ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/மொழி வளர்ச்சியில் அவர்களுக்குள்ள அக்கறை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மொழி வளர்ச்சியில், ‘அவர்’களுக்குள்ள அக்கறையும், ‘நம்மவர்’க்குள்ள அக்கறைக் குறைவும்

ண்மையில் சென்னை நடுவண் நூல் நிலையக் கூடத்தில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில், நம் கல்வியமைச்சர் உயர்திரு. நெடுஞ்செழியன் அவர்கள், தம் பேச்சுக்கிடையில், தமிழ் அகரமுதலித் திட்டத்தையும், அறிஞர்களையும் தாக்குவது போல் கிண்டலாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். தனியார் துறை ஓர் அகரமுதலித் திட்டத்தை மேற்கொண்டால், ஆராய்ச்சியாளர்கள் அதற்கு மிகுந்த ஒத்துழைப்புத் தருவதாகவும், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பை விரைந்து முடித்துக் கொடுப்பதாகவும், ஆனால் அத்தகைய ஒரு திட்டத்தை அரசு மேற்கொண்டால், அவர்கள் சுணக்கம் காட்டுவதாகவும், தங்களுக்கு “மிசை தரவில்லை! நாற்காலி தரவில்லை; வண்டி தரவில்லை” என்றெல்லாம். குறைப்பட்டுக் கொள்வதாகவும், ஒரு சொல்லை ஆய்வதற்கே நாள் கணக்கில், மாதக் கணக்கில் காலத்தை எடுத்துக் கொள்வதாகவும், இதனால் அரசுக்கு வீண்செலவு ஆவதாகவும், கிண்டலாகக் குறைகூறிப் பேசியுள்ளார். இந்தப் பேச்சிற்கு அடிப்படையான கருத்து எதுவாக இருக்கலாம் என்று நாம் ஆராய்ந்து கொண்டிருக்க விரும்பவில்லை என்றாலும், அவர் பேச்சில், தமிழ்மொழி ஆராய்ச்சியறிவை அவர் எவ்வளவு குறைவாகவும், இழிவாகவும் மதிப்பிட்டிருக்கின்றார் என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

பொதுவாகவே, நம் அமைச்சர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் ஒருவகைப் பற்றும் ஆர்வமும் கொண்டிருப்பதாகப் பேசுகிறார்களே தவிர, போதிய அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. முதலில் அவர்கள் பேசுகிற பேச்சும், எழுதுகிற எழுத்தும் துரய தமிழாக இருப்பதில்லை. பொதுமக்களுக்கு விளங்குகிற வகையில் தாங்கள் பேசுவதாகவும், எழுதுவதாகவும் கூறிக்கொண்டு, கலப்புத்தமிழுக்கே ஆக்கந் தருகிறார்களே தவிர, அவர்களுள் ஒருவராகிலும் தூயதமிழ் வளர்ச்சியைப் பற்றிக் கருதுவதாகவே தெரியவில்லை. தங்களுடைய சிலைகளையும், தங்கள் தலைவர்களுடைய சிலைகளையும் வைப்பதில் அவர்கள் காட்டுகின்ற அக்கறையிலும் ஆர்வத்திலும், அவற்றிற்காகச் செலவழிப்பதிலும் நூற்றில் ஒரு பங்கையேனும் தமிழ்மொழி வளர்ச்சிக்காகச் செலவிடுவார்களானால், இந்நேரம் தமிழ்மொழி எத்துணையோ அளவுக்கு உயர்த்தப் பெற்றிருக்கும். அந்நிலை நமக்கும் பெருமை தருவதாகவிருக்கும். பெரும்பாலும் நம் அமைச்சர்களும் அவற்றின் கட்சிக்காரர்களும், அவர்கள் நடத்துகின்ற