இங்கிலாந்தில் சில மாதங்கள்/மறக்கமுடியாத அனுபவம்

விக்கிமூலம் இலிருந்து

மறக்கமுடியாத அனுபவம்

நான் தங்கியிருந்த இடத்திற்கும் லண்டன் நகரத்திற்கும் அறுபது மைல் தூரம் இருக்கும் அங்கே ரயில் பேருந்துகளில் போவதை விட சொந்தக் கார்களில் செல்வதையே அங்குப் பெரும்பாலும் மேற்கொள்ளுகின்றனர்.

நான் தனிமையைப் போக்கிக்கொள்ள லண்டன் நரத்திற்குச் சென்று வருவது உண்டு. போகவரத் திருப்பு டிக்கட் வாங்கிக்கொண்டால் சலுகை கிடைக்கிறது. காலை ஒன்பது மணிக்கு மேல் பயணம் செய்தால் பாதிக் கட்டணம்தான் வாங்குகிறார்கள். ஒன்பது மணிக்குள்ளாகச் செல்கின்றவர்கள் தத்தம் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள்; அதற்கு மேல் பயணம் செல்பவர் பெரும்பாலும் வேலை வெட்டி இல்லாதவர்கள்; அவ்வளவு அவசரம் இல்லை. முதியவர்கள் பெரும்பாலும் ஒன்பது மணிக்கு மேல்தான் பயணம் செய்கின்றனர்.

லண்டன் முன் பின் தெரியாத ஊர்; எப்படிச் செல்வது எங்குச் செல்வது சும்மா ஊர் சுற்றிக்கொண் டிருப்பது என்ற அடிப்படையில்தான் அங்குப் போனேன். தனியாக இடம் அறிந்து செல்வது என்பது அரிய சாதனையே யாகும்.

அங்கே ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல வேண்டுமானல் பேருந்துகளில் தெரிந்தவர்களே போக முடியும்; மற்றவர்கள் போக அனுபவம் தேவை.

எனக்குப் பிடித்த பகுதிகள் கிரீன் பார்க்கு, ஹைட் பார்க்கு, டிரபால்கர் ஸ்கொயர், பிக்காடலி இவை குறிப்பிட்ட இடங்களாக அமைந்தன், பாதாள ரயிலில் விக்டோரியா ஸ்டேஷனில் ஏறுவது வழக்கம். விக்டோரியா நம் சென்னை சென்ட்ரல் போன்றது. அங்கே ‘அடிநிலை’ வண்டிகளுக்குப் பக்கத்தில் ரயில் நிலையம் இருக்கிறது. அடிநிலை ரயிலில் செல்ல வரைபடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் வாய் திறந்து கேட்க முடியாது; பதில் சொல்ல மாட்டார்கள்; வரைபடமே நமக்கு வழிகாட்டி. இதில் இரண்டு மூன்று நிறங்களில் கோடுகள் இட்டு ரயில் வழிகளைப் பிரித்து இருக்கிறார்கள். நாற்பது பென்ஸ் டிக்கெட் வாங்கலாம். அதிக தூரம் போக வேண்டுமானால் ஐம்பது பென்ஸ் டிக்கட்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஒரு முறை வெளியே வந்துவிட்டால் அந்தச் சீட்டுப் பயன்படாது, நீலம் சிகப்பு மஞ்சள் இக்கோடுகள் பாதைகளை வேறு படுத்திக் காட்டும். நாம் மைலாப்பூர் போகவேண்டுமானால் சென்ட்ரலில் இறங்கி மற்றோர் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அடி நிலையில் மூன்று நிலைகளில் அடுக்குகளில் வண்டிகள் ஓடுகின்றன. ஒரே சம நிலையில் இவை ஓடவில்லை. எனவே இடம் மாறும்போது படி ஏற்றங்கள் (escalators) ஏறி இறங்கவேண்டும். வழியில் நினைக்கிறேன் ஒருவன் இசைமீட்டிப் பாடிக்கொண்டிருந்தான். காசும் வருகிறவர் போகிறவர் போட்டுக்கொண்டிருந்தார்கள். இது ஒரு புதுமையாகவே இருந்தது; இரவலர்களே இல்லாத அந்த நாட்டில் பாட்டுப் பாடிக் காசு பெறும் காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவனுக்கு இசைக்கலை இருக்கிறது; அதைக் காட்டி மற்றவர்களை மகிழவைத்துக் காசு அவர்கள் போட்டுச் செல்ல அது பெறுவதும் ஒரு கண்ணியமான தொழிலாகவே அவர் கருதியிருக்க வேண்டும்.

அங்கு நான் வழி தெரியாமல் திண்டாடினேன்; எப்படி எந்த பிளாட்பாரத்தில் ரயில் மாறுவது என்பது தெரிய வில்லை. அங்கே சுவர்களில் வரைவுகள் எழுதி வழிகாட்டி இருக்கின்றனர். ஏறும் வண்டிகளிலும் அந்த வண்டி செல்லும் பாதை குறித்துப் படம் இருக்கும். நாமே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அங்கே ரயில் டிக்கட்டுப் பரிசோதகர் நின்றுகொண்டிருந்தார், அவரைக் கேட்டேன். அவர் “கீழே போகவும்” என்று கூறி வழி காட்டினார். கீழே சென்று மறுபடியும் எனக்கு விளங்காமல் திண்டாடினேன். மறுபடியும் அவரிடம் சென்றேன்; கேட்டேன். ‘மறுபடியும் முயற்சி செய்’ (Try again) என்றார். அவர் நினைத்திருந்தால் எனக்கு என்னுடன் வந்து என் அறியாமைக்கு இரக்கம் காட்டி வழி காட்டி இருக்கலாம். அங்கே தீட்டியிருந்த வரைபடங்கள் வழி காட்டத்தானே இருக்கின்றன. இவர் எனக்கு வந்து வழி காட்டி இருந்தால் அந்த வரைபடம் குறைபாடு உடையது என்று ஆகியிருக்கும்; அல்லது நான் புரிந்து கொள்ள முடியாத அப்பாவியாக மதிக்கப்படவேண்டும். இரண்டையும் தவிர்க்க அவர் “மறுபடியும் முயல்க” என்று கூறினார் என்று நினைக்கிறேன். என் முயற்சியில் வெற்றி பெற்றேன்.

நமக்கு அவர்கள் பேசும் ஆங்கிலம் புரிவதில்லை; நாம் பேசும் ஆங்கிலம் அவர்களுக்குப் புரிவதில்லை. எழுத்து இருவருக்கும் பொதுவானது. ‘கண்களே நமக்கு வழி காட்டி; காதுகள் பயன் படா’ இந்த அனுபவம் மறக்கமுடியாத ஒன்று என்று நினைக்கிறேன்.