இங்கிலாந்தில் சில மாதங்கள்/முன்னுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
முன்னுரை

பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் ‘எக்சர்ஷன்’ செல்கின்றனர். வளர்ந்தவர்கள் அதை ‘பிக்னிக்’ என்று எடுத்துச் சொல்கின்றனர். வசதி மிக்கவர்கள் ‘உல்லாசப் பயணம்’ என்று பெருமைப்படுத்துகின்றனர். வயதானவர்கள் ‘யாத்திரை’ போகின்றனர். இப்படி ஏதோ சில பெயர்களால் மற்றை நாடுகளுக்கும் இடங்களுக்கும் போய்வந்த பிறகு அவர்கள் விசாரணைக்கு உள்ளாகின்றனர்.

“எப்படி இருந்தது பயணம்?” --கேட்கப்படும் வினா. இது சம்பிரதாயத்தை ஒட்டியது; பதில் சொல்லும்வரை கேட்பவர் முன் இருப்பது இல்லை; சலிப்பைத் தாங்காமல் அவர்கள் செய்த தவறை உணர்ந்து மறுபடியும் யாரையும் இது போன்று விசாரிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள்.

இதே போன்ற கேள்விகள் எனக்கும் தரப்பட்டன, பதில் சொல்வது என்பது எளிது அல்ல; அவர்கள் கேட்பது சம்பிரதாயம்தான் என்பதையும் உணர்கிறேன். அந்த வினாக்கள் ஒன்று சேர்ந்து என்னை எழுதத் தூண்டின.

கேட்பவர்கள் படிக்கப்போவது இல்லை; படிப்பது உறுதி இல்லை. மற்றவர்கள் படிக்கவே இது எழுதப்பட்டது. எழுதுகிறேன். ஏன் எழுதுகிறேன். எழுத்து எனக்குப் பழக்கமான கலை; அது இதனை ஒரு இலக்கிய வடிவம் ஆக்கித் தந்துள்ளது. நாள் ‘பயண நூல்’ என்று எழுதுவதாக இருந்தால் நான் முதற் பயணியாக இருக்க வேண்டும்; நான் மார்க்கோபோலோ போல ஒரு சரித்திரப் பேராசிரியன் அல்ல; அந்த தேசங்களைப் பற்றி அறிந்தவர் பலர்; வாழ்ந்தவர் பலர், சென்று கல்வி கற்றவர் பலர்; இதனை ஒரு பயண நூல் என்றால் பார்த்த இடங்கள் அவற்றின் படங்கள் அதிசயிக்கத்தக்க சாதனைகள் செய்திகள் அதில் இடம் பெற வேண்டும். செய்திகளைத் திரட்டி ஒரு பயண நூல் எழுதுவதாக இருத்தால் மற்றவர்களை நான் மதிக்காதவன் ஆகிவிடுவேன். திரைப்படங்கள் பல வெளி நாட்டுப் பின்புலத்தை வைத்துப் பின்னப்பட்டுள்ளன; பத்தாம்பசலி என்றும் பட்டம் சூட்டப்படுவேன்; எங்களுக்குத் தெரியாததை இவன் என்ன சொல்ல முடியும்? இது நியாயமான கேள்விதான்.

தெரிந்ததைத்தான் பள்ளி மாணவன் பத்துப் பக்கத்தில் கட்டுரை எழுதித் தருகிறான். அவன் என்ன எழுதுகிறான். நான் இதைப் பார்த்தேன். அதைப் பார்த்தேன் கட்டுச் சோறு கட்டிச் சென்றேன். என்பதோடு என் நண்பர்கள் வந்தார்கள் என்று எழுதி முடிப்பான்; அது கட்டுரை. அதையும் பின்பற்ற முடியாது.

பார்த்தவற்றை அறிந்தவற்றைத் தேவையானவற்றை நம் நாட்டு வாழ்வியலோடு தொடர்பு படுத்திப் பயன்படத்தக்க வகையில் (அந்த நம்பிக்கையோடு எழுதப்பட்டது) எழுதி முடித்தது இந்நூல்; செய்தியின் தொகுப்பு அல்ல; பயண அனுபவங்களும் இல்லை; அறிந்தவற்றை இலக்கிய நயம் தோன்ற எடுத்துச் சொன்னது. எனவே இது பயண நூல் அல்ல. பயண இலக்கியம் என்பது என் அறிமுகம்.

ரா.சீனிவாசன்