உள்ளடக்கத்துக்குச் செல்

இதழியல் கலை அன்றும் இன்றும்/இந்தியாவில்-இதழியல் கலை

விக்கிமூலம் இலிருந்து
4
இந்தியாவில் - இதழியல் கலை!
தோற்றம்! வளர்ச்சி! தொண்டு!


“உலக நாடுகள் பத்திரிகை வரலாறு” என்ற பகுதியில், ஒவ்வொரு நாட்டிலும், அவரவர் தாய் மொழிகளில் தோன்றிய பத்திரிகைகளில் சிறப்பான பத்திரிகைகளையும், அவற்றின் பணிகள் மக்களுக்கு எவ்வாறு பயன்பட்டன என்பதையும், அந்தந்த ஏடுகளில் எழுதிய பத்திரிகையாளர்கள் எவ்வாறெல்லாம் தங்களது எழுத்துக்களை ஆட்சி செய்து வெற்றி பெற்று உலக மக்கட்கு அறிவுத் தொண்டுகளை ஆற்றினர் என்ற முழு விவரச் சுருக்கங்களையும் படித்தீர்கள்.

‘இந்தியாவில் இதழியல்’ என்றால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்படும் இந்தியர்களின் தாய் மொழியில் வெளிவந்த பத்திரிகைகள் என்பதே பொருள். இந்த இந்திய பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி, தொண்டு பல்வேறு வகைகளில் இருந்தாலும், அந்த இதழ்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவி நிற்கும் கருத்துக்கள்; இந்திய மக்களின் சுதந்திர நலன்களுக்கு ஏற்ற கருப்பொருளாகவே காணப்பட்டன.

எம். சலபதிராவ் என்பவர், தான் எழுதிய Press என்ற நூலில் 1974-ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளதுபோல, “இந்தியப் பத்திரிகைகள் : ஒரு சார்ந்திருக்கும் பத்திரிகைகளாகத் துவங்கப்பட்டவை. அவை இப்பொழுது வளர்கின்ற சமுதாயத்தின் பத்திரிகைகளாக, பல சவால்களுக்குப் பதில் கூறுவனவாக மாறிவிட்டன” என்று; இந்திய இதழ்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதன் உண்மைக் கருத்தின் கரு வளர்ச்சிகளை இதே தலைப்புப் பகுதியிலேயே படிக்கப் படிக்க உணர முடியும்.

இந்திய இதழியலுக்கு முன்னோடிக் குறிப்புகளாகக் காணப்படுபவை; சாம்ராட் அசோகரின் கல்வெட்டுகளும் - அவரது ஆட்சியால் மக்களுக்குக் கிடைத்தச் செய்திகளின் நன்மைகளும் ஆகும்.

புத்த சமயம் இந்தியாவிற்கு மிகச் சிறந்த நீதிநெறி முறைகளை வழங்கியது என்பதை நெஞ்சார உணர்ந்த மாமன்னர் அசோகர் - அவரது ஆட்சியில், அன்பு, அரவணைப்பு, உயிர் வாழும் இனங்களுக்கு மனத்தால், எண்ணத்தால், செயலால் தீங்கு செய்யாமை போன்ற சிறப்புத் தன்மைகளைக் கடைப்பிடித்தார் என்பதே சிறப்புச் செய்திகள்.

வேளைதோறும் உணவுக்காக வெட்டப்பட்டுச் சமைக்கப்பட்ட எண்ணற்ற மயில் கறி உணவை உண்ணுவதை அவர் அடியோடு நிறுத்தி, உயிரீனும் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொண்டார். அதனால், அவரது அரண்மனையே சைவ உணவை உண்டு வந்தது.

பேரரசர் அசோகர், பொறுமை, கனிவு, சகிப்புத் தன்மை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக், கலிங்கப் போருக்குப் பிறகு தன்னையே மாற்றிக் கொண்டார். அவரது முரட்டுத் தனத்தை அழித்துக் கொண்டு பொறுமை என்ற தத்துவத்துக்கு அணிகலனானார் சகிப்புத் தன்மைக்குச் சான்றாளரானார். இந்த் இரண்டு அரிய பண்புகளும் இந்தியச் சமுதாயத்திற்கே அவர் ஆட்சியில் புத்துயிர் புகுத்தின. அவையே இன்றைய இந்தியாவின் வெளி உறவுக் கொள்கைச் செய்தியாக உலகில் பவனி வருகிறது.

அசோகர் வழியைப் பின்பற்றியே தற்காலத்தில் சாலை ஓர மர நிழல்கள் பணி, ஓய்வு விடுதிகள் அமைத்தல், கால்நடைகள் முதல் மக்கள் வரை உருவாகும் பிணி நீக்கும் மனைகள், மருத்துவ மூலிகை வளர்ச்சிகட்கு தரும் மானியத்தொகை: கடவுளுக்காக விலங்குகளை பலியிடும் கொள்கை நிறுத்தம், வெளிநாடுகளுக்கு இராஜ தந்திரிகளைத் தூதுவர்களாக நியமிக்கும் அம்பாசிட்டர் (Ambassador), சமயங்களை வளர்க்கும் மாநாடுகள் என்பவை; தற்காலத்தில் மாறி, அரசியல் கட்சிகள் மாநாடுகளாக அவை அனைத்தும் இன்றும் நடைபெற்று வருகின்றன.

அசோக மாமன்னரால் நிறுவப்பட்ட புத்த சமய நினைவுச் சின்னங்களான சாஞ்சி, சாரநாத், பாஹீத் மற்றும் அமராவதி கற்றூண்கள் போன்றவை ஆகும். அவரது மூன்று சிங்கங்கள் சின்னத்தைத்தான் இன்றைய இந்திய அரசும் அசோகச் சின்னமாகப் போற்றி அரசுச் சின்னமாக வைத்து வழிபடுகின்றது.

இன்றைய இந்திய ஆட்சிக்கு அசோகர் செய்திகள் மூலகங்களாகப் பயன்படுவதைப் போல, இந்திய இதழியலுக்கும் அவரது கல்வெட்டுகள் மூலகங்களாக, முன்னோடிச் செய்திகளாக இருக்கின்றன எனலாம். அவரது கல்வெட்டுகள் காலத்தால் அழிக்க முடியாத இதழ்களாக நிலைத்து நின்றுள்ளன.

இந்திய மன்னர்களான சுங்க வம்சக் காலத்திலும், மௌரிய சாம்ராச்சிய ஆட்சியிலும், கனிஷ்க, குப்த, ஹர்ஷவர்த்தனர் அரசுகளிலும், கலிங்க, சாளுக்கிய நாடுகளிலும், மொகலாய ஆட்சிகளிலும், தெற்கே பல்லவ, சோழ, பாண்டிய, சேரர்கள் ஆட்சிகளிலும் கல்வெட்டுகள், அரண்மனைகளின் செய்தி அனுப்புவோர் வாயிலாகவும், மன்னர்களது முரசு கொட்டிகளின் பிரகடனங்கள் மூலமாகவும், அலுவலர்களுக்கும் பிற அரசர்களுக்கும், பொது மக்களுக்கும் செய்திகளைப் பரப்பும் வசதிகளை உருவாக்கிக் கொண்டதாக அந்தந்த அரசு வரலாறுகள் அறிவிக்கின்றன.

இன்றைக்கும்கூட ஒரிசா நாட்டில் புறாக்கள் மூலமாகச் செய்திகளை அனுப்பும் வசதிகள் இருப்பதை நாம் அறிகிறோம். இந்தச் செய்திகளை அனுப்பும் ஓலைகளே, லிகிதங்களே, கடிதங்களே இன்றையப் பத்திரிகைகள் செய்திகளுக்குக் கருக்கூறுகளாக அமைந்துள்ளன.

முகலாயர்கள் ஆட்சிகளிலும், செர்ஷா போன்ற முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் அரசுகளிலும் செய்திகளை அனுப்புவதற்கென்ற ஓர் எழுத்தாளர் துறை இருந்துள்ளது. இவர்கள் அரசுச் செய்திகளை அறிவிப்பவர்களாகையால், முகலாயர் காலத்தில்: குறிப்பாக பேரரசன் ஔரங்கசீப் ஆட்சியில் மன்னன் ஆணைக்கேற்ப சுதந்தரமாகச் செயல்பட்டார்கள்! எனவே, செய்தித் துறைக்கும் முழுச்சுதந்திரம் வேண்டும் என்பதை முகலாயர் பேரரசுகள், குறிப்பாக மாமன்னர் அக்பர் ஆட்சியில் இருந்ததாக அறிகின்றோம்.

