள ஆரிய இடைத் தரகர்களை அகற்றுக!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
கோயில்களில் உள்ள ஆரிய இடைத் தரகர்களை அகற்றுக

ல்லாம் வல்ல ஒர் இறைப் பேராற்றல் இவ் வனைத்து உலகங்களையும் கட்டியாண்டு கொண்டிருப்பதை அறிவியலும் மறுத்ததில்லை. அவ்வாற்றல் கல், மண் என்ற வேற்றுமையின்றி, அனைத்துக் குற்றுயிர்களிலும் சிற்றுயிர்களிலும் ஊடுருவி, யாவற்றையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதையும் உள்ளொளி சான்ற எவரும் மறுக்க முடியாது. அவ்வாற்றலே அறிவாயும் அறியப் பெறும் பொருளாயும் புடைபெயர்ச்சி மாறி, அதுவதுவாய் இப் பேரண்டங்கள் அனைத்திலும் நின்று இயங்கியும் இயங்குவித்தும் வருவதை உளத்தாலும் உணரலாம்; அறிவாலும் அறியலாம். இல்லை என்றாலும் அதுதான்; உண்டு என்றாலும் அதுதான். இவ்வாற்றலை அது என்னலாம்; அவன் என்னலாம்; அவள் என்னலாம். சொற்களாயும், சொற்படு பொருள்களாயும், பொருளுறு வடிவங்களாயும், வடிவமை குணங்களாயும், பன்னூறாயிரம் வேற்றுமை மாற்றங்களால் இயங்குவனவாயும் உள்ள அம் மெய்ப்பெரும் பரம்பொருளை எனது என்றும் உனது என்றும் வகுப்பவனும், வகுத்துப் பேசுபவனும் கல்லாத மூடனாகவோ, கற்றறிந்த பேதையாகவோ, அன்றி வல்லடி வழக்கனாகவோதான் இருத்தல் வேண்டும். உலகத்துப் பொருள்களையே எனது உனது என்று பேசுதல் அறியாமை யாகின்ற பொழுது, உலகப் பொருள்களை யெல்லாம் உள்ளடக்கிக்கொண்டு கிடக்கும் ஓர் ஆற்றலை, மெய்ப்பொருளை, என்னுடையது என்றும், உன்னுடையது என்றும் பேசும் அறிவிலிகள் எச்சமயத்தைச் சார்ந்தவராயினும் அவர்கள் உலக வியக்கத்திற்கு மாறுபட்டவரே யாவர்.

இம் மெய்ப்பொருளுக்குக் கோயில் தேவையில்லை; கோலங்களும் தேவையில்லை. இவ்வுலகமே, ஏன் இப் புடவியே(பிரபஞ்சமே) அதன் திருக்கோயில், இவ்வுலகப் பொருள்களே அதன் திருக்கோலங்கள். அறிவறிந்த மெய்யறிவோனுக்கு மலமும் சந்தனமும் ஒன்றுதான்; மண்ணும் பொன்னும் ஒன்றுதான்; இலையும் பூவும் ஒன்றுதான்; அஃதாவது ஒரே மதிப்புடையவைதாம். ஆனாலும் அறிவறியாப் பொது மாந்தர்க்குக் கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. இந்தக் கற்பிதங்கள்தாம் பொருள்களாயும் அவற்றின் வேறுபாடுகளாயும் உலகத்தில் நின்று நிலவுகின்றன. கற்பித அறிவையே சமய நூலார் மாயையாக உருவகித்துள்ளனர். கற்பிதம் என்பது ஒன்றை ஒன்றாகக் கருதிக் கொள்வது. தாயை முதற்கடவுள் என்பதும், தந்தையும் அவர்போல் உள்ள பெரியோரும் வணங்கப் பெறுவதும் இக்கற்பிதத்தின்பாற் படுவனேயாம். மெய்ப்பொருளியலை எந்த இங்கர்சாலாலும், மார்க்சாலும், பெர்ட்ரண்டு ரசலாலும், ஓமரினாலும், சின் மெசிலியராலும் மறுத்துவிட முடியாது. அறிவியற் பேராசிரியர்களான நியூட்டன், எடிசன், ஐன்சுடைன் ஆகியோரும் இறையாற்றலை ஒப்புகின்றனர். அறிவியல் உணர்ந்த எவனும் மெய்யறிவியலை ஒப்புக்கொண்டுதான் ஆதல் வேண்டும். அறிவியல் அடிப்படையை உணராதவனே இறைப்பேராற்றலை மறுக்கின்றான். இவ்விடத்து நம் நாட்டில் பரப்பப் பெற்றுள்ள கற்பிதப் பூசல்கள் நிறைந்த ஆரியச் சமயப் போலித்தனங்களையும் உணர்ந்தே கூறுகின்றோம்.

