உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கிலாந்தில் சில மாதங்கள்/அதிர்ச்சிகளை அவர்கள் எதிர் பார்ப்பது இல்லை

விக்கிமூலம் இலிருந்து

அதிர்ச்சிகளை அவர்கள் எதிர் பார்ப்பது இல்லை

‘சாளரங்களில் பூத்தன தாமரை’ என்றான் கம்பன்; அதாவது பெண்கள் சன்னல் வழியாக வெளியே செல்லும் மனிதர்கள், பார்க்க அந்த வீட்டை அலங்கரிக்கிறாள் என்பது அவர் கருத்து. கலியாணமாகாத பெண்கள் நம் கதைகளுக்கு மிகவும் தேவைப்படுகின்றனர்.

‘முதிர் கன்னி’ என்ற காமராஜனின் கவிதைச் சொல் கவனத்துக்கு வருகிறது. இப்படி ஒரு இனம் இந்த நாட்டில் உருவாகி வருவதைக் கவிஞன் காட்டி இருக்கிறான். ‘கனவுப் பறவைகள்’ என்ற கவிதை கணியூர் மது நெஞ்சன் இயற்றியது. அதன் வரிகள் சில: "குனியும் வரை கொட்டும் சமுதாய இதயங்களின் மையத்தை நோக்கி ஓர் நாள் இந்த மாடுகள் தும்பை அறுத்துக்கொண்டு முட்டத்தான் போகின்றன” என்று கூறுகிறது.

‘மணச் சந்தையில் விலைபோகாத இந்தப் பாடல்கள் ஒவ்வொரு குடும்பங்களிலும் தேக்கப் பட்டியல்கள்’ என்று சித்திரிக்கப்படுகின்ற கன்னிப் பெண்கள் கலியாணம் ஏற்று முடிப்பது; இடை வேளை நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியமிக்கவை தான். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிப்பது அதிசய செய்தியாக இருந்தது. எப்படி ஒருவன் தன் பெண்னை யாருக்கு முடிக்கிறான் என்பது அதைவிட, அதிசயமான செய்திதான்.

“கலியாணச் சந்தையில் விலை போகாத இந்தப் பண்டங்கள்” என்ற ஓர் இனத்தைக் குறிக்கின்றார் கவிஞர்.

இவர்களுக்குத் தம் காதலனைத் தேடிக்கொள்ள வாய்ப்பு இல்லை. ஆண்களோடு பேசவும், அவனை அறிய முடியும் வாய்ப்பும் இல்லை; அவனும் நம்பிக்கைக்கு உகந்தவனாக இருப்பது இல்லை; காதல் செய்வான். அது அவனுக்கு ஒரு பரிசோதனை; கிளர்ச்சி; எதையும் செய்து முடிப்பான்; ஆனால் மூன்று முடிச்சு போடச் சொன்னால் அப்பாவின் விக்கிரகத்தை, குடும்பத்தின் தடையுத்தரவை, இயலாத சாதிக் கட்டுப்பாட்டினை, பழகிப்போன வாய் பாட்டுச் சந்தங்களை அதுகூட சரியாக உச்சரிக்காமல் முணுமுணுத்துக் கொண்டு அவளுக்கு அவள் ஒரு கேள்விக்குறியாக மாறச் செய்துவிடுவான்.

மணவாழ்வு என்பதில் மூன்று இயல்கள் அடங்கி இருக்கின்றன. பாலியல்; காதலியல்; மணவியல் இந்த மூன்றும் சேர்ந்து செயல்படுவதுதான் ஒருவனும் ஒருத்தியும் என்ற உயர்ந்த கொள்கை.

அங்கே நீலப்படங்கள் பார்க்க அவர்களுக்குத் தடை இல்லை. ‘பாலியல்’ என்பது என்ன என்று அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது; நட்பியலில் ஆடவச் சிறுவர்களோடு தொடங்கிப் பாலியலில் வாலிபப் பருவத்தில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் வழியும் அவர்களுக்கு உண்டு; பாலியல் காதலாக மலர்ந்து மணக்கிறது. இது: அந்த நாட்டு வரைவியல்.

