இந்தியப் பெருங்கடல்/அமைப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
1. அமைப்பு


கடல்கள்

ஐம்பெருங் கடல்களால் சூழப்பட்டதே நாம் வாழும் உலகம். அவை முறையே பசிபிக் கடல், இந்தியக் கடல், அட்லாண்டிக் கடல், ஆர்க்டிக் கடல், அண்டார்க்டிக் கடல் ஆகும்.

இருப்பிடம்

உலகில் மூன்றாவது பெரிய கடல் இந்தியக் கடல். அதற்கு மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே அரேபியா, இந்தியா, மலேயா ஆகிய தீபகற்பங்களும்; கிழக்கே ஆஸ்திரேலியாவும் உள்ளன. அதன் தென்பகுதி அண்டார்க்டிக் கடலோடு கலக்கிறது. பசிபிக், அட்லாண்டிக் கடல்கள் போலவே, ஆர்க்டிக் கடலோடு அது தொடர்பு கொள்ளவில்லை.

இந்தியக் கடல் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று கண்டங்களுக்கிடையில் உள்ளது. அதன் வடபகுதி இந்தியாவால் பிரிக்கப்பட்டுள்ளது. அது தோற்றத்தில் நெருக்கமாய் அமைந்த கடல். இங்தோனேஷியாவிலிருந்து ஆப்பிரிக்காவரை பரவியுள்ளது. அது பருவக் காற்றுகளுக்குப் பிறப்பிடம்.

தோற்றம்

அதன் பரப்பு கிட்டத்தட்ட 3 கோடி சதுர மைல்கள்; சராசரி ஆழம் 15,000 அடி. அது உல-

1–68

கின் மேற்பரப்பில் 14 பங்கை அடைத்துக் கொண்டிருக்கிறது. பசிபிக், அட்லாண்டிக் கடல்கள் போன்று அவ்வளவு பெரியதோ ஆழமானதோ அல்ல அது. அது 20 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.

துணைக் கடல்கள்

அதற்குக் கிழக்கிலும் மேற்கிலும் அரபிக் கடலும் வங்காள விரிகுடாவும் உள்ளன. செங் கடலும் பாரசீக நீரோட்டமும் அதன் உள்நாட்டுக் கடல்கள். உலகிலுள்ள பெரும் சிறு கடல்கள் அதில் கலக்கின்றன. இமயமலையில் உருகும் பனி எல்லாம் அதில் கலக்கின்றது. சிந்து, பிரம புத்திரா, கங்கை, ஐராவதி, காவிரி முதலிய பேராறுகளும் அதில் கலக்கின்றன. அதற்குப் பெரிய வடிநிலம் உண்டு.

தீவுகள்

மடகாஸ்கர், இலங்கை முதலியவை அதன் பெரும் கண்டத் தீவுகள். இலட்சத் தீவுகள், மாலத் தீவுகள் அதன் முதன்மையான கடல் தீவுகள். பொதுவாக, அதன் தீவுகள் பசிபிக் கடலின் தீவுகள் போலவே, எரி மலையாலும் பவழத்தாலும் ஆனவை.

மலைகள்

இந்தியக் கடலில் குண்டுங்குழிகளும், உயர்ந்த மலைத் தொடர்களும், ஆழமான அகழிகளும் காணப்படுகின்றன.

சிறப்பாக, அதில் காணப்படும் பவழ மலைத் தொடர்கள் சிக்கலான அமைப்புடையவை. அதன் தென்கிழக்கு, தென்மேற்குப் பகுதிகளைத் தவிர, எஞ்சியவை நிலத் தொகுதியால் சூழப் பட்டவை. அதன் தென் கோடியில் பனிக்கட்டிகளும் பனிப்பாறைகளும் காணப்படுகின்றன.

நீரோட்டங்கள்

இந்தியக் கடலில் காணப்படும் நீரொட்டங்கள் பசிபிக், அட்லாண்டிக் கடல்களில் காணப்படும் நீரோட்டங்கள் போன்று அவ்வளவு விரைவும், வலிமையும் கொண்டவை அல்ல. அதன் மேற்பரப்பு கிழக்காகச் சாய்ந்துள்ளது. மற்றக் கடல்கள் மேற்காகச் சாய்ந்துள்ளன. ஒரு கோடியில் மட்டும் திறந்துள்ள ஒரே பெருங்கடல் இதுவே.

