இங்கிலாந்தில் சில மாதங்கள்/சுமக்கிறவன் இல்லை

விக்கிமூலம் இலிருந்து

சுமக்கிறவன் இல்லை

ரயிலடியில் விமான நிலையத்தில் கடை அங்காடிகளில் மூட்டைகளைத் தூக்க அங்குக் கூலியாட்களைக் காண முடியாது; இதைப் பலர் பயண நூல்களில் குறிப்பிட்டும் உள்ளனர். காரணம்? அந்த அவசியம் அங்கு ஏற்படவில்லை; அங்கங்கே தள்ளுவண்டிகள் அந்த நிறுவனங்கள் வைத்து இருக்கின்றன. பெட்டிகளுக்கும் உருளைகள் வைத்து இழுத்துச் செல்லும் அமைப்புகள் ஏற்பட்ட பிறகு கூலி போர்ட்டர்கள் தேவை இல்லாமல் போய்விடுகிறது. இங்குச் சென்னை விமான நிலையத்திலும் அந்த நிலை ஏற்பட்டுவிட்டது. அவரவர் சுமைகளை அவரவரே தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிச் செல்கின்றனர். அந்த அளவுக்குத் தரைகளும் ஒழுங்காகச் செப்பனிடப்பட்டுள்ளன என்பதும் அறியவேண்டிய ஒன்று. மேலே செல்ல ஊக்கிகள் (lifts}, படி ஏற்றங்கள் (Escalators) அமைந்திருக்கும்போது தொடர்ந்து செயல்படும்போது எதையும் தாங்கும் சுமை தாக்கிகளாக அவை அமைந்துவிடுகின்றன.

வீட்டைச் சுற்றி அவர்கள் உலகம்

வீட்டை அழகுபடுத்துவது வசதிகளைப் பெருக்குவது என்பது அங்கு வாழ்க்கைச் சித்தாந்தம். ஒவ்வொரு வீடும் முன்னும் பின்னும் புல்வெளியும் தோட்டமும் பெற்றுப் பசுமைக் காட்சியைத் தோற்றுவிக்கிறது. வீட்டு முன்னால் கண்ணைப் பறிக்கும் வண்ண மலர்கள் நிறம் ஊட்டுகின்றன. ரோஜாப்பூக்கள் பல நிறங்களில் பூத்துக் காட்சியளிக்கின்றன. அவற்றை யாரும் வழிப்போக்கர்கள் கிள்ளுவது இல்லை. அள்ளிச் செல்ல நினைப்பதும் இல்லை. வேலி இல்லாத வீடுகளைக் காணலாம்; தடுப்பதற்கு வேலிகள் தேவை இல்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகைப் பூ மணக்கிறது என்பதால் அதைப் பறித்து நாம் நுகர வேண்டும் என்ற கோட்பாடு அங்கு இல்லை.

வீட்டு அறைகளில் ஓர் ஒழுங்கு இருக்கிறது. சமையல் அறை; முகப்பு அறை, படுக்கை அறைகள்; குளியல் அறைகள் எல்லாம் தனித் தனியே தக்க அமைப்புப்பெற்று விளங்குகின்றன. ஒரு வீட்டில் பல குடித்தனக்காரர்கள் என்ற அந்த அமைப்பு முறையை அங்குக் காணமுடியாது, நகரங்களில் இட நெருக்கடி காரணமாக இங்கு அந்த அமைப்புகள் இடம்பெற்று இருக்கின்றன. ஆளுக்கு ஒரு வீடு; அவர்களுக்கு ஒரு குடும்பம். அங்கு எல்லா வசதிகளும் இடம் பெறுகின்றன. தொலைக்காட்சிகள், தொலைபேசிகள், வீட்டு முன்னால் அவர்கள் பயன்படுத்தும் கார்கள் இவை சராசரி வாழ்க்கையுடையவர்களின் வசதிகள். வீட்டிலே தொலைக்காட்சிகள் ஒரே நிலையத்திலிருந்து வருவதில்லை, பல நிலையங்கள் ஒளிபரப்புகின்றன. காலை முதல் இரவு வரை தொடர்ந்து செயல்படுகின்றன. திரை அரங்குகள் மிகமிகக் குறைவு; அருகிவிட்டன.

