இங்கிலாந்தில் சில மாதங்கள்/ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாப் பயணம்

விக்கிமூலம் இலிருந்து

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாப் பயணம்

சுற்றுலாப் போதல் (Tourism) என்பது நம் நாட்டில் இப்பொழுதுதான் ஒழுங்கான முறையில் வளர்ச்சி பெற்று வருகிறது, இமயம் முதல் குமரி வரை பரந்துபட்டுள்ள இப் பாரததேசம் பல மொழிகளைப் பல்வேறுபட்ட மக்களைக் கொண்டுள்ளது. வரலாற்று அடிப்படையிலும் கலாச்சார அடிப்படையிலும் பாரத தேசம் ஒன்றாக இயங்கிவருகிறது. அரசியல் சட்டம் ஒன்றுபடுத்தியுள்ளது. என்றாலும் மொழிகள் ஒரு தடையாக இருக்கின்றன.

டூரிஸ்டு பஸ்கள் தக்க கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு தங்கும் இடங்களும் செல்லும் வசதிகளும் செய்து ஒருவாறு நம்மைப் புறப்பட்ட இடத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். பழங்காலத்தில் பக்தியின் அடிப்படையில் காசி இராமேஸ்வரம் இரண்டு எல்லைகளாக இயங்கி மக்களை யாத்திரைகளை மேற்கொள்ளச் செய்தன. இப்பொழுது உண்மையில் தேசங்களையும் முக்கியமான இடங்களையும் அந்த அந்தப் பகுதி மக்களையும் காணவேண்டும் என்ற ஆர்வமும், பழகிப்போன வாழ்க்கை முறைகள் புளித்துவிடுவதால் மாற்றம் காணச் சுற்றுலாப் போதல் மேற்கொள்ளப்படுகிறது. இது அண்மைக் காலத்துப் புதிய மாற்றம்.

அங்கே ‘டியூரிசம்’ என்பது மிகச் சிறந்த முறையில் செம்மையாக நடைபெறுகிறது. குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்திவிட்டால் ஒரு தேசத்தில் இருந்து ஐரோப்பா முழுவதும் சுற்றிப் பார்க்க வசதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் இருந்து பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஹாலந்து, பெல்ஜியம் பல தேசங்களுக்குச் சுற்றலாச் செல்கின்றனர். அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா சுற்றிப் பார்க்க வருபவர் மிகுதி. அதேபோல ஐரோப்பியர்கள் அமெரிக்கா சென்று ஊர்கள் சுற்றிப் பார்க்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படை என்ன? அங்கே ஐரோப்பாவிலும் சரி அமெரிக்காவிலும் சரி ஒரு நிறுவனத்திலோ அரசாங்கத்திலோ தொடர்ந்து தொழில் செய்பவர் வருடத்திற்கு ஆறுவார அளவு விடுமுறை சேர்ந்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர். பொதுவாகக் கோடையிலேயே இந்தச் சுற்றுலாக்கள் மிகுதியாக மேற்கொள்ளப்படுகின்றன.

மற்றும் வீட்டைப் பூட்டிவிட்டு தைரியமாக அங்கு வெளிக் கிளம்ப முடியும், வீட்டை உடைத்துத் திருடர்கள் புகுந்துவிடுவார்களே என்ற அச்சம் அந்த நாடுகளில் இல்லை; கதவுகள் கண்ணாடிக் கதவுகள்தான். சட்டம் இரும்புச் சங்கிலிகள்; காவல்துறை மிகச் செம்மையாகச் செயல்படுகிறது. மக்கள் இப்படித் திருடிப் பிழைக்க வேண்டும் என்ற கீழ்மைக்குப் போவது இல்லை; வாய்ப்புக் கிடைத்தால் கொள்ளை அடிப்பது என்ற மனப்பான்மை அங்கு வளரவில்லை. மற்றவர் பொருளை மதிக்கிறார்கள்; அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கவேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. மற்றொன்று காப்பு உறுதி (insurance) அவர்கள் இழப்பை ஈடு செய்கிறது. திருடு போனால் போலீசார் ஓரிரு வாரங்களில் தம்மாலான முயற்சிகள் செய்கின்றனர். அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் உடனே காப்பு உறுதி நிறுவனங்கள் இழப்புத் தொகையை முழுவதும் ஈடு செய்கிறது. ஒவ்வொன்றிற்கும் காப்பு உறுதி செய்யப்படுகிறது. உடைமைக்கும் உயிர்க்கும் பாதுகாப்புத் தரப்படுகிறது. குடும்பத் தலைவன் அகால மரணம் அடைந்தால் அந்தக் குடும்பம் தவித்து நிற்கத் தேவை இல்லை; பொதுவாக அவர் காப்பு உறுதி செய்து வைத்திருப்பார். இங்கேயும் காப்புறுதிகள் செயல்படுகின்றன; நிறுவனங்கள் உடனுக்குடன் செட்டில் மெண்டு செய்யும் மனப்போக்குக் கிடையாது, கார் மோதி மற்றோர் காருக்குச் சேதம் உண்டானாக இடித்த வரோ சேதமடைந்தவரோ இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு அறிவித்த சில நாள்களிலேயே இழப்பு ஈடு செய்யப்படுகிறது. இத்தகைய பாதுகாப்புகள் இருப்பதால் வீட்டை மறந்து அவர்கள் சுற்றுலாப் பயணம் செய்ய முடிகிறது.

