இந்தியக் கலைச்செல்வம்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து
முன்னுரை
டாக்டர் இரா,நாகசாமி எம்.ஏ.
(தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர்)

ரு நாட்டில் கலை சிறந்து விளங்கியது என்றால் அந்நாட்டு மக்கள் கலையறிவு நிரம்பித் திகழ்ந்தார்கள் என்று தான் பொருள். கலைத்திறன் உடையவர்தாமே கலையைப் போற்ற முடியும்? ஒரு நாட்டு வரலாற்றில் எப்பொழுதும் கலையறிவு நிரம்பி நிற்கும் என்பதற்கு இல்லை. ஒரு காலத்தே ஓங்கி நிற்கும். பிற்காலத்தே குறைந்தும் நிற்கும். அதுபோன்ற காலங்களில் சிறந்த கலா ரசிகர் தோன்றி மக்களிடையே கலை ஆர்வத்தை அதிகரிக்க முனைந்தால்தான் கலை மறுமலர்ச்சி அடையும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சிற்பக் கலையிலும், கட்டிடக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகச் சிலரே இருந்தனர் என்றுதான் கொள்ள வேண்டும். திரு, ஆனந்த குமாரசாமி டி.ஏ. கோபிநாதராவ் ஷோவோதுபரே, போன்ற தமிழ்க் கலைகட்கு தொண்டாற்றிய தலைசிறந்த பெரியார்கள் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் எழுதியவை எல்லாம் ஆங்கிலத்தில் இருந்ததால் அவர்கள் உலகப் புகழ் பெற்றனர். ஆனால், தமிழ் பேசும் மக்கள் அவற்றை நன்கு அறிந்து சிற்பச் செல்வங்களை போற்றும் வகையில் தமிழில் எழுந்த நூல்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். கலைகளில் இயற்கையாக எழுந்த ஈடுபாடும், தகைமை சான்ற புலவர்களின் இலக்கியங்களை கற்று பண்பட்ட உள்ளமும், கலைகளைச் சென்று கண்டு, கண்டு இன்புறும் ஏற்றமும், தான் கண்ட இன்பத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் எழுத்து ஆற்றலும் உள்ள ஒருவரால் தான் கலை ஆர்வத்தைப் பிறரிடம் தட்டி எழுப்ப முடியும், இவையனைத்தும் ஒருங்கே பெற்று, செயலும் ஆற்றிய தமிழ் தாயின் தவப்புதல்வர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் ஒருவரே.

கலை வரலாறு என்பது புதியதொரு இயக்கம். மேலை நாடுகளில் இவ்வியக்கம் மிகச் சிறந்த நிலையை அடைந்துள்ளது. எண்ணற்ற நூல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. தமிழ் மொழியில் கலை வரலாற்றைக் கூறும் நூல்கள் எவ்வளவு இருக்கின்றன என்றால் மிகச் சிலவே. அவற்றிலும் சிறந்தவை எவை என்றால் திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களது நூல்களே எனினும் அது மிகையாகாது. எண்ணற்ற தமிழ் மக்களின் மனத்தில் கலை இன்பத்தை ரசிக்கப் புகட்டியவர் அவர். அவர் எழுதிய கட்டுரைகளை ஆர்வத்தோடு படித்த எண்ணற்ற தமிழ் இதயங்கள் இதை நன்கு அறியும். அவர் எழுத்தில் திறன் உண்டு; தெளிவு உண்டு; சுவை உண்டு; கவிதை உண்டு. நாவலாசிரியருக்கும், வரலாற்று ஆசிரியருக்கும் வேறுபாடு உண்டு.

நாவலாசிரியர் கற்பனைச் சிகரத்தையே எட்டி மக்களை மகிழ்விக்கலாம். வரலாற்று ஆசிரியர் வரலாற்றுக்குப் புறம்பானதை எழுத முடியாது; எழுதவும் கூடாது. ஆதலின் வரலாற்று நூல்கள் சுவையுள்ள நூல்களாக அமைவது கடினம். திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களுடைய நூல்கள் கலை வரலாற்றை சித்திரிப்பவையாயிருந்த போதிலும் மிகவும் சுவையாக எழுதப் பெற்றவை. எவ்வளவோ நூற்றாண்டு களுக்கு முன்னர் இவற்றை தோற்றுவித்தவர்களின் உயிர்த் துடிப்பை நம் கண்முன் கொணர்ந்து காட்டும் ஆற்றல் பெற்றவை அக்கட்டுரைகள்.