இங்கே ‘முதலிரவு’ என்ற ஓர் அற்புதமான அலங்கரிக்கப்பட்ட மலர்கள் விரித்த மஞ்சத்தில் அவன் அவளைச் சந்திக்கிறான்; அந்த இரவே அவன் மூன்றையும் அறிகிறான்; அவள் அவனுக்குத் தேவைப்படுவதால் அவள் அவனைக் காதலிக்கிறாள். இதற்கு அடிப்படை மணம்; மணம் முடிந்தபின் முதல் பாடம் படிக்கிறான்; காதலிக்க அறிகிறான். மூன்றும் இணைந்த அதனை மணவாழ்வு என்று ஏற்கிறான்.

இந்த மூன்றும் ஒட்டாதபோது ஒன்றை ஒன்று தழுவாத போது அதிர்ச்சிகள் தோன்றுகின்றன. கன்னிப் பெண் காதலால் கருத்தழிந்து பாலியலில் கால் வைத்தால் மற்றையவை தொடராவிட்டால் அதிர்ச்சி அவளை அணுகுகிறது . மணக்க முடியாதவளை முதற்படியிலேயே சந்தித்து விட்டுவிட்டாலும் தொல்லைதான். அவர்கள் இந்த மூன்றும் வெவ்வேறு என்று அறிந்து செயல்படும் வாய்ப்பும் தெளிவும் ஏற்பட்டிருப்பதால் அதிர்ச்சிகள் ஏற்படுவது இல்லை. இதயக்கோயில் கதாநாயகியைப் போல் கயிற்றைத் தாலிக்குப் பயன்படுத்துவதற்கு மாறாகக் கழுத்தைச் சுருக்கிக் கொள்ளப் பயன்படுத்துவதில்லை. தவறுகள் ஏற்படும்போது அது இங்கு மிகைப்படுத்தப்படுகிறது; அது அங்கு நியதிப்படுத்தப்படுகிறது. அதனால் பெண்களுக்கு வாழ்வில் அதாவது அந்த இடை வேளையில் எந்தவித அதிர்ச்சிகளும் ஏற்படுவது இல்லை.

மீறல்கள் அவை அதிகப்படும்போது விதிவிலக்குகள் ஆகின்றன. அவற்றை அங்கீகாரம் ஏற்காதபோது அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர், இப்படித் தொடக்கத்தில் அவர்களும் அத்துமீறல்களைச் சந்தித்து இருப்பார்கள். அத்துமீறல்கள் வாழ்க்கை நியதிகள் என்று உணரப்பட்டு அங்கீகாரம் தரப்படும்போது அவை நியதிகளாக மாறுகின்றன. அதனால் பாலியல் பாதிப்புகள் அவர்களை அதிகம் இப்பொழுது தாக்குவது இல்லை; பெற்றோர்கள் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு விடுவதால் அவர்கள் பொறுப்போடு செயல்பட்டுத் தம்மைத்தாம் காத்துக்கொள்கின்றனர். சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொள்ளாது என்ற அச்சம் இன்மையால் அவர்கள் வாழ்விய லுக்கு முதலிடம் தருகின்றனர். இவற்றை எல்லாம் அதிகம் பொருட்படுத்துவது இல்லை.

கணவனோடு வாழாதவள் விலக்குப் பெற்றவள் என்ற பெயர் மட்டும் பெறுகிறாள் ; உரிமையோடு வாழத் தகுதியுடையவள் அங்கு; இங்கு ‘வாழா வெட்டி’ என்று பட்டம் சூட்டப்பட்டு அவள் ஒதுக்கப்படுகிறாள். பாலியல் பாதிப்புகளை அவர்கள் அதிகம் பொருட்படுத்தாததால் சிக்கல்கள் அதிகம் இல்லை; உரிமை, சுதந்திரம் என்ற மனவியலில் அவர்கள் கவலை இல்லாமல் வாழ்கின்றனர். உரிமை இருக்கிறது என்பதால் அவர்கள் தவறு செய்வது இல்லை; தவறு செய்வதால் வாழும் உரிமையை அவர்கள் இழப்பதில்லை.

