இதன் விலை - ரூபாய் மூவாயிரம்/சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்
1949-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 4-ம் நாள் வெள்ளிக் கிழமை.
- கனம் திரு. பக்கால வெங்கட ராஜமன்னார் பிரதம நீதிபதி.
- கனம் திரு. நீதிபதி பஞ்சாபகேச சாஸ்திரி.
- கனம் திரு. நீதிபதி சந்திரா ரெட்டி.
ஓ, பி. நீ, 283–(1949)
1931-ம் வருடத்திய இந்தியப் பத்திரிகைகள். (அவசரச்) சட்டத்தின் 23-வது பிரிவின்படிக்கு.
காஞ்சீபுரத்திலிருந்து வெளிவரும் தமிழ் வார வெளியீடாகிய "திராவிட நாடு" பற்றி.
மனுதாரர்
பிரதிவாதி
சி.என். அண்ணாதுரை
மனுதாரர்
நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் விவரம்:-
1949-ம் வருடத்திய ஒ. பி. நீ. 293.
மனுதாரர் காஞ்சீபுரத்தில் அச்சாசி வெளியிடப்பெறும் "திராவிடநாடு" தமிழ்வார வெளியீட்டின் ஆசிரியரும் வெளியீட்டாளருமாவார். செங்கற்பட்டு மாவட்ட நீதிபதியிடம் 1949 ஜூ-ன் 25-ந் தேதிக்குள்ளாக ரூ. 3000 ஜாமீன் தொகை கட்டியாக வேண்டுமென்று தனக்கு மாகாண சர்க்கார் 25-5-1949-ந் தேதியிட்டுப் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டு மென்பது மனுதாரரின் தாவாவாகும். மனுதாரரின் 4-4-48 18-4-48 தேதியிட்ட இதழ்களில் 1981-ம் வருடத்திய இந்தியப் பத்திரிகைகள் (அவசரச்) சட்டத்தின் 4-வது பிரிவைச் சேர்ந்த (1)-வது உட்பிரிவின் கீழ்வரும் (யெச்) சிறு பிரிவின் கீழ் விவரிக்கப்படுவதை யொத்த தன்மை வாய்ந்த விஷயங்கள் அடங்கியிருக்கின்றக் என்பதாகக் காரணங்காட்டி மாகாண சர்க்கார் மேற்கண்ட உத்தரவை ௸ சட்டத்தின் 7-வது பிரிவைச்சேர்ந்த (3) உட்பிரிவின்கீழ் பிறப்பித்துள்ளனர்.
மேல் குறிப்பிடப்பெற்ற இரு இதழ்களிலுமிருந்தும் ௸ உத்தரவுக்குக் காரணமான பகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பெற்று அவ்வுத்தரவுடனேயே இணைக்கப்பட்டிருந்தன. மனுதாரர் இவ்விண்ணப்பத்தை ௸ சட்டத்தின் 23-வது பிரிவின் கீழ் சமர்ப்பித்துள்ளார். இந்நீதிமன்றம் தீர்ப்புக்கூற வேண்டியது இதுதான். இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப் பெற்றிருக்கும் அப்பத்திரிகையில் ௸ சட்டத்தின் 4(1) (யெச்) பிரிவின் கீழ் விவரிக்கப்படுவதை யொத்த தன்மை வாய்ந்த சொற்கள் எவையும் காணப்படுகின்றனவா இல்லையா என்பதேயாகும்.
4(1) (யெச்) பிரிவின் வரையறைக்குள் விவரிக்கப்படும் சொற்கள்:
"மன்னர்பிரான் குடிமக்களாகிய பல்வேறுபட்ட வகுப்பினரிடையே பகைமை யுணர்ச்சியையோ வெறுப்புணர்ச்சியையோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ வளர்க்கக் கூடிய்" சொற்களாகும்.
