இதழியல் கலை அன்றும் இன்றும்/சமுதாய விடுதலைப்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7
சமுதாய விடுதலைப் போரில்
திராவிடர் இயக்க இதழ்கள்


‘இனப் பெயர் ஏன் என்று பிறன் எனைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்
‘நான்தான் திராவிடன்’ என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!
‘முன்னாள்’ எனும் பன்னெடுங் காலத்தின்
உச்சியில் ‘திராவிடன்’ ஒளி செய்கின்றான்
அன்னோன் கால்வழி யாகிய தொடர் கயிற்று
மறுமுனை நான்!என் வாழ்வின் கால்வழி
யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா
எதிர்கால லத்தின் கடைசியோ டியைந்தது.
சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப்
போர்த்தி றத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர் நான்!என் உயிர்இனம் திராவிடம்!
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி!
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
“திராவிடன்” ஆலின் சிறிய வித்தே!
இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய
பொன்னேர்-கருத்துக்கள் பொதிந்துள அதனில்!
உன்இனப் பெயர்தான் என்ன என்று
கேட்கக் கேட்க அதனால் எனக்கு
மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்” - என்று பாவேந்தார் பாரதிதாசன் அவர்கள் ‘திராவிடன்’ என்ற இனப் பெயர் ஏன் என்று என்னைக் கேட்டால், நான்தான் திராவிடன் என்று கூறுவேன் என்று அருமையாக, பெருமையா திராவிடர் இன வரலாற்றை, ‘திராவிட நாடு’ என்ற இனப்பெயர் கொண்ட கவிதைப் பகுதியில் பக்கம் 212-213ல் கூறியுள்ளார்.

இந்தியா என்று உலக மக்களால் அழைக்கப்படும் பரத கண்டத்தில் பல மாநிலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று சென்னை மாநிலம். அறிஞர் அண்ணா அவர்கள் 1967-ஆம் ஆண்டில் முதல் அமைச்சரான பிறகு, தமிழர் இலக்கிய மரபுக்கேற்ப அதற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயரிட்டார்.

தந்தை பெரியார் அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் பேரியக்கத்தை விட்டு வெளியே வந்த பிறகு, சுய மரியாதை இயக்கம் என்ற ஓர் அமைப்பைக் கண்டு, பிறகு அது அண்ணா அவர்கள் தீர்மானத்திற்கேற்ப, திராவிடக் கழகமாக மாற்றப் பட்டது. அந்தத் தாய்க் கழகத்திலே இருந்து தோன்றியதுதான் திராவிடரியக்கம்.

பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ள மேற்கண்ட பாடல் தமிழ் மக்களாகிய திராவிடர் என்ற ஓர் இனத்தின் பெருமை மிக்க வரலாற்றைப் பற்றிய பாடலாகும். தமிழர்கள் திராவிடர்களா? இந்திய மக்களில் வேறோர் இனத்தவரா? என்ற இன வேறுபாட்டை, வடபகுதி வாழ் இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டுதோறும் இன்றுவரைக் கொண்டாடி வரும் ‘இராம லீலா’ என்ற புராண விழாவே அதற்குத்தக்க சான்றாகும்.

திராவிட மாவீரன் இராவணன் என்ற தென்னிலங்கை வேந்தனை, இராமன் என்ற ஆரிய மன்னன் தீயிட்டு எரிக்கும் இனப் படுகொலை நிகழ்ச்சியை வட இந்திய மக்களைக் கோலாகலமாகக் கொண்டாட விட்டுவிட்டு, 26.10.74 அன்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசு தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது அவர்களும், இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அவர்களும் கலந்து கொண்டாடுகிறார்கள் என்றால் இது மதச் சார்பற்ற நாடா?

“பல இலட்சக்கணக்கான தென்னிந்திய, தமிழ்நாட்டு திராவிட மக்கள் தங்களை அந்த விழா அவமானப்படுத்துகிறது; ஆத்திரமூட்டுகிறது. இந்தக் கொடூரமான இனப்படுகொலை விழாவுக்குக் குடியரசுத் தலைவரும், பிரதமரும் போகக் கூடாது. போனால், பல இலட்சக்கணக்கான திராவிட மக்களாகிய நாங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே இராமன் உருவத்தைத் தீயிட்டுக் கொளுத்துவோம் என்று” தமிழ் மக்கள், அதாவது திராவிடர்கள் ஆயிரக்கணக்காக தந்திகளைக் கொடுத்தார்கள் குடியரசு தலைவருக்கு பிரதமருக்கும்.

உயர்ந்த பதவியில் இருக்கும் அந்த பெருமக்கள், இலட்சக்கணக்கான மக்கள் குரலை அன்று மதித்தார்களா? கேட்டார்களா? இந்தியா மதச் சார்பின்மை நாடுதான் என்பதை அவர்கள் நிரூபித்தார்களா? இல்லையே! ஏன்?

எனவே, 25.12.74 அன்று சென்னை மாநகரில் திராவிட இனம் ஒன்று திரண்டு மாலை 6.50 மணிக்கு இராமன், சீதை, இலட்சுமணன் என்ற உருவங்களுக்குத் தீயிட்டு, ‘இராவண லீலா’ என்ற ஒரு விழாவைக் கொண்டாடினார்கள். இந்த நிலை யாரால், எதற்காக, ஏன்? நடைபெற்றது என்பதைச் சிந்திக்கும் போதுதான், ‘திராவிடன்’ என்ற ஓர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் நாகரிகம் உண்டு’ என்ற தெளிவு எல்லார்க்கும் ஏற்படுகின்றது.

இராவணன் திராவிடனா? என்றால், அதையும் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தை எழுதி, தமிழ்நாடு முழுவதும் நடத்தி, இராவணனை ஒரு பிராமணன் என்று குறும்புப் புராணம் மூலம் எழுதி நிரூபிக்கிறார்கள்? அவ்வாறானால், ஆரிய இராவணனை ஆரிய ராமனை விட்டே தீயிட்டுக் கொளுத்த விடலாமா? என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா?

இந்தக் கேள்வியின் பதில் என்ன? இராவணன் திராவிட மன்னன்தான் என்பது தானே? தற்போது தமிழ்நாட்டில் ‘செல்லமே’ என்ற ஒரு திரைப்படம் வெளிவந்து ஒடிக் கொண்டிருக்கின்றது. அந்தப் படத்தில் ஒரு பாட்டு :- அதாவது திராவிட மறவனும் ஆரிய அழகு சுந்தரியும் மாறி மாறி பாடிடும் டூயட் பாடல் அது? என்ன தெரியுமா? அந்த பாடல்?

ஆரிய உதடுகள் என்னது;
திராவிட உதடுகள் உன்னது; ஆரியம் திராவிடம் கலக்கட்டுமே;
ஆனந்த தாண்டவம் பிறக்கட்டுமே!

என்பதுதான் அந்தப் பாடல். அப்படியானால், ஆரியம் என்ற இனமும், திராவிடம் என்ற இனமும் இன்று வரை வாழ்கிறது என்பதுதானே சமுதாயச் சிந்தனை? அந்தச் சிந்தனைப்போகம் ஒன்றாக வேண்டும் என்றுதானே இரு இனக் காதல் களமும் விரும்புகிறது. இந்த இனவேறுபாடு 2005-ஆம் ஆண்டில் திரைப்படத்தில் போகம் காண மோகம் கொள்கின்றபோது, திராவிட-ஆரிய இன மோதலை இந்திய அரசே உருவாக்கலாமா? இதுவா மதச் சார்பற்ற நாடு?

பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 31.1.76 அன்றிரவு தி.மு.கழக ஆட்சியைக் கலைத்தார். பிறகு நெருக்கடி நிலை (Emergency)யைப் பிறப்பித்தார். அதனால் பத்திரிகை நிலைகள் பெரிதும் பாதித்தன. காவல் துறைத் தணிக்கை அதிகாரிகளது பார்வைக்குப் பிறகே சில பத்திரிகைகள் அச்சாகும் சூழ்நிலை. அந்தச் சூழ்நிலை பத்திரிகைச் சுதந்தரத்தின் கழுத்தை ஈரத்துணிப் போட்டு அறுத்துக் கொண்டிருந்தது.

அதன் எதிரொலி என்ன தெரியுமா? திராவிடர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு மானம் ஊட்டிய தந்தை பெரியார் பத்திரிகை ‘விடுதலை’ என்ற நாளேடு, எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும் பெரியார் அவர்களைத் தந்தை பெரியார் என்று எழுதுவது அந்த ஏடு வழக்கம். அந்த இதழ் அவருடைய பத்திரிகை ஏடு. அது மட்டுமன்று, சுயமரியாதை இயக்கமும், அதன் வழிவழி வந்த கழகங்களும் பெரியார் அவர்களைத் தந்தை பெரியார் என்றே குறிப்பிடுவது வழக்கமாக இன்றும் இருக்கின்றது.

இந்தக் கழகப் பழக்க வழக்கத்திற்கு ஏற்றவாறு, இந்திரா காந்தியின் நெருக்கடி காலக் கெடுபிடிகள் நேரத்தில் விடுதலை. நாளிதழில் தந்தை பெரியார் என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த ஆரியத் தணிக்கை அதிகாரிகள், ‘தந்தை பெரியார் என்று எழுதக் கூடாது என்றும், அதே நேரத்தில் சங்கராச்சாரி எனும் பெயருடன் ‘ஆர்’ என்னும் மதிப்பு விகுதியைச் சேர்த்தே அச்சாக வேண்டும் என்றும் அச்சுறுத்தினார்கள். என்ன பெயர் இதற்கு? பெரியார் திராவிட இனத்தின் பெருந் தலைவர்? சங்கராச்சாரியார் ஆரிய இனத்தவர்களின் பெருந் தலைவர். இவர்கள் இடையே திராவிட எதிர்ப்பு, பிராமண ஆதரவு மனப்பான்மை தோன்றியது ஏன்? இதுதான் திராவிட-ஆரிய இன அடையாள உயர்வு தாழ்வு மனப்பான்மை! ஆகும்.

மதச்சார்பின்மை என்று கூறப்படும் ஒரு நாட்டில் இந்த இன பேத வாதங்கள் உருவாகலாமா? உருவாவதற்கு அரசுகளே காரணமாக இருக்கலாமா? அந்த நிலைமைகள் ஏற்படும்போது, திராவிடன் - தன்னை - தன் இனத்தை உயர்வாக மதிப்பதிலே என்ன தவறு? இந்த எண்ணத்தைத்தான் பாவேந்தருடைய மேலே உள்ள இனப்பெயர் பாடற்பகுதி நமக்கு வலுவூட்டுகிறது. மீண்டும் மீண்டும் நான் திராவிடன் என்று தோள் தட்ட வைக்கின்றது.

எனவே! பகுத்தறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கம்தான் தமிழ்நாட்டின் வரலாற்றையே மாற்றிய இயக்கமாகும் என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி கூறுவதும் உண்மை தானே!

தந்தை பெரியார் கண்ட திராவிடரியக்கத்தை, அதன் கொள்கைகளைப் பலப்படுத்திட, அந்த இயக்கத்தின் சார்பாக, எண்ணற்ற திராவிடரியக்கப் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அவற்றை சற்று விரிவாகவே இப்போது அறிவோம்.

பெரியார் ‘குடியரசு’,

‘விடுதலை’ பத்திரிகைகள்

தமிழ்ப் பத்திரிகை உலகமானாலும் சரி, திராவிடர் இயக்கப் பத்திரிகைகளானாலும் சரி தந்தை பெரியார் அவற்றுக்கு பெருந்தொண்டு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலே அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது, ‘குடியரசு’ என்ற பத்திரிகையைத் துவக்கி, தனது கட்சிப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தினார்.

இந்திய விடுதலைப் போர் கொள்கைகளுக்கும், அண்ணல் காந்தியடிகளின் போராட்டங்களுக்கும் முன்னோடியாக விளங்கியவர் பெரியார்! அப்போது புதிய பத்திரிகையாகத் துவக்கப்பட இருந்த எஸ்.எஸ். வாசன் அவர்களுடைய ‘ஆனந்த விகடன்’ பத்திரிகைக்கும், அண்ணல் கதர் பிரசார வணிக விற்பனைக்கும் குடியரசு இதழில்தான் அடிக்கடி விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கும்.

காங்கிரஸ் தேசியத்தை விட்டு பெரியார் வெளியேறினார். சுயமரியாதை இயக்கம் கண்டார். அதற்காக அவர் அரும்பாடு பட்டதோடு இராமல், குடியரசு பத்திரிகையைச் சுயமரியாதை இயக்கத்திற்கான கொள்கை விளக்க ஏடாக மாற்றினார். பத்திரிகை அந்த நேரத்தில் மிகப் பரபரப்புடன் விற்பனையானது.

வட நாட்டுக் காங்கிரஸ் தேசிய இயக்கத்தின் திறமைமிக்க தலைவர்களுள் மூவரை லால், பால், தாஸ் என்பார்கள் காங்கிரஸ் தலைவர்கள். அந்த மூவர் யார்? லாலா லஜபத்ராய், பால கங்காதர திலகர், சித்தரஞ்சன்தாஸ் என்பவரே அந்த மும்மணிகள். அந்த மூவரும் எழுத்து, பேச்சு, ஆக்கப் பணிகள் ஆகிய மூன்றிலும் நிகரற்றவர்களாக விளங்கியவர்கள். அதனால் அவர்களை அன்பாக, அருமையாக லால், பால், தாஸ் என்பார்கள்.

தமிழ் நாட்டுக் காங்கிரஸ் இயக்கத்திலும் குறிப்பாக பத்திரிகை உலகில் சுற்றி மூவரை மும்மூர்த்திகள் என்று அழைப்பார்கள் காங்கிரஸ் தொண்டார்கள். அந்த மூவர் யார்?

ஒருவர் முதலியார்; மற்றவர் நாயுடு; அடுத்தவர் நாய்க்கர். அதாவது ‘தேச பக்தன்’ ஆசிரியரான திரு.வி.க. முதலியார்; ‘தமிழ்நாடு’ நாளிதழின் ஆசிரியர் டாக்டர் வரதராசலு நாயுடு; ‘குடியரசு’ பத்திரிகை ஆசிரியர் ஈ.வெ.ராம்சாமி நாய்க்கர் என்பவர்களே அந்தப் பத்திரிகை உலகின் மும்மூர்த்திகளாக விளங்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

‘குடியரசு’ இதழ் சுயமரியாதைப் பிரசார பீரங்கியானவுடன், பிராமணர் அல்லாதவர்க்குப் பாடுபடும் பத்திரிகையாக மாறியது. பெரியாரின் குடியரசு இதழ், திராவிட இயக்கப் பத்திரிகைகளுக்குத் தாயாகவும் திகழ்ந்தது.

‘விடுதலை’, ‘திராவிட நாடு’

காஞ்சி ஆசிரியர் அண்ணா

அறிஞர் அண்ணா பி.ஏ.(ஆனர்ஸ்) தேர்வுகளை எழுதி முடித்த பின்பு, 1936-ல் பெரியாரை அண்ணா திருப்பூர் செங்குந்தர் மாநாட்டில் சந்தித்தார். ‘விடுதலை’ நாளேட்டிலும், ‘ரிவோல்ட்’ பத்திரிகையிலும் ஆசிரியராகப் பணியாற்றி அற்புதமான கட்டுரைகளையும், அரசியல் விமர்சனங்களையும், மறுமலர்ச்சித் தமிழ்நடையில் எழுதி, படித்த மாணவர்களிடம் மதிப்பைப் பெற்று, கழகத்துக்கு மாணவரணியை உருவாக்கினார்.

காஞ்சிபுரத்தில் ‘திராவிட நாடு’ என்ற வாரப் பத்திரிகையை அண்ணா துவக்கினார். அந்த இதழுக்குப் பெரியாரும் நன்கொடை கொடுத்தார். இங்லீஷ் இலக்கியங்களை அண்ணா ஆழமாகக் கற்றதால், எந்த ஒரு தமிழ் எழுத்தாளரிடமும் குடியேறாத புதிய ஒரு தமிழ் எழுத்து நடைபாணியும், புதுமைப் பேச்சுக்களும் அண்ணாவிடம் குடி கொண்டது. அதனால் திராவிட நாடு பத்திரிகை ஆயிரக்கணக்கில் விற்பனையானது மட்டுமன்று. விலைக்குக் கிடைப்பதும் அரிதாக இருந்தது.

அண்ணா தமிழ்நடையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டதைப் போலவே ஆங்கில எழுத்து நடையிலும் படைத்துக் கொண்டார். தமிழ் இலக்கியம், வரலாறு, நாடகம், சிறுகதை, புதினம், வரலாற்று ஆராய்ச்சிகள், ஆங்கில இலக்கிய நயங்கள் ஆகியவற்றிலே மட்டும் அண்ணா திறமையாளர் அல்லர்; அவரது ஆங்கிலப் பேச்சும், எழுத்து நடையும் தமிழ் நடை பாணியைப் போலவே அற்புதமாக அமைந்தனவாகும்.

ஆங்கிலத்திலே ஹோம் லேண்டு (Home Land), ‘ஹோம் ரூல்’ (Home Rule) என்ற பத்திரிகைகளையும், ‘திராவிட நாடு’, ‘காஞ்சி’ என்ற வார இதழ்களைத் தமிழிலும் பல ஆண்டுகளாக நடத்தினார். அவரது எழுத்துக்கள் மூட நம்பிக்கைகையின் முதுகெலும்புகளை முறித்தன. தன்மானக் கட்டுரைகள், இனமானக் கட்டுரைகள், தமிழாபிமானக் கட்டுரைகள், தம்பிக்குக் கடிதங்கள் என்ற கடிதக் கட்டுரைகள்; வரலாற்று ஆய்வுச் சமுதாயச் சீர்த்திருத்த நாடகங்கள் ஆகியவைற்றைக் கணக்கற்று எழுதியெழுதி தனக்கென வாசகர் வட்டத்தை ஊரூருக்கு உருவாக்கிக் கொண்ட ஊக்கச் சிற்பியாக உலா வந்தவர் அண்ணா.

அமெரிக்காவில் இங்கர்சால் பேச்சுக்கு மட்டுமே அரங்கக் கட்டணம் உண்டு. அதுபோலவே ‘நா’ நயமும், ‘நா’ வளமும், ‘நா’ நலமும், கொண்ட அண்ணா அவர்கள் பேச்சுக்கு மட்டும் தான் தமிழ்நாட்டில் அரங்க விலை. அதாவது பேச்சுக்கு மக்கள் கட்டணம் வழங்கும் புதுமை முறை உருவானது.

