ஆலமரத்துப் பைங்கிளி/இருமனம்

விக்கிமூலம் இலிருந்து

15
இரு மனம்

ந்தக் கோடை விடுமுறையில் ஆனந்தனின் வீடு கல்யாண வீடுபோலக் கூத்தும் கும்மாளமுமாகக் கலகலத்திருந்தது. ஆனந்தனின் அழைப்பின்பேரில் அவன் தங்கை பார்வதியும் அவள் புதல்வி ராதையும் விருந்தினராக வந்திருந்தார்கள். ஆபீஸ் அலுவல் நிமித்தம் பார்வதியின் கணவன் வரமுடியவில்லை. இவர்கள் மட்டும் வந்தார்கள். இந்த விருந்தினரின் வருகையால் அதிக ஆனந்தம் எய்தியவன் ஆனந்தனின் புதல்வன் கண்ணன்தான். ஏனென்றால் கண்ணனுக்கு விளையாட்டு ‘ஜோடி’யாக அங்கு ராதை இருந்தாள்!

ராதையைப் பார்ப்பதற்குள் அவன் எவ்வளவு துடி துடித்துப் போய் விட்டான்? தினமும் காலண்டரைப் புரட்டிப்பார்த்து ‘பள்ளிக்கூடம் கோடைக்குச் சாத்த இன்னும் எத்தனை நாள் இருக்கிறது?’ என்று கணக்கிட்டு நாட்களை ஒட்டிய சங்கடம் அவனுக்கல்லவா தெரியும்? பட்டணத்தில் வாசித்துக்கொண்டிருக்கும் ராதையை

வேலை காரணமாக உடன் பிறந்த குடும்பங்கள் இரண்டும் பிரிய நேர்ந்தது. இரு குடும்பங்களுக்குமிடையே விடப்பட்டிருந்த தூரத்தை இட்டு கிரப்பும் அன்புப் பாலமாக―பாசத் தொடராக அமைந்தது அவர்களிடையே கடந்து வந்த கடிதத் தொடர்பு.

கண்ணன் பத்து வயது நிரம்பப் பெற்றவன். ராதைக்கு ஆறாவது ஆண்டு ஆரம்பம்.

அவன் நாலாவது வகுப்பு. அவளுக்கு ‘ஆனா ― ஆவன்னா’ ஏடு தலைகீழ்ப்பாடம்!

கண்ணன் கொஞ்சம் குறும்பு. சும்மா இருக்கவே மாட்டான். ராதையை ஏதாவது ‘நிமிட்டி’ பண்ணி அழ வைத்து வேடிக்கை பார்ப்பதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி. ராதையின் வேண்டுகோளுக்கிணங்க ஆனந்தன் ரேடியோ வைத் திருப்பினான், வேண்டுமென்றே ‘ஸ்டிரைக்’ செய்வான் கண்ணன். உடனே மேலிடத்துக்கு தாக்கிது தூது செல்லும் ராதையின் சார்பில்.

“நீங்க ரெண்டு பேரும் எப்படியாவது போங்கள். புருஷனும் பெண்டாட்டியும் இப்போ சண்டை போட்டுப்பிங்க. சற்றுக் கழித்துப் பார்த்தா கூடிக் குலாவிப்பிங்க” என்பான் ஆனந்தன்.

அடுத்த விடினாயில் என்ன மாயமிருக்குமோ, ராதையும் கண்ணனும் திரும்பவும் கும்மாளம் போட ஆரம்பித்து விடுவார்கள், தம்பதிகளிடையே கணத்தில் தோன்றி கணத்தில் மறையும் பிணக்குப்போல.

உள்ளத்தே துளிர்த்திருந்த ஆசையை வார்த்தைகளாக்கிச் சொக்கும் புன்னகையுடன் கூறிய பார்வதியின் முகத்தில் அந்த ‘ஆனந்தக்கனவு’ நிழலாடியது.

ஆனந்தன் சிரித்தான்.

“பேஷ் பார்வதி. இப்போதே உன் பெண்ணுக்கு வரன் செட்டில் செய்துவிட்டாயே?...”

அன்று.....

‘கண்ணா’ என்று அலட்டியவண்ணம் துள்ளிக் குதித்து வந்தாள் ராதை. மெட்டியொலி கண்ணனின் உறக்கத்தைத் தட்டியெழுப்பியது போலும்! விழித்தெழுந்த அவன் அரைக்கணம் ராதையைப் அப்போது தான் புதிதாகப் பார்ப்பதுமாதிரி ஏற இறங்கப் பார்த்தான்.

