ஆலமரத்துப் பைங்கிளி/உயிர்ப் பரிசு
9
உயிர்ப்பரிசு
ஒற்றைப்பு மட்டிலும் மாலையாகிவிட முடியாது. ஆனுல் ஒரேயொரு நினைவு என்னும் மலர், மணம் கொண்டு மாலையாகத் தொடுத்து நிற்க முடியும்போலும்! அந்த ஒர் எண்ணம் அவனுள் மாலையென நீண்டு, நினைவுப் பூக்களே உதிர்த்துவிட்டது; பூ என்றால், மணம் மண்டிய பூ; பின்னர், மனம் மணக்கக் கேட்க வேண்டிய தில்லையல்லவா? இளமையின் தோற்றுவாய் எழிலுக்குப் பொழிப்புரை சொன்னது; கனவுகளின் காதையிலே கண்ணின் கருமணி கதை உரைத்தது; ஒப்பனை சேர்ந்த நுண்ணிய அழகுக் கோடுகள் காலத்தின் விளையாடலுக் குச் சாட்சியமா?
"அங்காளம்மை!"... காயாம்பூ நினைவு பறிபோனுன்; நித்திலம் உதிர்ந்தது.
"மச்சான்!"... தீபஆவளிக்குக் கட்டியங் கூறிக்கொண்டு விரியத் தொடங்கியிருந்த இருட்செறிவில் ஒளி ஏந்தி வந்தாள் அவள். "வட்டியிலே சோறு கொட்டி ஊர்ப்பட்ட நேர மாயிடுச்சுதுங்க வெரசா வாங்க!"
எட்டடிக் குச்சுக்குள்ளே ஒன்றென ஒட்டிய இரட்டை உள்ளங்களின் அக்தரங்கம் பேசிக்கொண்ட உரையாடலின் உட்பொருளாக அமைந்த பேரமைதியில் வெய்துயர்ப்பும் வேப்பமரக் காற்றும் ‘மோடி’ வைத்தன. ஓலைவெடி கிளப்பிவிட்ட சத்தம் அவனுடைய செவிகளில் அறைந்தது. ‘தீபாவளி வந்திரப்போவதாங்காட்டியும்!’
காயாம்பூவின் விழிகளில் அவைகளுடைய கருமணிகள் புதைந்தன. “நாளைக்குச் செவ்வாய் சந்தைக்கெடுவிலே போயி ஒனக்கு தீபாவளிப் புடவை, ரவிக்கை வாங்கிக்கிட்டு வந்து தாரேன்!” என்று நயம் சேர்த்துச் சொன்னான் அவன்.
பொன்னரசியின் நோக்கு காற் பெரு விரல்களின் விளிம்பில் பதிந்தது!
பாலைவனம் வேளாரிடம் அச்சாரம் கொடுத்து வாங்கிய உண்டியற் கலயத்தைக் குலுக்கினான் காயாம்பூ; பிறகு அதைத் தரையில் ஓங்கி அடித்தான். சில்லறைக் காசுகள் குலுங்கின; விழுந்தன, சிதறின, மெய்ம்மையின் ஒலியென ஓசை புறப்பட்டது. பிரணவத்தின் ஒலிப்பதிவா அக்குரல்?
ஈச்சம் பாயில் பொன்னரசி முடங்கிக் கிடந்தாள். இடதுகை, கொண்டைக்கு அணையாக அமைந்திருந்தது. அகல் விளக்கின் மென்மையான ஒளியில் அவளது அழகு சுடர் தெறித்தது. ‘மஞ்சள் தாலி’ மண்ணை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. மண்―அவள் மாதா!
தொய்ந்திருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்த காயாம்பூ எழுந்தான்; மேனி முறுக்கேறியது. மதமதப்பு ஊறியது. மனை விளக்கைக் குறிப்பு வைத்து நடந்தவனின் பாதங்களில், நாணயங்கள் மிதிபட்டன. நாளைக்குச் செவ்வாய்க்கிழமைச் சந்தைக் கெடுவிலே போயி ஒனக்கு தீவாளிப்புடவை, ரவிக்கை வாங்கிக்கிட்டு வந்து தாரேன்!’ என்று சொன்ன பேச்சு நினைவுக் குழியிலிருந்து வெளிக்கிளம்பியது. சிந்திக் கிடந்த பணத்தைக் கணக்கிட்டபோது பதினான்கு ரூபாய்க்குச் சேர்ந்திருந்தது; புதுக்காசுகள் ஒதுங்கின; ஒதுக்கப்பட்டன. ‘பொன்னரசி தீவாளி குளிச்சு; புதிசு உடுத்திக்கினு எம்முன்னாடி வந்தாக்க எம்பாடு வேட்டைதான்!’ நினைவுக்கும் அச்சம், மடம், நாணம், உண்டு!