அண்ணா மேடை உரைகள் நூற்களாயின; கட்டுரைகள் நூற்களாயின; நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள், வரலாற்று ஆய்வுகள்; கம்ப இதிகாச தோல்விகள், வரலாற்றில் ஆரிய ஆய்வுக் களங்கள், புராண, மத, எதிர்ப்புகள் எல்லாமே நூற்களாயின. திராவிட பவனி வந்தன.

இந்தி எதிர்ப்புப் போர், சாதி ஒழிப்புப் போர், இதிகாச எதிர்ப்புப் போர், அரசியல் எதிர்ப்புப் போர், இலக்கிய எதிர்ப்புப் போர், வரலாற்று எதிர்ப்புப் போர், திரையுலக மறு மலர்ச்சிப் போர் போன்ற பலப் போர்களைத் தனது அறிவாயுதங்களால் களம் கண்டு பரணி பாடிய அறிவுமானி அண்ணா!

இறுதியாக 1957-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களாட்சிப் போரில் வாகைச் சூடி, முதல்வராகி தமிழ் மண்ணுக்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்டி மறைந்த மான உணர்ச்சி மறத் திராவிடர் தளபதி அண்ணா! பத்திரிகை உலகில் அவர் வகுத்த எழுத்து வியூகங்களை எவராலும் மறக்க முடியாத அரிய தொண்டுகளாகும்.

பாவேந்தரின்

புதுவைக் ‘குயில்’

புரட்சிக் கவிதைகள் புனைந்து புகழ்வானில் புதுவைக் குயிலாகச் சிறகடித்து பறந்த சமூக சீர்த்திருத்தக் குயில் பாவேந்தர் பாரதிதாசன்.

ஆரம்பத்தில் கனக சுப்புரத்தினம் என்று பெற்றோரிட்ட பெயரில் வளர்ந்து, படித்த பாவேந்தர், கதர் துணிகளை விற்றக் காங்கிரஸ்காரர். மைலம் மலையில் வீற்றுள்ள முருகப் பெருமான் மீது சுப்பிரமணியர் துதியமுது பாடி பராவியவர்: இத்தகைய ஓர் ஆன்மிகப் பக்தரான கனகசுப்புரத்தினம், 1928-ஆம் ஆண்டில் பாரதியாருக்குத் தாசனாக மாறி பாரதிதாசன் ஆனாா.

புனித ஆத்திகராக நடமாடியவர், புதுமையான நாத்திகராகி, கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை நாத்திக வாதத்தை எதிர்த்து, “இல்லை என்பான் யாரடா? தில்லையைப் போய் பாரடா!” என்று தேசிய பத்திரிகை ஒன்றில் எழுத, உடனே பாவேந்தர் பாரதிதாசன் தனது ‘குயில்’ பத்திரிகையில், ‘இல்லை என்பேன் நானடா - அத்தில்லை கண்டு தானடா!’ என்று எதிரடி கொடுத்த சீரம் பழுத்த நாத்திகக் கவிஞராக நடமாடியவர்!

‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’ கலந்து கொள்ள வாருங்கள் நாட்டினரே’ என்று,அண்ணல் காந்தி சுதந்திர அறப்போருக்கு நாமக்கல்லார் அழைப்பு விடுத்துக் கவிதை பாடியபோது, அந்த அரசியல் அழைப்பை அவமதிக்காமல் பாவேந்தர் சமுதாய விடுதலைக்கு அழைப்பு விடுத்து மக்களைத் திரட்டினார்! அப்போது அவர், ‘கொலை வாளினை எடடா! மிகு கொடியோர் செயல் அறவே, குகை வாழ்வொரு புலியே உயர் குணமேவிய தமிழா! என்று, சமுதாய விடுதலைக்கு முரசு கொட்டி அழைத்தவர் பாவேந்தர்!

“பார்ப்பனீயம் மேலென்று சொல்லிச் சொல்லி
பழையயுகப் பொய்க்கதையைக் காட்டிக் காட்டி,
வேர்ப்புறத்தில் செந்நீரை வார்த்து வார்த்து.
மிகப் பெரிய சமூகத்தை இந்நாள் மட்டும்
தீர்ப்பரிய கொடுமைக்குள் ஆக்கிவிட்ட
செயல் அறிந்து திடுக்கிட்ட வீரா!

என்ற இனமானக் கவிதையைத் திராவிட இனப் பெயருக்காக எழுதிய மானமிகு கவிஞர் பாவேந்தர்!

‘நாளுக்கு நாணம்’ என்ற கவிதையைக் ‘குடி அரசு’ பத்திரிகையில் பாவேந்தர் 10.3.1929ல் எழுதியபோது,

“எங்கள் நிலையில் ஈனத்தைக் காண
உள்ளம் நாணியோ
உன்றன் ஒளியிற் குன்றிக்குன்றி மேற்றிசை
சென்றிடு கின்றாய்’

என்று சூரியனை நோக்கிக் கேள்வி கேட்பவர் யார் தெரியுமா? பாவேந்தர் பாரதிதாசன்தான்.

‘குயில்’ என்ற பத்திரிகையைப் புரட்சிக் கவிஞர் புதுவையிலே கூவிக் கூவி நடத்தினார்! அந்த ஏடு 1946-ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டு விட்டது. என்றாலும், மீண்டும் அந்தக் குயில் தமிழ் மக்களிடையே புரட்சிக் குரல் கொடுத்துக் கூவியது.

‘முன்னேறும் திறம் வேண்டும்
மொய்ம்பேறும் தோள்கள் வேண்டும்
தன்மானம் நாம் பெறவேண்டும்!
வேறென்ன வேண்டும்?

என்ற சுயமரியாதை சித்த மருந்தைப் பாவேந்தர் தனது கவிதைத் தேனில் கலந்து திராவிட இனத்துக்குப் புகட்டியதை தமிழ்ப் பத்திரிகை உலக எழுத்தாளர்களால் மறக்க முடியுமா?

கனக சுப்புரத்தினம் எழுதிய, ‘எங்கெங்கும் காணினும் சக்தியடா’’ என்ற முதல் கவிதையை, பாரதியார் கவிதா மண்டலம் என்ற தலைப்பிட்டு, மகாகவி பாரதியார் ‘சுதேச மித்திரன் தேசிய தின ஏட்டுக்கு அனுப்பிப் பாரதிதாசனுக்குப் புகழைத் தேடி தந்தார்! பாரதியாரும் தனது மாணவரின் வித்தகக் கவிதையால் புகழ் பெற்றார! இது கவிதை வரலாறு.

சுயமரியாதை இலக்கிய வரலாற்றில் பாரதிதாசன் பரம்பரை என்ற ஒரு மரபை உவமைக் கவிஞர் சுரதா போன்ற மானமிகு மாணவர்களால் உருவாக்கப்பட்டு வளர்ந்து வருவது தான் பாவேந்தர் பாடுபட்ட திராவிட இனமான உணர்ச்சி, புரட்சி என்பதை நம்மால் மறக்க முடியாது. திராவிடரின் பத்திரிகை உலகில் பாவேந்தர் தமிழ்த் தொண்டு வளையா வானமாக படர்ந்துள்ளது.

நாகர்கோயில்

‘தமிழன்’ இதழ்

அன்றைய திருவாங்கூர் அரசுக்குட்பட்ட குமரி மாவட்டம் நாகர்கோவில் நகரிலிருந்து, ‘தமிழன்’ என்ற பத்திரிகையை நடத்தியவர் சிதம்பரம் என்ற வழக்கறிஞர். இவர் ஈரோட்டில் நடந்த இரண்டாவது சுயமரியாதை மாநாட்டின் இளைஞர் அணிக்குத் தலைமை ஏற்றவர்.

திருவாங்கூர் சட்டமன்ற உறுப்பினராகவும், நாகர் கோவில் நகராட்சித் தலைவராகவும் பணியாற்றியத் திறமையாளர். பத்திரிகை எழுத்தாண்மையில் மிகச் சிறந்த அறிஞர். இவரது கருத்துக்களை அப்போது மறைமலை அடிகள் போன்ற அறிஞர்கள் மேற்கோள்களாக எடுத்துக் காட்டிப் பேசுமளவிற்குச் சிறந்தவர்.

பூவாளுர் பொன்னம்பலனாரின்

‘புதுவை முரசு, சண்டமாருதம்’

திருச்சி மாவட்டம், பூவாளுர் சிற்றூரைச் சேர்ந்த அ. பொன்னம்பலனார் மிகச் சிறந்த சொற்பொழிவாளர். ‘குடியரசு’ பத்திரிகையின் தொடர் கட்டுரையாளர். புதுச்சேரி அரசு பிரெஞ்சு-இந்திய எல்லைக்குள் நுழையக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட பேச்சாளர் அவர்.

பொன்னம்பலனார், ‘புதுவை முரசு’, ‘சண்ட மாருதம்’ என்ற பத்திரிகைகளை நடத்தி, சமுதாய மடமைகளைக் கூறுகூறாய்க் கிழித்தெறிந்தவர். சிறந்த கூர்மையான, கடுமையான எழுத்துக்களால் சமுதாய மூடநம்பிக்கைச் சடங்குகளை விமர்சித்து எழுதிய சைவ சமய நெறியாளராகப் பிறந்தவர்.

திருச்சி - திருமலைசாமி

‘நகர தூதன்’ இதழ்

திருச்சி நகரிலிருந்து ‘நகர தூதன்’ என்ற வாரப் பத்திரிகையை, பார்ப்பனர் அல்லாதார் விடுதலைக்கும், தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்கும் பத்திரிகை நடத்தியவர். இவர் இதழ் தமிழ்நாட்டைப் பரபரப்பாக்கியதற்குக் காரணம் திருமலைசாமியின் எழுத்துக்களில் பொதிந்திருந்த கட்டுரைச் சொற்றொடர்கள்தான். கேலியும் - கிண்டலும், நையாண்டியும் - நக்கலும் கொண்ட அவரது தமிழ்ப்பாணி எழுத்துக்கள் - அக்காலத்தில் தமிழ் மக்கள் எல்லோராலும் ஈர்க்கப்பட்ட எழுத்துக்களாகும்.

‘பேனா நர்த்தனம்’ என்ற பகுதியில் கேசரி எனும் பெயரில் திருமலைச் சாமியின் எழுத்துக்கள் ஆடும். ஆட்டங்களைக் கண்டு, வைதீக எதிரிகள் அஞ்சி ஓடும் நிலை பல தடவைகள் நடந்துள்ளன. அவரது ‘நகர தூதன்’ பத்திரிகை  தமிழர்கள் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் சமுதாய முரசாக அன்று நடமாடியது.

காரைக்குடி முருகப்பர்

‘குமரன்’ பத்திரிகை!

காரைக்குடி சொ. முருகப்பர் பத்திரிகை உலகில் சுயமரியாதைக் கருத்துக்களைப் பரப்பிட பெரும் புரட்சி வீரராய் திகழ்ந்தவர். செட்டி நாட்டு மண்ணில் துணிந்து விதவைத் திருணம் செய்து கொண்ட உணர்ச்சி வேங்கை.

மத மூடத் தன்மைகளை எதிர்த்து மறுமணம், கலப்பு மணம், காதல் மணம், சடங்குகள் அற்ற மணம், சிக்கன மணம், விதவை மணம் என்ற அறுவகை தன்மைகளைக் கொண்ட திருமணத்தைத் தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் செய்து கொண்ட ஒரே ஒரு சீர்திருத்தப் புரட்சிப் பத்திரிகையாளர் திரு. சொ. முருகப்பர்.

காரைக்குடி நகரிலிருந்து குமரன் என்ற பத்திரிகையை நடத்தி, செட்டி நாட்டு மண்ணிற்கு விழிப்புணர்ச்சியை ஊட்டியவர் என்ற அழியாப் புகழைப் பெற்ற மாவீரர் முருகப்பர்.

“Rationalist’

எஸ். இராமநாதன்

வ.வே.சு. ஐயர் சாதிபேத குருகுலப் போராட்டத்தை எதிர்த்தவர். வகுப்புரிமைப் போராட்டத்துக்காக வாதாடியவர் எஸ். இராமநாதன் என்ற பத்திரிகையாளர்.

சென்னை மாநிலத்திலேயே சட்டப் படிப்பில் முதன்முதல் M.L. பட்டம் பெற்ற கா.சு.பிள்ளை, எம்.எல். பிள்ளை என்று புகழ் பெற்றதைப் போல, தமிழ்நாட்டிலேயே B.A., தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்ற B.A. பிள்ளை எனப்படும் காந்திமதி பிள்ளை போல சென்னை மாநிலத்திலேயே M.A. தேர்வை எழுதி முதல் மாணவர் என்ற தகுதியைப் பெற்ற எம்.ஏ. இராமநாதன் ஆவார் இவர். உலக நாடுகள் பலவற்றுக்கு தந்தை பெரியாருடன் பயணம் செய்த வித்தகர். பெரியாருடையை கருத்துக்களை. அவருடைய மேல்நாட்டுச் சுற்றுப் பயண உரைகளை அந்தந்த ஊர்களில் இங்லீஷில் மொழிப் பெயர்த்துப் பேசிய மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தவர் எஸ். இராமநாதன்.

சென்னையில் 31.12.1933 அன்று நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில், ‘கடவுள் நம்பிக்கையை முழுமையாக ஒழிக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய இந்த மேதை, 21.12.1933ஆம் ஆண்டில் அண்ணல் காந்தியடிகளைத் தனது சுயமரியாதைக் குழுவினருடன் சந்தித்தபோது, காந்தியடிகள் தம்மை, ‘தாம் ஒரு விஞ்ஞானி’ என்று எஸ். இராமநாதனிடம் கூறியபோது, அவரிடமே தைரியமாக, நேருக்கு நேராக ‘அல்லர் என்று’ மறுத்துரைத்த துணிவுடைமை மிக்கவர் இராமநாதன்.

இத்தகைய அஞ்சாநெஞ்சர் ஆங்கிலத்திலும்; தமிழிலும் கல்வியாளர்களும், புலமையாளர்களும் வியக்கத்தக்கப் பேச்சாளராக விளங்கினார் என்றால் இது சாமான்யமான அறிவுடைமையாகுமா?

இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவர்களாக அப்போது விளங்கிய பட்டாபி சீத்தாராமையா, டைகர் என்.எஸ். வரத்தாச்சாரி ஆகியோரிடம் Supersition of Khadi அதாவது, கதர் ஒரு மூடநம்பிக்கைக் கொள்கை என்று வாதித்தார் என்றால், அவரது புலமைக்கு வேறு சான்று என்ன வேண்டும்?

இத்தகைய ஓர் அரிய அறிஞர் “Rationalist” என்ற ஓர் ஆங்கிலப் பத்திரிகையை நடத்தினார். அந்தப் பத்திரிகை எஸ். இராமநாதன் அவர்களை இந்தியாவிலேயே ஒரு சிறந்த ஆங்கிலக் கட்டுரையாளர் என்ற புகழ் மகுடத்தைச் சூட்டி அழகு பார்த்தது.

ஒரு முறை எஸ். இராமநாதன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சில தோழர்களுடன் சென்றார். பார்ப்பன பட்டர்களிடம் தான் எடுத்துச் சென்ற தேங்காய், பழத்தைக் கொடுக்காமல், தாங்களாகவே உடைத்து அவர்கள் வழிப்பட்டுக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியைக் கண்டு ஆத்திரம் பொங்கிய அர்ச்சகர்கள் அவரையும், உடன் சென்ற தோழர்களையும் கோயிலுக்குள்ளேயே வைத்து, வெளிக் கதவைப் பூட்டி விட்டார்கள். இந்த நிகழ்ச்சி மதுரை நகரையே திணறடித்து விட்டது.

‘ரேஷனலிஸ்ட்’ பத்திரிகையில் இந்த நிகழ்ச்சியைப் படித்தவர்கள், இந்தச் சமுதாயத்தின் இழிந்த கேட்டினை ஒழிக்க வந்த சமத்துவமனிதர் என்று அவரையும், அந்தப் பத்திரிகைத் துணிவையும் பாராட்டதவர்களே அப்போது இல்லையாம்!

தோழர் எஸ். இராமநாதனின் பத்திரிகையான ‘ரேஷனலிஸ்ட்’, சமுதாய சமத்துவத்திற்காக அரும்பாடுபட்ட ஒரு பத்திரிகை என்ற புகழைப் பெற்ற பத்திரிகையாக இருந்த்து என்பது பத்திரிகையாளர் உலகுக்கும் ஒரு பெருமைதானே!

ஜே.எஸ். கண்ணப்பர்

‘திராவிடன்’ பத்திரிகை

ஜே.எஸ். கண்ணப்பர் என்றால், ஜனக சங்கர கண்ணப்பர் என்பது முழு பெயர். இவர் பெரியார் அவர்களுடன் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியே வந்து, ‘திராவிடன்’ என்ற பத்திரிகையின் பொறுப்பாளரானார். அரிய கட்டுரைகள் பல எழுதி திராவிட மக்கள் இடையே விழப்புணர்வுகளை உருவாக்கிய ஒரு சீர்திருத்த குணமுடைய பத்திரிகை ஆசிரியராகத் திகழ்ந்தார்.

ஒருமுறை பெரியாருடன் சீர்காழி எனும் நகருக்குள் வந்த போது, அங்கு ஜே.எஸ். கண்ணப்பருடன் வாழ்ந்த பிராமண அடிமைகள் சிலர், “கண்ணப்பன் பறையன், இராமசாமி சக்கிலியன் இருவரும் கோயிலுக்குள் நுழையப் போகிறார்கள், கோயில் தீட்டாய் விடும்” என்று சுவரொட்டிகளாலும் விளம்பரத் தட்டிகளாலும் இழிவுபடுத்தினார்கள் என்று “சுயமரியாதைச் சுடரொளிகள்” என்ற நூல் கூறுகின்றது.

திருவண்ணாமலை நகருக்கு ஒருமுறை கண்ணப்பர் தோழர்களுடன் சென்றபோது, ‘பறையர்கள் வருகிறார்கள்’ என்று பார்ப்பனர்கள் கோயிலையே இழுத்துப் பூட்டி விட்டார்கள் என்றும் மேற்கண்ட நூல் குறிப்பிடுகின்றது.

ஜே.எஸ். கண்ணப்பர் திராவிடன் பத்திரிகை ஆசிரியராக இருந்து, அதன் பொறுப்பாளராக பணியாற்றியவர் என்றாலும், திராவிடச் சமுதாயத்தில் பறையன் என்று தன்னை இகழ்ந்தாலும், அவர்கள் இன உரிமைக்காக தனது பத்திரிகையிலே எழுதிப் போராடியதால்தான் - இன்று ஆதி திராவிடப் பழங்குடி மக்கள் சமத்துவம் பெற்று வாழ்கிறார்கள் என்பதை எவரே மறுப்பர்?

