இங்கிலாந்தில் சில மாதங்கள்/புதுக்கவிதை ஒன்று

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

புதுக்கவிதை ஒன்று

“மண்ணெண்ணெய்க்கு இந்த நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறது. ஏன் தெரியுமா? மருமகள் ஸ்தானத்துக்கு வரும் பெண்கள் அதைப் பதுக்கி வைப்பதால் தான்” இப்படி எழுதினால் அது ஒரு புதுக்கவிதை. அதாவது மாமியின் கொடுமையால், கணவனின் காட்டுமிராண்டித்தனத்தால், அந்த வீட்டுக்கு அவள் புதியவளாகவே கருதப்படுவதால் அவள் அந்த வீட்டிற்கு வேண்டாதவள் ஆகிறாள்.

இறந்த பிறகு கொள்ளி வைப்பது நம் நாட்டுட்டு பழங்கால மரபு; அது தேவையற்ற சடங்காக மாற்றிக் கொள்ளத் தனக்குத்தானே கொள்ளி வைத்துக்கொள்ள இந்தப் புதுமைப் பெண். வேள்வி யாகத்தில் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். அதற்கு அவளுக்குச் சுலபமாகக் கிடைக்கும் எரிபொருள் இந்த மண்ணெண்ணெய்தான். அதில் கலப்படம் இல்லாததால் சுட்டு எரிக்கத் தாமதம் செய்வது இல்லை. கலப்படம் இல்லாத ஒரே ஒரு சுத்தமான வஸ்து இந்த மண்ணெண்ணெய்தான் என்பதை இந்த நிகழ்ச்சிகள் நிறுவுகின்றன.

“மாமியார் மருமகள்” உறவு இங்கே சரியாக இருப்பதில்லை என்பது தெரிந்த கதை, அதனால் பெண்ணைக் கொடுக்கும்போது மாமியார் இல்லாமல், நாத்தனார் இல்லாமல் தனிக் குடித்தனம் நடத்தும் தகுதி வாய்ப்பு உடைய மாப்பிள்ளையாக இருந்தால் அவருக்குக் கொஞ்சம் கிராக்கி இருக்கிறது. இதை எல்லாம் பார்த்துத்தான் பெண் தருகிறார்கள்.

அங்கே மாமியார் என்ற ஸ்தானத்தை வகிப்பதற்கே வாய்ப்பில்லாமல் போகிறது. கூட்டுக் குடும்பங்கள், ஒட்டுக் குடித்தனம், ஓரகத்தி, நாத்தனார் இந்த மாதிரி உறவுப் பேச்சுகளே இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

பையன் பெண்ணைப் பார்த்து மட்டும் முடிவு செய்வது இல்லை; பழகிப் பின் தைரியப்படுத்திக் கொண்டு இது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லாமல் அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாமல் வாழுங் காலத்துத் துணைவி என்று ஏற்றுக் கொள்கிறான். ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்; அது கொஞ்சம் உறுதிப்பட்டால் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். அதற்குப் பிறகு பயமில்லாமல் ஒரே கூரையில் தம்பதிகளாக மாறுகின்றனர். இது அந்த வாழ்க்கைமுறை. வலது காலை எடுத்து வைக்கச் சொல்லி அழைப்பதற்கு அங்கு யாரும் இல்லை , அவர்கள் ‘தனிக் குடித்தனம்’ அமைத்துப் புது கம்பெனி! தொடங்குகின்றனர். பழைய கம்பெனியில் அவர்களுக்கு இடம் இல்லை. அங்கே மாமிக்கு இடம் இல்லை; அவள் கணவனுக்கும் ஆதிக்கம் இல்லை. “என்ன கொண்டு வந்தாய்?” என்ற கேள்விக்கு அங்கே இடமே இல்லை.

