இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/போராட்டப் பெண்மை
1966 ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி, புதுடெல்லி பார்லிமென்ட் கட்டடத்துக்கு வெளியே மிக ஆவலுடனும் பரபரப்புடனும் ஒரு கூட்டம் குழுமியிருக்கிறது. இது கலகக்காரர்களின் கூட்டமோ வீணர்களின் கூட்டமோ அல்ல. இவர்கள் எல்லோருமே இந்தியத் துணைக் கண்டத்தின் பொறுப்பு வாய்ந்த குடிமக்கள் எனலாம். இவர்களில் சிலர் பிரசவ அறைக்கு வெளியே பொறுமையின் எல்லையில் நடை போடும் கணவன்களைப்போல் முகத்தை அடிக்கொருமுறை நிமிர்த்தி உள்ளே பார்க்கின்றனர்.
உள்ளிருந்து கதவு திறக்கப்பட்ட, ஆரவாரம் கேட்கிறது.
என்ன? என்ன?
ஆணா, பெண்ணா?
பெண்...!
ஒரே மலர்ச்சியாய் முகங்கள் ஒளிருகின்றன.
“ஜவஹர்லால் நேருவுக்கு... ஜே!” என்ற கோஷம் வானைப் பிளக்கிறது.
தூய வெண்ணிறக் கதர்ச் சேலையில் போர்த்திய சால்வையில் ஒரு சிவப்பு ரோஜா அணி செய்ய, முகம் மலர, கூப்பு கையுடன் அங்கு பிரசன்னமாகிறார் இந்திரா காந்தி.
உடனே, “இந்திரா காந்தி வாழ்க!” என்ற கோஷம் உயருகிறது. ஒரு புன்னகையுடன் மக்கள் அளித்திருக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார், இந்திரா காந்தி.
இந்தியத் துணைக்கண்டத்தின் எழுநூறு கோடி மக்களை ஆட்சி செய்ய… ஒரு பெண்மணி…!
பெண்ணரசு...!
இந்திய நாடு இதற்கு முன் பெண்ணரசு கண்ட தில்லையா?
இராணி மங்கம்மாள் ‘ஜான்ஸி ராணி லட்சுமி பாய்’, ரஸியா சுல்தானா… என்று அடுக்கலாம்.
இவர்கள் முடி மன்னர் மரபில் ஆட்சிக்கு வந்தவர்கள்.
கணவரை இழந்தபின் பால்மணம் மாறாப் பிள்ளைகளுக்காக ஆட்சியில் அமர்ந்தவர்கள். ஒரு காலத்தின் கட்டாயத்தை நிறைவு செய்தவர்கள். ஆனால் இப்போது நடந்திருப்பது புதுமை.
அடிமைத்தளையினின்று மீண்டு வென்றெடுத்த குடியாட்சியின் புதுக்கருக்கு மாறாத நிலையிலேயே இவர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளால் வழங்கப்பெறும் தலைமைப் பதவியை இவர் பெற்றிருக்கிறார்.
அடுப்படியிலும் பிள்ளைப்பேற்று அறையிலும் அடிமை போல் முடங்கிக் கிடந்த பெண் குலத்தின் பிரதிநிதியான ஒருவர் இந்தப் புதிய ஜனநாயகத்தின் தலைவியாகிறார். ஆணும் பெண்ணும் சமம் என்ற கோட்பாட்டை மெய்ப்பித்த இந்திய ஜனநாயகத்தின் விளக்கமாக, ஒரு பெண் தலைமை ஏற்கிறார்.
இந்தப் புதுமைப் பூரிப்பிலும் கவர்ச்சியிலும் பெரும் பான்மை மக்களும் ஆவலுடன் பெண் தலைமையை வரவேற்றாலும், நூற்றாண்டுகளாக ஊறிப்போன பழமை வாதங்களும், ஆண் மேலாதிக்கங்களும் சில குண்டூசிச் செருகள்களை வெளியியிடாமல் இல்லை.
பெண்… அதிலும் கைம்பெண்...?
இவள் ஆட்சிக்குத் தகாதவள் என்ற பழமொழி இருக்கிறது.
இவளுக்கு வயசு? ஐம்பதை எட்டும் பருவம். இது, பெண் உடலியல் ரீதியாக ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்கும் கட்டமாகும். இந்தப் பருவத்தில் அவள் தடுமாறும் மன நிலையில் இருப்பதும் இயல்பு.
என்றெல்லாம் சில பழம்பஞ்சாங்கப் பத்திரிகைக் குரல்கள் அசுபம் பாடாமலும் இல்லை.
ஆனால் எழுபது கோடி மக்களின் தலைமையை ஏற்றுக் கொண்ட இந்தப் பெண் எத்தகையவர்? இவர் யார்?
இந்த நாட்டு சீதை, சாவித்திரி, நளாயினி போன்றோரின் பிரதிநிதியா? முன்னர் வாழ்ந்துகாட்டி அமரராகி விட்ட கஸ்தூரிபாவின் மறுபதிப்பா? இவள் திருமணமானவளா? ஆண்மக்களைப் பெற்ற தாயா?
ஒரு பெண், மக்கள் மதிப்பைப்பெற மேற்கூறிய அனைத்துத் தகுதிகளும் தேவையாய் இருக்கின்றன.
இந்திரா எத்தகைய பெண்?
இவள் பிறந்து வளர்ந்த பின்னணியில் இவள் ஒரு நாள் இந்தப் பெரிய நாட்டை ஆட்சி செய்யும் பீடத்தில் அமரக் கூடும் என்பதற்கான வண்மைகள் இருந்தனவா?
நூற்றாண்டுகளாகப் பெண் மக்களைக் காட்டிலும் ஆண் மக்களே வேண்டப்பட்டு வந்த குடும்பப் பாரம்பரியக் கருத்து இவர் பிறந்த குடும்பத்திலும் இருந்ததா?… இவள் எப்படி இந்நிலைக்குத் தகுதி பெற்றாள்?
ஆண் ஆறடி பாய்ந்தாலே எட்டடி பாய்ந்து விட்டதாகவும், பெண் பத்தடி பாயக் கூடியவளாக இருந்தாலும் அவளை முடக்கி உள்ளே பின் இழுத்துத் தள்ளுவதுமான ஒருசமுதாயத்தில், இந்திரா எவ்வாறு முதன்மைத்தகுதிக்கு உயர முடிந்தது?
நேரு குடும்பமும் ஆணைப் போற்றும் பாரம்பரியக் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டதல்ல. தன் உழைப்பால், விடாமுயற்சியினால், வழக்கறிஞர் தொழிலில் சிறந்து, உயர்ந்து மிகுந்த செல்வம் ஈட்டிய மோதிலால் நேரு, இந்திராவின் பாட்டனார். அந்தக் காலச் சமுதாய மதிப்பின் படி, வெள்ளைக்காரருக்குச் சமமாக வாழ்வதே தருமம் என்று வாழ்ந்து காட்டிய மோதிலால் நேருவின் ஒரே ஆண் வாரிசு, ஜவாஹர்லாலின் ஏகபுத்திரி இந்திரா நேரு.
தம் ஒரே மகன் ஜவாஹர்லாலின் அன்பு மனைவி கமலா கருவுற்றிருக்கிறாள் என்றறிந்த நாளிலிருந்த, தாய் ஸ்வரூப ராணி, பேரப்பையனைப் பற்றிய கனவுகளில் மிதந்தது வியப்பில்லை. அந்தப் பெரிய ஆனந்த பவன் மாளிகையிலுள்ள அனைவரும், உறவினர், பணியாட்கள் ஈறாக, வீட்டு மகனுக்கு ஓர் ஆண்வாரிசு உதயமாவதை எதிர்பார்த் திருந்தனர்.
குடும்பத்தை ஒட்டிய மிக முதியவரான முன்ஷிமுபராக் அலி, தம் மரணப் படுக்கையிலும், ஜவாஹரின் அருமைப் புதல்வரைக் கையிலேந்தி ஆசிமொழியக் காத்திருந்தார். பிறந்த உடனேயே சிசு, முதியவரின் ஆசிகளுக்குக் கொண்டு வரப்பட்டது.
முதியவர், சிச பெண் என்பதை உணராமலேயே, “ஜவாஹரின் இந்த அருமையான வாரிசு, குலக் கொழுந்து, அல்லாவின் அருளால் எல்லா மேன்மைகளையும் பெற்று நீடுழி வாழட்டும்!” என்று கையில் வாங்கி வாழ்த்தினார். குழந்தை போர்வைக்குள் பொதிந்திருத்து. அடுத்தகணமே, முன்ஷிமுபராக் அலி இறுதிச் சுவாசம் விட்டார்.
என்றாலும் முதிய அன்னையும், மற்றவர்களும் ‘ஓ ஜவாஹருக்கு ஒர் ஆண் சந்ததி இல்லாமல் பெண் பிறந்திருக்கிறதே!’ என்று முணமுணக்காமல் இல்லை.
இது, குடும்பத்தலைவர், தந்தை மோதிலாலின் செவிகளில் விழுந்ததும் அவர் சீற்றத்துடன் கைத்தடியால் தரையைத் தட்டினார்.
“இந்தப் பெண் ஆயிரம் ஆண்களுக்குச் சமமாக இருப்பாள்!” என்று முழக்கினார்.
இத்தகைய ஆசைகளுடன் கண்விழித்த குழந்தை தந்தையாலும் தாயாலும் இந்திரா பிரியதர்சினி என்று அன்புடன் அழைக்கப் பெற்றாள். செல்வக் குடும்பத்தில் தாதியரும் உற்றவரும் குழந்தையைச் சூழ்ந்து தாயின் அருகாமையை அரிதாக்கிவிடுவதே வழக்கம். பணியாளரும் தாதியரும் தன்னைக் காவலில் வைத்த நிலையில் தனிமைப் படுத்தியிருந்ததனால் இளம் உள்ளம் கற்பனைகளிலும் எட்ட முடியாத இலட்சியத்தை எட்டும் கனவுகளிலும் இலயித்தது என்பதைக் கவியரசர் தாகூர், தம் இளமைப் பருவம் குறித்துத் தெரிவிக்கையில் குறிப்பிடுகிறார். தனிமை உணர்வு அற்புதமான கவித்திறனாக முகிர்த்தது.
இந்திராவின் அன்னையோ, ஏற்கெனவே பலவீனமானவள். அத்துடன் இந்திரா பிறந்த காலத்தில், உலக அரங்கிலேயே அரசியல் கொள்கைகளும், புதிய கருத்துக்களும் புரட்சிகளைத் தோற்றுவித்திருந்தன. இந்திய நாட்டில் தேச விடுதலைக்கான கிளர்ச்சிகள் நாடு முழுவதுமான பாதிப்பைப் பெற அடித்தளம் அமைத்த முக்கியமான காலமாக அது இருந்தது.
தொழிலில் வெற்றியும் பொருட்குவிப்பும் மோதிலால் நேருவின் குடும்பத்தில், வீட்டில். பழைய கிராமிய இந்திய நடை உடை, பாவனைகளை விட்டு, ஐரோப்பிய நாகரிகங்களைப் பின்பற்றும் மாற்றம் ஏற்பட்டது.
இப்போதோ இரண்டாவது புரட்சி ஓர் அலைபோல் இந்த ஆனந்த பவன மளிகையைத் தன் வசமாக்கிக் கொண்டது. பலவீனமாக இருந்தாலும் தாய் கமலாநேரு கதர்ப்பிரசாரத்தில் முழுதுமாக ஈடுபட்டார். சத்யாக்கிரக இயக்கத்தில் இளைஞரைச் சேர்ப்பதும் இவர் பணியாயிற்று. வீட்டில் மற்ற அனைவருமே பரபரப்புடன் தேசிய இயக்கத்தில் முழுகினர்.
சிறுமி இந்திரா, தன் புத்தகம், தன் பொம்மைகள் என்று தனக்குள் ஓர் உலகை ஏற்படுத்திக் கொண்டே தனிமையில் தான் வளர்ந்தாள். ஒரு சமயம் தொடக்கக் கல்வி கற்பித்த ஓர் ஆசிரியை சிறுமி இந்திராவிடம் “நீ பெரியவளாக வளர்ந்தபின், டீச்சராவாயா, டாக்டராவாயா, அல்லது வேனிஸ் வர்த்தகன் கதையில் வருவது போன்ற சாதுரியம் மிகுந்த நீதிபதி ஆவாயா?” என்று கேட்டார்.
அதற்கு இந்திரா, “நான் ஃபிரஞ்சு மங்கை ஜோன் அஃப்ஆர்க், போலாவேன்!” என்று மொழிந்தாள்.
அந்த இளம் வயதில் தியாகமாகிய ஆதரிசம் இவளுள் முதிர்ந்திருந்தது.
தியாகம், தேசநலன் என்ற வேட்கைகள் இந்தச் சின்னஞ் சிறு பெண்ணுக்கு எப்படித் தோன்றின?
மோதிலாலின் அருமைப் பேத்திக்கு எத்துணை அரிய பரிசுகள்!
வெளிநாட்டிலிருந்து வந்த விதம் விதமான பொம்மைகள், உடைகள் என்று எத்தனை அருமைகள், மற்றவர் பொறாமைப்படும்படி வாய்த்திருந்தன?
ஆனால், அவை உயர்ந்தவை என்று அவர் பிஞ்சு மனதில் பதிந்து விடாதபடி, தீவளர்த்து, அதில் உயர்ந்த மல்மல்களும், ஜார்ஜட்ரக ஆடைகளும், மற்றும் விதேசச் சாதனங்களும் ஆஹுதி செய்யப்பட்டதையும் அவள் கண்களால் கண்டாளே!
தேசிய வரலாறு படிப்பதற்குப் பதிலாக, வரலாறு படைக்கப்பட்ட காலத்தில் வளரும் வாய்ப்பினைப் பெற்றாள் இந்திரா.
இந்தத் தேசியத்தில், சிறை வாழ்வு, பிரிவுத்துயரம், நெருக்கடிகள், போலீஸ் கெடுபிடி, சோதனைகள், விரும்பிக் கஷ்டங்களை ஏற்கும் அருமைகள் எல்லாமே விளையாட்டுப் போல் ஆர்வமும் நிறைவும் தரும்படி அவளுக்குப் பழகிப் போயின.