அதில் காணப்படும் முக்கிய நீரோட்டங்களாவன: நிலநடுக்கோட்டு நீரோட்டம், மொசாம் பிகுயு நீரோட்டம், அகுலாஸ் நீரோட்டம்.

வளம்

இந்தியக் கடலின் இயற்கை வளம் மதிப்பிடற்கரியது. உலகக் கடல்களிலேயே அதிக அளவுக்குப் பலவகை உயிர்ப் பொருள்கள் உள்ள கடல் இதுவாகும். அதன் மீன் வளம் நிறைவான பொருள் வளத்தை அளிக்கவல்லது. தவிர, அதன் கனிவளமும் மதிப்பிடற்கரியதே. அதன் வாணிப வளமும் வரலாற்றுச் சிறப்புடையதே. வெடிப்பு

நிலவுலகின் மேற்பரப்பு 45,000 மைல் தொலைவிற்கு வெடித்துள்ளது என அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வெடிப்பு அட்லாண்டிக் கடலைக் கடந்து ஆப்பிரிக்கா வரை செல்கிறது. இந்தியக் கடலுக்குள்ளும் அது தலைகாட்டுகிறது.

இடர்கள்

இந்தியக் கடலின் கரைப்பகுதிகளில் பெரும்பான்மை வாழ்வதற்கு ஏற்றதல்ல. அங்குப்பயங்கர விலங்குகளும், கொடிய நோய்களும் உள்ளன. அதில் அலைகளின் பெரும்எழுச்சி வீழ்ச்சிகளும், பயங்கர நீரோட்டங்களும் உள்ளன. அங்குத் தொடர்ந்து வலுவான காற்றுகள் அடித்தவண்ணம் உள்ளன.

இந்தியக்கடல் புயல்களுக்கும் நிலைக்களமாக உள்ளது. அதில் தீங்குதரும் கல்மீன், கொட்டும் மீன், சுறா முதலியவை வாழ்கின்றன. இவ்வாறு அது இடர்களும் தீங்குகளும் நிறைந்து காணப்படுகிறது.

வெப்பநிலை

இந்தியக் கடல் ஆழமான கடல் மட்டுமல்ல; வெப்பக் கடலுமாகும். அதன் மேற்பரப்பு வெப்பநிலை 90°F அளவுக்கு உயருகின்றது. 12,000 அடி ஆழத்தில் அதன் சீரான வெப்பநிலை 35° F. உப்புத்தன்மை

இந்தியக் கடலும் உப்பு வளம் நிறைந்ததே. அவ்வளம் நம் நாட்டின் பொருள் வளத்தை ஓரளவுக்குப் பெருக்கவல்லது.

கப்பல் ஆராய்ச்சி

சோவியத்து அறிவியலார் அல்லது விஞ்ஞானிகள் விட்யாஸ் என்னுங் கப்பலில் இந்தியக் கடலின் நிலக் காந்தத்தின் மறைவை அறிய 1959ஆம் ஆண்டு வந்தனர். தங்கள் ஆய்வுக்கு வங்காள விரிகுடாவில் மறைவான ஒர் இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆய்வின் நோக்கம் இந்தியக் கடலின் நிலக்காந்தக் களத்தை அறிவதே.

சோவியத்து அறிவியலார் இந்தியக் கடலின் மையப் பகுதியில் 20,000 மைலுக்கு மேல் அளவை செய்துள்ளனர். இதனால் சில இன்றியமையாச் செய்திகள் திரட்டப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு இந்தியக் கடலின் அமைப்பு, வரலாறு முதலியவற்றை நில அமைப்பு நூல் முறையில் அறிய வாய்ப்பு ஏற்படும்.

அவர்கள் தங்கள் ஆய்வுகளிலிருந்து தெரிவித்திருக்கும் முடிவுகளாவன: இந்தியக் கடலின் தரை மிக அரிய அமைப்பை உடையது. கிழக்கு மேற்குப் பகுதிகளில் அதன் அமைப்பு பெருமளவுக்கு மாறுபடுகிறது. தரை 8.15 மீட்டர் நீளத்திற்கு இடையே உள்ள நான்கு உட்பகுதிகளைக் கொண்டுள்ளது. உட்பகுதிகளில் மீளும் மாற்றங்கள் காணப்படுகின்றன.