மூலாதார விதியோடு கூடிய 4-வது விளக்கம் கூறுவ- தாவது:--
"மன்னர் பிரானின் குடிமக்களாகிய பல்வேறுபட்ட வகுப்பினரிடையே பகையுணர்ச்சியையோ வெறுப்புணர்ச்சியையோ வளர்க்கின்ற அல்லது வளர்க்கும் தன்மைவாய்ந்த விஷயங்களைக் குறிப்பிடுகின்ற சொற்கள், கெட்ட எண்ணத்தோடன்றி அத்தகைய விஷயங்கள் அகற்றப்படவேண்டுமென்ற நன்னோக்கத்தோடு உபயோகப்படுத்தப்பட்டிருந்தால், அத்தகைய சொற்கள் இவ்வுட்பிரிவின் (யெச்) விதியில் விவரிக்கப் பெற்றுள்ளனவற்றைப்போன்ற சொற்களாகக் கருதப்படமாட்டா."
இத்தகைய மனுவொன்று போடப்பட்டிருப்பதை யொட்டி நீதிமன்றமானது கட்டுரையின் தனித்தனியான அரைகுறைப் பகுதிகளிலோ சொற்றொடர்களிலோ சொற்கோர்வைகளிலோ முழுக்கவனத்தையும் செலுத்தாது கட்டுரை முழுவதையும் நேர்மையான முறையில் விருப்பு- வெறுப்பின்றி நடுநிலைமையில் நின்று படித்துத் தெளிந்து ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியமென்பது வெளிப்படை. அப்பத்திரிகையைப் படிக்கக்கூடியவர்களுக்கு மேற்படி முழுக்கட்டுரையும் விளைவிக்கும் பொதுவான தன்மை எதுவாக இருக்கக்கூடுமென்பதை நீதிமன்றம் யோசித்துத் தீர்மானித்தல் வேண்டும். வார்த்தைகள் ஜோடனையும் -- புனைந்துரையும் -- மிகைபடக்கூறலும் -- வேகத்தைக் கிளப்பக்கூடிய எழுத்து வீச்சும் கவனிக்கப் பெறவேண்டியவையே; ஆனாலும்கூட, அவற்றைக் கொண்டுமட்டுமே கட்டுரையொன்று யாதொரு சட்டத்தின் வரையறைக்குள் வந்துவிடுகிறதென சொல்லிவிடுதல் முடியாது.
சர்க்கார் உத்தரவின் அனுபந்தத்தில் மேலே குறிப்பிட்ட இரு தேதிகளில் வெளியான இரண்டு கட்டுரைகளிலிருந்து இருபகுதிகள் தரப்பட்டுள்ளன; முதல் பகுதி: "காந்திராம சாமியும்--பெரியார் ராமசாமியும்" என்று தலைப்பிடப்பெற்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அது ஓரளவு நீண்ட கட்டுரையேயாகும்; ஆனால் சர்க்கார் உத்தரவு அனுபந்தத்தில் கட்டுரையின் சிற்சில பகுதிகளே தொகுத்துத் தரப்பட்டுள்ளன. முழுக்கட்டுரையின் போக்கையும் நாங்கள் கண்டோம்; சர்க்கார் சார்பில் வாதிக்க ஆஜராயிருக்கும் அட்வகேட் ஜெனரல்கூட அனுபந்தப் பகுதிகளைமட்டுமே வைத்து வாதாட வில்லை. இக்கட்டுரை எழுந்ததின் நோக்கம் என்னவென்பது தெற்றெனத் தெரிகிறது. 1948-ம் ஆண்டு ஏப்ரலில் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேர்ந்தெடுக்கப்பெற்றதையொட்டியதே இக்கட்டுரை. அத்தேர்தலில் எதிர்த்து நின்ற அபேட்சகர் டி. பிரகாசம் ஆவர். ராமசாமி ரெட்டியாரின் நற்பண்பியல்புகளுக்குப் புகழுரை புகன்று, கட்டுரை ஆரம்பமாகிறது. "அத்தகைய ஒரு மனிதருக்கு எதிர்ப்பு இருப்பானேன்?" என்று மேற்கொண்டு ஒரு கேள்வியைப் போடுகிறது கட்டுரை. ராமசாமி ரெட்டியாரை எதிர்த்து நின்றவர் பிறிதொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவரல்லரென்பதையும் அவர் கட்சிக்காரரே அவரை எதிர்த்து நின்றாரென்பதையும் கட்டுரையாளர் குறிப்பிட்டு எழுதுகிறார். 