ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/பொருள்நசையும் சாதிநசையும் மதநசையும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பொருள்நசையும், சாதி நசையும், மத நசையும்

க்கள் மனமாற்றம் கொள்ளவேண்டும் - அதை அவர்களே செய்துகொள்ள முடியாது. எனவே அவர்களை மனமாற்றம் கொள்ளும்படி செய்யவேண்டும். மக்கள் மனமாற்றம் பெறாத நிலையில் எந்தப் புரட்சியால் விளைந்த பயனும் நிலைபெறாது. எனவே, மக்களுக்குச் சமவுடைமை அல்லது பொதுவுடைமைப் பொருளியல் சார்ந்த ஒர் அரசை நாம் உருவாக்கித் தர விரும்பினால், அப்படிப்பட்ட ஒர் அரசின் தனிச்சிறப்புத் தன்மையை நாம் அவர்களுக்கு உணர்த்திட வேண்டுமன்றோ? அவ்வாறு உணர்த்தாத வரையில், அவர்கள் வெறும் பழைமை விரும்பிகளாகவேதாம் இருக்க முடியும். அவர்களின் தாழ்வு நிலைக்கு அவர்களேதாம், அல்லது அவர்கள் பிறவிதான் காரணம் என்று அவர்கள் நம்பிக்கிடக்கும் போக்கு, அவர்களுக்கு மாறவே மாறாது.

முதலாளியக் கோட்பாட்டுக்கு மதம் மிகமிக அடிப்படையானது. அதுதான் அவர்களின் பொருள்பறிப்பு முயற்சிக்கு ஒர் இரும்புத் திரை அவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க, மக்களுக்குக் கொடுக்கும் மயக்கமருந்து இந்த மதத்தின் ஆட்சியை ஒடுக்காவிடில், அடித்துச் சாய்க்காவிடில், ஏழையர் தம்மைத் தாமே ஒடுக்கிக் கொள்வர்; தம்மைத் தாமே அடக்கிக்கொள்வர். ஏழைகளை உண்மை உணரும்படி செய்ய வேண்டுமானால் முதலாளிகளின் கைகளில் உள்ள இந்த மதம் என்னும் மந்திரக்கோலைத் தட்டிப் பறித்தாக வேண்டும்; முதலாளியத்தின் அகண்ட வாயிலிருந்து மதம் என்னும் நச்சுப் பல்லைப் பிடுங்கியாக வேண்டும்.

இந்த மதம் இந்துமதமாக இங்கே வடிவம் பெற்றுள்ளது. எனவே, இந்துமதச் சாக்கடையைத் துர்க்காமல் இந்தியாவில் பொதுவுடைமை என்னும் மரத்தை நட்டு வளரச் செய்ய முடியாது. இந்துமதத்தை வேரறுப்பதற்குச் சாதியை முதலில் தீக்கொளுவச் செய்தாக வேண்டும். மதத்தையும் சாதியையும் ஒழிப்பது அத்துணை எளிய செயலன்று. ஆனால் இதைப் பொதுவுடைமை உணர்வுள்ள இளைஞர்கள்தாம் செய்தாக வேண்டும். இந்த நாட்டுப் பொதுவுடைமை உணர்வுள்ள இளைஞர்களுக்கு அத்துணைத் துணிவுள்ளதா? திறனுள்ளதா? அதற்கு முன் அவர்கள் இன்னொரு தெளிவைப் பெற்றாக வேண்டும். அது இறைமை வேறு; மதம்வேறு என்று உணர்வது.

