இதழியல் கலை அன்றும் இன்றும்/சுதந்திர இயக்கத்தில்

விக்கிமூலம் இலிருந்து



6
சுதந்திர இயக்கத்தில்
இருபதாம் நூற்றாண்டு இதழ்கள்

ந்திய விடுதலை இயக்கம் மக்களிடையே பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இந்தியா முழுவதுமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சரியாகப் பரவாமல் இருந்ததற்குக் காரணம், பத்திரிகை பலம் பெருகாததின் விளைவே ஆகும்.

கங்காதர் பட்டாச்சாரியார், இராஜராம் மோகன்ராய், ஜேம்ஸ் சில்க் பக்கிங்ஹாம், ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி போன்ற ஒரு சிலரின் பத்திரிகைகள் மட்டுமே அப்போது தோன்றின.

அவற்றில் கூட பிரிட்டிஷ் ஆட்சியரின் ஒழுக்கக் கேடுகளை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளே அதிகமாக வெளிவந்தன. அதனால், அகில இந்திய தேசியக் காங்கிரசின் முற்போக்குக் கொள்கைகள் மக்கள் இடையே நன்றாக வேறூன்றாமல் இருந்தன.

இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கம் 1885-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பிறகு, அதன் தலைவர்கள் நகர்தோறும் பேரவை மாநாடுகளைப் போன்ற அகில இந்தியக் கூட்டங்களை நடத்தி, பிரிட்டிஷ் ஆட்சியிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுக்கும் பணிகளே அவர்களுக்குச் சரியாக இருந்தது. 

சென்னை ஜி. சுப்பிரமணிய ஐயரும், சேலம். விசயராகவாச்சாரியாரும் இணைந்து, ‘இந்து’ நாளேட்டையும், ‘சுதேசமித்திரன்’ வார, தின இதழ்களையும் தமிழ்நாட்டில் துவக்கிக் கொள்கைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததற்குப் பிறகுதான், மக்கள் காங்கிரஸ் பேரியக்கம் பற்றிப் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் வாய்த்தன.

இந் நிலைக்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் இந்திய விடுதலை இயக்கத்தில், வட நாட்டிலும் - தென்னாட்டிலும் பத்திரிகைகள் பல ஆரம்பிக்கப்பட்டு, அவை தீவிரமாகக் கொள்கைப் போர் நடத்தும் நிலை உருவானது. அதனால், இந்திய இதழ்களின் வளர்ச்சிக்கும் ஓர் உத்வேகம், பரபரப்பு, விறுவிறுப்பு, சுறுசுறுப்பு ஆகியவை மக்கள் இடையே தீவிரமடைந்தன.

இந்தத் தீவிர உணர்ச்சிகளை அப்போதையக் காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகப் போராடத் திட்டம் வகுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள்.

மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு கிருஷ்ண சிப் லாங்கர் என்பவர் மராட்டிய மொழியில் கேசரி (Kesari) என்ற பத்திரிகையையும், இங்லீஷில் ‘மராட்டா’ (Mahratta) எனும் இதழையும் துவக்கி நடத்தினார். இந்தப் பத்திரிகைகளைத்தான் பிற்காலத்தில் பால கங்காதர திலகர் எனும் மராட்டியத் தலைவர் ஏற்று நடத்தினார்.

பம்பாய் நகரில் பல ஆண்டுகளாக நீதித் துறையில் பணியாற்றிய நீதிபதி மகாதேவ கோவிந்த ரானடே விருப்பத்திற்கேற்ப 1887-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியடிகளின் அரசியல் ஆசானான பாரிஸ்டர் கோபால கிருஷ்ண கோகலே என்ற மிதவாதக் காங்கிரஸ் இயக்க அணியின் தலைவர் ஆசிரியராக அமர்ந்து ‘சர்வ ஜன சபை’ (Sarva Jana Sabha) என்ற ஆண்டுக்கு நான்கு முறை வெளிவரும் காலாண்டு பத்திரிகையை நடத்தினார்.

கோபால கிருஷ்ணன் கோகலே ‘சுதாரக்’ (Sudharak) என்று ஆங்கிலத்திலும், மராத்தியிலும் பத்திரிகைகளை நடத்தி தேசியப் பிரச்சனைகளை மக்களுக்கு உணர்த்தினார்.

இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவையில் 1907-ஆம் ஆண்டில் பெரும் பிளவு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் மிதவாத அணியிலே கோகலே இருந்தார். உடனே தனது தொண்டர்களோடு ‘தக்காண சபை’ (Deccan Sabha) என்ற ஓர் அமைப்பை நிறுவினர். இந்திய ஊழியர் சங்கம் என்பதை அமைத்தார். இந்த சங்கம் சார்பாக ‘தியான் பிரகாஷ்’ (Dhyan Prakash) என்ற பத்திரிகையை நடத்தினார். பத்திரிகைச் சுதந்திரத்திற்கு இந்த இதழ் கடுமையாகப் போரிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சி

அடக்கு முறைகள்

பிரிட்டிஷ் அரசு, செய்தித் தாள் சட்டம் என்ற ஒரு சட்டத்தை 1908-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இதை குற்றங்களுக்குத் துண்டிவிடும் சட்டம் - VII என்று; அதாவது (The News Papers (Incitement to Offences Act VII ) என்று அரசு குறிப்பிட்டது.