இதழ்களிலும் எழுதுகின்ற நூல்களிலும் தூயதமிழையே கையாளுவதில்லை. இவர்களைக் கருத்தில் கொண்டு நம் நாட்டில் நடக்கின்ற பார்ப்பன ஏடுகளும் வேண்டுமென்றே நல்ல தமிழைக் கெடுக்கின்ற நோக்கத்துடன் சரிபாதிக் கலப்புத் தமிழாகவே எழுதி வருகின்றன. நம் பேராசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் வெளியிடுகின்ற நூல்களிலும் மொழித் துய்மை பற்றி அக்கறை செலுத்துவதில்லை. நம் ஆட்சியாளர்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஏதோ பெரிதாகச் செய்து விட்டதுபோல் பறைசாற்றுகிறார்களே தவிர, வடமொழியான சமசுக்கிருதத்திற்கும், இந்திக்கும் செலவிடுகின்ற தொகையிலும், அவற்றின் வளர்ச்சிக்குக் காட்டப்பெறுகின்ற அக்கறையிலும், பத்தில் ஒரு கூறேனும் செலவிட்டதாகச் சொல்லிக் கொள்ள முடியாது. இந்நிலையில் நம் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து, அறிஞர்களின் மனத்தை மிகவும் புண்படுத்துவதாகவே இருக்கின்றது. ஆராய்ச்சிக்கு வேண்டிய வாய்ப்புகளையும், ஏந்துகளையும் செவ்வனே செய்துதரக் கேட்பது, கிண்டலுக்கும் பகடிக்கும் உரியதாகக் கருதப்பட்டுப் புறக்கணிக்கக் கூடியதாகவிருப்பது, உண்மைத் தமிழ் நெஞ்சங்களைப் பெரிதும் வருத்துவதாக வுள்ளது.

அவர்கள் இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளில், தமிழ்மொழியின் அடிப்படைக் கூறுகளே இன்னும் ஆராயப் பெறவில்லை. நம் மொழி வரலாறு பலவாறு திரித்தும் மாற்றியுமே இதுவரை எழுதப்பெற்று வந்துள்ளது. இதைப்பற்றி எவரும் வருந்துவதாகவே தெரியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வளர்ந்து பல்கிப் பெருகிய நம் தமிழ்மொழி, மிகப் பிந்தித் தோற்றுவிக்கப் பெற்ற, சமசுக்கிருதத்தின் துணையில்லாமல் வாழவே முடியாது என்பதுபோனற் ஒருவகை மயக்கத்தையே இதுவரை வெளியிடப்பெற்ற கருத்துகள் புலப்படுத்துகின்றன. நம் பேராசிரியர்களும், ஆராய்ச்சியறிஞர்களும், உண்மையான வரலாற்றையும் தமிழன் தகுதியையும் வெளிப்படுத்தினால், எங்குப் பார்ப்பனர்களின் துணையும், ஆக்கமும் தமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சித் தாறுமாறாக ஆரியச் சார்புக் கருத்துகளையே வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வருகின்றனர். தொழில் வல்லுநர் நா. மகாலிங்கம், கல்வி வள்ளல் முத்தையாச் செட்டியார் போன்ற பெருஞ்செல்வர்களும், கம்பராமாயணம் போன்ற தமிழடிமை இலக்கியங்களுக்கு, தமிழரை அடிமைப்படுத்தும் சமய புராணச் சொற்பொழிவுகளுக்கும் அள்ளித் தருகின்ற ஆக்கத்தையும் ஊக்கத்தையும் போல், தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பேரளவில் உதவுவதில்லை. தம்மைப் பெரிய