கல்விப் பயிற்சி இடமாற்றம் பெற்று, அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று சீரில்லாமல் தொய்ந்தாலும், பார்க்கப் பிரியம் மிகுதியாகும் அன்பு வடிவைப் பாராமல் சிறையில் வாடும் தாபத்தைத் தீர்த்துக் கொள்ள தந்தை ஜவஹர்லால் உலக வரலாற்றையே கடிதங்களாக வரைந்தார். “செல்வமே, 1916 இல் உலகம் கண்டிராத வகையில் சோவியத் புரட்சியும் புதுயுகமும் வந்தது. 17இல் நீ பிறந்தாய்!” என்று தொடர்புபடுத்தினார். சொச்சமிச்சத்தின் கவின்மிகு குஞ்சங்கள் போல் சாந்திநிகேதனில் குருதேவர் தாகூரின் அன்பிலும் அரவணைப்பிலும் சில மாதங்கள் கல்வி பயிலும் பேறும் கிடைத்தது.
மேல்நாட்டில் நோய்வாய்ப்பட்டு நலிந்த அன்னையின் அருகில் இருக்கையிலேயே வருங்கால மணாளன் நிச்சயமாகிறான்.
அன்னையின் மறைவுக்குப் பின் மேலை நாட்டிலேயே கல்வியைத் தொடர்ந்தாலும், அதை நிறைவேற்றாமலே நாடு திரும்பும்படி சூழ்நிலை கனத்துவிட்டது.
நேரு குடும்பம் செல்வச் செழிப்பு மிகுந்தது. வெள்ளைக் கார மேலாளருக்குச் சமமாக, இந்திய ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் தெய்வம்போல் கருதும்படி உயர்ந்த குடும்பம்; அக்குடும்பத்தினர் தேசியத்தில் திளைத்து எல்லாச் சுக போகங்களையும் துறந்தனர்…?! நேரு வீட்டுக்கு அன்றாடம் துணிகள் பாரிஸிலிருந்து சலவை செய்து வருமாம்!
அவர்கள் வீட்டுக்கு உணவு வகைகள், துணிமணிகள், பீங்கான் போன்ற புழங்கும் சாதனங்கள், எல்லாம் மேலை நாட்டிலிருந்துதான் வருகின்றனவாம்!
நேரு குடும்பம்… அது அரச குடும்பம் போன்றது…
இத்தகைய ஒரு பிரமிக்கத் தகுந்த கருத்து, அந்நாளில் எல்லா இந்தியக் குடிமக்களிடமும் இருந்தது.
இந்திய சுதந்தர வரலாற்றில், காந்தியடிகள், வல்லபாய் படேல், ராஜன் பாபு, சுபாஷ் சந்திரபோஸ், சக்ரவர்த்தி இராஜகோபாலாசாரி என்று எத்தனை பெரியோர் அந்நாளில் அருந்தியாகிகளாகத் திகழ்ந்திருக்கின்றனர்? என்றாலும், ‘நேரு குடும்பம்’ என்ற சிறப்பு தனியாக மக்கள் மனதில் பதியக் காரணம் என்ன?
கூர்ந்து சிந்தித்தால், இந்திய மக்களின் மனப்பான்மை மன்னர் வழி மரபில் ஊன்றியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். மன்னர் என்றாலே பொது மக்களுக்கு எட்டாத ஆடம்பரம், பளபளப்பு, சொகுசுகளை அநுபவிக்க உரிமை கொள்வது, அந்தக் குலத்தில் தோன்றுவதாலேயே அவை கூடும் மனிதராகப் பிறப்பதில் பெரும்பேறே, மன்னர் குலத்தில்தான் கிடைக்கிறது என்ற கருத்தே நடைமுறையில் நூற்றாண்டுகளாக மக்கள் மனங்களில் ஊறி வந்திருக்கிறது. “ராஜா, ராஜாத்தி..” என்ற செல்லப் பெயர்களே இக்கருத்தை விள்ளுபவை.
வெள்ளைக்கார அரசுக்குப் பதிலாக இவ்வாறு அவர்களுக்குச் சமமாகச் செல்வ போகங்களை நிலைப் படுத்திக் கொண்ட ஒரு குடும்பம், தேசியத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு, சாமானிய மனிதர்களைச் சமமாகக் கருதியதால், அந்தக் குடும்பத்தின் தலைமகனை மக்கள் தங்கள் தலைவராகச் சிறப்பித்து ஏற்றுக் கொண்டது இயல்பேயாகும்.
அந்நாட்களில் கங்கை நதி பாயும் பிரதேசத்துக் கிராமங்களில் இருந்து அலாஹாபாதுக்கு வந்த எளிய மக்கள் எவரும் ஆனந்தபவனத்துப் பெருமகனாரை, அவர் புதல்வரை, அரசிளங்குமரிகள் போல் உலவிய பெண் மக்களைக் கண்டு பிரமிப்புடன் கண்டு பணிந்து செல்வார்களாம். இந்தச் சிறப்பு ஏனைய பிற தலைவர்களுக்கு இல்லை.
காந்தியடிகள் மேல்நாட்டில் பாரிஸ்டர் பட்டம் பெறப் படிக்கச் சென்றார். அவருக்கு அப்போது, தொழில் செய்தல் இன்றியமையாத தேவை - குடும்பத் தேவை என்றே கொள்ளலாம். அந்தப் பின்னணியே வேறு. தாய் தன் மகனிடம் மது, மாமிசம் தொடாதவாறு சத்தியம் வாங்கிக் கொண்டார்.
ஆனால், நேரு குடும்பத்தினர், உயர்ந்த பிராமண வருக்கம். மேல்நாடு செல்வது, செல்வச் செழிப்பின் உயர்வுக்குரிய கவுரவமாக இருந்தது. பள்ளிப் படிப்பையே வெள்ளைக்காரர் சீமையில் பெறும் மேன்மையில் திளைத்தனர்.
தங்கள் குடும்பம், செல்வம், அறிவு, முற்போக்கான தேசிய சிந்தனை, எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்பதால், மக்கள் உவந்து அளிக்கும் தலைமைச் சிறப்புக்கு உரியது என்ற மேலான எண்ணம் பாலில் கரைந்த நெய்ப்பொருள் போல் சிறுமி இந்திராவுக்கும் இல்லாமலில்லை. இந்த உணர்வே தன்னை மிக வித்தியாசமாக வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு தனித்தன்மையை, உறுதியை, நினைத்தால் செய்தேதீரவேண்டும் என்ற மனத்தின்மையை அவளுக்கு அளித்தது எனலாம்.
இந்திரா, சாந்திநிகேதனில் கல்வி பயின்ற காலத்தில் எல்லா மாணவிகளும் வியக்கும்படி,‘டார்மிடரி’ எனப்படும் வசதி குறைந்த இடத்தில் தங்கி, எளிய வாழ்வையே மேற்கொண்டிருந்தாள். இவள் புத்தகங்கள், படுக்கை, துணிமணிகள் எல்லாம் மிக ஒழுங்காக, துப்புரவாக வைக்கப் பட்டிருந்தன. ஒரு சமயம் சாந்திநிகேதனைப் பார்வையிட வந்த ஒரு பெருமகனார், இவள் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்தாராம்.
பெரும்பான்மையும், பொருளாதார, சமதர்மக் கொள்கை, அரசியல் தத்துவம், புரட்சி என்ற பொருள் பற்றிய தலைப்புகளாகவே இருந்தன.
இந்த நூல்களுக்குரிய ‘சிவப்புச் சீமாட்டி யார்?’ என்று வினவினாராம். புத்தக புதிராக மாட்சிமை கண்டிருந்த அரசியல் கொள்கையில் அவள் ஆர்வம் மிகுந்திருந்தாள். அதே சமயம், இசை, கவிதை, நடனம், நாடகம் என்ற நுண் கலையார்வங்களிலும் மனதைக் கொடுத்தாள்.
இத்தகைய இயல்புகளும் ஊக்கங்களும், தாயை இழந்த பின், கருத்தொருமித்த காதலன் என்ற வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில், உற்சாகமும் நம்பிக்கையுமாகவே மலர்ந்தன.
ஃபெரோஸ், ஏறக்குறைய ஆறு வருஷங்களுக்கு முன்பே இவளைக் கரம் பற்ற விழைந்து, அன்னை கமலாவிடம் தன் விருப்பத்தை வெளியிட்டிருந்தான். அப்போது இருவருமே இள வயதினர். திருமணம் என்பது அவ்வளவு விரைவில் கூடக்கூடியது அன்று. எனவே அப்போது பெற்றவள் பிடி கொடுக்கவில்லை.
இந்த ஆறாண்டுக் காலத்தில், இளைஞன் தன் மனதில் உறுதியாகவே நின்றான். புதுமை, புதிய உற்சாகம், தேசியம், விடுதலை, சமதர்மம்… என்ற கருத்துக்கள் இருவருக்கும் இசைந்தன.
உலகப்போர் உச்சமாக இருந்த காலம். தேசிய அரங்கில் தலைவர்கள் சிறைக்குச் செல்லும் கொந்தளிப்பு.
ஃபெரோஸ் யார்? சாதாரண-இடைநிலைக் குடும்பத்தில் உதித்தவன். சொத்து, பத்து, செல்வாக்கு எதுவும் கிடையாது. மேலும் பார்சி மதத்தினன்… தம்மால் ஆதரிச யுவதியாக உருவாக்கப்பட்டு வரும் அருமைச் செல்விக்கு இவன் தகுந்த கணவனாக முடியுமா?… ஜவாஹரின் மனதில் இருந்த இந்த எண்ண ஓட்டங்களை இளைஞன் மிக நுட்பமாக உணர்ந்திருந்தான். இதுவே அவன் இந்திராவைக் கரம் பற்றுவதற்கான அழுத்தமான காரணமாகவும் இருந்தது.
கடைசிவரை இந்த உயர் குடும்ப மேன்மை குறித்துக் குத்தலாக மொழிவதை விளையாட்டாகவே கொண்டிருந்த மருகன் ஃபெரோஸ் உண்மையில் இந்திராவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தான்.
இந்திரா அந்தக் காதலை முழுமனதுடன் ஏற்று அளவற்ற நம்பிக்கையுடன் அவன் கரம் பற்றினாள்.
ஆடம்பரக் குடும்பத்துக்குரிய திருமணமா?
இல்லை… தேசாவேசப் புயலில் நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மிக எளிமையான தியாகத் திருமணமாக இருந்தது. தேநிலவு… சிறையில்...!
இந்திரா, தோற்றத்தில் வாட்டசாட்டமும் நின்று நிலைக்காத பரபரப்பும் கொண்ட பெண் அல்ல. மென்மையான உடல் ஆழ்ந்து நிலைக்கும் அகன்ற கண்கள்.
‘இந்தப் பெண் மணவாழ்வைத் தாங்கி மகப்பேறு பெறுவதற்குக் கூடப் பலமில்லாதவள்; தாயைப் போல் பூஞ்சை’ என்ற கருத்து அன்றைய மூத்த உறவினரிடையே நிலவியது. மருத்துவர்களும் அதை ஆமோதித்து, மகப்பேறு இவளுக்குத் தகாது என்று உறுதியாய்க் கூறினார்கள். நெருங்கிய மருத்துவர் ஒருவர் இதை எழுத்து மூலம் கூட தெரிவித்திருந்தார்.
ஆனால் திருமணத்தின் இலட்சியமே தாய்மைப்பேறு தான் என்ற உறுதி இந்திராவுக்கு இருந்தது. கருவுற்றாள். முதன் முதலில் இந்தச் செய்தியை அறிந்ததுமே, அலஹா பாத் மாளிகையின் குடும்ப மருத்துவர்கள் இந்திராவுக்குப் பிரசவம் பார்க்கும் பொறுப்பை கைகழுவி விட்டார்கள். பெரிய இடம்; தந்தையோ அகமதுநகர் சிறையில் இருந்தார். ஏதேனும் நடக்கக் கூடாதது நடந்துவிட்டால்? எனவே இந்திரா, பம்பாயில் உள்ள அத்தையின் வீட்டுக்கு அவள் பொறுப்பேற்க வருகிறாள். ஜவாஹரின் இளைய சகோதரி கிருஷ்ணாஹத்தி சிங், இந்திராவுக்கு மிகவும் பாசமும் நெருக்கமும் உடைய அத்தை. கிருஷ்ணா குடும்பத்தில் முதன் முதலாக பார்சி மத இளைஞர் ஹத்தி சிங்கைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இதனால் தானோ என்னமோ, தன்னைப்போல் பார்சி இளைஞனைக் காதலித்துக் கடிமணம் செய்து கொண்ட மருமகளிடம் தனியான அன்பு வைத்திருந்தார் கிருஷ்ணா.
பம்பாயில் மிகப் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவரான டாக்டர் ஷிரோட்கர் இவளுக்குப் பேறு பார்க்கும் பொறுப்பை ஏற்றார். 1944ம் ஆண்டு, ஆகஸ்ட் இருபதாம் தேதி காலை, நோவுகண்டு, இந்திராவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.
அத்தை கிருஷ்ணா, தம் நூலில், இவ்வாறு எழுதுகிறார்:
“முதல் குழந்தையாதலால் இந்திரா மிகவும் பயந்திருந்தாள். பிரசவ அறையில் நான் இருக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினாள். ஆனால், உள்ளூர நானே ‘கிலி’ பிடித்திருந்தேனே? மனதுக்குள் இறைவனை வேண்டிக் கொண்டும், எல்லாம் நல்லபடியாக ஆகவேண்டுமே என்று மன்றாடிக் கொண்டும் இருந்தேன். “டாக்டர்! இது பையனாக இருக்க வேண்டும், பையன்தான் பிறக்க வேண்டும்; என் அண்ணனுக்குப் பிள்ளை வாரிசு இல்லை. அந்தக் குறை தீர இவள் ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயாக வேண்டும்” என்று புலம்பினேன்.. நல்ல வேளையாகப் பிறந்த குழந்தை பையன் என்று தெரிந்ததும், கரைகாணா மகிழ்ச்சி உண்டாயிற்று…”
கிருஷ்ணாவுக்கு மட்டும்தானா இந்த மகிழ்ச்சி? அனைவருக்குமே ஆண்வாரிசு என்ற செய்தி தனியானதொரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. உடனே சிறையிலிருந்த அண்ணன் ஜவாஹருக்குச் சகோதரி தந்திச் செய்தி அனுப்பினாள். கூடவே விரிவான கடிதமும் எழுதிப் போட்டாள்.
