இங்கிலாந்தில் சில மாதங்கள்/விலை நிர்ணயம்

விக்கிமூலம் இலிருந்து

விலை நிர்ணயம்

கடைகளில் பொருள் வாங்குவது என்பதைவிட விலை பேசுவது என்பது பெரிய விஷயம். நம்மில் சிலர் சொன்னதை அப்படியே கொடுத்துவிட்டு வாங்கி வந்து விடுகிறோம். பேரம் பேசத் தெரிவதில்லை. பேரம் பேசுவது இங்கு அவசியமாகிறது. கடைக்காரனே சொல்லிவிடுகிறான்; “நான் சொல்வது இது; நீங்கள் கேளுங்கள்” என்று சொல்லிவிடுகிறான்.

நாம் மிகக் கீழே இறக்க அவன் கட்டுப்படியாகாது என்று எடுத்துச் சொல்ல, பிறகு ஒருவிதமாக முடிவு செய்து “சரிதான் எடுத்துப் போங்க” என்று சொல்லப் பிறகு பேரம் படிகிறது. இதில் நேரம் வீணாகிறது. நேரம் போகட்டும் நம்மைப் போன்ற ஏமாளிகள் கூடுதல் விலையைத் தான் கொடுத்துவிட்டு வருகிறோம்.

காய்கறிக் கடை, மீன் கடை, சில்லரை வியாபாரிகள் இவர்களிடம் இப்படி மல்லுக் கொடுத்துப் பழகிவிட்டோம். இப்பொழுது தான் சில கடைகளில் பெரிய கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளை ஒப்புக்கொண்டு பொருள்களை வாங்கி வருகிறோம், அவர்களே கணக்குப் போட்டு இவ்வளவு லாபம் வந்தால் போதும் என்று முடிவு செய்வது நல்லது. என்ன செய்வது மற்றொரு கடை போட்டி போட்டு அந்த விலையைக் குறைக்கிறது. அதனால் எதையும் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. நெகிழ்ந்து கொடுக்க வேண்டியுள்ளது.

அங்கே கடைகளில் பேரம் பேசத் தேவை இல்லை. விலைகள் எழுதி ஒட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் அதிக வித்தியாசம் இருப்பது இல்லை. மற்றொன்று கடை வீதிகளில் நம் நாட்டைப் போலத் தனித் தனிக் கடைகள் இருப்பதோடு பெருநகரங்களில் கடை மையங்கள் (shopping centres) வைத்து நடத்துகிறார்கள். உள்ளே சென்று விட்டால் அது ஒரு பொருட்காட்சி சாலை போல இருக்கும். கார்கள் நிறுத்த ஓர் மாடி அடுக்கு அல்லது பூமியின் கீழ் மற்ற அடுக்குகளில் லிஃப்டுகள் படி ஏற்றங்கள் இந்த வசதிகளோடு பலதுறை அங்காடிகள் வைக்கப்பட்டு இருக்கும். நம்முடைய ‘குறளகம்’ சூப்பர் மார்க்கெட்டுகள் இவற்றைப் பின்பற்றியமைந்தவையே எனலாம். விரிந்த பரப்புகளைக் கொண்டவை அவை. அவர்கள் தம் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் அங்கே சென்று பெற்றுக் கொள்ள முடிகிறது. காய்கறி, பழச்சாறுகள், ஐஸ்கிரீம், சாக்லெட்டு, பிஸ்கத்துகள், குடிவகைகள், பிளேடு முதல் சென்டு வரை எல்லாச் சாமான்களும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே வரும்பொழுது அவற்றை வரிசையாக எடுத்துவைக்க பில் போட்டு விடுகிறார்கள். அதை இயந்திரக் கருவிகள் நம்முடைய தட்டச்சு மிஷின்போல ஒவ்வொரு கடையும் வைத்திருக்கிறது. கையில் எழுதி பில் போடுவதே இல்லை. தள்ளுவண்டிகளில் வைத்துத் தள்ளிக் கார்களுக்கு எடுத்துச் சென்று விடுகின்றனர். பெண்ணும், ஆணும் சிலசமயம் குழந்தைகளோடும் வந்து குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாரத்துக்கு ஒரு முறை மாதம் சில முறை வந்து நிரப்பிக்கொள்கின்றனர். கையில் பணமே கொண்டுவரத் தேவையில்லை; செக்குகள் தரலாம்; ‘கிரெடிட் கார்டு’ காட்டினால் அந்த எண்ணைக் குறித்துக் கொண்டு பில்லில் நம் கையெழுத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். பாங்கிக்கு அனுப்பி அவர்கள் காசு பெற்றுக் கொள்வார்கள். அங்கே போதிய பணம் நம் கணக்கில் இல்லாவிட்டாலும் கவலை இல்லை. அவர்கள் செலுத்தி விட்டு நம் கணக்கில் எழுதிவிடுவார்கள். ஒவ்வொரு பொருளும் தக்கபடி உறையிட்டு (pocket) எடுத்துச் செல்ல வசதியாகத் தந்துவிடுகிறார்கள்.

சரக்குகளை அவர்கள் தேக்கி வைத்துக் கொள்வது இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட மாதங்களில் ‘sales’ என்று விளம்பரப்படுத்தி விலை தள்ளித் தந்துவிடுகிறார்கள். பொருள் வாங்குவோரிடம் போனால்தான் தொடர்ந்து பொருள் உற்பத்தி செய்யமுடியும், பொருள் பழுதுபட்டுக் கெட்டுப் போகாமலும் இருக்கும். குறைந்த விலையில் கிடைப்பதால் துணிந்து வாங்கவும் செய்கிறார்கள். ஒரு சிலர் அந்த sales வரும் வரை சில பொருள்களை நிதானமாக வாங்கிக் கொள்ளக் காத்துக் கிடப்பதும் உண்டு.