ஆலமரத்துப் பைங்கிளி/காதல் என்னும் பொய் விளையாட்டு

விக்கிமூலம் இலிருந்து

2
காதல் எனும் பொய் விளையாட்டு

குமண வள்ளலின் சரித்திரத்தைக் கதையாகச் சொல்லி முடிக்கட்டுமே யென்று காத்திருந்த மாதிரி, பள்ளிக்கூட மணி ‘கண கண’ வென ஒலித்தது. மணிச் சத்தம் கேட்டதுதான் தாமதம், அவரவர்கள் புத்தக மூட்டைகளை எடுத்துக்கொண்டு கிளம்பத்தொடங்கனார்கள். ‘டெஸ்க்கு’கள் அதிர்ந்தன; பெஞ்சுப் பலகைகள் ‘கடமுட’ வென்று ஓசை செய்தன. மதியச் சாப்பாட்டுக்குப் புறப்படும் பதட்டம்; பசிக் கோளாறு என்று தான் சொல்லவேண்டும். சின்னப் பிள்ளைகள்...... இருக்கதா, பின்னே?

அந்தக் கைப்பிரம்புக்கு வலு அதிகம் என்பதைக் காட்டிலும், மகிமை கூடுதல் என்பதே பொருத்தம். அதையெடுத்து மேஜை டிராயருக்குள் திணித்துவிட்டு, சேலைத் தலைப்பை எடுத்து ஒரு பக்கத்தின் நுனி கொண்டு நெற்றி மேட்டிலும் கன்னக் கதுப்புகளிலும் மூக்கின் முனையிலும் ஒற்றி எடுத்தாள். கோடை என்றால் வியர்வைக்குப் பஞ்சமா? பஞ்சாய்ப் பறந்தது அயர்வு. டவலை மடித்துக் கைக்குள் இடுக்கியவளாக இருக்கையைப் பிரிந்தாள். ‘பச்சைமண்’ ஏந்திச் சென்ற தாய் ஒருத்தியின், காட்சி அவளுள் பாசத் துடிப்பை மீட்டிவிட்டிருக்கவேண்டும். நீள் மூச்சுப் பிரிங்தது. உதட்டுக்கரைதனில் உல்லாசப் பவனி வந்தது உலர்ந்த மூரல். வாழ்க்கையின் மேடு பள்ளங்களுக்கென அமைந்த அல்லது, அமைத்துக் கொண்ட அடையாள முத்திரையோ, என்னவோ?

அவள்-பார்வதி. வாத்தியாரம்மா.

“டீச்சர்...டீச்சர்!”

பிஞ்சின் குரல் கேட்கவே அவள் விசை சேர்த்துத் திரும்பினாள். பத்மினி நின்று கொண்டிருந்தாள். சிறுமி இந்தப் பெயருக்கு ஒரு ‘மவுஸ்’ உண்டல்லவா? அவளது முல்லையரும்பு விரல்களைப் பற்றிக்கொண்டு, சிறு வயசுக்காரர். ஒருவர் நின்று கொண்டிருந்தார். கீரமங்கலத்தில் நல்ல புள்ளி. பஞ்சாயத்து சபையின் அங்கத்தினர். மத்தியானம் வீட்டில் ஏதோ விசேஷமாம், மகளுக்கு வீவு வேண்டுமாம். சிரிப்புக் காட்டி, பத்மினியைச் சிரிக்கச் செய்து, அனுமதி ஈந்தாள் ஆசிரியை.

பள்ளிக்கூடத்திலிருந்து மறுகி கடந்து, போலீஸ் ஸ்டேஷனில் திரும்பி, மேலத் தெருவுக்கு அவள் வந்து சேருவதற்குள் அரைமணி ஆகும். நின்றது நின்றபடியே, அவள் தன் வீட்டினை அடைந்துவிட்டாள். ‘பேபி இந்நேரம் தூங்கி விழிச்சிக்கிட்டிருக்கும். பால் புட்டியிலே இருக்கிற பாலை ‘அவங்க’ கொடுத்திருப்பாங்க...’ எண்ணங்களின் மருக்கொழுந்து மணத்தில், ‘இறந்தகாலம்’ நெடி கூட்டிக்கிறக்கம் கண்டது. அந்தக் கிறக்கம்தான் வாழ்வா? கிறக்கம் தெளிந்ததும், தன் இடது கால் பாதத்தைக் குனிந்து பார்த்தாள் அவள். ஈரம் பெய்தது. இமை நெடுகிலும்.