சிறைக்குள் செய்தி வழக்கப்படி தாமதமாகவே போய்ச் சேர்ந்தது. அவருடைய பதில், அவருக்கே உரிய, பாமரருக்குப் புரியாத மொழியில் இருந்தது.
“I do not easily get excited, but I experienced a deep feeling of contentment, when I heard the arrival of the new comer. There was also a vague and comforting sensation of the future, gradually pushing out the past as it always does”
(சாதாரணமாக நான் எளிதில் கிளர்ச்சி வசப்படக் கூடியனவல்ல; என்றாலும் புதிய நபரின் வருகை என்னுள் ஆழ்ந்ததொரு நிறைவைத் தந்திருக்கிறது. இனம் புரியாத அந்த இதமான உணர்வில் எதிர்காலம் விளங்க, கடந்த காலம் மங்கி மறைகிறது...)
அந்த இனம் புரியாத ஆறுதல், தனக்கு ஆண் சந்ததி இல்லையே என்ற உள்ளூர இழைந்திருந்த தாபத்தைத்தான் குறிப்பிடுகிறது என்று கொள்ளலாம். நேரு சாதாரண மனிதர்களைப் போல் மூடநம்பிக்கைகளுக்கும் மரபுக் கொள்கைகளுக்கும் இடம் கொடுக்க மாட்டார்; அறிவு பூர்வமாகச் சிந்திப்பவர் என்று சிறப்பிக்கப் பட்டவர். ஆனால் அவர்தம் அருமைப் பேரப் பிள்ளைக்குப் பெயர் வைப்பதற்கு எடுத்துக்கொண்ட அக்கறையை, சிறையிலிருந்து அவர் மகளுக்கு எழுதிய பல கடிதங்கள் தெரிவிக்கின்றன. பல மாதங்கள் தந்தைக்கும் மகளுக்கு மிடையே கடிதப் போக்குவரத்து தொடர்ந்தன. பல பெயர்கள்; இறுதியில் ராஜீவ்ரத்ன காந்தி என்ற பெயரை ஒப்புக் கொண்டதாகத் தெரிய வருகிறது. ‘ராஜீவ்’ என்றால் தாமரை. கமலா என்றாலும் தாமரை. இந்திராவின் தாயின் பெயர் வருகிறது. ரத்ன - ஜவஹர் - இரண்டுக்கும் மாணிக்கம் என்ற பொருள்தான். தன் மகளின் பெயரில் தாய், தந்தை இருவரின் பெயரும் இணைந்திருப்பதன் நிறைவு, இந்திராவுக்குக் கிடைக்கிறது.
“குழந்தைக்குப் பெயர் வைக்கிறோம் என்ற சாக்கில் முடிவில்லாமல் தேடிக்கொண்டே இருந்தது போதும். அவனைப் பெயரில்லாதவன் என்று கூப்பிடும்படி ஆக வேண்டாம். இந்தப் பெயருடன் தேடுவதை நிறுத்திக் கொள்வோம்” என்று எழுதினார்.
“ஃபெரோஸின் வீட்டுக்காரர்களுக்குச் சிறிது ஏமாற்றமாக இருந்திருக்கலாம். ‘ரத்ன’ - ரத்தன் - ரட்டன் - என்ற பெயர் சாதாரணமாகப் பார்சிக் குடும்பங்களுக்குரிய பெயர்தான்” என்று திருப்திப்பட்டுக் கொண்டார்களாம்.
‘பூஞ்சை, பிள்ளைப்பேறு தாங்கமாட்டாள்’ என்று எழுதிக் கொடுத்து மருத்துவரின் கருத்தை இந்திரா தவிடு பொடியாக்கி, இந்திரா, ஒரு குழந்தையல்ல, இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாள். சரியான உணவு, உடற் பயிற்சி, ஓய்வு என்று தன் உடல் நலனைக் கண்ணுங் கருத்துமாகப் பேணிக் கொண்டாள். சஞ்சய் 46 ம் ஆண்டு டிசம்பரில் பிறந்தான். அத்தை கிருஷ்ணாவே அப்போதும் டெல்லியில் இந்திராவின் மகப்பேற்றுக்குத் துணையாக இருந்து பராமரித்தார்.
இக்காலத்தில், ஃபெரோஸ், லக்னௌவில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துவர, ஓர் அழகிய சிறு வீடு பார்த்து, மனைவி மகிழ வேண்டும் என்று பார்த்துப் பார்த்து அலங்கரித்தான். வீட்டுக்கு முன்புறமும் சுற்றியும் அழகிய தோட்டம் அமைத்தான். ‘ஆனந்தபவன்’ மாளிகை போன்று அவ்வளவு பெரியதல்ல என்றாலும் இந்திரா மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்று கருத்தாக நேர்த்திகள் செய்தான்.
அன்புக் கணவன், இரு குழந்தைகள், இனிய மனைவி… இந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு என்ன குறை? இந்த நாட்களில் இந்திரா இனிய இல்லத்தரசியாகவே விளங்கினாள். தன் இரு குழந்தைகளை ஆயாவின் பொறுப்பில் விடுவதைத் தவிர்த்து, அவர்களுக்குத் தானே குளிப்பாட்டி, உணவூட்டி சீராட்டி மகிழ்ந்தாள். பிற்காலத்தில், இத்தம்பதி தம் வாழ்நாட்களை அரசியல் சமூகம் என்ற அரங்குக்கு உரித்தாக்கி விட்டதால், இனிய இல்லறம் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நிலையிலேயே நலிந்து போயிற்று. இல்லறத்தின் பயனுக்குப் பல முகங்கள் உண்டு. அதில் ஒன்று மக்களை இருவருமாகச் சேர்ந்து தங்கள் செல்வாக்குகளைப் பதித்து உருவாக்குவதாகும். இந்தப் பயன் இந்திராவுக்கு வாய்க்கவில்லை என்றே சொல்லலாம்.
1947-இல் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்று அரசு கைமாறியதும் தந்தை ஜவாஹர்லால் நேரு பிரதம மந்திரியானார். புதிய பாரதத்தின் புதிய பிரதம மந்திரி. உலக நாடுகள் அனைத்தும் வியப்புடன் நோக்கும் வண்ணம் பரந்த பாரதத்தின் அடிமைத்தளைகள் அஹிம்சை வழியில் தகர்த்தெறியப் பட்டன. நாட்டிலே உடனே எதிர்நோக்க வேண்டிய பிரச்னைகள் எத்தனை எத்தனை? துண்டாடப் பட்டதன் விளைவாக சகோதர சகோதரரை வெட்டிக் கொன்று இரத்த ஆறு பெருகச் செய்தனர்.
காந்தியடிகள் கால்நடையாக நவகாளியில் புனித யாத்திரை மேற்கொண்டார். பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டார். சுதேச மன்னர்கள் என்ற வரையறைகள் நீங்கி, இந்திய யூனியன் என்ற இணைப்புக்கான பிரச்னைகள்…
புதிய பாரதத்தின் பிரச்னைகள் ஒன்றல்ல; இரண்டல்ல. தந்தையின் நலனைப் போற்றிக் கண் காணிக்க இந்திரா பிரதம மந்திரியின் இல்லத்து நாயகியாக இயங்குவது அவசிய மாயிற்று. இந்திரா குழந்தைகளுடன் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார்.
இந்தப் பருவம், ஓர் இளம் பெண்ணின் குடும்ப வாழ்வில் மிக முக்கியமான காலம் எனலாம். தான் ஒரு தாயாக வேண்டும், தாய்மையில்லாத இல்லற வாழ்க்கை இலட்சிய மல்ல என்ற உறுதியுடன் நின்ற பெண் இந்திரா கணவனும் மனைவியும் ஒருவரை மற்றவர் புரிந்து விட்டுக் கொடுத்து, இணைந்து பழக, பண்புபெற, குடும்ப வாழ்வுக்கு இந்திரா ஆசைப்பட்டாலும், அது கிடைக்காத வாழ்வுதான் அமைந்தது.
பிரதமரின் மாளிகையில் வருகை தரும் முக்கியப் பிரமுகர்களையும் வெளி நாடுகளிலிருந்து வரும் உலகத் தலைவர்களையும் வரவேற்று உபசரிக்கவும், அரசியல் பிரச்னைகளைச் சுமுகமான பேச்சுவார்த்தைகளில் ஆய்ந்து நலம் காண்பதற்கான சூழ்நிலையை அவ்வரவேற்பு உப சாரங்களில் ஏற்படுத்தவும் பிரதமமந்திரியின் மகள் இந்திரா இன்றியமையாதவரானார். திருமணத்திற்கு முன் இளங் குமரியாக அன்புத் தந்தையுடன் ஐரோப்பிய நாடெங்கும் பயணம் செய்தவள் இந்திரா. அநேகமாக நேருவுடன் உலகத் தலைவர்களுக்கெல்லாம் அவர் மகள் இந்திராவும் பரிசயமானவள். உலக அரசியல் நிலவரங்களை அவருடன் நிழலாக இருந்து உணர்ந்திருந்தாள். எனவே தந்தை சுதந்திர பாரதத்தின் பிரதமர் என்ற அரசியல் மதிப்புடன் வாழ்க்கையின் மிக முக்கியமான செயலாற்றும் பருவத்தில் மகள் இந்திரா. அவருக்கு உற்ற துணையாக, வீட்டு நிர்வாகியாக, செயலாற்றும் மேலாளராக பொறுப்பு ஏற்றார். இதற்கு ‘அரசு’முத்திரை பெற்ற சான்றொன்றும் கிடையாது. ஆனால் அதுவாக, அந்தப் பொறுப்பு இசைந்து போயிற்று. இந்த முக்கியமான பொறுப்புடன் சேர்ந்த செல்வாக்கில் கணவன், குழந்தைகள், தனக்கென்ற குடும்பம் - சின்னஞ்சிறு உலகமான அதன் தலைவி என்ற இலக்குகள் பொலி விழந்தன; தேய்ந்தன.
குழந்தைகள் தந்தையின் அருகாமையில் இருக்க வேண்டும் என்று இந்திரா வாரந்தோறும் அவர்களுடன் லக்னௌவுக்கு வந்து சென்றது எந்த விதத்திலும் நன்மை பயப்பதாக இல்லை. ஃபெரோஸ், லக்னௌ பத்திரிகைப் பணியை விட்டுவிட்டு, டெல்லி பிரதம மந்திரி மாளிகையில் ‘வீட்டு மாப்பிள்ளை’ என்று தங்குவதற்குச் சிறிதும் விரும்பவில்லை. நேரு குடும்பத்தின், செல்வ, செல்வாக்கு, மேலாண்மைகளைக் கிண்டலாகவும் குத்தலாகவும் பேசுவதும், அலட்சியமாக நடப்பதுமே இந்த மருமகனுக்குப் பொழுது போக்காக இருந்ததென்றே கூறலாம். என்றாலும், அன்பு மனைவியை அதற்காக நோகச் செய்வதையும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை.
“நீ குழந்தைகளுடன் வாரா வாரம் டெல்லிக்கும் லக்னௌவுக்குமாக அலைய வேண்டாம். நானே டெல்லிக்குப் பெயர்ந்து விடுகிறேன்” என்றான் அந்தக் கணவன்.1952 ஆண்டில் ஃபெரோஸ் நேருவின் மருகர் என்ற உறவாக நிலைத்துவிடாமல், ரேபரேலி தொகுதியில் நின்று வெற்றி பெற்று, அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். லோக் சபா உறுப்பினர் என்ற தனிமதிப்புடன் டெல்லியில் தனி வீட்டில் வந்து வசித்தார். காங்கிரஸ் கட்சியில்தான் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். என்றாலும் ஏனைய காங்கிரஸ் அரசியல் வாதிகளைப் போல் தலைவர் நேரு நாவசைத்து எழுப்பும் ஒலியெல்லாம் தெய்வ வாக்கென்று கருதிப் போற்றிக் குழைந்து பணிந்து துதித்த அரசியல் வாதிகளிடையே இவர் தனித்து இயங்கினார்.நேரு பதவிக்கு வந்து பதினைந்தாண்டுகளான போது, ஃபேரோஸ் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஃபெரோஸ் ஒரு சோஷியலிச அணியைத் தோற்றுவித்திருந்தார். ஏறக்குறைய எதிர்க்கட்சிக்காரர்களுக்கு வேலையில்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டார்.
தனி வீட்டில்தான் தங்கல்… ஆனால், காலை உணவு கொள்ள, மனைவி மக்களுடன் மகிழ்ந்து பழக, பிரதமர் மாளிகையான தீன்மூர்த்தி பவனுக்கு வருவார். உறவு, குடும்பம், என்ற நெருக்கத்தில் பிரதம மந்திரி மாளிகை விருந்தினர் மேசை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அபத்தம்தான். என்றாலும் பிரதமர் மாளிகைக் காலை உணவு நேரம் என்றால், அது மகள், மருமகன் என்ற குடும்பக் கூட்டுக்கு அடங்கியதல்லவே? அந்த மருகர் சில அடிப்படை விதிகளையேனும் மரியாதைகளையேனும் கடைப் பிடிக்க வேண்டும் என்று இந்திரா பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் மருகர், வேண்டுமென்றே அவற்றை அலட்சியமாக நினைத்தது, அன்பு மனைவிக்குச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தரும சங்கடமாக இருந்தது.