“அத்தான், இந்நேரமா தூங்குவாங்க யாரும்? என்னைப் பாரு. எப்படி ஷோக்கா சட்டை போட்டு வங்துட்டேன் அதுக்குள்ளே, உனக்கு ஒரு வேடிக்கை காட்டட்டுமா? நம்ப விட்டுக்கு முன்னாலே பார்...” என்று குழைந்த குரலில் கூறிய ராதை, எதிரே சுட்டிக் காட்டினாள். இளஞ் சூரியனின் கதிரொளியில் அந்த மணல் வீடு அழகாக விளங்கியது. அதைப் பார்க்கப் பார்க்க ஏனோ கண்ணனின் கண்கள் சிவந்து வந்தன. முகம் வேறுபட்டது. அடுத்த வினாடி ‘விருட்’டென்று ஓடி அந்த மணல் வீட்டைக் காலால் உதைத்துச் சிதைத்தான் அவன். தன் செயலால் பாவம், அந்தச் சிறுமியின் பிஞ்சு மனமும் சிதைந்து போனதென்பதை கண்ணன் அறிய மாட்டான். ராதை துடித்துப் போனாள். அவனது விசித்திர மாற்றத்துக்குக் காரணம் எதுவும் புலப்படாமல் தவித்தது அப்பெண் உள்ளம். வாய்விட்டுப் புலம்பு

வதைத் தவிர மாற்று ஒன்றும் பிடிகொடுக்கவில்லை ராதைக்கு. ஆனால் அத்தனை எளிதில் அழத்தான் தெம்பு வந்து விடுகிறதா? தெம்பிருந்தாலும் அழத்தான் மனம் இடம் கொடுத்துவிடுகிறதா?

‘கண்ணா, ஏதுக்கு என் வீட்டை அழிச்சியாம்?” என்று கேட்டாள் ராதை தணிந்த தொனியில். பூமனதில் வீசிய புயலின் கொந்தளிப்பு, குரலில் காணோம்.

“பதிலுக்குப் பதில் செஞ்சுட்டேன், பார்த்தியா?”

கண்ணன் இப்படிப் பதில் சொன்னான். அவன் குரலில் ஆத்திரம் எடுப்பாக இருந்தது.

“நீ சொல்றது எனக்கு விளங்கலையே...”

“எப்படி விளங்கும்? நான் கட்டின வீட்டை மாத்திரம் நீ கெடுத்துடலாம். பதிலுக்கு நான் செஞ்சா மாத்திரம் நோகிப் போயிடுமோ?”

கண்ணனின் வார்த்தைகள் குழந்தை ராதையை ஆச்சரியத்துக்குள்ளாக்கின. ஏனென்றால் அவன் சொன்னதுபோல மணல்வீடு கட்டி விளையாடவே கிடையாது. அன்றைக்குச் ‘சடு குடு’ விளையாட்டுதான் அங்கம் வகித்தது. வீண்பழியைத் தன்மீது சுமத்துவது கண்டு ராதை பொறுமினாள்.

‘நானா உன் வீட்டை அழிச்சேன்? நம்ப மணல்வீடு கட்டி விளையாண்டு ஒரு வாரம் ஆகப் போகுதே. நல்லா யோசிச்சு எதையும் செய்யணும். ஒருவேளை கனா ஏதாச்சும் கண்டு உளறுறியா...?’

‘கனா’ என்றதும் புளிச்சென்று எதையோ ஒன்றை ஞாபகப்படுத்திக் கொண்டவனாக ஒருகணம் செயலிழந்தான் கண்ணன். அவன் செய்த தவறை―வீணாக ராதையைக் குற்றம் சாட்டிய பழியை ― அப்போது நன்கு உணரலானான்.

இரவு கண்ணன் கண்ட கனவின் விளைவே இருவரிடையிலும் ஏற்பட்ட மனத்தாங்கலுக்குக் காரணம். அவன் நிர்மாணிக்கும் அழகான மணல்வீட்டை ஆசையுடன் காட்டப்போக, அவள் அதைத் ‘திடுதிப்’டென்று அழித்து விடுவதாகக் கனவு காண்கிறான். அதற்கு வஞ்சம் தீர்க்க வேண்டுமென்ற ஒரே எண்ணத்துடன் புரண்ட அவனை ராதை எழுப்பியதும் பழைய ஞாபகம் மட்டுமே அவன் தளிர்நெஞ்சில் முன்னின்றது. கடைசியில் ராதையின் வீட்டைச் சிதைத்து விடுகிறான் கண்ணன்! பூ மனத்தின் விந்தையைப் பாருங்கள்!