இவ்வாறு இந்திய அரசுகள் செய்திகளை அனுப்பிய விவரத்தை; அப்போது வெள்ளைக்காரப் பாதிரியாக சமயத் தொண்டு செய்ய வந்த ஸ்காட்லாண்டு நாட்டைச் சேர்ந்த இராபர்ட் வில்லியம் என்பாரும், பிரெஞ்சு மருத்துவராக இருந்த பிராங்கே பெர்னியர் என்பவரும் “S. Arasarathnam; Merchants Companies and come in Coramandel 1600 - 1740 Cambridge” என்ற நூலில் எழுதியுள்ளார்கள்.

இராபர்ட் கிளைவ் இந்தியா வந்தபோது, கிழக்கிந்தியக் கம்பெனி எவ்வாறு இந்தியாவில் இயங்குகின்றது என்பதை, அப்போதிருந்த சில செய்தி எழுத்தாளர்களின் உதவியால், அவ்வப்போது கடிதங்கள் மூலமாகத் தங்களுக்குத் தேவையான வசதிகளை வருவித்துக் கொள்ளவும், இங்குள்ள அவர்களது சூழ்நிலைகளை விளக்கியும், செய்திப் போக்குவரத்து செய்து கொண்டார்கள்.

கிறித்துவ சமயத் தொண்டாற்றி வந்த டேனிஷ்காரர்கள், தங்களது விவிலிய நூலை அச்சடிக்கத் தஞ்சை மாவட்டத்திலே உள்ள தரங்கம்பாடி என்ற கடற்கரை ஊரிலே 1713-ஆம் ஆண்டில் அச்சகத்தை ஆரம்பித்தனர். அதற்கான அச்சுத்தாள் உருவாக்கும் நிறுவனத்தை 1715-ஆம் ஆண்டில் தரங்கம்பாடிக்கு அடுத்துள்ள பொறையார் என்ற ஊரில் நிறுவினார்கள். ஆனால், அவர்களால் விவிலிய நூலையோ அல்லது கிறித்துவத்தைப் பரப்பும் பத்திரிகையையோ அச்சடிக்க முடியவில்லை.

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் போது, பத்திரிகைகளை இங்கிலாந்து நாட்டிலேயே அச்சடித்துக் கப்பலில் கொண்டு வந்தார்கள். பற்றாக்குறையால் அதிகாரிகள் பலருக்கு அந்தப் பத்திரிகைகள் கிடைப்பதில்லை. பிறகு எப்படி பொது மக்கள் படிக்கக் கிடைக்கும்?

எனவே, கிழக்கு இந்திய நிறுவனத்தில் பணியாற்றிய சிலர், தங்கள் வேலைகளை விட்டு விலகி, தங்களது குறைகளை எடுத்துக் காட்டிட, ஒரு பத்திரிகையைத் துவங்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் பத்திரிகைகளை ஆரம்பித்தால் அதனால் கம்பெனியின் ஊழல்கள் மக்களுக்கும், பிற அதிகாரிகளுக்கும் தெரிந்து அவமானம் ஏற்படுமே என்ற எண்ணத்தால், பத்திரிகையை வெளியே வரமுடியாமல் தடுத்து நிறுத்தும் குறுக்கு வழிகளைச் செய்தும், பத்திரிகை ஆரம்பிப்பதில் பங்கு பெற்று உழைக்க இருந்தவர்களை மீண்டும் இங்கிலாந்துக்கே திருப்பி அனுப்பி விட்டார்கள் - கம்பெனியின் பெரிய அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள்.

ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augiustus Hicky) என்பவர்; அதிகாரிகளின் அதட்டல் மிரட்டல்களைக் கண்டு அஞ்சாமல் “வங்காள கெசட் அல்லது கல்கத்தா பொது விளம்பரத் தாள்” என்ற பத்திரிகையைத் துவக்கினார். இந்தப் பத்திரிகைதான் இந்தியாவின் முதல் செய்தித் தாள் என்று ‘இதழியல் கலை’ என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா.பா. குருசாமி கூறுகிறார்.

ஆனால், அவர் ‘இது உண்மை அன்று’ என்கிறார். ‘இந்திய விடுதலைப் போரில் இனிய தமிழ்’ என்ற நூலாசிரியரான டாக்டர் எஸ். துரைசாமி; ஏன் அவ்வாறு அவர் கூறினார் என்பதற்குரிய காரணம் இது:

“1811-ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளிவந்த ‘தமிழ்ப் பத்திரிகை’ கிறித்துவப் பிரச்சார ஏடாகவே இருந்தது” என்று:” மு.இ. முகமது மரைக்காயர் - தமிழ் இலக்கிய கொள்கை - பக்கம் 232-ல் அவரால் கூறப்பட்டதை துரைசாமி எடுத்துக் கூறுகிறார்.
1882ஆம் ஆண்டில் ‘சுதேசமித்திரன்’ வார இதழாகத் துவங்கப்பட்டது. 1887ல் ‘லலிதப்ரஸ் நோதயா’ என்ற நாளிதழ் துவக்கப்பட்டது. அதையே முதல் நாளிதழாகக் கருத வேண்டும். ஆனால் அது விரைவாக நின்றுவிட்டது.
1892ல் ‘சுதேசமித்திரன்’ நாளிதழாக வரத் தொடங்கிப் பல்லாண்டுகள் நிலைத்துப் பணிபுரிந்தது. தமிழில் முதல் அரசியல் நாளிதழ் என்று போற்றப்படும் பேறு ‘சுதேசமித்திரனுக்கே’ உண்டு. இதன் ஆசிரியர் திரு. ஜி. சுப்பிரமணி ஐயர். இந்தியத் தேசியக் காங்கிரசின் முதல் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டவர். அவர் சிறந்த தேசியவாதி. 4.5.1887ல் அய்யர் இவ்விதம் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
“நம் தேசக் கடைகளில் அரிசி, பருப்பு, காய்கறி தவிர மற்றவையெல்லாம் ஆங்கிலேயர் சாமான்களேயன்றி நமது சாமான்கள் அல்லவே! அப்படிப்பட்ட சாமான்களைச் சிருஷ்டிக்க நமது தேச மக்களுக்குத் திறமை இல்லையே! தைரியமில்லையே! ரோஷம் இல்லையே! ஆகவே, இவரையே நம் சுதேச இயக்கத்திற்கு வித்திட்டவர் என்று சொல்லலாம் அல்லவா?
பிரபலமான ஆங்கில நாளிதழ் ‘தி இந்து’விற்கும் இவர்தான் முதல் உரிமையாளர்.

- என்று, அ.மா. சாமி - தமிழ் இதழ்கள் தோற்றம் வளர்ச்சி என்ற நூலில் பக்கம் 210ல் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர், கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் குறைகளை எழுதுவதற்குத் துவக்கப்பட்ட பத்திரிகை செய்தித்தாள் என்ற வகையிலே சேர்க்கப்பட்டு விட்டதே தவிர, அந்தப் பத்திரிகை கம்பெனியாரின் அரசியலை விமர்சித்த பத்திரிகையே ஆகும்.

ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கியின் பத்திரிகை வெளிவந்த ஆண்டு 1780. ஏறக்குறைய 93 ஆண்டுகளுக்கு முன்பே ஹிக்கி அந்த ‘கல்கத்தா கெசட்’ இதழை வெளியிட்டார் என்பதால், ‘இதழியல் கலை’ ஆசிரியர் அதனைத் துணைத் தலைப்பின் முதல் செய்தித்தாள் என்றரோ என்னவோ? ஆனால், உள் செய்தியில் ஹிக்கி இதழ்தான் முதல் பத்திரிகை என்று உறுதிபடக் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஹிக்கி, தன்னை அந்த நாளேட்டில் முன்னாள் அச்சகர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பத்திரிகை வரலாற்றில் ஹிக்கி வில்லியம் போல்ட்டைப் போல் ஓர் அஞ்சா நெஞ்சர்; ஆனால், செய்தித்தாள் அச்சிடுவதிலே பயிற்சியற்றவர். அதன் மீது எனக்கு ஆசையுமில்லை. நான் கடின உழைப்பாளனுமில்லை. ஆனாலும், எனது மனச் சான்றுக்கும், அறிவிற்கும் விடுதலை வாங்க, இந்தப் பத்திரிகைப் பணியில் எனது உடலை அடிமைப்படுத்திக் கொள்வதில் மகிழ்வடைகின்றேன்’ என்று ஹிக்கி கூறியுள்ளார்.

தான் துவக்கிய நாளேட்டைப் பற்றி ஹிக்கி கருத்றிவித்த போது, ‘எனது பத்திரிகை எல்லாம் பிரிவினருக்கும் உரிய அரசியல் இதழ், வாணிபப் பத்திரிகையான இதில், யாரும் ஊடுருவ முடியாது’ என்று பெருமையோடு குறிப்பிட்டார். அந்த ஏடு இங்லீஷ் மொழியில் வார இதழாக வெளி வந்தது.

வங்காளத்திலுள்ள கல்கத்தா மாநகரில், ஹிக்கி தனது ‘வங்காள கெசட்’ பத்திரிகையை நடத்தி வந்தாலும், அதற்கான எல்லா வகையான செய்திகள், கருத்துக்கள் அனைத்தையும் அப்போது இலண்டன் நகரிலே இருந்து வந்து கொண்டிருந்த “London News” என்ற நாளேட்டுச் செய்திகளில் வரும் குறிப்பிட்டச் செய்திகளைத் திரட்டித் தனது கெசட்டில் வெளியிட்டார். அவ்வளவுக் கருத்துக்களையும் அவர் அப்படியே தனது மொழி நடையில் சிறப்பாக எழுதிப் பிரசுரித்ததால், அந்த ஏட்டிற்கு கம்பெனி பணியாளர்கள் இடையேயும், வெளி மக்களிடையிலும் நல்ல வரவேற்பும், மரியாதையும் வாரத்துக்கு வாரம் பெருகியது.

அப்போது கம்பெனியின் தலைமை ஆளுநராக இருந்தவர் வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு “Waran Hastings” என்பவர். அவரது துணைவியாரின் பாலியல் தொடர்பான செய்திகள் அதில் வெளியானதைக் கண்ட ஹேஸ்டிங்ஸ் கோபமடைந்தார்.

அவருடன் மற்ற பெரிய அதிகாரிகளான சிமியோன் ட்ரோஸ் (Simon Droz), தாமஸ் டின் பியர்ஸ் (Thomas Dean Perase), சுவீடன் கிறித்துவ மதகுரு ஜான் சக்காரியா கிர்ரெண்டர் (John Zacharaiah Kierender) மற்றும் சிலர் ஹிப்பியின் கடுமையான எழுத்து நடைத் தாக்குதலுக்குப் பலியானார்கள்.

தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது ஊழல் புகார்களும், அதற்கான சலுகைகளுக்காக அவர் செய்த லஞ்ச லாவண்ய விளையாடல்களையும்; அதே நேரத்தில் கம்பெனி அதிகாரிகளுடன் ஹேஸ்டிங்ஸ் துணைவியார் நடத்தி வந்த தகாத உறவுகளையும் கடுமையாகச் சாடி ஹிக்கி எழுதியதால், தாள முடியாத அவமானத் தீயினாலே ஏற்பட்ட புண் காயங்களை எண்ணியெண்ணி உள்ளுக்குள்ளேயே வேதனைப்பட்டதின் எதிரொலியால்: ஹிக்கிக்கு, அரசு பல இடையூறுகளைச் செய்தது. அந்த இடுக்கண்களிலே ஒன்று அவரது பத்திரிகைக்குரிய அஞ்சலகச் சலுகையைப் பறித்ததும் ஆகும்.

சுவீடன் பாதிரியார் ஜான் சக்காரியா, தன்மீது எழுதிய அவதூறுகளுக்காக நீதிமன்றத்தின் நெடும்படிக் கட்டுகள் மீது ஏறினார்: வழக்குத் தொடர்ந்தார். அதன் பயன், ஹிக்கி நான்கு மாதச் சிறைத் தண்டனையையும், 500 ரூபாய் அபராதத்தையும் பெற்றார்.

இந்த வழக்கு தான், இந்தியாவில் இங்லீஷ்காரர்களின் ஆணவத்தால், அகம்பாவ ஆட்சி நிர்வாகத்தால், லஞ்ச லாவண்ய ஊழல்கள் பெயரால் ஒரு பத்திரிகை மீது ஓர் ஆட்சி தொடுத்திட்ட முதல் வழக்காகும். இந்தியப் பத்திரிகையாளர்களில் ஓர் அரசை எதிர்த்து ஒரு பத்திரிகை ஆசிரியன் மன உரத்துடன், நேர்மையுடன், சந்தித்திட்ட முதல் வழக்கும் ஆகும்.

அதனால், அஞ்சா நெஞ்சன் ஹிக்கி, இந்த தண்டனைகளுக்கும் அரசு மிரட்டல் - பயமுறுத்தல்களுக்கும் அஞ்சாமல், தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்சையும் தலைமை நீதிபதி சர். எளிஜா இம்பே (Sir Ellijah Impey) என்பவரையும் முன்பைவிடக் கடுமையாகத் தாக்கித் தனது பத்திரிகையில் எழுதினார்.

விடுமா இங்லீஷ் கம்பெனி அரசு? பத்திரிகை ஆசிரியர் ஹறிக்கியைக் கைது செய்யும் ஆணையுடன் நானூறு காவலர்கள் கொண்ட ஆயுதப் படை சென்றது. சும்மா இருப்பாரா அந்த இங்லீஷ்கார ‘ஆணவி’களை எதிர்க்கும் ஓர் ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர்?

அச்சகத்துள் நுழைந்த அந்த இங்லீஷ் காவலர்களை ஹிக்கி கடுமையாகத் தாக்கினார். அச்சக இரும்புக் கருவிகளை, இயந்திர சாமான்களை வீசி எறிந்து கண்டபடி அவர்களைக் காயப்படுத்தினார். அவரைக் கைதியாகச் சிறைப்பிடிக்க முடியாமல், அந்தப் படை திரும்பி விட்டது. ஆனால், ஹிக்கி, தான் ஒரு பத்திரிகை ஆசிரியன் என்ற தன்மானத்தோடும் மரியாதையைக் காக்கும் எண்ணத்தோடும் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி முன்பு நின்றுவிட்டார்.

நீதிமன்றம் ஹிக்கிக்கு ஓராயிரம் ரூபாயைப் பிணைத் தொகையாகக் கட்ட உத்தரவிட்டது. பத்திரிகை ஆசிரியனால், அதுவும் ஆட்சியை எதிர்க்கும் ஒரு பத்திரியாளரால் எப்படிக் கட்ட முடியும்? ஹிக்கி காரக்கிரகத்துள் தள்ளப்பட்டார். தான் ஒரு பத்திரிகையாளன் என்ற சுயமரியாதையை அவர் நிலை நாட்டினார்! இருந்தும் தட்டத் தட்ட உயரே பந்து எழுவதைப் போல, இந்தப் பத்திரிகை விரோதிகளுக்காக அவர் பயப்படாமல் சிறை உள்ளே இருந்தவாறே தனது ‘வங்காளக் கெசட்’ இதழை நடத்தி வந்தார்.

தண்டனை பெற்று விட்டதற்காக, ஹிக்கி அஞ்சவில்லை. முன்பைவிட மிகக் கடுமையான நடையில் ஆட்சிப் போக்கை எதிர்த்து எழுதினார். அவரது பத்திரிகை வழக்கை விசாரித்த நீதிபதி அவரது ஒரு குற்றத்துக்காக மட்டும் ஓராண்டு சிறை தண்டனை—; இருநூறு ரூபாய் அபராதம் என்றார்.