1956ம் ஆண்டில் குருஷ்சேவ் - புல்கானின் இருவரும் இந்தியாவுக்கு வந்தார்கள். இரும்புத்திரை போட்டுக் கொண்டிருந்த கம்யூனிச சோவியத் நாட்டிலிருந்து திரை விலக வெளி வந்த முதல் சோவித் தலைவர்கள் அவர்கள். அப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்துக்கு மிகவும் இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. இந்திரா, அரசு ரீதியாக, எந்தப் பதவியும் இல்லாதவளென்றாலும், பிரதம மந்திரியின் மகள், எல்லோராலும் அறியப்பட்டவர் என்ற செல்வாக்கில் பொதுக்கூட்டத்தில் தனியிடத்தில் சென்றமர இடமும் மரியதையும் பெற்றுவிட்டாள். ஆனால், தன் லோக் சபா உறுப்பினர் என்ற முத்திரையுடன், தன் அணியைச் சேர்ந்த தோழர்களுடன் உள்ளே இட மரியாதை கிடைக்க வில்லை என்பது மட்டுமில்லை, அருகே செல்லவே முடியாமல் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப் பட்டார்.
ஃபெரோஸ் இந்த நடவடிக்கையை அலட்சியமாக வெறும் பாதுகாப்பு நடவடிக்கை என்று விட்டு விடவில்லை. மக்களவையில் இந்த முறைகேட்டைக் கொண்டுவந்து நேருவை மன்னிப்புக் கோரச் செய்யுமளவுக்குப் பிரச்னை யாக்கினார் மருமகன்.
இன்னொருமுறை, காங்கிரஸ் அகில இந்தியக் கமிட்டிக் கூட்டத்தில், தலைவர் நேரு, பிரதிநிதிகள் தத்தம் மனைவி, மக்கள் என்று உறவினரைக் கூட்டி வருவதை வன்மையாகக் கண்டனம் செய்தார்.
அப்போது ஃபெரோஸ் சட்டென்று எழுந்தார். “நான் என் மனைவியைக் கூட்டிவரவில்லை.” என்றார் பலத்த சிரிப்புக்கிடையே. ஆனால் நேரு செல்லுமிடமெல்லாம் மகள் வருகிறாளே! நேருவுக்கு மிகவும் சங்கடமாகப் போயிற்று.
இத்தகைய சந்தர்ப்பங்களில் இந்திரா தரும சங்கடத்தின் உச்ச நிலையில் தவித்தாள் எனலாம். அவள் கணவரை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். ஆனால், “என் கணவர் இங்கு அவமானம் செய்யப்பட்டார். அவரிருக்குமிடம் தான் எனக்கு அயோத்தி. இந்த விநாடியே நான் இந்த மாளிகையை விட்டுப் போகிறேன்” என்று நாடக, சினிமா, கற்புக் கதாநாயகிகளைப்போல் வெளியேறவில்லை.
கணவரின் தன்னுணர்வு, நேருவுக்கு நெருங்கிய முக்கிய நண்பர்கள் விருந்தாளியாக வந்த நேரங்களில் கூட முனைந்து, மாமனாரை அலட்சியமாகக் கருதச் செய்ததை இந்திரா விள்ளவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலையில் ஏற்று, சமாளித்துத்தான் ஆகவேண்டி இருந்தது. ஃபெரோஸ் தமக்கென்று ஓர் இல்லம், நண்பர்கள் என்று சுயேச்சையாக இருந்தார்.
லோக் சபாவில் எதிர்க்கட்சி அணிபோன்றே செயல் பட்டதனால், நேரு, இன்சூரன்ஸ் தொழிலை தேசியமயமாக்கினார். தேசிய மயமாக்கப்பட்ட காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளைப் பயன்படுத்திய முறைகேட்டை, மீண்டும் தட்டிக் கேட்டு அம்பலத்துக்குக் கொணர்ந்தார். அன்றைய நிதி மந்திரி ஊழலுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் அளவுக்குப் போயிற்று. இந்த நியாயங்கள் அனைத்துக்கும் இந்திராவின் கணவன் ஃபெரோஸ் தாம் பொறுப்பாளி. ஆளும் கட்சியேயானாலும், அன்றைய இத்தகைய கட்சிக்குள் இருந்த ஜனநாயகப் பண்பு மிகவும் பாராட்டக் கூடியதாகும்.
வீட்டுக்குள் என்று வரும்போது, ஃபெரோஸின் அலட்சியம், இந்திராவுக்கு முள்ளாகவே உறுத்திற்று. கருத்து வேற்றுமை இயல்புதான். விமரிசனம் தவறில்லை. ஆனால் அதுவே முனைப்பாக வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற போது, அது பிளவுக்கும் அடிகோலுவதாகவே ஆயிற்று.
இந்திராவுக்குக் கணவரின் போக்கு சரியல்ல என்று பட்டாலும், அவர் வேற்றுமை பாராட்டினாலும் பெரிது படுத்தாமல் விடுத்தாள். வெளியே கணவன் - மனைவி உறவு பற்றி மட்டுமில்லாமல், ஃபெரோஸின் நடத்தை பற்றியும் பல வதந்திகள் உலவின. இந்திரா பொருட்படுத்தாததனால், இவர்களிடையே உள்ள மண உறவு, சிலும்பல்கள் என்று கூடச்சொல்லிவிட முடியாதபடி அமைதியாகவே இருந்தது எனலாம்.
இந்திரா மேலும் மேலும் அரசியலில் மூழ்குவதை ஃபெரோஸ் ஆதரித்தார் என்றே கூறலாம். என்றாலும் இந்திரா தந்தையின் நிழலில்தான் இயங்கினாள். நேருவை அக்காலத்தில் துதிபாடுகிறவர்களும் பதவி வேட்டைக்காரருமே சூழ்ந்திருந்தனர். அறிந்தோ அறியாமலோ, நேரு அத்தகைய பொய்முகங்களை விலக்கவுமில்லை; ஊக்கவுமில்லை. அவர்களைக் கண்டு கொள்ளாதவர் போல் அநுமதிக்கும் நடப்பு, ஃபெரோஸுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை என்பதை இந்திரா அறிந்திருந்தாள். ஆனால் அவளால் என்ன செய்யமுடியும்?
இந்திரா அடிநிலை - காங்கிரஸ் உறுப்பினர் என்ற இடத்திலிருந்து பெண்கள் அணிப் பொறுப்பு என்று படிப் படியாகத் தீவிரக் கட்சிப் பதவிகளுக்கு ஏறியிருந்தாள். 1959 மே மாதத்தில், தந்தையின் தொகுதியில் உள்ள சில கிராமங்களைப் பார்வையிடச் சென்றிருந்தார். அப்போது தான் காங்கிரஸ் செயற்குழு, ஏகமனதாகத் தன்னைக் கட்சித் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் செய்தி வந்தது.
தந்தையின் நிழல் போல் எல்லா அரங்குகளிலும் அவருக்குப் பின்னே அறிமுகமாயிருந்த இந்திரா இவ்வாறு எந்த விதமான முறையான போட்டியும் தேர்தலும் இல்லாமலே காங்கிரஸ் தலைவியாக்கப்பட்டாள்.
சரியாக ஓராண்டுக்காலம் கூட இந்தப் பதவியில் இந்திரா நீடித்திருக்கவில்லை.
ஏன்?
இந்தப் பதவிக்குப் பின்னே, அப்போதைய அரசியல் நிலையை கவனித்துப் பார்ப்பது அவசியமாகிறது.
1957ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கேரளத்தில் பொது உடமைக் கட்சி வெற்றி பெற்று அரசு அமைத்தது.
இது உலகிலேயே முதன் முறையாக நடைபெற்ற அதிசயம். ஏனெனில் பொது உடமைத் தத்துவ அரசியலில், ஜனநாயகத் தேர்தல் முறை என்பது ஒப்புக் கொள்ளப்படாத ஓர் அம்சமாகும். பொது உடமைக் கோட்பாடே புரட்சியில் நிலை கொண்டதாகும். இடைநிலை பூர்ஷ்வா வருக்கம் கீழே போய், கீழிருந்த பாட்டாளி வருக்கம் மேலாண்மை பெறும் சமுதாய மாற்றம், இந்த ஜனநாயகத் தேர்தல் முறையில் நடைபெறாது என்பது அவர்கள் கருத்து. மெள்ள மெள்ள மாற்றம் என்று காத்திருக்கும் நேரத்தில் பிற்போக்குச் சக்திகள், இலட்சியத்தை முறியடிக்கத் தலையெடுத்து நாசமாக்கிவிடும் என்பதும், பிற்போக்குச் சக்தி தலை யெடுக்காமல், சட்டென்று ஆயுதபலத்தின் முனைப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்து, பிற்போக்குச் சக்திகளைக் கிள்ளி விட வேண்டும் என்பதே அவர்கள் பொது உடமை சமத்துவத்தை நடைமுறையாக்கக் கையாளும் வழிமுறை.
ஆனால் இந்திய ஜனநாயகத் தேர்தலில், பொது உடமைக் கட்சி அமோக வாக்குகளைப் பெற்று ஆட்சி பீடத்துக்கு வந்தது. பல்வேறு மொழி, இன, சமய, பிராந்திய பேதங்களும் கலாசாரங்களும் கொண்ட இந்தப் பாரத நாட்டில் முன்குறிப்பிட்ட புரட்சி நடப்பைப் பற்றிக் கற்பனை கூடச் செய்ய முடியாது. எனவே இந்தியப் பொதுஉடமைக் கட்சி, ஜனநாயகத் தேர்தலில் போட்டி இட்டு, முறைப்படி கேரளமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்ய வந்திருந்தது. எனவே இந்த நிகழ்ச்சி, உலக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.
இந்தக் கட்சியினர் ஆட்சிக்கு வந்ததும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தாங்கள் வாக்களித்தபடியே செயல்படலாயினர். அமைச்சர்கள் தனியான ‘கனம்’பெற்று படகுக் கார்களில் பவனி வரவில்லை. மக்களோடு மக்களாக எந்தவொரு ஆடம்பரமுமின்றி, ஆட்சி செய்யலானர்கள். நிலச்சீர்திருத்தம், கல்வி மேம்பாடு என்று மளமளவென்று வாக்குறுதிகள் தேர்தல் நேரச் சொல்லலங்காரங்களல்ல என்று அவர்கள் நிரூபிக்க முற்பட்டனர். ‘அந்த நாளைய தியாகங்கள்’ என்ற குதிரையிலேறிச் சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியாளருக்கு அடிவயிற்றில் கிலி பிடித்தது. இந்தக் கேரள முன்னோடிகளை இப்படியே செயல்படவிட்டால், இவர்களுடைய பொய்க்குதிரைகளின் கதி என்னவாகும்?
ஆனால், டெல்லியில் பிரதமராகப் பதவி வகிப்பவர் யார்?
ஜவாஹர்லால் நேரு…
1927ம் ஆண்டு சோவியத் நாட்டின் பொதுவுடமைப் புதுமைகளைக் கண்டு கிளர்ச்சியுடன் மகளுக்கு எழுதியவர். முதலாளித்துவத்துக்கும் நில உடமைப் பிரபுத்துவத்துக்கும் கடும் எதிரி என்று தன்னை இனம் காட்டிக் கொள்ள சமதர்ம மந்திரம் ஓதுபவர். உலகத் தலைவர்களிடையே ‘ஆசியாவின் ஜோதி’ என்ற புகழ் பெற்றவர்.
இவருடைய தலைமையில் இவர் கண்முன் நியாயமாக ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்திருக்கும் பொது உடமை அரசுக்குத் தீங்கிழைக்கலாமா? குழிபறிக்க முடியுமா? வேறு யார் தலைவராக வந்தாலும் அவர் மீது நேருவின் ஒளிபடியாமல் இருக்க முடியாது. நேருவின் கை அந்த ஆட்சிக் கலைப்பில் இருப்பதாகவே கூச்சல் எழும். ‘நேரு’ என்ற பெருமகனுக்கு அவர் புகழுக்கு, நேர்மையான ஆட்சியைக் கலைத்தவர் என்ற களங்கம் வரலாமா?
எனவே இந்திரா தலைவியாக்கப்படுகிறார். தேர்ந்தெடுத்தல் என்பதற்கு இங்கு ஏகமனதான நியமனம் என்பது தான் பொருள்.
மக்கள் மனங்களில் காங்கிரஸ், இராம இராச்சியத்தைத் தோற்றுவிக்கும் பாரம்பரியத்தில் வந்ததென்ற பிரமையை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் காங்கிரஸ் வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற சமத்துவத்தை முன்வைத்து ஆதரிச நாயகரான நேருவின் ஆட்சியில், ஓர் ஆட்சிவதம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
இது ஒரு வாலிவதம் தான்.
இந்திரா இந்த வதத்தைச் செய்வதற்காகவே ஓராண்டுக் காலத்துக்குப் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மாநாடு, தலைமையுரை என்ற சடங்குகள் ஏதுமின்றி, பதவி வகித்து எதிர்பார்த்ததைச் செய்து முடித்தார். அப்படி எந்த சடங்குகளுமில்லாமல் காங்கிரசின் தலைமைப் பதவியை அலங்கரித்துச் சென்றவர் இந்திரா ஒருவரேதாம்…
இந்திரா மட்டும் இதை மனமொப்பிச் செய்திருக்க முடியுமா? தந்தையின் சோஷியலிசப் பாடங்களில், தம்முடைய அநுபவங்களில், இளமையிலிருந்து ஊறிவந்து பொருளாதார சமத்துவக் கருத்துக்களில் அவர் மனம் கொண்டிருக்கவில்லையா? ஆடம்பரமான செல்வக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இந்திராவின் இளமைப் பருவமே வித்தியாசமாக இருந்திருக்கிறது. இத்தகைய இந்திரா, காங்கிரஸ் கட்சியின் மேலாண்மைக்கு ஊறு ஏற் படும் ஒரு நியாயமான ஆட்சியைக் கவிழ்க்கும் ஒரு செயலுக்கு எப்படித் தம்மை உட்படுத்திக் கொண்டார்?