எழுத்தாளர்கள், பாவலர்கள், கதையாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள், பேச்சாளர்கள் என்று கூறிப் பெருமை பேசிக் கொள்ளும் தமிழர்களும், பெரும் புளுகர்களாகவும், வரலாறு அறியாதவர்களாகவும், மொழிப் பற்றற்றவர்களாகவும், மதப் பித்தர்களாகவும், சாதி வெறியர்களாகவும், கட்சியார்வலர்களாகவும், ஆரிய அடிமைகளாகவுமே இருக்கின்றார்களே யொழிய, ஒரு சிறிதேனும் தன்மானம் உள்ளவர்களாகவோ, தங்கள் இனத்துக் குற்ற இழிவு துடைப்பவர்களாகவோ, தமிழ்மொழி வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாகவோ, தமிழின முன்னேற்றத்திற்கு உழைப்பவர்களாகவோ தெரியவில்லை. அவர்கள்தம் வாய்க்கும் வயிற்றுக்கும், பெண்டு பிள்ளைகளுக்குமாகவே உழைத்துப் பொருள் திரட்டப் புறப்பட்டுவிட்டவர்கள் போலவே, செயல்பட்டு வருகின்றார்கள். அவர்களிடத்து உண்மையான தமிழ் ஆராய்ச்சியையும், மொழி ஆராய்ச்சியையும், இன அடிமை நீக்கத்தையும் பற்றிச் சொன்னால், அவர்கள் அவற்றை வெறும் கற்பனையென்றும், வெறியென்றும் குறுகிய மனப்பான்மை என்றுமே கூறி, நம்மை ஒதுக்கியும் புறக்கணித்தும் விடுவதோடு, நம் கருத்துகளுக்கும் ஆக்கங்களுக்கும் என்றுமே எள்ளத்துணையும் துணைநில்லாததுடன், பகைவர்களாகவும் மாறித் தம்மால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தொல்லைகளைக் கொடுத்து, நம்மை ஒழிக்கவும், அழிக்கவுமே முற்பட்டு விடுகின்றனர்.

நம் நடுவணரசும், வடநாட்டவரின் நடவடிக்கைகளும், இவ் விந்திய நாரிகத்தையும், பண்பாட்டையும், இங்கு வழங்கிவரும் மொழியினங்களையும், பிற சிறப்பியல்புகளையும், ஆரியத் தொடர்புள்ளவனாகவும் சமசுக்கிருத அடிப்படை யுள்ளனவாகவுமே காட்டி, இந்தியாவையே ‘ஆரிய’மயமாக்குவதில் பெரிதும் அக்கறையுடன் திட்டமிட்டு இயங்கி வருகின்றன. இந்நிலைகளைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் நம் அமைச்சர்கள், தங்கள் தங்கள் பெயர்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும், தங்கள் சிலைகளைத் திறந்துகொள்வதற்கும், பிறந்த நாள்களைக் கொண்டாடுவதற்கும் செலவிட்டு வரும் நேரங்களும், தொகைளும் கொஞ்சநஞ்சமல்ல. ஆரியப் பார்ப்பனர்களும், நடுவணரசும் தங்கள் ஆக்கத்திற்கும் மேலாண்மை க்கும் அடிப்படையாக விளங்கும் சமசுக்கிருத மொழிக்கும், வேத புராணப் பரப்புதல்களுக்கும் செலவிடும் தொகைகளையும், நேரங்களையும், முயற்சிகளையும் நினைத்துப் பார்க்கையில், நம் அமைச்சர்களும் அவர்தம் அடிப் பொடிகளும் செய்துவரும் ஆக்க முறையற்ற வினையாரவாரங்களும், தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செய்வதாகத் தம்பட்டமடித்துக் கொள்ளும் விளம்பர வினைகளும் நடுநிலையான கண்களுக்கு எத்துணைப் பயனற்றவை என்பது புலப்படாமற் போகாது.