ஓர் ஒழுங்கான அமைப்பு முறையில் சுற்றுலா நடைபெறுவதால் தைரியமாக எந்தக் கவலையும் இல்லாமல் அந்த நாடுகளைச் சுற்றிப் பார்க்க முடிகிறது. தங்கும் ஹோட்டல்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை, அவர்களிடம் நாம் நம்மை ஒப்படைத்துக் கொள்கிறோம். அவர்கள் திட்டமிட்டபடி நாம் விரும்பும் தேசங்களுக்கு அழைத்துச் சென்று முக்கியமான இடங்களைக் காட்டித் தக்க வழிகாட்டிகளைக் கொண்டு விளக்கமும் சொல்லி நமக்கு அந்த நாட்டின் சிறப்புகளை அறிவுறுத்துகின்றனர்.

பகலெல்லாம் பேருந்து ஓடிக்கொண்டே இருக்கிறது; மாலை வேளைகளில் குறிப்பிட்ட நகரங்களை அடைகின்றன. அங்கே உணவுக்கும் தங்குவதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்கின்றனர். மறுபடியும் மறுநாள் காலை ஏழு எட்டு மணிக்கெல்லாம் வண்டி ஏறவேண்டியதுதான். ஒரு வாரச் சுற்றுப்பயணத்தில் பெல்ஜியம், ஹாலந்து, நார்வே, ஜெர்மனி, பிரான்சு இந்த ஐந்து தேசங்களைக் காணமுடிந்தது, பஸ் நல்ல வேகம்; புத்தம் புதிது; குறைபாடற்றது. விமானத்தில் செல்வது போன்ற சுகம் தருகிறது. அது தரையில் இயங்குகிறதா விமானத்தில் பறக்கிறதா அதிகம் வேறுபாடு இல்லை. காரணம் சாலைகள் அவ்வளவு ஒழுங்காகச் சுத்தமாக செம்மையாக அழகாக அகலமாக எந்தவித அதிர்ச்சியும் தராமல் எதிரே வண்டி. வரும் என்ற அச்சமில்லாமல் இருப்பதால்தான்.

இங்கிலாந்தில் ‘டோவர்’ துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்பட்டோம், பெல்ஜியத்தையும் இங்கிலாந்தையும் கடல் பிரிக்கிறது. கடற் பயணத்தில் அடுத்த கரையை அடைந்தோம். குவிந்த வானம், பரந்த கடல், அதில் மிதந்து செல்லும் கப்பல் பக்கத்தில் நம்மோடு பயணம் செய்யும் பல தேசத்து மக்கள். சைனாக்காரர்கள் எப்பொழுதும் ‘காமிரா’ கையிலே வைத்திருப்பார்கள். அவ்வப்பொழுது காண்பவற்றை எல்லாம் பதிவு செய்து கொள்கிறார்கள். அமெரிக்கர்களும் முக்கியமான காட்சிகளை நிழழ்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அங்கு மது வகைகள் உணவு வகைகள் அவர்களுக்கு வாய்ச் சுவையைத் தருகின்றன.

ஹோட்டல்களில் தண்ணீர் குடிப்பவரை ஐரோப்பா முழுவதும் காணமுடியாது; நம்மைப் போன்றவர்கள் இங்கு ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகத் தண்ணீர் குடிப்பதற்கு அங்கு வெட்கப்பட வேண்டியுள்ளது. எங்காவது வெளியே சென்றால் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்வது எங்களுக்குப் பழக்கம். அதை அவர்கள் பார்க்கும்போது அது ஒரு வியப்பான காட்சியாகத்தான் இருக்கும். போயும் போயும் தண்ணீரையா குடிப்பார்கள். இவர்கள் மிகவும் ஏழைகளாகத்தான் இருக்க வேண்டும். ‘பீர்’ குடிக்கும் நாவுக்குத் தண்ணீர் ஏற்காது. தேவைப்பட்டால் கொக்கோ கோலா, டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பழச் சாறுகள் விற்கப்படுகின்றன. மதுபானம் பழகாதவர்கள் இந்த ரசங்களைப் பருகுவார்களே தவிர வெறும் தண்ணீரைக் குடிப்பது இல்லை. எங்களுக்கும் அந்தப் பழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது . குடிப்பழக்கம் அல்ல; ஏனைய ரசங்களைக் குடித்து நீர் வேட்கையைத் தணித்துக் கொள்ளும் பழக்கம்.