ஒரு பெண், இளமையில் பெற்றோர், வாலிபப் பருவத்தில் கணவன், முதிர்ந்த வயதில் மக்கள் என்ற சார்பிலேயே செயல்படுகிறாள். அவளுக்கென்ற தனித் தன்மை இல்லை என்ற கருத்தை உண்மை என்று ஒப்ப வேண்டும். இல்லையேல், இவர்களுடைய சோஷலிசப் பார்வை என்பது வெறும் வெளி வேஷம்; உள்ளத் தினுள்ளே, ஆட்சி செய்யும் காங்கிரஸ்-பதவி என்ற சுயநலங்களில் தான் இயங்கி இருக்கிறாள் என்பதை ஒத்துக் கொள்ளும்படி இருக்கிறது.
எது எப்படியாயினும், இன்றைய கேரள-பொது உடமை அரசைக் கலைத்த நியாயமற்ற செயல், காங்கிரஸின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளிதான்; அந்தப் புள்ளியைக் குத்துவதற்கு இந்திரா பொறுப்பேற்றிருந்தார்.
வீட்டுச் சொந்தக்காரருக்கு, மழைக்கு ஒதுங்க வந்த ஏழை எளியவருக்கு இடம் தர மனமிருக்காது, ஆனால் அந்தப் பழியை அவர் ஏற்க மாட்டார். “நான் என்ன செய்யட்டும்பா! வீட்டிலே அம்மா வீணா சத்தம் போடு வாங்க. உங்களுக்குக் கஷ்டமா இருக்கும். வேற எங்கனாலும் பார்த்துப்போங்க?” என்பார்!
பெண்…
பழி ஏற்க அவள் உகந்தவள்.
இந்தி விதி இந்திராவையும் விட்டு விடவில்லை.
முதல் தடவையாக ஃபெரோஸுக்கு இதய நோய் கண்ட போது இந்திரா உள்ளுறக் கலங்கிப் போனார். பல ஆண்டுகள் நெருங்கி உணரும் சந்தர்ப்பம் இசையாது இருந்த தம்பதி, பதினான்கும் பன்னிரண்டுமாக இருந்த இரு புதல்வர்களுடன் காச்மீரத்திலுள்ள நேரு குடும்ப மூதாதையர் இல்லத்தில் ஓய்வாக இருந்து மகிழ்ச்சி காணச் சென்றனர். இதய நோய்ச் சிகிச்சையில் இருந்து உடல் தேறி வரும் கணவருடன் மிக அன்பாக, பரிவாக ஒன்றி மகிழ்ச்சி கண்டார். அழகிய சூழல்; அரசியல் சந்தடிகள் அன்றாட நியமங்களில் புகுந்து குழப்பாத தனிமை. கணவர், மனைவி, புதல்வர்கள் பெற்றோர்...
இந்தக் குடும்ப நிறைவுக்கு ஏது ஈடு இணை?
சில வாரங்கள் உடலுக்கும் மனங்களுக்கும் உற்சாகமும் தெம்பும் பெற்றுக் கொண்டு டெல்லி திரும்பினார்.
இந்திரா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். ஃபேரோஸும் வழக்கப்படி முழுமூச்சுடன் தம் பணிகளில் ஒன்றினார்.
என்றாலும் இதயம் ஏற்கவில்லை. மீண்டும் செப்டம்பர் 1960இல் இதய நோவு அவரைத் தாக்கியது. அப்போதும் இந்திரா கேரளத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். செய்தி எட்டியதும் விரைந்து பறந்து கணவரின் அருகாமைக்கு வந்தார். கருத்துடன் அருகிருந்து பேணினார். அடுத்தநாளே, செப்டம்பர், ஒன்பதில், ஃபெரோஸ் மனைவியின் கையைப் பற்றியவாறே உயிர் துறந்தார்.
இந்திரா துயரம் தாங்காதவரானார்.
நண்பர் ஒருவருக்கு இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதினார்.
“துயரம் தாங்க முடியாமலிருக்கிறது. நானும் ஃபெரோஸும் மனவேற்றுமை கொண்டு சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இத்தனை ஆண்டுகளில் எங்கள் பந்தம் நலிந்தோ பிரிவை நாடியோ போனதில்லை. மாறாக எங்கள் பிணைப்பு, நட்பு, சிநேகம், இன்னமும் இறுக்க மாகவே வலிமை பெற்று வந்திருக்கிறது. பிள்ளைகளுக்கு ஒரு தாயின் அன்பை விட தந்தையின் ஆதரவும் அருகாமையும் வேண்டியிருக்கும் இந்த முக்கியமான பருவத்தில், தந்தை இல்லாதவராகி விட்டார்… நான் என்னுள் வெறுமையாகிப் போனேன். உயிர்த்துவம் மடிந்து விட்டது…” இதயத்தைத் தொடும் ஆற்றாமை இது.
“திருமணத்தின் பயனே பிள்ளைகள்தாம். தாய்மைப் பேறில்லாத குடும்ப வாழ்க்கை வாழ்க்கையா?” என்று தீவிரமாக மருத்துவர் எச்சரிக்கைகளை மீறி இரண்டு மக்களைப் பெற்ற இந்திரா, அவர்கள் நன்கு வளர்க்கப்பட வேண்டும் என்ற இலட்சியமும் கொண்டிருந்தார். மக்களுக்குத் தாயன்புடன் தந்தையின் அரவணைப்பும் நெருக்கமும் மிகவும் அவசியம் என்று, வாரந்தோறும் சிறுவர்களை அழைத்துக் கொண்டு டெல்லிக்கும் லக்னௌவுக்குமாகப் பாவு போட்டாரே? அந்தப் பிள்ளைகளின் வளர்ப்பு அவர் கருதியபடி நடந்ததா, இல்லையா என்றால், இல்லைதான்.
பிரதம மந்திரியின் வீட்டு ஆடம்பரச் செல்வாக்கும் எப்போதும் குழுமியுள்ள துதிபாடுவோரின் இச்சகமும் போலியான வாஞ்சைகளும் பிள்ளைகளுக்கு உண்மையான நடப்பியல் உலக வாழ்வின் உண்மைகளை மறைத்துவிட்டன. உண்மை உலகம் தெரியாமலே அவர்கள் வளர்ந்தனர் எனலாம். மூத்தவன் ராஜீவ் இயல்பில் எளிமை விரும்பும் சங்கோசி என்றாலும், இளையவன் சஞ்சய் அப்படி இல்லை. தான் இந்திய நாட்டை ஆளும் பிரதம மந்திரியின் பேரப் பிள்ளை, அரசிளங்குமரன் என்ற மேலான ஆணவக்கருத்தில் பதம் பெற்றுக் கொண்டிருந்தான்.
இந்தப் பையன்கள் எளிய நடுத்தர வருக்கப் பிரதி நிதியான தந்தையின் அரவணைப்பிலும், அருகாமையிலும் திளைக்கும் தனித்ததொரு வீட்டில் தாயன்பு மீதூர வளர்ச்சி பெற்றிருந்தால், அவர்கள் உலகை வேறுவிதமாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். உழைப்பு, தன்னலம் கருதா மேன்மை ஆகிய குணங்கள் இயல்பில் படிந்துவிட்டிருக்கும்.
மூத்தவன் ஒழுங்கு பாலிப்பதில் தாய் சொல்லைக் கேட்டு நடப்பவனாக இருந்தாலும், இளையவன் கோடுகளைத் தாண்டிச் செல்வதில்தான் கருத்தாக இருந்தான். கல்வி ஒழுக்கம் என்ற கருத்தோ, நாட்டமோ அவன் மனதைத் தீண்டவேயில்லை எனலாம்.
செல்வக் குடும்பங்களில் உதித்த சிறுவர்களுக்கும், அரசிளங்குமரர்களுக்குமே பெரும்பாலாகக் கல்வி பயிற்றிய டேராடூன் பள்ளிக்கு இச்சிறுவர்கள் அனுப்பப்பட்டனர். தான் பிரதமரின் பேரப்பிள்ளை என்ற மிதப்பில், சஞ்சயின் அத்துமீறும் செயல்கள் பள்ளி ஆசிரிய நிர்வாகிகளுக்கு தலை வேதனையாயிற்று. இந்திரா, வேறு வழியின்றி அவன் பள்ளிப் படிப்பை முடிக்காத நிலையிலேயே அவனை டெல்லிக்கு அழைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ராஜீவுக்குத் தந்தையின் இயந்திர-தொழில் நுட்பவியல் ஆர்வம் மிகவும் கவர்ச்சியாக இருந்தது. சஞ்சயோ, அந்த வயசிலேயே ‘அரசியல்’ நாட்டம் கொண்டவனாக, லோக் சபாவில் பார்வையாளர் காலரியில் இருந்து தந்தையை மிக உன்னிப்பாகக் கவனித்தான்.
இந்தப் பையனை உருப்படியாக்க, மேலே தொழில் நுட்பக் கல்வியோ, பயிற்சியோ அளிக்கலாம் என்று முடிவு செய்தார் இந்திரா. உள்நாட்டில் எங்கே கல்வி பயில அனுப்பி வைத்தாலும், பிரதம மந்திரியின் பேரர்கள் என்ற சார்பை மீறி, சுயச்சார்பும் தனித்துச் செயல்படும் திறமையும் வளருவது அசாத்தியம். குறிப்பாக சஞ்சயனுக்கு அந்த எண்ணம் அகல வேண்டும். எனவே பையன்களை வெளி நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்து, இந்திரா தீவிரமாக இருந்தார். இங்கிலாந்துக்கு அனுப்பப் பெற்றனர்.
இது குறித்து அந்நாளைய லோக்சபாவில் கேள்விகள் எழாமல் இல்லை. “நேரு குடும்பத்துப் பையன்கள், இங்கு இல்லாத உயர் கல்வி பெற இங்கிலாந்துக்கு அனுப்பப் பெற்றிருக்கின்றனரா? சுதந்திர இந்தியாவில் இந்தத் தொழில் நுட்பக் கல்விப் பயிற்சிக்குக்கூட வாய்ப்பு இல்லையா?… இதற்கு மட்டும் அந்நியச் செலாவணி எப்படிக் கிடைக்கிறது?” என்று எதிர்க்கட்சியினர் குடைந்தார்கள்.
இக்கேள்விகளைச் சமாளிப்பது அப்போது கடினமாகவே இல்லை. நேருவின் புத்தக விற்பனையிலிருந்து பெறும் அந்நியச் செலாவணி பையன்கள் படிப்புக்குச் சரியாக இருக்கும் என்று காட்டப்பட்டது. ஆனால், இந்திரா கனவு கண்டாற்போல், பையன்கள் கல்வியிலும் திறமையிலும் பிரகாசித்தார்களா? குறிப்பாக சஞ்சய், அறிவியலிலும் ஆற்றலிலும் ஒழுக்கப்பண்பிலும் நேரு குடும்ப விளக்கை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் உருவானானா?
ராஜீவ் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தான். சராசரி மாணவர்களைப் போல்தான் படித்தான். காதலும் வந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி பட்டம் பெறவில்லை. படிப்பை விட்டுவிட்டுத் தொழில் நுட்பம் பயில வேறு ஒரு தொழில் நிறுவனத்தில் சேர்ந்தான். அதிலும் ஓராண்டே நிலைத் தான். பட்டயம் ஏதும் பெறவில்லை. இதற்குள் சோனியா என்ற இத்தாலிய நங்கையின் காதலில் உறுதியாக நின்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தான். இங்கிலாந்துக்கு வந்த தாய் தன் காதலியைச் சந்திக்க ஏற்பாடு செய்தான். இந்திராவுக்குத் தம் மகனின் காதலியைப் பிடித்துப் போயிற்று. அவர்கள் காதலும் உறுதியாக இருப்பதாகவே நினைத்தார் என்றாலும் திருமணத்துக்கு அவசரப் படவில்லை.
ராஜீவ் அரசியலில் சிறிதும் ஈடுபாடு கொண்டிருக்க வில்லை. பல்கலைக்கழகத்திலும், மாணவரிடையேயும் வேறு அரங்குகளிலும் அரசியல் விவாதங்கள் நிகழ்வதுண்டு. இந்திய அரசியல் தொழிற்பயிற்சி அது. சஞ்சய் இரண்டான்டுகளே அதில் நிலைத்திருந்தான். பிறகு அவனுக்குப் பிடிக்கவில்லை.
“என்ன கற்றுக்கொள்ள வேண்டுமோ, அதெல்லாம் நான் கற்றுக்கொண்டாயிற்று. மேலும் இங்கு காலத்தைக் கழிப்பது வீண்!” என்றான்.
பையன்கள் இங்கிலாந்திலிருந்த காலத்தில் இந்திய அரசியலில் குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகளும் விளைவுகளும் ஏற்பட்டிருந்தன.
பஞ்சசீலக் கொள்கையைப் பற்றி நின்ற நேருவுக்கு, சீனப் படையெடுப்பு நெஞ்சில் விழுந்த ஓர் அடியாயிற்று. அவர் உள்ளுற ஆடிப்போனார். 1964ம் ஆண்டுத் துவக்கத்தில் புவனேசுவரம் காங்கிரசில் அவர் பங்கு கொண்டபோது பாரிச வாயுவினால் பாதிக்கப்பெற்றார். அதே ஆண்டில் மே மாதக் கடைசி வாரத்தில் அவர் காலமானார். பதினேழாண்டுக் காலம் ‘ஏகபோகம்’ என்ற நிலையில் உறுதியாக நின்ற காங்கிரஸ் ஆட்சியின் தூண் சாய்ந்து விட்டது.
இந்திராவைப் பொறுத்தமட்டில் தந்தையின் மறைவு எதிர்பார்த்தது தானென்றாலும், அதற்குள் பையன்கள் இருவரும் ஒரு வாழ்வுக்கு உருவாகி நிலைக்கத் தலை தூக்கி இருக்கவில்லை. தம் வாழ்க்கையில் இந்திராவுக்கு இது ஒரு பெருங்கவலையாகவே இருந்தது.
பாட்டனாருக்கு வாரிசான பேரர்கள் பறந்து வந்தனர். மூத்தவன் கொள்ளி போட்டான். திரிவேணி சங்கமத்தில் இறுதிச் சடங்கும் செய்தான். நேரு காலமானதும், அதுகாறும் மறைவில் கேட்கப்பட்டு வந்த “நேருவுக்குப் பின் அரசியலில் யார்?” என்ற வினா தலைதூக்கியது.
