ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/தமிழக அரசின் மூடநம்பிக்கை
இருபதாம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக்
காலமா? புராண, இதிகாசக் காலமா?
இந்தியாவில் அறிவியல் வளர வேண்டும் என்று மெப்புக்குக் கூறும் குடியரசுத் தலைவர் வெங்கட்டராமனும், தலைமை அமைச்சர் நரசிம்மராவுந்தாம் விடை சொல்ல வேண்டும்.
கடந்த 10.2.92 தொடங்கி, தமிழகத்தில் உள்ள எல்லாத் தமிழ்ச் செய்தித்தாள்களிலும் தொடர்ந்து நான்கைந்து நாள்கள் முழுப் பக்கங்களில் வந்த விளம்பரம் இது.
“வரலாற்றுச் சிறப்புமிக்கதோர் வைபவம் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது.
மிகவும் சிறப்புக்குரிய புண்ணிய விழா நாளான 18.2.1992 அன்று மகாமகக் குளத்தில் பகல் பொழுதில் தீர்த்தவாரி நடைபெறும்.
புண்ணிய நதிகளான கங்கை யமுனை, நர்மதை, சரசுவதி, சிந்து, காவேரி, கோதாவரி, சரயு, மகாநதி ஆகிய ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னியர்களாக வடிவெடுத்து மகாமகத்தன்று மகாமகக் குளத்தில் நீராடி ஒரு முறை தோன்றி அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்”.
“மேலும் புராணத்தின்படி, பிரம்மா உலகத்தில் உள்ள ஜீவன்கள் அனைத்தையும் அமிர்தம் கொண்ட மண்கலசத்தில் வைத்து பூஜை செய்யும்போது, பிரளய காலத்தில் கலசம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. அப்போது சிவபெருமான் வேடன் உருவத்தில் வந்து மண்கலசம் மீது அம்பு எய்தி உடைக்கிறார். ஜீவன்கள் உற்பத்தியாகி உலகம் தோன்றுகிறது. கலசத்தில் உள்ள அமிழ்தம் நாலா புறமும் தெறித்து ஒரு பக்கம் குவிகிறது. அவ்வாறு குவியும் இடம் தான் கும்பகோணம் மகாமகக் குளம் என்பதும் ஐதீகம்.”
இதுவன்றிக் கீழ்வரும் இன்னொரு விளம்பரமும் அரைப் பக்கத் தாளில், எல்லாச் செய்தித்தாள்களிலும் ஏறத்தாழ அதே 10.292-இல் வெளிவந்துள்ளதையும் அன்பர்கள் இணைத்துப் பார்த்திட வேண்டும்.
அவ் விளம்பரத்தின் தலைப்பில் காஞ்சி மடத்தின் பார்ப்பன மூஞ்சிகள் மூன்றும் (நேற்று, இன்று, நாளை) கள்ளச் சிரிப்புடன் காட்சியளிக்கின்றன. அவற்றுக்கு மேல்,
- “மனித சக்தியின் முயற்சிக்கு
- தெய்வ சக்தியின் அருளாசி!”
என்னும் உரைகள் கொட்டை எழுத்துகளில் காணப்படுகின்றன இவற்றின்கீழ்,
“வெறும் உயிரைக் காக்க உழைக்கும் எங்களுக்கு ஆன்மாவையே காக்க அவதரித்த காஞ்சி காமகோடி ஜகத் குரு பூரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தங்களின் வேத பூர்வ பாத மலர்களை மலர் மருத்துவமனையில் பதித்து பொருள் தர சம்மதித்திருக்கிறார்கள்.”
- இவ் விளம்பரத்தை, சென்னையில் உள்ள மிகச் சிறந்த பார்ப்பன மருத்துவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் அவர்கள் ஆளுமையர்களாக (நிர்வாகிகளாக இருந்து பணியாற்றும் மலர் மருத்துவமனைத் திறப்பு விழாவின் அழைப்பு அறிவிப்பாகக் கொடுத்துள்ளார்கள்.
