இங்கிலாந்தில் சில மாதங்கள்/வீட்டு வேலைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வீட்டு வேலைகள்

தொழிலுக்கு அங்கு மதிப்புத் தரப்படுகிறது; வீட்டு வேலை செய்ய வெளியார் தேவை இல்லை; பெருக்க; சுத்தம் செய்யத் துணிகள் துவைத்து உலர்த்த; அவற்றை மடித்துப் பதிய வைக்க; குளியல் அறை சுத்தப்படுத்த வேலைக்காரி சில வீடுகளில் தேவைப்படுகின்றனர். பொதுவாக அவரவர் வேலைகளை அவர்களே செய்துகொள்கின்றனர்.

சாமான்கள் கழுவத் துலக்க இங்கே செய்வது போல அவ்வளவு வேலை இல்லை; அவற்றை அதற்குரிய சாதனத்தில் (இயந்திரப் பெட்டி) போட்டுவிட்டால் சுத்தமாகக் கழுவி ஒளிப்படுத்துகின்றன. அதேபோலத் துணிகளும் சாதனங்களே வெளுத்துத் தந்துவிடுகின்றன. அவற்றைப் படியவைத்து மடித்து வைக்கவே ஆள் தேவைப்படுகிறது. வீடுகளில் தரைகள் கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்டு இருக்கின்றன. வெறுந்தரையில் அவர்கள் நடப்பது இல்லை; கார்ப்பெட் விரித்து அவற்றின் மேல் சோபாக்கள் இட்டு அமர்கின்றனர். வீடு எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படுகிறது; தூசுகள் அந்தக் கார்ப்பெட்டுகளில் படிகின்றன. அவற்றை நாம் துடைப்பத்தால் பெருக்கு வதுபோல அங்குப் பெருக்கிக் கூட்டுவது இல்லை; பெருக்கல் கூட்டல் கழித்தல் முறை அங்கு இல்லை. ‘வாக்குவம் கிளீனர் பயன்படுத்தப்படுகிறது; அது மின்சாரத்தால் இயங்கும் கருவி; அதை வைத்தால் தூசுகள் உறிஞ்சப்படுகின்றன; துரசுகள் அகன்று துப்புரவு பெறுகின்றன. சமையல் வேலை வீட்டுக்குரியவர்களே செய்துவிடுகின்றனர். காஸ் அடுப்புகளும் மின்சாரப் பொறிகளும் சமையலை மிக விரைவில் முடித்துத் தருகின்றன. பொருள்கள் கெடாதபடி குளிர்ப் பெட்டிகளில் அவை வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. வேண்டும்போது அவை சூடுபடுத்தவும் அதற்குரிய மின்சாரப் பெட்டிகள் செய்து தருகின்றன. மின்சார சாதனங்கள் எல்லா வேலைகளையும் எளிதில் செய்துகொள்ள உதவுகின்றன.

வீடு எப்பொழுதும் சூட்டு நிலையில் வைக்கப்பட வேண்டும்; வெளியே கடுமையான குளிர்; வீட்டிற்குள் புகுந்தால்தான் குளிரின் தாக்குதலினின்று தப்ப முடியும். வீடு முழுவதும் வெந்நீர் குழாய்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் சூடாக அறைகளை வைத்துக்கொள்ள முடியும். அவை மட்டுமல்லாமல் மின்சாரச் சூடுபெருக்கிகள் அங்கங்கே பொருத்தப்படுகின்றன. கட்டைகளிலும் மின்சாரத்தால் கதகதப்பாக வைக்கப்படுகின்றன. வெளியே நடக்கும்போது நாம் அணிந்துகொள்ளும் கம்பளி அங்கிகள் நமக்குப் பாதுகாப்புத் தருகின்றன. ஒவ்வொரு வீடும் கடையும் நிறுவனங்களும் சூடு உற்பத்திச் சாதனங்களைப் பெற்று இருக்கின்றன.