ஆனால் மெய்யறிவியலும், உலகியற் கற்பிதங்களும் எந்தச் சமயத்திற்கோ, எந்த ஒரு சமயக் குரவர்க்கோ உடைமைகள் அல்ல. இன்று உலகில் உள்ள மதங்கள் யாவும் உலகியற் பொருள்களைப் போன்ற கற்பிதங்களே! இம் மதத்தில்தான் உண்மையிருக்கின்றது. இதில் இல்லை; என்று பேசுபவன், ‘கதிரவன் என் நாட்டில்தான் இருக்கின்றது; வேறெந்த நாட்டிலும் இல்லை’ என்று பேசும் பேதையைப் போன்றவனே யாவான். மதக் கற்பிதங்கள் குல வேறுபாடுகளைப் போல் பூசல்களை விளைவிப்பவையே யாகும். குலங்களில் எவ்வாறு உயர்வு தாழ்வு கற்பிக்கப்பெற்றதோ, அவ்வாறே மதங்களிலும் உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பெற்றன. கற்பனை என்பதும் ஒருவகை உண்மையே. இல்லாத ஒன்றை எவரும் கற்பனை செய்துவிட முடியாது. கற்பனை செய்தவை யாவும் நமக்கு உகந்தவையாக விருக்கலாம்; உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் உகந்தவையும், உண்மையும் அவைமட்டுந்தாம் என எண்ணிவிடக் கூடாது. நம் அடுப்பில் உள்ள நெருப்பும் நெருப்புத்தான். கதிரவன் நெருப்பும் நெருப்புத்தான். அதனால் நெருப்பு என்பதே கதிரவன் தான் என்பதோ, நம் அடுப்பில் இருப்பது தான் என்பதோ அறியாமை யாகும். இனி புறநெருப்பாக வன்றி அக நெருப்பாய் உள்ள மிளகாய் போலும் பொருள்களும் உள்ளனவென்று அறிதல் வேண்டும்.

இறைப்பொருளும் அப்படித்தான். இதை எழுதுபவனும் அவன் எண்ணும் கருத்தும், இக்கருத்தைப் புறப்படுத்திக் காட்டும் இவ் வெழுத்துகளும், அவ் வெழுத்துகளைப் படிக்கும் நீங்களும் இன்னும் யாவும் மெய்ப்பொருளின் கூறுபாடுகளே! ஒப்புதலும் மறுப்பும், விருப்பும் வெறுப்பும், அன்பும் சினமும், குளிர்ச்சியும் சூடும், உண்டும் இல்லையும் அப்பொருளின் கற்பிதத் தோற்றங்களே! இவையல்லாமல் நேரடியாக இறைப்பொருளை நுகர்பவர்களுக்கு இக் கற்பித அலகுகள் தேவையில்லை. காற்றை இயற்கையாக நுகர்பவர்க்கு விசிறியின் வீசல் தேவையில்லை யன்றோ?

ஆனாலும் மெய்ப்பொருளின் கற்பிதங்களாக வுள்ள கோயில்களும் அவற்றின் கற்பித வழிபாடுகளும் பொது மாந்தர்க்கு – அஃதாவது காற்றை நேரடியாக நுகரவியலாதவர்க்கு – ஒருவகையில் தேவையே! கால விரிவில் அவையும் மக்கட்குத் தேவையில்லாமல் போகலாம். அதுவரை கோயில்களும் இருக்கலாம்; அங்கு வழிபாடுகளும் நிகழலாம். ஆனால் அவை குறிப்பிட்ட ஒருவர்க்குத்தான் சொந்தம்; பிறரெல்லாம் ஒதுங்கி நிற்கத்தான் வேண்டும் என்பவர்கள் மத வெறியர்களே – மதத் திருடர்களே ஆவர். அவர்கள் என்ன இனத்தவராயினும், எச்சமயத்தைச் சார்ந்தவராயினும் அவர்களைக் குமுகாயக் குற்றவாளிகளாக்கிக் கூண்டில் நிறுத்துதல் வேண்டும். மதத் துறையிலும், மக்கள் உரிமை முறைகளிலும் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்லும் அவர்களை வாழ்நாள் சிறைத்தண்டனைக் குள்ளாக்கி மக்களினமற்ற ஒரு தனித்தீவில்கூடக் குடியேற்றலாம்.