- இவ் விரண்டு விளம்பரங்களும், இந்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள், அவர்கள் ஆட்சியிலிருந்தாலும் சரி, வேறு தொழில்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் சரி, அவர்களின் பார்ப்பனீயக் கோட்பாடுகளைப் பரப்புவதிலும், அவற்றை
நிலைநிறுத்திக் கொள்வதிலும் எவ்வளவு விழிப்பாக, கவனமாக, முன்னெச்சரிக்கையாக இருந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதற்குரிய தக்க சான்றுகளாகும்.
தமிழகத்தில் செயலலிதா ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே பார்ப்பனியத்திற்குப் பல்வகையான ஆக்கங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. வானொலி, தொலைக்காட்சியில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த சொத்துகளைப் போலவே அவற்றைக் கையாளத் தொடங்கி விட்டனர்.
நாடகமா, உரையாடலா, ஆடலா, பாடலா. கருத்துரைகளா, திறனாய்வுகளா, உழவுச் செய்திகளா, விழாக்களா, வேடிக்கைகளா, விளயைாட்டுகளா, விளம்பரங்களா - எதுவென்றாலும் அனைத்திலும் பார்ப்பனச்சேரித் தமிழ்வழக்கும், குடுமி, பூனூல், திருநீறு, நாமம் அணிந்த வெற்றுடம்பு ஆடவர்களும் மடிசார் மாமிகளும், பார்ப்பனக் குஞ்சு குளுவான்களுமே நிறைந்த காட்சிகளுந்தாம் - தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன. கதைகளர் அவர்ள் கதைகள்தாம்! பாடல்களா தியாகராசர் இராமதாசர், பாபநாசன் சிவன் ஆகியவர்களுடையவைதாம்! ஆடல்களா பத்மா சுப்பிரமணியம் குழுமங்கள்தாம்; கூட்டங்கள்தாம்! இவ்வாறு பார்ப்பனியத் தனமான கலைகள், காட்சிகள்தாம் தமிழில் உள்ளன என்பது போன்ற கூத்தடிப்புகள்! ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், பார்ப்பனர்கள்தாம் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பது போன்ற மயக்கத்தையே தொலைக்காட்சியிலும் வானொலியிலும் உருவாக்கி வருகின்றனர். இவற்றுள் நாட்டுப்புற - அஃதாவது அவர்கள் கருத்தில் சொல்வதானால் - தாழ்த்தப்பட்ட - தமிழிய - சூத்திரக் கலைகள் என்னும் தலைப்பில் - தாரை, தப்பட்டை, உருமி, மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை யாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து - ஆகியவற்றில்தான் தமிழ்மக்கள் சிற்றூர்ப்புற மக்கள் காட்டப்படுகின்றனர். பார்ப்பனர்கள் இத் தாழ்த்தப்பட்ட கலைகளில் தலைகாட்டுவதே யில்லை, இவற்றில்தாம் தெம்மாங்கு, சிந்து முதலிய பழந்தமிழிசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை யெல்லாம் முன்பே ஒருவகையில் இருந்தன. எனினும், செயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் நிலைகள் வானளவுக்கு மேலோங்கிக் கொடிக் கட்டிப் பறக்கின்றன.
இவை தவிர, செயலலிதாவின் போலித்தனமான, கோமாளித்தனமான, சிறுபிள்ளைத்தனமான அரசியல், பொய்யான உறுதிமொழிகள், ஏமாற்றுத்தனமான திட்டங்கள், (பணமே
எங்குள்ளதென்று தெரியாத நிலையில் கனவு, கற்பனை நிலையில் கட்டப்படும் ஆண்டி மடங்கள் போலும் அழகு அழகுத் திட்டங்களாக மக்களைக் கவர்கின்ற வகையில் அறிவிக்கப் பெறுகின்றன !) விளம்பர, பகட்டு ஆரவாரத்தனமான நடைமுறைகள், ஊர்வலங்கள், சுற்றுலாக்கள், இலக்கம் இலக்கமாக, சிலவிடங்களில் கோடி கோடியாகப் பணத்தை விழுங்கும் பனைமரத்தின் அளவு உயர உயரமான செயலலிதாவின் வண்ண வண்ண வெட்டுருவங்கள், ஆயிரம் இயங்கிகள் புடைசூழ்ந்த பேரணிகள், ஊர்வலம், தம்மை மிகுதியாக மெச்சிக்கொள்ள வேண்டும் என்னும் தந்நல நோக்கம் கொண்ட இலவய வேட்டி சேலை அன்பளிப்பு நிகழ்ச்சிகள், அவற்றுக்கென அடிதடி பட்டுக்கொள்ளும் ஏழை, நடுத்தர மக்கள் கூட்டங்கள் - இன்னோரன்ன காட்சிகள் நாடெங்கும் நகரமெங்கும் நாள் தவறாமல் வேளை தெரியாமல் நடந்து வருகின்றன.
