இந்தியக் கலைச்செல்வம்/சிற்பக் கலையின் உத்திகள் தேர்வு

விக்கிமூலம் இலிருந்து

9
சிற்பக் கலையின் உத்திகள்
தேர்வு


மீபத்தில் நானும் எனது திண்டிவனம் கலைக் கழக அன்பர்களும் மகாபலிபுரம் போயிருந்தோம். கலைக்காகவே வாழ்ந்து, கலைப் பணியையே தனது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்த மகாமல்லன் கனவு நனவாகிய இடம் அது. அங்கே மலைகளை வெட்டிச் செதுக்கி ரதங்களை நிர்மாணித்திருக்கிறார்கள். மலைகளையே குடைந்து மண்டபங்களை ஆக்கியிருக்கிறார்கள். பெரிய பெரிய பாறைகளில் எல்லாம் பல பல உருவங்களைச் செதுக்கியிருக்கிறார்கள். கிருஷ்ண மண்டபத்திலே கோவர்த்தன கிரியைத் தூக்கி நிற்கும் கண்ணன், அவன் காலடியிலே ஒரு கறவைப் பசு, கன்று, பால் கறக்கும் மனிதன் எல்லாம் உண்டு. பகீரதன் தவத்தைச் சித்திரிக்கும் கற்பாறையிலே யானைகள், தேவர்கள், தவசிகள் ஏன்? உருத்திராக்ஷப் பூனைகள் கூடத்தான்! ஆதிசேடனாகிய பாயலில் பள்ளி கொள்ளும் பரந்தாமன் ஒருபுறம் என்றால், மஹிஷனைப் போரில் வெற்றி காணும் மஹிஷாசுரமர்த்தினி ஒருபுறம். இவை தவிர குரங்குக் குக் குரங்கு பேன் பார்த்தல், படுத்திருக்கும் மான்கள், எழுந்திருக்கும் யானைகள் இன்னும் என்னென்ன விதமாகவெல்லாமோ கல்லுருவிலே காட்சிகள். இவைகளையெல்லாம் பார்த்தால் மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்தில் இத்தனை சிற்ப உருவங்களை நிர்மாணித்த மாமல்லன், பல்லவ அரசன் நரசிம்மன் தனது கற்பனைக்கு வரம்பு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளாமலே, சிற்பிகள் நினைத்தவிதமெல்லாம் உருவங்களைச் செதுக்க அனுமதித்திருக்கிறாரோ என்றுகூடத் தோன்றலாம். உண்மை இதுதான். கலைக்குப் பொருள் பிரதானமல்ல. கலைக்கு கலை உருவமே பிரதானமென்பது தெரியும்.

வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி
மாடும் அற்புதப் பொருளாம்
வண்டி பூட்டும் கயிறும் என்றன்
மனத்துக்கு அற்புதப் பொருளாம்
பறக்கும் குருவியோடு என் உள்ளம்
பறந்து பறந்து திரியும்
கறக்கும் பசுவைச் சுற்றி அதன்
கன்று போலத் துள்ளும்
ஈயும் எனக்குத் தோழன் ஊரும்
எறும்பும் எனக்கு நேசன்
நாயும் எனக்குத் தோழன் குள்ள
நரியும் எனக்கு நேசன்

என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கவிதைக்கு உரிய பொருள்கள் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார் அல்லவா? அந்தப் பதில் ‘சிற்பத்திற்கு எது விஷயம்’ (Theme) என்ற கேள்விக்கும் சரியான பதில்தான்.

இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு நம் நாட்டுச் சிற்பிகள் எந்த எந்த உருவங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். அவர்கள் தேர்ந்தெடுத்த சிற்ப வடிவங்களுக்கு விஷயங்களை எங்கிருந்தெல்லாம் பெற்றிருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்ளலாம்.

சப்தத்தின் பாஷை சங்கீதம் என்பது போல வடிவத்தின் பாஷை சிற்பம். நாகரிகமும் பண்பாடும் மனிதனிடம் தோன்ற ஆரம்பித்த நாளிலிருந்தே அவன் எண்ணங்களில் தோன்றும் பொருட்களுக்கு அவன் வடிவம் அமைக்க முனைந்திருக்கிறான். முதல் முதலில் மண்ணைக்கொண்டே வடிவங்களை உருவாக்கியிருக்கிறான். வீடுகளில் தினசரி உபயோகப்படும் சாதாரணப் பண்டங்களிலிருந்து வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத அந்தப் பரம்பொருள் அவனது கைகளில் உருவாகியிருக்கின்றது. வீரர்களுக்கு நிலையங்கள், தெய்வங்களுக்குக் கோயில்கள், வாழ்வதற்கு வீடுகள், வெற்றிக்குச் சின்னங்கள் எல்லாம் கல்லாலும் மண்ணாலும் பொன்னாலும் சிற்பிகளால் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. எல்லா இடங்களிலும் சிற்ப வடிவங்களும் அவைகளுக்கெல்லாம் தக்க விஷயங்களும் சிற்பிகளின் சிந்தனைகளில் உதயமாகியிருக்கின்றன.

