இங்கிலாந்தில் சில மாதங்கள்/அழகுக்கும் கற்பனைக்கும் முதலிடம்

விக்கிமூலம் இலிருந்து

அழகுக்கும் கற்பனைக்கும் முதலிடம்

‘கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ ‘சுத்தம் சோறு போடும் இந்தப் பழமொழிகள் நாம் நம் வீட்டையும் நம்மையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை உணர்த்துகின்றன. அங்கே குளிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படுவதில்லை; வியர்வையே காணமுடிவதில்லை; துணிகளும் அழுக்காவது இல்லை; ஏன் வியர்வை வந்தால் தானே துணி அழுக்குப்படிகிறது, மற்றும் சுற்றும் தூசுகள் எழுவதில்லை. அதனால் துணிகள் மாசுகள் படிவதில்லை; துணிகள் துவைக்க அதற்கு வேண்டிய மின்சார சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. அவை துவைத்து ஆரவைக்கின்றன. கசக்கிய உ.டைகளைப் படியவைத்துப் பெட்டி போட்டுத்தான் உடுத்திக்கொள்கிறார்கள். படிப்புக் கலையாத உடை உடுத்துவது மற்றவர்களை மகிழவைக்க என்பது அடிப்படை; வீட்டில் எப்படி இருந்தாலும் கவலை இல்லை. வெளியே சென்றால் செம்மையாக உடுத்துவது என்பது அவர்கள் அன்றாட வாழ்க்கை முறை.

அங்கே மூன்று நிற மக்களைக் காணமுடிகிறது; சுதேசிகள் அவர்கள் வெள்ளையர்கள்; நீக்ரோக்கள் கருப்பர்கள்; இந்தியர்கள் அவர்கள் நிறம் இன்ன நிறம் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது; கருப்பும் அல்ல; வெளுப்பும் அல்ல; சிகப்பும் அல்ல; அதனால் அவர்களை எப்படி அழைப்பது? சிக்கலான நிலைமைதான், நாம் பொதுவாகப் பல்வகை நிறம் பெற்றிருப்பதால் நிற இனம் (Coloured people) என்று அழைக்கப்படுகிறோம்.

வெள்ளையர்களுக்குக் கருப்பு நிறம் என்பது வெறுக்கத் தக்க நிறம் அல்ல; நீக்ரோக்களை அவர்கள் விரும்பி அவர்களோடு பழகுகின்றனர். இணைந்தும் வாழ்க்கை நடத்துகின்றனர். அதற்கு மற்றுமோர் காரணம் இருக்கிறது. கலாச்சாரத்தில் மொழியில் இருவருக்கும் வேறுபாடற்ற நிலைமை என்றுதான் கூற முடியும். ஒரே பள்ளியில் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வதும் வேறுபாடு இல்லாமல் பழகுவதும் காரணமாக இருக்கலாம்.

இயற்கை அவர்களுக்கு வெள்ளை நிறத்தைத் தந்திருக்கிறது; ஊட்டமான உணவு; வாட்டமான உடல்கட்டு; சுருசுருப்பான போக்கு; செழுமையான மனோநிலை ஒருவரைப் பார்த்தால் மற்றவர்களைப் பார்க்க முடியாது; பொதுவாக நம் நாட்டில் அழகு பேதங்களுக்கு நிறம் அடிப்படையாகிறது; அங்கே அனைவரும் நல்ல கவர்ச்சியான நிறம் பெற்றிருப்பதால் அநேகமாக எல்லோரும் அழகாகவே இருக்கின்றனர். முக வெட்டு மூக்கு உயரம் எல்லாம் கவர்ச்சியாகவே இருக்கின்றனர். என்னோடு ஐரோப்பியப் பயணம் வந்த தமிழ் நாட்டு நண்பர் ஒருவர் சொன்னது குறிப்பிடாமல் இருக்க முடியாது. “இங்கிலாந்தில் பெண்கள் அழகாக இருக்கிறார்கள்; என்றாலும் பேதமில்லாமல் ஒரே வகையாக இருக்கிறார்கள். மிகச் சிறந்த பேரழகிகள் என்று கூறமுடியாது என்றார்.

அப்படியானால் அவர் மதிப்பீட்டின்படி வேறு ஓர் கருத்து தைத்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவர் ஜெர்மனியில் இந்த வார்த்தை சொன்னார். பாரிஸ் பெண்கள்தான் உலகத்திலேயே பேரழகிகள். ஒருவருக்கொருவர் வேறுபாடு இருக்கிறது என்று சுட்டிக் கூறினார்; அவர் மதிப்பீடு வியப்பைத் தந்தது.

என்னைப் பொறுத்தவரை ஜெர்மனிய நாட்டுப் பெண்கள் நல்ல உடற்கட்டும் அழகும் பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஜெர்மனி நல்ல வளம் மிக்க பூமி; உயரம்; கட்டான உடல்: இலை அவர்கள் கவர்ச்சிக்குக் காரணம் என நினைக்கிறேன்.

அங்கே அவர்கள் முழு வெள்ளை நிறத்தை விரும்புவதில்லை; அது பழுப்பு நிறம் பெறுவதைப் பெரிதும் விரும்புகிறார்கள். சற்று வெய்யில் காணப்பட்டால் கதிரவன் தன் ஒளிக்கதிர்களைச் சூடாக அள்ளிச் சொரிந்தால் அவர்களுக்குக் கொள்ளை மகிழ்ச்சி; பூங்காக்களில் வெட்ட வெளியில் கடற்கரை ஓர மணற்பாங்கில் குப்புறப் படுத்தும் அவர்கள் தம் ஆடைகளை அப்புறப்படுத்தித் தேவையான அளவு உடலை மறைத்துச் சூடுபடுத்திக்கொள்கின்றனர். அதற்காகவே அவர்கள் விடுமுறைகள் எடுத்து நாளெல்லாம் காய்ந்து நிறத்தைப் பதப்படுத்திப் பழுப்பு நிறமாக்கி அதைப் பெருமையாக மற்றவர்களுக்குச் சொல்லிக்கொள்கின்றனர்.

வயது அதிகம் ஆக அதைக் குறைத்துக் காட்ட எவரும் பாடுபடுவது இயற்கை; இதழ்கள் சிவப்பாக இருக்க நிறம் தீட்டப்படுகின்றன. வெளியில் வரும்பொழுது ஒப்பனை இன்றி அவர்கள் வெளிவர விரும்பமாட்டார்கள், வயது மிக்க முதியவர்களும் தம்மைப் பூசிக்கொள்வதில் பின் வாங்குவதில்லை. அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவள் ஒருத்தி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் தொடையில் உள்ள தோலை முகத்திற்கு மாற்றி இளமைக் கோலத்தைப் பெறச் செய்யும் முயற்சிகள் அங்கு; அங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் மேற்கொள்ளப் படுகின்றன என்று கேள்விப்பட்டேன். நரை திரை இவற்றை மாற்ற முடியும் என்பதற்கு அவர்கள் சவால் விடுகின்றனர்.