உண்பது, உடுத்துவது, உறங்குவது இந்த மூன்றையும் திருத்தமுறச் செய்வது அவர்கள் நாகரிகம்; பழக்கம்; வாழ்க்கைமுறை. உணவு அருந்துதல் ‘வட்டமேஜை’ மாநாடு கூட்டப்படுகிறது. நடுவில் மேஜை உணவுப் பொருள்கள் மேலே தனித்தனிக் கிண்ணங்களில் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. எது வேண்டுமோ அதை நாமே பறிமாறிக்கொள்கிறோம். உண்ணும்போது மேஜைமேல் ஒரு பருக்கையும் சிதறக்கூடாது; கைகள் அவற்றின் சுவையைப் பருகக்கூடாது, கரண்டிகள், கத்திகள் தட்டுமுட்டுச் சாமான்கள் அத்தனையும் போர்க்களக் கருவிகள் ஆகின்றன. என்றால் அவர்கள் அடித்துப் பிடித்துக்கொள்கின்றனர் என்பதல்ல பொருள்; இறைச்சி, மீன், கோழி, புலவு இந்த அசைவ உணவுகளுக்கு அவை பெரிதும் தேவைப்படுகின்றன.

இலையில் போட்டுக்கொண்டு தரையில் மணை இட்டு ஆர அமரக் கரங்களுக்கு வேலை தருவது நம் நாட்டுப் பழக்கம்; ‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ உண்ணல் சுவைப்பாடல்; ஆண்டாள் திருப்பாவையில் இடம் பெறுகிறது. மேல்நாட்டு முறை நடுத்தர மக்களின் இல்லங்களிலும் இப்பொழுது அரை குறையாக இடம் பெற்-றுள்ளது. ‘டைனிங்க் டேபிள்’ சுற்றியும் நாற்காலிகள் இந்த அமைப்பு நகர வீடுகளில் கிராமிய உயர் நிலை வீடுகளில் இடம் பெற்றுள்ளது. மேலை நாட்டு நாகரிகப் போக்கு என்பது சொல்லத் தேவை இல்லை.

உடுப்பது அவர்களுக்கு அவசியமான ஒன்று; மானத்தைக் காக்க மட்டுமல்ல; குளிரினின்று தற்காப்புப் பெற: மற்றவர்கள் தம்மைப் பார்க்கும்போது மகிழ்வு ஊட்ட; ‘உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்’ இது தமிழரின் ஞானிகளின் சிந்தனைப் போக்கு; நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு இது ஏற்கலாம்; அங்கு உடம்பு முழுதும் பருத்தி ஆடை.யால் அல்ல; கம்பளி ஆடையால் சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்; பெண்கள் ஆண்களைப் போல் கை வெட்டு கால்வெட்டு இவற்றோடு கூடிய சட்டைகளைக் கால் அங்கிகளை மாட்டிக்கொள்கின்றனர். அது அவர்களுக்கு ஆண்களைப் போல நடக்கப் பழகச் சாதகமாக உதவுகிறது. பதினாறு முழம் புடவையில் உடல் முழுவதும் மூடிக்கொள்ளும் நிலையில் நம் புடவைகள் பயன்படுகின்றன. இந்த ஆடையில் நம் பெண்கள் அங்குச் செல்லும்போது அவர்கள் வியப்பாகப் பார்க்கின்றனர். நம் நாட்டுத் தையல்கள் தையல்காரரிடம் அதிகம் போகத் தேவையில்லை; ஜாக்கெட் பிளௌஸ் இதற்கே நடையாய் நடக்கவேண்டியிருக்கிறது.

