ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/மத உரிமைகளும் அரசின் கடமைகளும்

விக்கிமூலம் இலிருந்து

மத உரிமைகளும் அரசின் கடமைகளும்

ஆளுமை நிலையில் அரசுக்கு எத்தனையோ கடமைகள் உண்டு; பொறுப்புகளும் உண்டு. அவற்றுள் சட்டத்தால் வழங்கப்பெறும் பொதுவுரிமைகளை மக்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்தும் பொழுது அவற்றால் அதே மக்களில் மறுபகுதியினர் தம் உரிமைகளுக்கு ஊறு நேராவண்ணம் கண்காணிப்பதும் அதன் தலையாய கடமைகளில் ஒன்று. இப்படிக் கண்காணிப்பதில் தவறு நேருமானால், அல்லது சட்டம் இடங்கொடுக்கும் வகையிலேயே புறக்கணிப்பு நிகழுமானால், மக்களில் சிலர் தங்களின் உரிமைகளைப் பயன்படுத்தி மகிழ்கின்ற அதே நேரத்தில், வேறு சிலர் அவற்றால் துன்பப்படவும் நேர்ந்துவிடுகின்றது. இதை விளக்க ஆங்கிலத்திலே கையாள்கின்ற ஓர் உவமையை இங்குக் கூறலாம். “ஒருவர் கைவிசிக் கொண்டு நடப்பதில் யாருக்கும் தடையிருக்க முடியாது; ஆனால் அவர் கை தான் இன்னொருவர் மூக்கில் பட்டுவிடக் கூடாது”.

பொதுவாக ஒரு குடியரசு நாட்டில், அதுவும் குறிப்பாக இந்நாட்டில், மதங்களுக்கு வழங்கப்பெறும் உரிமைகள், சலுகைகள் இப்படி அளவுக்கு மீறின வகையில் இருப்பது, மக்களுக்கு அரசு விளைவிக்கும் பிறவகை நலன்களுக்கு ஓர் இடையூறாகவே இருக்கிறது. மதம் ஒரு கொள்கை அல்லது ஒரு கடைப்பிடியாக இருக்கலாம். ஆனால் அது சட்டமாக்கப்பட்டுவிடக் கூடாது. அரசு ஆளுமைகளில் அது குறுக்கிடவே கூடாது. இதனால்தான் உருசியா போலும்

பொதுவுடைமை நாடுகளில் மதங்களுக்கு இடம் கொடுத்தாலும் அரசாளுமையில் அவற்றைத் தலையிடா வண்ணம் தடைப்படுத்தியுள்ளனர். அதனால்தான் அவர்களால் பல நல்ல விளைவுகளைச் செய்ய முடிகின்றது. ஆனால், அவ்வாறு இவ்விந்திய நாட்டின் சட்டம் அமையாமைக்குக் கரணியம், இதனை உருவாக்கிய எழுவரில் ஐவர் பார்ப்பனர். எனவே, தங்கள் வாழ்க்கையின் எல்லாக் கூறுபாடுகளுக்கும் மதமே துணையாக இருக்கின்ற அந்தத் தன்மையினை அவர்கள் சட்டத்தினின்று விலக்கிவிட முடியாமற் போனதுடன், அந்தச் சட்ட அமைப்புகளாலேயே அம் மதக் கோட்பாடுகளைக் காப்பாற்றவும் செய்துவிட்டனர். ஆகவேதான் இந்த நாட்டில் மதத்தின் பெயரால் ஒருவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம். நாளைக்கு, இதே இந்திராகாந்தி மக்களிடத்தில் வேடிக்கையாகப் பேசித்திரியும் நிகரமைக் கொள்கைகள் ஒருவேளை செயல்முறைக்கு வந்தாலுங்கூட அவற்றைச் செயற்படுத்த முடியாமல் தடுக்கின்ற வல்லமை இந்த மதக் கோட்பாடுகளுக்கு உண்டு; அவற்றுக்குச் சட்டக் காவலும் உண்டு. எனவே, இந்த ஒன்றை வைத்தே அந்த அம்மையாரின் பேச்சுகளில் எத்துணையளவு உண்மையிருக்கும் என்றும் எடையிட்டுக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்த நாட்டின் சட்டம் இங்குள்ள மதங்களுக்கு – குறிப்பாக இந்துமதத்திற்குக் காவலாக்கப்பட்டுள்ளது. எனவேதான் எத்தனைப் பொதுவுடைமை சமவுடைமைக் கொள்கைகள் – முழக்கங்கள் வந்தாலும் இங்குள்ள தீமைகளை ஓர் இம்மியளவும் பெயர்த்துக் காட்ட முடியவில்லை. இந்தியச் சட்ட அமைப்பையே உடைத்துத் தூள்தூளாக்கும் கொள்கையை எந்தக் கட்சி கொண்டுள்ளதோ அதுதான் இந்த வகையில் ஓரளவு உண்மையான – நம்பிக்கையுடைய கட்சியாக இருக்க முடியும். அவ்வாறு இங்குள்ள ஒரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருப்பதாகச் சொல்ல முடியாது.