இதற்கு விடை ஊகமாகவே தொக்கி நின்றது.
ஜனநாயகத்தின் பெயரில் ஒரு மன்னர் பரம்பரை உருவாக்கப் பெறுமா என்ற மறு கேள்விதான் அது.
இடைக்காலப் பிரதமராகக் குல்ஜாரிலால் நந்தா நியமனமானார். இந்திரா அப்போதே அரசியல் பொறுப்பேற்க அழைக்கப்பட்டார் என்றும் அப்போதைய துயர நிலையில் அவர் பதவியேற்க முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
எனவே பொருளாதாரம் சார்ந்து அடிமட்டத்தில், கட்சியின் வேர் முனை நிலையில் உயிரோட்டமாக இயங்கி வந்த லால்பஹாதூர் சாஸ்திரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாஸ்திரி பிரதமரானதும், மீண்டும், வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்க இந்திரா அழைக்கப்பட்டார் என்றும், அவர் அத்தகைய கனமான பொறுப்பை ஏற்க முன் வரவில்லை என்றும், அதிகக் கனமில்லாத தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பொறுப்புத் தரப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அவர் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியதை அனைவரும் அறிவோம்.
இதே விஷயம் குறித்து, இன்னோர் அரசியல் பிரமுகர், வேறு விதமாகவும் கருத்துரைத்திருக்கிறார்.
“சாஸ்திரிஜிக்கும் இந்திராவுக்குமிடையே அவ்வளவு சுமுகமான பிடிப்பு இருந்திருக்கவில்லை என்றும், சாஸ்திரிஜி நேரு குடும்பத்தலைவர் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று அவசியம் கருதினாலும் நேருவின் சகோதரி திருமதி விஜயலட்சுமி பண்டிட்டுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதையே விரும்பினார்; ஆனால் மற்றவர் முயற்சியினால் அதை அவர் இந்திராவுக்கு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று கூறுகிறார்.
மேலும் அவர், சாஸ்திரிஜி தாஷ்கன்ட் உடன் படிக்கையில் கையெழுத்திட்டு விட்டுத்திரும்பியதும் முதல் காரியமாக இந்திராவை இங்கிலாந்து நாட்டுக்கு இந்தியத் தூதராக்கி, இந்த அரசியல் அரங்கைவிட்டே வெளியேற்ற எண்ணம் கொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கிறார்.
எது எப்படியோ சாஸ்திரிஜி தாஷ்கன்டிலிருந்து உயிருடன் திரும்பி வரவில்லை.
இந்திரா, அடுத்தமுறை பிரிட்டனுக்கு இந்தியப் பிரதமராகத்தான் விஜயம் செய்தார்.
சாஸ்திரியின் அமைச்சரவையில் இந்திரா மிகப் பொறுப்புடனேயே பணியாற்றினார். 1965 இல் இந்தியா பாகிஸ்தான் போர்மூண்ட போது சாஸ்திரியின் அமைச்சரவையில் இருந்து. போர்முனைக்குச் சென்று வீரர்களைப் பெருமைப்படுத்தி ஊக்கிய முதல் அமைச்சர் இந்திராதாம்.
லால்பகாதூரின் பதவிக்காலத்தை, இந்திரா பதவிக்கு வருவதற்கான வழி அமைக்கும் ஓர் இடைக்காலம் என்றே கூறலாம்.
இது ஜனநாயகம்-வம்சாவளி அரசல்ல என்பதை அறிவுறுத்துவது போல் மக்களுக்கு ஒரு சமாதானமாகவே அமைந்தது. இதுவும் எப்படியோ திட்டமிட்டாற் போல் தான் நிகழ்ந்துவிட்டது எனலாம்.
மீண்டும் குல்ஜாரிலால் நந்தாதான் தற்காலிகப் பிரதமரானார். ஒருபுறம் ஜனநாயகத்தில் பொறுப்பு ஏற்கும் ஆட்சியாளர் மக்களுக்குத் தொண்டாற்றுவதற்கே ஏற்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தத் தொண்டாற்றும் பொறுப்புக்குத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களும், ஏற்றுக் கொள்ளபடாதவர் களும் அந்நாளை முடியரசு வாரிசுகளைப் போல் செயல்படுவதையே வரலாறு மெய்ப்பித்து வருகிறது. சூழ்ச்சிகளும், திரை மறைவு நாடகங்களும், சதிகளும் இன்றும் நடக்கின்றன. தேர்தலுக்கு நிற்பதே பதவி என்னும் ‘கரும்புக் கட்டி’க்குத்தான் என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. காந்தியடிகள் இலட்சியமாக்கிய அரசியல் வைணவ தருமத்திலிருந்து, அந்தப் பாதையிலிருந்து அகன்று அகன்று, அந்த இலட்சியத்தையே அழித்து விட்ட கயமைகளின் உச்சத்துக்கு இன்றைய இந்திய அரசியல் வந்திருக்கிறது என்றால் மிகையில்லை.
குல்ஜாரிலால் நந்தாவே தொடர்ந்து ஏன் பிரதமராகியிருக்கக் கூடாது? அவருக்குக் கட்சியில் செல்வாக்கோ ஆதரவோ இல்லை. ஒன்றிரண்டு நாட்கள் மரப்பாச்சி ராஜாவாக இருப்பதற்குத்தான் தகுதியாக இருந்தார்.
இந்திராவைப் பிரதமராக்குவது என்ற முடிவை நேரடியாகச் சொல்லாமல் ‘ஜனநாயகம்’ என்று சுற்றி வளைத்துச் செயற்படுத்திய பெருமை தமிழகத்திலிருந்து அகில இந்தியக் காங்கிரசின் தலைமைப் பதவியை அப்போது அலங்கரித்திருந்த காமராசரையே சாரும். அக்காலத்தில் காங்கிரசில் ஒரு மூத்த தலைவர்களின் அணி கட்சியை இயக்குவதில் பெரும்பங்கு ஏற்றிருந்தது. இந்த அணியினர் தங்கள் செல்வாக்குக்கு உட்பட்ட ஒருவரைப் பிரதமராக்க வேண்டும் என்று எண்ணினார்கள்.
மொரார்ஜி தேசாய் நேருவின் காலத்தில் அவருடைய ‘சகா’வாக அமைச்சரவையில் இருந்தார். அவர் இப்போது பிரதம மந்திரி பதவிக்குப் போட்டியிடுபவராக இருந்தார். அவர் பிரதமராவதில் இந்த மூத்த அணியினருக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் இவர்களுடைய செல்வாக்கு அவரிடம் செல்லாது. குல்ஜாரிலால் நந்தாவினால் பயனில்லை. காங்கிரஸ் கட்சியில் நேருவை இழந்ததிலிருந்தே பொலிவு குன்றி உட்பூசல் மலிந்திருந்தது. சில அமைச்சர்களின் மீதான லஞ்ச ஊழல் குற்றங்களும் பொருளாதார நெருக்கடியும் மக்களிடையே கட்சியின்பால் ஓர் அதிருப்தியை விளைவித்திருந்தது.
காமராசரே பிரதம மந்திரிப் பதவியை ஏற்கலாம். அவர் மக்களிடையே செல்வாக்கு மிகுந்த தலைவர்தாம். என்றாலும் தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர், பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வரும் இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்படும் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பார்?… சர்வதேச அரங்கிலும் அவர் இந்தக் குறைபாடுகளுடன் எப்படிச் சோபிக்க முடியும்?
எனவே, இந்திராதான் எல்லாவகைகளிலும் பொருத்த மானவராகத் தெரிந்தார். நேரு குடும்பத்தின் கவர்ச்சி… அவர் மகளிடம் அமைந்து இருந்தது. சர்வதேச அரங்கில் ஏற்கெனவே அறிமுகமானவர். இந்திய அரசியலிலும் தந்தையின் நிழலாக இருந்து ஒவ்வொரு கட்டத்திலும் மக்களை நன்கு உணர்ந்தவர்; அறிந்தவர்.
கட்சியில் அனைவரும் இந்த முடிவை ஒப்புக் கொண்டாலும் மொரார்ஜிதேசாய் விடவில்லை. போட்டியிட்டார்… போட்டி ‘ஜனநாயக’ மரபென்று ஒரு சப்பைக் கட்டாகவும் பயன்பட்டது. இந்தியக் குடியரசில் முதல் பெண்ணரசு உதயமாயிற்று.
இந்திரா தம் நாற்பத்தொன்பதாம் வயதில் இந்தியத் துணைக் கண்டத்தை ஆளப் பொறுப்பேற்றார்.
ஜனநாயகம் புதிய மன்னர் பரம்பரைபோல் ஓர் ஆட்சியை ஒப்புக்கொண்டது. என்றாலும், இவர் பழைய கருக்கல்களைத் துடைத்துக் கொண்டு ஒளி காணப் புறப்பட்ட புதிய நம்பிக்கை எனலாம். சீதை, நளாயினி வாரிசல்ல, புதிய பெண்மையைத் துலக்க வந்த எடுத்துக்காட்டாக உயர்ந்த சிகரத்தைத் தொட்டிருக்கிறார். இவர் ஒரு மகள்; மனைவி; ஒரு தாயுமாவார். இத்துணை பரிமாணங்களுடன், எழுபது கோடி மக்களை ஆட்சி செய்பவராக, இராஜதந்திரியாகக் கோலோச்ச வந்திருக்கிறாள். இவருடைய தனித்தன்மையும் முழு ஆற்றலும் வெளிப் படக்கூடிய சோதனைக் களத்தில் இறங்கியிருந்தார் என்றும் கொள்ளலாம்.
தாய் பிரதமரானதும் ராஜீவும் சஞ்சயும் அதே ஆண்டில் இந்தியா திரும்பிவிட்டனர். ராஜீவ் திருமணம் செய்து கொள்ளும் உறுதியில் இருந்தான். அத்துடன் விமான மோட்டும் பணியையும் தனக்கென்று நிச்சயித்துக்கொண்டு பயிற்சி பெறச் சேர்ந்தான்.
சஞ்சய்...?
பிரதம மந்திரியின் இளவரசு கட்டிலடங்காக் காளை. இந்திரா ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக அவருக்குத் தீர்க்க வேண்டிய பல பிரச்னைகள் இருந்தன. ஆகஸ்ட் 1964இல் இந்திரா ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பிறகே தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சரானார்.
இப்போதோ அவர் பொதுத்தேர்லைச் சந்திக்க வேண்டும். 1967 இல் அதைச் சாதித்தார். தேர்தலில் மிக எளிதாகப் பெரும்பான்மை வாக்குகள் பெற்று, தன் பிரதி நிதித்துவத்தை வெற்றியுடன் உறுதியாக்கிக் கொண்டார். இதற்குப் பிறகுதான் சிக்கல்கள் வலுப்பெற்றன.
காங்கிரஸின் மூத்த அணியினர் தன்னை அவர்கள் கைப்பாவைபோல் சார்ந்து நடக்க வேண்டும் என்ற நோக்குடனேயே தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்பதை இந்திரா உணர்ந்து கொண்டார். இவள் அரசியல் அநுபவமில்லாதவள். இன்னும் தேர்தலைச் சந்தித்தவளில்லை. எனவே பெயருக்கு இவளைப் பாவைபோல் வைத்துக் கொண்டு தாமே ஆட்சி செய்யலாம் என்று மனப்பால் குடித்திருந்தவர்கள் எதிர்பாத்திராதது நடந்தது.
இந்திரா தம் அமைச்சரவையில் தம் வயதை ஒத்த இளைஞர்களின் முற்போக்கு எண்ணங்களுக்கு ஊக்கம் அளித்தார். இந்த இளைஞர் அணியினரின் ஆதரவுடன் பல முற்போக்கு நடவடிக்கைகளை இந்திரா மேற்கொண்டார். அவற்றில் முக்கியமானது, 1969இல் மே மாதம், பதினான்கு வங்கிகளைத் தேசிய மயமாக்கியதுதான். அதுகாறும் வங்கிகள் வசதிகளுள்ள செல்வருக்கே உதவிவந்தன. மிகப் பெரிய புள்ளிகளே தொழில்களுக்காக வங்கிக்கடனும் சலுகைகளும் பெற முடிந்தன. இந்த நாட்டின் ஏழை எளியரும், பாமரரும் பயன் பெற வேண்டும், தேசியப் பொருளாதார மேம்பாட்டில் அவர்கள் பங்கும் இன்றியமையாதது என்ற நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இதுமட்டுமின்றி, இந்திரா அதுகாறும் வழங்கப்பெற்று வந்த அரசமானியங்களையும் ஒழித்தார். இந்தத் தீவிர நடவடிக்கைகள் இந்தியாவின் கோடானுகோடி மக்களுக்கும் இந்திராதான் உண்மையான சமதர்மவாதி, ஏழைப் பங்காளர் என்ற மதிப்பை ஏற்றுவித்தது. ஏற்கெனவே 1967ம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் கோட்டையாகத் திகழ்ந்த தென்னாடு தமிழகப் பிராந்தியக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு வழிவகுத்து விட்டது. இதே தேர்தலில் காமராசர், முன்பின்னறிந்திராத இளைஞன் ஒருவனிடம் தோற்றுப்போனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திரா, சிறிது தீவிரத்துடனும் கருத்துடனும் செயல் படவேண்டியிருந்தது. இந்த நிலையில், ‘ஸின்டிகேட்’ என்ற மூத்த அணியினர், இந்திராவை உண்மையான நேருவின் வாரிசு என்று அவருக்குரிய மதிப்பையும் மரியாதையையும் அளித்திருந்தால் ஒத்துழைத்திருந்தால், நாட்டின் அரசியல் ஒருகால் வேறு மாதிரி உருவாகியிருந்திருக்கலாம். அப்படி யிருந்திருந்தால் இந்திராவுக்குத் தன்னை உறுதியாக நிலைப் படுத்திக் கொள்வதே முதன்மை பெற்றிருக்காது. தன் பதவிக்கு எப்போதும் ஊறு வந்துவிடலாம் என்ற உணர்வே எப்படியேனும் அந்த நிலையை வெல்ல வேண்டும் என்ற தீவிரத்துடன் செயல்பட வைக்கிறது, இந்திரா ஒரு சர்வாதிகாரிபோல் செயல்பட்டார் என்றால், அது இந்த பயத்திலிருந்தே துவக்கமாகிவிட்டதெனலாம்.