எங்களோடு தமிழ் நாட்டு ஐ. ஏ. எஸ். குடும்பத்தினர் ஒருவர் வந்திருந்தார். அவர்கள் எங்களுக்குப் பேச்சுத் துணைக்கு உதவினர். அவர்கள் பலமுறை அந்தப் பக்கம் பார்த்து வந்தவர்கள். பழகியவர்கள்; விடுமுறை என்றால் இங்கு வந்து தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் இவர்களின் விருந்தினர்களாகத் தங்கிப் பொழுதுபோக்கும் வசதி மிக்க வாழ்க்கையைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் காய்கறி உணவுகளையே உண்பர்; மாமிசம் மீன் தவிர்த்தவர்கள். அவர்கள் தனியே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் அதிகம் உருளைக்கிழங்கு வறுவல் நீட்டு நீட்டமாக இருக்கும். அது தான் சாப்பிடத் தகுந்த சுவை உடையது. ஜெர்மனியில் ஒரு ஓட்டலில் இன்னும் மறக்க முடியவில்லை. முழுக் கோழி இறைச்சி சுவையாக இருந்தது. பெரிது அல்ல; பசியார உண்ட நினைப்பு.

எங்களோடு வந்த அமெரிக்க மாது மீன், இறைச்சி தவிர்த்து வந்தார்கள். அவர்கள் அதிகம் ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தார்கள். ‘கேட்டதற்கு'த் தான் சைவ உணவுதான் உண்பது என்று தெரிவித்தார்கள். பல பேர் அமெரிக்காவில் சைவ உணவு மட்டும் உண்கிறவர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

அவர்களோடு மற்றும் இருவர் அமெரிக்கப் பெண்கள் வந்திருந்தனர், எங்களுக்கு ஒரு ஆச்சரியம் எப்படி இவர்கள் துணிந்து இவ்வளவு தூரம் தனியாகப் பிரயாணம் செய்கின்றனர் என்பது வியப்பாக இருந்தது. மூவரும் மூன்று இடங்களிலிருந்து வந்தவர்கள். அங்கே அவர்கள் அவ்வப்போது கலந்து உரையாடுகிறார்கள்.

இவர்களுக்குப் புருஷன்மார் என்ற ஒரு துணை இருக்காதா? அவர்களை விட்டுத் தனியே ஏன் வரவேண்டும் இரண்டு பேரும் போனால்தானே ஒருவர்க்கொருவர் துணை சந்தோஷமாய் இருக்கலாம்” என்ற ஐயம் ஏற்பட்டது.

துணிந்து அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு கிடைத்த பதில் :

“நாங்கள் வருஷம் பூராவும் இணைந்து வாழ்கிறோம் எங்களுக்கும் விடுதலை வேண்டாமா? என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள். அவர்கள் நகைச்சுவைக்குச் சொன்னார்களா? உண்மை சொன்னார்களா? அது இன்னும் பிடிபடவில்லை.

அவர்கள் சொன்னது மற்றொன்று மிகவும் தெளிவானதாக இருந்தது. இந்த ஆறுவார விடுமுறையில் நான் பெறும் புதிய அனுபவங்கள்; காணும் ஊர்கள், காட்சிகள் (அதோடு நிற்கவில்லை) இங்கே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வளர்ச்சிகள் இவற்றை எல்லாம் குறித்துக்கொண்டு அவரிடம் பேசுவேன்; அவரும் தன் அனுபவங்களை என்னிடம் சொல்லுவார். நாங்கள் மறுபடியும் சந்தித்து வாழும் போது எனக்குப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். அவருக்கும் நிறைய இருக்கும். இரண்டுபேரும் ஒரே ஊரைப் பார்த்தால் வேறுபட்ட அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்? என்று விளக்கினார்கள்.

அந்த மனோநிலையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் கேளிக்கையாக ஊர் சுற்றவில்லை. பொழுது போக்குக்காக அவர்கள் அங்குச் செல்லவில்லை. அவரவர் பயிலும் வாழ்க்கைத் துறைகள் இருக்கின்றன; புதிய துறைகளையும் அறிய விரும்புகிறார்கள். அவற்றைக் குறித்துக்கொள்கிறார்கள். முன்னைவிட கூடுதலான் அறிவோடு சொந்த ஊர் திரும்புகின்றனர்.

அண்மையில் “இதயக் கோயில்” என்ற திரைப்படம் பார்த்தேன். அம்பிகா காதலியாக நடிக்கிறார்; ராதா ரசிகையாக நடிக்கிறார். மோகன் கதாநாயகன்; அவன் ஒரு பாடகன். அவன் தன் காதலியை மணக்க முடியாமல் அவள் சாவு இடையே வருகிறது. அவளுடைய மணத்தை அவள் முடிவு செய்ய முடியவில்லை. அப்பா கட்டிவைக்கும் புதுப் புருஷனையே அவள் மணக்கவேண்டும் என்பது அவர் கட்டளை. அப்பா பெண்ணுக்கு உதவி செய்யலாம்; அவளாகக் கணவனைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம். அது அவருக்குக் கடமையும் ஆகிறது. அவளுக்கு விருப்பத்துக்கு மாறாக இன்னாரைத்தான் அவள் கட்டிக்கொள்ள வேண்டும் என்று பாரம்பரியமாக நம் நாட்டில் சொல்லி வருவதை இதில் சித்திரித்துக் காட்டுகிறார்கள். இவர் ஏன் அந்த உரிமை எடுத்துக்கொள்ள வேண்டும். இதைச் செய்தால் நல்லது என்று வேண்டுமானால் எடுத்துச் சொல்லலாம். இன்னாரைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்று எப்படி அவர் வற்புறுத்தலாம், இந்த மாதிரி சம்பவம் மேல் நாட்டில் நடக்குமா? நடப்பதாகக் கதை எழுதிச் சித்திரித்தால் அவர்கள் அந்த அப்பாவைப் பற்றி என்ன நினைப்பார்கள். இப்படிக்கூட அப்பாக்கள் இருப்பார்களா என்று பரிதாபப்படுவார்கள். இதை விவரமாக எழுதியது தேவை இல்லாதது தான்.