நம் நாட்டில் இப்பொழுது கடுமையான சட்டம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அறியப்படுகிறது. “அவனைப் பழிவாங்க வேண்டுமானால்” ஏதாவது எழுதி வைத்துவிட்டு எரிபொருளாகிவிடுகின்ற பேய்களும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதாவது மருமகளைச் சரிவர நடத்துவதில்லை; எதிர்பார்த்தபடி சிலசமயம் அதற்கு மேலும் அவள் கொண்டுவர வேண்டிய அச்சடித்த நோட்டுகள்; சிறப்பு வரிசைகள்; நிலபுலன்கள்; ஸ்கூட்டர் வகையறாக்கள், நகை நட்டுகள் ஆடிட்டர் கணக்குப்படி, தவறிவிட்டதால் அவள் தன்னை முடித்துக் கொண்டதாக எழுதிவிடுவதும் உண்டு. “சொன்னேனே கேட்டியா நமக்கு அவள் தீம்பு கொண்டு வருவாள்னு என்று” என்று அம்மாக்காரி அங்கலாய்க்க; எதுவும் பேசாமல் அப்பாக்காரர் மவுனம் சாதிக்க, தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்த ஏகபத்தினியை அவன் எரித்துச் சாம்பலாக்க அந்தக் கடிதத்தைச் செத்தவள் தந்த குற்றத் தாக்கலாகப் பதிவு செய்து காவல் நிலையத்தார் அவர்களின் பிரதிநிதிகள் சில சமயம் காக்கி சட்டையோடு சில சமயம் மற்றைய மனிதர்களைப் போலவும் வந்து விசாரித்துச் சூழ்நிலையறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ளுவது நாட்டு நடைமுறையாகிறது.

அவள் கொண்டுவரவேண்டியது என்பது சில அயிட்டங்கள் இருக்கின்றன. அவை குறைந்துவிட்டால் அவள் அந்த வீட்டுக்கு வர, வந்து இருக்க மறுப்புத் தெரிவிக்கப்படுகிறாள். இந்த மாதிரி அசிங்கங்கள் அங்கு இல்லை என்பது முக்கியமான வேறுபாடு; ‘தனிக் குடித்தனம்’ என்பது மேலை நாட்டுத் தாக்கம். இங்கேயும் இந்தப் புதுமை, விடுதலை வேட்கை புகுந்துள்ளது. முதல் முதலில் தனக்கு முதல் எதிரியாக மருமகள் மாமியாரைக் கருதுகிறாள். ‘கணவன் தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாடுகிறாள். தாயின் தனையன் பழக்க தோஷத்தால் அவன் அம்மா என்று கூப்பிடுவது அவளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை; வழிபாடு மாறவேண்டும் என்று நினைக்கிறாள். வந்தவளுக்கு வாழ இடம் தந்துவிட்டு இருந்தவள் இருந்த இடம் தெரியாமல் மறைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். “மாமியார் மெச்சிய மருமகளும் இல்லை; மருமகள் மதித்த மாமியாரும் இல்லை” என்பது இந்த நாட்டுப் பழமொழிகள்.

அங்கு மணமானதும் மகனைப் பிரிகிறாள் தாய்; வழி அனுப்புகிறாள் தங்கை. பெண்ணை வீட்டில் பாசத்தோடும் நேசத்தோடும் வளர்த்த தாய் “யாழ் இசையில் பிறந்தாலும் அந்த இசை யாழுக்குப் பயன்படாது: மலையிலே மணிகள் கிடைத்தாலும் அவை மற்றைய இடத்துக்குச் சென்று அணிகள் செய்யப் பயன்படுகின்றன. சந்தனம் காட்டிலே பிறக்கிறது. அது கல்லிலே உரசப்படுகிறது; அது பூசிக்கொள்பவர்க்கே பயன்படுகிறது. பெண்ணும் அப்படித்தான்.” அவனை அவள் அடைகிறாள்; அங்கே அவளைப் பெற்ற தாயும் தந்தையும் வாழவிடுகிறார்கள்; சுதந்திரப் பறவையாகிறாள்; பிரிவு அவர்களை வேறுபடுத்துகிறது. அவர்கள் வாழ்வில் இணைகின்றனர்.

அங்கே அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவனை அவளுக்குப் பிடிக்காவிட்டால் எந்த நேரமும் அவனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடைகட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவளும் அவனோடு முரண்பட்டால் காலத்துக்கும் கட்டிக்கொண்டு அழவேண்டும் என்ற கட்டாயம் அவனுக்கும் இல்லை. இதனால் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்த நினைப்பதில்லை; அவன் தன் உடைமை என அவள் ஆதிக்கம் செலுத்தவும் முடிவதில்லை. அதனால் ஒருவரை ஒருவர் மதித்துக் கண்ணியமாக வாழ் நினைக்கின்றனர்.

அவளுடைய சொந்த விஷயங்களில் அவன் தலையிட முடியாது; அதேபோல அவளும் அவனை நச்சரிக்க முடியாது. ஒரு நாள் ‘கால அட்டவணையை’ மற்றொருவருக்குத் தெரிவித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; தேவையானதைத் தெரிவித்துக் கொள்வார்கள். அவரவர்க்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது பாதுகாக்கபடுகிறது.