அடுத்து தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் ஹிக்க பத்திரிகை மீது தொடுத்த வழக்கிற்காக, 5000 ரூபாய் இழப்பீட்டுத் தொகை கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தார் - அதே நீதிபதி. ஹிக்கி தனது வழக்கை மறு விசாரணைக்கு கொண்டு சென்றபோது, அந்த நீதிபதி தலைமை ஆளுநருக்கு ஹிக்கி கட்ட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை ரத்து செய்தார்.

கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியும், அதிகாரிகளும் ஒரு பத்திரிகையாளர் மீது இத்தகைய ஓர் அடக்க முறையை ஏவி விட்டதைக் கண்டு ஹிக்கி அஞ்சவில்லை. ஓர் ஆசிரியன், பத்திரிகையாளன்; ஆட்சியின் கெடுபிடிக் கொடுமைகளை எப்படி எதிர்த்து ஏறுநடை போட வேண்டும் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாக அன்றே அவர் நின்று காட்டிய மாவீரராகத் திகழ்ந்தார்.

ஆனால் ஹிக்கி, பத்திரிகை ஆசிரியனுக்கும் பத்திரிகை நடத்துவோனுக்கும் பத்திரிகை சுதந்தரம் தேவை என்பதை உணர்ந்து அதையும் கட்டுரை வடிவில் தனது எண்ணமாக வெளியிட்டார்.

‘பத்திரிகை ஆசிரியனால், பத்திரிகையாளனால் ஓர் ஆட்சியில் எதையும் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்’ என்ற பேனா முனை வீரர் வால்டேரின் கருத்துக்களுக்குச் சான்றாக, இந்திய விடுதலையின் தந்தையாக இயங்கிய அண்ணல் காந்தி அடிகள், தென் ஆப்பிரிக்காவில் ‘இண்டியன் ஒப்பீனியன்’ indian opinion என்ற பத்திரிகைக்கு அவர் ஆசிரயராக பணியாற்றியபோதே, பத்திரிகைகளுக்குரிய நான்கு ஒழுக்கங்களை, கடமைகளை வெளியிட்டார். அவை இவை :

1. பத்திரிகைகள் உண்மையாகப் பணி புரியவேண்டும்.

2. உண்மையான கருத்துக்களை மட்டுமே உலகுக்கு உரைப்பது; உணர்த்துவது.

3. நேர்மையாக ஆட்சியின் குறைகளை எடுத்துக் கூறுவது.

4. எதை எழுதினாலும் - எழுத்துக்களைத் தன்னடக்கத்துடனேயே ஆட்சி செய்வது

இந்தக் கருத்துக்கள் நான்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு காந்தி அண்ணலால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இவை இப்போதும் இளம் தலைமுறைப் பத்திரிகையாளர்களுக்கும் பொருந்துகிறது அல்லவா?

சங்கராச்சாரியார்
சந்திரசேகரர்:

அண்ணல் மகாத்மா கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே, காஞ்சி பெரியவர் சந்திரசேகர பரமாச்சாரியாரும் பத்திரிகையாளர்களுக்குச் சில நெறிகளைக் கூறியுள்ளார். அவைக் கீழ்க்கண்டவை. :

“அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கும் வரையில் எல்லா கல்வியும் வாய்மொழியாகச் சொல்லி, காது வழியாகக் கேட்டே, வழிவழியாக வளர்ந்து வந்திருக்கிறது.”

“அந்தக் காலத்தில் பனை ஓலையில் எழுதுகிற தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு சிலரே இருந்தார்கள். மற்றபடி பெரிய வேத வேதாந்தம் தெரிந்தவர்கள்கூட எல்லாம் செவி வழியேதான் கேட்டறிந்தார்கள்”

“அச்சு இயந்திரங்கள் வந்தன. அப்புறம் நிறையப் புஸ்தகங்கள், நியூஸ் பேப்பர்கள் ஏற்பட்டு விட்டன. பௌராணிகர்கள் இடத்தை இவை பிடித்துக் கொண்டன”.

‘எனவே, பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றை பௌராணிகர்கள். ஸுதரும் மற்றும் பௌராணிகர்களும் எப்படி தர்மங்களை ரஸமான கதைகள் மூலம் பொது ஜனங்களிடையே பிரச்சாரம் செய்தார்களோ, அவ்விதமே செய்ய வேண்டியது இன்றைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை’.

“ஜனங்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் அறிவை, மனத்தை உயர்த்துகிற விஷயங்களையே எழுத வேண்டும். இதைச் சுவாரசியமாகச் செய்ய வேண்டும். உத்தமமான விஷயங்களைப் புதுப்புது விதங்களில் உணர்த்த வேண்டும்”.

“பத்திரிகையாளர்கள் வாழ்நாள் முழுவதும் மாணாக்கர்களாகவே இருந்தால்தான், இப்படிப் புதுப்புது விஷயங்களை அறிந்து மற்றவர்களுக்குப் பிரச்சாரம் செய்ய் முடியும்”

“சத்தியத்தை சர்க்கரைப் பூச்சிட்ட மாத்திரைகளாக்கித் தரவேண்டும். சர்க்கரைப் பூச்சுத்தானே ஒழிய, முழுவதும் சர்க்கரை ஆகிவிடக் கூடாது. வெறும் சர்க்கரை உடம்புக்கு நல்லதல்ல. வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாச்சாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அவ்விதமே எழுதுவது சரியல்ல”

“ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு எழுத்தாளர்கள் முனைந்தால், தானாகவே ஜனங்களுக்கு ருசி பிறக்கும்; நம்மையும் உயர்த்திக் கொண்டு நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும்” என்கிற கடமை உணர்ச்சியைப் பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் பெற வேண்டும்”

“இவ்விதம் ஆத்ம க்ஷேமம், லோக க்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெற வேண்டும்” என்று: ‘தெய்வத்தின் குரல்’ முதல் தொகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி, கிழக்கு இந்தியக் கம்பெனி வர்த்தகத்தில் நடந்த ஊழல்களையும், ஹேஸ்டிங்ஸ் குடும்ப விவகார உறவியல் ஈனங்களை அவர் அம்பலப்படுத்தியதையும், அரசு அதிகாரிகள் அனைவரும் எதிர்த்ததைக் கண்ட கம்பெனி ஊழியர்களில் சிலர், அரசு ஆதரவுடன் அவர்களது அனுமதியைப் பெற்று ‘இந்தியா கெசட்’ (India Gazette) என்ற பத்திரிகையை அதே 1780-ஆம் ஆண்டே துவக்கினார்கள். அவர்களுக்கு ஹேஸ்டிங்ஸ் அரசு அஞ்சலக சலுகையை அளித்தது. இதைக் கண்ட ஹிக்கி, அரசின் பாரபட்சப் பத்திரிகைப் போக்கை எதிர்த்து எழுத்துப் போரிட்டார். என்ன பயன்? பாவம்தான் மிச்சம்!

ஹிக்கிக்குப் பிறகு 1784-ஆம் ஆண்டில் ‘கல்கத்தா கெசட்’, ‘வங்காள ஜெர்னல்’, ஓரியண்டல் மேகசின்’ அல்லது ‘கல்கத்தா அம்யூஸ்மெண்ட்’ என்ற பத்திரிகைகள் அடுத்தடுத்து வெளிவந்து ஹேஸ்டிங்ஸ் பிரபுவுக்கு ஜால்ரா தட்டிக் கொண்டே நடந்தன. இந்த மூன்றுக்கும் துணையாக ‘கல்கத்தா கிராணிக்கல்’(Calcutta Chronicle) என்ற பத்திரிகை 1786ல் வெளி வந்து ஓங்காரமாக தாள ஓலமிட்டது.

இந்த ஜால்ரா கலைக்கு எதிராக, அஞ்சா நெஞ்சோடு, ‘இந்தியன் வொர்ல்டு’ (Indian World) என்ற பத்திரிகையை வில்லியம் டுன் (William Dune) என்பவர் தோற்றுவித்தார். ஆனால், இடையே பல இடையூறுகளால் அது நின்று விட்டது.