மற்றொரு நிகழ்ச்சி இந்த நாட்டுச் சூழ்நிலையைச் சித்திரிப்பது. அவள் தன் காதலனைத் தேடித் தனியே சென்னைக்கு வருகிறாள்; வருகிறவள் விலாசம் கூடவா தெரிந்துகொள்ளாமல் வரவேண்டும். வழி எல்லாம் அவனைப்பற்றிக் கேட்கிறாள். அவன் ஒரு பிரபல பாடகன்; சினிமாப் பாடகன் அப்படி இருந்தும் அவனைப்பற்றி மற்றவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவன் அப்பொழுதுதான் திரைப்படத்தில் சேர்ந்தவனாக இருப்பான்.

முன்பின் தெரியாத அவள் தனியே சென்னையில் நடக்க முடியவில்லை. முரடர்கள் பின் தொடர்கிறார்கள். கோயிலுக்குள் சென்று உள்ளே அடைக்கலம் அடைகிறாள்; இறைவனும் அவளைக் காப்பாற்றவில்லை என்பது கதை. இயக்குநரின் கருத்தாக இருக்கவேண்டும், அந்த முரடர்கள் அவளைக் கெடுத்தார்களா கெடுப்பதற்கு முன் அவள் தன்னை அழித்துக் கொண்டாளா தெரியவில்லை. அவளுக்குப் பாதுகாப்பு இல்லை; தூக்குப் போட்டுக்கொண்டு உயிர் துறக்கிறாள். அவள் பிணம் கீழே அறுந்து தொங்குகிறது. இது தான் அவன் சோகத்துக்குக் காரணம். அவளை நினைத்து நினைத்து ஏங்குகிறான்; குடிக்கிறான்; அதுவே அவன் வாழ்க்கையின் சோக கீதமாக மாறுகிறது. அந்த மடையன் (கதா நாயகன் ) அவள் அப்பா செய்த தவறே செய்கிறான். கல்லூரி மாணவி ரசிகை அவனைக் காதலிக்கிறாள். அவனையே மணப்பதாக உறுதி கொள்கிறாள். அவனும் அவளிடம் அன்பும் ஆதரவும் காட்டுகிறான். அவளைத் தெரிந்த மற்றொருவன் உறவுக்காரனாம். அவளைக் காதலிக்கிறானாம். இதை அறிந்த கதா நாயகன் (மோகன் ) அவனை அவள் மணக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறான். அந்தக் கற்புக்கரசி செயலற்றுத் தன் நெஞ்சைக் கதா நாயகனிடம் பறிகொடுத்த காரணத்தால் அவன் கால்களில் விழுந்து உயிர்விடுகிறாள்.

இந்த மனோ நிலைகளில் எவ்வளவு கோளாறுகள்! அப்பாவுக்கு அவளை (அம்பிகாவை) வற்புறுத்த உரிமை இல்லை, கதாநாயகனுக்கு அவளை (ராதாவை) வற்புறுத்த உரிமை இல்லை. இப்படிப் பிறர் வாழ்வைக் கெடுக்கும் அறிவாளிகள் ஒருபுறம்; அவள் எதைப் புனிதமாக நினைத்துக் காப்பாற்ற நினைக்கிறாளோ அதை அற்பத்தனமாக்கத் துடிக்கும் கீழ்மக்கள் ஒருபுறம். அவள் வாழ்வைப் பாழ்படுத்துவதாக நம் தமிழ்ச் சித்திரம். இவை நாம் அங்கீகரிக்கும் வாழ்க்கை நிலைகள்.

இந்தப் படத்தை வைத்து அந்த நாட்டு வாழ்வியலை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

அந்தப் பெண்கள் எங்கோ அமெரிக்காவில் பிறந்தவர்கள். இந்தப் புதிய நாடுகளில் பல இடங்களுக்குத் தனியே செல்கிறார்கள். (நாங்கள் தனியே செல்லப் பயப்பட்டோம்) அவர்கள் தம் புனிதத்தை இழந்துவிட மாட்டார்கள். முரடர்கள் அவர்களைக் கெடுக்க முயற்சி செய்ய மாட்டார்கள். பிரமாதமாகப் பேசப்படுகின்ற அந்தப் புனிதம் பறி போய் விட்டால் அந்த உத்தமிகள் உயிர் விடமாட்டார்கள். அந்தப் புனிதம் பறிபோவதும் இல்லை. எதைப் பத்திரமாகக் காக்கவேண்டும் ஊறு செய்யக் கூடாது என்ற மனித உணர்வு அதிகம் இருக்கிறதோ அந்த நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