மேல் நாட்டுத் தாக்கத்தால் இங்குப் பெண்கள் தம் உரிமையை நாட்ட அடிமைத் தளையினின்று விடுபடு கின்றனர். தாமும் விலக்குக் கோரி விவாகரத்துப் பெறுகின்றனர். அது எளிய சாதனைதான். அடுத்த கட்டம் சமூகத்தில் இதற்குப் பொதுவான அங்கீகாரம் இல்லாததால் அவள் மறுமணம் செய்து கொள்வது எளிதாக இயல்வது இல்லை. ‘மணமகன் தேவை’ என்று விளம்பரப்படுத்தலாம். ‘விவாகரத்து பெற்றவர்’ என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டால் அவன் அதை அவளுக்கு அளிக்கும் வாழ்வுப் பிச்சையாக நினைக்கிறான்; அவன் தன்னை ஒரு அவதார புருஷன் என்று உயர்த்திக் கொள்கிறான்.

நம் பெண்களுக்கும் விவாகரத்துக்கு உரிமை இருக்கிறது; மறுக்கப்படவில்லை; மறுவாழ்வுக்கு வழிவகை அவ்வளவு பசுமையாக இருப்பதாகத் தெரியவில்லை. விதலைக்கு நெற்றியில் சிவப்பு நிறம் தீட்டத் துணியும் வாலிபன் இவள் முகத்தில் மலர்ச்சியைக் கூட்ட முன் வருவது இல்லை. ஏன் அவள் முந்தைய கணவன் உயிரோடு இருப்பதால்.

இந்த உரிமை என்பது கத்தி முனையில் நடப்பது போன்றது; கலியாணம் ஆவதற்கு முன்னால் கொஞ்சம் அடக்கம் காட்டவேண்டும். அது அவசியமாகிறது . ஏனென்றால் பெண்ணைத் தேடும் படலத்தில் அவளிடம் அடக்கம் முதலில் எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவத்தால் சொல்கிறேன். படித்தவள்; மேல் நாட்டுச் சாயல் படிந்தவள்; பட்டம் பல பெற்றவள்; அழகும், அவளின் பெற்றோர்கள் அவளுக்குத் தந்திருக்கிறார்கள். அவள் அப்பா அவளைப் பற்றி அறிமுகப்படுத்தப்படும்போது, “பெண் சுதந்திரப்பிரியள், அடக்கம் என்பது அவளிடம் அடங்கிய பண்பு; ரொம்பவும் நவீனப் போக்கு உடை யவள்” என்று சொல்லி அறிமுகப்படுத்துகிறார். அவர் உண்மையைச் சொல்கிறார், அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது அறிகிறேன். ஏன்? இதைக் கேட்கும் ஆண்மகன் கொஞ்சம் பின்வாங்குகிறான். எப்படியும் பின்னால் பெண் அடக்கியாளப் போகிறாள். தன் அவசரப்பட்டு அதை முன்கூட்டிச் சொல்ல வேண்டும்.

மேல் நாட்டுப் பெண்களின் போக்கில் வெளியே சம உரிமை என்று பேசப்பட்டாலும் அவன் அவளிடம் அடங்கி நடக்கும் பண்புதான் மிகுதியாகக் காணப்படுகிறது. காரணம் விவாகரத்து என்ற கத்தி அவள் கையில் இருக்கிறது, அதே நிலை தான் அவளுக்கும்.