“ராதை, என்னை மன்னிச்சுப்பிடு. நான் முட்டாள். நீ என் ராதையில்லையா? இதற்கெல்லாம் கோபிக்கப்படாது ― ராதை” என்று கெஞ்சினான் அவன். பின் காரணத்தையும் விளக்கினான். ஆனால் அவன் எதிர் பார்த்தபடி அவள் வாய்திறக்கவில்லை. பேசாமடந்தயைாக இருந்த அப்பேசும் பொற்சித்திரம் ― ராதை தேம்பினாள். கண்ணனுக்குப் ‘பக்’கென்றது. அவன் கண்களும் கலங்கின.

“ராதை, நொடிப்போதிலே நீ கட்டின வீடாட்டமாக் கட்டித் தந்துட்டாச் சரிதானே. அப்புறம் அழவும்படாது. அத்தை, அம்மாகிட்டே போய்ப் புகார் சொல்லவும் கூடாது...”

கண்ணன் அவ்வடிவழகியை ஏக்கத்துடன் நோக்கினான். அவன் பார்வையில் என்ன வசியமோ? மின் வெட்டில் ராதை சிரிப்பதைக் கண்டவுடன் கண்ணனுக்கு உயிர் மீண்டும் வந்ததுபோன்ற உணர்வு பரவியது.

“அத்தான். கடைசி மட்டும் நீ என்ன செய்யப் போறேன்னு பார்க்கலே நான் அப்படி அழறது கணக்கா நடிச்சேன். இந்தத் தரம் உனக்கு ‘மாப்பு’ ஆமா; இனி.

எம்மேலே கோவிச்சுக்கப்படதாக்கும். நீ எனக்கு வீடு கட்ட வேணாம். கம்ப ரெண்டு பேருமே சேர்ந்து ஒண்ணா நம்பர் பங்களாவாக் கட்டிடலாம்...” என்றாள் ராதை குதூகலம் நிரம்பி வழிய.

இவ்விதம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும், சிரிப்பொலி கேட்டுத் திரும்பினர். ஆனந்தன், அவன் மனைவி, தங்கை மூவரும் நின்றார்கள்.

“உங்கள் ‘டூ’விற்கு மத்தியஸ்தம் இல்லாமலே ராசியாகி விட்டீர்களாக்கும். அதுதான் அழகு. ஊம்; காப்பியைச் சாப்பிட்டுவிட்டு அப்புறம் விளையாடுங்கள்...” காப்பி ‘செட்’ இரண்டை அவர்கள் முன் சமர்ப்பித்தாள் திருமதி ஆனந்தன்.

இரண்டு மணி மெயிலுக்குப் பட்டணம் புறப்பட வேண்டுமென்று தன் அம்மா கூறக் கேட்ட ராதை மிகவும் வேதனைப்பட்டுப் போனாள். பள்ளிக்கூடம் திறக்க இன்னும் நாலைந்து நாட்களே இருந்தன. ஆனாலும் வேறு ஏதோ அவசர காரியமாக உடனே புறப்பட்டு வரும்படி பார்வதிக்கு அவள் கணவனிடமிருந்து கடிதம் வந்திருந்தது.

கண்ணனின் காதுகளில் செய்தி எட்டியதும் அசந்து விட்டான். ஒரு நிமிஷம் கூட அவளைவிட்டுப் பிரியமாட்டாத அவன் எப்படி அடுத்த லீவு வரை ராதையைப் பிரிந்து ― அந்த ஆசை முகத்தைக் காணாமலிருக்க முடியும்? ராதை தன்னுடனேயே இருந்து படிக்கும் படி வேண்டினான். பார்வதிக்குக் குழந்தையைத் தனியே விட்டு வைக்க மனமில்லை.

“கண்ணா, அடுத்த மாசம் திருவிழாவிற்கு உன்னிடம் கொண்டு சேர்த்து விடுகிறேன். கடல் கடந்தா
போகிறோம்? எண்ணிச் சில நாள் பொறுத்திரு” என்று பார்வதி சொன்னது, கண்ணனுக்கு என்னவோ அமைதியூட்டவில்லை.