1969 நவம்பரில், மூத்த அணியினரான காங்கிரஸ், இந்திராவைக் கட்சி நீக்கம் செய்தது. இந்திரா அதே மூச்சுடன் தன் இளைய அணியினரின் பலத்தில் ‘இந்திரா காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார்.
இவருடைய பிம்பம், சாமானிய மக்களின் தெய்வமாக உருவகமாயிற்று. சுறுசுறுப்புடன் மக்களுக்குத் தேவையான முன்னேற்றத் திட்டங்களைக் கொண்டுவரும் காங்கிரஸ் கட்சி இவருடையதே. அந்த மூத்த காங்கிரஸ் செயலிழந்த மாடு, ஊழல் மலிந்தது, ஓட்டமில்லாதது என்று மக்களிடையே பதிவு பெற்றன.
இந்த ஆரம்பம், இந்திரா-இந்தியா என்ற துதிபாடுபவர் கட்சியாக, காங்கிரஸ் வலிமை பெற்றது. அதுகாறும் கட்சிக்குள் ஜனநாயகப் பண்பின் சில இழைகளேனும் எஞ்சி யிருந்தாலும், அவையும் சுத்தமாக இல்லாமலாகிவிட, காலப்போக்கில் கட்சி அரசியலே இந்திரா, அவர் குடும்பம் என்ற பரிணாமம் பெற்றது.
ஆனால் இக்காலங்களில் இந்திரா இந்திய நாட்டின் தலைவர் மட்டுமில்லை, உலகத் தலைவர்களில் ஒருவர் என்று கருதப்படும் அளவுக்கு முன்னேற்றம் கண்டார்.
முக்கியமாக, 70-71இல் ஏற்பட்டது பங்களாதேஷ் பிரச்னை. இந்தப் பிரச்னையை, வெகு சாமார்த்தியமாகவும் தீரத்துடனும் அணுகித் தீர்வு காண்பதில் வெற்றி கண்டார். அமெரிக்கா, சோவியத் நாடு ஆகிய இரு வல்லரசுகளுக்கும் இடையே நட்புறவு, கூட்டுச் சேராக் கொள்கை என்ற கொடியைத் தூக்கிப் பிடித்து, உலக நாடுகளுக்கிடையே இந்தியாவின் புகழை ஏற்றி வைத்தார். ‘பங்களாதேஷ்’ பிறந்து, வெற்றி கண்டதும் இந்திரா, “பாரத ரத்னா” என்ற அரிய கௌரவத்துக்கும் உரியவராகப் புகழின் உச்சியில் ஒளிர்ந்தார்.
இந்த உச்ச நிலையை, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் தந்திரத்துடன் பயன்படுத்திக் கொண்ட இந்திரா அரசைக் கலைத்து ஓராண்டுக்கு முன்பாகவே பொதுத் தேர்தலை அறிவித்தார்.
அரசியல் அரங்கில் அன்னை இவ்வாறு மூச்சுவிட நேரமின்றி இயங்கிய காலத்தில், மூத்த புதல்வன் ராஜீவ், தன் இத்தாலியக் காதலி சோனியாவை 1968இல் மணந்து கொண்டிருந்தான். 1970-ம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தைக்கு தந்தையானான். 1971-ம் ஆண்டில் பொதுத் தேர்தலின் போது, சோனியா அடுத்த குழந்தையை எதிர்பார்த்திருந்தாள். ராஜீவ், மாதச் சம்பளம் பெறும் விமான ஓட்டியாகப் பணிபுரிந்து கொண்டு, பிரதம மந்திரியின் மாளிகையில் குடும்பம் நடத்தினாலும், அரசியல் வாடையே படலாகாது என்று ஒதுங்கியிருந்தான்.
சஞ்சயோ, எந்த ஒரு தயக்கமோ தடையோ இல்லாமல் அரசியல் பிரவேசம் செய்திருந்தான். தன்னைத் தட்டிக் கேட்பார் யாரும் கிடையாது என்றும் அனைவருக்கும் புரிய வைத்துக் கொண்டிருந்தான். 1970-ம் ஆண்டின் இடைக் காலத்தில், மனேகா அவன் மனைவியாக இந்திராவின் இல்லத்தில் புகுந்திருந்தாள்.
கணவனும் மனைவியும் அரசியலில் சிகரக் கொடியைப் பற்றும் உந்துதலும் வேகமும் கொண்டிருந்தனர். அவர்கள் முழுமூச்சுடன் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இந்திரா ஊக்கமாகவே இருந்தார். இந்த இளைய மைந்தனின் அடாவடித்தனம் கவலையையும் தலை வேதனையையும் கொடுத்திருந்த காலம் இல்லை இது. அரசியல்களில் வெற்றிக்குத் தேவையான துணிவும் இது தான் என்றும், சஞ்சய் இதற்கே உகந்தவன் என்றும் ஆமோதித்து அவனை ஏற்றுக்கொண்டாக வேண்டியதாகி விட்டது. அவனைத் தடுக்கவும் தவிர்க்கவும் சக்தியில்லாத தாய்மை, அவனுடைய போக்கை நியாயப்படுத்திக் கொண்டது.
இந்திரா 1971 தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றார். 1967ம் ஆண்டுத் தேர்தலில் பிரதம மந்திரிப் பதவிக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ளும் வெற்றியைப் பெற்றார். ஆனால், 71ம் ஆண்டுத் தேர்தல், மூத்த அணியினிடமிருந்து பிரிந்து, ‘தானே’ கட்சியின் சக்தி என்ற உறுதியை நிலை நாட்டிக் கொள்ளும் வெற்றியாக அமைந்தது. 1967 இல் பிரிக்கப்பட்டிராத காங்கிரஸ் பெற்ற இடங்களைக் காட்டிலும் எழுபது இடங்களைக் கூடுதலாக வென்று, ‘ஏக சக்ராதிபதி’ என்ற உயர்நிலையை எட்டினார்.
மூத்த தலைவர்களின் கூட்டணி இருந்த இடம் தெரியாமல் போயிற்று. இந்த வெற்றியில் சஞ்சய் தன் பங்கை விட்டுவிடுவானா? உயர் பதவிக்குரிய அதிகாரங்களை எடுத்துக் கொண்டு மனம் போனபடி பயன்படுத்திக் கொள்ளலானான். அவனுடைய மமதையும் துணிச்சலும் காட்டுத்தனமான ஆணைகளும், இந்திய அரசின் அநுபவம் வாய்ந்த மூத்த அதிகார வருக்க அலுவலரையும் துச்சமாகத் துக்கியெறியக் கூடியவையாக இருந்தன.
ஒரு ஜனநாயக அரசுக்கு, ஒரு தனி நபரிடம் இவ்வாறு அதிகாரம் குவிவது, பெருங்கேட்டுக்கு முதற்படியாகும்.
இந்திரா அறிந்து தெரிந்து இதை எப்படி அநுமதித்தார்?
முடி மன்னர் ஆட்சிகளில் தனிநபர் அதிகாரமும் துதி பாடுதலும் இயல்பாகவே இருப்பதாகும். இதுவே முடியாட்சியின் குறைபாடுமாகும். மக்களுக்கும் மன்னருக்குமிடையே எந்த விதத்திலும் சமமில்லாத தொடர்பில்லாத வித்தியாச நிலையே, மக்களை மன்னாராட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழ வழி வகுத்திருக்கிறது.
அதை மாற்றிச் சீராக்குவதற்கான ஒரே வழிமுறை, எல்லோரும் வாக்குரிமை பெற்று, அதைச் சரியான வழியில் பயன்படுத்த ஓர் ஆட்சியைத் தேர்வு செய்வதுதான்.
ஆனால் இங்கே அந்த வழிமுறையைக் கையாண்டும் புண்ணியமில்லை. குடிப்பிறப்பே ஆட்சி தருமத்தை நிர்ணயிப்பதாக விடிந்துவிட்டது. ஜனநாயகம் சகல மக்களுக்கும் ஆட்சி உரிமையை வழங்குவதாகும். ஆட்சி புரிபவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. மக்களனைவரும் இந்த அதிகாரப் பொறுப்பில் பங்கேற்றிருக்கின்றனர்.
இந்த மக்களாட்சி தருமமே வெறும் கேலிக் கூத்தாக முடியும் வண்ணம் இந்திராவின் தலைமையில் சஞ்சய் ஒரு சர்வாதிகார ‘தருமத்’தை நடை முறையாக்கினான்.
நேருவின் ஆட்சியில் எல்லோருக்கும் வாக்குரிமை என்ற வாயில் திறந்து விடப்பட்டாலும், வாக்குரிமை என்ற நாணயத்தை சமுதாயத்தின் கடைசி மனிதர் வரையில் கல்வியறிவும் அரசியல் உரிமை பற்றிய உணர்வும் உடைய வராய்ப் பயன்படுத்த வேண்டும் என்ற இலட்சியமே முதன்மைப்படுத்தப்படவில்லை. இலட்சியத்தின் அடிப்படை கூட முக்கியமாகக் கருதப்பட்டிருக்க வில்லை. அப்படிக் கருதப்பட்டிருந்தால், மக்களுக்குக் கட்டாயக் கல்வி - அரசியல் அறிவு பெறும் திட்டம் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டிருக்கும். மாறாக, கல்வியறிவற்ற பாமர, கூன்குருடு ஊமை செவிடு தொண்டு கிழவர் - எல்லோரும் இந்த ஜனநாயகத்துக்கு வாக்குரிமை அளிப்பதே பெருமையாக எடுத்துக்காட்டப்பட்டது. நேருவின் ஆட்சிக் காலத்தில், இதுபற்றி விமரிசனம் செய்பவர் கூடச் செல்வாக்குப் பெறவில்லை.
ஆனால் இந்திரா ஒரு பெண் என்ற காரணத்தினாலேயே மூத்த அணியினர், நேருவுக்கு அளித்த மதிப்பை அளிக்க முன்வராமல் அவரைக் கைப்பாவையாகக் கருத நினைத்தனர்.
நேருவின் ஆட்சிக் காலத்திலேயே, இந்த நாட்டில் எந்த ஓர் ஏழைச் குடிமகனும் தார்மிக ரீதியில் ஆட்சிப் பொறுப்பேற்று, ஜனநாயக அரசின் தலைவராகலாம் என்ற இலட்சியம் பொய்த்துவிட்டது. மிகப் பெரும்பான்மையினரும் எழுத்தறிவற்ற வறுமையில் வாழும் மக்களாக இருந்தாலே குறிப்பிட்ட ஒரு சிலர் ஆட்சி பீடத்தில் நிலைக்க முடியும் என்ற உள்நோக்கே வெளிப்படலாயிற்று. அறிவார்ந்த சான்றோர் எவரும் அரசியல் அரங்கில் கால் பதிக்கவும், பெரும்பான்மை வாக்குரிமைகளைப் பெறவும் முடியாது என்றே தீர்ந்து விட்டது. ஆட்சி அதிகார உரிமை, சுய உரிமைகளாக, குடும்ப உரிமைகளாக, பாமர மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்டு, நேரு குடும்பம் இந்த நாட்டு ஆட்சி உரிமையைப் பெறுவதாகவே இந்த ஜனநாயகம் இத்தனை ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது.
நேரு ஆண்ட காலத்தில் காங்கிரசில் அவருக்கிருந்த செல்வாக்கு அவர் மொழிந்தவற்றை எல்லாம் அப்படியே வேதவாக்காக ஏற்றுக் கொள்ளும் மதிப்பைப் பெற்றிருந்தது.
அவருடைய ஐந்தாண்டுத் திட்டங்கள் மக்களின் பொருளாதார நிலையை மகோன்னதமாக உயர்த்துமென்று புகழப்பட்டது. நாட்டின் எல்லாச் சீர்கேடுகளுக்கும் இடமளிப்பது பெரும்பான்மை மக்களின் அறியாமை. அதை அப்படியே வைத்துக்கொண்டு, மேம்பாட்டுத் திட்டங்கள் என்று பொருளைச் செலவழிப்பது, உறுதியில்லா அடித்தளத்தில் உப்பரிகை கட்டினாற் போல்தான் என்பது நன்கு விளக்கமாகி யிருக்கிறது. அந்நியக் கடன்களும் பணவீக்கமும் பெருமுதலாளித் துவத்தையும் கள்ளச் சந்தையையும் வன்முறைகளையுமே ஊக்கமாகப் பெருக்கியிருக்கின்றன.
நேருவின் ஆட்சிக் காலத்திலேயே இந்தக் கேடுகளுக்கு வழி அமைந்துவிட்டது. இந்திரா-சஞ்சய் முழு தன்னாட்சி நடைமுறைக்கு அன்றே கால்கோள் இடப்பட்டிருந்தது என்றால் தவறில்லை.
இந்த நடைமுறை, மேலும் மேலும் ஆட்சி அதிகாரங்களைக் குவித்துக் கொண்டு பலப்படுத்திக்கொள்ள, மக்களுக்குக் கவர்ச்சித் தூண்டில் துணுக்குகள்போல் வங்கி தேசியம், பொதுத் துறை நிறுவனங்கள் என்று காட்டப் பட்டன. மக்களுக்கும் பெருமுதலாளித்துவம் வளர்த்த கறுப்புப்பன முதலைகளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வு என்பது நாளுக்கு நாள் ஆழ்ந்தும் அகன்றும் வந்திருக்கிறது.
கல்வி, சுகாதாரம், உணவு, உறையுள், காற்று, நீர் போன்ற இன்றியமையாத அடிப்படைத் தேவைகளும் வசதிகளும் இருபது அம்சத் திட்டம், ஐந்து அம்சத் திட்டம் என்ற காகிதப் பிரசாரங்களிலும் சுலோகங்களிலும், பாட்டுக்களிலும் ஏட்டுச்சுரைக்காயாக இட்டு நிரவப்பெற்றன.
