இங்கிலாந்தில் சில மாதங்கள்/அறிமுகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இங்கிலாந்தில் சில மாதங்கள்

அறிமுகம்

எங்கிருந்து தொடங்குவது; எதை எழுதுவது எதை விடுவது என்பதுதான் பிரச்சனை. பயணக் கட்டுரை என்றால் அதற்கு ஒரு ஆரம்பம் ஒரு முடிவு அமைய வேண்டும். நிறைய பொருள் வசதியும் உலகம் சுற்றும் இயல்பும் அறிந்தவற்றைத் தொகுத்து அதிசயிக்கத்தக்க வகையில் எழுத வேண்டும். ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற ஓர் ஆக்கப் படைப்பு முதல் முதலில் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றது. திரு. ஏ. கே. செட்டியார் இந் நூலை எழுதினார். இந்த நூலை எழுதுவதற்காகவே அவர் உலகம் சுற்றிப் பார்த்தாரா உலகம் சுற்றிப் பார்த்த பிறகு இந்த நூல் எழுதினாரா சொல்ல முடியாது.

அப்படி எழுதப்படும் நூல் அல்ல; பயணத்தைப் பற்றி எழுப்பப்பட்ட விசாரணைக்குத் தரப்படும் பதிலே இது. ஒரு தமிழாசிரியன் இந்த நாட்டுப் பண்பாட்டிலும் சிந்தனைகளிலும் வாழ்வியலிலும் வாழ்ந்து பழகிப்போன ஒருவன் புதிய மண்ணில் கால் வைத்து (கால் கீழே வைக்க முடியாது : குளிர் தேசம்) அங்குச் சில மாதங்கள் தங்கி எந்தத் தொழிலும் இல்லாமல் பொழுது போக்கிய ஒரு சோம்பேறித்தனமான வாழ்க்கையில் ஒட்டிக்கொண்ட சுவடுகள் சிலவற்றைத்தான் இங்குப் பதியவைக்க முடிகிறது.

‘வெள்ளையனே வெளியே போ’ என்ற குரல் கொடுத்த நாடு இது. அதாவது அவர்கள் நம்மை ஆண்டார்கள்; அடிமையாக்கினார்கள்; நம் செல்வம் கொள்ளை கொண்டு போகப்பட்டது. இங்கே விளையும் பருத்தி அங்கே சென்று ஆடைகளாக மாறி விற்பனை செய்யப்பட்டது; இங்கிருந்து அரசியல் ஆதிக்கத்தால் சுரண்டப்பட்டு வறுமை மிஞ்சி விடுதலை கெட்டு உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்க வீடும் இன்றி வறுமைக் கோட்டில் அவர்கள் நம்மை வாழவைத்ததாகக் குற்றச்சாட்டு.

அந்த வறுமை வாழ்விற்கு அவர்கள்தான் காரணம் என்றால் நம்மை நாம் ஆளும் இந்தச் சுதந்திர ஆட்சியில் நிலைமைகள் மாறி இருக்க வேண்டும், சுதந்திரம், ஜனநாயகம், சோஷியலிசம் என்ற இந்த மூன்று தத்துவங் ளில் இந்திய அரசியல் பரிணமித்தது. இது உலக நாடுகளின் முற்போக்குக் கொள்கைகளில் அடிப்படையானது. நாம் அன்றைய நிலையில் இருந்து பெரிய மாற்றத்தை உண்டாக்கித்தான் இருக்கிறோம். எப்படி? விவசாய நாடாக இருந்த இந்தப் பாரத தேசம் தொழில் வளர்ச்சி பெறும் நாடாக மாறி வருகிறது. வசதிகளைப் பெருக்கி வாழ வகை செய்துகொண்டு வருகிறோம்.

இத்தனை வளர்ச்சிகளுக்குமிடையே அவர்களோடு போட்டியிட்டுச் சரிசமமான நிலையை அடைந்தோமா அடைய முடிந்ததா அடைய முடியுமா என்ற கேள்விதான் எழுகிறது. அணுகுண்டு வீச்சால் அழிவுற்ற நாடுகளும் இன்று தொழில் வளத்தால் மிக வேகமாக முன்னேறியுள்ளன. ஜப்பான் இன்று உலக நாடுகளில் தொழில் வளம் மிக்க நாடாக விளங்குகிறது. மொத்தமாகச் சொன்னால் அந்த தேசங்கள் வளர்ச்சிபெற்ற நாடுகள் (developed countries) என்றும், நம் நாடு வளர்ச்சி பெறும் நாடு (developing country) என்றும் பேசப்படுகின்றன.

அவர்கள் திரை கடலோடியும் திரவியம் தேடினார்கள்; வணிகத்தில் தொழில் வளர்ச்சியில் இயந்திர சாதனத்தில் முன்னேறிவிட்டார்கள்; பெரிய நகரங்கள் படைத்துவிட் டார்கள்; வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வாழ்வது எப்படி என்று அறிந்து வாழ்கிறார்கள். இங்கே வாழ்வதே சரியல்ல; அது ஒரு மாயம்; மயக்கம் என்ற சித்தாந்தங்களுக்கு ஊடே ஒளி காண வேண்டியுள்ளது. விதியையும். மூட நம்பிக்கைகள் பலவற்றையும் கொண்டு வாழ்வில் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் பழக்கம் ஆகிவிட்டது. அங்கே கண்ட உயர்ந்த கட்டிடங்களையும் வியத்தகு சாதனைகளையும் எழுதிக் காட்டுவதை விட வாழ்க்கையின் அடிப்படைகளை மட்டும் எழுதுவதுதான் தக்கது என்ற அடிப்படையில் இந்த எழுத்து இயங்குகிறது.

அந்தப் புற மாற்றங்களை அடைய நாம் இன்னும் எவ்வளவோ காலம் உழைக்கவேண்டியுள்ளது. நம்முடைய போராட்டங்கள் பெரும்பாலும் உள் மனப் போராட்டங்களாக அமைகின்றன. அவர்கள் போராட்டங்கள் புறநிலைப் போராட்டங்கள். உற்பத்தி சாதனைகளைப் பெருக்கி அவற்றை மக்களுக்குப் பயன்படுத்தி மனிதன் வாழ்வதற்கு வேண்டிய தேவைகளையும் வசதிகளையும் பெருக்கிக்கொள்வதில் இயங்குகிறது.

இந்த அடிப்படையில் சில வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுவதே இந்த எழுத்தின் நோக்கமும் பயனுமாக அமையவேண்டும் என்று நினைக்கிறேன்.