அங்கே நிர்ப்பயமாகப் பெண்கள் எங்கும் செல்கிறார்கள். முதலில் கணவன்மார் அவர்களை நம்புகிறார்கள். மனைவி கணவனை நம்புகிறாள். இதைப்பற்றி அதிகம் பேசாமல் அவர்கள் கண்ணியமாக வாழ்கிறார்கள். அவர்கள் கற்பு பறிபோவதில்லை. இங்கு மட்டும் ஏன் இந்த அற்பத்தனம்! நாம் எவ்வளவோ முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறோம். ‘என்னமோ போய்விட்டது; போய் விட்டால் வாழ முடியாது தற்கொலைதான் வழி’ என்ற மன நிலை மாறவேண்டும். இதற்கு மேலை நாட்டுப் பெண்கள் நிச்சயம் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்றுதான் கூறமுடியும். இதற்கு மேல் விவாதங்களை வளர்ப்பதில் பயன் இல்லை, மேலே தொடர்கிறேன்.

கப்பலில் சந்தித்த நினைவு; மிகவும் வயது குறைந்தவள்; யுவதி; அவள் எங்கே பயணிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். துணிந்து பேசினேன்; பேசுவது சுலபம் இல்லை. அவர்கள் பேசும் ஆங்கிலம் எனக்கு விளங்குவது இல்லை. வியப்பாக இருந்தது. இத்தாலியில் ஏதோ ஒரு மலைப்பிரதேசம், அங்கே ஒரு நதி: ஊர்; அங்கே பதினைந்து நாள் தங்கப்போவதாகச் சொன்னாள்; எப்பொழுதுமே கும்பலில் பழகிவிட்டுத் தனிமை விரும்பும் ஒரு மனப்போக்கு. எங்கோ முன்பின் தெரியாத இடத்தில் ஒரு தனிமையை அனுபவிப்பது என்ற அமைப்பெல்லாம் நாம் சிந்தித்தும் பார்த்ததும் இல்லை. எல்லோரைப் போலவே வாழ்வது என்று பழகிவிட்ட நாம் இந்தத் தனிப்போக்குகளை நினைத்தும் பார்க்க முடியாது. உங்களுக்குத் தெரியும் பிரான்சு நாட்டிலிருந்து வந்த அழகி ஒருத்தி இராமேஸ்வரம் அருகில் ஒரு ஒதுக்குப்புற கிராமத்தில் தொழுநோய் உடைய எளிய குடும்பத்து கிருஷ்ணனை மனமார விரும்பி அவனைக் கணவனாக ஏற்று இந்திய முறைப்படி வாழ்க்கை நடத்துவதில் ஒரு தனித்துவத்தைக் காட்டுகிறாள்.

அந்த நோயைப் பற்றி அவள் பொருட்படுத்தியதே இல்லை. பிரான்சு நாட்டில் பிறந்தவள்; அழகு போதையில் மயங்குபவள்; சுக லயத்தை பிரேமிப்பவள்; இப்படி ஒரு பட்டிக்காட்டுப் பெண்ணாக இந்தியக் குடும்பத்தில் ஐக்கியப்பட்டு வாழ்க்கைப்படுகிறாள்! அவள் இந்தியப் பெண் ஆனாள்.

பாரிஸ் நகரம் உண்மையில் அழகின் இருப்பிடம்தான்; பெண்களை வைத்து மட்டும் நான் முடிவு செய்யவில்லை; அழகும் கவர்ச்சியும் மிக்கவர்கள் அங்கு மிகுதியாக இருக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள் ரசனை மிக்கவர்கள்; நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். அந்த நகரம் மிக அழகான நகரம்; அழகாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு, புல்லும், மரமும், பளிங்கும், நீர் உவற்றும் கட்டிடங்களைக் கட்டிக் காக்கத் தாஜ் மகால் கட்டிட நினைவுகளைத் தோற்றுவிக்கும் வனப்பினை அந்த வீடுகள் தந்துகொண்டிருக்கின்றன. தெருக்களில் வளைவுகள் இல்லை; நேர்மை இருந்தது.

ஒரு நகரம் நெருக்கடியும் சுருசுருப்பும் வேகமும் உடையது என்றால் அதற்கு மெருகு ஊட்டுவது பிக்பாக்கட்டுகள்தாம். பெரிய நகரங்களுக்கே பெருமை இப்படி புத்திசாலித்தனமான திருட்டுத் தொழில் நடத்துபவர்களைப் பெற்றிருப்பதால்தான். முன்பெல்லாம் இந்தப் புகழ் சென்னை மூர் மார்க்கட்டுக்கு உண்டு; பம்பாய் நகரும் பயங்கரமான நகர் என்று பேசுகிறார்கள், சிகப்பு விளக்குப் பகுதி மற்றும் பம்பாயில் பத்திரிகைகளில் எழுதுவதைப் படித்து இருக்கிறோம்.