நடுவணரசு உதவியுடன் இன்று நாடெங்கும் மூவாயிரத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் சமசுக்கிருத மொழியைக் கற்பிக்கின்றன. தேசிய சமசுக்கிருத நூல்நிலையமொன்றை நிறுவும் திட்டத்தை இந்திய அரசு மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றது. தமிழ்மொழிக்கென்று முழுமையாக ஒரு பல்கலைக் கழகமும் துணைநில்லாத இற்றை நிலையில் ஏறத்தாழ, 600 பேர்களுக்கே பேச்சு மொழியாக உள்ளதாக, அரசுப் புள்ளி விளத்தங்களில் குறிப்பிடப் பெறும் சமசுக்கிருத மொழிக்கென்று தனிப் பல்கலைக் கழகமொன்றைத் தென்னாட்டுப் பகுதியில் நிறுவ, நடுவணரசு திட்டமிட்டு வருகின்றது. இந்தியாவில் உள்ள எண்பத்தாறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏறத்தாழ 60 பல்கலைக் கழகங்களில் சமசுக்கிருதம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்ப் படிக்கப் பதினொரு பல்கலைக் கழகங்கிளல் மட்டுமே வாய்ப்புண்டு. திருப்பதியில் இந்திய அரசால் நடத்தப்படும் ‘கேந்த்ரீய சமசுக்கிருத வித்யா பீடத்’தில், மாதத்திற்கு மாணவன் ஒருவனுக்கு உரு. 250 வரை உதவித்தொகை கொடுக்கப்பெற்று, சமசுக்கிருத மொழியும், வேத புராணங்களும் கற்பிக்கப் பெற்று வருகின்றன. ‘வேத விற்பன்னர்கள்’ ஊக்குவிப்புத் திட்டத்தை நடுவணரசு அமைத்து, ஆண்டுதோறும் பேரளவில் அவர்களுக்கு உதவி தந்து வருகின்றது. சமசுக்கிருத மொழி ஆங்கிலம் போல உலக மொழியென்று நடுவணரசு பாராட்டி, அனைத்திந்திய அடிப்படையில் சமசுக்கிருதத்தின் வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்துவருகின்றது. பூனாவில் உள்ள ‘தெக்கான்’ கல்லூரி, அதன் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் எசு.எம். காத்துரே அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, 15 முதல் 20 தொகுதிகள் வரை, சமசுக்கிருதப் பேரகர முதலியொன்றை வெளியிடவும், அதற்கென ஒரு கோடி உருபா வரை செலவிடவும் திட்டமிட்டுக் கொண்டு, செயல்பட்டு வருகின்றது. அத் தொகுதி ஒவ்வொன்றும் ஒராயிரம் பக்கம் இருக்குமாம். 1986இல் அவ்வகர முதலி வேலை முடியுமாம். அதற்குத் தேவைப்படும் எல்லா உதவிகளையும் நேரடியாக நடுவணரசும் மகாராட்டிர அரசும், நடுவண் அரசுச் சார்புள்ள பல்கலைக் கழக நல்கைக் குழுவும், பூனா பல்கலைக் கழகமும் – செய்ய உறுதி பூண்டுள்ளன. இவையல்லாமல் உலக ஒன்றிப்புக் கழகத்தின் (U.N.O) கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஆண்டொன்றுக்கு 3,000 தாலர் (ஏறத்தாழ 22,000 உரு) அப் பணி முடியும் வரை தந்து உதவ ஒப்புக்கொண்டுள்ளது. இவ் வொப்புதலும் நடுவணரசு தலையீட்டின் மேல்தான் கிடைக்கும் என்பதையும் நம்மவர்கள் அறிந்துகொள்ளுதல் வேண்டும். இவ்வுதவி யின்றி உலக ஒன்றிப்புக் கழகத்தின் வேறுவகை உதவிகளும் நடுவண் அரசின் பரிந்துரையால் ஆண்டுதோறும் சமசுக்கிருத வளர்ச்சிக்குக் கிடைத்துவருகின்றது. அவ்வுதவித் தொகையைக் கொண்டு, சமசுக்கிருத