படிக்கட்டுக்களைக் கடந்து இறங்கினாள். அவள் ‘ப்யூன்’ கொடுத்த உறைக்கடிதம் அவளுள் சாட்டை சொடுக்கியது. ‘ஐயோ, நான் இப்ப என்ன செய்வேன்?... புதுச் சோதனையாயிருக்கே?...’ மேனி அல்லாடியது. கண்ணீர் வழிந்தது.

சும்மா சொல்லலாமா?―சித்தர்கள் மகா ஞானிகள். வாழ்க்கை எனும் கணப்புக் குழியில் இந்த மனிதப் பிறப்பெடுத்தவர்களைப் புடம் வைத்து எடுக்கப் பயன்படும் மாய சக்தியைச் சோதனைகள் தாம் கைக் கொண்டிருக்கின்றனவாம்! வாஸ்தவம்தான்!...

கரை நிறை நீர் சேர் காவிரி அன்னையின் கழலடி பதிந்த பொற்புடைத்தது சோணாடு. அம்மகிமையின் நிழலில் தழைத்த குடில்கள் அனந்தம்! குக்கிராமங்கள் மிகுதி. எட்டுக் குடிக்குப் பெருமை தேடித் தந்தான் ஓவியன்; அவன் அற்ப மானுடனல்லன். ஆண்டவன். தாதைக்கு உபதேசித்த பாலன். அவனது கருணைக்கு இலக்கான பதிதன்னில்தான் பார்வதியும் அழகுப் பதுமைக்கு நிகராகப் பிறந்தாள். பொய்மை வாழ்விற்கு எடுத்த உண்மை யாக்கை அவளுடையது. சாமான்யமான குடும்பம்!

காலம் ஓடியது. அவள் ஓடினாள்.

காலம் அவளுக்குக் கன்னிப்பட்டம் சூட்டிற்று. கன்னிமாடத்தில் உலவிடும் ராஜகுமாரியானாள். இளவட்டங்களைப் பொறுத்தமட்டில், காற்றில் பறக்கும் பட்டமாகப் பறந்தான் ராமதாஸ். அவள் அவனுடைய அத்தை மகள். உறவும் உரிமையும் நெருங்கப் பெற்ற வாய்ப்பே அவனுடைய மனக் கனவுகளைப் போஷித்து வளர்த்துக் செழித்துத் தழைக்கச் செய்யுவல்லதாகவும் அமைந்தது. அவன் கனவு கண்டான்; அவளும் கனாக் கண்டாள். கனவு உள்ளங்களின் பரிவர்த்தனைக்கு அடையாளமாக அவளுக்கு அவன் ‘கணையாழி’ ஒன்றைக் கொடுத்தான். இருவரையும் மணக் கோலத்தில் கண்டு களிக்க விரும்பினார்கள், இருதரப்புப் பெற்றோர்களும் வந்தது வினை. சாதாரணமான வினையா அது உம்மைப் பழவினையின்
வினை அல்லவா அது?...இருவர் மனம் ஒட்டினாற்போல, இருவர் ஜாதகக் குறிப்புக்களும் ஒட்டி வரவில்லை.

பார்வதியைக் கொண்டவன் பெயர் சுந்தரம்.


புதுக்கோட்டை―அறந்தாங்கி பஸ் விடுத்துச் சென்ற கர்ணகடூரமான சத்தத்தை ‘சத்தம்’ கொடுக்காமல் வாங்கிக்கொண்டு பார்வதி தன் வீட்டை―அதாவது, வாடகை வீட்டை மிதித்த போழ்திலே, பேபியின் அழுகைச் சத்தம் காதுகளில் வழிந்து, இதயத்தைத் தொட்டுக் குலுக்கிவிட்டது. துரிதம் கூட்டி கடந்தாள்; “அத்தான்!...”

சுந்தரம் குணதிசை நோக்கித் திரும்பிப் படுத்தப்படி, எதையோ படித்துக் கொண்டிருந்தான்.