பாரிசில் நெருக்கடி, மிக்க பகுதிகளில் கவனமாகச் செல்ல வேண்டும் என்று எங்கள் பேருந்து வழிகாட்டி சொல்லி அனுப்பினாள்; ஒவ்வொரு ஊரைப் பற்றியும் அவர்கள் தக்க அறிவிப்புகள் தருகிறார்கள். அதன்படியே நடந்தது. எங்களில் ஒரு பயணி பணத்தைப் பறி கொடுத்ததாக வந்து சொல்கிறார். மற்றொருவரும் அதே அனுபவத்தை உறுதி செய்தார்.

அதே போல ஆம்ஸ்டர்டாம் என்ற நகரில் விழிப்பாக இருக்கவேண்டும். வழிபறி செய்துவிடுவார்கள். காரணம் கஞ்சா அபின் அதிகமாக அவர்கள் பழகி வருவதால் காசுக்கு எதையும் செய்யத் துணிவார்கள் என்று அச்சுறுத்தினார்கள். அவர்கள் சொன்னது உண்மை; அங்கங்கே சுயநினைவு கெட்டு மயங்கிக் கிடக்கும் போதைவாசிகளைச் சந்திக்க முடிந்தது.

ஜெர்மனியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த இடத்தில் நன்றாகக் குடித்துவிட்ட ஒருவன் சுய நினைவு இல்லாமல் தடால் என்று கீழே விழுகிறான். அதிகக் குடியால் இப்படி வாழ்க்கையை அலங்கோலமாக்கிக் கொள்பவர்கள் ஒரு சிலரைப் பார்க்கவும் முடிந்தது. நம் நாட்டுச் சாராயக் கடைகளிலும் ரசிகர்கள் ஆடி அசைந்து அவர்கள் பாடுவதைக் கேட்டு இருக்கிறேன். அவர்கள் பாட்டுப் பொதுவாகப் பகைமையைப் புலப்படுத்தும் வசை புராணங்களாக அமைவதைக் கவனித்து இருக்கிறேன். நல்ல நிலையில் அடக்கமாக இருக்கிறவர்கள் பூவாணமாக வெடிப்பதைப் பார்த்திருக்கிறேன். (தீமை அதிகம் விளைவதில்லை அதனால் பூவாணம் என்றேன்) இதையெல்லாம் பார்க்கும்போது நம்மவர்கள் மட்டும் குடித்துவிட்டதும் ஏன் நம் நிலை மறக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. இவர்கள் கவிஞர்கள்; கவிதைகள் பிறக்கின்றன; அவ்வளவுதான், அங்கேயும் இப்படிப் பிதற்றாவிட்டாலும் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து அதிர்ச்சியை உண்டாக்கிய ஒருவரை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. கேட்டால் “அவர் அப்படித்தான்; சாதாரண சுயநினைவில் அவரைப் பார்க்கவே முடியாது” என்று தெரிவித்தார்கள்.

எங்களோடு பேருந்தில் வந்த பயணிகளில் ஒருவர் அமெரிக்க நாட்டுக் கவிஞர் என்று நினைக்கிறேன் அல்லது கவிதை ரசிகராக இருக்கவேண்டும். நம் நாட்டில் புதுக் கவிதை வந்த பிறகு விதவிதமான புதுமையான சுவை மிக்க கவிதைகளைப் பாடிக் கவிதைக்கு ரசனையை ஏற்படுத்திவருகிறார்கள். இடைக்காலத்தில் ‘காளமேகம்’ ஒருவர் தான் இரண்டு பொருள்படக் கவிதை எழுதி நகைச்சுவை தோற்றுவித்தவர்.

“எட்டேகால் லட்சணமே எமனேறும் வாகனமே” என்ற வரிகள் “அவலட்சணமே எருமைக்கடாவே” என்ற மற்றொரு பொருளையும் தருகிறது.

இப்பொழுது புதுக்கவிதைகள் சுவை தருவனவாக அமைகின்றன.

“வீட்டுக்கு விளக்கேற்ற மருமகள் தேவை” என்கிறாள் மாமியார். ‘அதை அணைக்கவும் அவள் தேவைப்படுகிறாள் என்கிறான் மகன்’ என்ற கருத்துப் படப் புதுக் கவிதை தெரிவிக்கிறது.

‘ஆடை வாங்க அவள் நிர்வாணத்தை விலைக்கு விற்கிறாள்” என்கிறது புதுக் கவிதை.

“எம்ப்ளாய்மெண்டு எக்சேஞ்சிக்கு மகன் போகிறான் தன் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ள. அப்பனும் சொல்கிறான் மறக்காமல் தன் அட்டையைப் புதுப்பிக்கும் படி.

இப்படிச் சுவையும் கருத்தும் மிக்க புதுக் கவிதைகளை நம் நாட்டில் செய்து வருகிறார்கள். அவற்றை நம்மால் மறக்க முடியவில்லை.

அந்தக் கவிஞர் பல கவிதைகளை அவர் சொல்லிக் கொண்டு அவரே சிரித்துக்கொண்டு வந்தார். மற்றவர்கள் அவருக்கு மரியாதை தருவதற்கு அவற்றைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்கள் சிரிக்கவில்லை, பேருந்து செல்லும் வேகத்தில் அதன் வரிகள் சில சிதைந்து போயிருக்கும்; அவர்களுக்குப் புரிந்து இருக்காது என நினைக்கிறேன்; அல்லது அவரைத் திருப்திப் படுத்துவதற்காக அவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும். அதைப்போன்ற சூழ்நிலைகள் நமக்கும் ஏற்படுகின்றன. பிடிக்கிறதோ இல்லையோ மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் தீரவேண்டும். அந்த மனிதரை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. காரணம் :

அந்தப் பேருந்து வழிகாட்டி ஒரு பரிசை வைத்திருந்தாள். பயணம் முடிந்ததும் “இந்த பஸ் எத்தனை மைல் சென்றிருக்கும்” என்று ஒவ்வொருவரையும் குறித்துத் தரும்படி கேட்டு இருந்தாள். நான் இரண்டாயிரம் மைல் என்று எழுதித் தந்தேன்; மற்றவர்கள் அவரவர்கள் கணிப்புப்படி எழுதியிருந்தார்கள். அந்தக் கவிஞர் சரியாக ஆயிரத்து இருநூறு. என்று எழுதியிருந்தார். அவர் பரிசைத் தட்டிக் கொண்டார். அவருக்கு உயர் ரக மது பாட்டில் தரப்பட்டது.

ஒவ்வொரு தேசமும் ஒரு சில மறக்கமுடியாத சம்பவங்களை சாதனைகளை நினைவுச் சின்னமாகப் போற்றிக் காக்கின்றன; விளம்பரப்படுத்துகின்றன. பாரிசில் “ஈஃபில் டவர்” என்ற கோபுரம் அந்த நகரத்தின் நினைவுச்சின்னமாகப் போற்றப்படுகிறது. வெறும் இரும்புத் தகடுகள் (Steal frame) இவற்றை இணைத்து ‘ரிவிட்’ அடித்துப் பெரிய கோபுரம் அகலமாகத் தொடங்கிச் செங்குத்தாக எழுப்பி இருக்கிறார்கள். இடையில் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க ஹோட்டல்களும் கடைகளும் இருக்கின்றன. உயரமான அந்த இடங்களுக்குச் செல்ல ‘தூக்கிகள்’ அமைத்து இருக்கிறார்கள். அந்த ஊர்ப் பள்ளிச் சிறுவர்கள் ‘எக்சர்ஷனாக’ அந்த இடத்திற்கு வருகிறார்கள், கும்பல் கும்பலாக அவர்கள் ஆசிரியர்களோடு வந்து இன்பப்பொழுதாக ஆக்குகிறார்கள். பாடிப் பறக்கும் பறவை ஒலிகளை அந்தச் சிறுவர்களின் கலகலப்பு ஒலியில் கேட்க முடிகிறது.

அந்த ‘டவரில்’ இரண்டு நிலைகள் உள்ளன; இடைநிலை ஒன்று மேல் நிலை ஒன்று. இடை நிலையிலேயே இந்த இன்பப் பொழுது போக்கு உணவு அகம் கடைகள் இருக்கின்றன. மேல்நிலையில் விரும்பினால் போய்வரலாம். நான் இடைநிலையோடு நிறுத்திக்கொண்டேன்.

அந்த டவர் பாரிசின் நடுவில் இருப்பதால் அங்கிருந்து அந்த நகரை முழுமையாகப் பார்க்க முடிகிறது. நம் ஊர் உயர் நீதி மன்றக் கட்டிடத்தில் பழைய ஒளிவிளக்குக் கட்டிடம் (light house) போன்றது. இது குறுகலானது. அது பரப்பு மிகுதி உடையது. அண்ணா நகரிலும் ஒரு ‘டவர்’ கட்டி இருக்கிறார்கள். அதுவும் இதைப் போன்ற கற்பனையை உடையதுதான். மேலே ஏறி அண்ணா நகரைப் பார்க்க முடியும். இன்னும் சற்றுத் தொலைக்காட்சிகளும் புலப்படுகின்றன. மனிதன் சில சமயம் உயரப் பறந்தால்தான் அவன் தன் வாழ்ந்த வாழும் சூழ்நிலைகளைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க முடியும். அதற்கு அடையாளமாக இந்த டவர்கள்’ அமைகின்றன. ‘ஈஃபில் டவர்’ ஏறிப் பார்த்த நான் இன்னும் அண்ணா நகர் டவரை ஏறிப் பார்க்கவில்லை. ஒருநாள் ஏறித்தான் பார்க்க வேண்டும். இங்கே ‘உயர் தூக்கி’ இல்லை; அது ஒரு குறைதான். இருக்கலாம்; அது செயல்படுவது இல்லை என்று தெரிகிறது.

அந்த ஈஃபில் டவர் அந்த நாட்டின் சின்னம்; அது உ.ணர்த்தும் செய்தியும் உள்ளது. இரும்புத் தொழில்; இயந்திரக் கருவிகள்; தொழிற்சாலைகள் இவற்றை வளர்த்தால்தான் நாடு உயரமுடியும் என்ற கருத்தை அறிவிக்கும் ஒரு அறிகுறியாய் அது விளங்குகிறது.