எனவே, இங்குள்ள மதக்கோட்பாடுகளுக்கு மாறாக எத்தனை எழுதினாலும், பேசினாலும், முயன்றாலும் எதனையும் செயலாக்க முடியாமல் போய்விடுகிறது. இந்த நாட்டைத் திருத்துவதற்கும், இங்குள்ள தீமைகளை ஒழிப்பதற்கும் இங்குள்ள கட்சிகள் தலைவர்கள் பேசுவதைப் போல், இங்குள்ள தாளிகைகள் எழுதுவதைப் போல், உலகில் உள்ள வேறு எந்த நாட்டிலும் ஒரு முயற்சி நடைபெறவில்லை. அங்கங்குள்ள கட்சிகளும் குறைவு; தலைவர்களோ அதைவிடக் குறைவு; அவர்கள் பேசுவதோ அதைவிடக் குறைவு; அவ்வாறு பேசும் செய்திகளும் அந்தந்த நாட்டின் முன்னேற்றத் திட்டங்களைப்

பற்றியனவாகவே இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் அங்குள்ள பழைய கட்டிடங்களை இடித்துத் தள்ளிவிட்டுப் புதுக் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்; நாமோ இங்குள்ள பழைய கட்டிடங்களையே இங்கு மங்குமாகப் பூசியும் வெள்ளையடித்தும் புதிய கட்டிடங்கள் என்று பேசுவது மல்லாமல் பீற்றிக்கொள்ளவும் செய்கின்றோம். இந்த இடர்ப்பாடுகள் அனைத்துக்கும் இங்குள்ள மத ஆளுமைகளே கரணியங்கள். அவை மக்களை மட்டும் மூடர்களாக்கவில்லை; ஆட்சியையும் முடமாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றை எந்தக் கொம்பனாலும் களைய முடியாதபடி சட்ட வல்லமைகள் அவற்றுக்குப் பாதுகாப்பளித்துக் கொண்டிருக்கின்றன. எனவேதான் இந்தியா தன்னுரிமை பெற்று இருபத்தேழு ஆண்டுகளாகியும் எந்த ஒரு துறையிலும் உருப்படியாக முன்னேற முடியாமல் திக்கித் திணறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதே மதங்களைக் காவலாகக் கொண்டு, மக்கள் பெருக்கத்தில் மட்டும் அளவுக்கு மீறிய சுமையை ஏற்றபடி முக்கி முணகிக்கொண்டு கிடக்கின்றது. இந்த நுட்பத்தை விளங்கிக் கொண்டோ அல்லது கொள்ளாமலோ – நம் தலைவர்கள் – எனப்படுபவர்கள் – அந்த மத உரிமைகளில் கைவைக்க வக்கில்லாமல் – வைத்தால் பிழைப்புக் கெடுமே என்னும் அச்சத்தால் – வாய்க்கு வந்தபடி சீர்திருத்தம் பேசுவதும் பேசியவற்றிற்கு நேர்மாறாகச் செய்வதுமாகக் காலத்தைக் கடத்தி வருகின்றனர். நம் அரசியல் அமைப்புப்படி எந்த ஒரு துறையில் எதைச் செய்தாலும் அதற்கு மதத்தின் ஒப்புதல் இருந்தே ஆக வேண்டும். இதனால்தான் பார்ப்பனியத்தின் ஆணிவேரை யாராலும் அசைக்க முடியவில்லை. ஏனெனில் பார்ப்பணியம் இந்த நாட்டில் முழுக்க முழுக்க மதத்தின் வேர்களில்தான் தன் முட்டைகளை இட்டுக் கொண்டுள்ளது. எனவே அந்த நிலை தகர்க்கப்படும் வரை மதத்திற்கு மாறுபடவோ, அல்லது பார்ப்பனியத்திற்கு எதிராகவோ நாம் எதனையும் – சொல்லி விடலாம் – ஆனால் செய்துவிட முடியாது.