பார்வதி குழவியை எடுத்தாள்: பாலமுதம் உண்டது பேபி. மார்பகச் சேலையைச் செம்மைசெய்து விட்டு அவள் தன் கணவன் பக்கம் நாடி நடந்தாள். அவன் அசையக் காணோம்! அண்டிச் சென்றாள். ஏதோ ஒரு கடிதம். ‘ஒரத்த நாட்டிலேருந்து மாமா எழுதியிருப்பாங்க, ஷேம லாபம் கேட்டு!’

வடித்து வைத்துச் சென்ற சோறு சூடு மாறாமல், நல்ல பதத்துடன் இருந்தது. குண்டானில் சோற்றைக் கொட்டினாள். சூடு பறந்தது. தட்டு முதலிய உபகரணங்களோடு ‘நடை’க்கு நடை பயின்றாள். காலில் ஏதோ தடுக்கினாற் போலிருந்தது. நகக்கண்ணில் பட்டது, கெட்ட வலி. குனிந்த பார்வையை ஓட்டினாள். வலி ஓட வில்லை. ‘ஒட்டிக்கு ரெட்டி’ ஆனது!

அது ஓர் ஊன்றுகோல் கைப்பிடிக் கழி!

பார்வதியின் கண்கள் இருண்டன. இருளில் புனல் வழிந்தது.

புருஷனுக்குச் சாதம் படைத்தாள் அவள். குழந்தையைத் தொட்டிலில் இட்டாள். சாப்பிட்டேன் என்று ‘பேர்பண்ண’ அவளும் இரு கவளம் சோறு பிசைந்து விழுங்கினாள். ஸ்கூலுக்குப் போய் மாலையில் வீடு திரும்பு கையில் அவளுடன் அழுத்தப் பிடித்தாட்டிய தலைவலியையும் அழைத்து வந்தாள். கண்ணாடி வளையல்கள் கல கலத்தன!

எப்படியோ இரவு மனை மிதித்தது. இரவின் பிறை நிலா வான வீதியில் நட்சத்திரத் தோழர்―தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தது.

பார்வதிக்கு உறக்கம் கொள்ளவில்லை.

சுந்தரம் அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்து விட்டிருக்தான். வெளிறிப் போயிருந்த நெற்றித் திட்டில் சுருள் முடிகள் சில இழைந்திருந்தன. அவள் பார்வையில் ஓட்டை சைக்கிள் பட்டது. அவள் அலுவல் புரியும் இதே பள்ளியில்தான் சுந்தரம் ‘ட்ரில் மாஸ்டர்’அறந்தாங்கியில் பொங்கலன்று நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் அவன் தன்னுடைய இடது காலை இழக்க நேரிட்டது. அவன் எடுத்தது மறுபிறப்புத்தான். பிறந்த மனையும் புகுந்த வீடும் வசதியிழந்த நிலையிலே, அவள் பட்ட கஷ்டநஷ்டங்கள் கொஞ்சமா, நஞ்சமா? வரும் விதி இராத்தங்காது என்பார்கள் பெரியவர்கள்!...

தலைக்கு அணை வைத்துப் படுத்தாள் பார்வதி. லேசாகச் சிணுங்கிய பேபியைத் தடவி அமைதிப் படுத்தினாள். ஜன்னல் கம்பிகளுக்குத் தெரியாமல் நழுவி விழுந்த ஒளிக்கற்றைகளின் முத்து நகையில் கடிதமொன்று தெரிந்தது. லாந்தரை நகர்த்தினாள் தூண்டினாள். தூண்டுகோல் கிடைத்தால் கடிதம் வாய்திறக்காமல் இருக்குமா?

“ஸ்ரீ சுந்தரம்!

குடும்பத் தகராறைப் பெரிது பண்ணி ஆடிய உங்கள் தகப்பனாருடன் சேர்ந்துகொண்டு நீங்களும் ஆடினீர்கள்; என்னை ஏமாற்றினீர்கள். ஆனால், ஆண்டவன் உங்களை இப்பொழுது பழிவாங்கிவிட்டான், பார்த்தீர்களா? உங்கள் பேரில் நான் வைத்திருந்த காதலுக்கு அடையாளமாக, நான் பரிசளித்த என்னுடைய உருவம் பதித்த கணையாழி இனியும் உங்கள் வசம் இருப்பது தப்பு. எனவே, உடனடியாகத் தபாலில் அனுப்பவும்.