எந்தப் பத்திரிகை ஆசிரியர் கலகங்களைத் தூண்டிவிடும் வகையில் செய்திகளை எழுதுகின்றாரோ, அவர்மீது நடவடிக்கை எடுத்திட, உள்ளூர் அதிகாரிகளுக்கு இது அனுமதியளிக்கும் சட்டமாகும். இந்தச் சட்டத்தின்படி பத்திரிகைகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அதில் ஏழு பத்திரிகைகளை அரசு கைப்பற்றியது.

மிண்டோ - மார்லி சீர்திருத்தங்கள் என்ற சட்ட நடவடிக்கைகள் பெயரால், பத்திரிகைகளை அடக்க அரசுக்கு அதிகாரம் அளித்தது. இந்தச் சட்டத்தை மதன்மோகன் மாளவியா, பூபேந்திர நாத்பாசு, பிரோஷ்ஷா மேத்தா ஆகியோர் நாடாளுமன்றத்தில் வன்மையாகக் கண்டித்தார்கள்.

‘இந்திய இதழ்கள் சட்டம்’ என்றொரு சட்டம் 1910-ஆம் ஆண்டு அரசினரால் கொண்டு வரப்பட்டு, அதன் வாயிலாகப் பிணையத் தொகை கட்ட வேண்டும் என்றார்கள். இந்தக் கெடுபிடி முறையால் எட்டு பத்திரிகைகள் பழிவாங்கப்பட்டன.

பாலகங்காதர திலகர் மீதும், அவரது பத்திரிகை மீதும் அரசுக்கு எதிராகச் செயல்பட்ட வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வாறு பல பத்திரிகைகளை அரசு ஒடுக்க நடவடிக்கை மேற்கொண்டது.

அரசை எதிர்த்து

இதழ்கள் எதிர் நீச்சல்

ஆங்கில ஏகாதிபத்தியம் பத்திரிகைகளை இவ்வாறு பழி வாங்கி, அதன் ஆசிரியர்களைச் சிறையிட்டது. அவர்களை நாடு கடத்தி வாட்டி வதைத்தது. ஆனாலும், எந்தப் பத்திரிகை ஆசிரியரும் பயந்து ஓடிப் பதுங்கிக் கொள்ளவில்லை. வருவது வரட்டும் என்று அரசு எதிர்ப்புகளைத் தங்களது பத்திரிகை வளர்ச்சிக்கு உரமாக்கிக் கொண்டார்கள்.

அர்சு எதிர்ப்புக்கு அஞ்சாத பத்திரிகைள் சில : திலகரின் ‘கேசரி’, அரவிந்தரின் ‘வந்தே மாதரம்’, விவேகானந்த அடிகளாரின் சகோதரர் பூபேந்திர நாத்தின் ‘ஜூகந்தா’ பிரமோபந்தா உபாத்தியாயாவின் ‘சந்தியா’, பிரோஷ்ஷா மேதாவின் ‘பாம்பே கிரானிக்கிள்’, மெளலான முகமுது அலியின் ‘காம்ரேட்’, அபுல்கலாம் ஆசாதின் உருது இதழ், ‘அல்-ஹிலால்’, வி.எஸ். சீனிவாசச்சாரியார் ‘செர்வெண்ட் ஆஃப் இந்தியா’.

மேற்கண்ட எல்லா பத்திரிகைகளும் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து கர்ஜனையிட்டுக் கொண்டிருந்த வேங்கைகளாக உலாவின.

காந்தியடிகளின்

‘யங் இந்தியா; ஹரிஜன்’

மகாத்மா காந்தியடிகள் இந்திய விடுதலைப் போர் இயக்கமான அகில இந்திய தேசியக் காங்கிரசில்; 1920-ஆம் ஆண்டில் காலெடுத்து வைத்த பின்பு, காங்கிரஸ் இயக்கப் போக்கில் அகிம்சையும், அற்புதமும் குடிகொண்டு கோலோச்சின. அதனால் இந்திய அரசியலில், அடிக்கடி போராட்டங்கள் உருவாகி புதிய புதிய திருப்பங்கள் விளைந்தன.

