இங்கிலாந்தில் சில மாதங்கள்/நம் நாட்டு நிலை

விக்கிமூலம் இலிருந்து

நம் நாட்டு நிலை

அந்த நாடுகளிலிருந்து இந்த நாட்டுக்கு வருகிறவர் புரிந்துகொள்ளமுடியாத காட்சிகள் சில இங்கே உள்ளன. காய்கறிக்கடை தள்ளுவண்டிகளில் நம் வீட்டுமுன் வந்து நிற்க அவன் கூப்பிட்ட குரலுக்கு வீட்டுத் தலைவிமார்கள் வெளியே தலை காட்டுவதும், அவன் குரல் கூவிக் கூவி ஒரு கரகரப்போடு விளங்குவதும், அவர்கள் கடை விலைகளைவிட அதிகம் விற்கிறார்கள் என்று பேசுவதும் அங்கே காண முடியாது. இப்பொழுது புதிதாக ஒன்று இணைந்து இருக்கிறது, ‘நடமாடும் இஸ்திரி வண்டி’ நகரங்களில் காலனிகளில் அவை அதிகம் நடமாடுகின்றன. தலையில் கூடையில் சுமந்து சுமக்கும் அளவுக்குக் கொண்டு வந்து விற்று வாழ்க்கைச் சுமையைக் குறைத்துக் கொள்ளும் பெண்கள், ‘பூ’ வேண்டுமா என்று சொல்லி வீடு தேடி வந்து. ‘சாதிமுல்லை, இருவாட்சி’ என்று பாடிக் கொண்டு வரும் காட்சிகள் அங்கே நினைக்கவும் முடியாது. கடைகள் நம் வீடு தேடி வருகின்றன. நாம் கடைகளைத் தேடி அங்குச் செல்கிறோம். இந்தக் காட்சிகள் எனக்கே இப்பொழுது புதுமையாகத் தெரிகிறது.

ஒரு பூக்காரன் வருகிறான், அவன் ஒரு பாடகனாக வருகிறான்; அப்படிப் பாடினால்தான் கவர்ச்சி என்பது அவன் கருத்து, அவன் சில சமயம் பூவில்லாமலும் வருவான்; இன்றைக்குக் “காசு வேண்டும்” என்று கேட்பான்.

“எதற்கு ?”

திரைப்படத்தின் பெயரைச் சொல்கிறான். எனக்கு விளங்கவில்லை. இரண்டு முறை சொன்னால் திரைப்படத்தின் பெயர்; ஒரு முறை சொன்னால் குடிநீர் என்பதை விளக்கினார்கள். ‘தண்ணீர்’ படும் பாட்டை அறிய முடிந்தது. இவர்களும் கொடுத்தார்கள்.

குழந்தைகளைக் கூவி அழைக்க மணியோசைகள் கேட்கின்றன. ‘பலூன்காரன் வருகிறான்!’ என்று தெரிந்து குழந்தை ஓடோடி வெளியே நிற்கிறான் . கைக் கடிகாரம் அவன் கையில் வாங்கிக் குழந்தை கட்டிக் கொள்கிறது. விளையாட்டுப் பொருள்களும் நம் வீடு தேடி வந்து விடுகின்றன. அங்கே குழந்தைகள் கடைகளில் வாங்குவது கார் மாடல்கள்தான் அதிகம். நிறைய கார்கள் பல தேசத்துக் கார்கள். பல கம்பெனி கார்கள் மாடல்கள் வெளியே இருப்பவை அங்கே குழந்தைகளின் பார்வையில் மாடல்களாக விற்கப்படுகின்றன. அந்தப் ‘போலி கார்களை’ பெயர் மாடல் இவற்றைப் பற்றிக் குழந்தைகள் அறிந்து வைத்து இருக்கின்றன. பள்ளிச் சிறுவர்கள் பேச்சில் கார்கள் வகைகள் அத்துப்படியாக இருக்கின்றன. அதனால் வெளியே செல்லும்போதும் உள் இருந்தபடியே வெளியே எதிரேயும் தொடர்ந்தும் முன்னோக்கியும் செல்லும் கார்களின் பெயர்களைக் குழந்தைகள் (சிறுவர் சிறுமியர்) தெளிவாகச் சொல்கின்றனர்.