இந்த நிலைகள் இந்திய நாட்டின் முழுமையையும் பொறுத்த அளவில் எப்படியிருந்தாலும், நம் தமிழகத்தைப் பொறுத்த அளவிலாகிலும், பகுத்தறிவாளர்கள்(!) ஆளுகின்றதாக நாம் (!) பேசிக் கொள்ளுகின்றோமே, அவர்கள் ஆட்சியிலாகிலும், அவர்கள் முன்னிலையில் சட்டத்திற்கு மாறுபடாத வகையில், சிற்சில நடைமுறைகளுக்கான கருத்துரைகளை, வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றோம். இவ் வேண்டுகோள்களில் பெரும்பாலானவை அவர்கள் ஆட்சிக்கு வராதபொழுது, அஃதாவது பேராயக் கட்சி –

அஃதாவது அவர்கள் அன்று பேசிய எழுதிய மொழியிலேயே சொன்னால் வடநாட்டானுக்கு வால் பிடிக்கின்ற கட்சி ஆண்டு கொண்டிருந்தபொழுது – இவர்கள் கோட்டைப் பக்கம் எட்டிப் பார்க்கவே முடியாதவர்களாக இருந்தார்களே. அப்பொழுது பேசியவற்றிலும் – எழுதியவற்றிலும், கேள்விப்பட்ட – தென்பட்ட செய்திகள்தாம்! சட்டத்திற்குட்பட்ட வகையிலேயே இவை சொல்லப் பெறுவதால் இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர மிகுந்த பாடுகள் படவேண்டியிராது. எண்ணமும் துணிவுந்தாம் வேண்டும். இவற்றால் தனிப்பட்ட நிலையிலோ அரசுக்கோ வருமானம் இராது. ஒரு வேளை அதற்குக் குறைவு வந்தாலும் வரலாம். மக்கள்நலம் கருதி (அப்படி ஒரு கோட்பாடு இருந்தால்) அதையும் பொறுத்துக்கொள்ளலாம்.

முதற்கண், அரசு விடுமுறைகளாக, அலுவலகங்களுக்கும், எதிர்காலத்தையே உருவாக்கவிருக்கும் நம் குழந்தைகள் படிக்கும் கல்விக்கூடங்களுக்கும் இத்தனை விடுமுறைகள் விடுகின்றோமே, அவை தேவைதாமா? நம் அமைச்சர்கள் எத்தனையோ நாடுகள் சுற்றியவர்களாயிற்றே அங்கெல்லாம் இப்படித்தான் விடுமுறைகள் விடப் பெறுகின்றனவா? இல்லையே! இங்கு மட்டும் எதற்கு இத்தனை விடுமுறைகள்? போகட்டும், அந்த விடுமுறைகள்தாம் எதற்கென்று வேண்டாவா? விடுகின்ற விடுமுறைகளில் தொண்ணுறு விழுக்காடு மத விடுமுறைகளே! அவற்றை ஏன் விடுமுறையாக விட வேண்டும்? விருப்ப விடுமுறையாக விட்டுவிட்டுப் போனால் தேவைப்பட்ட மதப்பித்தர்கள் அன்றைக்கு விடுமுறை போட்டுவிட்டுப் போகிறார்கள். பணி செய்பவர்கள் அவர்களுக்குத் தேவையான இன்னொரு நாளில் அதை எடுத்துக் கொள்ளுகிறார்கள். இந்தப் பழக்கம் நம் ஆட்சியிலும் அஃதாவது – பகுத்தறிவாளர்கள் (!) என்று நாம் நம்மைக் கூறிக் கொண்டோமே – நம் ஆட்சியிலும் – தேவைதானா? மாற்றவே முடியாதா? இதற்கும் மாநிலத் தன்னாட்சி வாங்கித்தான் ஆக வேண்டுமா? கொஞ்சம், சட்டத்தைப் புரட்டிப் பாருங்களேன்!