பெல்ஜியம் நாட்டில் ஒரு அடையாளச் சின்னம் போற்றப்படுகிறது. அரசனின் குழந்தை ஒருவன் காணாமல் போய்விட்டான்; அவன் கண்டுபிடிக்கப்பட்டான்; அவன் (சிறு குழந்தை) இறைவன் படைப்பை மறைக்காமல் நின்றுகொண்டு ஒன்றுக்குப் போகிறான்; (அதிக சொற்களைப் பயன்படுத்த விரும்பவில்லை. தெளிவாகச் சொல்லிவிட்டேன்), அதை ஒரு சிறு சிலையாகத் தெருச் சந்தியில் வைத்திருக்கிறார்கள். அது அந்த நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. அந்தப் பொம்மை பல வடி.வங்களில் விற்பனை ஆகிறது.

தென்னகத்திற்கும் தனிப் பெருமை உண்டு; தமிழ் நாட்டின் ஆட்சிச் சின்னம் திருக்கோயில் சின்னம்; அது நம் பழமைச் சிற்பக் கலை, தெய்வீகம், பண்பாடு இவைகளை விளக்கிக்கொண்டு இருக்கிறது. அதன் பெருமை வெளிநாடுகளில் இருந்து நினைத்துப் பார்க்கும் பொழுது. தான் தெரிகிறது. கோயில்கள் சிற்பங்களோடு கூடிய இந்த அழகு உலகில் எங்கும் இல்லை என்று கூறிவிடலாம். விஞ்ஞானம் வளரவும், உயர் கட்டிடங்கள் எழுப்பலாம்; கலைச் சிற்பங்களை இவர்களால் படைக்க முடியாது. அதனால்தான் நம் நாட்டுச் சிலைகள் சில கள்ளக்கடத்தலும் செய்யப்படுகின்றன. அவை சிலைச் சிறப்புக் காரணமா பஞ்ச லோகங்களின் விலை மதிப்பின் உயர்வு காரணமா சரியாக விளங்கவில்லை. நமக்கு என்று ஓர் வரலாறு உண்டு; சாதனையும் உண்டு; அது இந்தத் திருக்கோயில் கட்டிடங்கள், சிற்பங்கள்; அவை சரிந்துகொண்டே போகின்றன.

சில சமயம் அவை புறவளர்ச்சி முயற்சிகளுக்குத் தடையாக இருப்பதால் புறக்கணிக்கவும் படுகின்றன. பல கோயில்கள் வழிபடுவோர் குறைந்து வருவதால் பாழ் பட்டும் வருகின்றன. பல பெரிய கோயில்கள் புதுப்பிக்கப் பட்டும் வருகின்றன. வேங்கடவன் திருக்கோயில், திருவரங்கத்து மதிற் கோயில், மதுரை மீனாட்சிக் கோயில், முருகன் மலை முதிர்ச் சோலைகள் எல்லாம் வெளிநாட்டு இந்தியர்கள் தம் நாட்டுக் கலைத் தெய்வங்களாகப் போற்றி வருகின்றனர். அமெரிக்காவில் வேங்கடவன் கோயில் எழுப்பி உள்ளனர். இங்கிலாந்திலும் தங்கள் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்க வேங்கடவன் திருக்கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறது. எங்கு இருந்தாலும் நம்மவர்கள் நம் நாட்டுக் கலாச்சாரத்தை மறக்காமல் காப்பாற்றி வருகிறார்கள். புற மாற்றங்கள் பாதிக்கின்றன. மனோபாவங்கள் வாழ்வு முறைகள் நடைமுறைகள் மன இயல்புகள் மாறாமல் அங்கு வாழும் இந்தியர்கள் இந்தியர்களாகவே இருக்கின்றனர். சாதிகளை மீறுகிறார்கள்; கலப்பு மணத்தைத் துணிந்து ஏற்கிறார்கள்; என்றாலும் ‘இந்தியர்கள்’ என்ற வரையரையை மீற விரும்புவதில்லை; மண வாழ்வில் சாதி மீறல்கள் துணிந்து ஏற்கப்படுகின்றன. இவை வெளி நாட்டின் வாழ்வியல் தாக்கம்; அதே சாதியில் அங்கே எப்படிப் பெண்களைத் தேடமுடியும்? அதனால் இந்த விரிவு மனப்பான்மை அவசியத்தால் ஏற்பட்ட ஒன்று என்றுதான் கூறமுடியும். சாதிக்குள்ளேயே மணக்கலப்பு முயல்கிறார்கள்; முடிவதில்லை, அதனால் இந்த அளவுக்கு மனப்பாங்கு பெற்று ‘இந்துக்கள்’ என்ற வரையறைக்குள் கலப்பு மணத்தைச் செய்துகொள்கிறார்கள். சீக்கியர்கள் இங்கிலாந்தில் லண்டனில் ‘செளத்ஹால்’ என்ற பகுதியில் மிகுதியாகத் தங்கிக் கடைகளில் வியாபாரம் செய்து வரு கின்றனர். அவர்கள் தனி இனமாக ஒற்றுமையோடு இனப் பற்றோடு இயங்கி வருகிறார்கள்.