இவை ஒருபுறம் நாட்டை அதிரடித்துக் கொண்டிருக்க எதிர்க்கட்சிகளைப் பொய் வழக்குகளாலும், தேசியப் பாதுகாவல், படுகொடுமை வன்முறைத் தடுப்புச் சட்டங்கள், காவலர் உறுப்புச் சிதைவு (சித்திரவதைகள்), சிறைக் கொடுமைகள் முதலியவற்றால் அடக்கி ஒடுக்குகின்ற தன்மைகள் ஒருபுறம் நாட்டை அச்சுறுத்தி வெருவச் செய்கின்ற நிகழ்ச்சிகள்
இவற்றால் பார்ப்பனீயம் தான்தோன்றித் தனமாக வளர்ச்சி பெற்றுத் தலைகால் புரியாமல் ஆடுகின்ற நிலை, சாராயக் கடை, ஆட்சியதிகாரக் கையூட்டுப் பெருக்கங்கள், திரைப்படங்களில் பச்சை அருவருப்புக் காட்சிகள் ஆகியவற்றிடையே இந்துமத மூடநம்பிக்கை வளர்ச்சிகளுளம் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டு வளர்கின்றன.
இந்த அழிம்புத்தனமான ஆடம்பர ஆரவார நெருக்கடி நிலைகளுக்கிடையில்தான் கும்பகோணம் மகாமகம் பற்றிய கீழ்த்தகவான மூட நம்பிக்கை விளம்பரங்கள் அனைத்துச் செய்தித்தாள்களிலும் பக்கம் பக்கமாக வந்தன.
கடந்த காலங்களிலும் மகாமகங்கள் நடக்கத்தான் செய்தன. வழக்கமான பார்ப்பன விழாக்களைப் போல் அதுவும் ஒரு நடைமுறை விழாவாக வந்து போய்க் கொண்டிருந்தது. திருவண்ணாமலைத் தீவம்போல, திருப்பரங்குன்றத்தின் திருமுருகன் விழாப்போல, மதுரையில் மீனாட்சியம்மன் திருமண நிகழ்ச்சி போல - இதுவும் இயல்பான நிகழ்ச்சியாக வந்து போய்க்
கொண்டிருந்த ஒன்றைச் செயலலிதா, தம் திரைப்படப் பகட்டு விளம்பர அரசியல் உத்தியாக மாற்றினார்.
புராண மூட நம்பிக்கை நிகழ்ச்சி. வரலாற்று நிகழ்ச்சி யென்று மகுடம் சூட்டி விளம்பரம் செய்யப்பெறுகிறது.
அறிவியல் வளர்ச்சி மிக்கோங்கி, வான்வெளியிலேயே போய்க் குடியிருக்கின்ற அளவுக்கு முன்னேறியுள்ள நிலையில்,
புண்ணிய ஆறுகள் ஒன்பதும் பெண்களாக வடிவெடுத்து கும்பகோணம் மாமகக் குளத்தில் வந்து நீராடுகின்றன என்றும், அந்த நாளில் அந்த நேரத்தில் வந்து நீராடுபவர்களுக்கு அவை - அந்தக் கன்னிப் பெண்கள் - அருள்புரிவார்கள் என்றுறம் ஆட்சியாளர்களே மக்களிடையில், மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு விளம்பரம் செய்கிறார்கள் என்றால், இதற்கு எங்கே போய் முட்டிக் கொள்வது? எவரிடம் போய் ஞாயம் கேட்பது? ஏமாற்றுபவர்கள் ஆட்சியில் இளித்த வாயர்கள் நாட்டில் : வேறெப்படித்தான் நிகழ்ச்சிகள் நடக்கும்?