அடுத்து, இந்தச் சிலை(மார்கழி) மாதத்திலும், வேறு திருவிழாக் காலங்களிலும், தெருத்தெருவாக ஒலிபெருக்கிகளைப் போட்டுக் கொண்டு திருவெம்பாவை திருப்பாவைப் பாடல்களைத் தெருப்பாவைப் பாடல்களாக ஆக்கிக்கொண்டு வருகின்றார்களே, அந்த வீண்கத்தல்கள் தேவைதானா? இந்த முறை எந்த வகையில் மதக்கோட்பாடுகளை வளர்க்கின்றது? அந்த மாதத்தில் எழுந்து நீராடக் கூப்பிடும் பாவைப் பாடல்களுக்கு ஏதாவது பொருளிருக்கின்றதா? எங்குப்போய் நீராடுவது நகராட்சிக் குழாய்களிலா, கூவத்திலா? அது

போகட்டும்! அப்படிப் போய் எந்தப் பெண்பிள்ளைகளைக் கூப்பிடுவது? அவர்கள் என்ன, நோன்பு நோற்கவா போகின்றனர்? எந்த நோன்பென்று எந்த மத – மடத் – தலைவனாவது சொல்ல முடியுமா? வெட்கமும் – பொருளுங்கெட்ட இந்தச் செயலுக்காக எத்தனைப் பேர் காதுகளைப் புண்ணாக்குவது? அக்காலங்களில் பள்ளித் தேர்வுகளுக்காகப் படித்துக்கொண்டிருக்கும் எத்தனை மாணவர்களின் மனங்களை நோகச் செய்வது? பார்ப்பனப் பிள்ளைகள் எப்படியும் படித்துக் கொள்வார்கள்! நம் பிள்ளைகள் எப்படிப் படிப்பார்கள்! வாய்ப்பாகக் கிடைத்த அந்த முப்பது நாள் காலை நேரங்களையும் இப்படியா ஒலிபெருக்கிகளைப் போட்டுக் கொண்டு, தெருத்தெருவாக, மடம்மடமாக, கோயில்கோயிலாகக் கூத்தடிப்பது? இப்படி ஒலிபெருக்கியில் கூப்பிடச் சொல்லியா அந்த ஆண்டாளம்மாளும், மாணிக்கவாசகரும் பாடி வைத்தார்கள்? இலக்கிய வடிவான நூலமைப்பின் உட்பொருள் விளங்காமல் இப்படியா மதப்பித்தர்கள் பொருள்பண்ணிக் கொள்வது? பொருள் எப்படியோ போகட்டும்; தொலைந்து போகின்றது! அதற்காக, ஏன் ஒலிபெருக்கி வைத்து அதை எல்லாருடைய காதுகளிலும் போய்க் குத்தல் வேண்டும். அப்படிக் குத்தினவுடனே அவர்களுக்குப் பத்தி வந்துவிடுமோ? அதனால் படியரிசி இரண்டு உருபாவுக்குக் கிடைத்து விடுமா? பின், ஏன் இதுநாள் வரை கத்தி ஒன்றும் கிடைக்கவில்லை. இப்படி மதப்பித்தர்கள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி மக்களின் அமைதியைக் கெடுப்பதற்கு எந்தச் சட்டம் இசைவு தருகின்றது?