இப்படிக்கு,
-தங்கம்மா.

அந்தப் பெரிய பங்களாவை தூரத்தில் நின்று பார்த்துச் செல்லும்போதே, பார்வதிக்கு உடம்பு கூனிக் குறுகியது. பங்களாவில் பிறந்த பையன் குமார், அவனுக்கு அவள் ஆசிரியை. பையன் சுட்டி! ‘குறைந்த பட்சம் பார்த்தால்கூட ரூபாய் நானூறு வேண்டும். எண்பது தொண்ணுாறு வாங்கும் என்னை ஒரு பொருட்டாக நம்பிக் கடன் தருவார்களா?...இப்போது கொடுத்தால் வட்டிவாசி சேர்த்து அடுத்த ஆறாம் மாசத்திலே கடனை அடைத்து விடலாம். அத்தானுக்கு வரவேண்டிய ‘பிராவிட்ண்ட் பண்ட்’ பணமும் கைக்குக் கிட்டிவிடும்...!’

அலைகடல் ஓய்வதில்ல; உறங்குவதில்லை!

இந்த மனக்கடலும் அப்படியேதான்!

காலை இளம்பரிதியின் வெம்மை சூடு பயிலத் துடித்துக்கொண்டிருந்தது.

நெஞ்சை உறுத்திய கடிதத்தை முகத்திற்கு நேர்முகமாகப் பிடித்தான். கண்கள் மீண்டும் அக்கடித வரிகளிலே நெளித்தது.

“அத்தை மகள் பார்வதிக்கு,

விதி நம் நேசத்தைப் பிரித்துவிட்டது. நான் உன் மீது கொண்டிருந்த பிரேமைக்கு இலக்காக, என்னுடைய உருவம் பதித்த ஒரு மோதிரத்தை உனக்குப் பரிசளித்திருந்தேனல்லவா? அதை, இனி நீ வைத்திருக்கக் கூடாது. நம் குடும்பங்கள் பிரிந்தது மாதிரி அம்மோதிரத்தையும் உன்னிடமிருந்து பிரித்து அனுப்பிவைக்கவும்.

இப்படிக்கு,
―ராமதாஸ்.”

தன் கணவரின் வைத்தியச் செலவுக்காக, இந்த மோதிரத்தை―காதலின் சின்னமாக கொடுக்கப்பட்ட மோதிரத்தை ரகசியமாக ‘பியூன்’ மூலமாக அடகுவைத்த நிகழ்ச்சி பாம்பாக நெளிந்து சட்டை உரித்துக்கொண்டு பயங்காட்டியது. இதைத் திருப்புவதற்கு இருநூறு வேணும். என்னைப் போலவேதான் அத்தானும் தனக்கு அளிக்கப்பட்ட பரிசு மோதிரத்தை எங்கோ அடகுவைத் திருக்கிறாராம். அதற்கு வேறு இருநூறு வேண்டும். பணம் மொத்தமாகக் கிடைத்தால், பியூனைக் கொண்டு திருப்பி இரண்டு மோதிரங்களையும் உடைமைக்காரர்களான அவ்விருவருக்கும் அனுப்பிவிடவேண்டும்!― காதல், கனவு, நடைமுறை வாழ்க்கை அனைத்துமே புதிராகத் தான் இருக்கின்றன!...இந்த மோதிரத்தை அடகுக்கு அனுப்பியதிலிருந்து, நான் அனுபவித்துவரும் நரகவேதனை ‘இவருக்கு’ - அத்தானுக்கு ஏற்பட்டிருக்கத்தான் வேண்டும்! ...’

பங்களாவில் போய் நின்றாள் பார்வதி, குமாரின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாள். பையன் வந்தான். அவனுடைய தந்தை பெரிய ‘லேவாதேவி’ க்காரர். விசா ரித்தாள், ஊரில் இல்லையாம். அவளுக்குத் ‘திக்’ கென்றது. கடைசியில் வீட்டின் எஜமானியிடம் தன் கஷ்ட நஷ்டங்களை சாங்கோபாங்கமாக விஸ்தரித்தாள் பார்வதி. எதிர் முகாமிலிருந்து வந்திருந்த ராமதாஸ், தங்கம்மா ஆகிய இருவரது கடிதங்களையும், வெட்கத்தையும் வேதனையையும் உள்ளடக்கியபடி, எடுத்து நீட்டலானாள்.