அவர்கள் மேற்கொண்ட நிலநடுக்க உற்று நோக்கல்கள் வெளிப்படுத்துவன:- இந்தியக் கடலில் உள்ள தளர்ச்சியான படிவுகளின் தடிமன் 100 மீட்டரிலிருந்து 200 மீட்டர் வரை உள்ளது.

வாணிப வழி

தீவுக் கூட்டங்கள் நிறைய இருப்பினும் கப்பல் போக்கு வரவிற்கு இந்தியக் கடல் மிகவும் பயன்படுகிறது. சிங்கப்பூர், பம்பாய், கொழும்பு, சென்னை முதலியவை அதன் முதன்மையான துறைமுகங்கள் ஆகும்.

1869இல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டபின் அதன் வாணிபம் பெரிய அளவில் உள்ளது. அதன் சிறந்த வாணிபப் பகுதியில் சூயஸ் கால்வாய் தொடர்பு கொள்கிறது. இக்கால்வாய் திறக்கப்பட்டவுடன் நன்னம்பிக்கை முனை வழியாகக் கப்பல்கள் செல்லுதல் அறவே நின்றுவிட்டது. சூயஸ் கால்வாய் வழியாகச் செல்வது குறுக்கு வழியாகும். வழியின் தொலைவு நன்னம்பிக்கை முனையின் வழியாகச் செல்வதைக் காட்டிலும் 5000 மைல்கள் குறையும். இதனால் தற்கால வாணிபம் ஓங்கியுள்ளது.

உலகிலுள்ள மிகப் பெரிய வாணிப வழிகளில் ஒன்றாக இந்தியக் கடல் உள்ளது. பண்டைக் காலத்தில் இக்கடல் வழியாக இந்தியாவிலிருந்து எகிப்து, மெசப்படோமியா, கிழக்கு மையத்தரைக் கடல் நாடுகள் ஆகியவற்றுடன் வாணிபம் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் காட்டிலிருந்து மயில் தோகை, அகில் முதலிய பொருள்கள் பாபிலோனியா சென்றன என்று கிறித்துவ மறையான பைபிள் தெரிவிக்கிறது. தமிழகத்திலிருந்து பலவகைப் பொருள்கள் உரோமாபுரிக்குச் சென்றதாகத் தமிழ் நூல்களும்; உரோம ஆசிரியர் பிளினியின் நூல்களும் கூறுகின்றன. யவனர்களாகிய கிரேக்கர்கள் காவிரிப்பூம்பட்டினம் முதலிய தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து வாணிபம் செய்தனர் என்றும் பைந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. தென்னிந்தியாவிற்கும் கடாரம் என்னும் பர்மாவுக்கும் வாணிபத் தொடர்பு இருந்ததாகப் பட்டினப்பாலை கூறுகிறது.

கிறித்துவக் காலத்தின் தொடக்கத்தில் மேனாட்டுக் கப்பல்கள் இந்தியக் கடல் வழியாகச் சீனாவிற்குச் சென்றன. சீனக் கப்பல்கள் அரேபியாவிற்குச் சென்றன.

கி. பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்து சற்றேறக் குறைய ஆயிரம் ஆண்டுகள் சீனாவிற்கும் அரேபியாவுக்கும் வாணிபம் சிறப்பாக நடைபெற்றது.

15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீனக் கப்பற் படைத் தலைவர், செங்-ஹோஸ் என்பவருடன் இந்தியா, அரேபியா முதலிய நாடுகளில் தம் அரசருக்காக நவரத்தினங்கள் வாங்க இந்தியாவிற்கு வந்தார். அவருக்குப் பின் போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் முதலிய மேனாட்டார் இந்தியாவிற்கு வாணிபம் செய்ய வந்தனர்.

இன்று இந்தியக் கடல் மிகப்பெரிய கடல் வழியாக உள்ளது. இதனால் இந்தியாவிலும், அதன் அருகிலுள்ள நாடுகளிலும் மிகப்பெரிய துறைமுகங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து தானியங்கள், மலைத்தோட்டப் பொருள்கள், தாதுப் பொருள்கள், கச்சாப் பொருள்கள் முதலியவை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியக் கடல் இந்தியாவிற்கு இயற்கை அரணாகவும் திகழ்கிறது..