நமது பண்பாட்டிற்குப் பக்க பலமாக இருப்பவை நமது சமய உண்மைகள். கலை, இலக்கியம், தத்துவம் என்பவை மட்டுமல்ல. நமது சமூக அரசியல் பொருளாதாரம் முதலியவைகள் கூட சமய அடிப்படையின் மீதுதான் வளர்ந்து வந்திருக்கின்றன. அதனால் இந்தியச் சிற்பத்தின் அடிப்படையும் சமயச் சார்பு உடையதாகவேதான் இருந்திருக்கிறது. சம யமோ வேதங்கள், உபநிஷதங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள் மூலமாக நமக்கு விளக்கப்பட்டிருக்கின்றது. வேத காலத்திலே கடவுளர்களுக்கெல்லாம் விக்கிரகங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன. வேத காலத்துக்கு முந்திய சிந்துவெளி நாகரிகத்தில் கூட சுட்ட மண்ணில் உருவங்களும், கல்லால் ஆக்கிய முத்திரைகளும் இருக்கின்றன என்றும், அவைகளில் மரங்களும், விலங்குகளும் ஏன், நாகங்களும் கூடப் பொறிக்கப்பட்டிருந்தன என்றும் அறிகிறோம்.

வேத காலத்திற்குப் பின் மேல் நாட்டிலே கிரேக்கர்களது கலையும், நாகரிகமும் உச்சஸ்தானத்தில் இருக்கும்போது, இந்தியாவிலும் மகத நாட்டரசர் சந்திரகுப்த மெளரியச் சக்கரவர்த்தி, அவருடைய பேரன் அசோகர் எல்லோரும் சிற்பக் கலையை வளர்ப்பதில் சிறந்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். இன்று இந்திய சாம்ராஜ்யத்தின் சின்னமாக விளங்கும் அசோக சக்கரமும், சிம்ம முத்திரையுமே சிற்பக் கலைக்கு விஷயத்தை எப்படித் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் அந்தக் காலத்து அரசர்களும், சிற்பிகளும் என்பதை விளக்குகின்றன அல்லவா?

இந்தியச் சிற்பங்களுக்கு விஷயம், முக்கியமாக தெய்வ விக்கிரகங்களாகவும் அவைகளுக்கு உரிய நிலையங்களாகவும் இருந்திருக்கின்றன. இந்துக்கள், பெளத்தர்கள், ஜைனர்கள் எல்லோரும் அவரவர் வணங்கும் மூர்த்திகளையும் அம்மூர்த்திகளுக்கு உரிய ஸ்தூபங்களையும் கல்லாலும் மண்ணாலும் கட்டியிருக்கிறார்கள். இப்படிக் கட்டிய ஸ்தூபங்களில் முதன்மையானது பெளத்தர்கள் நிர்மாணித்த பர்ஹுத் ஸ்தூபாதான். அந்த ஸ்தூபாவில் உள்ள கல் கிராதிகளில் செய்துள்ள நுணுக்க வேலைப்பாடு அதி அற்புதமானவை. புத்த பகவான் அருள் ஞானம் பெற்ற போதிமரத்தைச் சுற்றி அமைத்த அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற சாஞ்சி (Sanchi) ஸ்தூபாவின் வாயில்களில்தான் எவ்வளவு அழகான சிற்பக் கிராதிகள், தோரணங்கள், வடிவங்கள்! லாவகமாகக் கிராதிகளை ஏந்தி நிற்கும் பெண்களும் உருவாகிவிடுகிறார்கள் அந்த ஸ்தூபாவின் வாயில்களிலே.