‘குத்தூசி

குருசாமி’

இவருடைய ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள குருவிக்கரம்பை. 1906-ல் பிறந்தார். படிப்பு பி.ஏ., உச்சிக்குடுமி, சாம்பல்பட்டை, உருத்திராட்சக் கொட்டை, தேவார பாராயணம், கதாகாலட்சேபம், காந்தி பக்தி, குருசாமியின் தோற்றமும் செயலும் இவைதான்.

இத்தகையவரை, வ.வே.சு. ஐயரின் சேரன்மாதேவி குருகுலச் சாதிப் போராட்டம் சிந்திக்க வைத்தது. எழுத்துத் திறனில் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிறந்தவரானார். இவருடைய இங்லீஷ் புலமையைக் கண்ட தந்தை பெரியார் Revolt என்ற பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக்கினார். பிறகு ‘விடுதலை’ என்ற திராவிடரியக்க நாளேட்டிற்கு ஆசிரியரானார். ‘குத்தூசி’ என்ற பகுதியில் கட்டுரைகள் பல எழுதி திராவிட இனத்திடம் பெரும் புகழ் பெற்றார்.

அண்ணல் காந்தியடிகளை 1932-ஆம் ஆண்டில் தனது சுயமரியாதைத் தோழர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அடிகளும் - குருசாமியும் கடுமையாகத் தர்க்கம் செய்து கொண்டார்கள். எதைப் பற்றி?

“காந்தியடிகள் தனது வாயாலேயே, ‘நானும் பார்ப்பனர் கொடுமைக்கு ஆளாகியதுண்டு. இன்னும் ஆளாகி வருகிறேன்” என்று சொல்ல வைத்தவர் குத்தூசி குருசாமி என்றால், அவரது வாதத் திறமை எத்தன்மைத்ததாக இருந்திருக்க வேண்டும்? ஒரு பத்திரிகை ஆசிரியனுக்கு இந்தத் தருக்க வாதத் திறமை தேவையல்லவா? 

சாமி சிதம்பரனாரின்

‘லோகோபகாரி’ இதழ்

சாமி சிதம்பரனார், ‘அறிவுக் கொடி’ என்ற பத்திரிகையை இரண்டாண்டுகள் நடத்தி, பகுத்தறிவுக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தார். அதற்கடுத்து ‘லோகோபகாரி’ என்ற பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்து, அதில் இலக்கிய ஆய்வுகளைப் பகுத்தறிவு பார்வையுடன் எழுதி வெளியிட்டார்.

பெரியாரின் செங்கற்பட்டு மாநாட்டின் தீர்மானத்திற்கு முதலோடியாக, சுயமரியாதைத் திருமணம், கலப்புத் திருமணம, குறிப்பாக சிவகாமி அம்மையாரை விதவைத் திருமணமாக, 1930-ஆம் ஆண்டில் பெரியார் மனைவி நாகம்மையார் தலைமையில் செய்து கொண்ட புரட்சியாளர் சாமி. சிதம்பரனார்.

சுயமரியாதை இயக்க உணர்ச்சிக்களை, அதே நேரத்தில் பொதுவுடைமைக் கட்சிச் சார்புடனும், தனது எழுத்துக்களை ஆட்சி செய்த ‘லோகோபகாரி’யாக நடமாடிய பத்திரிகையாளரெனப் புகழ் பெற்று வாழ்ந்தவர் சாமி. சிதம்பரனார்.

ஜீவா, ‘ஜனசக்தி’,

‘தாமரை’ இதழ்கள்

ப. ஜீவானந்தம், காரைக்குடிக்கு அருகே சிராவயல் என்ற சிற்றூரில் உள்ள காந்தி ஆசிரமத்தில் தொண்டாற்றிக் கொண்டிருந்தபோது, காந்தியடிகள் அங்கே வருகை தந்தார். அவரிடம் ஜீவா, பகவத் கீதையில் உள்ள வருணாசிரமத்தைப் பற்றி விளக்கம் கேட்க விரும்பினார்.

“பிராமணனாகப் பிறந்து தீய ஒழுக்கமுடைய ஒருவன் - சூத்திரன் தானே? என்ற வினாவை, ஜீவா - காந்தியடிகளிடம் கேட்டார். உடனே அண்ணல் காந்தி, ‘இல்லை, அவன் கெட்ட பிராமணன்’ எனும் படு அடிமைத்தன்மை தேங்கிய விடையைப் பெற்ற அந்த நொடிதான், ஜீவாவின் வாழ்க்கையில் உண்டான திருப்புமுனை!

சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் நடத்திய குருகுல சாதிபேத உரிமைக் கிளர்ச்சியில் அக்கறை காட்டிய ஜீவா, அந்த நிகழ்ச்சி முதல் அவர் சுயமரியாதை உணர்ச்சியில் தீவிரவாதியானார்.

திருநெல்வேலி நகரில் தீண்டாமை விலக்கு மாநாடு நடந்தது. அதற்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை உரை ஆற்றும்போது, ஜீவா அந்தப் பேச்சை இடைமறித்து, குறுக்குக் கேள்விகள் பல கேட்டு - அவரைத் தாக்கிப் பேசி, வாட்டி வதைத்துக் கொண்டிருந்தபோது, தந்தை பெரியார் அவர்களே அதைக் கண்டு, நடந்தவற்றுக்குப் பாரதியாரிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவம், ஜீவாவின் முனைப்பான வினைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.

காந்தியடிகள் 1927-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பயணம் செய்தபோது, ஜீவாவும் அவருடன் சென்றார். அப்போது அதே சிறுவயல் கிராம காந்தி ஆஸ்ரமத்தில் கீதைக்கு விளக்கம் கேட்டு முடிந்தவுடன், ‘உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறது? என்று அடிகள் கேட்டபோது, ‘இந்தியாதான் என் சொத்து’ என்றார் ஜீவா. உடனே மகாத்மா அவர்கள், இல்லை; இல்லை! நீங்கள் இந்தியாவின் சொத்து’ என்றார் என்று அ.மா. சாமி தனது ‘தமிழ் இதழ்கள் தோற்றம் வளர்ச்சி’ நூலில் கூறுகிறார்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் தம்பி திரவியம் என்பவருக்கு, சென்னை தியாகராய நகரிலுள்ள வெங்கட்ராமன் தெருவில் 1952-ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சியின் தலைவர் ஜீவா. வரவேற்பாளர் கவிஞர் கண்ணதாசன். வாழ்த்து கூறும் உரையாளர்கள் திருக்குறள் வீ. முனுசாமி, எம்.பி., அ. பொன்னம்பலனார் ஆகியோர்.

வரவேற்பாளர் கண்ணதாசன் தி.மு.க.வில் அப்போது தான் உறுப்பினரான புதியவர். அவர் வரவேற்புரை ஆற்றும் போது, உண்மையான சீர்திருத்தம் செய்வதையே தி.மு.கழகம் முதற் பணியாகக் கொண்டது என்றும், கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் அத்தகையவரல்லர் என்றும் கூறி, அதற்கு ஓர் எடுத்துக்காட்டை விளக்கினார்.

மது விலக்குக் கொள்கையிலே காங்கிரஸ் சரியான சீர்திருத்தப் போக்கைக் கடைப்பிடிக்காததால்தான், ஜெமினி ஸ்டியோ சாலைகளிலே மோர் விற்கும் பானைகளிலே கள் விற்கின்றது’ என்றார்.

எடுத்துக்காட்டாக, உடலில் ஒரு புண் வந்தால் அதற்கு மருந்து போட்டால் புண் ஆறும்; மீண்டும் வேறோரிடத்தில் அதே புண் இடம் மாறி வரும். இந்தச் சிகிச்சையைத்தான் காங்கிரசும், கம்யூனிஸ்டும் செய்து வருகின்றன என்றார்.

ஆனால், தி.மு.கழகம் அத்தகைய சீர்திருத்தக் கட்சி அன்று. உடலிலே புண் ஏன் வந்தது; ரத்தம் கெட்டுள்ளதா? என்ற பரிசோதனைகளைச் செய்து, ரத்தம் கெட்டிருந்தால், கெட்ட ரத்தம் சுத்தமாவதற்கு மருந்து கொடுத்தால், புண் அறவே உடலில் வராது. இந்த சிகிச்சையைத்தான் தி.மு.கழகம் செய்கிறது என்றார் கவிஞர் கண்ணதாசன்.

தலைவராக வீற்றிருந்த ஜீவா அவர்கள், இடையிலே எழுந்தார்! மேடையிலே சிலம்பமாடியைப் போல சினம் பொங்கி, ஆடியாடி, பெருங்குரலெடுத்து, ‘யார் இந்த கண்ணதாசன்? என்னைப் போல சீர்திருத்தப் பணிகளுக்காகக் கல்லடிப் பட்டவரா? சாணியடிகள் வாங்கியவரா? ஏச்சுப் பேச்சுக்களைக் கேட்டவரா? என்ன தியாகம் செய்தார் - இவர் கம்யூனிஸ்டுகளுக்கு அறிவுரை கூற? என்றெல்லாம் ஜீவா பேச, அப்போது திருக்குறளார் வீ. முனிசாமி இறுதியாக எழுந்து பேசும்போது, கலைவாணர் அரையனா கொடுத்து ஆட விட்டு விட்டு, ஓரணா கொடுத்து ஓய வைக்கின்றார் பாவம்’ என்றார்.

கலைவாணர் நன்றியுரை கூறிய நேரத்தில், ஜீவா பேசுகின்றபோது யாராவது குத்தி விட்டால்தான் அவர் பேச்சு சூடேறும்; சுவையூறும்! அதற்கு ஆள் இல்லையே என்று எண்ணினேன். கவிஞர் கண்ணதாசன் கிடைத்தார்!” என்று பேசி எல்லாரையும் சிரிக்க வைத்தார்.

ஏன் இவற்றை இங்கே குறிப்பிட்டோம் என்றால், ஒரு பத்திரிகை ஆசிரியனுக்கு வீரமும் வேண்டும்; விவேகமும் வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; மக்கட் திரளின் மனதை நிறைவுப்படுத்தும் ஆற்றல், எழுத்திலும் எழுச்சி பெற வேண்டும்! பேச்சிலும் மூச்சாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான்!

காந்தி பஜனைகளில் மூழ்கி, சுயமரியாதை ஊர்வலம் வந்து, பொதுவுடைமைத் தத்துவத் தலைவராக வீற்றிருந்து பத்திரிகையிலே அரிமா பலத்தோடு தனது எழுத்தாண்மையைக் காட்டி, மேடைகளிலே கர்ஜனை முழக்கங்களிட்டு வந்த ஜீவா, என்ற நாஞ்சில் சிங்கம் செய்த ‘ஜனசக்தி’ புதையல் தொண்டுகளைத் ‘தாமரை’ மலரிலே ஏந்தி நின்று நாமும் நமது பத்திரிகைகளிலே வழிபாடுகள் செய்யலாம் இல்லையா?

‘தீப்பொறி’

சிற்றரசு

‘சிற்றரசு என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கின்றீரே எந்த நாட்டுக்கு நீர் சிற்றரசு?’ என்று ஒருவர் சிற்றரசு பேச எழுந்த வேலூர் பொதுக்கூட்டம் ஒன்றில் கேட்டார். அதற்கு அவர், ‘இராசகோபலாசாரியார் எந்த நாட்டுக்கு சக்கரவர்த்தியோ, அந்த நாட்டுக்கு அடுத்த நாட்டிலே நான் சிற்றரசாக இருக்கின்றேன்’ என்றார்! வினா விடுத்தவன் விலா ஒடிந்து வீழ்ந்து அமர்ந்தான்! இராஜாஜியைச் ‘சக்கரவர்த்தி’ என்னும் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவதுண்டு. அதாவது சக்கரவர்த்தி இராஜகோபாலர்சாரி என்று!

சிந்தனைச் சிற்பி என்று திராவிடரியக்கத் தோழர்களால் பெருமிதத்தோடு அழைக்கப்பட்ட சின்னராசு என்பவர்தான், சிற்றரசு என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். எளிமையான பேச்சாளர்; ஆவேசமான எழுத்தாளர்; நகைச்சுவையோடு எதிரிகளைக் கிண்டலடிப்பவர். கூட்டத்து மக்களைக் கவர்ச்சித்துப் பேசும் பாணி அவரது பேச்சுப் பாணி ஆனால், எழுதுவதில் வன்மையான பேனா வீரர்!

தீப்பொறி, தீச்சுடர், இன முழக்கம் என்ற மூன்று வார பத்திரிகைகளை தி.மு.கழக வளர்ச்சிக்காக நடத்தி சிற்றரசு வெற்றி கண்டவர். அவர்தான் மூன்று ஏடுகளுக்கும் ஆசிரியர். அதுமட்டுமல்ல; ஏறக்குறைய 20 புத்தகங்களுக்கு மேல் எழுதிய சிந்தனையாளராகவும் திகழ்ந்தார்.

1967-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் சட்டமன்ற மேலவைத் தலைவராக பணியாற்றியபோது, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகச் சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சிட்னி நகர் சென்றார்.

தமிழ்நாட்டில் வன்மையான பேச்சாளராக, வேகமான பத்திரிகை ஆசிரியராக, மென்மையான சட்ட மேலவைத் தலைவராகத் திகழ்ந்த சிந்தனை சிற்பி சி.பி. சிற்றரசு, 16.2.78ஆம் ஆண்டில் சிட்னி நகரில் இயற்கை எய்தினார்.

அப்போது முதல் அமைச்சாரக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவரது புகழுடலை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து, உறவினரிடம் ஒப்படைத்தார். வாழ்க சிற்றரசு பத்திரிகைத் தொண்டு.

‘தனியரசு’ நாளேடு’

ஏ.வி.பி. ஆசைத்தம்பி

தந்தை பெரியார் பேச்சுப் பாணியைப் போலவே பேசும் ஆற்றல் ஏ.வி.பி. ஆசைத்தம்பிக்கு இருந்தது. அதனால் ஏ.வி.பி. பேசுகிறார் என்றால் பெரியார் பேசுவதாக எண்ணிச் சென்று கேட்டவர்கள் ஏராளம் பேருண்டு.

பெருந்தலைவர் காமராசர் தோன்றிய விருதுநகரிலே பிறந்தவர் ஆசைத்தம்பி. இளம் வயதிலேயே திராவிடர் இயக்க எழுத்தாளர் ஆனார். பேச்சாளரானார். எழுத்து வன்மை கொண்ட சிந்தனையாளர். ‘தனியரசு’ என்ற நாளேட்டை நடத்திக் கட்சித் தொண்டு புரிந்தார். பரப்பரப்பூட்டும் கட்டுரை எழுத்தாளர் அவர்.

சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர் ஆசைத்தம்பி.

ஆசைத்தம்பி எழுத்து வன்மைக்கு சான்று கூற வேண்டுமானால், அவர் எழுதிய ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற ஒரு சிறு நூலைக் கூறலாம். அந்த நூலைக் காங்கிரஸ் ஆட்சி தடை செய்தது. ஏன் தெரியுமா?

‘பாம்பையும், பார்ப்பானையும் கண்டால்....... பாம்பைக் கொல்லாதே’ என்று ஒரு பழமொழி இன்றும் புதுமொழியாக இங்கே இருக்கிறது. கருப்புச் சட்டைக்காரன் தானே? ஈரோட்டில் பயிற்சி பெற்றவன் அப்படித்தான் பேசுவாணய்யா!’ என்று தான் பலர் கூறுவார்கள். ஆனால், அப்படிக் கூறியவன் கருப்புச் சட்டைக்காரன் அல்லன். வெள்ளைக்காரன். பெவர்லி நிக்கோலஸ் என்பவர், குமரி முதல் காஷ்மீர் வரை எல்லா இடங்களையும், மக்களையும் பார்வையிட்டு, நிலை தெரிந்து ஆராய்ந்து, அதன் பின்னரே இந்தியாவைப் பற்றி ஒரு புத்தகம் Verdict on india என்று எழுதினார். அதிலே தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார் ‘பாம்பைக் கொல்லாதே’ என்று.

இந்த நூலை எழுதியதற்காக ஆசைத்தம்பிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை! சிறைக்குள்ளே அவர் தலையை மொட்டை அடித்தார்கள்! யார் அடித்தார்கள்? அதிகாரிகள்தான்!

‘தனியரசு’ என்ற பத்திரிகையிலே ஏ.வி.பி. ஆசைத்தம்பி எழுதிய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஈட்டி முனைகளாகப் பாய்ந்தன. இந்தப் புத்தக ஆசிரியர் என்.வி. கலைமணி அந்த நாளேட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.

இத்தகைய எழுத்தாண்மைமிக்க ஆசைத்தம்பி எம்.எல்.ஏ.-ஆக, எம்.பி.யாக மட்டுமல்ல; திரை உலகிலும் புகுந்து, சேலம் மார்டன் தியேட்டர்ஸ் எடுத்த, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த ‘சர்வாதிகாரி’ என்ற திரைப்படத்துக்கும் கதை-வசனம் எழுதினார்.

அந்தமான் தீவு கழகத் தோழர்கள் அழைப்பை ஏற்றுச் சொற்பொழிவாற்றச் சென்ற ஏ.வி.பி. ஆசைத்தம்பி 7.4.70 அன்றிரவு எதிர்பாராத இறப்பை ஏற்றார்! அவரது புகழுடலைத் தமிழ் நாடு முதல் அமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மனிதநேயத்துடன் உறவினர்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்!

என்.வி. நடராசன்

‘திராவிடன்’ பத்திரிகை

உழைப்பு; எளிமை, இரண்டாலும் முன்னேறிய சுயமரியாதை வீரர் என்.வி. நடராசன் தமிழ்நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் சென்னையிலுள்ள ‘ஹோ அண்ட் கோ’ என்ற அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவர் குழுவுக்கு மேலாளராக இருந்தார். சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம.பொ. சிவஞானமும் இதே நிறுவனத்தில் அச்சுக்கோர்க்கும் அணியில் வேலை செய்தவர் ஆவார்.

என்.வி. நடராசன் அவர்கள் ‘திராவிடன்’ என்ற வார இதழை தி.மு.கழகத்தின் கொள்கைப் பிரச்சாரப் பத்திரிகையாக நடத்திட, அறிஞர் அண்ணா அவர்கள் சந்திரமோகன் நாடகத்தை சென்னை ஒற்றைவாடை நாடக அரங்கில் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். உடனே என்.வி.என். பத்திரிகையைத் துவக்கி எழுச்சியூட்டும் கட்டுரைகளை எளிய தமிழ் நடையிலே எழுதி திராவிடரியக்கக் கொள்கைகளைப் பரப்பினார்.

இந்தப் புத்தகத்தை எழுதிய புலவர் என்.வி. கலைமணி 1950-ஆம் ஆண்டில் ‘திராவிடன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றியவர் ஆவார்.