நம் இளைஞர்கள் ஒரு சிலர் கிழக்கையும் மேற்கையும் இணைத்து ஒரு சங்கமமாக்கி அதில் நிறக் கலவையைக் காணவும் செய்கின்றனர். அவள் கிழக்கே வருவது இல்லை; இவனால் மேற்கே போக முடிவதில்லை. இவை எல்லாம் தவிர்க்க முடியாத புதிய பண்பாட்டுக் கலப்பு, பிறக்கும் குழந்தைகள் அந்த நாட்டு மண்ணின் வளத்தால் ஒளி பெறுகின்றார்கள். மாற்றும் பெறுகிறார்கள்.

நம்முடைய இளைஞர்கள் மாறவில்லை; அவர்கள் மாற்றத்தை விரும்பவில்லை, சில சொற்கள் அவர்களுக்குப் பழக்கமாகி வருகின்றன; அவையும் மேல் நாட்டுத் தாக்கமே. ‘தான் பார்த்துப் பெண்ணை முடிவு செய்வது’ என்பது ஓரளவு இரு தரப்பிலும் இப்பொழுது ஒரு தெளிவு ஏற்பட்டு வருகிறது.

சாதகத்தில் தொடங்கி உறவு முறைகளில் உழன்று கொடுக்கல் வாங்கல் கணக்குகள் முடித்தாலும் பெண் பையனைப் பார்த்து மறுப்புச் சொல்லாமல் மவுனம் சாதிப்பாள். மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று விளக்கம் சொல்லப்படும். பையன் ‘சரி’ என்று ஒப்புக் கொள்ளவேண்டும். இந்த ஒரு வாசகத்தைக் கேட்க முடிகிறது. பெண்கள் “அப்பா அம்மா இஷ்டம்” என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளும் பழக்கமும் இன்னும் நீங்கவில்லை. அவர்களால் முடிவு செய்ய முடியாத நிலை அவ்வளவுதான்.

“பையன் அவளை வைத்துக் காப்பாற்றுவானா"’ என்பதுதான் முதல் கேள்வி. அந்த அளவு இருந்தால் போதும் என்ற மனநிறைவும் மன்றல்களை முடித்துத் தருகிறது. ஒரு பெண்ணைப் பற்றி முடிவு செய்யும்போது மூன்று அளவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அழகு, கல்வி, செல்வம்; இவற்றில் ஒன்று இரண்டு குறைந்தாலும் சரி செய்துகொள்ளும் மனப்பக்குவமும் நம்மில் பலர்க்கு உண்டு. எப்படியும் கலியாணமானால் போதும் என்ற ஆர்வம் இந்த உன்னத முடிவுக்குத் துணை செய்கிறது. எப்படியோ நம் நாட்டில் பெண் வசதி படைத்தவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மற்றவர்களுக்கும் கலியாணம் ஆகிறது. மறுக்கவில்லை.

“குணம் இருந்தால் போதும்” என்று ஆத்மதிருப்தி பெறுகிறவர்களும் உண்டு. முக்கியமாகக் குணத்தைத்தான் பார்க்க வேண்டும் என்ற அறிவுரைகள் தரப்படுகின்றன. ஏன் மற்றவை இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்ற காரணத்தால், மற்றொரு நியாயமான காரணமும் உள்ளது. அழகின் ரசனை அவன் சொந்த விஷயம்; செல்வம் பெற்றோர்கள் கவனித்துக் கொள்வார்கள்; பொதுவாக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் குணத்தைப் பற்றித்தான் சொல்லமுடியும்.

பொதுவாக நம் நாட்டில் அவன் அவளைச் சரியாக வைத்து வாழவேண்டுமே என்ற அடிப்படை.தான் இருந்தது; இப்பொழுது அவள் அவனோடு ஒழுங்காகக் குடித் தனம் செய்ய வேண்டுமே என்ற கவலையும் தோன்றுகிறது; இந்தப் புதிய கவலைக்குக் காரணம் இந்த மேல் நாட்டுத் தாக்கமே, உரிமை என்ற பேரால் எதிர்ப்புகள் வளர்த்துக் கொண்டு தன்னை இழக்காமல் இருக்கும் மனோநிலைதான் இதற்குக் காரணம்.