நம் நாட்டைப் போல் தையற்காரர்கள் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் தயார் (Readymade) செய்யப்பட்டவை; அவரவர் வயது, உயரம், அளவு இவற்றைக்கொண்டு அங்காடிக்குச் சென்றால் இந்த அளவுக்கு இந்த உடை என்று அட்டவணை காட்டப்படுகிறது; அந்த அளவு (Size) சொன்னால் நம் உடையை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். அவை ‘ஹாங்காங்’ போன்ற இடங்களில் பெருமளவில் தைத்துக் கொணரப்படுகின்றன, 'சிகை அலங்காரம்’ அவர்கள் பெரிதும் கவனம் செலுத்துகின்றனர். மயிர் முடி வெட்டும் அலங்காரக் கடைகளில் பெண்களே பெரிதும் பணி செய்கின்றனர். அவர்கள் அந்தத் தொழிலில் கற்றுத் தேர்ந்து நற்சான்று இதழ்கள் வாங்கியவர்கள். டாக்டர்கள் தகுதி பெற்றால்தான் அந்தத் தொழில் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கும் சான்றிதழ்கள் பெற்றவர்களே அனுமதிக்கப்படுகின்றனர். இருக்கவே இருக்கிறது ஒரு சலூன் வைத்துப் பிழைத்துக்கொள்ளலாம் என்று எளிதாகப் பேச முடி யாது; பயிற்சி பெற்றவர்கள் நடத்தும் ஒப்பனைத் தொழில் அது.

பெண்கள் மயிர் முடி ஒப்பனைக்கு அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அடிக்கடி முடி ஒப்பனையை (Style மாற்றிக் கொண்டே இருப்பதில் இளம் தலைமுறையினர் ஆர்வம் செலுத்துகின்றனர். அவற்றிற்கு நிறமும் ஊட்டுகின்றனர். சலூன்களில் ஆண்களும் மயிர்முடி வெட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் அங்கே முக க்ஷவரம் செய்து கொள்ள முடியாது; அவர்கள் செய்யமாட்டார்கள். கத்திரி பிடிப்பார்களே தவிரக் கத்தி பிடிப்பது இல்லை; அவர்கள் தானே வீட்டில் சுய மழித்தல் செய்து கொள்ள வேண்டியதுதான்.

உறங்குவதற்கும் அவர்கள் தக்க வசதிகளைச் செய்து கொள்கிறார்கள், கட்டாந் தரையில் பாய் போட்டுப் படுத்துக்கொள்ள முடியாது; உடல் சில்லிட்டுப் போகும்; பஞ்சு மெத்தைகளும், கெட்டித் துப்பட்டிகளும், பஞ்சுப் போர்வைகளும் அவர்களுக்குச் சூடு தருகின்றன. குழந்தைகளைத் தம் அறையில் படுக்கவைப்பது இல்லை. அவர்களைத் தனி அறையில் படுக்கவைக்கிறார்கள். தம் பக்கத்தில் போட்டுக்கொண்டு தாய்மார்கள் அரவனைத்து உறங்க வைப்பது இல்லை. நம் இந்தியக் குடும்பங்களும் அங்கே இந்த மேல் நாட்டுப் பாணியைப் பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு எத்தனை படுக்கை அறைகள் தேவைப்படுகின்றன என்பதை ஒட்டி அவர்கள் வீடுகளைத் தேடிக் கொள்கிறார்கள். மணமான ஆரம்பத்தில் தனக்கும் தன் துணைவிக்கும் எனச் சிறு வீடு எடுத்துக் கொள்கிறார்கள். அல்லது விலைக்கு வாங்குகிறார்கள். வீடு வாங்கக் கடன் வசதிகள் நிறையக் கிடைக்கின்றன. குடும்பம் பெருகுகிறது. படுக்கை அறைகள் விரிவு அடைகின்றன. வீடுகளை மாற்றிக் கொள்கிறார்கள். தம் பிள்ளைகள் வயது வந்ததும் பறக்கும் பறவைகளாக, அந்தக் கூடுகளை விட்டுச் செல்கின்றனர். மறுபடியும் அவர்கள் இருவராகக் குறைகின்றனர். வீடும் சிறிதாகிவிடுகிறது. தேவைக்கேற்ப வீட்டின் பெருமையும் சிறுமையும் அமைகின்றன. வீடு இல்லாத குடும்பமே இல்லை; நடைவாசிகள் தெருவாசிகள் இந்த அவல நிலைகளை அந்தத் தேசங்கள் எங்கும் காணமுடியாது.