தன் அண்மையில் உள்ள கலைப் படைப்புகளை கண்டு ரசிக்கும் ஆற்றல் பெற்றவன்தான் வேறு பல நாட்டு கலைகளையும் கண்டு போற்ற முடியும். அவன்தான் இடத்தையும், காலத்தையும், மொழியையும் கடந்து நிற்க முடியும். பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் தமிழகக் கலைச் செல்வங்கள் அனைத்தும் கண்டு இன்புற்றவர். தமிழ் இலக்கியங்களின் வாயிலாகவே கண்டு போற்றியவர். ஆதலின் தமிழ்நாட்டுக்கு அப்பாலுள்ள பல பகுதிகளில் உள்ள கலைகளையும், ஆர்வத்தோடு கண்டு போற்றியிருக்கிறார். ஆதலின்தான்,

பாரத பூமி பழம் பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்

என்ற அமரகவி பாரதியின் வாக்கைக் கோலாகக் கொண்டு ஆங்காங்கு மலர்ந்த கலைகளை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். 'தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றி இன்று அதிகம் பேசும் நாம், எவ்வளவோ காலத்திற்கு முன்னாலேயே சமயம் மூலம், கலை மூலம் அந்த ஒருமைப்பாட்டை உருவாக்க நமது கலைஞர்களும் அவர்களை ஆதரித்த மன்னர்களும் முயன்றிருக்கிறார்கள் என்று அறிகிறபோது மிக்கதொரு உவகையே அடைகிறோம்' என்று கூறுகிறார்.

இந்நூலில், பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்பெறும் சிற்பச் செல்வங்களைப் பற்றி அவர் வானொலியில் பேசியவை கட்டுரைகளாக இடம் பெறுகின்றன. இக்கட்டுரைகளைப் படிக்கும்போது நம்மை நேரே ஆங்காங்கே அழைத்துச் சென்று காட்டுவது போலவே தோன்றுகிறது. கட்டுரைகளின் ஊடே பலபல அரிய உண்மைகளை எடுத்துச் சொல்லிச் செல்கின்றார். “பாரத சமுதாயத்தின் சிறந்த கலைகள், சிற்பம், ஓவியம், நாட்டியம் என்பவைதாம். இவையும், - இவற்றோடு ஒன்றிய கவிதையும் இசையும் சமயச் சார்புடையவைகளாகவே வளர்ந்திருக்கின்றன” என்பர். சிற்பக் கலை, சித்திரம், நடனம், சங்கீதம், கவிதை இவை ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்பவை என்பதற்கு அவர் கூறும் கதைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது. சுக்கிர நீதி நூலை மேற்கோள் காட்டி தெய்வீகத் திருவுருவங்களும், பெண்மையும் எவ்வாறு சிற்பத்தில் சிறந்த நிலை வகிக்கின்றன என்று கூறுவது அவர் ஆற்றலைக் காட்டுகிறது. சிற்பத்தையும் காட்டி, கம்பநாடனின்,

குஞ்சரம் அனைய வீரன்
குலவு தோள் தழுவிக் கொண்டாள்

என்ற சொல்லையும் காட்டுவது நம் மனதைவிட்டு என்றுமே அகலாது. அஜந்தா, எல்லோரா, கஜுரஹோ, புவனேச்வரம் முதலிய பல இடங்களில் சிறந்த கலைகளை எல்லாம் எவ்வளவு இனிமையாகக் கூறிச் செல்கின்றார். அடடா இன்னும் எவ்வளவு நூல்கள் இப்பெருந்தகையிடமிருந்து தோன்றி தமிழை வளமுறச் செய்திருக்கும். ஆதலின் அன்றோ அன்று முதல் இன்றுவரை, ஏன் - என்றென்றுமே காலனை மக்கள் கொடியவன் என்பர்.

பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் இரண்டு தலை சிறந்த பணியை தமிழகத்திற்கு செய்திருக்கிறார் என்பது திண்ணம். சிறந்த கலை நூல்களை தமிழில் எழுதி தமிழ் மக்கள் உள்ளத்தில் கலை எழுச்சியை ஏற்படுத்தியது ஒன்று. கலை வளர்த்த தஞ்சையில், தமிழகத்திற்கு புகழ் தேடித்தரும் கலைக்கூடம் அமைத்தது இரண்டு. இவ்விரு பணிகளுக்கும் தமிழகம் அவரை என்றென்றும் வாழ்த் தும்.

தமிழகக் கலைகளை உலக மக்களுக்கு எடுத்துக் கூறும் வல்லமை வேண்டுமென்றால், ஏன், எமது முன்னோர் எமக்கீந்த செல்வங்கள் என்று பெருமிதத்தோடு இவற்றை அறிய வேண்டுமென்றால், தமிழக இளைஞர்கள் பாஸ்கரத் தொண்டைமான் அவர்களுடைய நூல்களை படிக்கட்டும். அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செய்ய ஆற்றல் மிகும் என்பதில் ஐயமில்லை.

இரா,நாகசாமி,

சென்னை,

தமிழ்நாடு அரசு தொல் பொருள்

19.9.70

ஆய்வுத்துறை இயக்குநர்.