ஒலிபெருக்கியை எதெதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஓர் அளவு – எல்லை இல்லையா? பக்கத்து வீட்டுக்காரனுடைய இசைவு பெறாமல் ஒரு தொழிலுக்கான பொறியையே இயக்கக்கூடாது என்று இருக்கும்பொழுது, எல்லாருக்கும் துன்பந்தரும் ஒலிபெருக்கிகளை மட்டும் கோயில்களில் – தனிப்பட்ட ஒருவனின் திருமணக் கொம்மாளத்தில் – மட்டும் எப்படி வைக்கலாம். இஃது என்ன கொடுமை? இதற்கேன் அரசு நடவடிக்கை எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருவனோ, ஒரு கோயில் அமைப்பாளர்களோ மகிழ்ந்தால் அவர்களைச் சுற்றியுள்ள அனைவரும் துன்பப்பட வேண்டும் என்பது தான் குடியரசோ? அமைச்சர்களுக்குத் தொல்லையில்லை. வெளிக்காற்றே புகாத அறைகளில் பகல்வரைக்குங்கூட அம் மாதத்தில் துங்கலாம். பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த ஆண்டாளும் மாணிக்கவாசகரும் ஒலிபெருக்கி வழியாகவும், வானொலி (இஃது ஒரு சாவக்கேடு – நம் நாட்டில்) வழியாகவும் எவ்வளவு தொல்லை கொடுக்கின்றனர். இதையேன் அரசு கவனிக்கக் கூடாது?

இந்த, இந்து மதப் பித்தர்கள் செய்யும் விளம்பரப் பித்தலாட்டங்களைப் பார்த்துவிட்டு தந்தம் மதப்பித்தர்கள் எங்குத் தங்களைக் கைவிட்டுவிடுவார்களோ என்று அஞ்சிய கிறித்தவ, இசுலாமிய மதத்தலைவர்களும் தங்கள் தங்கள் கோயில்களிலும் இந்தப் புதிய பாணிகளைப் பின்பற்றி ஒலிபெருக்கி வழியாகவே தங்கள் தங்கள் மதஉரிமை(!)களைப் பரப்பிவரத் தொடங்கிவிட்டனர். இரம்சான் போலும் திருவிழாக் காலங்களில் தங்கள் மதக்காரர்களை (அஃதாவது ஒரு தெருவிலுள்ள ஓரிரண்டு வீட்டுக்காரர்களை) எழுப்புவது போல் இரவு இரண்டு மணிக்கே வந்து, அந்தத் தெருவில் உள்ள அத்தனை வீட்டுக்காரர்களும் திடுக்கிட்டு எழும்படி சலங்கையொலி யெழுப்பும் தமுக்கொலியை அடித்தபடி காட்டுக் கத்தல்கள் கத்திவருவது எப்படி நாகரிகமான மதக்கோட்பாடோ தெரியவில்லை. விருப்பமில்லாத – அல்லது வேண்டாத – பலருடைய – அல்லது சிலருடைய – அல்லது ஒருவனுடைய காதுகளில் – அவர்கள் அல்லது அவன் – விரும்பாத நேரத்தில் – ஒலிபெருக்கி வழியாகவோ வேறு தப்பறைகளின் வழியாகவோ ஒலிகளைப் புகுத்தி அமைதியைக் கெடுப்பது எப்படி நாகரிகமாகும்? மதம் என்னும் அளவில் மட்டும் எப்படி நாகரிகமற்ற ஒரு செயல் நாகரிகமாகக் கருதப்பட்டுவிடும்? இதை எப்படி அரசு விட்டுக் கொண்டிருக்கலாம். பெரும்பாலும் பொதுக்கூட்டங்களைத் தவிர வேறு எதற்காக ஒலிபெருக்கிகள் வைக்கப்படல் வேண்டும்? விலங்குத்தனமான வேண்டாத காட்டுக் கூச்சல்கள் மக்களின் அமைதியை எத்தகைய அளவில் கெடுத்து வாழ்வை வெறுப்புடையதாக ஆக்கி விடுகின்றன!