'அவர் பொருத்தமானவரல்லலர்; அவரது கொள்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று' என்பதாக எதிர்த்து நிற்பவர்சார்பில் காரணங்கூறப்பெற்றிருந்தால் இந்நிலை ஏற்படடிருக்கப்போவதில்லை. கட்டுரையாளர் கூறும் முறையிலேயே அக்கட்டுரைப் பகுதியின் உட்கருத்தைக்காண்போம்:--
கட்டுரையின் ஏனையபகுதி அன்றைய நடப்புகளையும் நிகழ்ச்சிகளையும் பற்றிய விளக்கமாகும். சட்டசபைக் காங்கிரஸ் கட்சியிலுள்ள சுயநல பிராமணக் கும்பலொன்றின் தந்திர சூழ்ச்சிகளும் "ஜாதிப்பித்துமே" இவ்வெதிர்ப்புக்குக் காரணமென்பதை எடுத்துக்காட்டு முகத்தான் அவ்விளக்கம் தரப்பட்டுள்ளது. ராமசாமி ரெட்டியார் வெற்றிபெற்றாரென்று அறிவிக்கப்பட்டவுடனடியாக நேரிட்டதாகக் கூறப்படும் நிகழ்ச்சியொன்றைப்பற்றி கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். வெளியில் கூடியிருந்த மக்கள், தேர்தல் முடிவு அறிவிக்கப் பட்டதும் " பிராமணர் (பார்ப்பனர்) என ஒழிக " முழக்கமிட்டனராம். இப்போட்டிக்குக் காரணமே பிராமணர்கள் தானென்பதை மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்களாகையால் தான், தேர்தல் முடிவு தெரிந்ததும் முழக்கமிடலாயினரென்று கட்டுரையாளர் கூறுகிறார், மக்கள் நினைத்ததும் சரியென்பதே அவர் கருத்து. பிராமணர்--பிராமணரல்லாதார் பிரச்னையை முன் வைத்தே அப்போட்டி நிகழ்ந்ததென்றும் தெளிவுறுத்துகிரார். ஒமந்தூர் ரெட்டியார் கட்சியிலேயே ஒரு தனிக்கூட்டம் இருக்கிறதென்றும். ஒருவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அக்கூட்டத்துக்குக் கவலையில்லையென்றும் பிராமணர் ஆதிக்கத்துக்கு ஆதரவுதராத எத்தகையவரையும் பதவியிலிருந்து இறக்கி தங்களுக்குப் பயன்படக்கூடிய ஒருவரையே அவ்விடத்தில் அமர்த்துவது என்ற எண்ணம் படைத்தது அக்கூட்டம் என்றும் கட்டுரையாளர் கருதுகிறார். கட்டுரையின் முடிவில் "திராவிட ராமசாமி" யைப்பற்றிக் குறிப்பிடப்படுகிறது. "திராவிட ராமசாமி" என்றது ஈ. வெ. ராமசாமி நாயக்கரைத்தான். கட்டுரையாளர் கூறுகிறார்:--
பிராமணர்-பிராமணரல்லாதார் என்ற வேறுபாடு கருதாது அனைவருமே இந்தியத்தாயின் சேய்கள் என்பதாகக்கூறி பெருமகிழ்வும் பெருமிதமும் கொண்டு நின்ற ராமசாமி ரெட்டியார் போன்ற ஒருவருக்கு எதிர்ப்பு இருப்பதா என்று மனம் நைந்து வருந்துகிறார் கட்டுரையாளர்.
சட்டசபை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களோ இல்லையோ, பிராமண சமூகத்தைச் சேர்ந்தோர் அனைவரும் கட்டுரையில் கடிந்துரைக்கப்பட்டுள்ளனரென்பதாக அட்வகேட் ஜெனரல் தனது விவாதத்தில் குறிப்பிட்டுள்ளார். கட்டுரை முழுவதையும் படித்துப் பார்த்த எங்கட்கு இவ்விவாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. சட்ட சபைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிராமண உறுப்பினர்கள் பிராமண சமூகத்தின் பிரதிநிதிகளேயாவரென்று அட்வகேட் ஜெனரல் வலியுறுத்த முயலுகிறார். இது உண்மைக்கு மாறானதாகும். இவ்விவாதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வதற்கில்லை. பிராமணர்களுக்கெனத் தனித் தொகுதி கிடையாது; அதுவன்றியும், எந்த சமூகத்தினுடையவும் பிரதிநிதிகளாக எவ்வபேட்சகர்களையும் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு நிறுத்தவில்லை. காங்கிரஸ் லட்சியக் கோட்பாடுகளைக் கொண்டோரென்ற பொதுவான திட்டத்தின் மீதே சட்டசபைக் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக்கொண்டே அவர்கள் சட்டசபையில் அக்குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கிறார்களெனக்கூற முற்படுவது சரியானதல்ல. சிற்சில சமயங்களில் பிராமண வகுப்பைச்சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் சமுதாய சம்பந்தமான பிரச்னைகள் சில பலவற்றில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெருவாரி மக்களுக்கு மாறான கருத்துக்கள் கொண்டு திகழ்வதை சாதாரணமாகக் காண்கிறோம். அக்கட்டுரையில் பிராமண வகுப்பைத் தாக்கியிருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை, ராமசாமி ரெட்டியாரைத் தலைமைப் பதவியினின்றும் கவிழ்த்தே தீருவதெனத் திட்டமிட்டு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு கூட்டம் வந்ததாக அடுத்தடுத்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. கட்டுரையில் கட்டுரையாளரின் கருத்துப்படி இக்கூட்டத்தில் பிராமணர்களே அடங்கியிருந்தாலும் இருக்கலாம். ஆனால் இது கொண்டே அக்கட்டுரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கு மிடையே பகைமையையும் வெறுப்பையும் வளர்த்துவிடுமெனக் கூறுதற்கியலாது.
இரண்டாவது கட்டுரை முதற் கட்டுரையை விட சற்று நீண்டதேயாகும். ஆனால் சர்க்கார் உத்தரவோடு கூடிய அனுபந்தத்தில் கடைசி சில பாராக்களே தொகுத்துத் தரப் பட்டுள்ளன. வகுப்புவாதம் பற்றி விளக்கம் தந்துரைப்பதாக அமைந்திருக்கிறது அக்கட்டுரை கட்டுரையின் பெரும்பகுதி, குறிப்பாக அதன் முற்பகுதி எவ்வகையிலும் தீதிழைப்பதாக இல்லையென்று அட்வகேட் ஜெனரலே நேரிய முறையில் கூறியுள்ளார். கட்டுரையின் போக்கையுணர்த்த ஒரு சில பகுதிகளே போதுமானது.