கோயில்களில் இருக்கும் வடிவங்களில் மட்டுமே இறைப் பொருள் இல்லை. உலக அனைத்துப் பொருள்களிலும் அப் பொருள் அதுவதுவாக நின்று இயங்குவதை எவரும் உணரலாம்; எவர்க்கும் உணர்த்தலாம். இத்தகைய புறவெளிச் சமயக் கோட்பாடுகளும், அகவொளிச் சமயக் கோட்பாடுகளுந்தாம் மாந்தர் யாவர்க்கும் ஏற்றவை, தக்கவை. பிறவெல்லாம் பூசல் விளைப்பவை. இயற்கை வழிபாடுதான் தமிழ்வழிபாடு. சிவனியமும் மாலியமும் இயற்கை திரிந்த வழிபாடுகளின் விரிந்த கூறுபாடுகளே! ஒரு கூம்பின் முனையை இயற்கை வழிபாட்டிற்கு இணையாகக் கூறினால், அதன் விரிந்த அடிப்பகுதியைச் சமயங்களுக்கு ஒப்பிடலாம். ஆரிய மதங்களின் ஊடுருவலுக்குப் பின்னர்தான் தமிழ் வழிபாடு தன் தூய்மையினின்று நெகிழ்ந்தது. இறைவழிபாட்டிற்கு மந்திர மாயங்கள் தேவையில்லை. இக்கரண முறை ஒரு திருமணத்தில் நிகழ்த்தப்பெறும் முன், பின் சடங்குகளைப் போன்றவையே! திருமண நிகழ்ச்சி மாந்த உலகியல் ஒழுக்கத்திற்குத் தேவையானது. ஆனால் இறைவழிபாடு வெறும் உலகியல் ஒழுக்க நிகழ்ச்சி மட்டுமன்று; இயற்கை நிகழ்ச்சி. ஆம், மூச்சை நாம் நம்மையறியாமல் உள்ளிழுத்து வெளிவிடுதலைப்போல் – நம்மையறியாமல் நம் அகப்புற உறுப்புகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் போல், நம்மையறியாமல் நாம் இறைப் பரம்பொருளை வழிபட்டுக்கொண்டும், அதனுள் நாம் ஊடுருவிக் கொண்டும் நம்முள் அஃது ஊடுருவிக்கொண்டுமாய் இருக்கின்றோம். இந்நிலையில் வழிபாடு எற்றுக்கு? மேலும் சிற்றறிவும் சிறுதொழிலும் கொண்ட சிற்றுயிர்களாகிய நம் வழிபாட்டைப் பேரறிவும் பெரும் பேராற்றலும் பெருவினையும் கொண்ட மெய்ப்பரம்பொருள் விரும்புவதென்பது ஒரு கற்பித நினைவே! இது நிகழ்ந்தாலும் ஒன்று தான்; நிகழவில்லையானாலும் ஒன்றுதான்; ஆனாலும் உலகியல் நடப்பின் ஒழுகலாறு வேண்டியும் சிற்றுயிர்களின் மனவளர்ச்சி வேண்டியும் மொய்ம்பு நிலை பெற்ற முனிவோர் கோயில் வழிபாடுகளைப் பொதுவியல் மாந்தர்க்குப் பொதுவென்றாக்கினார்.

இனி, வழிபாடே பொதுவென்பது உலகியற் பொதுவறமாய் இருக்க, அதைச் சமசுக்கிருதத்தில்தான் ஆற்றுதல் வேண்டும்; அதுவும் ஓர் ஆரியப் பார்ப்பானைக் கொண்டு தான் செய்விக்க வேண்டும் என்பதும், அதற்குப் பார்ப்பனப் பரம்பரையே மடிகட்டிக்கொண்டு முன்னிற்பதும் கண்டிக்கத் தக்கவை; அதுவும் ஒர் ஆரியப் பார்ப்பானைக் கொண்டுதான் செய்விக்க வேண்டும் என்பதும், அதற்குப் பார்ப்பனப் பரம்பரையே மடிகட்டிக்கொண்டு முன்னிற்பதும் கண்டிக்கத் தக்கவை; கடியத்தக்கவை; மீறினால் தண்டிக்கத் தக்கவை. எனவே கோயில்களில் தமிழிலும் வழிபாடு செய்யலாம் என்று பெரியதொரு புரட்சி மாற்றத்தைச் செய்து கர்ட்டிய தமிழக அரசு, இவ்வாரியப் பார்ப்பனர்களின் அரற்றலுக் கெல்லாம் அஞ்சாமல், ஆரியப் பார்ப்பனர்கள் கோயில்களில் இடைத் தரகராயும் இருக்கத் தேவையில்லை என்பதையும் செயலுக்குக் கொணர்தல் வேண்டும். இரண்டுக்கும் ஒரே வகையான எதிர்ப்புத்தானே வரும். அதை மானமுள்ள தமிழர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

அண்மையில் சென்னையில் நடந்த இந்து தேவாலயப் பாதுகாப்பு மாநாட்டில் ஆரியப் பார்ப்பனரும் அவர்களைச் சார்ந்த வல்லடிமைத் தமிழர்களும் கொணர்ந்த தீர்மானங்கள் எந்தத் தமிழனின் குருதியையும் கொதிப்பேறச் செய்வன. “கோயில் ஆள்வினைகளை அரசினர் ஏற்கக் கூடாதென்பதும், நடைபாதைக் கோயில்களை அரசினர் அகற்றக் கூடாதென்பதும், தியாகராயர் நகர்த் திடீர்ப் பிள்ளையாரை மீண்டும் தோண்டிய இடத்திலேயே புதைக்க வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை. இக் கோரிக்கைகள் ஆரிய இனத்தின் வல்லாண்மையை இந்நாட்டில் மேலும் வேரூன்றச் செய்வதற்கான தந்திர மொழிகளே. பன்னூற்றாண்டுக் காலமாய் அடிமையுற்றுக் கிடந்த தமிழன் இப்பொழுதுதான் சிறிது கண்விழித்து எழுந்து அமர்ந்துள்ளான். இனி இவன் நடையிடத் தொடங்குவானானால் தமக்குற்ற போலிப் பெருமைகளெல்லாம் தலைகீழாகப் போய்விடும் என்பதை நன்குணர்ந்து கொண்ட இவ்வாரியப் பூஞ்சைகள், மேலும் தமிழினத்தை வீழ்த்தி அடிமை கொள்ளச் செய்யவே இக் கோரிக்கைகளை எழுப்பியுள்ளன. எனவே இத்தகைய கோரிக்கைகளை அப்படியே குப்பைத் தொட்டியில் துக்கியெறிந்து விட்டு, நாம் மேலே கூறிய திருத்தத்தைத் துணிந்து செயலாற்றுதல் வேண்டும் என வேண்டிக் கொள்கின்றோம்.

கோயிலில் இறைவழிபாடு செய்கையில் இவ்விடைத் தரகர்கள் எதற்காகக் குறுக்கே நிற்கவேண்டும். இவர்களுக்கும் இறைவனுக்கும் மட்டும் என்ன அவ்வளவு நெருக்கம்? நம்மையெல்லாம் அங்குள்ள இறைவனுக்குப் பிடிக்காதோ? பிடிக்காத நம்மை அவன் ஏன் நேரடியாகவோ – பிறர் வழியாகவோ படைத்தல் வேண்டும்? அங்குள்ள இறைப் படிமத்திற்கு வழிபாடு செய்பவர்கள் எப்படித் தமிழிலும் செய்யலாமோ, அப்படியே தாங்களாகவும் செய்யலாம் என்றும் ஒரு சட்டமியற்றுதல் வேண்டும். அதுவுமன்றி இவ் விடைத் தரகர்களே அங்குத் தேவையில்லை என்றும் செய்துவிட வேண்டும். தேவையானால் அங்குள்ள பொன்னையும் பொருள்களையும் காப்பதற்குக் காவல் வைத்துவிடலாம். இக்குமுகாயப் புரட்சியை இன்று செய்யத் தவறினால் வேறு என்றும் செய்ய முடியாது. கிறித்தவ, இசுலாமியத் திருக்கோயில்களில் இத்தகைய இடைத்தரகர்களா வழிபாடுகளை நடத்திக் கொடுக்கின்றனர்? எனவே இக்கோயில்களில் மட்டும் இந்தத் தரகர்கள் எதற்காக இருத்தல் வேண்டும்? இதுபற்றி நன்கு எண்ணி, பகுத்தறிவாளர்களின் அரசு என்று கூறிக்கொள்ளும் பெருமைக்கேற்ப, தமிழ்வழிபாட்டுடன், இம்மாற்றத்தையும் சேர்த்துச் செய்யுமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறோம்.

– தென்மொழி, சுவடி : 9, ஓலை : 3–4,