இப்படி புத்த பகவானுக்கு ஸ்தூபாக்களும், விகாரங்களும் தோன்ற ஆரம்பித்த பின் அங்கு புத்த பிரானையே கடவுளாகப் பிரதிஷ்டை செய்ய முனைந்திருக்கிறார்கள். மனிதன் கடைத்தேற முத்தியடைய சிறந்த வழிகாட்டியாயிருந்த அந்த மகாபுருஷனது வடிவத்தை உருவாக்க சிற்பி தன்னையே ஒரு சித்த புருஷனாக ஆக்கிக்கொள்ள வேண்டியதிருக்கிறது, அவன் வடித்த உருவத்தில் தசைக்கும், மாமிசத்திற்கும் முக்கியத்துவம் இருக்கவில்லை. லக்ஷியத்தையே அல்லவா உருவாக்குகிறான் அவன் அந்த சிலை உருவத்திலே. இதைத் தெரிந்துதானே, ‘சமய சாதனையால் இறைவனது தியாகத்தில் ஊறின ஒருவனே இறைவனது திருவுருவைக் காண முடியும், அப்படிப் பட்டவனாலேயே அவன் உள்ளத்தில் கண்ட, உருவின்றி நின்ற உருவை கருவின்றி நின்ற உருவை உருவாக்கவும் முடியும்’ என்று சுக்கிரநீதி சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏதோ அழகு நிறைந்த ஒரு உருவத்தை உருவாக்குவது அவர்கள் நோக்கமல்ல. தெய்வீக உருவைக் கற்பனை பண்ணுவதும், அப்படிக் கற்பனை பண்ண நீண்ட நாட்கள் இறைவன் தியானத்திலே தவம் கிடப்பதும்தான் சிற்பிகளின் காரியமாக இருந்திருக்கிறது. இப்படி சிற்பிகள் சிந்தனை செய்து சிந்தனை செய்து, தியானித்துத் தியானித்துத்தான் உலகம் யாவையும் ஆக்கி நிலைபெற நிறுத்தி அழிக்கும் இறைவனைக் கற்பனை பண்ணியிருக்கிறார்கள். கற்பனையில் உருவான கடவுளுக்குப் பலப்பல உருவங்கள் அமைத்திருக்கிறார்கள். சமயச் சார்புடன் அழகுணர்ச்சியும் அவர்களுக்குத் துணை புரிந்திருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டவனாய் இருந்த சிற்பி உணர்ச்சியின் வடிவங்களாகத் திருவுருவங்களை அமைத்திருக்கிறான். சமயத்துடன் உணர்ச்சியும் சேர்ந்து எத்தனை எத்தனையோ ரஸபாவங்களை உருவாக்கியிருக்கின்றன. எண்ணற்ற தெய்வ வடிவங்கள் இந்துக்களின் கோயில்களில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனந்தம் ஆடரங்கு
ஆனநதம் பாடலகள்
ஆனந்தம் பல்லியம்
ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தமாக
அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக்
கூத்துக் கந்தானுக்கே!

என்று திருமூலர் பாடியபடி ஆனந்த வெறியிலே, உணர்ச்சியிலே உருவானதுதான் நடராஜனது சிலை விக்கிரகம். ஆம், சமயம் சாஸ்திரம் கலை எல்லாம் ஒன்றுகூடும் ஒரு நிலையமாக நடராஜ விக்கிரகம் என்றும் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது நம்மிடையே.

தெய்வீக உருவங்களை உருவாக்க ராமாயண, பாரத இதிகாசங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. இதிகாசங்களிலே வருகின்ற வீரர்கள் எல்லாம் தெய் வீக புருஷர்கள். தெய்வ அம்சம் நிறைந்தவர்கள். நாட்டின் லட்சிய புருஷர்கள். வீரர்களும் அவர்களது வீரச் செயல்களும் பிற்காலத்து மக்களுக்குத் தக்க ஆதர்சமாக இருக்கவேண்டுமல்லவா? அதற்காக இந்த இதிகாசங்களிலுள்ள பலப்பல சம்பவங்கள் பலப்பல முறையில் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. பல்லவ அரசர்களின் சிற்பங்களில் எல்லாம் பகீரதன் தவம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கண்ணனும் அவனுடைய லீலைகளும், ராமனும் அவனுடைய வெற்றிகளும், பஞ்சபாண்டவர்களும் அவர்களுடைய யாத்திரைகளும் எப்படி எப்படியெல்லாமோ உருவாகியிருக்கின்றன. எவ்வளவுதான் இதிகாசக் கதைகள் சிற்பிகளின் மனதைக் கவர்ந்தாலும் இறைவன் திருவுருவை அமைக்க இவர்கள் காட்டிய சிரத்தை இந்தச் சித்திரங்களை உருவாக்குவதில் காட்டப்படவில்லை.