பின்னர், கட்டுரையாளர் சமூக நீதிக்காக பேராட்டம் பற்றிப் பேசப் புகுந்து, 'வகுப்புவாதி' என்ற சொல்வகுப்பு நீதிக்காகப் பாடு படுவோரைத் தூற்றும் வகையிலேயே உபயோகிக்கப்படுகிறதெனக் கூறுகிறார். ஹிந்து சமுதாயத்தில் பெரு வாரியான மக்கள் பிராமணரல்லாதாரேயென்றும், பிராமணர் சிறு பான்மையினரேயென்றும் குறிப்பிட்டு, ஆனால் அப்பெருவாரி மக்களே௸சிறுபான்மையானவரை உயர் ஜாதிக்காரர்களாக நினைந்தொழுகி வருகிறார்களென்றும் கட்டுரையாளர் நடப்பை எடுத்துக் காட்டுகிறார். சாஸ்திர சம்பிரதாய பழக்க வழக்கங்களை யொட்டியே இந்நிலை நீடித்து வருகிறதென்றும் இதன் காரணமாகவே பெருவாரியான மக்கள் கல்வி—தொழில்—பொருளில்—அரசியல்—மதியல இன்ன பிறதுறைகளில் உரிய அளவு வாய்ப்பு வசதிகள் கிடைக்கப் பெறாதவராய் நிற்க, சிறுபான்மை வகுப்பினராகிய பிராமணர்கள் அனைத்து துறைகளில் பெருத்த அளவுக்கு முன்னேற்றங்கண்டுள்ளனரெனக் கட்டுரையாளர் மேலும் கூறுகிறார். சமூகநீதிக் கோரிக்கையை முற்ற விட்டால் தங்கள் ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்துகிட்டுமென்றுணர்ந்த பிராமணர்கள் நீதி வேண்டி நின்றோரை "வகுப்பு வாதிகள்” என்று கூறலாயினர். கட்டுரையாளர் இவ்விதம் குறிப்பிட்டு, அக்கருத்துக்கு அரணாக "தினசரி", "விடுதலை" போன்ற பத்திரிகளினின்றும் மேற்கோள் பகுதிகளை எடுத்துக் காட்டி விளக்குகிறார். கடந்த பல ஆயிரம் ஆண்டாண்டுகளாகப் பரவி, ஊன்றி, பெருவாரி மக்கள் கூட்டத்தினரை "பிறவி அடிமைகளாகவும்" "நடைப் பிணங்ககளாகவும்" ஆக்கி விட்ட இம்முறை அடியோடு அழிக்கப் பெற வேண்டுமெனக் கட்டுரையாளர் அடுத்து வலியுறுத்துகிறார். இங்கு தான் அவரி "பார்ப்பனியம்" ("பிராமணிஸம்") என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். தானும் தன் கருத்து, கொண்ட பிறரும் பிராமணர்கள் மீது வெறுப்பு கொண்டோரல்லரென்றும், பிராமணிய முறையினையே தாங்கள் எதிர்ப்பதாகவும் கட்டுரையாளர் திட்ட வட்டமாகக் கூறுகிறார். பிராமணியத்தினால் விளையும் தீமைகளை எடுத்துக் காட்ட வன்மொழிகளே பிரயோகப் படுத்தப்படகின்றன. உதாரணமாக சில பகுதிகள்;——
கட்டுரையின் கடைசிப் பகுதி இம்முறையை அழித்தொழிப்பதற்கான மார்க்கங்களைக் கூறுகிறது. பெருவாரி மக்கள் கூட்டத்தாரிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு, வீரவுணர்ச்சி, தன்மானம் ஏற்பட்டால்தான் இம்முறையினை ஒழிக்கமுடியும் . அறிவுத் தெளிவுடனிருக்கும் எவரும் பார்ப்பனியத்தைக் காரணங்காட்டி ஆதரிக்க முன்வரமாட்டார்களெனக் கட்டுரையாளர் தந்துரைக்கிறார் "பார்ப்பனியம் பிரித்தானியம் போலவே ஒழிக்கவேண்டிய முறையாகும்" ஆதிக்கக்காரர்கள் வசைபாடுவார்களேயென்று நாம் அஞ்சத் தேவையில்லையெனக்கட்டுரையாளர் இறுதியாகக் குறிப்பிட்டிருக்கிறார்., மகாத்மாஜீயின் சாக்காட்டைக் குறிப்பிட்டு கட்டுரையாளர் கூறுவதாவது:—
இத்தகைய மனுவொன்றின்மீது தீர்ப்பு வழங்கப்போகும் கோர்ட்டாருக்கு கட்டுரையாளர் மேற்படி கட்டுரையில் தந்துள்ள கருத்துரைகள் ஏற்புடைத்தவை தாமா என்பது குறித்துக் கவலையில்லை. தகராறுக்குரிய அனைத்து விஷயங்களிலும் இருவேறுபட்ட வாதங்கள் எழுதுவது இயல்பு. கட்டுரையாளர் தனது கருத்துக்களுக்கு அரணாகத் தருங்காரணங்கள் பொருத்தமானவையா அல்லவா என்பது குறித்துப் பரிசீலனை செய்யும் வேலை நீதி மன்றத்துக்கு இல்லை. பல்வேறுபட்ட சமூகத்தாரிடையே நேரிடையாகவோ மறைமுகமாகவோ பகைமையுணர்ச்சியும் வெறுப்புணர்ச்சியும் வளர்க்கும் வகையில் கட்டுரையில் எதுவும் காணப்படுகிறதா வென்பதைக் கண்டறிவதே இப்போதைய ஒரே பிரச்னையாகும். பார்ப்பனியம் (பிராமணிஸம்) என்ற சொல்லுக்குப் பதிலாக "ஜாதி முறை" என்ற தொடரை கட்டுரையாளர் பிரயோகித்திருப்பாரேயானால். ௸ கட்டுரை மேலே கூறப்பட்ட சட்ட 4 (1) (யெச்) பிரிவின் எல்லைக்குள் வரப்போவதில்லையென அட்வகேட் ஜெனரலே ஒப்புக்கொள்ளுகிறார். அம்முறையைப் பார்ப்பனியம் என்று குறிப்பிடுவதாலேயே சட்டம் அங்கு குறுக்கிடுகிறது என்கிறார். அட்வகேட்——ஜெனரல். சந்தேகத்துக்கு இடம் வைக்காமல், கட்டுரையாளர் பெருவாரியான பிராமணர்களென்றும் பெரும்பான்மையரான பிராமணரல்லாதாரென்றும் இருவகுப்பாகப் பிரித்துக் கூறுகிறார். கட்டுரை ஆரம்பத்தில் பல்வேறு ஜாதிகள்பற்றிக் குறிப்பிடுகிறாரெனினும், இறுதியில் ஒரே குலத்தவராய் அனைவரும் திகழ்தல் வேண்டுமென்பதை வலியுறுத்துகிறார். பிராமணர்களை ஒரு பக்கமும், இதர ஜாதியார்களை மற்றொரு பக்கமும் வைத்தே பேசப்படுகிறது. கட்டுரை முழுவதையும் படித்துப் பார்த்ததில் எங்களுக்குத் தோன்றுவது என்னவெனில் சமுதாயத்தில் பிராமணர்கள் உயர்நிலை அடைவதற்கு ஆதரவாயிருந்த முறையினை. அது ஜாதி முறை என்றழைக்கப்பட்டாலுஞ் சரி, பிராமணீயம் என்றழைக்கப்பட்டாலுஞ் சரி, அந்த முறையினையே கட்டுரையாளர் காய்கிறார், இக்காலத்திய பிராமணர்கள்தான் இதைத்தான் செய்து விட்டார்களென்பதாகக் கட்டுரையில் எங்கும் குறிப்புக் காணப்படவில்லை. "கடந்த ஆயிரமாயிர மாண்டுகளில்" இம்முறையானது பரவி வேரூன்றி விட்டதென்பதே கட்டுரையாளரின் புகாராகும். பிராமணர்கள் மீது தனிப்பட்ட முறையில் தனக்கு எவ்வித வெறுப்பும் இல்லை என்பதைக் கட்டுரையாளர் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதோடு, ஒழிக்கப் பெறவேண்டியது அந்த முறைதானென்பதைத் திட்டமாகக் கட்டுரையின் பல இடங்களில் கூறியுள்ளார். பிராமணர்கள் மீது பிராமணரல்லாதார் பகைமையுணர்ச்சியோடு நடந்துகொள்ள வேண்டுமென்றோ அல்லது வெறுப்பு காட்ட வேண்டுமென்றோ தூண்டிவிடும் போக்கு கட்டுரையின் எப்பகுதியிலும் காணப்படவில்லை. ஆர்க்குமெண்டின்போது எங்களுள் ஒருவர் குறிப்பிட்டது போல, கட்டுரையாளரின் கருத்துப்படி அம்முறையை ஒழிப்பதற்கான ஒரேவழி, பெரும்பான்மை மக்கள் சமூகத்தார் தங்களது தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்து ஒற்றுமை, ஒழுங்கு, தன்மதிப்புடன் நடந்துகொள்ளப் பழகுவதேயாகும். மேலே நாங்கள் எடுத்துக்காட்டியிருக்கும் கட்டுரைப் பகுதியைத் தவிர்த்து வேறு எந்தப் பகுதியிலும் அதிகப்படியாகவோ கடுமையாகவோ வார்த்தைப் பிரயோகம் கிடையாது.
யாதொரு வகுப்பு அல்லது ஜாதியின் துயரங்களை எடுத்துரைக்கப் புகும் கட்டுரையாளரொருவர், இவ்விஷயத்தில் நேர்மையற்ற முறையில் நடந்துகொள்வதாகக் கருதப்படும் வகுப்பு அல்லது ஜாதியை சிறிது கடுமையாகவே தாக்குதற்கு வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட வகுப்பு அல்லது ஜாதியொன்றின் துயரங்களை எடுத்துக்கூறும் கட்டுரையை ௸ சட்ட எல்லைக்குள் கொண்டு வருவது தவறாகும்.