பொன்னரசி புரண்டு படுத்தாள், கால்மாட்டில் இருந்த மிளகாய்ப் பானை உருண்டது; அதிலிருந்து ஒரு துணி மூட்டை கழன்று விழுந்தது. ‘கோலவெறி’ வெற்றி கொள்ள எத்தனிக்கையில், மூட்டைத்துணி காலில் இடறியது. காயாம்பூவின் உடல் நடுங்கியது; ஏனென்றால், உள்ளம் நடுங்கியது. புதுப்புடவை ஒன்றும் புதிய ரவிக்கை ஒன்றும் இருந்தன. ‘அங்காளம்மை!..., அவனுடைய நெஞ்சின் நெஞ்சு கதறியது. “மாமன் மவளே, ஒன்னை இனிமே நான் எந்தப் பொறப்பிலே காணப் போறேன்? பூமுடிச்சவ நீ; நான் ஒங்கழுக்கத்திலே தாலிக் கயிற்றை முடிஞ்சேன்; நீ முந்தானை போட்டே எனக்கு!... மூணே மூணு மாசம்தான இந்தப் பாவியோடவாழமுடிஞ்சிது?...ஆத்தா அங்காளம்மே! ஏன் என்வீட்டு அங்காளம்மையைக் கொண்டுக்கிட்டுப் போனே? திவாளிக்கு ஆசையா வாங்கியாந்த இந்தச் சீலையும் இந்த ரவிக்கையும் அவளுக்கு ஒட்டுறதுக்குள்ளாற, அவ தீ கிட்டே ஒட்டிக்கிட்டாளே?...
காயாம்பூவினுடைய அங்காளம்மை நெஞ்சில் இருந்தாள்!
காயாம்பூவின் பொன்னரசி நினைவில் இருந்தாள்!
‘கட்டுச்சோறு’ காயாம்பூவின் கக்கத்தில் இருந்தது. புகையிலைக் குச்சி குழைந்தது. மனைவியிடம் பயணம் சொல்லிக்கொள்ள அவன் காத்து நின்றான். வெய்யவனின் மேனிச்சூடு வையகத்தில் பரவியது.
“ஏலே, பொன்னரசி!...”
இந்தாலே வாரேன்!”
“வெளக்கு வச்சதும் ராவுக்கு நான் வந்துப்பிடுறேன். கெட்டியமா வீட்டிலே குந்தியிரு, பொன்னு!...நீ சொன்ணாப்பிலே கத்தரிப்பூ ரங்கிலே சேலையும் நீல ரவிக்கைத் துணியும் வாங்கியாந் துப்பிடுறேன்!”
“பணம் காசு உண்டன இருக்கில்லே?”
“ஓ!”...
“பணம் காணலேன்னா?”...
“என், நீ சுருக்குப் பையிலே சேர்த்துப் போட்டு முடிஞ்சி வச்சிருக்கியாக்கும்?”
“ஊக் கும்!”
அவள் மென்று விழுங்கிக் கொண்டு நின்றவண்ணம், கையிலிருந்த துணிப் பொட்டணத்தைக் கணவனிடம் காட்டினாள், “மச்சான், இதிலே ஒசத்தியான புடவையும் மேலுக்குச் சட்டையும் இருக்குதே..வேணும்னா, இது களையே நான் தீவாளிக்குப் போட்டுக்கிடுறேன், மச்சான்! இருக்கிற பணம் காசுக்கு ஒங்களுக்குத் துணிங்களை எடுத்துக்கிடுங்க.” என்று தெரிவித்தாள்.