அப்போது மத்திய அரசின் அஞ்சல் துறை, தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்களுக்கு, கழகத் தீர்மானத்திற்கேற்ப சென்னையில், இன்றையைக் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக இருக்கும் சத்தியமூர்த்தி பவன், அன்றைய இந்திய தேசிய ராணுவத் திடல் என்று (I.N.A. திடல்) அழைக்கப்பட்ட இடத்தில் புலவர் என்.வி. கலைமணி 6.4.52 அன்று தன்னந்தனி இளைஞனாய் திடலுக்குள் சென்று, ஜெகஜீவன்ராம் அவர்கள் ஸ்பென்சர் தொழிலாளர் விழாவில் பேசி முடித்த பின்பு, கறுப்புக் கொடியை கையின் கொடுத்து இரண்டு வாரம் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும். சென்னை சிறையில் இவர் அடைக்கப்பட்ட இந்த சம்பவச் செய்தி T.M. பார்த்தசாரதியால் நடத்தப்பட்ட ‘மாலை மணி’ நாளேட்டிலும், ‘சிறை மாளிகையில்’ என்று தலைப்பிட்டு அறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய ‘திராவிட நாடு’ வார இதழிலும் வெளி வந்துள்ளது.

‘திராவிடன்’ வார இதழை நடத்திய திரு. என்.வி. நடராசன் அவர்கள் கழகத் தீர்மானத்தின்படி சென்னை குன்றத்தூர் நகரில் 144 தடைச் சட்டத்தை மீறியபோது துப்பாக்கி பிரயோகத்தை ஆட்சியால் நடத்தப்பட்டக் கொடுமைகளுக்கு அஞ்சாமல் கைதாகி, பூவிருந்தவல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.

‘திராவிடன்’ பத்திரிகை ஆசிரியர் என்.வி. நடராசன் தன்னலம் மறுத்துக் கட்சி தொண்டாற்றிய பத்திரிகையாளராக வாழ்ந்து 3.8.1975-ல் மறைந்தார்.

சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’

கோ. சாரங்கபாணி

சிங்கப்பூர் தமிழர்கள் வெறும் மூட்டை சுமக்கும் பாட்டாளிகள் என்ற தாழ்நிலையைத் தூக்கி எறிந்து, அறிவு சுமக்கும் படிப்பாளிகள் என்ற உயர்நிலையையும் சிங்கப்பூர், மலேயா பகுதிகளில் உருவாக்கியவர் கோ. சாரங்கபாணி.

கடல் கடந்து சிங்கப்பூர் நகருக்குச் சென்று ‘முன்னேற்றம்’, ‘தமிழ் முரசு’ என்ற இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளை நடத்திப் பத்திரிகைத் துறையில் அழியாப் புகழ் பெற்றவர்.

தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்பு முதன் முதலாக 1937-ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, அங்கு வாழ்ந்த தமிழ் மறவர்களுக்குத் தமிழருமையூட்டி, இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொள்வதற்காகத் தமிழ் வீரர்களைக் கப்பலேற்றித் தமிழகம் அனுப்பி வைத்த தமிழ்நெஞ்சச் சான்றோராக சிங்கப்பூரில் வாழ்ந்த கொள்கைச் சிங்கம் அவர்.

‘தமிழவேள்’ என்ற விருது தமிழ் மக்களால் அவருக்குச் சிங்கப்பூரில் வழங்கப்பட்டது. அவருடைய ‘தமிழ் முரசு’ நாளேட்டில் தமிழக எழுத்தாளர்களை எழுத வைத்து, பத்திரிகையின் புகழை மலேயா நாட்டில் நிலை நிறுத்தியவர்.

கலைஞர் கருணாநிதி

‘முரசொலி’ நாளேடு

தஞ்சை மாவட்டம் திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்த மு. கருணாநிதி அவர்கள், ‘சாம்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும், என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’ என்ற தமிழ் நெஞ்சச் சிங்கக் குருளையாக இளமையிலே இருந்தவர்.

அவர் ‘முரசொலி’ என்ற பெயரில், மாணவராக உள்ள போதே கையேட்டுப் பத்திரிகையாக நடத்தி, மாணவர்கள் இடையே சுற்றுக்கனுப்பி சுயமரியாத உணர்வுகளைப் பரப்பிய திராவிடரியக்க இந்திரஜித்தாக வாழ்ந்தார்.

அன்று கலைஞர் கையேடாகத் துவக்கிய ‘முரசொலி’ 2005-ம் ஆண்டான இன்றுவரை தமிழ்நாட்டில் தமிழ் முரசு கொட்டி வருகிறது. அவரது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ‘துள்ளிவரும் வேலாக, பகையை அள்ளி வரும் வாளாக’ திராவிடரியக்க வளர்ச்சிக்கு உதவுகின்றன.

கலைஞர் பத்திரிகை ஆசிரியர் மட்டுமன்று. சிறந்த புதுக் கவிதைச் சித்தர். சிறுகதை, பெருங்கதை, வரலாற்றாய்வுக் கதை, இலக்கியக் கட்டுரைகள் எழுதும் நாடக வித்தகர், சிறந்த நடிகர், திரையோவிய எழுத்துத் துறை முன்னோடி, புராண விமர்சகர், முத்தமிழ்க் கலை சொற்செல்வர். அரசியல் வெங்களத்தில் பலமுறை செங்களம் கண்ட செறுமுனை வேங்கை, மேடையிலே பூங்காற்றாகவும், புயலாகவும் மாறி, ‘நா’வை நர்த்தன மாட வைக்கும் நல்லாற்றல் நாயகர், அழிந்த தமிழர் வரலாற்றுச் சின்னங்களைப் புதுப்பிக்கும் தமிழ் நாகரிகச் சிற்பி. தன்னந் தனியாக, சினிமா தனி மனித பலத்தைப் பலமுறை எதிர்த்து தோல்வி கண்டாலும், துவளாத துணிவாண்மை அரிமா! அரசியல் நெருக்கடி நிலை வெள்ளத்திலே கழகத்தைச் சோழ சாம்ராஜ்யக் கோட்டையாகக் காத்திட்ட இராஜராஜ சோழனுக்கு மூலவித்து. தமிழைச் செம்மொழியாக்கிட தளராது உழைத்திட்ட மூவேந்தர் மரபாளர்; பெருந்தலைவருக்கும் பெருந்தலைவராய் விளங்கித் திராவிடர் ஆட்சிக்கு மானமூட்டியாக நின்று, கழகத்தைக் கபாடபுரமாக்காமல், தென் மதுரையாகாமல், கவின்புகாராக மூழ்காமல், அரசியல் சூது ஊழை உட்பக்கம் கண்டு வாகை சூடிய வளமார் திராவிட வரலாறாக இன்றும் வாழ்பவரான (20.11.04) கலைஞர் பெருந்தகை; பத்திரிகை உலகுக்கு ஒரு சான்றாண்மையாளராவார்.

அந்த முத்தமிழ் மாமேதை உருவாக்கிய ‘முரசொலி’ நாளேட்டில் இந்தப் புத்தக ஆசிரியரான புலவ என்.வி. கலைமணி ஏழு ஆண்டுகள் துணையாசிரியராகப் பணியாற்றி ‘எரியீட்டி’ பத்திரிகையாளரானார் என்பதும் எனக்கோர் மகுடம் தானே!

கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டில் நான்கு முறை முதல் அமைச்சராக இருந்தவர்; ஏறக்குறைய 14 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்த மும்முடிச் சோழனாவார். அவர், முத்தாரம் என்ற பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்து அரிய படைப்புகளை வழங்கியவர்.

இவை மட்டுமா? வீர அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, பராசக்தி, பூம்புகார், மனோகரா, கண்ணம்மா, மண்ணின் மைந்தன் போன்ற 60 திரைப்படங்களுக்கு வசன கர்த்தாகவாக விளங்கித் திரைவானின் துருவ நட்சத்திரமாக வாழ்பவர்.

அரசியல் துறையில் அரசினர் தடைகளைத் தவிடு பொடியாக்கி, அடக்குமுறைகளை வீழ்த்தி ஆண்டுக் கணக்கில் சிறை கண்டவர். பத்திரிகை உலகுக்கு இன்றும் ஒரு சிரஞ்சிவி மூலிகையாக வாழ்ந்து வருபவர் என்றால், இவை எல்லாம் வரலாறே தவிர மிகை புராணமன்று.

கண்ணதாசன்

‘தென்றல்’

உடுமலைப்பேட்டைக் கூட்டம் ஒன்றில் கவிஞர் கண்ணதாசன் மேடையில் தன்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொண்டார் தெரியுமா? ‘வட்டிக்கு வட்டி வாங்கும் மட்டிப் பயல்கள் வாழும் செட்டி நாட்டு மண்ணில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்!’ என்றார்.

கவிஞர் கண்ணதாசன் இலக்கிய உலகில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைப் போன்றவர்! நாவலர் தமிழ்க் கடல்; தமிழ்த் தொண்டர்; வீர சைவ வித்தகர்; வல்லாண்மை படைத்த நல்லாண்மை மிக்க, சான்றாண்மை மிதக்கும் தமிழ் ஞானி!

அந்தச் சான்றோன் உணர்ச்சி வசப்பட்டு ஆன்ம ஞான சீலரான வடலூர் வள்ளல் பெருமான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களை படித்த பின்பும், வள்ளலார் பாடல் அருட்பா அன்று மருட்பா என்று கடலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்ற வளாகத்துள் வள்ளலார் நுழைந்தபோது, நாவலர் பெருமானும் எழுந்து நின்றாரே, அத்தகைய ஒரு பண்பு படைத்தவர் கண்ணதாசன்! அதாவது வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தை மனம் படைத்தவர் கண்ணதாசன். அரசியல் உலகில் மட்டும் அவர் புகாமல் இருந்திருந்தால் அவரும் ஒரு தேசிய பாரதியாராகி இருப்பார் என்பதுதான் உண்மை!

அருளாளர் அருணகிரி நாதருக்குப் பிறகு, கம்பனையும், கவிழ்த்துப் புறங்கண்டு ‘சந்தம்’ பல கண்டவர் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள். அவரைப் போல கவிஞர் கண்ணதாசனும் தனது ஏழெட்டாயிரம் சினிமா, இலக்கியம், இயேசு காவியம் பாடல்களில் பலவித சந்தங்களை அனுபவித்துப் பாடியவர்! அரசியல்தான் அவரது அழுக்காற்றுக்கு அடையாளமாகி, கவிஞானத்தை ஏப்பம் விட்டு விட்டது!

அத்தகையச் செஞ்சொற் கவிதை ஞானத் திறமையாளரான கண்ணதாசன் அவர்களைப் பத்திரிகை ஆசிரியராக பெற்ற ‘தென்றல்’ வார இதழும், ‘தென்றல்’ மாதத் தாளிகையும், ‘கண்ணதாசன்’ என்ற இலக்கிய இதழும் தமிழ்த் தொண்டு செய்து வெற்றி பெற்றன! ‘தென்றல்’ வார இதழில் கண்ணதாசனின் வெண்பா போட்டி எண்ணற்ற இளம் தலைமுறைக் கவிஞர்களை உருவாக்கியது! அதற்குக் கவிதை உலகம் என்றும் நன்றியாற்றும்!

‘தென்றல்’ பத்திரிகை ஆசிரியராக மட்டுமே பணியாற்றியவர் அல்லர் கண்ணதாசன்! வணங்காமுடி, நவசக்தியிலிருந்து வெளிவந்த கடிதம் போன்ற அரசியல் ஏடுகளுக்கும் அவர் ஆசிரியராக இருந்து தமிழ்ப் பணி செய்த தமிழ்த்தும்பி அவர். இயேசு காவியம் அவர் சேகரித்த பைந்தமிழ்த் தேனடை ஆகும்.

இவைத் தவிர, எண்ணற்ற தமிழ்நூல்களை, அதாவது அர்த்தமுள்ள இந்துமதம், வனவாசம், போல - புராண, இதிகாச வரலாற்று ஆய்வு, இலக்கிய நூற்களை கவிதையாகவும், உரைநடையாகவும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

மகாதேவி, ஆடிப்பெருக்கு, தெனாலிராமன், சிவகங்கைச் சீமை, கறுப்புப் பணம், மாலையிட்ட மங்கை போன்ற திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதிய பத்திரிகை ஆசிரியர் ஆவர்.

கவிஞர் கண்ணதாசன் வயது ஏற ஏற சிரம் பழுத்த ஞானியாகவும், ஏறக்குறைய ஐயாயிரம் திரையுலகப் பாடல்களையும், அவற்றுள் பல தத்துவம் போதிக்கும் சித்தர்களைப் போலவும் காட்சியளித்து கொண்டிருக்கின்றன.

அறிஞர் அண்ணா அவர்கள் இயற்கை அடைந்தபோது, அவர் எழுதிய ‘சொர்க்கத்தில் அண்ணா’ என்ற நூல் உரைநடை பைபிளாக இன்றும் நடமாடிக் கொண்டிருக்கின்ற அளவுக்கு அவர் தனக்கென ஒரு தனித் தமிழ்பாணி நடையுடைய பத்திரிகை ஆசிரியராகத் திகழ்ந்தார். இத்தகைய தமிழ்த் தும்பி அமெரிக்காவுக்கு தமிழ்த் தொண்டாற்றச் சென்றபோது அங்கே மரணமடைந்தார்.

தமிழ்நாட்டின் அந்த இரண்டாவது தமிழக அரசவைக் கவிஞரை, அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.; கவிஞரது புகழுடலைத் தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்து புகழடைந்தார்.

காஞ்சி மணிமொழியார்

‘போர் வாள்’ இதழ்

காஞ்சி மணிமொழியார் என்ற சுயமரியாதை வீரர், ‘போர் வாள்’ என்ற வாரப் பத்திரிகையை நடத்தி திராவிடர் இயக்கத்திற்கு அருந்தொண்டாற்றினார். அவருடன் அவரது மகனார் மா. இளஞ்செழியன், பி.ஏ., ஹானர்ஸ்; காஞ்சி கலியாணசுந்தரம் போன்றவர்கள் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றி, திராவிடரியக்கப் பத்திரிகை உலகிலே ஒரு புரட்சி வாள் போல, அதைக் கூர்மைத் தீட்டி, எதிரிகளை வீழ்த்தும் கருவியாக வார வாரம் வீசி வந்தார்கள்.

‘போர் வாள்’ இதழின் ஆசிரியர்க் குழுவில் ஒருவராகப் பணியாற்றிய மா. இளஞ்செழியன், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரிக்குப் பேராசிரியராகச் சென்று விட்டதால், அந்த இடத்திற்கு இந்தப் புத்தக ஆசிரியரும் ‘திராவிடன்’ துணையாசிரியராகவும் இருந்த என்.வி. கலைமணி துணையாசிரியராக அமர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

ஓர் அரசியல் கட்சிப் பத்திரிகை, திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சினிமாவுக்கு மலர் வெளியிட்டது, பத்திரிகை உலகில் இதுதான் முதல் முறை என்.வி. கலைமணி முழுப் பொறுப்பை ஏற்று போர் வாள் வெளியிடும் ‘பராசக்தி மலர்’ என்ற பெயரில் வெளியிட்டார்.  ‘மாலை மணி’

நாளேடு

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கென்று ஒரு நாளேடு இல்லையே என்ற அறிஞர் அண்ணாவின் குறையை, சுயமரியாதை வீரர் டி.எம். பார்த்தசாரதி நிறைவுப்படுத்தினார். அவர் சென்னை மண்ணடி முத்துமாரி செட்டித் தெரு என்ற முகவரியிலிருந்து ‘மாலை மணி’ என்ற நாளேட்டைத் துவக்கினார். அதற்கு ஆசிரியர் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கே.ஜி. இராதாமணாளன் ஆகியோராவர்.

அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு நாவலர் நெடுஞ்செழியன் அதற்கு ஆசிரியரானார். அவருக்குப் பிறகு, கே.ஜி. இராதாமணாளன் ஆசிரியரானார். இறுதியில் நட்டக் கணக்கு அதிகமாகவே மாலை மணி நின்றது.

பி.எஸ். இளங்கோ

‘மாலை மணி’

சில ஆண்டுகள் கழித்துக் கழகத்தோர் பி.எஸ். இளங்கோ என்பவர் ‘மாலை மணி’யை வார இதழாக அரசு அனுமதி பெற்று நடத்தினார். அந்தப் பத்திரிகைக்கு எந்தச் செய்தியும் தேவை யில்லை; அவசியமில்லை; பிறகு எப்படி அந்த ஏடு வெளியானது?

மாலை மணி 1 x 4 என்ற டெம்மி சைஸ் அளவில் 16 பக்கங்களைக் கொண்ட பத்திரிகையாகும். அன்றுவரை, ஏன் இன்று வரையிலும்கூட, அத்தகைய ஓர் அதிசயப் பத்திரிகை வெளிவந்தது கிடையாது. இனிமேலும் அப்படிப்பட்ட பத்திரிகை ஒன்று வெளிவரும் அளவுக்கு ‘நா’ வன்மைப் படைத்தோர் எவருமில்லை; என்ன அந்த அதிசயம் என்று கேட்கிறீர்களா?

16 பக்கமும் ஒரே

ஒரு பேச்சுதான்!

அது, பதினாறு பக்கங்களை உடைய ஒரு வாரப் பத்திரிகை. அறிஞர் அண்ணா அவர்களின் ஒரே ஒரு பேச்சை மட்டுமே வாரா வாரம் வெளியிட்டதால், 50 ஆயிரம் பிரதிகள் விற்றன என்றால், அது அதிசயமல்லவா?

அறிஞர் அண்ணா பொதுக்கூட்டம் ஒன்றில் ‘தலைவர் அவர்களே’ என்று அழைப்பதிலிருந்து வணக்கம் கூறிப் பேச்சை முடிக்கும் வரையுள்ள ஒரு மணி நேரப் பேச்சை, தமிழ்நாட்டில் அவர்பேசும் ஒரு கூட்டப் பேச்சை, அப்படியே வெளியிட்டு அதை விற்பனை செய்தது ‘மாலைமணி’ பத்திரிகை.

அண்ணா அவர்கள் பேச்சை நேரில் கேட்டு இன்புறுவது போல, கட்சித் தோழர்களும், தலைவர் அவர்களே என்று அண்ணா பேச ஆரம்பித்ததிலிருந்து, அவர் முடிக்கும் வரையுள்ள பலதரப்பட்ட கருத்துக்களைக் கட்சிக்காரர்கள் ஒருசேரப் படிக்கும் ஒரு வழக்கம் இருந்ததை, அந்தப் பத்திரிகை அதை முழுமையாகப் பயன்படுத்தி கொண்டதால், வாரந்தோறும் மாலை மணி வார ஏடு ஏறக்குறைய 50 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையானது.