வீட்டு வேலை செய்வது கவுரவத்தை விட்டுக்கொடுத்து எடுபிடி வேலை செய்யும் தாழ்வான தொழிலாக மதிக்கப் படுவதில்லை. எந்தத் தொழிலும் அந்த நாடுகளில் இழிந்தவை என்று கருதப்படுவதில்லை. அவரவர் தம் திறமைக்கும் பழக்கத்துக்கும் சாதனைக்கும் ஏற்பத் தொழில் நடத்துகின்றனர். எவரையும் அவர் செய்யும் தொழிலால் அதிகம் மதிக்கத் தேவை இல்லை. தோட்டத் தொழிலாளி கூட அவர் ஒரு தொழில் நிபுணராகவே மதிக்கப்படுகிறார். வைத்தியர்; இன்ஞ்சினியர் போன்றே அவரும் மதிக்கப்படுகின்றார். அவரவர் குறித்த நேரத்தில் வந்து மணிக்கணக்கில் வேலை செய்து தமக்குச் சேரவேண்டியதைப் பெற்றுச் செல்கின்றனர். வீடுகளைச் சொந்தக்காரர்களே தம் உழைப்பைக் கொண்டு கட்டிக்கொள்ளவும் செய்கின்றனர். அந்த அந்தத் தொழில் எப்படிச் செய்வது என்பது குறித்துப் புத்தகங்கள் அவர்களுக்கு வழிகாட்டுகின்றன. அது ஒரு விருப்பப் பொழுதுபோக்குத் தொழிலாக மேற்கொண்டு அவரவர்கள் அவரவர் வீட்டையும் கட்டிக் கொள்கின்றனர். வீட்டுக்கு வெள்ளையடித்தல், நிறம் தீட்டுதல் இவற்றிற்கு மற்றவர்களை எதிர்பார்ப்பது இல்லை.

கடிகாரம் தவறு செய்தாலும் வேலைக்காரிகள் நேரம் தவறுவது இல்லை; நேரம் தவறாமை என்பது அங்கு ஒரு நல்ல பழக்கமாக இருக்கிறது. எந்தத் தொழிலாளியும் ‘இந்த நேரத்திற்கு வருகிறேன்’ என்றால் அவன் கட்டாயம் வந்து தீருவான். எதிர்பாராமல் எந்த விருந்தாளியும் வீட்டுக்கு வருவதும் இல்லை; முன்கூட்டித் தொலைபேசியில் அறிவித்து விட்டு ஒப்புதல் பெற்றுக்கொண்ட பிறகே வீட்டுக்குள் நுழைவார்கள். ‘சும்மா வந்தேன் ; இந்தப் பக்கம் வந்து உங்களையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன் என்று சுற்றி வளைத்துப் பேசும் பழக்கங்கள் இல்லை.

விருந்தினர் வருவது என்றால் முன்கூட்டிச் சொன்னால்தானே அவர்களை வரவேற்க முடியும். சிற்றுண்டியோ உணவோ தர முடியும். விருந்தினர் தக்கபடி வரவேற்கப் பட்டு உணவு தந்து பின் அளவளாவுதல் அங்கு ஒரு நல்ல பழக்கமாகக் காணப்படுகிறது. காலையில் ஒன்பது மணி என்றால் சரியாக அந்த நேரத்துக்கு வந்து வேலைக்காரி கதவைத் தட்டுவாள். கடிகாரம் பிழை செய்யாது; குறிப்பிட்ட மணி நேரங்கள் குறிப்பிட்ட வேலைகளை ஒழுங்காகச் செய்து முடித்து வெளியேறுவாள்; வரும்பொழுது அவள் காரிலேயே வந்து இறங்குகிறாள், வசதியுடையவளாகவே காணப்படுகிறாள். விசாரித்துப் பார்த்ததில் அவள் கணவன் வேறு ஏதோ தொழில் செய்வான்; குழந்தைகள் ஒன்று இரண்டு இருக்கும்; கணவனை அனுப்பிவிட்டுக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டு இவள் வீட்டுக்கு வருகிறாள். அதாவது வீட்டில் இருந்து பொழுதை வீணாக்காமல் தானும் தொழில் செய்து பொருளீட்டும் நோக்கில் இதை ஒரு உப தொழிலாக ஏற்று நடத்துகிறாள் என்று தெரியவருகிறது. அந்தக் குறிப்பிட்ட நேரம் அவள் இந்த வீட்டில் தன் கடமைகளை ஒழுங்காகச் செய்து முடித்து விடை பெறுகிறாள். அவள் மிகக் கவுரமாக நடத்தப்படுகிறாள்; பணிவாகவே அவர்களிடம் வீட்டுத் தலைவி உரையாடுகிறாள். எண்ணிப் பார்க்கிறேன் நம் நாட்டு நிலைமையை; ‘வேலைக்காரி’ என்றால் பொதுவாக ஏழ்மையில் உந்தப்பட்டவள் என்பது இங்கு நடை முறை.

வீட்டுத் தலைவி தொழிலுக்குச் சென்றால் வீட்டில் இருந்து குழந்தைகளைக் கவனிக்கவும் ஒரு சிலர் உதவுகின்றனர். அவர்களுக்கு ‘குழந்தைக்கு அமர்வோர்’ (baby sitter) என்று பெயர், அவர்களும் மணிக்கணக்கிட்டு ஊதியம் பெறுகின்றனர்.