சிறு பான்மை வகுப்பொன்று பெருவாரி மக்கள் கூட்டமொன்றை அடிமைப்படுத்தி ஆதிக்கஞ் செலுத்த துணைபுரிவதாகக் கட்டுரையாளரால் கருதப்படும் அம்முறையானது மிகமிக வன்மையாகத் தாக்கப்பட்டுள்ளது கட்டுரையில் என்று நாம் கொண்டாலுங்கூட, சிறுபான்மை வகுப்பினராகிய பிராமணர்மீது நாம் தாக்குதல் எதுவும் காணவில்லை. எவர்மீதும் வெறுப்பையோ அதிருப்தியையோ தூண்டி விடக் கூடியதான சொற்களெதுவும் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை. இதுபோன்ற வழக்கு 4-வது விளக்கத்தின் கீழ் வருமென்பதே எங்கள் கருத்து, பிராமணர்கள் உபாதையுறும் வகையில் பிராமணரல்லாதவரை அவர்கள் மீது ஏவி விடுவதான எந்தத்தன்மையும் கட்டுரையில் இல்லையென்பதை அட்வகேட் ஜெனரலே ஏற்றுக்கொண்டுள்ளார்.
பகைமை, வெறுப்பு என்பவை கடுமையான சொற்களாகும். மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவி வரும் உலகில், அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்வதும் துயரங்களை எடுத்துக் கூறுவதும் பகைமையையும் வெறுப்பையும் வளர்க்கக்கூடியவைகளாகுமென்று கூறுவது நியாயமற்றதாகும். ஒரு வகுப்பு மக்களிடையே ஒற்றுமை நிலவுவதற்கென காரண காரியங்களை எடுத்துக்கூறி ஆவன செய்வது பல திறப்பட்ட வகுப்பாரிடையே வெறுப்பையும், பகைமையையும் வளர்ப்பதாகாது. கட்டுரையில் ஆங்காங்கு சிற்சில சொற்றொடர்களும் சொற்கோவைகளும் சிறிது வேகமாகவே இருக்கின்றனவென்பது உண்மையே. "பார்ப்பனியம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது நல்லதல்லதான். ஆனால், பத்திரிகைச் சட்டத்தின் பாதுகாப்பு விதிகள் தண்டனை விதிப்பது பற்றி பேசக்கூடியனவாய் இருப்பதால், ஐயப்பாடு நேரிடுவதை யனுசரித்து அளிக்கக்கூடிய சலுகையை (அப்படி எதுவுமிருப்பின்) யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதோ அவர் பக்கமே எப்போதும் அளிக்க வேண்டியதாயிருக்கிறது. ஐயப்பாடு எதுவும் நேரிடும் பட்சத்திலும், அதனாலாகிய சலுகையை மனுதாரரே பெறவகைசெய்யும் வழக்காகும் இது.
வேறு வழக்குகளின் தீர்ப்புகள் சில எங்கள் முன்பு எடுத்துக்காட்டப்பட்டன; ஆனால் தகராறுக்குரிய அக்குறிப்பிட்ட கட்டுரைகளின் வாசக அமைப்பையொட்டியே நாங்கள் தீர்ப்பு வழங்க வேண்டியிருப்பதால் அவற்றைப்பற்றி விவாதிக்கப் புகுவதால் பயன் எதுவும் ஏற்படுமென்று நாங்கள் கருதவில்லை.
இந்தியப் பத்திரிகை (அவசரச்) சட்ட 4 (1) (யெச்) பிரிவின் கீழ் விவரிக்கப்படுவதை யொத்த தன்மை வாய்ந்த சொற்கள் மேற்படி கட்டுரைகளில் இல்லையென நாங்கள் கருதுவதால் மனுதார் ரூ 3000 ஜாமீன் தொகை கட்டவேண்டுமென்று பணிக்கப்பட்ட மாகாண சர்க்கார் உத்தரவை தள்ளுபடி செய்கிறோம்.