அண்ணாவின் ஒரே ஒரு பேச்சு மட்டும் அவருக்கு ஒரு வாரத்துக்குரிய கட்டுரையாக இருந்தால் போதும். அந்தப் பேச்சு இதழ் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும். ஓர் ஊரில் உள்ள ஒவ்வொரு மன்றமும் கட்சிப் பத்திரிகைகளை அந்த மன்ற உறுப்பினர்கள் அவரவர் பணத்தில் வாங்கி வழங்குவர். ஒரு பத்திரிகையை ஒரு மன்றத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் படிப்பார்கள். இப்படித்தான் பி.எஸ். இளங்கோ மாலை மணி வளர்ந்தது என்றால், இது எப்படிப்பட்ட பத்திரிகை பலம்? தொண்டு? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றல்லவா?

இந்தப் பத்திரிகை நாளேடானது! எப்போது? முதன் முதலாக ‘முரசொலி’ மாறன் நாடாளுமன்றத்திற்கு வேட்பாளராகத் தேர்தலில் நின்றபோது ஆசிரியர் பி.எஸ். இளங்கோ, புலவர் கலைமணியை மாலை மணி நாளேட்டிற்குத் துணை ஆசிரியராக நியமித்துக் கொண்டார்! அந்த ‘மாலை மணி’ நாளேட்டில் தான் ‘எரியீட்டி’ என்ற அரசியல், இலக்கிய, கலை உணர்வோடு கலந்த கட்டுரை நாள்தோறும் ஒன்னரை பக்கம் வெளிவரும். மாலை மணி பத்திரிகை வெளியிடும் எரியீட்டி கட்டுரைக்காக தினந்தோறும் 60 ஆயிரம் பிரதிகள் விற்றன.  எரியீட்டி

சவுக்கடி

‘மாலை மணி’யிலிருந்து தனியாக வந்து ‘எரியீட்டி’ நாளேட்டைப் புலவர் என்.வி. கலைமணி துவக்கினார்.

ஆளும் கட்சியை ஆதரித்து, நியாய மனதோடு விமர்சிக்கும் எந்த எதிர்க்கட்சித் தலைவர்களையும், நிலவை உடைத்து அதன் ஒளியை மையமாக்கி சந்தன மணம் கமழும் தென்றல் நடை இதத்தோடு பதமாக அவர்களை வரவேற்றுப் பதிலை எழுதும். எரியீட்டி’ தோழமைக்கு இது இலக்கணமாகும்.

அரசியல் பகைக்கு இலக்கணம் என்ன தெரியுமா? கதிரவனை நொறுக்கி அதன் கனல் வெள்ளத்தை மையாக்கி, கோடை நெருப்புச் சுடரொளிகள் கலந்த எழுத்துக்களால் அதன் எதிரிகளின் அரசியல், சிந்தனைகளைக் கண்டனம் செய்யும்! இதுதான் எரியீட்டி!

நாள்தோறும், மாலை தோறும் எரியீட்டி மேற்கூறிய இலக்கணங்களோடு வெளிவரும். இப்படிப்பட்ட எரியீட்டி பத்திரிகையைப் புலவர் என்.வி. கலைமணி என்ற நான் தான் நடத்தினேன்!

சவுக்கடி

நாளேடு

‘சவுக்கடி’ பத்திரிகையைப் பற்றி இவ்வளவு சுருக்கமாக ஏன் இங்கே கூறுகிறோம் என்றால், கட்சிப் பத்திரிகை நடத்துவோர்; எழுதும்போது தீவிரவாதிகளாகி விடக்கூடாது. வரம்பு மீறிய உணர்ச்சியாளர்களாகக் கூடாது. அதிக கட்சி அக்கறை காட்டுபவராக இருந்தால், அவர்கள் வாழ்க்கையிலே உருப்படவே முடியாது. பராரியாகும் பரிதாப நிலை உண்டாகும். உண்மைக்கு அரசியல் உலகம் தரும் மரியாதை இது!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. திறமையான வழக்கறிஞராக இருந்தும், கட்சியின் தீவிரவாத உணர்வுடையவராக அவர் இருந்ததால், அவரது கடைசி காலம் என்ன? சொக்கலால் ராம் சேட பீடியை விற்று, மண்ணெண்ணெயை அளந்து ஊற்றிப் பிழைக்கும் நிலையும் தானே அவருக்கு அரசியல் தந்த பரிசு? அவர் சிறை மீண்டபோது அவரைப் பார்த்து வரவேற்க வந்தவர் எத்தனை பேர்? ஒரே ஒருவர்! அவரும் குட்ட நோய் தியாகி! ஆம்! அவர்தான் சுப்பிரமணிய சிவா! ‘ஞானபானு’ பத்திரிகை ஆசிரியர் அவர்!

தீவிர உணர்ச்சி கொண்ட மக்கள் கவி பாரதியார் நிலை என்ன? அவர் உயிரோடு வாழ்ந்தபோது வயிறார உண்ண முழுமையான உணவுண்டா? அவர் பிணம் பின்னாலே எத்தனை தேசியவாதிகள் வந்தார்கள் - ஊர்வலமாக?

ஏமாளியான தியாகி சத்தியமூர்த்தி கதி என்ன? கட்சியிலே வஞ்சக அரசியலுக்குப் பலியாகி; ‘அம்போ’ என்று செத்தவர் தானே? ஒரு காமராஜர் தானே நன்றியாளராக நடமாடினார்; அவருக்காகப் போராடியனார்; நயவஞ்சக அரசியலால் அவரும் வீழ்த்தப்பட்டுப் பலியானவர் தானே - சாகும்போது!

தீவிர தேசபக்தியாளர் பாலகங்காதர திலகரைப் பின்பற்றிய திரு.வி.க., வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகிய இவர்கள்; தங்கள் சொந்த இலக்கிய, தமிழ்த் திறமைகளால் வாழ்ந்தவர்களே தவிர - கட்சியாலல்ல!

கோபால கிருஷ்ண கோகலே மிதவாதிதான்! அவர்தான் அண்ணல் காந்தியடிகள் ஆசான். காந்தியடிகளை நம்பியோர் பின்பற்றினோர் பெருந்தலைவர் காமராசரைப் போல ஓரிருவர்தானே பெரும் புகழோடு வாழ்ந்தவர்கள்? ஆனால், அவர்களைக் கவ்வாது விட்டதா சாகும்போதுகூட அரசியல் சூது வஞ்சகங்கள்?

எனவே, கட்சிப் பத்திரிகை நடத்துவோர் கொள்கைத் தீவிரவாதிகளாகி விடக் கூடாது? ஆனால், அவர்கள் கதி அதோ கதிதான்! அதற்காக மிதவாதியாகவும், இருந்துவிடக்கூடாது. ஓரளவு இரு வாதங்களையும் அடக்கி வாசிக்கும் நடுநிலையாளர்களாக கட்சிப் பத்திரிகைக்காரர்கள் உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே ஓர் அனுபவச் சுருக்கத்தை முன்னுரையாகக் கொடுத்துள்ளோம்.

நாவலர்

‘மன்றம்’

சென்னை பூவிருந்தவல்லிக்கு அடுத்து ‘நேமம்’ என்ற கிராமம்தான் நாராயணசாமி எனப்படும் நாவலர் நெடுஞ்செழியனின் முன்னோர்களது ஊர். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மாணவர், எம்.ஏ. பட்டதாரி. இவர் வாலிப வயதில் தந்தை பெரியாரைப் போல கறுந்தாடி வைத்திருந்ததால், இளந்தாடிப் பெரியார் என்று இவரை திராவிடரியக்கம் அழைத்துப் பெருமைப்படுத்தியது.

பல்கலைப் படிப்பின்போதே நாவலர், அறிஞர் அண்ணா அறிவு வட்டத்தில் தொடர்புடையவராக இருந்ததால் சிறந்த சொற்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும், இலக்கிய வட்டத்துத் தேனியாகவும், குறிப்பாகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களை உணர்ச்சித் ததும்ப மேடைக்கு மேடை முழக்கமிட்டு, அவரது கவிதைத் திறனை நிலை நாட்டியவராகவும், தந்தை பெரியார் சிந்தனைகளின் முன்னோடியாகவும் விளங்கியவர். இவரது இளவல் இரா. செழியன் என்பவர் நாடாளுமன்ற அரசியல் வித்தகராக விளங்கி வாழ்பவர்.

நாவலர் நெடுஞ்செழியன் ‘மன்றம்’ என்ற மாதமிரு முறைப் பத்திரிகையை நடத்தினார். அந்த இதழ், அரசியல், கலை, இலக்கிய ஆய்வு ஏடாக வெளி வந்து கற்றார் பேராதரவையும், கழகத் தோழர்களின் பாராட்டையும் பெற்றதால் விற்பனையும் பெருகியது. மேல் நாட்டு மேதைகளது மக்கட் தொண்டுகளை ‘மன்றம்’ மாதந்தோறும் வெளியிட்டு திராவிடரியக்கத் தோழர்களை அறிவு சுடர்களாக வளர்த்த பெருமை மன்றம் பத்திரிகைக்கு உண்டு.

நாவலர் சிறந்த பண்பாளர்; ஒழுக்கமே உருவானவர்; மாற்றாரும் மதிக்குமளவிற்கு மதி நலமிக்கவர். கோடையிடி பேச்சாளர்; புள்ளி விவரம் தராமல் எந்தப் பொருளையும் மேடையில் பேசாதவர். தமிழ் இலக்கியத்தை மறுமலர்ச்சி நோக்கோடு பார்த்து எழுதும் திறமையாளர்.

அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அமைச்சரவைகளில் இரண்டாவது இடம் பெற்ற அமைச்சராக அமர்ந்த மரியாதை பெற்றவர். அவருடைய மன்றம் பத்திரிகை ஓர் இலக்கிய மணம் பரப்பும், அரசியல் உணர்வூட்டும், சுயமரியாதைச் சுடருதறும் பத்திரிகையாகத் தமிழ்நாட்டில் பணி புரிந்தது

பேராசிரியர்

‘புது வாழ்வு’

திராவிடர் இயக்கத்தின் தோழர்கள் தமிழ் உணர்வுடைய பண்பாளர்களானதால் ஒவ்வொருவரும் சிறந்த சொற்பொழிவாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், கதாசிரியர்களாகவும், கட்சியை வளர்க்கும். கொள்கை வேளாளர்களாகவும், சினிமாத் துறையின் கதை-வசனம் பாடல் ஆசிரியர்களாகவும் இருந்தார்கள். எந்த ஒரு கட்சியிலும் இத்தகைய ஆற்றலாளர்களைத் தொண்டர்களாகக் காண முடியாது. திராவிடர் இயக்கம் ஒன்றுதான் இத்தனைத் துறைகளிலும் தனது இயக்கக் காளையர்களைப் பயிற்றுவித்த இயக்கமாக இருக்கின்றது.

பேராசிரியர் அன்பழகன் அந்த இயக்கக் காளையர்களுக்குப் பயிற்சித் தரும் நாவன்மையும், இலக்கியச் சிந்தனையும், அரசியல் வித்தகமும் அமைந்தவராகக் காட்சி தந்து வருபவர். அவர் மாணவப் பருவத்தில் ‘புதுவாழ்வு’ என்ற பத்திரிகையை நடத்தினார்! அவரது எழுத்தாற்றலால், அவரைப் பின்பற்றும் மாணவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

அமைதியே உருவான பேராசிரியர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். கலைஞர் அமைச்சர் அவையில் தொடர்ந்து கல்வி அமைச்சராகவே இருந்து வருபவர் நமது பேராசிரியர் ஒருவரே! அவரது ‘புதுவாழ்வு’ பத்திரிகையும் அமைதியான இலக்கிய ஏணியாக பலருக்கு உதவியது எனலாம்.

ப. கண்ணன்

‘பகுத்தறிவு’

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் என்ற நகரிலிருந்து ‘பகுத்தறிவு’ என்ற திங்கள் இதழைத் தொடர்ந்து நடத்தியவர் ஜலகண்டபுரம் கண்ணன். அமைதியான எழுத்தாளர்.

அவர் சுயமரியாதை இயக்கத்தவர் மட்டுமன்று; பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் அருமை பக்தர்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவின் கதை இலாகா பிரிவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடன் இணைந்து பணியாற்றிய பாவேந்தரின் அன்பராவார்.

ஜலகண்டபுரம் கண்ணன் நடத்திய ‘பகுத்தறிவு’ பத்திரிகை; தீரன் சின்னமலை போன்ற திராவிட மாவீரர்களின் வரலாற்றாய்வை நாடகமாக்கியது. தலைகொடுத்தான் தம்பி என்ற படத்திற்கு வசனம் எழுதிய குழுவில் ப. கண்ணனும் ஒருவராவார்.

ஏ.கே. வேலன்

‘ஞாயிறு’ இதழ்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படம் தமிழ்நாட்டையே ஒரு வசூல் உலுக்கல் செய்த படமாகும். ஏ.கே. வேலன், சென்னை சாலிகிராமம் பகுதியில் வேலன் ஸ்டியோ என்ற ஒன்றைத் துவக்கி நடத்தி வந்தது அவரது இறுதி வாழ்க்கை ஆகும்.

கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவருக்குப் படித்தவர் ஏ.கே. வேலன். தமிழ்ப் பற்றுணர்ச்சியோடு திராவிடர் இயக்கத்தில் இணைந்தவர். அந்தத் தமிழ் நெஞ்சம் திராவிடரியக்க வளர்ச்சிக்காகப் பத்திரிகை நடத்தியது. பத்திரிகை பெயர் ‘ஞாயிறு’. மாதம் இருமுறை ஏடு. இந்தப் பத்திரிகையை அவர் வறுமையோடு போராடிய வயதில் தஞ்சை நகரிலிருந்து நடத்தியவர்.

சினிமா துறையில் புகழ் பெற்றப் படத் தயாரிப்பாளராகவும், திரைக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் விளங்கி, தமிழ்ப் புலமை பெற்ற ஒரு ஞாயிறாகத் திகழ்ந்தார்.

என்.எஸ். இளங்கோ

‘எதிரொலி’

அதிராம்பட்டினம் என்.எஸ். இளங்கோ என்றால் தஞ்சை மாவட்டத்தில் தெரியாதார் இரார். சிறந்த தமிழ்ப் புலமையால் அவர் அருமையான தேனினுமினிய ‘பேச்சாளராக, தமிழ்நாடு முழுவதும் சுற்றியவர்! தஞ்சை மாவட்டக் கழகச் செயலாளராகக் கடுமையாக உழைத்த திராவிடக் காளை அவர்! தலை மட்டும் வழுக்கை விழுந்து விட்டது.

அதிராம்பட்டினம் நகரிலிருந்து ‘எதிரொலி’ என்ற ஒரு திங்கள் இதழை நடத்தினார். அதே பத்திரிகையின் பெயரால் எதிரொலி என்ற புகைப்படம் எடுக்கும் ஸ்டுடியோவையும் நிறுவி வருவாய் சம்பாதித்தார்.

ஒருமுறை அறிஞர் அண்ணா அவர்கள் தஞ்சை மாவட்டச் சுற்றுப்பயணம் செய்தபோது, அதிராம்பட்டினம் கூட்டத்தில் கலந்து கொள்ள இளங்கோ வீட்டில் மதியம் உணவுண்டார். உணவு முடிந்த பின்பு, அண்ணா அவர்களுக்கு இளங்கோ வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் - தாம்பூலம் தரிக்க.

அப்போது இளங்கோ அண்ணாவிடம் சிரித்துக் கொண்டே, ‘அண்ணா தலையில் வழுக்கை விழுந்தவர்கள் எல்லாம் அறிவாளிகளாக இருப்பார்களாமே’ என்றார். அதற்கு எடுத்துக்காட்டாக லெனின், காந்தியடிகள், நேரு போன்றவர்கள் தலையைச் சுட்டிக் காட்டினாராம்.

உடனே அண்ணா அவர்கள், அந்த வழுக்கை இரகசியத்தை எந்த அறிவாளியும் வெளியே சொல்ல மாட்டான்’ என்றார். உடனிருந்தோர் இளங்கோவைப் பார்த்து சிரித்து விட்டார்களாம். அண்ணாவுடன் அவ்வளவு நெருக்கமாகப் பழகும் தன்மானச் சிங்கம் அதிராம்பட்டினம் என்.எஸ். இளங்கோ. அவரைப் போலவே அவருடைய ‘எதிரொலி’ பத்திரிகையும் தன்மான வளர்ச்சிக் கருத்துக்காகப் பாடுபட்டது.

அதிராம்பட்டினம் இளங்கோ நடத்திய அதே ‘எதிரொலி’ என்ற பெயரில்தான்; அமைச்சர் ஆற்காடு வீராசாமி நாளேடு பத்திரிகையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்காடு வீராசாமி

‘எதிரொலி’

வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்க்காடு என்ற நகரினருகே பிறந்த ஆற்காடு வீராசாமி, தமிழ்நாட்டின் அமைச்சராக அரும் பணியாற்றி வரும் கலைஞர் அவர்களின் உறுதுணை நம்பிக்கை நாயகமாவார்!

ஆற்காடு நகருக்கு என்றென்றும் அழியா வரலாற்றுப் புகழைத் தேடித் தந்த மேன் மக்கள் ஆர்க்காடு சகோதரர்களும் இரட்டையர்களுமான சர்.ஏ. இராமசாமி முதலியாரும், சர்.ஏ. இலட்சுமணசாமி முதலியாரும் ஆவர். அந்த இரட்டை மேதைகளின் அற்புதப் புகழுக்குப் பிறகு, ஆர்க்காடுக்கு மூன்றாவதாகப் புகழ் சேர்த்துப் பெருமைப்படுத்தியவர் ஆற்காடு வீராசாமி என்றால் மிகையன்று.

உவமைக் கவிஞர்

சுரதாவின் ‘சுரதா’

திராவிடரியக்கக் கொள்கை பரவ வேண்டும் என்பதற்காகவும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சமுதாய அரசியல் கருத்துக்களுக்கு உறுதுணையாகவும், திராவிடரியக்க இளம் கவிஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், காவியம், இலக்கியம், சுரதா என்ற கவிதை வடிவப் பத்திரிகைகளை முதன் முதலில் திராவிடர் இயக்க வளர்ச்சிக்காக நடத்திய தனித்திறமை மிக்க கவியாளர் சுரதா.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் கவிதை ஆசானாக ஏற்றவர். அதனால் சுப்புரத்தின தாசன் என்ற பெயரிலுள்ள சுப்பு என்ற சொல்லின் முதல் எழுத்தான ‘சு’வோடு, ரத்தினம் என்பதின் முதல் எழுத்தான ‘ர’வைச் சேர்த்து; தாசன் என்ற சொல்லின் முதல் எழுத்தான ‘தா’ வோடு முடித்து, அந்த மூன்று எழுத்துக்களை ஒன்றிணைத்து ‘சுரதா’ என்று பெயரை வைத்துக் கொண்டவர் சுரதா.