‘இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவன் இறைவன்’ என்று எழுதிக்காட்ட ஒண்ணாத இறைவனுடைய பலப்பல மூர்த்தங்களை, அசாதாரணமான தெய்வீகத்தை எடுத்துக்காட்டத் தலைகளை அதிகமாக்கியிருக்கிறார்கள். கை கால்களை அதிகமாக்கியிருக்கிறார்கள். பம்பாயை அடுத்த எலிபெண்டா (Elephanta) குகைகளில் உள்ள திரிமூர்த்தியைத்தான் பாருங்களேன். சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம் எனும் மூன்று சக்திகளையும் காட்ட மூன்று முகங்கள், செய்யும் செயலுக்கேற்ற மகத்தான கம்பீரம் எல்லாவற்றையும் அல்லவா அந்தச் சிலையில் பார்க்கிறோம். இந்தச் சிலையைப் பார்த்து இதைச் செய்த சிற்பிக்கு நிர்மாண சாஸ்திர அறிவு இல்லை என்று முடிவு கட்டிவிட முடியுமா என்ன? வேண்டுமென்றே தான் இந்தத் தெய்வீக சிலை உருவங்களில் தசை உறுப்புக்கள் அதிகமாக எடுத்துக்காட்டப்படவில்லை. எல்லோரா குகையிலுள்ள பைரவர் சிலையைப் பார்த்தால் முறுக்கேறிய தசையையும் நரம்புகளையும் காட்டாமலேயே காலபைரவரின் கோரத் தாண்டவத்தை நாம் உணரும்படி செய்துவிடுகிறான் சிற்பி. கைகால்களின் அமைப்பும் முகபாவமும் அத்தகைய ஒரு உணர்ச்சியை நம் உள்ளத்தில் உண்டாக்கிவிடுகின்றன. இதுதானே கலை?

சிறந்த அறிவின் சின்னம் சாந்தமூர்த்தி புத்த பெருமானையும், ஆனந்தத் தாண்டவம் புரியும் அந்த அற்புத நடராசனையும், கோரத்துக்கு எடுத்துக்காட்டாயிருக்கும் காலபைரவனையும் உருவாக்கிய சிற்பிகளே அழகின் இருப்பிடமாகிய பெண்மையையும் உருவாக்கியிருக்கிறார்கள். தெய்வீக உருவங்களுக்கு அடுத்தபடியாக சிற்பங்களுக்கு விஷயமாய் அமைந்தவள் பெண்தான். அவளுடைய அழகு, அவளுடைய மோகன உருவம், அவளுடைய உணர்ச்சி, மென்மை, காதல், மாயை எல்லாம்தான் சிற்பிகளுக்கு விஷயதானம் அளித்திருக்கின்றன. துடியிடையும், விம்மும் மார்பகமும் கொண்ட அழகிகளது உருவங்கள் நல்ல லலிதம் உடைய வடிவங்களாக உருவாகியிருக்கின்றன. அந்த அங்க விளைவுகளிலே காணுகின்ற லலிதமும் லயமும் பார்ப்பவர் உள்ளத்தை பரவசமாக்கியிருக்கின்றன. தெய்வ மகளிர் அம்பிகைகள் எல்லாம் வடிவங்கள் பெற்றிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது அங்கங்களிலே துள்ளி ஓடுகின்ற உணர்ச்சியைக் காட்டி மனிதனைத் துடிதுடிக்கச் செய்திருக்கிறார்கள். கைவழி நயனம் செல்லும்படியும் கண்வழி மனம் செல்லும்படியும் அவர்களது கைக ளில் பதித்திருக்கும் முத்திரைகள் அச்சிற்ப உருவங்களுக்கே ஒரு தனிச்சிறப்பைக் கொடுக்கின்றன. இலக்கியமும், இசையும், நடனமும் நாட்டியமும் இத்தகைய சிற்ப உருவங்களால்தான் நிலைபெற்றிருக்கின்றன.

மண்ணையும், விண்ணையும், மக்களையும், மாக்களையும், அறிஞனையும், தெய்வத்தையும், மனிதனையும், பெண்ணையும் விஷயங்களாக அமைத்தே இந்தச் சிற்பி தன்னுடைய அதி அற்புதமான சிற்ப உருவங்களை நிர்மாணித்திருக்கிறான். அப்படி அவன் உருவாக்குவதற்கு இலக்கியங்களும், இதிகாசங்களும், சரித்திரங்களும் ஆகமங்களும் துணை புரிந்திருக்கின்றன. கலை உணர்ச்சி நிறைந்த கண் படைத்த சிற்பிகளின் உள்ளத்தில் உருவான சிற்பங்களே இன்று நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் காட்சி அளிக்கின்றன. இந்தச் சிற்பிகள் கல்லால் இழைத்த காவியங்களே நமது கோயில்கள், அங்குள்ள மூர்த்திகள். அந்த மூர்த்திகளின் முன் நாம் தலை வணங்குகிறோம். அதன் மூலமாக அந்தத் தெய்வீகச் சிற்பிகளுக்குமே நாம் வணக்கம் செலுத்துகிறோம்!