மேலே கூறப்பட்டவை அனைத்தும் வங்க மாநிலத்திலே இருந்து வெளிவந்ததைக் கண்ட ‘மெட்ராஸ் ஸ்டேட்’ (Madras State) என்று வெள்ளையர்களால் அழைக்கப்பட்ட இன்றைய தமிழ்நாட்டின் சென்னை நகரிலிருந்தும் சில பத்திரிகைகள் வெளி வந்தன.

தமிழ்நாட்டில்
பத்திரிகைகள்

‘சென்னை கூரியர்’ (Madras Courier) என்ற வார ஏடு 12.10.1785ல் வந்தவற்றுள் ஒன்று. அதன் ஆசிரியர் ரிச்சர்டு ஜான்சன் என்பவர். அவர் கிழக்கிந்திய கம்பெனி ஆதரவுடன் அந்தப் பத்திரிகையைத் துவக்கினார். காரணம், ஹிக்கியைப் போல நம்மால் கம்பெனிக் கொடுமைகளுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பதால். இதன் ஆசிரியர் ஹியூக் பாய்டு என்பவர். அவர் சில மாதங்களானதும் அதை விட்டு விலகி ‘ஹாரகாரு’ (Harakaru) என்ற இதழைத் துவங்கினார்.

ஓர் ஆண்டு முடிவதற்குள் அதன் ஆசிரியர் காலமாகவே பத்திரிகை நின்று விட்டது. வில்லியம்ஸ் என்பவரால் 1795-ஆம் ஆண்டில் ‘சென்னை கெசட்’ (Madras Gazette) என்ற ஏடும், ஹாம்ப்ரீஸ் என்பவரை ஆசிரியராகக் கொண்டு, ‘இந்தியன் ஹெரால்டு’ (indian Herald) என்ற பத்திரிகையும் வெளி வந்தன.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கிழக்கு இந்தியக் கம்பெனியின் விசுவாசிகளுக்கே பத்திரிகை நடத்தும் அனுமதியை, அதற்கான பிற சலுகைகளை இங்லீஷ்காரர்கள் வழங்கி வந்தார்கள். அவர்களுக்கு எழுத்துரிமை காக்கும் உணர்வே இல்லை. ஏதோ பிழைப்புக்காகவே பத்திரிகை நடத்துபவர்களாக இருந்தார்களே தவிர, இலட்சியமோ, மக்கள் சேவையோ அவர்களுக்குக் கடுகளவும் கிடையாது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமை நிர்வாகம், கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகங்கள் அந்தந்த மாநிலத் தலைநகரங்களிலே இயங்கி வந்தன. பெங்கால் ஸ்டேட்டுக்கு அதன் தலைநகர் கல்கத்தாவிலும், பாம்பே ஸ்டேட்டுக்கு அதன் தலைநகரமான பாம்பேயிலும், மெட்ராஸ் ஸ்டேட்டுக்கு அதன் தலைநகரான சென்னை மாநகரிலும் அதனதன் கிழக்கு இந்தியக் கம்பெனி நிர்வாகங்கள் மூலமாக நடந்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்க அரசியல் வரலாறாகும்.

பெங்கால் ஸ்டேட்டில் இருந்து வெளி வந்த பத்திரிகையாளர்கள் யார் யார் என்பதையும், பத்திரிகைகளின் பெயர்களையும், அதனதன் பண்புகளையும் படித்தீர்கள். இவர்களுள் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர் ஒருவர்தான் பத்திரிகையாளர் ஆண்மகனாகத் திகழ்ந்து தண்டனைகளையும், அபராதத் தொகைகளையும் கட்டி, ‘ஆட்சி எதிர்ப்பு’ என்ற தனது இலட்சியத்திற்காக இதழியல் துறையைத் திசை திருப்பும் கலங்கரை விளக்கமாக விளங்கினார். மற்ற எல்லாப் பத்திரிகையாளர்களும் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகப் பிழைப்பெனும் பஜனைக்குரிய ஜால்ராக்களாகவே திகழ்ந்தார்கள்.

பம்பாய் மாநில
பத்திரிகைகள்

மராட்டிய மாநிலத்தின் முதல் இதழாக, பம்பாய் மாநகரிலிருந்து ‘பம்பாய் ஹெரால்டு’ (Bombay Herald) என்ற பத்திரிகை 1789-ஆம் ஆண்டில் வெளி வந்தது. அடுத்தபடியாக 1790-ஆம் ஆண்டில் ‘பம்பாய் கூரியர்’ (Bombay Courier) என்ற இதழை; லூக் ஆஸ்பர்னர் என்பவர் வெளியிட்டார்.

பத்திரிகைகளுக்கு
ஒழுங்கு முறைச் சட்டம்

வங்காள மாநிலத்திலேயே, கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக ஒழுங்கை எதிர்த்தும், ஆதரித்தும் பத்திரிகைகள் சில வெளிவந்தன. அரசை எதிர்க்கும் பத்திரிகைகளை விட, ஆதரிக்கும் பத்திரிகைகளே அதிகமாக வெளி வந்தன.

கி.பி. 1790-ஆம் ஆண்டிற்குப் பின்பு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அவரவர் தாய்மொழிகளில் பத்திரிகைகள் வெளிவர ஆரம்பித்தன. அதே வேகத்தில் அவை வளர்ச்சியும் பெற்றன. அதனால், பத்திரிகைகள் ஒழுங்கு முறைச் சட்டத்தை கம்பெனி நிர்வாகம் 1790-ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. இந்த ஒழுங்கு முறைகளால் இதழ்கள் நன்கு வளர்ச்சிப் பெற்றன.

அந்த வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக : கல்கத்தாவிலிருந்து ‘ஏசியாடிக் மிரர்’ (Asiatic Mirror) என்ற பத்திரிகை 1794-ஆம் ஆண்டிலும், 1791-ஆம் ஆண்டில் ‘ஓரியண்டல் ஸ்டார்’ (Oriental Star) என்ற இதழும், 1795-ஆம் ஆண்டில் ‘கல்கத்தா கூரியர்’ (Calcutta Courier-ரும், ‘இண்டியன் அப்பல்லோ’வும் ‘பெங்கால் ஹாரகாரு’ என்ற ஏடு 1795-ஆம் ஆண்டிலும் ‘டெலி கிராப்’ (Telegraph) எனும் தாளிகை 1796-லும் ‘ரிலேட்டர்’ “Relater” எனும் இதழ் 1799-ஆம் ஆண்டிலும் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டே இருந்தன.

வாரன்ஹேஸ்டிங்ஸ் தலைமை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகிச் சென்றதும், லார்டு வெல்லெஸ்ஸி (Lord Wellesley) என்பவர் 13.5.1799ல் தலைமை ஆளுநராகப் பதவியேற்ற பின்பு, பத்திரிகைகளுக்கான ஒழுங்குமுறைகள் திட்டம் ஒன்றை அவர் வெளியிட்டார். அவை இவை :

ஒவ்வொரு இதழிலும் அதனை அச்சிடுவோர், ஆசிரியர், உரிமையாளர் பெயர்களை வெளியிட வேண்டும். ஏன் இந்த திட்டம் பிறந்தது? சிரிக்கக் கூடாது : சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இன்றும் நாம் நமது பத்திரிகைகளில் மேற்கண்ட முறையைப் பின்பற்றி வரும் சட்டமாக இருக்கின்றது. அதனால் சிரிக்கக் கூடாது என்றோம்.

தலைமை ஆளுநர் வாரன்ஹேஸ்டிங்ஸ் துணைவி யாருடைய பாலியல் அசிங்கங்களை, வங்காள கெசட் பத்திரிகையின் ஆசிரியரான , ஹிக்கி என்பவர் தனது பத்திரிகையில் எழுதுவதற்குக் கட்டுரையாக்கியிருந்தக் கருத்தை, வேறோர் ஆட்சி எதிர்ப்புக் கம்பெனி ஊழியர் எடுத்துக் கொண்டு சென்று துண்டறிக்கையாகப் (12’x8” அளவில்) பக்கமாக்கி, அதனை மக்களுக்கு வெளியிட்டு அக்கருத்தை முன்கூட்டியே பரப்பி விட்டார்.

இதனை அறிந்த வாரன்ஹேஸ்டிங்ஸ், யார் அந்தக் கருத்தை வெளியிட்டவர்? எந்த அச்சகத்தில் அது அச்சடிக்கப்பட்டது? அதன் உரிமையாளர் யார்? முகவரி என்ன என்பதைக் கண்டுபிடிக்கப் பெரும்பாடுபட்டும், காவலர்களால் அந்த விவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அடங்கா சினம் கொண்ட ஹேஸ்டிங்ஸ் இதழ்களுக்கான ஒழுங்கு வகைகளை, ஒழுக்க முறைகளைப் புதிதாகக் கொண்டு வந்தார்.

அதற்குள் ஹேஸ்டிங்ஸ், 1799-ஆம் ஆண்டில் பதவியை விட்டு விலகி விடவே, புதிதாக 13.5.1799ல் பதவியேற்ற லார்டு வெல்லெஸ்ஸி, ஹேஸ்டிங்ஸ் ஒழுங்கு முறைச் சட்டத்தை மீண்டும் வெளியிட்டார். அந்தச் சட்டம் இது :-

1. ஒவ்வொரு பத்திரிகையிலும் யார், அதை அச்சிடுகிறார்கள்? ஆசிரியர் யார்? சொந்தக்காரர் யார்? முகவரி என்ன? என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.

2. பத்திரிகை ஆசிரியர், அதன் சொந்தக்காரர் இருவரும் தலைமைச் செயலாளரிடம் அவரவருடைய முகவரிகளைக் கூற வேண்டும்.

3. என்ன செய்திகளைப் பத்திரிகையில் வெளியிட ஆசிரியரும், உரிமையாளரும் வெளியிட விரும்புகின்றனரோ, அவற்றை எல்லாம் அரசு தலைமைச் செயலரிடம் காண்பித்து, அவருடைய முன் ஒப்புதலைப் பெற்ற பின்பே அச்சிட வேண்டும்.

4. பத்திரிகைகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் வெளியிடக் கூடாது.

5. ஒரு பத்திரிகையின் கட்டுப்பாட்டாளர்; அந்த ஏட்டின் ஆசிரியரோ, அச்சகத்தாரோ, உரிமையாளரோ அல்லர்; அரசின் செயலாளர்தான் அதன் கட்டுப்பாட்டாளர் ஆவார்.

6. மேற்கண்ட விதிகளை மீறுபவர்களுக்கு வழக்கு மன்றமோ, அபராதம் விதிப்பதோ ஏதும் கிடையாது. உடனே அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். என்பவை தான் லார்டு வெல்லெஸ்ஸி வெளியிட்ட பத்திரிகைச் சட்டம். நாடு கடத்தப்படுவார்கள் என்றால், இந்திய மண்ணிலே பிறந்தவன் இங்கிலாந்து மண்ணிலா நடமாடுவான்? அன்று அன்று! சட்டத்தை அன்று மீறுபவர்களிலே பெரும்பான்மையர் இங்கிலாந்துக்காரர்களே ஆவர்! அதனால் அவர்களை மிரட்டி அச்சுறுத்திடவே இந்த நாடு கடத்தல் தண்டனை ஆகும்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ், பத்திரிகைகள் ஏறக்குறைய பதினேழு ஆண்டுகளாகத் திணறித் தவித்துக் கொண்டிருந்தன. வெல்லெஸ்ஸியின் பத்திரிகைச் சட்டத்தால் பத்திரிகை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டார்கள். தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள். என்ன காரணம் இதற்கு?

சில ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், அச்சகத்தார்கள் சில இதழ்களில் அவரவர்கள் பெயர்களை அச்சடிக்காமலேயே வெளியிட்டும், விற்பனை செய்து கொண்டும் இருந்த நிலை அரசுக்கு எட்டிற்று.

குறிப்பாக, அரசியல் விவகாரங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டது போக; இப்போது மதக் குழப்பத்தை மக்கள் இடையே பரப்பும் வகையில், கிறித்துவ மதக் குருக்கள், இந்து சமயத்தையும், முகமதிய மதத்தையும் அவரவர் பத்திரிகைகளிலே தாக்கி எழுதும் நோக்கத்தில் எழுதி, அந்தந்த மதத்திலே குழப்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பத்திரிகைக் குழப்பவாதிகளைக் கண்ட தலைமை ஆளுநரான லார்டு மிண்டோ (Lord Minto) அவற்றை அச்சடிக்கும் அச்சகங்களை உடனே கல்கத்தா நகருக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார்.

ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1813-ஆம் ஆண்டில் மீண்டும் வாரன்ஹேஸ்டிங்ஸ் தலைமை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார் - கம்பெனி ஆட்சிக்கு. இவர் வெல்லெஸ்லி போட்ட பத்திரிகைச் சட்டத்தின் கெடுபிடியைச் சிறிது தளர்த்தியதால், மறுபடியும் இதழியல் துறையில் கணிசமான வளர்ச்சியும், கண்ணியமான கருத்துக்களும் இடம் பெற்று வலம் வந்தன.

வாரன் ஹேஸ்டிங்ஸ் பதவி ஏற்ற பின்பு, 1815-ஆம் ஆண்டில், ‘வங்காள கெசட்’ என்ற பத்திரிகை ஆங்கில வார ஏடாக வெளி வந்தது. இதன் ஆசிரியர் கங்காதர் பட்டாச்சாரியார். இந்த பத்திரிகை ஒரே ஒரு வருடம் மட்டுமே வெளி வந்து நின்றது.

மதக் குழப்பத்தை உண்டாக்கும் சொரம்பூர் கிறித்துவப் பாதிரியர்களின், ‘திக்-தர்சன்’ என்ற வங்காள மாதப் பத்திரிகையும், 1818-ஆம் ஆண்டில் ‘கார்டியன்’ என்ற ஏடும், ‘சமாச்சா தர்பன்’ என்ற வங்க வார இதழும், ‘பிரண்ட் ஆஃப் இந்தியா’ (Friend of india) என்ற இங்லீஷ் மாத இதழும் வெளி வந்தன.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு, இந்தியர்களுக்கு நாட்டுப் பற்றை உருவாக்கிட ஆலன் அக்டேவியஸ் ஹயூம் எவ்வாறு சுதந்தர உணர்வுக்குத் தந்தையாக விளங்கினாரோ, அதே போன்றே, ‘ஜேம்ஸ் சில்க் பக்கிங்ஹாம், இராசாராம் மோகன்ராய் என்ற இருபெரும் இதழாசிரியர்கள் விளங்கினார்கள். அவர்கள் அந்தக் காலத்திலேயே பத்திரிகை சுதந்தரத்திற்காகப் பெரும் போராட்டக் களம் கண்ட மாவீரர்கள்’என்ற M. Chalapathi Rau, “The Press”, National Book Trust of India, 1974 என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

இராசாராம் மோகன்ராய் பத்திரிகைச் சுதந்திரத்துக்காக வீதி வீதியாகக் கூட்டம் போட்டுப் பொது மக்களுக்குப் பத்திரிகை அருமையைப் பெருமையாகப் பறையறைந்த பத்திரிகைச் சுதந்தர வீரர் ஹிக்கிக்கு வாரிசாக வாய்த்தவர். இந்து - கிறித்துவ மதவாதிகளின் மமதையெனும் நெருப்பாற்றை நீந்திக் கரை கண்டவர். அவர்களது அருமையான உழைப்புக்களை அறிந்தவர்கட்குத்தான், பத்திரிகை வளர்ச்சி எத்துணைப் பூகம்ப பிளப்புக்களைத் தாண்டி மீண்டு வந்துள்ளது என்ற வரலாற்றருமையை நம்மால் புரிய முடியும்.

இராசாராம் மோகன்ராய் - 1772 - 1883
(Raja Ram Mohan Roy)

ஆன்மிக ஞானிகளும் அறிவியல் வித்தர்களும் தோன்றிய வங்க மாநில பர்த்துவான் மாவட்டத்தில் இராதா நகரம் எனும் சிற்றூரில் 1772-ஆம் ஆண்டில் தோன்றியவர் இராசாராம் மோகன் ராய். அவருக்கு 14 மொழிகளில் பேரறிவும் புலமையும் இருந்தது.

‘கடவுள் ஒருவரே! பல கடவுள்கள் இல்லை, அவருக்கு உருவம் கொடுத்துக் கொண்டாட வேண்டியதில்லை’ என்று ராய், வங்கப் புலவர்கள் இடையே வாதாடி வாகை சூடியவர். அதற்குக் காரணம், 1786-ஆம் ஆண்டு முதல் காசி மாநகரில் வேதங்களையும், உபநிடதங்களையும் அவர் பயின்று இந்து சமயத்தின் அடிப்படை உண்மைகளை உணர்ந்து கொண்டது தான்.

இராம் மோகனர் இங்லீஷ்காரர்களுடனும், கிறித்துவப் பாதிரிகளுடனும், முஸ்லீம்களுடனும் அமர்ந்து உணவு உண்பதால், அவரை நாத்திகர் என்றும், இந்து மதத்தின் விரோதி என்றும் இந்து பிரமணர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

இராசாராம், இந்து, முஸ்லீம், கிறித்தவ சமயங்களைச் சீர்த்திருத்துவதோடு இராமல், இந்தியப் பத்திரிகைச் சுதந்தர வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். அவர் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகப் பணியிலே இருந்து ஓய்வுப் பெற்றபோது, சமஸ்கிருதம், பாரசீக மொழி, அராபிய மொழி, ஹீப்ரு மொழி, கிரேக்க மொழி, இங்லீஷ் மொழி, வங்கமொழி போன்ற மொழிகளிலே எதைப் பற்றியும் விவாதித்து வாதாடும் வல்லமை பெற்றவராக விளங்கினார்.

கணவன் இறந்த பின்பு அவனுடன் உடன்கட்டை ஏறும் சதி என்ற திட்டத்தை இராசா ராம் எதிர்த்துப் போராடி வந்ததைக் கண்ட அப்போதைய தலைமை ஆளுநராக இருந்த வில்லியம் பென்டிங் பிரபு; உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டத்தை 1829-ஆம் ஆண்டில் கொண்டு வந்து அமல் படுத்தினார்.

இந்து மதத்தில் உருவ வழிபாடுகளைச் செய்யும்போது விலங்குகளை உயிர்ப்பலி கொடுப்பதையும், ஒருவன் பல திருமணங்களைச் செய்து கொள்ளும் பழக்கத்தையும், சாதி முறைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரமாக ஒழித்துக்கட்டத் தனது பத்திரிகை எழுத்துக்கள் மூலமாக அரும்பாடுபட்டார்.

ஒவ்வொரு இந்தியனும் ஆங்கில மொழியைக் கற்கவேண்டும் என்றார். இந்திய அரசியல் விடுதலைக்காகத் தொண்டாற்றினார். அதற்காகத் தனது தீவிர எழுத்துக்களைப் பயன்படுத்தினார். ஆங்கிலத்தில் ‘பிராமனிக்கல் மேக்கசின்’ (Brahmancia Magazine) என்ற பத்திரிக்கையை நடத்தினார். வங்காள மொழியில் ‘சம்பத் கௌமதி’ (Sambad Kaumdi) என்ற இதழையும், பாரசீக மொழியில் ‘மீரட்-அல்-அக்பர்’ (Mirat-ulAkbar) என்ற புரட்சி ஏட்டையும் துவக்கிப் பணிபுரிந்தார்.

மத மூடநம்பிக்கைகளை எதிர்த்து இராசாராம் மூன்று பத்திரிகைகளையும் மூன்று மொழிகளில் நடத்தி வந்ததால், தினந்தோறும் அவர் பத்திரிகைகள் எதிர்ப்புக்களைச் சந்தித்தார். அவருக்கு அரசியல் எதிர்ப்புகளும், சமுதாயத்தில் பழமை விரும்பிகளின் போராட்டங்களும் மதவாதிகளின் கண்டனங்களும் மலைபோல் குவிந்தன.

இராசாராம் நடத்திய வங்கமொழிப் பத்திரிகையில் பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர், அவரது பத்திரிகையிலிருந்து விலகி, அவருக்கு எதிர்ப்பாளர்கள் யார்யாரோ அவர்களுடன் அணி சேர்ந்துக் கொண்டு, ‘சமாச்சார் சந்திரிகா’ (Samachar Chandrika) என்ற ஓர் இதழை நடத்தி, இராசாராமைக் கடுமையாக எதிர்த்து எழுதினார்.

அதே நேரத்தில் இராசாராம் கிறித்துவப் பாதிரிகள் இந்து சமயத்தைத் தாக்கி எழுதும் கேள்விகளுக்குப் பதில் கூறும் நிலையும் ஏற்பட்டது. எழுதினார், கடுமையாக எழுதினார். புரட்சிக் கருத்துக்களை மக்களுக்கு விளக்கிக் கூறி, தனது கொள்கைகளில் வெற்றியும் பெற்றார். அப்போதுதான் இராசாராமுக்கு ஜேம்ஸ் சில்க் பக்கிங்ஹாம் “James Silk Bucking hom” என்பவர் நண்பரானார். இருவரும் இணைந்து எல்லா எதிர்ப்புக்களையும் சமாளித்தார்கள். பத்திரிகைச் சுதந்தரத்தையும், அதன் மரியாதை மதிப்பையும் காத்திடப் பெரிதும் அவர்கள் போராடினார்கள்.

ஜேம்ஸ் சில்க் பக்கிங்ஹாம் என்ற இந்த பத்திரிகையாளர் இங்கிலாந்தில் பிறந்து, 1786-ஆம் ஆண்டு முதல் 1855 வரை வாழ்ந்தவர். அவர் ஒரு கப்பல் தலைவர். அவர் பணியாற்றியக் கப்பலில் அடிமைகளைக் கம்பெனி நிர்வாகம் ஏற்றி வந்ததால், அதை எதிர்த்து மனித உரிமைகளுக்காகப் போராடித் தனது பணியை விட்டு விலகியவர். இவர் இந்தியப் பத்திரிகைச் சுதந்தரத்துக்காக, இராசாராம் மோகன்ராயுடன் சேர்ந்துப் போராடிய ஓர் இலட்சிய வீரர் ஆவார்.

‘கல்கத்தா ஜர்னல்’ (Calcutta Journal) என்ற பத்திரிகையை ஜேம்ஸ் 1818-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்தினார். கிழக்கிந்திய கம்பெனியில் நடைபெறும் ஊழல்களை அவர் அஞ்சாமல் வெளியிட்டதோடு நில்லாமல், இந்திய மூடப்பழக்க வழக்கங்களில் ஒன்றான உடன்கட்டை ஏறும் சதியை ஒழிக்க அவர் சேவை செய்தார். அதனால் அவரது பத்திரிகை மக்களிடையே பரபரப்பாக விற்பனையானது.

விடுவார்களா கம்பெனி ஆட்சியாளர்கள் ஜேம்ஸை? அதனால் 1823-ஆம் ஆண்டில் அவரை மீண்டும் தாய்நாடான இங்கிலாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்பி விட்டார்கள்!

இங்கிலாந்து சென்ற பக்கிங்ஹாம், அங்கும் வாளாவிராமல் ‘ஓரியண்டல் ஹெரால்டு’ என்ற பத்திரிகையை அங்கே துவக்கி, இந்தியாவில் கம்பெனி செய்யும் அக்கிரமங்களை ஜேம்ஸ் கண்டித்து எழுதினார். அவர் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரானார். கம்பெனிக்கு அளித்து வந்த வணிக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் மசோதாவை எதிர்த்து வாதிட்டார். இந்தியர்களுக்கும் கம்பெனி நிர்வாகத்தில் உரிய பங்களிக்க வேண்டுமென அவர் போர்க்கொடி உயர்த்தினார்.

பக்கிங்ஹாம், இராசாராமுடன் இணைந்தும், தனித்து நின்றும் தனது பத்திரிகைப் பணியைச் சிறப்பாக நடத்தி, இந்தியப் பத்திரிகை உலகுக்கு சுதந்தரம் வழங்க வேண்டும் என்பதற்காக ஓயாமல் உழைத்தார்.

இவ்வாறாக, இந்தியாவின் வடபகுதியில் பத்திரிகைச் சுதந்தரத்திற்காகப் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த உரிமைப் போர்களைக் கண்ட, வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற தலைமை ஆளுநர், சில ஒழுங்கு முறை வசதிகளைச் செய்து கொடுக்கத் திட்டங்களை வகுத்தார்!

இந்தியாவில் கிழக்கு இந்தியா கம்பெனியின் ஆட்சிக்கு மீண்டும் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்ற வாரன் ஹேஸ்டிங்ஸ். 1818-ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகைகளை அச்சேற்றுவதற்கு முன்பு, செய்திகளைத் தணிக்கை செய்ய வேண்டும் என்றிருந்த கட்டுப்பாட்டைத் தளர்த்தினார்.

பத்திரிகை ஆசிரியர்களுக்குரிய சில பொறுப்புக்களையும், உரிமைகளையும் அவர் வழங்கினார். அவருக்குப் பிறகு வில்லியம் பெண்டிங் பிரபு அதே பதவிக்கு வந்தார். பத்திரிகைகள் அனுபவித்தக் கெடுபிடிகளைத் தளர்த்தி, இந்திய மொழிப் பத்திரிகைகள் வளர்ந்திட மேலும் வசதிகளைச் செய்தார்.

அவருக்குப் பிறகு ஆக்லண்ட் பிரபுவும், எல்லன் பரோ பிரபுவும், ஹார்டிங்ஸ் பிரபுவும், டல்ஹௌசி பிரபுவும் 1836 - ஆம் ஆண்டு முதல் 1856-வரை தலமை ஆளுநர் பதவிக்கு வந்தார்கள். இவர்களுக்குப் பிறகு 1855- ஆம் ஆண்டு இறுதியில் மெட்காஃப் என்ற தலைமை ஆளுநர் கொண்டு வந்த பத்திரிகைச் சட்டம், வங்கம், பம்பாய், சென்னை, இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் பத்திரிகைகள் வளர்ச்சி பெற்றிட வழிசெய்தது.

இந்தத் தலைமை ஆளுநர்களது ஆட்சிக் காலத்தில் அச்சு இயந்திரங்களின் வளர்ச்சி புதுப்புது வகையில் தோன்றி அச்சுக் கலை முன்னேற்றத்தில் ஒரு மறுமலர்ச்சி உண்டானதால், பத்திரிகைகள் வேகமாகவும், புதுப்புது மேல் நாட்டு நுட்பங்களோடும், செய்திகளை விரைவாகச் சேகரித்து அனுப்பும் வசதிகளும் பெருகின. அதே நேரத்தில் உலக நாடுகளின் பத்திரிகை வளர்ச்சிகளில் ஏற்பட்ட அச்சுக்கலை முன்னேற்றங்களும் நம்மிடையே ஒன்றிணைந்து புதியதோர் இதழியல் யுகமே உருவானது. அதனால், இந்தியப் பத்திரிகைகளும் மேல்நாட்டு பத்திரிகைகளோடு போட்டியிடும் வளர்ச்சியும் பெற்றன.

அடக்குமுறை வேதாளம்
மீண்டும் மரமேறியது:

பிரிட்டிஷ்காரர்களுடைய புதிய தலைமை ஆளுநர்கள் ஓரளவு பத்திரிகை உரிமைகளைக் கொடுத்த நிலை மாறி, மறுபடியும் அடக்கு முறை என்ற வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையானது. காரணம், 1857-ஆம் ஆண்டில் உண்டான முதல் சுதந்தரப் போர்தான்!

1857 - ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மனித உரிமைப் போரை, இந்திய வரலாற்றின் முதல் சுதந்தரப் போரை, ஆங்கிலேயர்கள் ‘சிப்பாய் கலகம்’ என்று கூற ஆரம்பித்தார்கள்.

முதல் சுதந்தரப் போர், ஆங்கிலேயர்களது கம்பெனி ஆட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் நிலை குலையச் செய்துவிட்டது. இந்தியர்களின் இந்த ஆவேசப் போராட்டத்தைக் கண்டு கம்பெனி ஆட்சி பீதியடைந்தது; அச்ச முற்றது; இதற்குக் காரணம் பத்திரிகை பலமல்ல என்றாலும், பத்திரிகைகளை இந்தியாவில் வளரவிடுவது ஆபத்தானது என்று ஆட்சியாளர்கள் எண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த அச்சத்தால், 1857-ஆம் ஆண்டில் கம்பெனி நிர்வாக ஆட்சி ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு GAGGNG ACT அதாவது வாய்ப்பூட்டுச் சட்டம் என்று பெயரிடப்பட்டது-அப்போதைய பத்திரிகையாளர்களால்! இந்தச் சட்டத்தால் இந்திய இதழ்கள் வளர்ச்சி மிகவும் பாதித்தன.

விக்டோரியா
பேரரசி அறிக்கை

இந்த நேரத்தில் இங்கிலாந்துப் பேரரசி விக்டோரியா, ‘இந்தியா இனிமேல் இங்கிலாந்து நாட்டு ஆட்சிக்குக் கட்டுப்பட்டது’ என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டார். அத்துடன் கிழக்கு இந்தியக் கம்பெனி ஆட்சியின் நிர்வாகமும் முடிந்தது.

விக்டோரியா மகாராணி அறிவிப்பின்படி Lord Canning கேனிங் பிரபு என்பவர் முதல் வைசியராய் Viceroy என்ற பொறுப்பை இந்தியாவில் ஏற்றதும், பத்திரிகைகள் மீது போடப்பட்ட கெடுபிடி உணர்வுகள் சிறிது தளர்ந்தன. அந்தச் சூழ்நிலையால் 1853 - ஆம் ஆண்டில் “இந்து பேட்ரியட்” Hindu Patriot என்ற பத்திரிகையை கிரிஸ் சந்திர கோஷ் என்பவரும், 1868 - ஆம் ஆண்டில் ஷஷிர்ல் குமார் கோஷ் என்பவரால் “அமிர்த பஜார் பத்திரிகா” (Amrita Bazzar Patrika) என்ற இதழும், பிரம்ம சமாஜி யான கேசவ சந்திர சென் என்பவரால் 1870ல் ‘சுலப் சமாச்சார்’ (Sulab Samachar) என்ற பத்திரிகையையும் அடுத்தடுத்து வெளியிட்டார்கள்.

ஒன்றன்பின் ஒன்றாக இவ்வாறு பத்திரிகைகள் வெளிவந்துக் கொண்டிருப்பதைக் கண்ட அப்போதைய வைசியராய் லார்டு லிட்டன் பிரபு, இந்திய மொழி பத்திரிகைகள் வளர்ந்தால், ஆட்சிக்கு ஆபத்து என்று எண்ணி, இந்திய மொழி பத்திரிகைகளைக் கட்டுப்படுத்திட 1878- ஆம் ஆண்டில் தாய் மொழிப் பத்திரிகைச் சட்டம் (The Vernacular Press Bill) என்ற ஒரு சட்டத்தை இயற்றினார். இந்தச் சட்டத்தை அப்போதைய பத்திரிகையாளர்கள் அனைவரும், ‘இது ஓர் அடக்கு முறைச் சட்டம்’ என்று கடுமையாக எதிர்த்தார்கள்.

லிட்டன் பிரபுவுக்குப் பிறகு வைசியராயாகப் பதவி ஏற்றிட்ட லார்டு ரிப்பன் “Lord Roppor” 1882 - ஆம் ஆண்டில் லிட்டன் பிரபு சட்டத்தை அடியோடு அகற்றினார். பத்திரிகைகளுக்கு மனிதாபிமான உரிமைகளை வழங்கினார். லார்டு ரிப்பன் எங்களப்பன் என்று பொதுமக்கள் புகழ்ந்து பேசுமளவுக்குப் பத்திரிகைகளும் அவரைப் பாராட்டின. ஆனால், அவருக்குப் பிறகு பதவி ஏற்ற லார்டு எல்ஜின் Lord Elgyn, மிண்டோ பிரபு, செம்ஸ்ஃபோர்டு ஆகிய வைசியராய்கள் ஆட்சிகளில் பழைய லிட்டன் பிரபு அடக்குமுறைகளே தொடர்ந்து நடந்து வந்தன.