மொழிக் கழகங்களும், வேதப் பள்ளிகளும், ஆரியமத நிறுவனங்களும், சமசுக்கிருதப் புலவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் பேணப்பெற்றும், புரக்கப்பெற்றும், காக்கப்பெற்றும் வருகின்றார்கள். மற்றும், 1972இல் தில்லியில் நடந்த அகில பாரத வேத வித்வத் சம்மேளனத்தில் இவ்விந்திய நாட்டின் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி கலந்துகொண்டு, அங்குக் கூடிய சமசுக்கிருதப் பேரறிஞர்களையும், ‘வேத விற்பன்னர்’களையும் ஊக்கப் படுத்தியதுடன், அம் மாநாட்டுத் தீர்மானத்தில், அவர்களைப் புரப்பதற்காக நடுவணரசிடம் ஆண்டுதோறும் உதவுமாறு கேட்கப் பெற்றதற்கேற்ப உருபா பத்து இலக்கத்தையும் கிடைக்க ஏற்பாடும் செய்தார். அக்கால் கல்வியமைச்சராக விருந்த திரு. கரன்சிங் அவர்களும், “சமசுக்கிருத மொழியால்தான் இந்தியாவுக்கே பெருமை” என்று பாராட்டியதுடன், கட்சி வேறுபாடில்லாமல் வி.கே.ஆர்.வி. இராவ், பேரா. இரென் முகர்சி (இந்தியப் பொதுவுடைமைக் கட்சி), திரிதிப் சவுத்ரி, ஆல்டர், எச்.எம். பட்டேல் (சுதந்திரா) போன்ற நூற்றிருபது பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் சமசுக்கிருதத்திற்கு உரிய பெருமையை மீட்டுக்கொள்ள இந்திய அரசு எல்லா வகையிலும் உதவ வேண்டுமென்னும் நோக்கத்துடன் இந்திராவிடம் ஒரு வேண்டுகோளைக் கொடுக்கத் துரண்டுகோலாகவும் இருந்தார். அதில், “அரசின் மும்மொழித் திட்டத்தில் இந்திய நாட்டின் பெரும்பாலான மொழிகளுக்கும் தாயான சமசுக்கிருதத்திற்கு இந்திய அரசு சிறப்பான ஓரிடத்தைத் தரவேண்டும்”. (Sanskrit, the mother of most Indian languages, should be given a special place in three language formula adopted by the govt.) — என்று கூறப் பெற்றிருந்தது.

மேலும், நடுவணரசுக் கல்வியமைச்சர் திரு. கரண்சிங் அவர்கள் சமசுக்கிருத வளர்ச்சியில் தனி நாட்டங்கொண்டு, “அறிவியல், பண்பாடு, இலக்கிய வளர்ச்சிக்கான மொழி சமசுக்கிருதமே என்றும், “சமசுக்கிருதத்தைச் சரியான கண்ணோட்டத்துடன் பயன்படுத்தினால் அது நம்முடைய நாட்டின் இணைப்பு மொழியாகப் பெரிதும் தகுதியுடையது” என்றும், அக்கால் நடந்த அலகாபாது உலக சமசுக்கிருத மாநாட்டு அமைப்புக் கழகத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார். அந்த மாநாடும் தில்லியில் 1972–இல் நம் உலகத் தமிழ் மாநாடு போல் சீரும் சிறப்புமாக நடந்தது. ஆறு நாட்கள் நடந்த அம்மாநாட்டில் 35 அயல்நாடுகளிலிருந்தும் ஐநூற்றுக்கு மேற்பட்ட சமசுக்கிருத அறிஞர்கள் பங்குகொண்டனர். உருசியாவில் நடக்கும் சமசுக்கிருத ஆராய்ச்சிக்கும், டென்மார்க்கு, இசுக்காண்டிநேவியர் அறிஞர்கள் ஒத்துழைப்புடன், ஆரிய நாகரிகத்தைப் பறைசாற்றுவதாகக் கூறப்படும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பற்றியும், குறிப்பாக இரிக்கு வேத காலம் பற்றியும் மேற்கொள்ளப் பெறும் ஆராய்ச்சிக்கும், நடுவணரசுக் கண்காணிப்பும் இருந்து