மற்றும் விளக்கணி விழா(தீபாவளி)ப் போலும் விழா நாட்களில் கேட்கவே வேண்டியதில்லை. பார்ப்பன வாண்டுகள், அல்லது ‘இப்பி’ப் பார்ப்பன விடலைகள் ஒரு சிலர் முதல் நம்(!) சட்டமன்ற உறுப்பினர்களின் குழந்தைகள், நம் (!) மாண்புமிகு அமைச்சர்களின் செல்வத் திரு மகன்கள்வரை எல்லாரும் வேண்டுமென்றே கொளுத்தும் ‘பட்டாசு’ வெடிகளால் பொதுவிடங்களில் அமைதியைக் கெடுத்து நகரத்தையும் தெருக்களையும் குட்டிச்சுவராக்கிக் குப்பை கூளங்களைப் போடத்தான் வேண்டுமோ? எந்த 'நரகாசுரன்' செத்துப்போன இழவிற்காக நாம் இப்படி ஆண்டுதோறும் பட்டாசு வெடிகளின் பட்டாளக்களத்தில் அஞ்சி அஞ்சி நடப்பது? அந்த ’நரகாசுரன்’ எத்தனையாவது ‘நரகாசுரன்’? எந்த ஆண்டில் அவன் இறந்தான்? என்பதை எந்த வரலாற்று நீலகண்ட சாத்திரியாவது ஆராய்ந்து அரசுக்குச் சொல்லியுள்ளாரா? பின், ஏன் அவனுக்காக இந்த அணுக்குண்டுக் காலத்தில் நாம் நம் மூட நம்பிக்கைக்குப் புதுப்புதுப்

பொருள்களையெல்லாம் கற்பித்துக் கொண்டு, தாளைத் திரியாக்கிக் காசைக் கரியாக்கி, விலைமதிப்பற்ற மருந்தைப் புகையாக்கி, நம் காதுகளையும் புண்ணாக்கிக் கொள்ளுதல் வேண்டும்? இதில் என்ன மெய்ப்பொருள் இருக்கிறது? எந்தப் புதுப் பெரியவாளாவது ‘தென்மொழி’ அலுவலகத்திற்கு வந்து விளக்கிக் காட்ட முடியுமா? அல்லது, அரசியல் பொருளியல் போலும் பெரிய பெரிய இதுகளுக்கெல்லாம் தொடர் கட்டுரைகளில் விளக்கம் போட்டுக் காட்டும் தினமணிச் சிவராமன்கள் வந்தாவது விளக்கிக்காட்ட முடியுமா? இந்தக் காலங்களில் தொழிலாளர்களிடத்தில் எழும் வெகுமதிப் போராட்டங்களும், அவற்றால் தொழிலகங்கள் இழக்கும் வருமானங்களும், அவற்றைப் பிடுங்கக் காத்திருக்கும் வாணிகக் கள்ளர்களும், இவர்கள் அத்தனைப் பேருடைய நடைமுறைகளுக்கும் அனுப்பிசகாமல் ஆண்டுதோறும் இசைவளித்துவிட்டு, அவ்வப் பொழுது அமெரிக்காவிற்கும் உருசியாவிற்கும் வெட்கமில்லாமல் மடியேந்திப் போகும் ஆட்சி மூடர்களுக்கும் யார் வந்து அறிவு கொளுத்துவது...? – இஃது என்ன அப்படி முழுக்க முழுக்கவா நடுவணரசைப் பொறுத்த செய்தி.... ?

அது போகட்டும்! நம்(!) அமைச்சர்களைக் கேட்கின்றோம். கலைமகள் விழா, திருமகள் விழா, கருவிவிழா என்றெல்லாம் அரசு அலுவலகங்களில் கொண்டாடுவதற்காகப் பிய்த்துப் பிடுங்குகிறார்களே, அவையெல்லாம் நம்(!) ஆட்சியிலுங்கூடக் கட்டாயம் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்படத்தான் வேண்டுமா? – இப்படி நீங்கள்தாமே அன்றைக்குக் கேட்டீர்கள். இப்பொழுது நீங்களே கொண்டாட விடுகிறீர்களே! (நீங்கள் கொண்டாடுவது ஒருபுறம் இருக்கட்டும்!) அதுமட்டும் ஏன்? இவற்றைக் கொண்டாடுவதை விட்டுக் கொண்டிருந்ததற்காகத்தானே அன்றைய பேராயக்கட்சியை வடநாட்டானுக்கு வால்பிடிக்கும் கட்சி என்று பகடி செய்தீர்கள்? இன்றைக்கு உங்களை யார் பகடி செய்வது? ஒருவேளை இதற்கும். அந்த மாநிலத் தன்னாட்சி (அப்படிச் சொன்னாலும் உங்களுக்கு விருப்பம் இருக்காது) இல்லை – மாநில சுயாட்சி வாங்கியாக வேண்டுமோ? இதையெல்லாம் கண்டித்தால், நாம் நம்(!) அண்ணாவிற்கும் நம்(!) பெரியாருக்கும் விழா – வேடிக்கைகள், தீவ, தூவ, படைப்புகள் செய்ய முடியாது? (மக்களைக் கண்ணுக்குக் கண்ணாக ஏமாற்ற முடியாது; வேண்டுமானால் மறைமுகமாக ஏமாற்றலாம்;) எனவே அவர்கள் கொண்டாடும் விழாக்களை அவை – கருவிப் பூசனையாகட்டும், கலைகள், திருமகள் பூசனையாகட்டும் நாம் விட்டுக் கொடுப்போம்; அப்பொழுதுதான்