ராதை ஊருக்குப் புறப்பட்டபோது அவள் கண்களில் நீர் மின்னிய காட்சி மட்டும் அடிக்கடி கண்ணனின் மனத்திரையில் நிழல் வடிவிட்டது.

நாட்கள் கழிந்தன.

ராதை ஊருக்குச் சென்றதிலிருந்து கண்ணனுக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. விளையாட்டு, கோலி ஆட்டம் என்றால் பிராணனைவிடும் அதே கண்ணன் அன்று விளையாடும் இடத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. பித்துப் பிடித்தவன் போலச் சதா காணப்பட்டான். ஒரு நாள் ராதையின் மணல் வீட்டை அழித்து விட்டானல்லவா? அந்தத் துன்ப வடு அவன் குருத்து மனதைக் குடைந்தது.

கண்ணனுடைய இந்த மாறுதலைக் கண்ட அவன் பெற்றாேர்கள் திகைப்படைந்தனர்.

“கண்ணா, உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? டாக்டரைக் கூட்டி வரட்டுமா? ஏன் இப்படி என்னவோ போல ஒரு மாதிரி இருக்கே...” என்பதாகத் தாயும் தந்தையும் மாறிமாறி வினவினார்கள்.

பெற்றோர்கள் நச்சரிப்புக்குப் பயந்தோ என்னவோ அன்று உண்மையை வெளியிட்டான் குழந்தை.

“அம்மா, அப்பாவிடம் சொல்லி என்ன நம்ப ராதைகிட்டே அழைச்சுட்டுப் போகச் சொல்ல மாட்டியா?” என்று அழாக் குறையாகக் கூறினான்.

ராதையின் பிரிவுதான் கண்ணனின் சஞ்சலத்திற்கும், மாற்றத்துக்கும் காரணம் என்பதை அறிந்த தாய் ஆச்சரியப்பட்டாள்; அமைதியடைந்தாள்.

“ஆகட்டும் கண்ணே, முன்னாலே இதைச் சொல்லியிருக்கப்படாதா? நாங்கள் பயந்துவிட்டோமே......நல்ல வேளை...எங்கள் வயிற்றில் பாலை வார்த்தாய்!”

அன்று மாலை ரயிலுக்குப் புறப்பட ஆனந்தனும் கண்ணனும் ஆயத்தமாகினர்.

அதே சமயம் வாசலில் ஜட்கா ஒன்று வந்து கின்றது. அதிலிருந்து குதித்து வந்த ராதையைப் பார்த்த கண்ணணுக்குத் தன் விழிகளையே நம்ப இயலவில்லை.

“ராதை,” என்றான் கண்ணன்.

“அத்தான்,வ என்றாள் ராதை.

இடைவேளை கழிந்து சந்திக்கும் காதலர்கள் போலக் குழந்தைகள் இருவரும் களிப்புற்றார்கள்; சிரித்து மகிழ்ந்தார்கள்.

ராதையின் தந்தை கோபுவை வரவேற்ற ஆனந்தன், “கோபு, நான் கண்ணனை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்படத் தயாராக இருந்தேன். ராதையைப் பார்த்தால்தான் உண்டு என்று துடித்து விட்டான். நல்லவேளை நீங்களே ராதையைக் கூட்டி வந்து விட்டீர்கள்,” என்றான்.

“ஆனந்தன், குழந்தை உள்ளம் அதி விசித்திரமாக இருக்கிறதே. ராதை என்னிடம் அத்தானைப் பார்க்க வேண்டுமென்று பாடாய்ப்படுத்தி விட்டாள். அவள் பேச்சுக்கு எவ்வளவுதான் டிமிக்கி கொடுக்க முடியும்?

அழைத்து வந்துவிட்டேன். கண்ணனுடன் சேர்ந்தே படிப்பதாகவும் கூறிவிட்டாள்”

“ரொம்ப சந்தோஷம். பருத்தி புடவையாக் காய்த்த மாதிரி இனி எங்கள் கண்ணன் பாடும் யோகந்தான்!’

‘இனி நாம் இருவரும் என்றென்றுமே இணைபிரியாதிருக்கலாம்’ என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டார்கள் கண்ணனும் ராதையும்!