வருகின்றது. இவையன்றி, நைனிடாலில் ஆரிய சமாசத்தின் சார்பில் இவ்வாண்டு இறுதிக்குள் நான்கு வேத ஆங்கில வெளியீட்டு முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆரிய சமாசத்திற்கு உலகின் பதினான்குக்கு மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. காஞ்சியில் உள்ள காமகோடி பீடம் இவ்வகையிலும், வேத புராண ஆரியக் கருத்துகளைப் பரப்பும் வகையிலும், ‘வேத ரட்சண நிதிக்குழு’ என்னும் ஒரு குழு போன்ற பல மொழி, இனக் காப்புக் குழுக்களை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் நேரடியாக ஓரிலக்க உருபாவையும், மறைமுகமாகப் பல இலக்க உருபாவையும் செலவிட்டு வருகின்றது. இவ்வகையில், இங்குள்ள சமசுக்கிருதக் கல்வி மடங்களும் பிற மத நிறுவனங்களும் மிகவும் ஒத்துழைப்புக் காட்டி வருகின்றதைப் பலர் அறிந்திருக்க வழியில்லை. இன்னும் இது போல் பல நிலைகளையும் நாம் புள்ளி விளத்தத்துடன் எடுத்துக்காட்டுதல் இயலும், ஆனால், இவையனைத்தும் நம் தமிழ் மக்களுக்கு ஒர் எள்ளத்துணை உணர்வையோ, ஓர் இம்மியளவு முயற்சியையோ உண்டாக்கிவிடப் போவதில்லை என்பதும் நமக்குத் தெரியும். அவ்வாறு முயற்சி செய்து வருவோர் அங்குமிங்குமாக ஒருசிலர் இருந்தாலும் அவர்களுடைய அறிவையும், முயற்சியையும் குறைத்து மதிப்பிடவும், குறைகறித் திரியவுமே இங்குப் பலர் இருக்கின்றனர். அவர்களுடைய ஏசல் இழிவுகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு, மொழிக்காகவும், இனத்திற்காகவும், பண்பாட்டிற்காகவும், பொறுக்கித் தின்னுதற்கன்றி, உண்மையாக உழைக்கின்ற ஒரிருவர் முயற்சிகளையும், நம் கல்வியமைச்சர் போன்றவர்கள், ஏதோ தம் வீட்டுச் சொத்தை எடுத்தெடுத்துக் கொடுத்துக் கை சிவந்தவர்போல், மனச் சலிப்போடும், வாய்ச் சலிப்போடும், கிண்டலும் பகடியும் செய்யத் தொடங்கிப் புறக்கணித்துவிட்டால், தமிழ்தான் எப்படி வளரும்? தமிழன்தான் எப்படி இனவுணர்ச்சி பெறுவான்? தமிழ்நாடுதான் என்றைக்குத் தன் அடிமைத்தனத்தை நீக்கிக்கொண்டு, உரிமையுடன் தலைநிமிரும்.

பார்ப்பன இனம்போல் நம் இனம் முன்னேறாமைக்குக் கரணியம் பார்ப்பனர்களல்லர்; நம்மவர்களேதாம்! அவர்களைப் போல மொழியுணர்வும், இனவுணர்வும் நம்மிடம் என்றும் இருந்ததில்லை. உண்மை முயற்சியுள்ளவர்களை ஊக்கப்படுத்திக் கைகொடுத்துக் கரையேற்றும் போக்கு நம்மிடம் மலர இன்னும் பல நூறு ஆண்டுகள் போகவேண்டும். கோழைகளாகவும், மோழைகளாகஷ், ஏழைகளாகவும் நலிந்தும், மெலிந்தும் கிடக்கும் நம் இனத்தில், தப்பித் தவறித் தலைதூக்கும் ஓரிருவரையும், தலையில் மிதித்துச் சேற்றில் அழுத்தினால், நாம் இன்று நட்டுவைக்கும் நடுத்தெருச் சிலைகளும் எழுதிவைக்கும் வரலாறுமே நம்மைப் பார்த்து நாளைக்குக் கையொட்டிச் சிரிக்கும். விளம்பர வேடிக்கைக்காரர்களன்றி, நல்லவுள்ளம் படைத்த நடுநிலையாளர்களை எண்ணிப் பார்க்க வேண்டிக் கொள்கின்றேன்.

–தமிழ்ச்சிட்டு, குரல் : 8, இசை 8–10, 1975