“ஆபத்துக்கு உதவுவது என் கட்மை, வாத்தியாரம்மா. எனக்காக இல்லையென்றாலும், என் அருமைப் பிள்ளைகளுக்கர்கவேனும் கட்டாயம் உதவுவேன், ” என்று பவ்யமாகவும் பரிவுடனும் கூறிவிட்டு, உள்ளே சென்றாள் வீட்டுத்தலைவி சாரதத்தம்பாள். அவள்திரும்பி வந்ததும், ஒரு கவரை நீட்டினாள். அதில் ரூபாய் எதுவும் இல்லை. இரண்டு மோதிரங்கள் இருந்தன!

கணவனும் மனைவியும் ஆபத்திற்கு அடகு வைக்க ப்யூன் மூலம் அனுப்பிய மோதிரங்கள் இரண்டும் ரகசியமாக ஒரே இடத்திலேயே வந்து சேர்ந்திருக்கின்றன!

“வேலை ரொம்பச் சுளுவாகப் போய்விட்டதல்லவா? இரண்டையும் இப்போதே அனுப்புங்கள்; எங்களுக்குச் சேரவேண்டிய தொகையை உங்கள் வசதிப் பிரகாரம் தாருங்கள் அம்மா!” என்றாள் வீட்டுத் தலைவி.

சாரதத்தம்பாள் தயங்கித் தயங்கி நடந்து, வாத்தியாரம்மா பார்வதியின் மனையைமிதித்தாள். மீண்டும் கலக்கம் மூண்டது. ‘ஊஹூம்’ என்ற பாவனையில் தலையை உலுக்கியவர், கடந்த படிகளைக் கடந்தாள். அவளுடைய உள்ளங்கைக்குள் உள்ளடங்கியிருந்த கடிதம், சிலிர்த்துக் கொண்டு தலையை அசைத்தது.

அது

“அன்புள்ள அத்தையவர்களுக்கு, ராம்தாஸ் நமஸ்காரம் செய்து எழுதுவதானது:

நானும் என் மனைவி தங்கம்மாவும் புதுப்பாடம் கற்றுக்கொண்டோம். அந்த நாளிலே நான் என் அத்தை மகள் பார்வதிக்கு என் அன்பின் அடையாளமாகக் கொடுத்த மோதிரமும், என் மனைவி தன் அன்பு அத்தான் சுந்தருக்குத் தந்த மோதிரமும் கடைசிக் கட்டமாக உங்கள் வீட்டில் ‘அடையாளம்’ வைக்கப்பட்டிருக்கும் ‘துப்பு’ விவரத்தை நீங்கள் எழுதினீர்கள். அன்புக்குச் சின்னமாக அமைய வேண்டுமென்று கொடுக்கப்பட்ட பொருள்களின் விபரீத முடிவைக் கேட்டு வருந்தவே, எங்கள் பொருள்களை உடனடியாகத் திருப்பி யனுப்புமாறு நாங்கள் இருவரும் வெவ்வேறு விவாசமிட்டுத் தபால் அனுப்பினோம், நாங்கள் இருவரும் ‘தம்பதி’ என்பதைப் பாவம், அந்தத் தம்பதி எப்படி அறிய முடியும்?... ஆம்; ஒரு புதுப்பாடம் கிடைத்தது எங்களுக்கு. காதலின் உண்மைப் பொருளைப் போதித்து உணர்ந்திடவே, நாங்கள் அவ்வாறு கடிதம் எழுதினோம். ‘காதலென்பது ஒரு பொய் விளையாட்டு’...அன்பெனும் சக்தி மிக ஆழமுடையதெனச் சொல்கிறார்கள். அப்படியிருந்தால், எங்கள் பரிசு மோதிரங்களே அவர்கள் இருவருமே அடகு வைத்திருக்கமாட்டார்கள்; இப்போது எங்களுக்குத் திருப்பி யனுப்பியிருக்கவும் மாட்டார்கள்!

இப்படிக்கு,
―ராமதாஸ்.”

பி.கு:― இக்கடிதத்தை மறந்துவிடாது, பார்வதி―சுந்தர் தம்பதியிடம் காண்பிக்கவேண்டும்.