தனது கவிதை வட்ட ஆசானின் பெயருக்கு நன்றி காட்டும் வகையில் ‘சுரதா’ என்ற பத்திரிகையைக் கவிதைப் பத்திரிகையாக வெளியிட்டுக் கவிதைத் தொண்டாற்றி வந்தார்.

தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக் கவிஞர்களை உருவாக்கும் கவிதைத் திறமை, உவமை வல்லமை, கவிதை அழகு நடையில் புதுமைகள் அதிகம் அவரது கவிதைகளில் பூக்காடாக மலர்ந்து மணம் பரப்பியதால், இளம் கவிஞர்கள் பூஞ்சோலை வண்டுகளைப் போல சுரதா அவர்களது கருத்துத் தேனைப் பருகிப் பறந்து ரீங்காரமிட்டார்கள்.

அந்தக் கவிஞர்கள் ஒன்று சேர்ந்து பாரதிதாசன் கவிதா மண்டலத்தை உருவாக்கித் தொண்டு புரியும் கவிதை வட்டமாகத் திகழ்ந்தார்கள். அந்தப் பெருமையை சுரதா, தனது ஆசானுக்கு உருவாக்கினார். சுரதா கவிதை வட்ட இளம் கவிஞர்கள் தலைமுறையினரை, பாவேந்தர் பாரதிதாசன் கவிதா மண்டலமாகத் திகழ வைத்துக் கொண்டிருக்கும் புகழ்ப் பூங்காவை, உருவாக்கியவராக சுரதா உலா வந்து கொண்டிருப்பதை தமிழ்நாடு மறவாது.

புலவர் பொன்னிவளவன்

‘அருவி’ பத்திரிகை!

திராவிடரியக்கத் தமிழ்ப் புலமைத் தும்பிகளுள் புரட்சி நடையூறும் தேன் தமிழ்க் கவிதைகளை அழகாக, ஆழமாக, அலங்காரமாகப் பாடிய மரபுக் கவிஞனாக, சுரதா கவிதை பாணியைப் பின்பற்றிக் கவிதைகளை எழுதி வந்தவர் புலவர் பொன்னி வளவன். அவர் ‘அருவி’ என்ற கவிதைப் பத்திரிகையை திராவிடரியக்கத்துக்குத் தமிழ்த் தொண்டாக மட்டுமல்லாமல், இயக்கக் கவிஞர்களுக்குத் தலைமைக் கவிஞனாக, எழுச்சியூட்டும் உணர்ச்சிக் கவிஞனாக வாழ்ந்து மறைந்தவர். கழக வளர்ச்சிக்கு கவிஞர் என்ற ரோஜா செடியாக இளமைப் பருவம் முதல் வாழ்ந்த கொள்கைக் கவிஞர் பொன்னி வளவன் என்ற நவநீதக் கிருஷ்ணன்.

காங்கிரஸ் ஆட்சியில் அறிஞர் அண்ணாவின் ஆணையை ஏற்று, திருநெல்வேலி நகரில் சட்ட எரிப்புப் போர் என்ற போராட்ட்த்தில் ஈடுபட்டுக் கைதாகிச் சிறை சென்ற சிங்கக் கவிஞர் அவர்.

தனது சட்ட எரிப்புப் போரின் வாக்கு மூலத்தை நீதிமன்றத்தில் கவிதையிலே எழுதிப் படித்த திராவிடரியக்கப் போராட்ட வரலாற்றின் முதல் புரட்சிக் கவிஞர் புலவர் பொன்னி வளவன்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கூட, எந்தக் கவிஞனும், நீதிமன்ற வாக்குமூலத்தைக் கவிதையில் பாடினார்  என்ற சான்றே தமிழ் வரலாற்றில் இல்லை. திராவிடரியக்கத் தமிழ்க் கவிதையின் வரலாற்றுப் பெருமைக்கு அரசியல் வண்ணம் கொடுத்த வழி காட்டிக் கவிஞராக வாழ்ந்து மறைந்தார். பாவேந்தர் கவிதை வட்டத்துப் புள்ளிகளுள் ஒருவராகத் திகழ்ந்த அவர்; சென்னை மாநகராட்சி மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணி புரிந்தார் என்பதைக் கவிதை உலகமும், திராவிடரியக்க வரலாறும் மறவாது.

‘நம்நாடு’

நாளேடு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பும் நாளேடு இது. அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு, சென்னை இராயபுரம் பகுதியிலே இருந்து வெளி வந்தது. இந்த தி.மு.க. தினசரி இதழில் நம்நாடு செங்குட்டுவன், நம்நாடு முத்துக் கிருஷ்ணன் போன்ற மற்றும் சிலர் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றி, திராவிடரியக்க வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டார்கள்.

அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், என்.வி. நடராசன் போன்ற பலர் பேச்சுக்களும், கழகப் பணி முழு விவரங்களும் வெளிவந்தக் கழக நாளேடு அது.

தூத்துக்குடி

‘கிளர்ச்சி’ இதழ்

திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி நகரிலிருந்து திராவிடரியக்க வார இதழாக ‘கிளர்ச்சி’ வெளி வந்தது. அதன் ஆசிரியர்களான இராசு. தங்கப்பழம், எம்.எஸ். சிவசாமி என்ற இரட்டையர்கள் அப்பத்திரிகையை நடத்தி, எதிர்ப்புக் குரல் எழுப்பும் மாற்றுக்கட்சிகளுக்கு மறுப்புக் குரல் கொடுத்துக் கிளர்ச்சி செய்தது அந்தப் பத்திரிகை.

விபூதி வீரமுத்து என்பவர் நடத்திய ‘அறப்போர்’ என்ற காங்கிரஸ் பத்திரிகைக்கு, ‘கிளர்ச்சி’ இதழ் இரட்டையர்கள் காரசாரமாகப் பதில் எழுதிய எதிர்ப்பு வாதங்களை திராவிடரியக்கம் மறவாது.

அரங்கண்ணல்

‘அறப்போர்’

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இராம. அரங்கண்ணல், அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் நடத்தி வந்த, ‘திராவிட நாடு’ என்ற வாரப் பத்திரிகையில் பல ஆண்டுகளாகத் துணையாசிரியராக இருந்தவர். அருமையான எழுத்தாளர். வரலாற்று ஆய்வு அறிவுடையவர். தமிழ் இலக்கியத்தில் நன்கு பயிற்சியுடையவர். எழுத்துத் துறையில் சுவையாக எழுதும் திறனுடைய அவர், சென்னை மாநகரிலே இருந்து, ‘அறப்போர்’ என்ற பத்திரிகையை நடத்தினார்.

இராம. அரங்கண்ணல் மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராகவும் இருந்தார். பிற்காலத்தில் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். அவர் எழுதிய கதை ‘பொன்விளையும் பூமி’ அவரே அதற்கு வசனம் எழுதினார். அறிஞர் அண்ணாவின் ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ எனும் திரைக்கதைக்கு வசனம் எழுதியவர் அரங்கண்ணல்.

தில்லை வில்லாளன்

‘தம்பி’ பத்திரிகை

அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த ‘திராவிட நாடு’ வாரப் பத்திரிகையில், தில்லை நகர் எனப்படும் சிதம்பரம் நகரைச் சேர்ந்த வில்லாளன் துணையாசிரியராகப் பணியாற்றியச் சிறந்த எழுத்தாளர். அருச்சுனன் எனப்படும் அவரைத் தில்லை வில்லாளன் என்றே அழைப்பது வழக்கம்.

நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராகவும், தில்லை வில்லாளன் பணியாற்றினார். அவர் ‘தம்பி’ என்ற பெயரில் இலக்கியப் பத்திரிகை நடத்திப் புகழ் பெற்றார்.

‘கழகக் குரல்’

திருவை. அண்ணாமலை

நெல்லை மாவட்டம் திருவைகுண்டம் நகரைச் சேர்ந்தவர் திருவை. அண்ணாமலை. சிறந்த கழக மேடைப் பாடகர். தென் மாவட்டக் கழகக் கொள்கைப் பிரச்சாரத்திற்கு நன்கு  உழைத்தவர். திருநெல்வேலி நகரிலிருந்து அவர் ‘கழகக் குரல்’ என்ற வார இதழை நடத்தி வந்தார். பிறகு சென்னைக்கு வந்து குடியேறிய திருவை. அண்ணாமலை, கழகக் குரல் பத்திரிகையைச் சில மாதங்கள் நாளேடாகவும் நடத்தினார்.

‘தென்னகத் தலைவன்’

கே.ஏ. மதியழகன்

திராவிட முன்னேற்றக் கழக ஐம்பெருந் தலைவர்களிலே ஒருவராக விளங்கிய கணியூர். சோமசுந்தரம் எனப்படும் கே.ஏ. மதியழகன், ‘தென்னகத் தலைவன்’ என்ற நாளேட்டை நடத்தினார். அவருக்குப் பிறகு அந்த தினப்பத்திரிகையை அவரது உடன்பிறந்த தம்பி கே.ஏ. கிருஷ்ணசாமி நடத்தினார்.

கே.ஏ. மதியழகன் கல்லூரிக் காலம் முதல் திராவிடரியக்கக் கொள்கை வீரர். அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பிகளில் குறிப்பிடத்தக்க பேச்சாளரும் எழுத்தாளருமாவார். கே.ஏ. மதியழகன் 1967-ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராக இருந்தார். தமிழ்நாடு சட்டப் பேரவை சபாநாயகராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘கயல் தினகரன்’

தென்னகத் தலைவன்

கயல் தினகரன் என்ற அருமையான எழுத்தாளர் ‘தென்னகத் தலைவன் என்ற பெயரில் அறிஞர் அண்ணா மீதிருந்த ஆர்வக் கொள்கைப் பற்றால், வார இதழாக நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகையை, கே.ஏ. மதியழகன் கயல் தினகரனிடமிருந்து உரிமை பெற்று, வார ஏடாக, நாளேடாக நடத்தினார்.

‘கவிக்கொண்டல்’

செங்குட்டுவன்

அறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராக ஏற்று, தி.மு.கழகத்தின் சார்பாக ‘நம்நாடு’ நாளேடாக சென்னையிலிருந்து வெளி வந்தது. அந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் மா. செங்குட்டுவன். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திராவிடரியக்கக் கொள்கை வீரர். சிறந்த சொற்பொழிவாளர். சுவையூறும் கட்டுரைகளை எழுதுவதில் வல்லவர்; கவிதை எழுதும் திறன் பெற்றவர். பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வட்டத்தின் வளர்ச்சிக்கும், பாவேந்தரை நினைவுபடுத்தும் பிறந்த நாள் விழாவிற்கும் சிறப்பான தொண்டாற்றிடும் தமிழ்ப் பித்தர்.

‘கவிக்கொண்டல்’ என்ற பத்திரிகை; கொள்கை மேகமாக தமிழ்நாட்டில் வலம் வந்து, திராவிடரியக்க வயல்வெளியில் கதிர்மணிகள் வளம் கொழித்து வளர்வதற்கு ஏற்ற; செல்வ விண்நீராகப் பொழிந்து கொண்டிருப்பவர் மா. செங்குட்டுவன்.

அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர், கலைஞர் போன்ற தலைவர்களிடம் அதிக ஈடுபாடு கொண்ட கொள்கைப் பாசம் நிறைந்தவர். ஏறக்குறைய 50 ஆண்டு காலம் தமிழக அரசியலின் நெளிவு சுளிவுகளையும், திராவிடரியக்க வரலாற்றின் முழு சம்பவங்களையும் நன்கு உணர்ந்த நினைவாளர் செங்குட்டுவன். அவர் நடத்தி வரும் ‘கவிக்கொண்டல்’ என்ற திங்கள் இதழ் அவரது நினைவுக் கோட்டத்தின் நிலையமாக ஏறக்குறைய 20 ஆண்டுகளாகத் திகழ்ந்து வருவதாக எனது நினைவு.

‘சங்கொலி’

திருநாவுக்கரசு

திராவிடர் இயக்கக் கலைக் களஞ்சியமாக நடமாடுபவர் க. திருநாவுக்கரசு. அவர் ‘சங்கொலி’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும், மறுமலர்ச்சி திமுகவின் அதிகாரபூர்வ ஏடாக, ‘சங்கொலி’யைத் திறம்பட நடத்தி வருகிற பெருமைக்குரியவர். இளம் வயது முதலே அவர், திராவிடரியக்கக் கொள்கைப் பிணைப்பாள்ராக இருப்பது மட்டுமன்று, இந்த இயக்கத்தின் வேர்கள் யார் விழுதுகள் யாரென்று அவர்களது வரலாற்றுக் குறப்புக்களை, இன்றும் “சங்கொலி” வாரப் பத்திரிகை வாயிலாக அடையாளம் காட்டி வருவது, வருங்கால இளைய தலைமுறையினர்களுக்கு ஒரு வழிகாட்டிக் குறிப்பேடாகவும் விளங்குகிறது. வைகோ

‘சங்கொலி’

மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வரும் வை. கோபால்சாமி எனப்படும் ‘வைகோ’; சங்கொலி பத்திரிகை ஆசிரியராகி, அதை வார இதழாக்கி, ம.தி.மு.க.வின் கொள்கை பரப்பும் ஏடாக நடத்தி வருகிறார். ஒரு தின ஏடு நடத்தும் கட்சிப் பணியை வார இதழ் ஒன்று நடத்துகிறது என்றால், அதற்குப் பொறுப்பாசிரியராக இருக்கும் க. திருநாவுக்கரசின் தனித்திறமை ஆகும்.

திராவிடரியக்கத்தின் ஆரம்பக் காலத்தில், அதாவது 1944-ம் ஆண்டு முதல் 1967 வரை எவ்வாறு திராவிடர் இயக்கப் பத்திரிக்கைகள் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டு வந்தன என்பதற்குரிய அடையாளம் தேவையா? இன்றைய 24 பக்கம் அளவுடன் வெளிவந்து கொண்டிருக்கும் டபுள் டெம்மி 1 x 4 அளவுள்ள ‘சங்கொலி’ வார இதழை வாங்கிப் படித்துப் பார்த்தாலே போதுமானது.

திராவிடர் இயக்கப் பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி - வீழ்ச்சிகளை அனுபவித்தவர்களுக்குத்தான் அந்த அரிய பயிற்சிகளின் அருமைகள் புரியும்; பெருமைகள் தெரியும்.

‘சங்கொலி’ இதழ், தோற்றம், அழகுமிகு தலைப்புகள், கட்டுரைக் கருத்துக்கள் எல்லாமே அறிஞர் அண்ணா காலத்து வடிவமாக அமைந்து தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டிருக்கின்றது. ‘திராவிட நாடு, முரசொலி, தென்றல், தீப்பொறி, எரியீட்டி, சவுக்கடி, மாலை மணி போர்வாள் போன்ற ஏடுகள் எப்படிப்பட்ட பரபரப்பையும் விறுவிறுப்பையும் எதிர்பார்ப்பையும் அன்று உருவாக்கிக் கொள்கை பரப்பும் பரணியைப் பாடினவோ, அதையே இன்றும் ‘சங்கொலி’ முழக்கம் எழுப்பி, சங்க நாதம் செய்து வருகின்றது. அதற்கு வைகோவின் புயல்வேகப் பேச்சும், எழுத்தும், கழக யூக வியூக ஆக்கப் பணிகளும்தான் விதைகளாகும்.

அட்டாவதானி என்றால் எட்டு வகைச் சிந்தனையில் காரிய சித்தி ஆற்றுபவர்; தசாவதானி என்றால் ஒரு காரியத்தைப் பத்துவகையில் திறம்படப் புரிபவர்; சோடசாவதானி என்றால் பதினாறு வகையிலும், சதாவதானி என்றால், நூறு வகைச் சிந்தனைகளோடும், எடுத்த ஒரு காரியத்தைச் செய்து வெற்றி பெறுபவர் ஆவார் என்பது பொருள்.

மேற்கண்ட அவதானங்களை வெற்றிகரமாக ஆற்றிக் கவி காளமேகம் செய்து காட்டினார்; செய்குத் தம்பி பாவலர் தசாவதானியாகவும், சதாவதானியாகவும் விளங்கியப் புகழ் பெற்றார். அட்டாவதானி புரசை சபாபதி முதலியார், சித்தாந்த சரபம், அட்டாவதானி பூவை. கலியாண சுந்தர யதீந்திரர் மற்றும் சிலர் அவதானக் கலையில் கீர்த்திப் பெற்றவர்கள் ஆவர்.

ஏன் இதை இங்கே சுட்டினோம் என்றால், அவதாரம் என்பது வேறு, அவதானி என்பது வேறு. அவதாரம் என்றால் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து ஆன்மீகத் திருவிளையாடல்களை ஆற்றி, தெய்வீகச் சக்திக்குப் புகழூட்டுவது. அது சுலபம் அவர்களுக்கு. காரணம், அவர்கள் மனித சக்தியை மீறியவர்கள். தங்களைச் சுரர்களாக்கி அறிமுகப்படுத்திக் கொண்டவர்களாதலால் எதையும், எண்ணியபடி செய்து கொள்வார்கள். ஆனால், அவதானிகள் அத்தகையவரல்லர்.

அவதானிகள் மக்களிலே ஒருவராகப் பிறந்து, வாழ்ந்து இறப்பவர்கள். அவ்வாறானால் அம்படிப்பட்டு மாண்ட இராமர், ஆற்றுக்குள் மூழ்கி இறந்த கிருஷ்ணன் ஆகியோரும் மனிதர்களாகப் பிறந்தவர்கள் தானே என்று கேட்டு விடாதீர்கள்! ஆன்மீகம் என்றால் யாரும் கேள்விக் கேட்கக் கூடாது! அது மதம்; தெய்வீகம் சம்பந்தப்பட்ட சம்பவங்கள்.

அவதானி என்பவர், தனது அறிவால், சிந்தனையால் திறமையை வெளிப்படுத்தும் ஓர் அறிவுக் கலைஞர். அவதானம் கற்றால்தான் திரும்ப அதை ஆற்ற முடியும். உரிய பயிற்சிகளைக் கடுமையாகப் பெற வேண்டிய கலை. இங்கே ‘வைகோ’வும், திருநாவுக்கரசும் அவர்கள் நடத்தும் ‘சங்கொலி’யும் அவதானக் கலை ஆசான்களாக விளங்கி வருகின்றனர்.