அகிம்சை அண்ணல் காந்தியடிகள், ஏற்கெனவே தென் ஆப்ரிக்காவில் ‘இந்தியன் ஒப்பினியன்’ (indian Opinion) என்ற பத்திரிகையை நடத்திப் போதிய அனுபவம் பெற்றிருந்தவர் என்பதால், இந்திய மண்ணில் விடுதலைக்காக உழைத்திடும் கருவிகளென ‘யங் இந்தியா’, ‘ஹரிஜன்’, ‘நவஜீவன்’ ஆகிய பத்திரிகைகளைத் துவக்கி வெற்றிகரமாக நடத்தினார். இவர்தான் தேசிய இயக்கப் பத்திரிகைகளுக்கு தக்க அறிவுரை கூறும் தந்தையாக இருந்தார்.

இதழ்களை வருவாய் இழப்பில் நடத்தாமல் இலாபத்தில் நடத்தும் வழியை உருவாக்கி, உலகிலேயே அடிகள் ஒரு பெரும் பத்திரிகை ஆசிரியர், நிறுவனர், நடத்துனர் என்ற நற்பெயர்களை எடுத்து, அதை நிலைத்து நிற்கவும் வழி காட்டியவர் காந்தி பெருமான். அவர் நடத்திய எல்லா ஏடுகளும் ஓர் உன்னதமான உயர்ந்த இலட்சியத்தோடு நடந்தவைகளே தவிர, பணத்துக்காக எதையும் எழுதலாம் என்ற கீரர்கள் போக்கை அறியாதவர், தெரியாதவர்! எனவே, அந்தப் பத்திரிகைகளை அறநோக்கோடும், அகிம்சைப் போக்கோடும் நடத்திக் காட்டியவர் அடிகள்.

பத்திரிகைப் பணியை காந்தி அடிகள் தன்னுடைய வாழ்க்கைக் குறிக்கோளுக்குரிய கலங்கரை விளக்கமாக்கிக் கொண்டார். எவ்வாறெனில், அவருடைய குறிக்கோள் அன்றுள்ள கடுமையான அரசியல் சூழலில், ஆயுதம் ஏந்தா அறப்போர் தத்துவத்தோடு நேரடித் தொடர்புக்கேற்ற சத்தியாக்கிரகத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி, அதை ஓர் ஒப்பற்ற அரசியல் ஆயுதமாக்கி, அனைவரும் ஏற்கும் பண்டை மக்கள் இடையே நிலை நாட்டினார். இதுவே ஓர் அற்புதமன்றோ அரசியல் உலகில்?

அதனால்தான் அண்ணல் ஆங்கில அடக்கு முறைகளைப் பற்றித் தனது ‘யங் இந்தியா’ ஏட்டில் ஒருமுறை குறிப்பிடும்போது, “அடக்கப்பட்ட உணர்ச்சிகளோடு பத்திரிகைகளை நடத்துவதைவிட அவற்றை வெளியிடாமலே இருப்பது நல்லது” என்று குறிப்பிட்ட உணர்ச்சி, இளம் பத்திரிகையாளர்களுக்கான ஓர் அறிவுரை ஆகும்.

காந்தியடிகள் பத்திரிகை ஆசிரியரான பிறகு, அவரைப் பின்பற்றி, சுவடுகள் மாறாமல் பல பத்திரிகைகள் வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் வெளிவந்து, அண்ணலின் அறப்போர்களுக்கும், விடுதலைப் போர் இலட்சியங்களுக்கும் பேருதவிகளாக, படைக் கலன்களாக, பிரச்சாரக் கருவிகளாக, போராட்ட முரசுகளாக, அறிக்கை வலம்புரி சங்குகளாக ஒலி எழுப்பின! நாட்டை விழிப்புறச் செய்தன! சுதந்திர ஊது குழல்களாக அலைஓசை, எழுப்பின எனலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, விடுதலைப் போரின் வெற்றிச் சிகரமாக, அண்ணல் காந்தியடிகளின் அரசியல் வாழ்வின், இறுதிக் கட்ட போர் முரசாக, அதாவது ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கும் அடிமை இந்தியர்களுக்கும் இடையிலே நடைபெற்ற குருக்ஷேத்திரப் போர் முனையாக, 1942-ஆம் ஆண்டில், ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit india) என்ற போர்க் களம் அமைந்ததை உலகமே உணரும்.

அத்தகையப் போர் முனையின் வெங்களத்தில் பத்திரிகைகள் பல செங்களமாடிடும் எழுத்துக்களை அக்கினி அம்புகளாக எய்தன. துள்ளிச் சென்ற விடுதலைப் போர் போராட்ட வேல்கள், வெள்ளையர் ஆணவ வேர்களை வெட்டி வீழ்த்திப் பகையை அள்ளி அள்ளிக் குவித்தன.

எனவே, விடுதலைப் போர்க் காலத்தில் இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த பத்திரிகைகள் எல்லாம் ஆற்றிய பங்குகளை ஒரு தனி வரலாறாக எழுதலாம். அவ்வளவு அற்புதங்களை நமது பத்திரிகையாளர்கள் ஆற்றி உள்ளார்கள். அந்த உண்மைகள் உலக விடுதலை இயக்கங்களுக்குரிய அரிச்சுவடிகளாகும்!