முதல்(Capital) எப்படி முதலாளியமாக(Capitalism) வடிவம் எய்தியதோ, அப்படித்தான் இறைமை மதவடிவமாக ஆகியுள்ளது. முதல் தேவை; ஆனால் முதலாளியம் தேவையில்லை. அதுபோலவே இறைமை உணர்வு தேவை; மத வுணர்வு தேவையில்லை. இறைமை ஒருவனைத் தெளிவிப்பது, மதம் ஒருவனை மயக்குவது; இறைமை ஒருவனை உரிமைக்குத் துரண்டுவது; மதம் ஒருவனை அடிமைத்தனத்தில் மூழ்குவிப்பது. நுட்பமான இந்த வேறுபாடுகளைத் தெளிவாக உணர்ந்துகொள்ளாமல், மதத்தையும் முதலாளியத்தையும் ஒழிக்க முடியாது.

நம்மில் சிலர் இறைமையே மதத்திற்கு அடிப்படை என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். விதையிருந்தால் அந்த விதைக்குத் தக்க மரம் இருக்கத்தானே செய்யும். நச்சுமரம் ஒன்றின் விதையும் நச்சாகத்தானே இருக்கமுடியும். எனவே, நச்சுமரத்தை ஒழிக்க வேண்டுமானால், அதன் நச்சுவிதையையும் ஒழித்தன்றோ ஆகவேண்டும்; அதுபோல் மதம் என்னும் நச்சுமரத்தின் விதையாகிய இறைமையும் நச்சாகவே இருக்க வேண்டும். எனவே அதையும் ஒழித்தாக வேண்டும் என்பது அவர்கள் தருக்கம்.

விதை நச்சானது இல்லை. அஃது ஊன்றிய இடந்தான் அந்த விதையினின்று கிளைத்த மரத்தை நச்சாக்கி இருக்கிறது. மாந்தனுக்குள்ள மனம் போன்றது இறைமை. ஆனால் நல்ல சூழல் இல்லையானால் அந்த மனம் தீய மனமாக வளர்வது போல், மாந்தனுக்குத் தேவையான இறைமை, நல்ல சூழலில் வளராமல் மதம் என்னும் நச்சுமரமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. அந்த மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டு, அதன் விதையை நல்ல நிலத்தில் ஊன்றி, நறுநீர் பாய்ச்சி வளர்க்க வேண்டும். அப்பொழுது அதனால் கிடைக்கும் பயனும் நல்லதாகவே இருக்கும்.

இறைமை என்பது ஒர் இயற்கை உணர்வு. அது வேறுபாடற்றது; உரிமையைத் துண்டுவது; விடுதலைக்கு வேரானது; சமநிலை உடையது; சமத்துவம் கற்பிப்பது இன்பம் நல்குவது; பகைமையைத் தவிர்ப்பது; மாந்தனின் அகங்காரத்தை அகற்றுவது; அறிவை உணர்த்துவது; அன்பை வளர்ப்பது; அறியாமையைத் தூர்ப்பது; தந்நலத்தை மறுப்பது; பொதுநலத்தைத் தூண்டுவது மக்களை ஒன்றுபடுத்துவது; பாகுபாட்டை அவிழ்ப்பது; இறைமைக்குச் சாதியில்லை; ஏழைமையில்லை. இதற்கு நேர்எதிரான மெய்ம்மங்களைக் கொண்டதே மதம்!

இதேபோல்தான் முதல் (பொருள் - Capital) என்பது இவ்வுலக வாழ்க்கைக்கு மூலமானது; முதலானது; உரிமையைத் துரண்டுவது; உழைப்பை உணர்த்துவது மக்கள் சமத்துவத்திற்கு அடிப்படையானது; வேறுபாட்டை அகற்றுவது; இன்பம் நல்குவது; பகையைத் தவிர்ப்பது; மாந்தனிடம் ஆக்க உணர்வுகளான அறிவு, அன்பு இவற்றை வளர்த்தெடுப்பது; சாதியைத் தொலைப்பது; மக்களை ஒன்றுபடுத்துவது!

ஆனால், இறைமை மதமாக வளர்ந்து தீமை தருவது போல், முதல் முதலாளியமாக வளர்ந்து தீமை தருகிறது. எனவேதான் முதல் தேவை; முதலாளியம் தேவையில்லை - இதேபோல் இறைமை தேவை, மதம் தேவையில்லை - என்கிறோம்.