நம்(!) அண்ணா விழாவை நாம் செய்யவும் அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள் என்ற எண்ணமோ, ஏதோ? சென்ற மாதம் நடந்த நம்(!) முப்பெரு விழாவின்பொழுது கூட நம்(!) அண்ணாச்சாமி(1)க்குப் பலவிடங்களில் கற்பூரம், பூசனைகள் செய்யப்பட்டன!!! நல்ல பகுத்தறிவு.! கூடிய விரைவில் பெரியார் கோயில்கள், அண்ணா கோயில்கள் சென்னையிலேயே கட்டப்பட்டாலும், அவற்றிலாகிலும் நாம்(!) கொண்டுவர விரும்பிய கோயில் பூசகர் சட்டம் நிறைவேற்றப்படுமோ என்னவோ! இல்லை, அதற்கும் மாநிலத் தன்னாட்சி தேவைப்பட்டாலும் படலாம்.

மதங்கள் எப்படி உருவாயின என்பதற்கு நாம் தடித் தடியான வரலாற்று நூல்களைத் தேடிப் படிக்க வேண்டுவதில்லை. நம்முடைய தமிழகத்தின் கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் நாம் வாழ்ந்திருந்தால் போதும். சமணமும் புத்தமும் மட்டுமல்ல – இசுலாமும் கிறித்துவமும் இன்னுஞ் சொன்னால் மாலியத்தின் சிவனியத்தின் முக்காற் பகுதிகளும் – இந்துமதத்தின் குப்பைத் தொட்டிக் கோட்பாடுகளும் – அனைத்தும் தோன்றிய வரலாறெல்லாம் இப்படித்தான் என்று அறிந்துகொள்ளலாம்! முன்னர்ச் சொற்களாக இருக்கும்; பின்னர் மெய்ம(தத்துவ)மாக மாறும்; அதன்பின்னர் மந்திரமாக விளங்குவதென்று, விளம்பரப் படுத்தப்பெற்று மக்களை அடிமைப்படுத்தும், ‘சிவாயநம’ மந்திரங்கள் வேத மந்திரங்கள் தொடங்கி ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று தொடங்குகின்ற ‘கச்சாமி’ மந்திரங்கள், ‘கருத்தருக்குத் தோத்திர’ மந்திரங்கள், ‘அல்லா’கூ அக்பர் மந்திரங்கள் வரை இப்படி வந்தவை தாம்! நம்(!) ‘கடமை’யும், ‘கண்ணிய’மும், ‘கட்டுப்பாடு’ம் இப்படித்தான் ஒரு காலத்தில் ‘அண்ணா’மதத்தின் மந்திரங்களாக இருக்கும். மொத்தத்தில் நாம்(!) பழைய மதங்களைப் பழிக்கிறோம்; ஆனால் புதிய மதங்களைத் தோற்றுவிக்கிறோம். எப்பொழுதும் இந்த இயற்கை முறையில் பிழையிருப்பதில்லை; நடைமுறைகளில்தாம் பிழைகள் மட்டுமல்ல, மூடநம்பிக்கைகளும் வந்து புகுந்துகொள்ளும். எனவே புதியமத(!)க் கோட்பாட்டுக்காரர்களிடம் பழையமதக் கோட்பாட்டுப் பிழைகளைப் பற்றிச் சொல்வது, பயனளிப்பதாக இருக்குமோ இருக்காதோ? சொல்லியாக வேண்டுவது நம் கடமையாக இருக்கிறது!

– தென்மொழி, சுவடி : 12, ஓலை : 1, 1974