ஆறுமுகமான பொருள்/கந்த சஷ்டி கவசம் முன்னுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

12
கந்தர் சஷ்டி கவசம்

எல்லாம் வல்ல இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு எத்தனையோ வழிகளை நமக்குப் பெரியவர்கள் காட்டி இருக்கிறார்கள். இறைவனை நினைத்தல், அவனைப் பற்றிக் கேட்டல், அவன் நாமத்தை சொல்லல் என்னும் மூன்றும் நாம் செய்ய்க் கூடியவை. இவற்றையே ஸ்மரணம், சிரவணம், கீர்த்தனம் என்று வட மொழிவல்லார் கூறுகின்றார். இம்மூன்று வகையிலும் மிக எளிதாக நாம் செய்யக்கூடியது. இறைவன் நாமத்தைச் சொல்லலும் அவன் புகழ்பாடுதாலும் தான்.

தமிழ் நாட்டின் தனிப் பெருங்கடவுள் முருகன். என்றும் இளையனாகவும், அழகனாகவும், ஏன், இறைவனாகவுமே விளங்குகின்றவன் அவன். அதனால் அவனைப் பற்றிப் பாராயணம் பண்ணுவதற்குப் பல நூல்கள் உண்டு. அவைகளில் மூன்று சிறப்பாகக் கருதப்படுகின்றன. அவை திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, கந்தர் சஷ்டி கவசம் என்பவையே. இவற்றில் திருமுருகாற்றுப்படை இலக்கிய நயம் உடையது. ஆனால் எளிதில் பொருள் விளங்காதது. கந்தர் கலி வெண்பா ஒரு குட்டிக் கந்த புராணமேயாகும். சித்தாந்தக் கருத்துக்கள் சொல்ல சித்தாந்த சாஸ்திரம் கற்ற பெரியவர் ஒருவரையே அணுக வேண்டியிருக்கும். ஆனால் எவரும் நன்றாகப் பொருள் தெரிந்து பாராயணம் பண்ணுவதற்கு உரிய நூல் தான் கந்தர் சஷ்டி கவசம்.

இறைவனை அணுகும்போது, அவனிடம் பிரார்த்திக்கிற போது உலகெல்லாம் உய்ய வேண்டும் என்று பிரார்த்திப்பவர்கள் பெரியோர்கள். ஆனால் எல்லோருமே பெரியவர்களாக இருந்தவிட முடியாது அல்லவா?

எனக்குப் பொன்னைக் கொடு, நோயற்ற வாழ்வைக் கொடு என்று பிரார்த்தனை செய்பவர்கள் தான் அதிகம்.


நோயில்த் தளராமல்
நொந்து மனம் வாடாமல்
பாயிற்கிடவாமல்

கண்பார்த்துக் கொள் ஐயா! என்பதுதான் எல்லோருடைய பிரார்த்தனையாக இருக்கும். அந்த பிரார்த்தனையே அடியேன் வதனம் 'அழகுவேல் காக்க' என்று தொடங்கி கேசாதிபாதம் உன்ன அங்கம் ஒவ்வொன்றையும் காக்கும்படி அவனிடம் பிரார்த்தித்துக் கொள்வது சிறப்புடையதுதானே? இன்னும், பில்லிசூனியம், பூதம், முனி இவற்றிலிருந்து காக்க அவனது துணை நாடி நிற்பதும் பாமர மக்களின் நித்யப்படி பிரார்த்தனையாக இருக்கும். பல வார்த்தைகளை அடுக்கடுக்காய்ச் சொல்லவும் வகை செய்திருப்பது அந்தக் கவசம். இத்தனை பிரார்த்தனைகளிலும் எனக்கு மிகவும் பிடித்தமான பிரார்த்தனை இதுதான்.


எத்தனை குறைகள்
எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன்
எத்தனை செயினும்
பெற்றவன் நீ குரு
பொறுப்பது உன்கடன்

என்று அவனிடத்திலேயே பாரத்தை போட்டு விண்ணப்பித்துக் கொள்வதை விட நாம் வேறு என்ன பிரார்த்தனை செய்ய இயலும்.

ஆண்டு தோறும் திருச் செந்தூரில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். அங்கு ஆறு நாளும் உண்ணாவிரதம் இருந்து நோன்பு நோற்பவர்களும் அநேகர். இவர்களில் பலரும் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாராயணம் பண்ணிக் கொண்டிருப்பர். ஆனால் பலருக்குப் பொருள் விளங்கியிருக்காது. நம்பிக்கையோடு செய்யும் பிரார்த்தனையாக இருக்கும். மாணிக்கவாசகர் சொன்னதுபோல் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லவும் தெரிந்து கொண்டோமானால் சிறப்பாக இருக்கும் அல்லவா. நானறிந்த மட்டில் இக் கவசத்திற்கு இதுவரையாரும் உரை எழுதியதாகத் தெரியவில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்கிறார் நண்பர் திரு. P.A. நடேசபிள்ளை அவர்கள். இதனை அச்சிட்டு இலவசமாகவே வழங்க முன்வருகிறார். இவர்களது பணி சிறக்க என்று வாழ்த்துகின்றேன்.

கவசத்தைப் பாராயணம் பண்ணும் முருக பக்தர்கள் எல்லாம் நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். நானும் அவர்களில் உள்ளிட்டவன்தானே.