இனி, பொதுவுடைமையை வளர்க்கப் புறப்பட்ட நம் இளைஞர்கள், இவ்வேறுபாடுகளை நுணுகி ஆய்ந்து உணராமல், மதத்தை ஒழிக்கின்ற நோக்கத்தோடு, சாதியை ஒழிக்கின்ற நோக்கத்தோடு, அவற்றுக்கு அடிவேராக - வித்தாக - இறைமை இருப்பதாக கருதிக்கொண்டு, அதையும் ஒழிக்க எண்ணங் கொண்டிருக்கிறார்கள்.

இறைமை இயற்கையான ஒர் உணர்வாதலின், அதை ஒழிக்க இயலாமல் அல்லற்படுகின்றனர். மதம் இறைமையின்மேல் கட்டப் பெற்ற ஒரு செயற்கை உணர்வு. அதில் மக்களினத்துக்குத் தேவையல்லாத - தீங்கான பல கூறுகள் இருப்பதால், அதை ஒழித்தே ஆகவ்ேண்டும் என்று நினைப்பது சரி. ஆனால் அதற்காக இயற்கை உணர்வான இறைமையையே ஒழிக்க முயல்வதால்தான் இத்தனை இடர்ப்பாடுகள் படவேண்டியுள்ளன.

அதேபோல், முதல், இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒரு மூலக்கருவி. அக்கருவி தந்நலக்காரர்களால் தவறாகக் கையாளப் பெற்றுப் பலர்க்குத் தீங்கான விளைவுகளைத் தந்துகொண்டுள்ளது. எனவே முதலை அடக்கி ஒடுக்கித் தன்வயப்படுத்தியுள்ள முதலாளியத்தை ஒழித்துக்கட்ட நாம் முயல்கிறோம் - முயலவேண்டி உள்ளது. இனி, முதலாளியம் தீங்கான விளைவுகளைத் தருகிறது என்பதற்காக, அதற்கு மூலமாகவுள்ள முதலையே நாம் ஒழித்துக்கட்ட முயலலாமா? முதல் இல்லாமல் முதலாளியம் எங்கு வந்தது என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு, முதலையே தீர்த்துக்கட்ட முயன்றால் விளைவு என்னவாகும்?

உலக முதல் அனைவர் கைக்குக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதுதான் நம் கொள்கை, அது அனைவர்க்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் நம் முயற்சி. அதை விட்டுவிட்டு, எய்தவன் இருக்க அம்பை நொந்துகொள்வதுபோல், முதலாளியம் இருக்க முதலை நோவது பிழையன்றோ? இதில் ஒரு தெளிவை நாம் பெற்றுக் கொண்டால்தான், ஒழிக்க வேண்டுவது எது, வளர்க்க வேண்டுவது எது, என்பவை நமக்குக் கண்ணுக்குக் காட்சியாக விளங்கும்.

எனவே, இளைஞர்களின் நோக்கு, மதத்தை ஒழிப்பதிலும் அதற்குத் துணையாக உள்ள சாதியைத் தகர்ப்பதிலும், இருக்க வேண்டுமே தவிர, இறைமையை ஒழிப்பதில் இருக்க வேண்டாம் என்பதும், முதலாளியத்தை ஒழிக்க வேண்டும், முதலை ஒழிக்க வேண்டாம் என்பதுமாகவே இருக்க வேண்டும். அத்துடன் இவற்றுக்கு மறுதலையாக, இறைமையை வளர்க்க வேண்டும். அதுபோல் முதலையும் வளர்க்கவேண்டும் என்பனவும் நம் கொள்கை என்று கொள்ள வேண்டும். அதோடு, உண்மையான இறைமை வளர்ச்சி மதத்தையும் சாதியையும் ஒழிக்கவுதவும் என்பதையும், உண்மையான முதல் வளர்ச்சி முதலாளியத்தையும் ஒழிக்கவுதவும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