இந்தப் புளுகுகளுக்கெல்லாம் ஓர் அளவே இல்லையா?
“பிரம்மா உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் ஒரு மண்கலயத்தில் வைத்துப் பூசை செய்தாராம். அப்போது சிவன் ஓர் அம்பு எய்து அக் கலயத்தை உடைத்தாராம். அப்பொழுது கலயத்தில் உள்ள அமிழ்தம் நான்கு புறங்களிலும் சிதறுகிறதாம். அது ஒரு புறத்தில் குவிகிறதாம். அந்த இடந்தான் கும்பகோணமாம். அந்தப் பொருள்தான் மாமகக் குளமாம்.”
இஃதென்ன ஏமாற்றுத்தனம் மூட நம்பிக்கை ! இஃது இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சிக் காலமா? புராண, இதிகாசக் காலமா? இஃது எவ்வளவு வெளிப்படையான கயமைத்தனம்! ஒர் அரசே மக்களை இப்படி ஏமாற்றி அவர்களை மூட நம்பிக்கைக்கு உள்ளாக்கலாமா?
இனி, அடுத்த விளம்பரத்தைப் பாருங்கள்! பார்ப்பன மருத்துவர்கள் சிலர் கூடி, மூன்று காஞ்சிப் பச்சைப் பார்ப்பனர்களின் படங்களைப் போட்டு, இம் மருத்துவர்களின் முயற்சி மனித சக்தியின் முயற்சியாம்; அந்தக் காஞ்சி காமகோடி ஊசைப் பார்ப்பனர்கள் தெய்வ சக்தியின் அருளாசி தருகிறார்களாம். என்ன கொடுமை! நன்றாகப் படித்து மருத்துவப் பட்டம் பெற்ற மடயர்கள் இப்படி நெஞ்சாரப் பொய்கூறி மக்களைப் பட்டப்பகலில் ஏமாற்றுகிறார்கள்.
அந்த முட்டாள் மருத்துவர்கள் மக்களின் வெறும் உயிர்களைக் காக்க உழைக்கிறார்களாம். அவர்களுக்கு அந்த வேதத்தெய்வங்கள் தங்கள் பாத மலர்களை அவர்கள் கட்டியுள்ள மருத்துவமனையில் கொண்டுவந்து வைத்து அருளாசி வழங்குகிறார்களாம்! என்ன கயவாளித்தனம்!
நன்றாகப் படித்துப் பட்டம் பெற்ற இந்த மருத்துவர்களே, தங்கள் அறிவுத் திறனை, அந்த ஊசை உளறுவாய்ப் பார்ப்பான்களுக்கு அடகு வைத்தால், இவர்களிடம் மருத்துவம் பார்க்க வரும் அறியாமை மிக்க நோயாளிப் பொதுமக்கள் என்ன செய்வார்கள்? அப் பார்ப்பன ஏமாற்றுக்காரர்களை இன்னும் மேலாகவன்றோ எண்ணுவார்கள்! நம்புவார்கள்!
இம்மாதிரி ஏமாற்றுகள் இவ்வறிவியல் காலத்திலேயே நடந்தால், பழங்காலங்களில் எவ்வெவ் வகையில் பொதுமக்கள் ஏமாற்றப் பட்டிருக்க மாட்டார்கள்! எண்ணிப் பாருங்கள்!
‘பார்ப்பான் நம் தெய்வம்’ (பிராமணா மம தெய்வதம்) என்னும் மூட நம்பிக்கையை - ஏமாற்றை - மக்களிடம் மேலும் மேலும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அனைத்துப் பார்ப்பனரின் கொள்கையாகும் - கோட்பாடாகும் - ஆசையாகும்!