அவள் பேச்சைக் கேட்ட அவன் நிலை தடுமாறினான்; “வேணாம், பொன்னரசி!...இது ஊரார் வீட்டுது!...கீழத் தெரு ஆச்சி தந்திட்டுப் போயிருக்காங்க. மகன் வீட்டிலேருந்து விருந்தாடிப் போய்த் திரும்பின கையோட வந்து வாங்கிக்கிட்டுப் போயிடுவாக! இருக்கிற பணத்துக்கு நல்லதா வாங்கியாந்திடறேன்; நீ போய்க் கஞ்சிகுடி. முடிஞ்சா, ஒரு கொடங்கைக் கடலைக்கொடி எடுத்து ஆஞ்சு வை. திவாளிக்கு எண்ணெய், உப்பு, புளி, மைதா மாவு வாங்குறத்துக்கு ஒத்துவரும்!”... "மச்சான், ஒங்களுக்கும் புதுசு வாங்கியாரணுமாக்கும்!"
"ஆகட்டும், பொன்னு!"
விடிந்தால் தீபாவளியாமே...!
அறந்தாங்கிச்சாலை மடங்கி, முடங்கி, மறுகிக் குறுகி, கடைசியாக அந்த ஒற்றைத் தடத்தில் முற்றுப்புள்ளி கண்டு திருநாளூர் அங்காளம்மன் சந்நிதியிலே பெருமூச் செறிந்தது!
சந்தைக்கு வந்தவர்கள் வழித்துணைக்கு வரமாட்டார்கள். ஆனால், காயாம்பூவுடன் ஒருவன் துணைக்குவந்தான்; காயாம்பூவிடம் காரியமாகவே வந்தான் : 'கடலைக்காய் எம்பிட்டுக்கு இருந்தாலும் அளந்து குடு. நான் மரக்காலுக்கு பதினெட்டுக்காசு மேனிக்குத் தாரேன்!'.
காயாம்பூ மனைவியை நெருங்கி அவளிடம், துணி மூட்டையக் கொடுத்தான். தாழ்வாரத்தில் ஆய்ந்து கொட்டியிருந்த கடலை மணிகளைக் குவித்து குறுணி, பதக்கு என்று முறைபோட்டு அளந்தான்; மொத்தம் ரெண்டு ரூபாயும் ஒன்பது காசுக்குத்தான் தேறுது!" என்று சொன்னான்; பணத்தை எண்ணிக்கொண்டே உள்ளே பாதம் பதித்தான். 'கவுச்சி' நாற்றம் அடம்பிடித்தது.
"மச்சான், உங்களுக்கு ஒண்ணுமே வாங்கக் காணமே ?...."
"நீ புதுப் பொண்ணு; நீ புதிசு கட்டிக்கிறதுதான் நாயம்; அதுதான் எனக்கும் நிம்மதிப்படும்!"
"நீங்க..."
நான் ஆணாப்பொறந்தவன்; கட்டிக்கிட்டங்களை அலங்காரம் செஞ்சுக் கண்குளிரக் காண்றதுதான் எனக்கு சந்தோஷமாயிருக்கும். நித்தங்கூலிக்குக் குறுவை நடவுக்குப்போய் கெடச்ச பணத்திலே 'சுங்கடி' சேர்த்த பணத்தை உன்னோட தீவாளித் துணிமணிகளுக்காகவே தான் கட்டிக் காப்பாத்தி வச்சிருந்தேன் பொன்னரசி!"
அவன் விம்ம, அவள் விம்மினாள். மூச்சின் மூச்சுத் துடித்தது.
"மச்சான், இங்கனே பாருங்க!" அவளுடைய கைகள் பற்றியிருந்த புத்தம் புதிய வேஷ்டி, சட்டையில் அப்போதுதான் அவன் பார்வை பற்றியது. அவன் திசை திரும்பிப் பார்வையைத் திருப்பினான். அதிசயம் குறுக்கோடிய விழி விரிப்பிலே ஆத்திரம் ஆட்டக் காயானது. வாழ்க்கை சதுரங்க விளையாட்டுத்தானே?
"மச்சான், பாருங்க!"
அவளைப் பார்த்தான் அவன்.
"பொன்னு! பானையிலேயிருந்த அந்தச் சீலையும் ரவிக்கையும் எங்கே ?...."