மேலே கூறப்பெற்ற இவ் வுண்மைகளை நாம் தெளிவாக உணர்ந்துகொண்டால் ஒழிய, நம் சாதி மத ஒழிப்பும், முதலாளிய ஒழிப்பும் வெட்டவெட்டத் துளிர்க்கும் முள்மரங்கள் போலவே வளர்ந்துகொண்டு தாம் இருக்கும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இவ்வுண்மைகளை இன்னொரு கோணத்தில் நின்றும் நாம் பார்த்தல் மிக இன்றியமையாததாகும். அது, நம் இளைஞர்களுக்குச் சாதிவெறி இல்லை; ஆனால் சாதிப்பற்று இருக்கிறது. மதவெறி இல்லை; ஆனால் மதப்பற்று இருக்கிறது. அதேபோல் முதல் வெறியில்லை; ஆனால் முதலாளியப் பற்று இருக்கிறது - என்பது தான்.

சாதிவெறிக்கும், சாதிப்பற்றுக்கும் என்ன வேறுபாடு ? அதேபோல் மதவெறிக்கும் மதப்பற்றுக்கும், முதல்வெறிக்கும் முதலாளியப்பற்றுக்கும் என்ன வேறுபாடு? - இவற்றையும் நாம் தெளிவாக, வேறுபிரித்து உணர்தல் வேண்டும்.

இக்காலத்துப் படித்த இளைஞர்கள், வெளியுலகில் பழகும் சூழல் வளர்ச்சியடைந்த நிலையில் இருப்பதால், அவர்களிடம் சாதிவெறி மண்டியிருப்பதில்லை. ஆனால் அவர்கள் திருமணத் தொடர்பு முதலியவற்றை மேற்கொள்ளும் பொழுது, அவர்களின் சாதிவளையத்தை விட்டு வெளியேவர விரும்புவதில்லை. மேலும் தாங்கள் இன்ன சாதி என்கின்ற உணர்வு எப்பொழுதும் அவர்கள் உள்ளத்தில் விடிவிளக்காக எரிந்துகொண்டே உள்ளதை, மற்ற புறவுணர்வு விளக்குகளின் ஒளி இல்லாத நேரத்தில் நன்கு அறிந்து கொள்ளலாம். இங்குப் புறவிளக்குகளின் ஒளி என்பது கலையுணர்வு, அறிவுணர்வு, பொது ஈடுபாடு, விளையாட்டுணர்வு பிற பொழுது போக்குணர்வு - ஆகியவற்றின் சூழ்நிலைகள் எனப் பொருள் கொள்க. அவை எவற்றிலும் ஈடுபடாமல் தாமும் தம் குடும்பமுமாகவோ, நம் உறவுமாகவோ - இருக்கும்பொழுது, தம் சாதியுணர்வு தலையெடுத்திருப்பதை ஆய்வினில் பார்க்கலாம். இதுதான் சாதிப் பற்று. அஃதாவது வெளிப்படையாக இருப்பது சாதிவெறி, உள் முகமாக இருப்பது சாதிப்பற்று. இது சாம்பல்நெருப்புப் போல் உள்ளேயே கனன்றுகொண்டிருக்கிறது. ஆனால் புறத்தே இவர்கள் சாதியொழிப்பைப் பற்றியும், கலப்புமணத்தைப் பற்றியும் பெண்கள் விடுதலை பற்றியும் வீரமாக மேடைகளில் பேசுவதைப் பார்க்கலாம்.