24 பக்கங்கள் கொண்ட ஒரு வார இதழ், அந்த வாரத்தில், அட்டவதானியாக, தசாவதானியாக, சோடசாவதானியாக அவதானக் கலையை - அரசியல், சமுதாயம், இனம், மொழி, போன்ற ஆய்வுத் துறைகளில் செய்து, அவை கட்டுரை வடிவில் தேர்வு செய்து வெளி வருவதைப் பார்க்கின்றோம். அத்தனை திருப்புமுனைக் கருத்துக்களை ஒரு வார இதழ் வாரந்தோறும் அதனது வாசகர்களுக்குக் கற்பிக்கும் ஆசானாக, ‘சங்கொலி’ இசைபாடி உலா வருகின்றது. எடுத்துக்காட்டாக, மாதம் தோறும் ‘நமது நினைவில்’ நிற்க வேண்டிய திங்கள் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற வரலாற்று ஆய்வுக் கலை அவதானத்தில்; 1886-ஆம் ஆண்டில் விடுதலை இயக்க வீரர் எஸ்.எஸ். விசுவநாததாசு பிறப்புத் தினத்தைக் குறிப்பிட்டுக் காட்டி, அவரது வரலாற்றை நமக்கு நினைவுப்படுத்தும் தேசிய அவதாரமாக, அன்றைய; விசுவநாத தாசின் தேசபக்த உணர்வுகள் அவதானமாக உள்ளது அல்லவா?

அவ்வாறானால் ‘சங்கொலி’ பத்திரிகையும், அதன் ஆசிரியரான ‘வைகோவும்’, பொறுப்பாசிரியராகப் பணியாற்றும் க. திருநாவுக்கரசுவும் தமிழ்நாட்டின் பத்திரிகை உலக அவதானக் கலைஞர்கள்தானே!

எனவே ‘சங்கொலி’ என்பது அரசியல் உலகில் பணம் திரட்டும் ஒரு விளையாட்டு இதழன்று. ஏனெனில், திருமணமானதும் முதல் பிரவசத்தின்போது குறிப்பிடப்படும் பிரசவ நேர உபாதைகளைப் போன்ற நிகழ்ச்சிகள் கொண்ட முதல் பிரசவ சாதனைகளாகும்! இத்தகைய ஒரு வலி தரும் பத்திரிகையைத் தினந்தோறும் நடத்தியவனுக்குத்தான் அந்த பத்திரிகையின் வாரப் பிரதிவார பிறப்பின் அருமைகளைப் பெருமையாக நினைக்கும் மகிழ்ச்சியே முகிழ்க்கும்! அந்தத் தோற்றப் பெருமைகளைச் ‘சங்கொலி’க் கொள்கை நாதங்களென எழுப்பி - நமக்கெலாம் உவகை மழலை ஒலிகளை வழங்கி வருகின்றது. வாழ்க ‘சங்கொலி’ முழக்கங்கள்.

‘அண்ணா’

நாளேடு

மக்கள் திலகம், நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன் தனது அரசியல் கொள்கைப் பிரச்சாரத்துக்காக அறிஞர் அண்ணா அவர்களது பெயரால் நாளேடாக நடத்தும் நிறுவனராக விளங்கினார். அந்த ஏடும் திராவிடரியக்க அவரது அரசியல் வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட உணர்ச்சிப் பத்திரிகையாக நடந்தது.

அடியாரின்

‘மறவன் மடல்’

கலைஞர் ‘முரசொலி’ நாளேட்டில் துணையாசிரியராக இருந்த திருப்பூர் தண்டபாணி என்ற அடியார், ‘மறவன் மடல்’ என்ற பத்திரிகையை நடத்தினார்! சிறந்த சிந்தனை வளமிக்க எழுத்தாளரான அடியார்; கடலலை போன்ற அலைமோதும் அரசியல் நிலையற்றக் கருத்துக்களால் அதை நடத்த முடியாதவராகி, இறுதியில் இஸ்லாம் இனமாகி, பாகிஸ்தான் அதிபரை நேரில் சந்தித்துப் புகழ் பெற்ற எழுத்தாளராக மறைந்தார்!

‘மன்ற முரசு’

முசிறிபுத்தன்

ஆரம்ப கால திராவிடரியக்கத் தொண்டராக இருந்து, பிறகு இரும்பு வணிகம் செய்து, ஓரளவு வருமானம் உடையவராக விளங்கினார். புரட்சி நடிகர் திரை ரசிக மன்றங்கள் ஒன்றாக இணைந்ததால் அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றி புகழ் பெற்றார். எம்.ஜி.ஆர். புதுக் கட்சியைத் தோற்றுவித்தபோது, அவர் பின்னே சென்று ரசிக மன்றத்தை நிலை நாட்டினார். சட்டமன்ற உறுப்பினராகவும், தொண்டு செய்தார். அவர் ‘மன்ற முரசு’ என்ற நாளேட்டை நடத்தி நல்ல முறையில் வருமானியனார்! எம்.ஜி.ஆர். அரசியல் வளர்ச்சிக்கு பலமான துணையாக நின்றவர்களிலே ஒருவரானார்.

திருநாவுக்கரசர்

‘பொன்மனம்’

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வழக்குரைஞராக திராவிடர் இயக்கத் தொண்டாற்றி வந்த திருநாவுக்கரசு, மக்கள் திலகம் கட்சி சார்பாக அறந்தாங்கித் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அமைச்சராகவும் நீடித்தார். அவர், ‘பொன்மனம்’ என்ற பத்திரிகையை நாளேடாக நடத்தினார். ஜெயலலிதா மந்திரிசபையிலும் அமைச்சராக இருந்தார். பிறகு தனிக்கட்சி கண்டார்! அதை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துவிட்டு, பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இயங்கிய மத்திய அரசு மந்திரியாக இருந்தார். ‘பொன்மனம்’ இதழும் நின்று விட்டது.  ஜெயலலிதாவின்

‘நமது எம்.ஜி.ஆர்’

மக்கள் திலகத்தால் அரசியலுக்குள் நுழைந்த ஜெ. ஜெயலலிதா, தனது கட்சியின் கொள்கைப் பர்ப்புச் செயலாளரானார். எம்.ஜி.ஆர். அவரை மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக்கினார். எம்.ஜி.ஆர். மரணமடைந்த பின்பு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரானார். ‘நமது எம்.ஜி.ஆர்.’ என்ற நாளேட்டைத் துவக்கினார். கவிஞர் மணிமொழி அந்த நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது, புலவர் என்.வி. கலைமணி அவருடன் துணை ஆசிரியராகப் பணி புரிந்தார்.

‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.’ என்ற அந்த நாளேட்டை நிறுவிய ஜெ. ஜெயலலிதா, இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு முதல் அமைச்சரானார். இன்றும் டாக்டர் நமது எம்.ஜி.ஆரை அவரது கொள்கைப் பரப்பும் நாளேடாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்.

மா. நடராசனின்

‘புதிய பார்வை, தமிழரசி’

அண்ணா தி.மு. கழகத்தை நடத்தி வரும் பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் கணவர் எம். நடராசன்.

திராவிடர் இயக்கம் மாணவர் அணியிலே தொண்டாற்றி வந்த மா. நடராசன், தமிழ்நாடு அரசு ஊழியராகவும் பணி புரிந்தார். அவர் ‘தமிழரசி’ என்ற வார இதழுக்கு ‘அமுத சுரபி’ என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியரான விக்ரமன் அவர்களைப் பொறுப்பாசிரியராக்கி நடத்தி வந்தார். மா. நடராசன் அந்த வார இதழின் ஆசிரியராவார்.

கலைஞர் ‘குங்குமம்’ வார இதழில் எழுத்தாளர் சாவி. ஆசிரியராகவும், பாவை சந்திரன் என்பவர் துணை ஆசிரியராகவும் இருந்தார்கள். மா. நடராசன் அந்த பாவை. சந்திரனை அழைத்து, ‘புதிய பார்வை’ என்ற பத்திரிகைக்குப் பொறுப்பாசிரியராக்கி, புதிய பார்வையை நடத்தினார். அவை இரண்டும் நிறுத்தப்பட்டு விட்டன.

ஈரோடு சின்னசாமி

‘சமநீதி’ வார இதழ்

சோசலிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுத் தூண்களிலே ஒருவராகத் திகழ்ந்தவர் ஈரோடு மு. சின்னசாமி. அவர் மொடக்குறிச்சி ஊரர்! அருமையான, இயற்கை ஆற்றல்மிக்க, எதிலும் விரைவான செயற்திறமையுடைய, உரமிக்க, கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் அற்புத அன்பு சக்தியுடைய தீப்பொறி பறக்கும் அரசியல் பேச்சாளர் ஆவார்.

கலைஞர் அரசியல் பற்றுடைய அந்த சோசலிஸ்ட் தலைவர்; சி.பா. ஆதித்தனார் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தபோது இருவரும் நண்பர்களானார்கள்.

‘தினந்தந்தி’ பத்திரிகையின் நிறுவனரான சி.பா. ஆதித்தனார், நாம் தமிழர் இயக்கம் என்ற ஒரு சுதந்தரத் தமிழ்நாடு பெறும் ஆர்வமுடையக் கட்சியை உருவாக்கிய போது, ஈரோடு சின்னசாமி அந்த இயக்கத்திற்குச் சக்தியூட்டும் தலைமைப் பேச்சாளர்களுள் ஒருவராக்கப்பட்டார். இருவருக்கும் கொள்கை முரண்பாடு உண்டானதால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பரிந்துரையை ஏற்று தி.மு.க. பேச்சாளரானார்.

‘சமநீதி’ என்ற வாரப் பத்திரிகையை ஈரோடு சின்னசாமி நடத்தினார். அந்த பத்திரிகையைப் பொறுப்பேற்று நடத்தும் பொறுப்பை சோசலிஸ்ட் கட்சியின் எழுத்தாளராக இருந்த அரிய திறமையாளரான ஆர். சீனிவாசமூர்த்தி என்ற திருமாறனிடம் அவர் ஒப்படைத்தார்.

‘சமநீதி’ என்ற அந்த ஏடு மக்கள் திலகம் அணியானது. அதன் சார்பாக ஈரோடு சின்னசாமி, ஈரோடு சட்டமன்ற உறுப்பினரானார். அவர் நடத்திய சமநீதி என்ற பத்திரிகையை பிறகு எம்.ஜி.ஆர். உரிமை ஏற்று நடத்தினார்.

‘புதிய பூமி’ நாளேடு;

நாஞ்சில் மணிமாறன்!

‘மனோன்மணியம்’ என்ற காப்பிய நாடகத்தை எழுதிய பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, தனது நாடக நாயகனான சேர மன்னன் என்ற வஞ்சி நாட்டான் கோபமாகக் கூறும் வசனம் ஒன்றை எழுதினார். ‘வஞ்சியான் எவரையும் வஞ்சியான்’ என்பதே அந்த வசனம்.

திரை உலகில் சிவாஜி கணேசன் புகுவதற்கு முன்பு சிவாஜி கணேசனாக அனல் பறக்கும் வசனங்களைப் பொறி பறக்கப் பேசியவர் நடிகர் பி.யு. சின்னப்பா. அவர், ‘வஞ்சியான் எவரையும் வஞ்சியான்’ என்ற வசனத்தைக் கனல் தெறிக்க பேசும்போது அரியணை அதிருமாறு சினச் சீற்றத்துடன் பேசி, அந்த வசனத்தை ஓர் எரிமலை ஆக்குவார்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய அந்த வசனத்தின் பண்புக்கேற்ப, நாகர்கோயில் நகரிலே பிறந்த நாஞ்சில் நாட்டவரான நாஞ்சில் நீ. மணிமாறன் என்ற சிறு வள்ளலான அவர், எவரையும் - எந்தநேரத்திலும், எந்தத் துறையிலும் வஞ்சியாதவர் மட்டுமன்று. வாரி வழங்கிய பறம்பு நாட்டரசரான பாரி வள்ளல் வாரிசைப் போல - வறுமையாளர்களை இன்முகம் காட்டி வரவேற்கும் திராவிடரியக்க வள்ளல் நாஞ்சில் மணிமாறன் ஆவார்.

இளம் வயது முதலே கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த நாகர்கோயில் மண்ணிலே பிறந்துவிட்டக் காரணத்தால், பிறந்ததற்காக வாழ்கின்ற வறுமைப் பிஞ்சுகளுக்கு சிவகெங்கை மன்னர் பாஸ்கர சேதுபதி, உலகம் போற்றும் விவேகானந்தர் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகருக்குச் சென்று ஆன்மிக ஞான உரை ஆற்றி வேதாந்த கேசரி என்ற விருதைப் பெற்றிட வாரி வழங்கி வழி அனுப்பி வைத்ததைப் போல - நாஞ்சில் நீ. மணிமாறன் என்ற மனிதரும் புலவர்களுக்கு அள்ளியள்ளிக் கொடுத்துப் போற்றும் பண்பாளராக வாழ்பவராவார்.

அந்த மணிமாறன் அவர்கள், ‘புதிய பூமி’ என்ற நாளேட்டைத் துவக்கி, திராவிடரியக்கக் கொள்கைகளை வளர்த்தார். அறிஞர் அண்ணா தலைமையை இளம் வயதிலேயே ஏற்ற அவர், சென்னை நகர் வந்து செம்மொழியாம் தமிழ்மொழிக்குப் ‘புதிய பூமி’ என்ற முத்தமிழ்க் கலைக் குழுவை உருவாக்கிக் கலை நிகழ்ச்சி நடத்தி இன்றும் முத்தமிழ்த் தொண்டு புரிந்து வருகிறார். ஏறக்குறைய ஓர் ஐம்பதாண்டுக் காலமாகத் திராவிடரியக்கத் தொண்டுகளாற்றி வரும் ஒரு கலைஞராக நடமாடி, அரசியலில், கலையியலில் எவரிடமும் எதையும் எதிர்பாரா சத்தியச் சாட்சியாக வாழ்ந்து வருகிறார்!

‘மகரந்தம்’

மணிமொழி

முரசொலி நாளேட்டில் ஏறக்குறைய 15 ஆண்டு காலமாக துணை ஆசிரியராகப் பணியாற்றிவர் கவிஞர் மணிமொழி. திராவிடர் இயக்கத்துள், குறிப்பாக பாவேந்தர் பாரதிதாசன் கவிதா மண்டலத்தில் ஒருவராக வாழ்ந்தவர்.

நாஞ்சில் மணிமாறனும், கவிஞர் மணிமொழியும் இரட்டைப் புலவர்களைப் போல இணைந்து, திராவிடர் இயக்க வளர்ச்சிக்குப் பத்திரிகைத் தொண்டு புரிந்தவர்களாவர்! ஆற்காட்டு சகோதரர்களான சர்.ஏ. இராமசாமி, சர்.ஏ. இலட்சுமணசாமியைப் போல, இயக்கக் கொள்கைகளைப் பட்டித் தொட்டியெலாம் பாங்குடன் வளர, ஆடல் - பாடல், இசை - நாடகம் மூலமாகத் தொண்டு புரிந்து வந்த கலைச் சித்தர்கள் இந்த இருவர் என்பதைக் கலையன்பர்கள் அறிவர்.

கவிஞர் மணிமொழி, நாஞ்சில் மணிமாறன் இருவரும் இணைந்து ‘மகரந்தம்’ என்ற இலக்கியத் திங்கள் இதழை நடத்தினார்கள். கவிஞர் மணிமொழி காலமான பிறகும் திரு. மணிமாறன் அவர்கள் தனித் திறமையுடன் கலைத் தொண்டாற்றி வருகிறார். வாழ்க நாஞ்சில் மணிமாறன் தமிழ்த் தொண்டு!

‘தினகரன்’

கந்தசாமி

‘தினகரன்’ என்ற நாளேட்டின் ஆசிரியராக, நிறுவனராக இருந்த கந்தசாமி அவர்கள், பத்திரிகைப் பணியால் திராவிடர் இயக்கத்துக்கு வந்து தொண்டாற்றி, கலைஞர் அவையில் மந்திரியாகவும் இருந்தார். இவரது உறவினரான சி.பா. ஆதித்தனார், அறிஞர் அண்ணா அமைச்சரவையில் சட்டப் பேரவைத் தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘தினகரன்’ நாளேடு, முழுக்க முழுக்க திராவிடரியக்கக் கொள்கை வளர்ச்சிக்கான ஏணியாக இருந்து வருகிறது. எப்போதிலிருந்து? 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு! எனவே, தினகரன் தின ஏட்டின் தொண்டு சாதாரணமானதன்று. தி.மு. கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை எந்த ஒரு தனிப்பட்ட பத்திரிகையும் ‘தினகரன்’ அளவுக்கு நன்றி விசுவாசத்துடன் தொண்டாற்றி யதில்லை.

பி.எஸ். இளங்கோ என்ற தி.மு.கழகத்தவர் ‘மாலைமணி’ என்ற நாளேட்டை நடத்தினார். அந்த ஏட்டில் ‘எரியீட்டி’ என்று வெளிவந்த கட்டுரைகள், காலையில் வரும் அரசியல் பகைக்கு மாலையிலோ, மறுநாளோ பதிலெழுதும் பழக்கம் இருந்தது. அந்தப் பழக்கம் வழக்கமானதும், கட்சி வளர்ச்சிக்கு அந்தக் கட்டுரைகள் பகைக்கு எரி நெருப்பாகிக் கட்சி வாசகர்கள் உள்ளத்தைக் கொதிக்க வைத்தன. அதனால், கட்சி வளர்ந்தது. தொண்டர்கள் உணர்ச்சிகளின் உருவங்களாக கட்சி அரசியலுக்குள் உழைத்தார்கள்.

அதனைப் போலவே, தினகரன் பத்திரிகையின் இரண்டாம் பக்கத்தில் எழுதப்படும் செய்திக் கட்டுரைகள், சட்ட விளக்கங்கள் அரசியல் வித்தக மற்றவர்களுக்கு அறிவுரையாக அமைந்தது ஒருபுறமிருக்க, மறுபுறம் உண்மையான கழகத் தொண்டர்களை ஊக்குவிக்கும் ஊற்றுக் கண்ணின் உண்ணீராகவே வேட்கை தீர்த்து வருகின்றது எனலாம்.

ஜே.பி.ஆர்

நீதியின் குரல்

திராவிடரியக்க முழுநேரத் தொண்டராக, அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., வி.என். ஜானகி எம்.ஜி.ஆர். காலம் வரை உழைத்த ஜே.பி.ஆர். என்ற திராவிடரியக்க மாவீரர், இன்று கல்வியாளராக, வழக்குரைஞராக, கல்விக் கல்லூரிக் கோட்டங்களை நடத்தும் முதல்வராக உள்ளார் என்றால், இது திராவிடர் இயக்கத்துக்குக் கிடைத்த பெரும்பேறு அல்லவா?

சென்னை வால்டாக்ஸ் சாலையிலே இருந்த ஒற்றை வாடை நாடகக் கலையரங்கத்தில், 1962-ஆம் ஆண்டு வாக்கில், தத்துவமேதை என்று அழைக்கப்பட்ட டி.கே. சீனிவாசன் என்பவருக்கு நிதியளிப்பு விழா நடந்தபோது, ‘இரயில்வே துறையில் திருச்சி சந்திப்பில், பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த நான், எனது வாழ்க்கையைக் கட்சியை நம்பிக் கெடுத்துக் கொண்டேன்’ என்று டி.கே.சி. வருத்தமாகக் குறிப்பிட்டார்.