இனி, இதுபோலும் எத்துகள், ஏமாற்றுகள், பார்ப்பனக் குறும்புகள் எல்லாம் செயலலிதா முதலமைச்சரான பின்னர்தாம் படிப்படியாக - நாளுக்கு நாள் - மிகமிக வளர்ந்து வருகின்றன என்பதை அனைவரும் நன்கு கவனிக்க வேண்டும்.
செயலலிதா, கச்சத்தீவு மீட்புத் தோல்விக் கிடையில், காவிரி நீர் மீட்புப் பின்வாங்கலுக்கிடையில், தம் வாய்விழ்த்துக் கொடுத்த பல்வேறு உறுதிகளையும் மறக்கடிக்கின்ற வகையில், மாமக நிகழ்ச்சியை மிகவும் பெரிதுபடுத்தி, அரசு விழாப் போல் கொண்டாடியும் அதில் தாம் போய் இருபத்தொரு வெள்ளிக் குடங்களின் நீரில் குளித்தும் பெரு விளம்பரமும் பெரிய திசை திருப்பமும் செய்து கொண்டார். இவர் மாம்கத்தை முன்வைத்து நடத்திய அரசியல்கத்தாட்டத்தையும், பெற்றுக்கொண்ட திரைப் படப்பாணி விளம்பர் வேடிக்கைளையும், அவற்றுக்கு ஏற்பட்ட மக்கள் வரிப்பணித்தால் ஆண செலவுகளையும், இவர் கூத்தடிப்பால் நேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும், எதிர்கால மாமக நிகழ்ச்சிகள் அனைத்திலும் நினைவு கூர்கின்ற வண்ணம்
நடத்திவிட்டார். இத்தனை உயிர்கள் இறந்திருக்கின்ற வேளையிலும் (எத்தனை ஆயிரம் பேர் செத்திருந்தாலும் செயலலிதாவின் விளம்பர வெறி அடங்காது. பாலியல் வெறியின் மறுவடிவம், அது!) மிகத் தந்தரமாகத் தம் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்னும் விளம்பர அறிவிப்பு (அவ்வகை அறிவிப்பும் விளம்பரத்திற்காகவே!) செய்தும், முட்டாள் அமைச்சர்கள் இருவரையும் மூடப் பெண்கள் ஐநூற்றுக்கு மேற்பட்டவர்களையும் தம் உருவத்தை அவர்கள் கைகளில் பச்சைகுத்தச் செய்தும், வேறு சில அன்பளிப்பு உத்திகளைக் கையாண்டும் தம் பிறந்தநாள் செய்தியை இந்தியா முழுவதும் பரப்பிவிட்டார்; நிகழ்ச்சியையும் அவர் கூறியதற்கு மாறாகவே மிக அமர்க்களமாகவே கொண்டாடச் செய்துவிட்டார்.
எஃது எப்படியிருப்பினும் கண்ணுக்கு முன்னால், தெய்வீகம் என்னும் பெயரில் அறிவுக்கே பொருந்தாத வகையில் மூடநம்பிக்கைகள் பல நடைபெறுகின்றன. அவ் வகையில் இலக்கக் கணக்கான மக்கள் அதிகாரக்காரர்களால் படித்த மூடநம்பிக்கைப் பார்ப்பன வல்லாண்மைச் சாதியினரால் ஏமாற்றப்படுகின்றார்கள், சுரண்டப்படுகின்றார்கள்! இவற்றுக்கு முடிவுதான் என்ன?
இந்தியாவில் அறிவியல் வளர வேண்டும் என்று மெப்புக்கு முதலைக்கண்ணிர் விடும் பார்ப்பனக் குடியரசுத் தலைவர் வெங்கட்டராமனும், வஞ்சகமே நிறைந்த தலைமை யமைச்சர் நரசிம்மராவுந்தாம் இதற்கு விடைசொல்ல வேண்டும்.
- தமிழ்நிலம், இதழ் எண் : 152, 1992