இனி, பொதுவுடைமையுணர்வும், பகுத்தறிவுணர்வும் உள்ள நம் இளைஞர்களும் இப்படித்தான். அவர்கள் பொதுவுடைமைக் கொள்கையைப் பேசிக்கொண்டே , முதல் உணர்வுக்கும் ஆட்பட்டிருக்கும் தன்மையை ஆய்ந்துபார்த்து உணரலாம். பொதுவுடைமைக் கொள்கை பேசுகின்ற ஒருவருக்கு ஏதோ ஒருவகையில் - பழைய மூதாதையர் வழியிலோ, புதிய திருமண உறவு போன்ற வழியிலோ, புதிய தொழில் முயற்சிகளிலோ முதல் (பொருள்) வந்து சேர்ந்தால், முன்பிருந்த பொதுவுடைமைக் கொள்கை உணர்வில் படிப்படியாகப் பிடிப்புத் தளர்வதையும், முதலாளிய நாட்டம் தோன்றுவதையும் ஆய்ந்து காணலாம். இதை எழுதுகிறவர் எளிதாக இக் குற்றச்சாட்டை அவர்கள்மேல் சுமத்தவில்லை. கடந்த நாற்பதாண்டுகளின் தொடர்ந்த பொதுநல ஈடுபாட்டில் கண்ட உண்மைகளின் வெளிப்பாடே இதுவாகும். முதல் வைத்திருப்பவ னெல்லாம் முதலாளியில்லை. முதலாளியக் கோட்பாடு உடையவனே முதலாளி. அவன் உணர்வே முதலாளிய உணர்வாகும். அவன் அறிவு, அன்பு, செயல் முதலிய அனைத்தும் முதலாளிய உணர்வு கொண்டவை. முதலாளிய உணர்வின் உள்நோக்கம் சுரண்டல். எனவே, பிறரைச் சுண்டித் தன் முதலைப் பெருக்கவேண்டும் என்னும் மனப்பான்மையே முதலாளிய மனப்பான்மை யுடையதுதான். இந்நிலையில் பொதுவுடைமை உணர்வுள்ளவன், முதலாளியாக மாறுவானானால், முதலாளியத்தை இன்னும் திறமையாக, வெளிக்குத் தெரியாதவாறு கரவாகக் கடைப்பிடிக்கிறான்.

இந்நிலை இந்தியாவில் எண்பது விழுக்காடு இருந்தால் வெளிநாடுகளில் அறுபது அல்லது ஐம்பது அளவில் இருக்கும். எனவே, இங்குத் தூய்மையான பொதுவுடைமை உணர்வு கால்கொள்வது அரிதினும் அரிதாக இருக்கிறது.

இனி, இதே வகையில்தான் மதவுணர்வும், சாதிவுணர்வும் அறவே ஒழியாதவிடத்துக் கொண்டிருப்பது மதவெறி. சாதிவெறி மதவெறி - இரண்டும் வெளியே தெரியாமல் சாதிவுணர்வாகவும் மதவுணர்வாகவும் அமுங்கியிருக்கையில், இறையுணர்வும் சிறு விடிவிளக்குப்போல் எரிந்துகொண்டு இருக்கும் என்பது காலம் இடம் வரும்பொழுது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். இவற்றை அவரவர் பட்டறிவால் உணர்ந்தால்தான் உண்டு. மற்றபடி யாராலும் உணர்த்தவும் இயலாது; யாரும் அவ்வாறு உணர்த்தி விடுவதும் இல்லை.

இவ்வாறு பொருள்நசையும், சாதிநசையும், மதநசையும் இந்தியாவில் உள்ள மக்களில் ஏறத்தாழ தொண்ணூற்றைந்து விழுக்காட்டு மக்களிடம் இருப்பதை எவரும் எங்கும் எந்நிலையிலும் ஆய்ந்து அறிந்து கொள்ளலாம். இதைப் பொய்யென்று எவராகிலும் மெய்ப்பிக்க முற்படுவாரானால், ஒன்றால் அவர் இந்திய மக்களியல் உணராதவராகவோ, உண்மையறிவு வாயாதவராகவோதாம் இருத்தல் வேண்டும். ஆனால் அவரும் உண்மையை உணர்ந்துகொள்ள நெடுங்காலம் ஆகாது.

- தென்மொழி, சுவடி : 23, ஓலை : 11, 1987