இங்கிலாந்தில் சில மாதங்கள்/பழமையும் புதுமையும்

விக்கிமூலம் இலிருந்து

பழமையும் புதுமையும்

பொதுவாக நம் நாட்டுப் பாரம்பரிய மனோநிலை அவள் அவனுக்காகவே வாழ்வது என்பதும் அதில் அவள் ஒரு லட்சியத்தைக் கண்டும் வந்தாள். இராமாயணத்தில் சீதை சொல்கிறாள் அனுமனிடம்:

“என்னுடைய கற்பின் திண்மையால் அவனை (இராவணனை) சுட்டு எரித்துவிடமுடியும். அது எனக்குப் பெரிது அல்ல; என் கணவனின் வீரம் மாசுபட்டுவிடுமே என்று அஞ்சுகிறேன். அவன் இராவணனை எதிர்த்து வீரம் காட்டி அவன் தலையை அறுத்துத் தீமையை ஒழித்து அறத்தை நிலை நாட்ட வேண்டும். அதற்காகச் செயற்படாமல் இருக்கின்றேன்” என்று கூறுகிறாள். இது காவியத்துப் பண்பாடு; புகழ் என்பது கணவனுக்கு உரியது: அவனுக்கு அதனை ஈட்டித் தருவது மனைவியின் கடமை என்று அவள் உணர்த்துகிறாள்.

இம்மை மறுமை என்ற இரண்டு நிலைகள் உண்டு என்பதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அந்தச் சொல்லாட்சி நம் நாட்டு நடைமுறையில் உள்ளது. இந்தப் பிறவியில் தான் நினைத்தவரை அடைய முடியாவிட்டாலும் அடுத்த பிறவியில் சந்திப்பதாக எழுதி வைத்து உயிர்விடும் லட்சியப் பெண்களும் நம் நாட்டில் உண்டு.

வாழ்வில்தாம் வாழ முடியவில்லை; அதற்குத் தம் பெற்றோர்களைக் குற்றவாளிகளாக்கிவிட்டுத் தன் சாவுக்குக் காரணமான தடைகள் அடுத்த பிறவியில் இருவரும் சந்திக்கும்போது நீங்கிவிடும் என்ற நம்பிக்கையில் உயிர் விடுபவர்களும் உண்டு. அவர்கள் எழுதும் வாசகங்கள் விசித்திரங்களாக இருக்கும். வாழ்வில் இணையமுடியாத நாங்கள் சாவில் சங்கமம் ஆகிறோம் என்று கடற்கரை அலைகளுக்கு வேலை கொடுப்பவர்களும் உண்டு. காதற் காவியங்களில் மனம் பறிகொடுக்கும் மனப்பக்குவம் மிகுதியாக இருப்பதால் இதைப் போன்ற வேகமான நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு.