இதழியல் கலை அன்றும் இன்றும்/உலக நாடுகளில் உருவான

விக்கிமூலம் இலிருந்து

3

உலக நாடுகளில் உருவான

பத்திரிகை வளர்ச்சிகள்

றிவுக்கு வடிவம் மொழி! மொழிக்கு வடிவம் எழுத்து. எண்ணங்களின் வடிவமும் எழுத்துதான். எண்ணங்கள் எண்ணற்ற செயல்பாடுகளை வடிவமாக்குகின்றன.

இவற்றுக்கு மூலம் எது? மனம்! மனம்தான் மேற்கண்டவற்றுக்கு ஊற்றுக் கண்களாகின்றது. அந்த ஊற்றுச் சுரப்பிகள் பெருக்கும் நீர்த் துளிகளே சுவை பயக்கும் இனிய முடிவுகள்! அந்தந்த முடிவுகளின சிகரம்தான் நாம் வெற்றி கொள்ளும் வாழ்வியல் கூறுகள்!

உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் அந்தந்த நாடுகளில் வாகை சூடிய மக்கள் வாழ்வியல் கூறுகளில் ஒன்றுதான் நாம் தினந்தோறும் படிக்கும் பத்திரிகைகள், இதழ்கள், பருவகாலச் சுவடிகளான அறிவுப் படைப்புகளாகும்.

இங்கிலாந்தில் தோன்றிய
பத்திரிகை உலகம்

பத்திரிகைகளுக்கான முன்னோடி இதழ்கள் முதன் முதலாக இங்கிலாந்து நாட்டில் 17-வது நூற்றாண்டுக்கு முன்பே தோன்றியதாக The Concise Oxford Dictionary of English Literature 1939-ம் ஆண்டு பதிப்புக் கூறுகின்றது.

அந்த இங்லீஷ் அகராதி News Paper என்ற சொல்லுக்கு தருகின்ற விளக்கத்தில், “செய்தித்தாள் என்று கூறுவதற்கான முன்மாதிரி இதழ்கள் 17-வது நூற்றாண்டுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் ஆட்கள் மூலமாக நேரடியாக வழங்கப்படும் News Letters, News Pamphlets என்ற பழக்க வழக்க முறைகள்தான் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

ஆட்கள் மூலமாக மக்களுக்குச் செய்திகள் வழங்கப்படும் இவை போன்ற முறையை; பர்டன் என்பவர் 1614-ம் ஆண்டிலேயே தனது Anatomy of Melancholy எனும் பாம்ப்லேட் மூலமாகக் கண்டித்து எழுதினார். ஸ்பெயின் நாட்டில் தான் அந்த ‘நியூஸ் லெட்டர்’, ‘நியூஸ் பாம்ப்லேட்'டுகளுக்குச் செய்திகள் தயாரிக்கப்பட்டு வந்தனவாம்.

ஆனால், 1622-ம் ஆண்டின் மே மாதம் வரை; அந்தச் செய்தித் தயாரிப்பு முறைகள் முதன் முதலாக வெளி வரவில்லை. அதற்குப் பிறகு, நத்தானியல் பட்டர், Nathaniel Butter நிகோலஸ் பெளர்னே, Nicholas Bourne, தாமஸ் அர்ச்சர் Thomas Archer என்பவர்கள் ஓரணியாக ஒன்றுகூடி ‘கொரண்டே’ ‘Corante’ என்ற ஒரு பத்திரிகைக்காக செய்திகளைத் தயாரித்தார்கள்.

அந்த அணியினர் தயாரித்த ‘Corante’ என்ற பருவ காலச் சுவடி, அந்த நூற்றாண்டு முழுவதும் மக்கள் இடையே பரவி கருத்து வளர்ச்சியையும், படிக்கும் உணர்ச்சியையும் தூண்டிவிடும் ஒரு சக்தியாக அமைந்தது.

இங்கிலாந்து நாட்டில் அப்போது உருவான அரசியல் நெருக்கடித் தொல்லைகளால், புதுப்புது Periodicals பருவ இதழ்கள், புற்றீசல்கள் போல தொடர்ந்து புறப்பட்டு வெளிவந்தன. இந்தப் பருவச் சுவடிகளில் பெரும்பான்மையான இதழ்கள் வாரம் மும்முறையாக வெளி வந்து மக்களிடையே பரபரப்பை யூட்டி படிக்கும் உணர்ச்சியை உருவாக்கின. உலகத்தின்
முதல் நாளேடு

வாரம் மும்முறை வெளிவரும் இந்த பருவச் சுவடிகள் குழுவிலிருந்து; 1703ம் ஆண்டில் ‘டெய்லி கொரண்ட்’ “Daily courant” என்ற முதல் தினசரி செய்தித்தாள் முதன் முதலாக வெளிவந்தது. இந்த நாளேடுதான் உலகத்தின், குறிப்பாக கிரேட் பிரிட்டனின் முதல் செய்தித்தாள் என்ற பெயரையும் புகழையும் பெற்று, மக்கள் இடையே தொண்டு செய்தது என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

‘குயின் அன்னிஸ்’ என்பவர் காலத்தில் குறிப்பிடத்தக்க ஒரு திறமையாளர் குழுவினர், தங்களது அறிவுக் கொடைகளாகச் செய்திகளைச் சேகரித்து, மக்கள் அவர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டும் வகையில் பருவ காலச் சுவடிகளுக்காக அறிவுத் தொண்டு புரிந்து வந்தார்கள். அவர்களால் பருவ கால இலக்கியத் துறை வேகமாக வளர்ந்தது; முன்னேறியது.

அவர்களுள் குறிப்பாக டிஃபோ Defoe என்பவர்தான்; இங்லீஷ் மொழியிலேயே மிகப் பெரிய முதல் பத்திரிகையாளர் என்று இங்கிலாந்து மக்களால் போற்றப்பட்டவராவார். அவர் மட்டுமன்று, சற்றேறக்குறைய அதே ஆண்டுகள் இடையில் ஸ்டீலி, Steele ஸ்விப்ட், Swift அடிசன் Adoison என்பவர்களும் புகழ் பெற்ற பத்திரிகையாளர்களாக வளர்ந்திருந்தார்கள்.

அப்போது வெளிவந்துக் கொண்டிருந்த பத்திரிகைகளுக்கு உருவான அரசியல் முக்கியத்துவங்களால் அந்த இதழ்களின் விற்பனைகள் பெருகின. பிரதிகளும், அதிக அளவு அச்சடிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அப்போதைய பிரிட்டிஷ் அரசு பத்திரிகைகளுக்காக வழங்கிய அஞ்சல் போக்கு-வரத்து வரியைக் குறைத்துக் கொள்ளாமல், அதிக வரிகளையே பத்திரிகைகள் மேல் வசூலித்தது.

அரசு உதவிப் பொருட்களை வழங்கும் அனுமதியைப் பெற்ற பத்திரிகையை நடத்தி வந்த பலருள் ஒருவரான வால்போல் Walpole என்பவர், ஆண்டுக்கு ஐயாயிரம் பியூரோக்களை அஞ்சல் செலவுகளுக்காகச் செலவிடும் பரிதாப நிலை ஏற்பட்டது.

வால்போல் என்பவரைப் போலவே, எதிர்கட்சியைச் சேர்ந்த ஹென்றி ஃபீலீடிங் Henry Fielding என்ற பத்திரிகையாளரும் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில்
ஸ்டாம்பு புகார்!

‘ஜெண்டில்மேன்’ “Gentleman” என்ற பத்திரிகையை நடத்தி வந்த ஜான்சன் என்பவர், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அரசியல் வாதங்களை எழுப்பும் உறுப்பினர்களுக்கு இந்த அஞ்சல் குறைபாடுகளைப் பற்றிப் புகார் செய்தார்.

எனவே, 18ம் நூற்றாண்டு முழுவதுமாக, எந்த ஒரு பத்திரிகையும், அபூர்வமாகவே விற்பனையாகி வந்தது-காரணம், 5000 பிரதிகளுக்கு மேல் அவர்களால், விற்பனை செய்ய முடியாத அஞ்சலக வரித் தொல்லைகள் நீடித்ததுதான்.

இந்த நேரத்தில் பத்திரிகைகளை மிக மலிவாக வேகமாக அச்சடிக்கக் கூடிய அச்சு இயந்திர வகைகள் புதுப் புது முறையில் வெளி வந்துக் கொண்டிருந்தன. இந்த இயந்திரம் மூலம் பத்திரிகைகளை அச்சடித்து வழங்கும் வசதிகளை, ஜான் வால்டர் John Walter என்பவர் 1775ம் ஆண்டில், அவர் ஆரம்பித்த The Times என்ற பத்திரிகை மூலமாக மற்றவர்களுக்கும் அந்த வசதிகளைச் செய்து கொடுத்தார்.

கி.பி. 1772ம் ஆண்டில் டேனியல் ஸ்டூவர்ட் Danial Stuart என்பவர் ‘காலை தபால்’ (The Morning Post) என்ற‌ொரு, பத்திரிகையைத் துவக்கி நடத்தினார். அவரது ஏடு பருவ இதழானதால், தனக்கு முன்பு வாழ்ந்த பேரறிவாளர்கள் எழுதி வைத்த இலக்கிய வடிவங்களின் பழைய சிந்தனைகளைத் தனது பத்திரிகையிலே மீண்டும் நினைவுபடுத்தி எழுதி வந்தாா்.

பிளேட்டோ
தத்துவம்:

‘Platonic Doctrine of Reminiscence’ என்ற கொள்கை விலை மதிக்க முடியாத, மிக உயர்ந்த, பெருமை வாய்ந்த, அருமையான கிரேக்கப் பேரறிஞர் பிளேட்டோ என்ற தத்துவஞானி உருவாக்கிய சித்தாந்தம் ஆகும். இந்த பிளேட்டோவின் கோட்பாட்டைச் சிந்தாமல், சிதறாமல் அப்படியே பின்பற்றித் தனது ‘மார்னிங் போஸ்ட்’ என்ற பருவ இதழில் டேனியல் ஸ்டூவர்ட் எழுதினார்.

இதே பத்திரிகையில்தான் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான கோல்ரிட்ஜ், Coleridge தனது கட்டுரைகளை அப்போது எழுதி வந்தார். அதனால் சிறிது சிறிதாக 1834ம் ஆண்டில் அந்த ‘தி டைம்ஸ்’ என்ற பத்திரிகை 10,000 பிரதிகள் வரை விற்றன. 1834ம் ஆண்டில் 23,000 பிரதிகள் விற்றன. 1854ம் ஆண்டில் அதன் விற்பனை 51,000 ஆயிற்று.

ஜான் ஸ்டார்ட் டார்ட், ‘தி டைம்ஸ்’ பத்திரிகையைப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். 1816ம் ஆண்டில் தாமஸ் பார்னெஸ் அதன் ஆசிரியராக இருந்தார். அந்த பத்திரிகைத்தான் உலகத்தில் முதன் முதலாக அயல்நாட்டு நிருபர்களை ஆங்காங்கே பணிபுரிய நியமித்த முதல் பத்திரிகை ஆகும். அவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் வெளிநாட்டு நிருபர் பெயர் கிராப் ராபின்சன் என்பவர் ஆவார்.

அதற்குப் பிறகு இங்லீஷ் பத்திரிகை உலகம் 19ம் நூற்றாண்டினை நோக்கி இறுதிவரைப் புதிய மறுமலர்ச்சிப் பாதையில் அறிவு உலா வந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் முற்போக்கு எண்ணமுடைய இங்கிலாந்து பத்திரிகைகள், அவற்றின் அறிவுக் கூர்மையாலும், புதுப் புது கருத்துக்களை வெளியிடுவதாலும், நாட்டு நடப்புகளை மக்கள் விரும்பும் வகையில் பிரசுரித்ததாலும், ஏறக்குறைய 20 லட்சம் பிரதிகள் விற்பனையாகி மக்களை அறிவுக் கடலில் ஆட வைத்தன. 1938ம் ஆண்டு வரை இங்கிலாந்து இதழியல் உலகம் கொடிக் கட்டிப் பறந்து கொண்டிருந்தது.

இன்று இங்கிலாந்து பத்திரிகை உலகத்தை மாடர்ன் ஜார்ன்லிசம் ஆக்ரமித்துக் கொண்டு உலக முன்னேற்றத்துக்காக உழைத்து வருவதைப் பார்க்கின்றோம்.

நார்வே நாட்டுப்
பத்திரிகை சேவை

உலகப் புகழ் பெற்ற நாடகப் பேராசிரியர் இப்சன் என்பவரின் நண்பர் பிஜோர்ன்ஸ்ட், ஜெர்ன் பிஜோர்ன்சன் (Bjorrst Jern Bjornson) என்பவர் ‘மார்கன் பிளாடட்’, Margan Plata” என்ற நாளேட்டை, 1854ம் ஆண்டில் அவர் நடத்தினார். அந்தப் பத்திரிகையில் இலக்கியம், அரசியல், கவிதைகளை வெளியிட்டார். இப்சன் அந்த பத்திரிகையில் புகழ் பெற்ற நாடக விமர்சனங்களை எழுதிப் புகழ் பெற்று உலகுக்கு அறிமுகமானார். இல்லஸ்ட்ரேட்டட் ஃபோக் பிளாட் என்ற தினசரி பத்திரிகையை பியார்ன்ஸ்சன் என்பவர் துவக்கி, அந்தக் காலத்திலேயே கலைத் துறையில் பெரும் புரட்சி செய்தார். மக்கள் அந்த நாளேட்டை விரும்பி வாங்கிக் கலைத்துறை மறுமலர்ச்சிக்கு ஆதரவளித்தார்கள்.

நமது இந்திய நாட்டில் நாம் இன்று பாடி வரும் ‘ஜனகனமன அதி நாயக ஜெயகே’ என்ற பாடலைப் போல ‘நார்வே பூமியை நாம் நேசிக்கிறோம் என்ற பொருளில் ஒரு தேசிய கீதம் பாடலைப் பியார்ன்சன் எழுதினார். அந்தப் பாடல் பிற்காலத்தில் நார்வே நாட்டிற்கு 1859ம் ஆண்டில் தேசிய கீதப் பாடலாகிப் புகழ் பெற்றது.

அந்த ஆசிரியர் நார்வே தேசிய கீதம் போன்ற பல பாடல்களை எழுதியதோடு நில்லாமல் - கலைத் துறையிலும், மதத் துறையிலும், தனது சீர்த்திருத்தக் கருத்துக்களை எழுதியதால், அந்த நாட்டு ஆட்சியின் எதிர்ப்புகளை அவர் ஏராளமாகப் பெற்றவரானார்.

பியார்ன்சன், அந்தக் காலத்திலேயே நார்வே அரசு செய்து வந்து பல அரசு தில்லுமுல்லு ஊழல்களைச் சாடினார். சமுதாயச சீர்கேடுகளை மிக வன்மையாகக் கண்டித்துப் புகழ் பெற்ற அந்த ஆசிரியர், நாடகமேதை இப்சன் எழுதிய நாடகங்களின் புகழையும் மீறிக் கட்டுரைகள் மூலமாக எழுதிப் புகழ் பெற்றார்.

1903-ம் ஆண்டில் அவர் தனது வன்மையான கட்டுரை, கவிதை எழுத்துக்களால், நார்வே நாட்டு மக்கள் இடையே பெற்ற அரும் செல்வாக்குக்காக நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளராக ஆனார். 26.4.1910ஆம் ஆண்டில் அந்த எழுத்துலக மேதை மரணமடைந்தார்.

அமெரிக்கா
‘சிகாகோ சன்’

அமெரிக்க நாட்டிலுள்ள சிகாகோ என்ற நகரிலிருந்து எரிக்பியர்சன் என்பவர் ‘சிகாகோ சன்’ என்ற வாரப் பத்திரிகையைத் துவக்கினார்.

அந்தப் பத்திரிகை, அமெரிக்க அரசின் மீது மக்கள் சாட்டிய வதந்திகளை எதிர்த்து, ‘புரட்சி’ என்ற பெயரில் தொடர் கட்டுரைகளை 22.10.1906ம் ஆண்டு முதல் எழுதி வந்தார்.

எரிக்பியர்சன் கட்டுரைகள் சிகாகோ மக்களையே திணறடித்தது. மக்களிடையே பரவும் வதந்திகளைக் கண்டிக்கும் சீர்த்திருத்தவாதி என்ற பெயரை அவர் பெற்றார்.

நியூயார்க்
“டிராமடிக் மிரர்”

அமெரிக்காவிலே இருந்து நியூயார்க் ‘டிராமடிக் மிரர்’ என்ற ஏடு ஒருவரால் நடத்தப்பட்டது. அந்த வாரப் பத்திரிகைக்கு அதிக செல்வாக்கு ஏற்பட்டதால், மாட்ரீட் நகரத்தில் மட்டும் 17 ஆயிரம் பேர் சந்தாதாரர்களாக இருந்தார்கள். நோபல் பரிசு பெற்ற ஜோஸ் எச்சகார் அந்தப் பத்திரிகையில் தொடர் விமர்சனம் எழுதிப் புகழ் பெற்றார்.

‘பிராவங்கல்
களஞ்சியம்’

பிரான்ஸ் நாட்டில் 1854ம் ஆண்டில் புகழ் பெற்ற கவிஞராக இருந்த பிரடெரிக் மிஸ்ட்ரால் என்பவர் ‘பிராவங்கல் களஞ்சியம்’ என்ற ஆண்டுக்கு ஒரு முறை வெளி வரும் ஆண்டு இதழைத் துவக்கினார்.

அந்தக் காலத்திலேயே அந்தக் களஞ்சியம் என்ற ஆண்டு இதழ் 10 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்று மக்களிடையே சாதனை புரிந்தது.

கவிதைத் துறை வளர்ச்சிக்காக தொண்டு செய்த ஓர் ஒப்பற்ற பத்திரிகை என்ற பெயரை நிலை நாட்டியதால், அது 1904-ஆம் ஆண்டுக்கான் நோபல் பரிசைப் பெற்றது.

ஆண்டுக்கு ஒருமுறை வெளிவந்த வருடப் பத்திரிகையில் அதுதான் முதல் பத்திரிகை. 1904ம் ஆண்டுக்காக அந்த இதழாசிரியர் பிரடெரிக் மில்ட்ரால் நோபல் பரிசைப் பெற்றார்.

இத்தாலி நாட்டின்
முதல் சிறுவர் பத்திரிகை

இத்தாலி நாட்டுப் பெருங் கவிஞர்களுள் ஒருவராக வாழ்ந்த கியாசு கார்டுக்கி என்பவர், ‘அப் பண்டிக்ஸ்’, Appendix என்ற பத்திரிகையில் இலக்கியப் பகுதி ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணி புரிந்தார். அவர் ‘ரைம்ஸ்’ என்ற மிகப் பெரிய கவிதைத் தொகுப்பை அந்தப் பத்திரிகையில் எழுதினார்.

அந்தக் கவிதைகளை எல்லாம் தொகுத்து ஒரு கவிதைப் புத்தகமாக 1857ம் ஆண்டில் கார்டுக்கி வெளியிட்டார். அந்தக் கவிதைகளின் அருமைக்காக 1906ம் ஆண்டில் அவர் நோபல் பரிசு பெற்றார். உலகில் முதன் முதல் நோபல் பரிசு பெற்ற சிறுவர் பத்திரிகை இதுதான்!

இந்தியாவில் பிறந்தவரால்
இங்கிலாந்துக்குப் பெருமை

ஆங்கில இலக்கிய உலகில் அணையா விளக்காக ஒளிவிட்ட ரூட்யார்டு கிப்ளிங், இந்தியாவில் இன்று மும்பை என்று அழைக்கப்படும் பம்பாய் மாநகரில் 30.12.1865ம் ஆண்டில் பிறந்தவர். 

உலகப் புகழ் பெற்ற அந்த சிறுவர் இலக்கிய சிறுகதை மேதை; இந்தியாவிலுள்ள லாகூர் நகரிலிருந்து வெளிவரும் ‘சிறுவர் மிலிடரி கெசட்’ என்ற பத்திரிகையில் தொடர் கதைப் பகுதி ஆசிரியராகச் சேர்ந்தார்.

இதற்குக் காரணம், ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து தங்கிவிட்ட ஓர் ஆங்கிலேயச் சிற்பியின் மகன் அவர் என்பதால், கிப்ளிங் ‘சிவில் மிலிடரி கெசட்’ பத்திரிகை ஆசிரியரானார். அவரது எழுத்துக்களைப் படித்த 19ம் நூற்றாண்டின் வாசகர்கள் இதோ ஒரு புதிய எழுத்தாளர் தோன்றியுள்ளார் என்று அவரை பாராட்டலானார்கள்.

இந்தியாவில் எழுதிப் பெயர் எடுப்பதைவிட, இங்கிலாந்தில் பெயரெடுத்தால், அது உலகப் புகழாக மாறும் என்று கருதிய கிப்ளிங்; 1889ம் ஆண்டில் இலண்டன் மாநகர் சென்றார்.

தனது கப்பல் பயணத்தைக் கிப்ளிங் கட்டுரைகளாக எழுதி, இந்தியாவிலே இருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘பயணீர்’ என்ற பத்திரிகையில் வெளியிடச் செய்தார்.

‘இலண்டன் டைம்ஸ்’ என்ற நாளேடு அவருடைய இந்திய நூற்களை எல்லாம் சிறப்பாக விமர்சனம் செய்து எழுதியதால், அவரது எழுத்துக்கள் உலகில் வானளாவும் புகழைப் பெற்றன.

கிப்ளிங், சிறுவர்களுக்கான சிறுகதைகளை ‘இலண்டன் டைம்ஸ்’ பத்திரிகையில் எழுதினார். அந்தக் கதைகள் Just so Stories என்ற தலைப்பில் நூலாக வெளியானாது. பிரிட்டனுடைய பழைய வரலாற்றுப் பெருமைகளைச் சிறுவர்கள் சிந்தனைக்காக Pack of Pook’s Hill என்ற பெயரில் அவர் வெளியிட்டதும், மாணவ, மாணவிகள் இடையே அந்த நூல் பெரும் புகழ் பெற்றது.

அவர் எழுதிய கருத்துக்களை எல்லாம் - பத்திரிகைகளிலும் நூல்களிலும் படித்த உலக எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும், ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ்,  எடின்பரோ, டர்ஹாம் பல்கலைக் கழகங்களும் பாராட்டுதல்களை வழங்கி, பல பட்டமளிப்புக்களை ஈந்தன. பாரீஸ், ஏதென்ஸ், டொராண்டோ போன்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் கிப்ளிங் எழுத்துப் புரட்சியை வரவேற்றுப் பாராட்டிப் பட்டமளித்தன்.

உலகப் புகழின் சிகரத்தின் மேல் வீற்றிருந்த ரூட் யார்டு கிப்ளிங் என்ற பத்திரிகை எழுத்தாளருக்கு, சிறுவர் சிறுகதை ஆசிரியருக்கு 1907ம் ஆண்டில் நோபல் பரிசு கிடைத்தது.

பத்திரிகையாளர் உலகில் நீண்ட நெடுங்காலம் புகழுடன் வாழ்ந்த கிப்ளிங், 1936ம் ஆண்டில் மரணமடைந்தார்.

ஸ்வீடிஷ் பெண்
பத்திரிகை எழுத்தாளர்

செல்மா லாகர் லஃப் என்ற பெண் எழுத்தாளி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியை. இவர் 1858ம் ஆண்டு வார்ம்லாந்து என்ற மாநிலத்தில் பிறந்த ஓர் இராணுவ அதிகாரியின் மகள்.

செல்மா பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே, ஸ்வீடன் நாட்டிலே இருந்து வெளிவந்த ‘ஐ தூன்’ என்ற பத்திரிகையில் ஓராண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர் கதைப் பகுதி ஆசிரியராக இருந்தார். கோஸ்ட்டா பெர்லிங் சாகா என்ற அந்த தொடர் கதை புத்தகமாக வெளி வந்தது. அதைப் படித்த டேனிஷ் பத்திரிகை ஒன்றின் விமர்சகராக இருந்த ஜார்ஜ் பிராண்டிஸ் என்பவர் காதல் இயக்கத்தின் அற்புதப் படைப்பு அதாவது Romantic Movement என்று பாராட்டி மதிப்புரை எழுதினார். அந்த முதல் நாவல் உலகப் புகழ் பெற்று விட்டது.

செல்மாவின் எண்ணற்ற அற்புதப் படைப்பு இலக்கியங்களுக்காக, 1909ம் ஆண்டில் அவர் நோபல் பரிசு பெற்றார்.

பெல்ஜியம்
பத்திரிகையாளர் :

பெல்ஜியம் என்ற நாட்டின் புகழ் பெற்ற இலக்கிய வித்தகராக விளங்கியவர் மாரிஸ் மேட்டர் லினிஸ் Maurice Maeter Linis என்பவர். சிறந்த கவிஞராகவும், கட்டுரையாளராகவும், கதாசிரியராகவும் புகழ் பெற்றவர். இவர் 1862ம் ஆண்டில் பிறந்தவர்.

ஆக்டேவ் மிர்பியூ என்ற பத்திரிகையில் மேட்டர் லிங்க் எழுதிய பிரின்சஸ் மாலினி என்ற கதையைப் பாராட்டி, இதோ ஒரு பெல்ஜியம் சேக்ஸ்பியர் என்று மற்ற பருவ இதழ்கள் எழுதியதால், மேட்டர் லிங்க் புகழ் உலகெலாம் பரவியது. அந்த பத்திரிகையில் வெளி வந்த அவரது நாடகம், மக்கள் செல்வாக்கைப் பெற்றதால் பத்திரிகையின் விற்பனை அதிகமானது. அவர் எழுத்து மீது வேட்கை கொண்ட அந்த பத்திரிகை அவரை நாடகப் பகுதியின் விமர்சன ஆசிரியராக நியமித்துக் கொண்டது.

மேட்டர் லிங்க் நாடகங்கள் எல்லாம் மனித நேயத்தின் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் கண்ட நோபல் பரிசு நிறுவனம்; அவருக்கு 1911ம் ஆண்டில் பரிசை வழங்கிப் பாராட்டியது.

தாகூர் ‘கீதாஞ்சலி’யை
இலண்டன் வெளியிட்டது

கவிஞர் இரவீந்திர நாத் தாகூர் 1912ம் ஆண்டில் இலண்டன் மாநகரம் சென்று, புகழ் பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் பட்லர் ஈட்சையும், பெருங்கவிஞர் எஸ்ரா பவுண்டையும் சந்தித்தார்.

‘கீதாஞ்சலி’ என்ற பெயரில் தான் எழுதிய கவிதைகளை தாகூர் லண்டன் கவிஞர்களுக்குப் படித்துக் காட்டினார். தாகூரின் கற்பனைகளையும், கவிதைப் புலமைத் திறனையும் கண்ட அக்கவிஞர்கள், தாகூரிடம் இருந்த ‘கீதாஞ்சலி’ என்ற கவிதை நூலைப் பெற்று லண்டனில் ஹாரியத் மன்றோ என்ற பத்திரிகையாளர் நடத்தி வந்த ‘கவிதை’ என்ற பத்திரிகைக்கு அனுப்பி வெளியிட வைத்தார்கள்.

‘கீதாஞ்சலி’ கவிதையை, ‘கவிதை’ Poetry என்ற பத்திரிகையில் வெளியானதைக் கண்ட இங்கிலாந்தில் புகழ் பெற்றக் கவிஞர்கள், கல்விமான்கள் அனைவரும் அவரைப் பாராட்டிப் போற்றினார்கள். தாகூரின் புகழ் உலகெலாம் பரவியதால் அவர் உலகப் பெருங்கவிஞர்களுள் ஒருவராக மதிக்கப்பட்டார்.

‘கீதாஞ்சலி’யின் கவிதைப் புலமை எங்களைப் பெரிதும் ஈர்த்து விட்டது என்று கூறி, நோபல் நிறுவனம் 1913ம் ஆண்டில் தாகூருக்கு நோபல் பரிசை வழங்கிப் பாராட்டியது.

இலண்டனிலுள்ள ‘கவிதை’ என்ற பத்திரிகை தாகூர் கவிதையை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியதால், பத்திரிகைத் தொண்டு ஒருவரை எந்த அளவு வானுயரத்திற்கு உயர்த்தி விட்டது பார்த்தீர்களா? இதுதான் பத்திரிகையின் அறிவறம் - இல்லையா?

‘டைம்ஸ் பத்திரிகையாளர்
அனதோல் ஃபிரான்ஸ்:

பிரெஞ்சு நாட்டின் புகழ் வாய்ந்த எழுத்தாளர்களில் ஒருவரான அனதோல் ஃபிரான்ஸ் ஒரு புத்தக வியாபாரியின் மகன். அவர் The Times என்ற செய்தித்தாளில் 1886ம் ஆண்டு முதல் 1893ம் ஆண்டுவரை இலக்கிய விமர்சகராகப் பணியாற்றியவர்.

ஃபிரான்ஸ்; 1881ம் ஆண்டில் ‘லா கிரைம் டி இல்வஸ்டர் போனார்டு’ (The crime of Sylvester Bonnard) என்ற நாவலை எழுதினார். அந்த நாவல் ‘டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த போது, பிரெஞ்சு மக்கள் அவரை பலப்பட பாராட்டினார்கள். அதனால் பத்திரிகை பரப்பரப்பாக விற்பனையானது.

அனதோல் ஃபிரான்ஸ் எண்ணற்ற நாடகங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதியிருந்தாலும், அவற்றுள் 1900ம் ஆண்டின் எழுதப்பட்ட ‘Monsieur Bergert of Paris’ என்ற வரலாற்று நாவல் உலகப் புகழ் பெற்றதாகும்.

ஒரு யூத இன தளபதியான ஆல்பிரட் டிரைபஸ் மீது தொடரப்பட்ட பொய் வழக்கைக் கருவாக வைத்து, ஒரு வரலாற்று நூலை ஃபிரான்ஸ் எழுதினார். அந்த பொய் வழக்கை உடைத்தெறிந்து யூத தளபதி நிரபராதி என்று வாதாடும் வரலாற்று அடிப்படை நூல் அது. மக்கள் இடையே அந்த நாவல் மிகவும் பரப்பரப்பாக விற்பனையானதால், பத்திரிகையும் செல்வாக்கு பெற்றுவிட்டது.

‘எமிலிஜோலா’ என்ற எழுத்துலக அரிமா, ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற தலைப்பில் ஒரு மனுவை தயாரித்து, அந்தப் பொய் வழக்கிற்காக நீதிமன்றத்தில் வழக்காடிய வரலாறும் உள்ளது.

உலகப் புகழ் பெற்ற இத்தகைய ஒரு பொய் வழக்கை உடைத்தெறிந்த வரலாற்று நாவலை எழுதிய ஜாக்குவஸ் அனதோல் ஃபிரான்சிஸ் தைபால்ட்டுக்கு 1921ம் ஆண்டின் நோபல் பரிசு கிடைத்தது.

அயர்லாந்து பத்திரிகையாளர்
ஜார்ஜ் பெர்னாட்ஷா!

உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நாடக ஆசிரியரான ஜார்ஜ் பெர்னாட்ஷா, 26.07.1856-ஆம் ஆண்டு அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் என்ற ஊரில் பிறந்தார்.

தனது 27வது வயதில் அவருக்கு இலக்கியத் துறையிலும், எழுத்துத் துறையிலும் இருந்த ஆர்வத்தால் 5 நாவல்களை எழுதி முடித்தாரே ஒழிய, ஒன்றுகூட புத்தகமாக வெளிவர முடியவில்லை. ஆனாலும், ‘ஷா’ தொடர்ந்து எழுதுவதிலேயே அக்கறை காட்டினார். ‘தி பால்மால் கெசட்’ “The Pall mall Gazette”என்ற பத்திரிக்கைக்கு அவர் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார்.

கி.பி. 1885 முதல் 1888 வரை ‘தி வோர்ல்டு’ “The World” என்று அயர்லாந்தில் புகழ்பெற்றிருந்த் பத்திரிகையில் ஷா எழுதினார். இசை, நாடகம் ஆகியவற்றை விமர்சனம் செய்யும் பகுதியில் பணியாற்றிட ‘தி ஸ்டார்’ “The Star” என்ற பருவ இதழின் ஆசிரியர் வேண்டுகோளை ஏற்று விமர்சக ஆசிரியராக எழுதி வந்தார்.

‘தி சாட்டர் டே ரெவ்யூ’ “Saturday Review” என்ற பத்திரிகையில் ‘ஷா’ மூன்றாண்டு காலம் நாடக விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். அந்த இடை நேரத்தில் தான் உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியரான இப்சனுடைய நாடகக் கோட்பாட்டை ஏற்று The Quintesence of Ibsenism என்ற நூலை எழுதியதால், அந்த புத்தகத்தைப் படித்து அறிஞருலகமே வியந்தது.

தமிழ் நாட்டு தேசிய கவிஞரான பாரதியார், பாஞ்சாலி சபதம் என்ற நூலை ஒரு புதிய நோக்கில் எழுதியதைப் போல ‘ஷா’வும் சேக்‌ஷ்பியரின் ‘ஜூலியஸ் சீசர், ஆண்டனியும் கிளியோபாத்ராவும்’ என்ற நாடகங்களை, மாறுபட்ட கோணத்தில் படைத்திருப்பதைக் கண்டு இங்கிலாந்துக் கல்விமான்கள், ஏழ்மை நேய ஏற்றத் தாழ்வுகளை அவர் தனது நாடக உறுப்பினர்கள் மூலம் முற்போக்குச் சிந்தனைகளிலே வைத்துள்ளதைப் படித்து, சேக்‌ஷ்பியரின் சிந்தனையைவிட, ‘ஷா’ வின் சுவை மாறுப்பட்டிருப்பதைக் கண்டு உலகமே திகைத்து வியந்தது.

கி.மு. 48-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக எழுதப்பட்ட நாடகப் போக்கை, உணர்வை; கி.பி. 20-ஆம் நூற்றாண்டில் வாழும் மக்கள் வாழ்க்கையோடு பாத்திரப் படைப்புகளை ஒப்புநோக்கி சித்தரித்தார் ஷா.

‘மை ஃபேர் லேடி’ என்ற ஷாவின் நாடகம் அமெரிக்காவில் 2281 தடவையும், இலண்டனில் 2281 முறையும் நாடகமாக மேடையேறி நடந்த சம்பவம் - ஷாவுக்கு உலக நாடக அரங்கில் அழியாப் புகழை நிலை நாட்டியது.

சுருங்கக் கூறுவதானால், நான்கு பத்திரிகைகளில் பணியாற்றிய ஷாவின் திறமை, கால சூழ்நிலை, சிந்தனை மறுமலர்ச்சிகளால் அவர் வரைந்த நாடகங்கள் எல்லாமே உலகுக்கு நகைச்சுவை நயம் வழங்கியதோடு நில்லாமல், பெரும் நாடக வித்தகர் என்ற பெயரையும் அவருக்குத் தேடித் தந்தன எனலாம்.

பத்திரிகைப் பணிகளின் ஈடுபாட்டால், ஷா தனது நாடக ஓவியங்களை எல்லாம் மேதை சேக்ஸ்பியரைப் போல கவிதை வடிவிலே எழுத முடியாமல் உரைநடை வாயிலாகவே எழுதினார்.

ஜார்ஜ் பெர்னாட்ஷா தனது அரிய இலக்கிய சேவைகளுக்காக 1925ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற நாடக மேதையாக மக்கள் நெஞ்சில் நடமாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமையனும் - தம்பியும்;
ஜெர்மன் பத்திரிகையாளர்கள்!

ஜெர்மன் இலக்கிய சிற்பிகள் தாமஸ் மாண் ‘Thomas Mann’, அவரது உடன் பிறந்த சகோதரரான ஹென்றி மான் என்ற இருவரும் பத்திரிகைத் துறையிலே முறையாகப் பயிற்சி பெற்ற மேதைகளாவர்.

பத்திரிகைத் துறையில் தமையன் பெற்ற பெரும் புகழைத் தானும் பெற விரும்பிய தாமஸ் மாண் ‘சிம்ப்ளி சிசிம்ஸ்’ என்ற நகைச்சுவை வாரப் பத்திரிகையைத் துவக்கினார். அந்த ஏட்டில் அவர் சிறுகதைகளை எழுதி புகழ் பெற்றார். அதே நேரத்தில் இட்லர், முசோலினி போன்ற பாசிஸ்ட்டுகள் ஊழலை மிக வன்மையாகத் தனது பத்திரிகையில் கண்டித்து எழுதினார்.

1901-ஆம் ஆண்டில் தனது இதழில் தொடர்கதையாக எழுதி வந்த நாவலை நூலாக்கி, அதற்கு பட்டன்புரூக்ஸ் என்று பெயரிட்டார். இந்த நூலை எழுதியதால் அவரை ஜெர்மானிய இலக்கிய உலகின் விடிவெள்ளி என்று உலக அறிஞர்கள் பாராட்டினார்கள். 1929-ஆம் ஆண்டு தாமஸ் மாண் நோபல் பரிசைப் பெற்றார்.

அமெரிக்க பத்திரிகையின்
துணை ஆசிரியர் சிங்க்ளேர்

அமெரிக்காவிலே உள்ள மினிசோடா மாநிலத்தில் சாக் மையத்தில் 7.2.1885-ஆம் ஆண்டில் பிறந்தவர் சிங்க்ளேர் லெவிஸ். Sinclair Lweis. அவர் டென்னிசன், ஸ்வின்பர்ன் போன்றோர் கவிதைகளைப் பின்பற்றி எழுதுவதிலே வல்லவராக விளங்கினார். 

பள்ளியிலும், கல்லூரியிலும் சிங்க்ளேர் படித்தபோது பத்திரிகைகளுக்கு கவிதைகளை கட்டுரைகளை எழுதி அனுப்புவார். அவை தொடர்ந்து வெளிவந்து அவரை உற்சாகப்படுத்தின.

‘ட்ரான்ஸ் அட்லாண்டிக் டேல்ஸ்’, “Trabs Atlantic Tales” என்ற பத்திரிகையில் சிங்க்ளேர் துணையாசிரியராகப் பணியாற்றினார். அந்த இதழில் அவர் எழுதிய ‘நமது திருவாளர் ரென்’ (cur Mr. Wrenn) என்ற தொடர் புத்தகமாக வெளி வந்து புகழ் பெற்றது.

அமெரிக்க இலக்கிய விமர்சகர்களும், குறிப்பாக பழங்கால இலக்கிய எழுத்தாளர்களான ஜேன் ஆஸ்டின், ஜார்ஜ் எலியட் ஆகியவர்களது திறமைகளை சிங்க்ளேர் வென்று விட்டார் என்று மக்கள் பாராட்டினார்கள். அமெரிக்க இலக்கிய வித்தகரான பெர்லி மில்லர், சிங்க்ளேர் இலக்கியத் திறமைகளை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்.

பொது வாழ்க்கையில் புகுந்து கொண்டு மக்களைப் பண மோசடி செய்கின்ற ஊழல்வாதிகளையும், பதவி வெறியர்களையும் சிங்க்ளேர் கடுமையாகக் கண்டித்த அவரது எழுத்துப் பாணி எப்படி இருந்தது தெரியுமா?

சிங்க்ளேர் பேனா மனதிலே குத்தும் கருவேலம் முள்ளைப் போல கடுகடுப்பான எரிச்சலையும், துள்ளி வரும் வேலாகவும், வீச்சரிவாளின் வேகத்தால் ரத்தம் கொட்டும் அழிவாகவும், அரசியலிலும், சமுதாயச் சீர்கேடுகளிலும் புகுந்து ஊழல்வாதிகளை அச்சுறுத்தியது எனலாம்.

சிங்க்ளேர் லெவிசின் இத்தகைய அற்புத எழுத்துத் திறமைகளால் அரசியலும், சமுதாயமும் சீரடைந்து வந்ததைக் கண்ட நோபல் நிறுவனம், அவரது சீர்திருத்தச் சேவைக்காகவும், இலக்கியத் திறன்களுக்காகவும், 1930-ஆம் ஆண்டில் நோபல் பரிசை வழங்கிப் பாராட்டியது.

ருஷ்ய பத்திரிகையாளர் இவான் பூனின்:

இவான்பூனின் என்ற ருஷ்ய எழுத்தாளர் 22.10.1870-ஆம் ஆண்டில் மத்திய ருஷ்யாவின் ஆரல் மாநிலத்தில் தோன்றினார். புஷ்கின், கோகால், லெர்மண்டோவ் போன்ற ரஷ்ய மேதைகளின் படைப்பு இலக்கியங்களைப் படித்த பூனின்; அவர்களைப் போலவே தானும் ஓர் இலக்கியவாதியாகத் திகழ வேண்டும் என்று விரும்பினார்.

கலை உள்ளத்தோடும், முன்னேற்றச் சிந்தனையோடும் மக்கள் வாழ வேண்டும் என்ற வேட்கைகளின் உந்துதலோடும் கவிதைகளை, கட்டுரைகளை பூனின் எழுதிப் புகழடைந்து வந்தார்.

பல பத்திரிகைகளில் பூனின் எழுத்துக்கள் வெளி வந்து புகழடைந்ததைக் கண்ட ‘ஹாரல் ஹெரால்டு’, “Haral Herald” என்ற பத்திரிகை நிறுவனத்தார் அவரைத் துணை ஆசிரியராக நியமித்துக் கொண்டார்கள்.

சில மாதங்கள் சென்ற பின்பு அதே நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணோடு அவர் காதலாடினார்! அதனால் வேலையை விட்டே ஓடினார். அந்த் விரக்தி மேலீட்டால் கவிதை இலக்கியப் படைப்புகளில் தனது மனத்தைத் தீவிரமாக ஈடுபடுத்தி ரஷ்ய இலக்கிய வித்தகர்களைத் திணறடித்தார்.

கவிதை புனைவதோடு நில்லாமல், புகழ்பெற்ற எழுத்தாளர்களான ஆண்டன் செக்காவுடனும், லியோ டால்ஸ்டாயுடனும் அவர் நெருங்கிப் பழகியதால், பூனின் சிறுகதைகளை, நாவல்களை எழுதிப் புகழடைந்தார். அதனால், மேற்கண்ட இரு எழுத்துலக வேந்தர்களிடம் பூனினுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் வளர்ந்தது.

1897-ஆம் ஆண்டில் வெளிவந்த பூனின் ‘உலக விளிம்பில்’ என்ற சிறுகதை தொகுப்பும், 1898ல் வெளிவந்த ‘விரிந்த வானத்திற்கு அடியில்’ (Under the Open Sky) என்ற கவிதைத் தொகுப்பும், ஆண்டொனாவ் ஆப்பிள்கள், சாசினி என்ற இலக்கியப் படைப்பு நூற்களும் இவான் பூனினை உலக இலக்கிய மேதைகளுள் ஒருவராக நிறுத்தியதால் நோபல் நிறுவனம் அவருக்கு 1933-ஆம் ஆண்டில் பரிசை வழங்கி கெளரவித்தது.  சீன பெண் பத்திரிகையாளர்
பெரல் எஸ். பக்!

அமெரிக்கா மண்ணில் பிறந்த பெரல் எஸ். பக் என்ற உலகப் புகழ் பெற்ற பெண் எழுத்தாளி, சீன நாட்டில் உள்ள நான்கிங் நகர் கல்லூரியில் பேராசிரியையாய் பணியாற்றினார்.

அப்போது விவசாயத் துறை பேராசிரியராய் இருந்த ஜான் லாசிங் பக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு பெற்றோரிட்ட பெயரான பெரல் சைடன்ஸ்ட்ரிக்கர் என்ற தனது பெயருடன் கணவர் பெயரான ‘பக்’ என்ற சொல்லையும் இணைத்துக் கொண்டு இறுதி வரை பெரல் எஸ்.பக் எனும் பெயருடனேயே உலகம் போற்ற வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.

பெரல் எஸ். பக், சீனாவிலே உள்ள ‘ஷாங்காய் மெர்குரி’ என்ற இங்லீஷ் செய்திப் பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதும் பத்திரிகையாளராகப் பணி புரிந்தார். தனது தாயாரின் சீன வாழ்க்கையைச் சுவைப்பட அதில் எழுதியதால் சீனர்கள் இடையே அவரது பெயர் புகழ் பெற்று விட்டது.

‘அட்லாண்டிக் மன்த்லி’ என்ற மாதப் பத்திரிகையில் கதைகள், நாவல்கள் எழுதியதாலும், அத்துடன் சில அமெரிக்கப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்ததாலும், பர்க் எழுத்துக்கள் உலகெங்கும் அவரது புகழைப் பரப்பியது.

அவருடைய கப்பல் பயணங்களை ஒரு நாவலாக எழுதி அதற்கு ‘ஈஸ்டு விண்டு’, East Wind ‘வெஸ்ட் விண்டு’, West Wind, என்று பர்க் பெயரிட்டார். 1931ல் ‘நல்ல பூமி’, Good Earth என்ற நாவலை எழுதினார். அதற்கு அமெரிக்க புலிட்சர் பரிசு கிடைத்தது. இந்த நூல் உலகெங்கும் நல்ல விற்பனையை வழங்கியது.

1938-ஆம் ஆண்டில் நோபல் பரிசு நிறுவனம் பர்க் எழுதிய 80 இலக்கியப் படைப்புகளையும் பாராட்டி பரிசு கொடுத்தது. பெரல் எஸ். பர்க் என்ற அமெரிக்கப் பெண்தான் முதன் முதலாக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் பரிசாளி என்ற பெருமையையும் பெற்றார். தொடர்ந்து அவர் அமெரிக்க, சீன பத்திரிகைகளுக்குக் கதை, கட்டுரை, பயண நூல்களை எழுதி வந்தார்.

டென்மார்க் நிருபர்
ஜோஹனஸ் ஜென்சன்

டென்மார்க் நாட்டில் புகழ் பெற்ற விஞ்ஞானியின் மகனான ஜோஹனஸ் ஜென்சன் 20.1.1873-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டிலுள்ள வடக்கு ஜத்லாந்தைச் சேர்ந்த ஹிம்மர்லாந்து என்ற நகரில் பிறந்து, 1893ல் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.

சிறுவயதிலேயே அவர், எமிலிஜோலா, சேக்ஸ்பியர், நட்ஹாம்சன், ரூட் யார்டு கிப்லிங் நூல்களைப் படித்துத் தனது அறிவை வளமாக்கிக் கொண்டார்.

‘பொலிட்டிகன்’ Politiken என்ற டேனிஷ் செய்தித் தாளில் ஜென்சன் நிருபராகச் சேர்ந்து, ஸ்பானிஷ் அமெரிக்கா போர்ச் செய்திகளைத் திரட்டிப் பத்திரிகைக்கு அனுப்பி வந்தார்.

‘மன்னரின் வீழ்ச்சி’ என்ற பெயரில் ஜென்சன் எழுதிய இரண்டாம் கிறிஸ்டியன் என்ற டேனிஷ் மன்னனின் வரலாற்றை மிக அற்புதமாக எழுதினாா. அந்த நூல் உலக இலக்கியவாதிகளின் பாராட்டுதல்களைப் பெற்றது.

1912-ஆம் ஆண்டில் ஜென்சன் மீண்டும் ஒரு உலகச் சுற்றுப் பயணம் செய்ததை , introduction to our Epoch என்ற பெயரில் ஒரு பயண நூலாக வெளியிட்டார். இந்த வகைப் பயண நூற்கள் அவரால் ஆறு தொகுதிகள் வெளி வந்தன. இந்த நூற்களில் அவரது புதிய சிந்தனைகளின் முத்திரைகள் உலகப் புகழைப் பெற்றன.

சுருங்கக் கூறுவதனால், ஒரு பத்திரிகை நிருபராகப் பணியாற்றிய அவரது புதிய சிந்தனை முயற்சிகள், உலகத்தில் ஜென்சன் ஒப்பற்ற ஓர் இலக்கியத் திறனாளர் என்பதை நிரூபித்ததற்காக 1944-ஆம் ஆண்டில் நோபல் பரிசு நிறுவனம் அவரைப் பாராட்டிப் பெருமையோடு நோபல் பரிசினை வழங்கியது.

ஜெர்மன் பத்திரிகை
ஆசிரியர் ஹெஸ்ஸி

ஜெர்மனியில் உள்ள ஊர்ட்டன் பர்க் மாநிலத்தின் கறுப்புப் பட்டணம் என்ற நகரில் 2.7.1877-ஆம் ஆண்டு பிறந்தவர் ஹெர்மான் ஹெஸ்ஸி Hermann Hesse என்பவர்.

ஹெஸ்ஸி தந்தை மதகுரு. தனது தந்தையைப் பின்பற்ற விரும்பாத அவர், புத்தகக் கடையிலும், கடிகாரம் பழுது பார்க்கும் கடையிலும் பணியாற்றினார். புத்தகக் கடை விற்பனையாளராக ஹெஸ்ஸி இருந்தபோது, ஜெர்மானிய பேரறிஞர் கொதே நூல்களைப் படித்த பின்பு, அவருக்கும் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

‘மார்ஸ்’, Marss என்ற பத்திரிகையில் ஹெஸ்ஸி இணையாசிரியராகச் சேர்ந்து, கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வந்தார். அவரது எழுத்துக்கள் கல்வியாளர்களையும், பாமரர்களையும் ஈர்த்தன. அந்தப் பத்திரிகையில் அவர் தொடர்ந்து எழுதி வந்த ‘ஜெர்ட்ரூட்’ என்ற நாவல் புத்தகமானது. அதனால் அவர் உலகப் புகழ்பெற்ற பத்திரிகை எழுத்தாளரானார்.

இந்தியாவுக்கு 1911-ஆம் ஆண்டு ஹெஸ்சி வந்தார். இந்தியப் பத்திரிகைகளில் 0ut of India என்ற பெயரில் கதை, கட்டுரைகள், கவிதைகள் எழுதியதால் இந்திய மக்கள் இடையேயும் அவரது செல்வாக்குப் பரவியது.

ஹெர்மான் ஹெஸ்ஸி தனது வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்பாளியாகவே ஜெர்மானியில் வாழ்ந்தார். அப்போது கொதே பரிசு, கார்ட்ரைட் கெல்லர் பரிசு, பெர்லின் பல்கலைக் கழகச் சிறப்பு டாக்டர் விருது அத்தனையும் பெற்ற ஹெஸ்ஸி, 1946-ஆம் ஆண்டில் நோபல் பரிசையும் பெற்றார். இவரது இலக்கியங்கள் எல்லாம் உலக முக்கிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதால், ஹெஸ்சிக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரெஞ்சு மேயர்
பத்திரிகையாளர்

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் 22.11.1896-ஆம் ஆண்டு பிறந்த ஆண்ட்ரி கைட், Andre Gide, கிரேக்க எழுத்தாளர்கள் படைப்புகளிலே ஒப்புயர்வற்றவராக விளங்கினார்.

ஆண்ட்ரிகைடு மார்ஷ் லேண்ட் என்ற பெயரில் விலங்குகள் தத்துவத்தை ஆராய்ச்சி செய்து எழுதிய நூலில், மனித வாழ்க்கைக்கும் அதைப் பொருந்துமாறு எழுதினார். இவர் 1896-ஆம் ஆண்டில் ரோக்யூ Roque என்ற நகரின் மேயராக இருந்தார். ‘உலகத்தின் பழங்கள்’ Fruits of the Earth என்ற புத்தகத்தை 1897-ஆம் ஆண்டில் எழுதி உலகப் புகழைப் பெற்றார்.

கைடின் எழுத்துக்கள், உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிகளான ஆல்ப்ர்ட் காமு, Albert Camus ஜீன் பால் சார்த்ரே Jean Paul Sartre போன்ற படைப்பாளிகளை எல்லாம் ஈர்த்தன என்றால், அது மிகை யன்று. Strait is the Gate என்ற அவரது ஆங்கில நூல், ‘லா போர்ட்டே எப்ராய்ட்’ என்ற ஜெர்மன் மொழி நூலானது.

அவரது இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு நூல், கைட்டுக்கு உலகப் புகழைப் பெற்றளித்தது. அதனால் அந்த பெருமகனுக்கு நோபல் பரிசு நிறுவனம் 1947ம் ஆண்டில் நோபல் பரிசை அளித்துப் பாராட்டியது.

நோபல் பரிசைப் பெற்ற அந்த படைப்பிலக்கிய மேதை, அதற்குப் பிறகும் எழுத்துப் பணியில் சற்றும் ஓயாமல், 1950ம் ஆண்டில் ‘ஜோமல்’ ‘Joumal’ எனும் பெயரில் பத்திரிகையைத் துவக்கினார். அதில் தனது 1889 முதல் 1949ம் ஆண்டு வரையுள்ள தனது வாழ்க்கை நிகழ்ச்சிக்ளைத் தொகுத்து எழுதி அரியதோர் வாழ்வியல் அனுபவங்களைப் புத்தகமாக்கினார். இதைப் படித்த இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் கைட்டுக்கு சிறப்பு டாக்டர் பட்டம் விருதை வழங்கிப் பாராட்டியது. 

பத்திரிகையாளர்
வின்ஸ்டன் சர்ச்சில்

‘The Never sun set in the British Empire’ என்று பிரிட்டிஷ், நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு கிரேட் பிரிட்டன் ராஜ தந்திரிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில் Winston Churchil என்பவர்.

இவர், கிரேட் பிரிட்டன் சாம்ராச்சியத்திற்கு 1940 முதல் 1945 வரையிலும் 1951 முதல் 1955ம் ஆண்டுகள் வரையிலும் இரண்டு முறை பிரதமராக இருந்தவர். செயற்கரிய செயல்களைச் செய்த சிந்தனையாளராகவும், சாதனையாளராகவும் திகழ்ந்த அரசியல், இலக்கிய வித்தகரும் ஆவார்.

சர்ச்சில் 1896-ஆம் ஆண்டு முதல் 1897 வரை இந்தியாவின் வடமேற்கு எல்லைப் பகுதியில் போர்க்களச் செய்திகளைத் திரட்டி அரசுக்கும், பத்திரிகைகளுக்கும் அனுப்பும் நிருபராக பணியாற்றினார். அதனால் அவரை உலகப் பத்திரிகை மன்றம் சிறந்த பத்திரிகையாளர் என்று பாராட்டி விருதும் வழங்கியது.

சர்ச்சிலின் எழுத்துத் திறனைக் கண்ட ‘மார்னிங் போஸ்ட்’ Morning Post எனும் பத்திரிகை, போர்க் கால நேரடி அனுபவங்களைக் கட்டுரை வடிவில் எழுதுமாறு நியமித்தது. ஏற்ற பணிக்கேற்ப, ஒவ்வொரு கட்டுரையிலும், தனது அறிவு முத்திரையைப் பதித்தவர் சர்ச்சில்.

மறுபடியும் ‘இலண்டன் மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகையில் ‘போயர் போர்’ வரலாற்றை தொடர்ந்து எழுதினார். செய்திகளை அவர் திரட்டும்போது போர்க் களத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைப் பெற்றார்.

சிறையிலே இருந்து சர்ச்சில் தனது தைரியத்தின் தந்திரங்களால் தப்பித்தார். 1900-ஆம் ஆண்டில் அவர் இலண்டன் திரும்பி வந்தபோது பிரிட்டிஷ் அரசு அவரை அரசு மரியாதையுடன் பாராட்டி வரவேற்றது.

இந்தச் சூழ்நிலையில் சர்ச்சில் இலண்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி வாகைச் சூடினார். லாயிட் ஜார்ஜ் அமைச்சரவையில் போர்த் தளவாட அமைச்சரானார்.

சர்ச்சில், தனது வாணாளில் பல பதவிகளைப் பெற்றிருந்தாலும், எழுத்துத் துறையை மட்டும் அவர் எப்பொழுதும் கைவிடாமலேயே இருந்தார்.

1948 முதல் 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாவது உலகப் போர் பற்றிய செய்திகளை அவர் ஆறு தொகுதிகளாக வெளியிட்டார். அந்தப் புத்தகங்கள் உலகப் புகழைப் பெற்றன. சர்ச்சில் சிறந்த இலக்கிய வித்தகராக உலகக் கல்விமான்களால் போற்றப்பட்டார்.

சர்ச்சில் நூல்களைப் பாராட்டிய நோபல் நிறுவனம், 1953-ஆம் ஆண்டில் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இலக்கியவாதி பிரிவின் விருதினை நோபல் பரிசாகத் தந்து பெருமைப்படுத்தியது.

போர்க் கால நிருபர்துறையிலே தனது எழுத்துப் பணியைத் துவங்கிய வின்ஸ்டன் சர்ச்சில்; உலகம் போற்றும் ராஜ தந்திரிகளுள் ஒருவராக, சிறந்த பத்திரிகை நிருபராக மதிக்கப்படுமளவுக்கு உயர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

அமெரிக்கப் போர் நிருபர்
எர்னஸ்ட் ஹெமிங்வே

அமெரிக்க நாவல் துறையில் புகழ் பெற்றவர் எர்னஸ்ட் ஹெமிங்வே என்ற போர்க்களச் செய்தி நிருபர். அவர் அமெரிக்காவில் கில்லினாய்ஸ் என்ற மாநிலத்தில் ஓக்பார்க் என்ற நகரில், 2.7.1899-ஆம் ஆண்டில் பிறந்தார்.

எர்னஸ்ட் ஹெமிங்வே ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, அனுபவம் வாய்ந்தவராக இருந்தவராதலால் ‘டோரண்டோ ஸ்டார்’ ‘Toranto Star’ என்ற பத்திரிகை நிறுவனத்தில் போர்க் கள நிருபராகச் சேர்ந்து பணி புரிந்தார். அருமையான கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதினார்.

போர்க் கால நிருபராக ஹெமிங்வே பணியாற்றியதால், 1926-ஆம் ஆண்டில் அவர் ‘சூரியன் கூட உதிக்கின்றான்’ - The Fifth Column, என்ற நாவலை, தான் பார்த்த போர்ச்சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு அந்த நாவலை எழுதினார். அதனால், அதை, உலகம் வியந்து பாராட்டி மதித்தது. இதே அடிப்படையில் ஹெமிங்வே பல நாவல்களை எழுதினார்.

போர்க் காலத்தில் நடைபெறும் ஒற்றாடல்களை அடிப்படையாக வைத்து அவர் ஸ்பெயின் நாட்டிலிருந்தபோது “The fifth colum” வேவுத் தொழில் என்ற பெயரில் ஒரு நாடகத்தை எழுதினார்.

அந்த நாடகத்தில் உள்நாட்டுப் போரின் காதல் நிகழ்ச்சிகளையும், வன்முறைச் சம்பவங்களையும், புகுத்தி எழுதியிருப்பதைப் பார்த்த உலக இலக்கியவாதிகள் அவரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

வெற்றிகரமான பல போர்க் கள நிகழ்ச்சிகளை இலக்கியமாக்கிய எர்னஸ்ட் ஹெமிங்வேயைப் பாராட்டி நோபல் நிறுவனம் நோபல் பரிசை வழங்கியது.

அல்ஜீரியா
பத்திரிகையாளர்

ஆல்பர்ட் காமு என்ற பத்திரிகையாளர் 7.11.93-ஆம் ஆண்டில் அல்ஜீரியா நாட்டில் பிறந்தார். அல்ஜியர்ஸ் பள்ளிகளில் கல்வியை முடித்த காமு, அந்நாட்டுப் பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை பட்டம் பெற்றார்.

ஆல்பர்ட் காமூ, 1937-ஆம் ஆண்டில் ‘இடையிடையே’ (Between and Between) என்ற கட்டுரை நூலை எழுதினார். அதற்குப் பின் ‘மகிழ்ச்சியான மரணம்’ ‘A Happy Death’ என்ற நாவலை எழுதினார். இந்த இரு நூல்களும் காமூவுக்கு அல்ஜீரியா முழுவதும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது.

‘அல்ஜீர் ரிபப்ளிக்கன்’ ‘Alger Republican’ என்ற செய்தித்தாளில் காமூ ஆசிரியர் பணியை ஏற்றார். இதற்குள் இரண்டாம் உலகப் போர் துவங்கவே, காமூ, 1938-ஆம் ஆண்டில் ஃபிரான்ஸ் நாட்டிற்குச் சென்று நிரந்தரமாகத் தங்கி விட்டார்.

அங்கு போர் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து கொண்டு, ‘காம்பட்’ ‘Combat’ என்ற வேவு அறியும் - துப்புத் துலக்கும் செய்தித் தாளின் ஆசிரியரானார். அதனால், அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த ஆபத்தான சூழலில்தான் காமூ, ‘அன்னியன்’ என்ற நாவலையும் எழுதினார். இந்த நாவல் காமூவை இலக்கியத் தாரகையாக்கிற்று. அவருடைய படைப்புகள் உலகம் முழுவதும் பரவியதுடன், புகழைத் தேடித் தந்தது.

‘காலி கூலா’ (Cali Gula) என்று அவர் 1944-ஆம் ஆண்டில் எழுதிய நாடகம், அவரை நாடக வானிலும், விண்மீனாக ஒளிர வைத்தது.

ருஷ்ய வரலாற்று நிகழ்ச்சிகளை உட்பொருளாக்கி The Just என்ற நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் காமூ புகழை உலகில் நிலை நிறுத்தி விட்டது.

ஆல்பர்ட் காமூவின் இலக்கிய படைப்புகளின் அருமையைக் கண்ட நோபல் நிறுவனம் 1957-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை அவருக்கு வழங்கிப் போற்றியது.

ஜப்பான் பெண்
பத்திரிகையாளர்

மனித வாழ்க்கையைப் புதிய சிந்தனையில், புதிய கோணத்தில் நோக்கி நாவலை எழுதியவர்களில் ஜப்பானிய பெண் எழுத்தாளி ‘யசுநாரி’ கவாபட்டா (Yasu Nari Kawabata) என்பவர் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.

ஜப்பான் டோக்கியோ பல்கலைக் கழகத்தில் கவாபட்டா படித்துக் கொண்டிருந்தபோது ‘ஷன்ஷிக்கோ’ என்ற மாணவர் பத்திரிகையில் கட்டுரை எழுதும் ஆசிரியர் பகுதியில் பணி புரிந்தார். இவரது எழுத்து ஜப்பானிய பிரபல எழுத்தாளரான வின்சிக்குச்சியைக் கவர்ந்தது.

உடனே, அந்த எழுத்தாளர் கவாபட்டாவை அழைத்து, ‘பங்கி ஷுஞ்சு’ என்ற இலக்கிய இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்கச் செய்தார். அங்கே சில காலம் பணியாற்றிய கவாபட்டா தனது நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக ‘பங்கிஜிதாய்’ (Bungei Jidai) என்ற இலக்கியப் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

அந்த பத்திரிகையில் கவாபட்டா, ‘இஜூரி நகரத்து நடனக்காரி’ எனும் தொடர்கதையை எழுதினார். அந்த நாவல் ஜப்பானிய மக்களைக் கவர்ந்தால், அவருக்கு ஜப்பான் மக்களிடம் பெரியதோர் செல்வாக்கு உருவானது.

இந்த நாவலின் கதாநாயகி ஒரு கன்னிப்பெண். அவள் தனது வாழ்க்கையைக் கடைசி வரை வெற்றிகரமாக நடத்த எடுத்துக் கொண்ட முயற்சிகள் கைகூடாமல், இறுதியில் சோக முடிவைப் பெற்ற இந்த சம்பவம் ஜப்பான் மக்களை மிகவும் கவர்ந்து விட்டதால், அவரது எழுத்து மக்களிடம் புகழ் பெற்று விட்டது.

1933ல் கவாபட்டா ஒரு பிரம்மசாரி இளைஞன் சமுதாயத்தில் உண்டாகின்ற மாறுதல்களை விரும்பாமல் எதிர்த்துப் போராடுகிறான். இறுதியில் மனிதர்கள் சமுதாயத்தில் வாழ்வதைவிட விலங்குகள் இனத்தில் நட்பு கொண்டு அமைதி பெறுவதாக அந்தக் கதை முடிகின்றது. இந்தக் கதையும் ஜப்பான் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுவிட்டது. ஜப்பான் மக்களிடம் பெரும் புகழ் பெற்றார் கவாபட்டா.

குடும்பங்களில் அடிக்கடி ஏற்படும் பூகம்ப நிகழ்ச்சிகளைத் தனது மற்ற நாவல்களில் சித்தரித்து வெற்றியடைந்தவர் கவாபட்டா.

மக்களிடம் உள்ள சில இனம் புரியாத தவிப்புகளில் ஒன்றான தனிமையின் தவிப்பை மரணம் சம்பவிப்பதற்கு முன்பு அதைச் சொல்லத் தெரியாத ஒருவித இன்ப நுகர்வை தனது கதைப்பாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்தும் அவரது ஆற்றலைக் கண்டு உலக இலக்கிய உலகமே திணறியது. அதற்காகவே அவர் 1968-ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார்.

இந்த மக்கள் சமுதாய பூகம்ப நிகழ்ச்சிகளை எல்லாம், சில நேரங்களில் சில நாவல்களில் கவாபட்டா தனது இலக்கியப் பத்திரிகையான ‘பங்கிஜிதாயில்’ அடிக்கடி எழுதிச் சிறுகச் சிறுகப் புகழ் பெற்ற பத்திரிகையாளராக வாழ்ந்தவராவார்.

போலந்தின் யூதமொழி
பத்திரிகையாளர் :

போலந்து நாட்டின் தலைநகரான வார்சா என்ற நகரருகே உள்ள சிறு கிராமத்தில் 14.6.1904-ஆம் ஆண்டில் பிறந்தவர் ஐசாக் பஷீவிஸ் ‘Isaac Bashevis Shingar’இவர் யூதர்கள் குடியிருப்புப் பகுதியில் குடியிருந்ததால் இத்தீஷ் மொழியைக் கற்றாா்.

ருஷ்ய இலக்கியங்களையும் ஹீப்ரு மொழி இலக்கியங்களையும் நன்கு படித்தவர். இவருடைய தமையன் ஒரு நாவலாசிரியர். அதனால் சிங்கரும் எழுத்தாளராக விரும்பி ஏராளமான பிறமொழி நூல்களைப் படித்தார்.

அமெரிக்காவில் நடைபெற்று வந்த ‘யூத மொழி’ என்ற நாளேடு ஒன்றில் பிழை திருத்தும் பணியில் வேலை செய்தார். நாளடைவில் நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் நகரில் ‘குலோபஸ்’ என்ற பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பில் அமர்ந்து, சிறுகதை, கட்டுரை போன்ற பலவற்றை எழுதி அமெரிக்க மக்கள் இடையேயும், யூத இனத்தவர் மத்தியிலும் மிகுந்த புகழ் பெற்றவரானார்.

1934-ஆம் ஆண்டில் சிங்கர் அந்தப் பத்திரிகையில் ‘கோரேயில் சாத்தான்’ என்ற நாவலை எழுதி வந்தார். தொடர் நாவல் அல்லவா? மக்கள் அந்த பத்திரிகையை விரும்பி வாங்கி தொடர் நாவலைப் படித்து மகிழும் அளவிற்கு அவரது எழுத்து செல்வாக்குப் பெற்றுவிட்டது.

ஜெர்மன் படையெடுப்பால் 1935-ஆம் ஆண்டில் போலந்து நாடு சீர்குலைந்ததால், சிங்கர் போலந்து ஓடினார். பிறகு மீண்டும் அமெரிக்க வந்து புரூக்ளினில் உள்ள யூத நாளேட்டில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

‘மஸ்கட் குடும்பம்’ என்ற நாவலை அந்த நாளேட்டில் 1945 முதல் 1948-ஆம் ஆண்டு வரை தொடராக எழுதியதால், சிங்கர் புகழின் சிகரத்துக்கே சென்றமர்ந்தார். அந்த நாவலில் 19ம் நூற்றாண்டில் வாழும் நான்கு தலைமுறைக் குடும்பத்தினுடைய நிகழ்ச்சிகளை விடாமல் தொடர்ந்து எழுதினார்.

அந்த நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்ததால் அது உலகப் புகழைப் பெற்றது. உலகப் படைப்பாளிகளில் ஒருவராக ஐசக் பஷீவாஸ் சிங்கர் மதிக்கப்பட்டதால், அவருக்கு 1978-ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

யூத மொழி பத்திரிகை எழுத்தாளர் ஒருவர் நோபல் பரிசு பெற்றதில் முதன்மையானவர் சிங்கரே என்ற பெருமையை அவர் பெற்றார்.

இலத்தீன் அமெரிக்கா
பத்திரிகையாளர்

இலத்தீன் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவின் ஒரு கிராமத்தில் கார்சியா மார்க்கெஸ் என்ற பத்திரிகையாளர் 3.6.1928-ஆம் ஆண்டில் பிறந்தார். வறுமையே உருவான பரம ஏழைக் குடும்பத்தில் தோன்றிய அவர், அரும்பாடுபட்டு, யார்யார் உதவிகளினாலோ சட்டத்துறையிலும், பத்திரிகைத் துறையிலும் படித்துப் பட்டம் பெற்ற ஏழையில் ஏழ்மையானவர் ஆவார்.

மார்க்கெஸ் பத்திரிகைத் துறையைத் தனது வாழ்க்கைத் துறையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். ‘எல் எஸ்பெக்ட்டார்’ எனும் நாளிதழ் பத்திரிகையில் நிருபராகப் பணி புரிந்தார். 1959-ஆம் ஆண்டு முதல் 1961 வரையிலும் கொலம்பியா கியூபின் நியூஸ் ஏஜென்சியில் வேலை செய்தார். அதே நேரத்தில் திரைப்படத் துறையிலும் திரைக்கதைத் துறையிலும் பணியாற்றினார்.

ஆனால், பத்திரிகைத் துறையில் தான் அவர் முழு மூச்சாக செயல்பட்டார். 1940-ஆம் ஆண்டில் பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதி வந்தார். 1955-ஆம் ஆண்டில் ‘இலைப் புயல்’ என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.

மார்க்கெசின் சிறுகதைகளில் கிராமிய நிகழ்ச்சிகள் உயிரோட்டமாக இடம் பெற்றிருந்ததால், இலக்கிய வட்டாரத்தில் பெரும் புகழ் பெற்றார். அவருடைய கதைகளில் புதிய கண்ணோட்டமும், கதை கூறும் வித்தியாசப் போக்கும், புதுமையான ஒரு கிராமிய அணுகுமுறையும் காணப்பட்டதாலும், கதைப் பாத்திரங்களில் மாறுபட்ட மனித உணர்ச்சிக் குணங்கள் இருந்ததாலும், அவருடைய சிறுகதைகளுக்கு அமெரிக்காவிலும் உலக இலக்கிய வட்டங்களிலும் வரவேற்பு அதிகமாக இருந்தது.

மார்க்ஸ் ஏராளமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியதால், அவர் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரானார். அவர் எழுதிய ‘தனிமையில் நூறு ஆண்டுகள்’ என்ற நாவல் 1982-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்றது.

பத்திரிகை வாழ்க்கையே தனது உயிர் வாழ்க்கை என்று நம்பி அரும்பாடுபட்ட கார்சிய மார்க்கெஸ், தனது ஏழ்மையையே தகர்த்தெறிந்த பத்திரிகையாளர் ஆனார். ஆனால் : நோபல் பரிசையும் ஓர் ஏழையால் பெற முடியும் என்பதை நிரூபித்த பத்திரிகை எழுத்தாளராகவும் அவர் மதிக்கப்பட்டார்.

அமெரிக்க பத்திரிகையாளர்
பெஞ்சமின் ஃபிராங்க்லின்

மெழுகுவர்த்தி, சோப்பு செய்யும் ஜோசய்யா பிராங்க்லின் மகனாக, ஓர் ஏழைக் குடும்பத்தில் 1706-ஆம் ஆண்டில் பிறந்தவர் பெஞ்சமின் ஃபிராங்க்லின். அவர் 84 ஆண்டுகள் வாழ்ந்த தனது வாழ்நாளில் பல அற்புதங்களைச் செய்து காட்டி அனைத்திலும் வெற்றி பெற்றிட்ட ஒரு பத்திரிகையாளர் வழிகாட்டி ஆவார்.

பெஞ்சமின், இந்திய விடுதலையின் தந்தையான காந்தியடிகளைப் போல, சீன நாட்டு சன்யாட்சனின் சீர்திருத்த வேட்கைக்கு ஒப்ப; டாக்டர் ஜான்சனுடைய நடுநிலை துலாக்கோலுக்கு ஈடாக, டால்ஸ்டாயின் அன்பு ஊற்றுக்கண் பெருக்காக அத்தனைப் பண்புகளும் ஓருருவாய் அமைந்த மனித நேயப் பத்திரிகையாளராக வாழ்ந்து காட்டிய மேதை அவர்.

பிராங்க்லின் 1729-ஆம் ஆண்டு முதல் 1756-ஆம் ஆண்டு வரை ‘பென்சில்வேனியா கெசட்’ என்ற புத்திரிகையை துவக்கி வெற்றிகரமாக நடத்தினார். அந்த இதழில் மக்களுக்கு இன்பம் ஊட்டும் கட்டுரைகளையும், கடிதக் கட்டுரைகளையும், மக்கள் நலனுக்காக பல திட்டங்களையும் எழுதினார்.

நகர்புற காவற்படை அமைப்பு, தெருப் பெருக்கும் திட்டம், வீதிகளுக்கு கற்கள் பாரவுந் திட்டம். உலாவியல் நூலகத் திட்டம், நகர் கட்டடத் திட்டம் ஆகியவற்றுக்கான திட்டப் பணிகளைத் தனது பத்திரிகையில் மக்களுக்கு அறிவித்து அவற்றுள் ஈடுபட்டார்.

பிராங்லினுடைய எழுத்தாண்மைத் திறத்தாலும், பத்திரிகை நடத்தும் புதுமைகளாலும் மக்களிடம் வரம்பு மீறிய செல்வாக்கைப் பெற்றார்.

அமெரிக்க நாட்டில் முதல் நகர மருத்துவமனை, முதல் அறிவராய்ச்சிக் கழகம், முதல் பல்கலைக்கழகம் ஆகியவை அவரது பத்திரிகை முயற்சிகளால் ஆரம்பிக்கப்பட்டன.

‘ஜெனரல் மாகசீன்’ ‘General Magazine’ என்ற ஒரு திங்கள் பத்திரிகையையும், பிராங்க்லின் துவக்கி நடத்தினார்.

அமெரிக்கா அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததால், அந்த அரசின் பிற்போக்கு நடவடிக்கைகளை எதிர்த்தும், நையாண்டிக் கட்டுரைகள் மூலமாக ஆங்கில ஏகாதிபத்தியத்தைச் சாடியும் எழுதினார். இதனால், பிரிட்டனின் பெரும் அறிஞர்கள், சிறந்த எழுத்தாளர்கள், அரசியல் நிபுணர்கள் நட்புகள் அவரைத் தேடி வந்து சந்தித்தன.

அமெரிக்கக் குடியேர்ற நாடுகளுக்குக் கூட்டாட்சி தேவை என்று தனது பத்திரிகையில் எழுதி, அதற்கான திட்டமும் கொடுத்தார். அமெரிக்க அஞ்சல் நிலையத் தலைவரானார். பென்சில்வேனியா நகராட்சி தலைவரானார். அமெரிக்காவில் அடிமைத் தளையை ஒழிக்க பிராங்க்லின் திட்டம் வகுத்துச் செயல்பட்டார்.

ஒரு பத்திரிகையாளரால் நாட்டுக்கும் மக்களுக்கும் என்னென்ன நன்மை தரும் திட்டங்களை தர முடியுமோ - அவற்றுக்கெல்லாம் பெஞ்சமின் பிராங்க்லின் ஒரு முன்னோடியாக நின்று முதல் திட்டங்களை வகுத்துச் செயல்பட்ட மக்கள் தொண்டராக இன்றும் அமெரிக்க மக்களால் மதித்துப் போற்றப்படுபவராக இருக்கின்றார் என்றால் மிகையாகா.

ரைட் சகோதரர்களும்
பத்திரிகையாளர்களே!

ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்ற ரைட் சகோதரர்கள், 1886-ஆம் ஆண்டில் ‘தி மிட்ஜெட்’ (The Mid Jet) என்ற பெயரில் ஒரு பத்திரிகையை அமெரிக்காவில் உள்ள டேடன் என்ற நகரில் துவக்கினார்கள். அமெரிக்க மொழியில் மிட்ஜெட் என்றால் ‘குள்ளன்’ என்று பொருளாகும்.

அந்தப் பத்திரிகை பொருளாதார நெருக்கடியாலும், முன்பின் திட்டம் இல்லாமல் எதைச் செய்தாலும் எதுவும் வெற்றி பெறாது என்ற காரணத்தாலும் இரண்டு மூன்று மாதங்களோடு நின்று விட்டது.

ரைட் சகோதர்களின் தந்தையாரான மில்டன் ரைட், கிறித்துவமத பிரச்சாரகராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவராதலால், அவர் ‘கிறித்துவப் பாதுகாவலன்’ என்ற ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து அதை நடத்தி வந்தார். அந்த பத்திரிகையை மடித்துக் கொடுக்கும் பணியைத் தனது மகன் வில்பர் ரைட்டிடம் தந்தை ஒப்படைத்தார்.

வில்பர் ரைட் பத்திரிகையை மடிக்கும இயந்திரம் ஒன்று செய்தால் என்ன என்ற சிந்தனையிலே மூழ்கி, அண்ணனும் தம்புயுமான வில்பரும் - ஆர்வியும் தனது வீட்டில் போடப்பட்டிருந்த பழைய இரும்புகள், மரக்கட்டைகளைக் கொண்டு, பத்திரிகை மடிக்கும் இயந்திரத்தைக் கண்டுப்பிடித்தார்கள்.

இரண்டு நாட்கள் செய்ய வேண்டிய அந்த பத்திரிகை மடிக்கும் வேலையை, அந்த இயந்திரம் இரண்டே மணி நேரத்தில் செய்து முடித்ததைக் கண்டு அவர்களது தந்தையும் - பிள்ளைகளும் மகிழ்ந்தார்கள்.

வில்பரும், ஆர்விலும் காலால் மிதித்து அச்சடிக்கும் Tradle அச்சு இயந்திரம் ஒன்றைக் கண்டுப்பிடித்தார்கள். பிறகு அச்சடிப்பதற்குரிய எழுத்துக்களையும் வாங்கினார்கள்.

‘குள்ளன்’ என்ற பத்திரிகை நின்று போன இப்போது அச்சு இயந்திர வசதிகளோடு ‘தி வெஸ்ட் சைடு நியூஸ் அதாவது மேற்கு திசைச் செய்தி The West Side News என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்கள். அதன் ஆசிரியர் பொறுப்பை வில்பர் ஏற்றார். நிர்வாகி ஆர்வில்!

‘மேற்கு திசைச் செய்தி’ மக்கள் இடையே நல்ல செல்வாக்குப் பெற்றதால், பன்னூறு பிரதிகள் துவக்கத்திலேயே, பரபரப்புடன் விற்பனையாயின. ரைட் சகோதரர்களிடம் இப்போது பண வறுமை இல்லை என்ற நிலை பிறந்தது.

பத்திரிகையாளர்களாக வாழ்க்கையைத் துவக்கிய ரைட் சகோதரர்கள்தான், தங்களது நுட்ப அறிவின் முதிர்ச்சிகளால், வானத்தில் பறக்கும் வானவூர்தியை, ஆகாய விமானத்தை 1903-ஆம் ஆண்டில் கண்டுபிடித்து வானத்தில் பறந்து காட்டினார்கள். ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்பது திருவள்ளுவர் பெருமானது வாழ்வியல் பொய்யா மொழி அல்லவா?

பத்திரிகையாளர்களான ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த ஆகாய விமான அற்புதத்தை ‘வர்ஜீனியா பைலட்’ என்ற பத்திரிகை பாராட்டி செய்தி வெளியிட்டது. அதன் நிருபர் மகிழ்ச்சி துள்ளி உலகத்திலுள்ள 21 பத்திரிகைகளுக்கு அந்தச் செய்தியைத் தெரிவித்தார். என்ன இருந்தாலும் பத்திரிகையாளர் சாதி அல்லவா? அதனால்!!

பாரீஸிலிருந்து வெளிவந்த ‘ஹெரால்ட்’ ‘Heralit’ என்ற பிரெஞ்சு பத்திரிகை, ஒன்று ‘பறப்பவர்களா? அல்லது பொய்யர்களா?’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதி ரைட் சகோதரர்கள் பறக்கவே இல்லை என்று ம்றுத்தது. பத்திரிகையாளர்களுக்கும் கயமைக் குணம் உண்டல்லவா? அந்த ரகம் அந்த ஹெரால்டு!

எதிர்ப்புகளை ஏறுபோல் சந்தித்த ரைட் சகோதரர்கள் 17.12.1903-ஆம் ஆண்டன்று பத்திரிகை நிருபர்களை அழைத்து, அவர்கள் எதிரிலேயே தங்களது ஆகாய விமானத்தில் ஏறி அமர்ந்துக் கொண்டு வானில் 51 நிமிடங்கள் விமானத்தைப் பறக்க விட்டுக் கீழே இறங்கினர்.

ரைட் சகோதர்களின் இந்த செயற்கரிய செயலின் அற்புதத்தைக் கண்டு, அமெரிக்க பத்திரிகைகள் எல்லாம் புகழ்ந்து பாராட்டின. எனவே, ஒரு பத்திரிகையாளன் விடாமுயற்சியோடு ஒரு செயலில் ஈடுபட்டால், எண்ணியதை எண்ணியாங்கு எய்துவான் என்ற திருவள்ளுவர் பெருமான் வாழ்வியல் சட்டத்திற்கு சான்றாக ரைட் சகோதரர்கள் விளங்கினார்கள்.

நூலாளர்
குறிப்பு :

இதுவரை பத்திரிகை ஆசிரியர்களாக, இணை ஆசிரியர்களாக, கட்டுரையாளர்களாக, கவிஞர்களாக, விமர்சகர்களாக, சீர்திருத்தச் சித்தர்களாக, அரசியல், கலையியல், இலக்கியவியல் போன்றவற்றிலே தன்னிகரற்றவர்களாகப் பத்திரிகைத் துறையில் அற்புதங்களைக் செய்த எழுதுகோலர்களது தொண்டுகளை மட்டுமே படித்தீர்கள்.

காரணம், இந்த நூல் ‘பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டி’ என்ற நூலானதால், பத்திரிகையாளர்களாக, இதழ்களின் கட்டுரையாளர்களாக, நிருபர்களாக பணியாற்றிப் பெருமை பெற்றவர்களது உழைப்பை, திறனை, அஞ்சாநெஞ்ச உணர்வுகளை, அவர்களது செயற்கரிய செய்த மக்கள் தொண்டுகளை மட்டுமே நாம் குறிப்பிட்டிருக்கிறோம்.

இவை அல்லாம்ல், பத்திரிகைகளில் பணியாற்றாமல் எழுத்துலக வட்டத்தில் விண்மீன்களாக ஒளிவிட்டவர்கள் ஏராளம் பேர்; அவ்வளவு அறிஞர் பெருமக்கள் உள்ளனர்.

அறிவியல், மருத்துவவியல், கணிதவியல், வரலாற்றியல், அரசியல், வானியல், பொருளியல், கலையியல் போன்ற பல துறைகளிலே அவர்கள் உழைத்து அரும் பாடுபட்டுள்ளார்கள்.

அத்தகைய வித்தகர்களது கட்டுரைகளை, இலக்கிய உணர்வுள்ள எழுத்துக்களை, உலகத்திலே உள்ள எண்ணற்ற நாடுகளிலிருந்து வெளிவந்த கணக்கற்ற பத்திரிகைகள் வெளியிட்டு; மக்கட் தொண்டுகளை ஆற்றிப் பத்திரிகை உலகுக்கு அரிய பெரிய சேவைகளைச் செய்திருக்கின்றன. அவற்றை எல்லாம் தொகுத்து வெளியிட்டால் நூல் விரியும், பக்கங்கள் பெருகும்; அதற்கு ஏராளமான சூழ்நிலைகளும் தேவை.

எனவே, “உலக நாடுகளில் ஒவ்வொன்றிலுமுள்ள சில பத்திரிகைகளது வளர்ச்சிகளை, அவற்றின் மக்கட் தொண்டுகளை மட்டுமே வெளியிட்டிருக்கிறோம். குறையிருந்தால் அதை நிறைவாகக் கொள்ள வேண்டுகிறேன்.

- ஆசிரியர்