அறிஞர் அண்ணா அவர்கள் அவருக்குப் பதில் கூறும் போது, கட்சியை நம்பித் தனது வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டதாக இங்கே டி.கே. சீன்ரிவாசன் குறிப்பிட்டார்.

ஒருவர் தனது வாழ்க்கையில் நாட்டு நலன் முன்னேற தொண்டாற்றுவது அவசியம்தான். அதைவிட முக்கியமானது வீட்டு நலன் என்பதையும் உணரவேண்டும். வீடு நன்றாக வாழ்ந்தால்தான் நாடும் வாழும், உயரும், நலன் பெறும்! நாட்டுக்காக உழைத்து வீட்டைக் கெடுத்துக் கொண்டேன் என்று கூறுபவன் எனது தம்பி அல்ல’ என்றார்.

இதற்குப் பிறகுதான் டி.கே.சீனிவாசன் மாநிலங்கள் அவை உறுப்பினராக்கப்பட்டார். தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவன மேலாண்மை இயக்குநராகவும் ஆனார்.

அறிஞர் அண்ணா அவர்களது வாக்கை ஜே.பி.ஆர். வேத வாக்காக ஏற்றுக் கொண்டு, ‘நீதியின் குரல்’ என்ற நாளேட்டை திராவிடர் இயக்கத்துக்காக நடத்தினார். பிறகு செல்வர்களும் மதிக்குமளவிற்கு அன்னை சத்தியா என்ற பெயரில் கல்லூரி வகைகளை நடத்தி அவைகட்கு முதல்வராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Anna

“Home Land”

அறிஞர் அண்ணா அவர்கள் 1962-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர்களில் 50 பேரை வெற்றி பெறச் செய்து சட்டமன்ற உறுப்பினர்களாக்கினார். காஞ்சிபுரத் தொகுதியில் அறிஞர் அண்ணா தோல்வி கண்டார். பிறகு தில்லி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். 

அந்த நேரத்தில் அண்ணா இங்லீஷ் வார இதழை நடத்த விரும்பினார். ஹோம் லேண்ட்(Home Land) ‘Home Rule’ என்ற பத்திரிகைகளை நடத்தினார். அற்புதமான அவரது ஆங்கில நடை கட்டுரைகள், வடநாட்டில் பெரிதும் பாராட்டுப் பெற்றன. அண்ணாவின் ஆங்கிலப் பத்திரிகைக்கு திருச்சி எம்.எஸ் வெங்கடாசலம், நாவலர் தம்பி. இரா. செழியன், எம்.பி. ஏ.எஸ். வேணு போன்ற கழக எழுத்தாளர்கள் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றினார்கள்.

Sunday

Observer

நீதிக் கட்சி எனப்படும் ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பத்திரிகை ஆசிரியர்களுக்கு தமிழ்மொழியில் சரளமாகப் பேச, எழுத வராது. அவர்கள் தங்களது வீட்டுக் குள்ளேதான் தமிழைப் பேசுவார்கள். அத்தகையவர்களிலே ஒருவர் ‘சண்டே அப்சர்வர்’ என்ற இங்லீஷ் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் பி. பாலசுப்பிரமணியம் என்பவர். அவர் தில்லி நாடாளுமன்றத்துக்கு ஐக்கிய முன்னணி என்ற திராவிட இயக்கக் கூட்டணி சார்பாக டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் என்ற பெரும் தொழிலதிபரை எதிர்த்து ‘புலி’ பெட்டி சின்னம் சார்பாக நின்று தோற்றுவிட்டார். சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் . அறிஞர் அண்ணாவால் நன்கு மதிக்கப்பட்டவர். சிறந்த ஆங்கில பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகை யாளராகவும் இருந்தார்.

“Liberator”

Krishnasamy

ஜஸ்டிஸ் கட்சியின் நிறுவனத் தூண்களில் ஒருவராக இருந்த சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்களின் மூத்தமகன் டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி பாரிஸ்டர்: 1942-ஆம் ஆண்டில் Liberator என்ற ஆங்கில நாளேட்டை ஆரம்பித்தார். 1952-ஆம் ஆண்டு வரை அந்த நாளேடு ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கை வளர்ச்சிக்காக உழைத்தது. டாக்டர் கிருஷ்ணசாமி, பத்திரிகை உலகில் தனது தந்தையைப் போலவே சிறந்த எழுத்தாளர் என்பதை மெய்ப்பித்தார்.

டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பாரிஸ்டர் டாக்டர் கிருஷ்ணசாமி தில்லி நாடாளுமன்றத்தில் நுழையும்போது ‘லிபரேட்டர்’ பத்திரிகை ஆசிரியர் என்ற செல்வாக்கோடு நுழைந்து அரும்பணிகள் பல புரிந்தார்.

டாக்டர் டி.எம். நாயர்

Justice

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், கெட்டிஸ்பர்க் எனுமிடத்தில் பேசிய அரசியல் சொற்பொழிவு உலகப் புகழ் பெற்ற பேச்சாகும். அந்த மேதை அங்கே ஆற்றிய உரை உலக ஜனநாயக ஆட்சிக்கு மூலவித்தாக, மக்களுக்காக, மக்களால் மக்களுக்கு நடத்தப்படும் அரசாக ஓர் அரசு அமைய வேண்டும் என்ற மக்களாட்சி உரிமைகளை அங்கே முழக்க மிட்டார். அதனால் அந்தப் பேச்சு உலகப் புகழ் பெற்றது.

ஆபிரகாம் லிங்கனைப் போலவே, நீதிக் கட்சியைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான டி.எம். நாயர், 1917-ஆம் ஆண்டில், சென்னை சேத்துப்பட்டு கூவம் ஆறு ஒடும் பகுதியிலே இன்றும் இருக்கின்ற ஸ்பர்டேங் ரோட்டின் திடல்’ (Spurtank Road Speech) ஒன்றில் பேசினார். அந்த உரைக்கும் ஸ்பர்டேங் உரை (Spurtank Spech) என்று பெயர்.

அந்தக் கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் பேசும்போது சுதந்திரம் (Liberty), சமத்துவம் (Equality) சகோதரத்துவம் (Fraterrity) என்ற முப்பெரும் அரசியல் தத்துவ விளக்கங்களை அப்பகுதியிலே வாழும் கல்விமான்களும், பாமரர்களும் கலந்து கொண்ட பெருங் கூட்டத்தில் விளக்கி அறிமுகப்படுத்தினார்.

டி.எம். நாயர் துவக்கிய இங்லீஷ் நாளேடான ஜஸ்டிஸ், நாயர் கூறிய கொள்கைகளைக் கடுகளவும் வழுவாமல், தனி மனிதர்களுக்கும், சமூகத்திற்கும் இடையே நடுநிலை தவறாமல், நீதியை நிலைநாட்ட, சமத்துவத்தை, சகோதரத் துவத்தை மக்கள் இடையே பரப்பிட அரும்பாடுபட்டது. அரசியல் உட்பகையால் ஜஸ்டிஸ் ஏடு பலம் சீரழிந்தது. 

சர்.ஏ. இராமசாமி

Justice Daily

நீதிக் கட்சியில் தோன்றிய சில பலவீன சூழல்களால் நிறுத்தப்பட்ட டி.எம். நாயர், இராமன் பிள்ளை ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்ட ஜஸ்டிஸ் பத்திரிகை மீண்டும் 17.1.1927-ஆம் ஆண்டு சர்.ஏ. இராமசாமி முதலியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்தது. அந்த நாளேட்டின் முதல் இதழில் ‘நாம்’ (ourselves) என்ற தலையங்கத்தை சர்.ஏ. இராமசாமி முதலியார் எழுதி, ஜஸ்டிஸ் கட்சியின் பலவீனச் சூழல்களை விளக்கினார்.

ஜஸ்டிஸ் நாளேடு, காங்கிரஸ் கட்சி கூறுவதைப் போல, வேற்று மண்ணுக்குரிய ஒவ்வாத செடி அல்ல (Exotic Plant) இந்த நாளேடு; ஒவ்வாத சூழ்நிலையால் வாடி வதங்காது என்று குறிப்பிட்டார் சர்.ஏ.ஆர். ஏறக்குறைய எட்டு ஆண்டுகள், 1935-ம் ஆண்டுவரைப் பத்திரிகைப் பணியை ஆற்றி விட்டு; அதை நடத்தும் பொறுப்பை டி.ஏ.வி. நாதன் என்பவரிடம் ‘சக்தி வாய்ந்த பத்திரிகை ஜஸ்டிஸ்’ என்று கூறி 1935-ஆம் ஆண்டில் விட்டுவிட்டு சென்றார்.

பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அமைத்தப் போர்க் கால அமைச்சரவையில் (War Cabinet) ஒரு தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர் முதன் முதல் இந்தியாவின் பிரதிநிதியாக இடம் பெற்ற புகழ் சர்.ஏ. இராமசாமி முதலியார் என்ற பத்திரிகையாளரையே சாரும.

சர்.ஏ. இராமசாமி அவர்கள் ஜஸ்டிஸ் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தைக் கண்ட பிரிட்டிஷ் அரசு, 1948-ஆம் ஆண்டில், மார்ச் 29 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாட்டுச் செய்தி சுதந்திர மாநாட்டில் U.N. Conference on Freedom of Information என்ற இந்தியத் தூதுக் குழுவின் தலைவராய் சர்.ஏ.ஆர். முதலியார் பங்கேற்றார்.

அந்த மாநாட்டில் சர்.ஏ.ஆர். உலக வல்லரசுகள் வியக்கும் வண்ணம் பேசினார். செய்தித் தாள்கள் சில நன்னெறி முறைகளை (Code of Ethics) வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் உரையாற்றினார். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றிய கருத்தின் சாரம் இது :

‘மருத்துவத் தொழிலில் நன்முறையில் வகுக்கப்பட்ட சில நன்னெறிகள் உள்ளன என்பதை உலகம் அறியும். அவற்றை ஒழுங்குப்படுத்த மருத்துவக் குழு (Medical Council) ஒன்றுள்ளது. மருத்துவர்கள் தங்கள் நடைமுறிையில் அந்த நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதைப் பார்ப்பதும், அந்தக் குழுவின் பணியாகும்’

‘இதைப் போன்றே வழக்கறிஞர் தொழிலிலும் சில நெறிமுறைகள் உள்ளன. கற்றறிந்தோர் தொழிலானர் பத்திரிகைத் தொழிலுக்கு (Journatism) அத்தகைய நெறிமுறைகளை வகுப்பதற்கான காலம் வந்து விட்டது என எதிர்ப்பார்ப்பது தவறா?”

“பத்திரிகைத் தொழிலில் ஈடுப்பட்டுள்ள என் நண்பர்கள் இப்பொழுது சங்கங்கள் அமைத்துச் செயல்படுகிறார்கள். அதற்கு மேலும் அவர்கள் சற்று உயர்ந்து சென்று தங்களுக்கெனச் சில நெறிமுறைகளை வகுத்துக் கொள்வது இயலாத காரியமா? எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்...’ சர்.ஏ.ஆர். முதலியார்.

‘நன்முறையில் கற்றுத் தேர்ந்த, பண்பாடும் பரந்த நோக்கமுமுடைய பத்திரிகையாளர்கள் குழாம் ஒரு நிறுவனத்தை அமைத்து அதன் மூலம் தங்களின் நடத்தையை ஒழுங்குப்படுத்திக் கொள்ள இயலும் என நான் நம்புகிறேன்’. - என்று டாக்டர் சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்கள் தனது ஜெனிவா சொற்பொழிவின் இறுதியில், தான் ஒரு சமாதானத் தூதர் என்பதை விளக்கினார்.

“போர் தவிர்க்க இயலாது என நான் நம்புவதற்கில்லை. மனிதனின் பொது அறிவு போரை அனுமதிக்காது. இத்தகைய மாநாடு போர் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்” என்ற கருத்தையும் ஏ.ஆர். முதலியார் அந்த மாநாட்டில் வலியுறுத்தி முழக்கமிட்டார்.

(- டாக்டர் ஏ.இராமசாமி முதலியார் ஜெனிவா மாநாட்டின் பேச்சு - “இணையிலா இரட்டையர் வாழ்க்கை வரலாறு” என்ற நூலில்)

டாக்டர் ஏ.ஆர்.முதலியார்

பேச்சின் எதிரொலி!

ஜெனிவா மாநாட்டில் பத்திரிகையாளர் உரிமைகளை, நலன்களைப் பற்றி விரிவாக உரையாற்றியக் கொள்கையை மாநாடு ஏற்றுக் கொண்டது. மாநாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உருவெடுத்தன. என்றாலும், பத்திரிகையாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பொதுவான ஒழுக்க நடத்தைகளை, மரபினை (Standard of Conduct) சிறப்பான முறையில் ஜெனிவா மாநாடு வரையறுத்துச் செய்தது.

மாநாட்டிற்கு முன்பு சர்.ஏ.இராமசாமி முதலியார், இலண்டனில் தங்கியிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் சிலர், ஆர்க்காட்டாரைச் சந்தித்தார்கள். அவர்களில் ஒரு பத்திரிகையாளர் நமது இராமசாமி முதலியாரிடம், ‘இந்தியத் தூதுக் குழுவின் தலைவராகப் பத்திரிகையாளர் சந்திக்கின்ற ஜெனிவா மாநாட்டில் கலந்துகொள்ள உமக்கு என்ன தகுதி இருக்கிறது’? என்று கேட்டு விட்டார்! காரணம், அந்த இலண்டன் நிருபருக்கு டாக்டர் சர். ஏ. இராமசாமி முதலியார் யார்? எப்படிப்பட்டவர்? தூதுக் குழுவின் தலைவராவதற்கு முன்பு அவர் என்ன பணி செய்தவர்? என்பதை எல்லாம் அந்த நிருபர் அறியாததால் அப்படிக் கேட்டு விட்டார்.

“இந்தக் கேள்வியை நீங்கள் எங்களுடைய அரசைக் கேட்டிருக்க வேண்டும்’ என்று கூறிய டாக்டர் இராமசாமி முதலியார், பிறகு ஜஸ்டிஸ் ஆங்கில நாளேட்டில் தான் எட்டு ஆண்டுகள் பதிப்பாசிரியராகப் பணியாற்றியதையும் குறிப்பிட்டார்.

அடுத்து ஒரு நிருபர், ‘ஜெனிவா மாநாடு எப்படிப்பட்ட முடிவை எடுக்க இருக்கிறது?’ என்ற வினாவை விடுத்தார்.

அதற்கு, டாக்டர் ஏ.ஆர். முதலியார் பதில் கூறும்போது, ‘பத்திரிகையாளர் சுதந்தரமாக இருக்க வேண்டுமானால், சில கட்டுப்பாடுகளை ஏற்றுத்தான் ஆக வேண்டும். (To be free you must accept chains) என்று அறிவுரை கூறிய அவர், செய்தித் தாள்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகளை டாக்டர் இராமசாமி முதலியார் வரவேற்றார். ஆனால், அவற்றின் பதிப்பாசிரியர் ஆற்றுகின்ற பணிகள் மீது உரிமையாளர்கள் குறுக்கீடுகள் எதுவும் இருக்கக் கூடாது. குழலிசை வாணர்களுக்குப் பணம் கொடுக்கலாம். ஆனால், இந்தப் பாட்டுதான் பாட வேண்டும் என்று கட்டளை போடக் கூடாது (The piper may be paid - but the tune must not be dictated) என்று கூறினார் அவர்.

டாக்டர் ஏ. இராமசாமி அவர்கள், 1957-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் செங்கற்பட்டு நாடாளுமன்ற தொகுதியில், தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பாரிஸ்டர் ஏ. கிருஷ்ணசாமியை ஆதரித்தும், காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஒ.வி. அழகேச முதலியாரை எதிர்த்தும் தேர்தலில் பேசுவதற்கு செல்ல நேரிட்டது.

அந்த எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதியில் முதன் முதலாக அறிஞர் அண்ணா போட்டி யிடுகிறார். அந்தத் தேர்தலில்தான், ‘அரியலூர் ரயில் விபத்தை யும், அதனால் மக்கள் மாண்டதையும் சுட்டிக் காட்டி மக்களிடம் வாக்குகள் கேட்கும் வகையில், ‘அரியலூர் அழகேசரே ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?’ என்ற சுவரொட்டிப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது.

அரசியல் மேதை டாக்டர் ஏ. இராமசாமி அவர்கள் சொற் பொழிவைக் கேட்க மக்கள் வெள்ளம்போல திரண்டிருந் தார்கள். அந்தக் கூட்டத்தில் ஆர்க்காட்டார் இங்லிஷில் ஆற்றொழுக்காக, அற்புதமாக உரையாற்றியதை அறிஞர் அண்ணா அவர்கள் மொழி பெயர்த்தார். 1935-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் தனது கல்வியை முடித்த பின்பு டாக்டர் சர்.ஏ. இராமசாமி முதலியார் உரைகளின் மொழிப் பெயர்ப்பாளராகவே தமிழ்நாட்டு அரசியலில் முதன் முதலாகக் காலடி வைத்தவர்.

ஆர்க்காட்டார் அண்ணாவிடம் அன்பும், மரியாதையும் அளவிற்கதிகமாகவே பாராட்டினார். அண்ணாவும் அவரைத் தனது அரசியல் ஆசானாகவே இறுதிவரை மதித்தார். அண்ணா 1967-ல் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆனபோது, டாக்டர் ஏ.ஆர். முதலியார் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து மாலை சூட்டி அவருக்குத் தனது நன்றியை உணர்த்தினார்.

சென்னை மாநகரில் இன்றும் காட்சி தந்து கொண்டிருக்கும் மவுண்ட் ரோடு (அண்ணா சாலை) அண்ணா சிலையை யார் திறப்பது என்று சர்ச்சை ஏற்பட்டபோது, அறிஞர் அண்ணா அந்த சிலையை டாக்டர் சர்.ஏ. இராமசாமி தான் திறக்க வேண்டும் என்றார். அறிஞர் அண்ணா சிலையை சர்.ஏ.ஆர். முதலியார் திறந்து வைத்து, அண்ணாவின் தனித் திறமைகளை, அரிய பண்புகளைப் பாராட்டிப் பேசிய காட்சியை இலட்சக்கணக்கான மக்கள் கண்டு, கேட்டு மகிழ்ச்சிப் பெற்றார்கள். ஒரு பத்திரிகையாளர் சிலையை, மற்றொரு பத்திரிகையாளர் திறந்து வைத்தக் காட்சியை இலட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தார்கள்.