"அதுக ரெண்டையும் அடகு வச்சுப் பணம் சேர்த்துத்தான் மச்சான் ஒங்களுக்கு புதிசு வாங்கியாந்தேன். உங்கிட்டே இருந்த பணம் எனக்குத்தான் காணும், நீங்க ஒங்களுக்கு ஒண்ணும் வாங்கமாட்டீங்கன்னு ரோசிச்சுத்தானுங்க இப்படிச் செஞ்சேன். அடுத்தச் சந்தைக்குள்ளே நான் பணம் சேகரம் செஞ்சு எப்படியும் ஆச்சிவிட்டுத் துணிமணிகளை கமுக்கமா மீட்டுப்பிடுறேனுங்க!"...
கிளிக்குத்தான் கொஞ்சத் தெரியுமா? "அடி பாவி"
அடித்தது கை; அலறினான் அவன்
"வராத்து கணக்கிலே வந்துபோன என்னேட தெய்வதுக்குக் கேடு செஞ்சுபோட்டாயே நீ!... நான் சொல்லப்போற கதை ஒனக்குப் புதிசாயிருக்கும். என்னோட முதல் சம்சாரத்துக்காக வாங்கியாந்த தீவாளித் துணி மணிகதான் பானைக்குள்ளே இருந்துச்சுது!... ஒனக்கு நானும் எனக்கு நீயும் ஆதரவுன்னு ஆனப்பறம் பழசைக் கிளற எனக்கு இஷ்டமில்லே. ஆனா, இந்த மூணு நாலு வருசமாய் அல்லும் பகலும் எனக்கு ஒரேயொரு நினைப்பா இருக்கிறவ என்னோட முதல் பொஞ்சாதி அங்காளம்மையேதான்!... அவ தெய்வம் எப்பிடி, இந்த வெறும் மனுசன்கிட்டே வாழுவா?... அந்தப் புதுத்துணிகளிலே தான் நான் நித்தம் எனக்குச் சொந்தமான அங்காளம்மையைக் கண்டுக்கிட்டிருந்தேன். இப்ப அந்தக் கடைசி ஆறு தலைக்கூட பறிச்சிக்கிட்டியே, பாவி?"
நெற்றிப் பொட்டில் ரத்தக் கோடுகள் கிழிக்கப்பட்டன!
"மச்சான்!..."
பொன்னரசி அலறியழுதாள்.
காயாம்பூவின் காலடியில் கிடந்த அவளுடைய தலையைக் காலால் எட்டித்தள்ளினான். அவன் கதவை உதைத்து வெளியேறினான்.
"மச்சான், இப்பப் பாருங்க. உங்க பொஞ்சாதியின் புடவையும் ரவிக்கையும் இந்தாலே, இருக்குது; எடுத்துக்கிடுங்க!"
காயாம்பூ கண்களை மூடி மூடித்திறந்தான் "மச்சான், ரெண்டு மாசமா எங்கண்ணை உறுத்திக்கிணு இருந்த இந்தப் புடவை, ரவிக்கையோட கதை புரியாமத்தான் நான் முழிச்சுக்கிட்டிருந்தேன். அதைத் தெரிஞ்சுக்கிடத் தான் பொய்யும் சொன்னேன். என்னோட அக்காவுக்குச் சொந்தமானதை நான் தில்லுமல்லு செய்ய ஏலுமாங்க மச்சான்... இப்ப ஒங்களுக்கு எடுத்தாந்திருக்கிறது எல்லாம் சொந்த பணத்திலே வாங்கின தாக்கும். நீங்க உங்கையாலே எனக்குத் தீவாளிக்கு வாங்கித்தாராப்பிலே, நானும் எங்கையாலே உங்களுக்கு வாங்கித்தரணுமில்லே... அதுக்காகத்தானாக்கும்!...சுருக்காச் சாப்பிடுங்க. தீவாளிக்குப் பலகாரம் பட்சணம் செய்யவேணும்!"
கைப்பட்ட கன்னத் தழும்பு சிரிக்கத் தலைப்பட்டது!
அங்காளம்மையின் 'துணி மணிகளை நோக்கிக் கை தொழுதாள் பொன்னரசி!
"எங்களுக்கு நீ தெய்வமா நிண்ணு நல்லது செய்யி, அக்கா!"