இந்தியப் பெருங்கடல்/வரலாறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. வரலாறு

முறையான ஆராய்ச்சி

இந்தியக் கடல் வாணிப வழியாக நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், அது முறையாக இன்னும் ஆராயப்படவில்லை. 1873ஆம் ஆண்டிலிருந்து இருபதிற்கு மேற்பட்ட கப்பல்கள் கடல் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளன. ஆனால், அவற்றில் ஒன்றாவது இந்தியக் கடலை முறையாகவும் விரிவாகவும் ஆராயவில்லை.

ஊக்கம் பிறத்தல்

இந்தியக் கடலை ஆராயும் ஊக்கம் முதன் முதலாக 1881ஆம் ஆண்டு பிறந்தது. இவ்வாண்டில் எச். எம். ஐ. எஸ். இன்வெஸ்டிகேட்டர் என்னுங் கப்பல் இந்தியக் கடற்கரையின் நீர்ப் பகுதிகளை அளவையிட விடப்பட்டது.

1885-1887இல் அலாக் என்பார் மேற்கூறிய கப்பலில் இந்தியக் கடற் பகுதிகளைச் சுற்றிச் சென்றார். அவற்றிலுள்ள உயிர் வகைகளைப் பற்றிப் பயனுள்ள செய்திகளைத் திரட்டி 1888இல் ஓர் அரிய நூல் வெளியிட்டார். அதன் பெயர் ‘இந்தியக் கடற் பகுதிகளில் ஓர் இயற்கை நூல் அறிஞன்’ என்பதாகும்.

ஸ்வெல் என்பார் அதே கப்பலில் வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகியவற்றில் பல உற்று நோக்கல்கள் செய்தார். மேற்கொள்ளப்பட்ட உற்று நோக்கல்கள் இரசாயன, வானிலைத் தொடர்பானவை. அவற்றின் முடிவுகளை ஆசிய அரசர் கழக (Royal Asiatic Society) வெளியீடுக்களில் 1925-38ஆம் ஆண்டுகளுக்கிடையே வெளியிட்டார்.

அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படை அறிவைத் தெளிவாக்கின.

மைய அரசின் முயற்சி

இந்தியக் கடற் பகுதிகளில் மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட, 1947இல் முயற்சி தொடங்கிற்று. இவ்வாண்டில் மைய அரசினர் இராமேசுவரத்திற்கு அருகிலுள்ள மண்டபம் என்னுமிடத்தில் ஓர் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவினர். இது கடல் நூல் மைய மீன் ஆராய்ச்சி நிலையமாகும். இதற்கு இந்தியா முழுதும் கிளைகள் உள்ளன. இந்நிலையம் கடல் மீன்களைப்பற்றி ஆராய்ச்சி நடத்திய வண்ணம் உள்ளது.

மற்ற நிலையங்கள்

1952இல் ஆந்திரப் பல்கலைக் கழகம் பல கடல் பயணங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதற்கு இந்தியக் கடற்படை உதவிற்று. பயணங்கள் வங்காள விரிகுடாவில் மேற்கொள்ளப்பட்டன. அவற்றால் கிடைத்த முடிவுகளில் சிலவற்றை 1954-58இல் வெளியிடப்பட்ட இரு கடல் நூல் தொகுதிகளில் ஆந்திரப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

மற்றொரு நிலையம் கடல் உயிர் ஆராய்ச்சி நிலையமாகும். இது பறங்கிப்பேட்டையில் உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடையது.

இந்தியக் கடல் ஆராய்ச்சித் திட்டம்

தவிர, சென்னை, திருவனந்தபுரம், பம்பாய் முதலிய பல்கலைக் கழகங்களும் கடல் நூல் ஆராய்ச்சி செய்த வண்ணம் உள்ளன. மைய அரசின் சார்பாக இயங்கும் விஞ்ஞான-தொழில் ஆராய்ச்சி மன்றமும் கடல் ஆராய்ச்சிக்கு ஆவன செய்து வருகிறது. இருப்பினும், முழு மூச்சாக இந்தியக் கடலை உலக அளவில் ஆராயும் திட்டம் 1959ஆம் ஆண்டில்தான் உருவாயிற்று. தற்பொழுது அது செயற்பட்ட வண்ணம் உள்ளது. இதுவே இந்தியக் கடல் ஆராய்ச்சிபற்றிய வரலாறு ஆகும்..