எந்த ஒரு தகுதியுமின்றி அரசியலில் தன்னாட்சி செலுத்திவந்தத சஞ்சயின் ‘மாருதி லிமிடட்’ சிறுகார் திட்டம், அரசின் கோடிக் கணக்கான ரூபாய்களை விழுங்கி உருவாயிற்று. இதில் அண்ணி ஸோனியா, அவர் மக்கள் ராஹூல், பிரியங்கா ஆகியோர் பெயர்களையும் அவன் பயன்படுத்தியிருந்தான். சஞ்சய் காரணமான இந்த ஒழுங்கின் ஊழல்கள் தொடர்பாக லோக்சபாவில் கேள்விகள் எழுப்பப்பெறுவதையே இந்திரா தடை கட்டினார்.
“அவன் ஒரு சோனிக் குழந்தை; அவனை எப்போதும் பாதுகாக்க வேண்டும்” என்று ஒரு மூடத்தாய் பரிவு காட்டுவது போன்று, இந்திரா சஞ்சயின் அனைத்து அத்துமீறல்களுக்கும் ஊக்கம் அளிப்பதுபோல் இயங்கினார்.
சஞ்சயின் மனைவி மனேகா, கணவனுடன் இணைந்து, அடுத்த பிரதமரின் மனைவி என்ற உத்வேகத்துடன் அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டாள்.
இந்திராவின் அலுவலகத்தில் ஒரு கடைநிலை ஊழியராக இருந்து படிப்படியாக உயர்ந்து, உயர் பதவிக்கு வந்த ஒரு முக்கியமான அலுவலர், இக்காலத்தில் இந்திரா கவலை கனத்த முகத்துடனும், வெடுவெடுப்பும் சிடுசிடுப்புமாக மாறி விட்டதை குறிப்பிட்டிருக்கிறார். இந்திராவுக்கு உள்மனதில், நடப்பவை அனைத்தும் சரியல்ல என்ற உள் உணர்வு முரணாகவே இருந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மகனின் பாச அலைகள் அவரை எங்கோ தள்ளிச் சென்றன என்பதில் ஐயமில்லை.
காங்கிரஸ் கட்சிக்குள், சஞ்சயின் போக்குக்கு எதிர்ப்புக் காட்டியவர்கள், முகவரியற்றவர்களாக மாற்றப்படும் தண்டனை பெற்றனர்.
இக்காலத்தில்தான் இந்த அரங்கில் ஜயப்பிரகாச நாராயணர் தோன்றினார். இவர் முன்னாளில் நேருவுடன் இணைய மறுத்துப் பதவியை நிராகரித்த சோஷியலிசவாதி. தனித்தே இயங்கிய இவர், இப்போது இந்த முறையற்ற சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்ட முனைந்தார். மக்களிடையே விழிப்புணர்வைத் துண்டச் செயல் பட்டார். முழுப்புரட்சி அவர் தாரகமந்திரமாயிற்று.
இந்தக் கால கட்டத்தில், 1971ம் ஆண்டு நடந்த ரேபரேலித் தேர்தலில் இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ்நாராயண் தேர்தலில் ஊழல் நடந்ததாகத் தொடுத்த வழக்கு, அலகாபாத் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்தத் தேர்தலில், ஒழுங்கு மீறி, அரசு வாகனங்களையும் அரசு அலுவலரையும் தம் கட்சித் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார் என்பதே குற்றச்சாட்டு. நீதி மன்றத்தில், இந்திராவை நான்கு மணி நேரம் நிறுத்தி வைத்து விசாரணை செய்யப்பட்டது.
ஜயப்பிரகாச நாராயணர், மக்களை மனச் சாட்சிகளைத் தொட்டு நியாயத்துக்குப் போராட ஒருங்கிணைக்கும் சக்தியாகத் திரட்டிய தருணம் அது. அப்போது அலகாபாத் வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி ஜகன்மோகன் லால் ஸின்ஹா தீர்ப்பை வழங்கினார்.
“இந்திரா பதவி விலகி ஒதுங்க வேண்டும்; ஆறு ஆண்டுகளுக்கு அவர் லோக்சபா உறுப்பினராகும் தகுதியை இழக்கிறார்.” இந்திராவின் உச்சம், தூக்கி எறியப்பட்ட பந்து போல் வீழ்ந்தது. இதை அவர் ஒப்புக் கொண்டாரா? எப்படி ஏற்றார்?
இந்திராவின் ஆழ்ந்த மௌனங்களும் அமைதியில்லா வெளிப்பாடுகளும் நியாய உணர்வுக்கும் நடப்பியல் முரண்பாடுகளுக்குமான மோதல்களின் பிரதிபலிப்புக்களே.
அவர் அலாகாபாத் தீர்ப்பை ஏற்றுப் பதவியில் இருந்து இறங்கலாம். ஆனால்...? உச்சத்தில் இருந்து வீழ்ந்தது அப்படியே நின்றுவிடுமா? இந்த மாளிகை, சஞ்சயின் நியாயமில்லா அடிப்படையில் அல்லவோ எழுப்பப்பட்டது? வீழ்ச்சியை அப்படியே ஒப்புக் கொண்டால் அது அத்தனை அற்ப சொற்பமாகப் போய்விடுமா?
மக்களிடையே, அவரைப் பற்றிய, மகனைப் பற்றிய பிம்பங்கள் கலைந்து கோரங்களாக அல்லவோ வெளிப்படும்?
ஆசை; ஆசையினால் அநீதங்கள்; அவற்றால் சமைக்கப் பட்ட பொய்கள் தகர்ந்து விடுமோ என்ற அச்சம்…
இந்த நிலை இந்திராவுக்கு எப்படி வந்தது? தான் ஒரு ஜோன் அஃப் ஆர்க் ஆகவேண்டும் என்று இளம்பருவத்தில் கனவு கண்ட அந்தப் பெண்மணிக்கா இந்த நிலை?
பிள்ளைப் பாசம் என்பது ஒரு பெண்ணுக்கு சாபக்கேடா?
இயல்பிலே ஓர் ஆதரிசவாதியாக முளைவிட்ட பெண், மகள் என்று வரும்போது தந்தையின் மேலாண்மைச் செல்வாக்கிலும், பின்னர் கணவர் என்று கடமைக்குக் கட்டுப் பட வேண்டிய மரபுணர்விலும், மகன் என்ற கண்ணில்லாப் பாசத்திலும் தன்னை முற்றிலும் இழந்து விடும் தன்மையையே காணமுடிகிறது.
இந்திரா பதவியிலிருந்து இறங்கவில்லை. அப்படி நியாய உணர்வுடன் அவர் செயலாற்றவே துணியாதவாறு மகனுடைய முரட்டுத் துணிச்சல் தடுத்துவிட்டது. அவர் தம் எதிர்காலத்தை முற்றிலுமாக அந்த மகனின் வசம் ஒப்படைக்கத் தயாராகி விட்டார் எனலாம். அதுவரை அரசியல் தருமங்கள் என்றிருந்த அடிநிலைகள் வேரோடு தகர்க்கப்பட்டன.
நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
ஜயப்பிரகாசர் உள்பட, சிலும்பியவர்கள், ஆமாம் சாமி போடாதவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோருமே இரவுக்கிரவாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
1975 ஜூன் 25ந்தேதி… இந்தியாவின் அரசியல் அதருமம் அமுலுக்கு வந்து அந்தக் கருப்புநாள்.
உண்மையில் மூத்தவன் ராஜீவ் இதை ஏற்கவில்லை. அவன் முதலிலிருந்தே இந்த அரசியல் வாடை தன்மீது விழுந்துவிடாதபடி ஒதுங்கியே இருந்தான்.
ஒருவகையில் நேரு பிரதமராக வந்த முதல் சில ஆண்டுகளில் பிரதமர் மாளிகையில் ஃபெரோஸுக்கு எந்த மாதிரியான உறவு இருந்ததோ, அதை நினைவு படுத்தும் வண்ணம் சகோதரர்கள் உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவசரநிலை அறிவிக்கப்பட்டு, வாய்ப்பூட்டுப் போடப் பட்டதும், சஞ்சய் மளமளவென்று செயலில் இறங்கினான்.
அந்நாள் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவரிடம் நேராக மோதினான். இந்திராவுக்கு இது தெரிய வந்ததும் அமைச்சரைப் பதவி விலகச் செய்து சோவியத் நாட்டுக்கு இந்தியத் தூதராக அனுப்பி வைத்தார்.
சஞ்சயின் காட்டுத்தர்பாரில் கட்டாயக் குடும்பநல அறுவை சிகிச்சையும், எளிய முஸ்லிம் குடிமக்கள் வாழ்ந்த பகுதியை புல்டோசரைக் கொண்டு இடித்துத் தள்ளியதும் வினைவிதைத்த செயல்களாயின.
மனேகாவின் ‘சூர்யா’ பத்திரிகை இவர்கள் செயல்களை, ஆட்சி நிர்வாகங்களை ஓகோ என்று போற்றிப் புகழ்ந்து, முற்போக்கு நடவடிக்கைகளால், நாடு புதிய ஒளியைக் காண்கிறது என்று நியாயம் பாடிற்று. இந்த அவசர நிலைக் காலத்தில் இந்திரா இருபுதல்வர்களுடனும் சோவியத் நாட்டுக்கு விஜயம் செய்தார்.
1976இல் நியாயமாகப் பொதுத்தேர்தல் அறிவிக்கப் படவேண்டும். சஞ்சய் தேர்தலைத் தள்ளிப் போடச் செய்தான்.
ஆனால், இந்தப் பொய்க் கட்டுமானம் நீடிப்பதானால் அதன் வீழ்ச்சியை என்றேனும் எதிர் கொண்டுதானாக வேண்டும் என்ற உணர்வு, இந்திராவை உள்ளூற உறுத்தியிருக்க வேண்டும். அவசரகால நடவடிக்கைகளில், அநியாயமாகப் பல சான்றோரை, அறிவாளிகளைச் சிறையில் தள்ளி வாய்ப்பூட்டுப் போட்டதும் சிறையில் மனித உரிமைகளை காலால் தள்ளி மிதித்துக் கொடூரங்களுக்கு ஆளாக்கியதும், பத்திரிகைச் சுதந்தரங்களைக் குரல்வளையை நெறித்துக் கொலை செய்ததும் அவர் அமைதியைக் குலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இனியும் தள்ளிப்போடலாகாது என்று 1977 பிறந்ததும் அவசர நிலைக்கு முடிவுகட்டி விட்டார். பொதுத் தேர்தல் அறிவிக்கப் பட்டது.
பொதுத்தேர்தல்… இந்திய மக்களும் அரசியலில் ஒரு சகாப்தத்துக்கு முடிவுகட்டும் உணர்வுடன் வாக்குரிமைகளைப் பயன்படுத்த முடியும் என்று நிரூபணமான தேர்தல் அது. நேரு குடும்பத்துக்கு விழுந்த முதல் அடி அது. தமிழ்நாட்டு மக்கள் 67லேயே, இந்திரா ஆட்சிக்கு வந்து மறு ஆண்டிலேயே காங்கிரசை நிராகரித்து விட்டார்கள். அப்போது ‘இந்தி மொழி திணிப்பு’ என்ற காரணம், பெருந்தலைவராகத் திகழ்ந்த காமராஜரையே முன் பின்னறிந்திராத ஒரு மாணவத் தலைவனிடம் தோல்வி காணச் செய்தது.
அப்படி ஒரு பேரலை, 1977 தேர்தலில் வடநாடு முழுதும் பரவி, இந்திரா காங்கிரசை ஒதுக்கித் தள்ளியது.
காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் தர்பாரை வீழ்த்த வேண்டும் என்ற இலட்சியத்துடனேயே உதிரிக் கட்சிகளாய் இருந்த அமைப்புக்கள் ஒருங்கிணைந்து, ஜனதா ஜனங்களில் கட்சி என்று பெயர்பெற்றது. இந்தக் கூட்டணி, காங்கிரசைச் சின்னபின்னமாக்கி விட்டு, அரசமைக்க வெற்றி பெற்றது. சிறைக்குள் இருந்தவர்கள், சிறையில் இருந்தபடியே வெற்றி பெறுமளவுக்கு மக்கள் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டார்கள். இந்திரா ரேபரேலியிலும், சஞ்சய் அமேதியிலும் தோல்வியைத் தழுவினார்கள்.
இந்திராவைத் தோற்கடித்த ராஜ்நாராயண், முன்பு அலாகாபாத் தீர்ப்புக்கு வழக்குத் தொடுத்தவன்தான். அவன் எந்த விதத்திலும் இந்திராவுக்கு நிகரானவன் அல்ல. எனினும் மகன், தாயின் உறுதுணையுடன் விதைத்த வினைகள் இப்படி ஓர் வீழ்ச்சியாக விளைந்து விட்டது.
உதிரிகளாக இருந்தவர்கள் கூட்டணி சேர்ந்து இந்திராவைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டார்கள். தலைமைப் பதவி, முன்பு இதே பதவிக்காக இந்திராவுடன் போட்டியிட்டுத் தோற்ற மொரார்ஜிதேசாய்க்கு வாய்த்தது… ஆனால்…
இந்திராவைப் பதவியில் இருந்து இறக்கியபிறகு, நாட்டு மக்களின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க அவர்கள் தீவிரமாகவில்லை.
மாறாக, இந்திரா மீதும், நேரு குடும்பத்தின் மீதும் பழி வாங்குவதிலேயே அவர்கள் கண்ணாக இருந்தார்கள்! ஏகப்பட்ட விசாரணைக் குழுக்களை அமைத்தார்கள். இந்திராவின் பாஸ்போர்ட் கூட ரத்து செய்யப் பட்டது. சஞ்சயும் நகர முடியாது.
அவசர நிலைக் காலத்தில் நடந்த அநீதங்களை ஆராய்வதிலேயே காலம் கடந்தது. இந்திரா கைது செய்யப் பட்டதும், விடுவிக்கப்பட்டதும் ஏதோ நாடகங்கள் போலிருந்தன. இந்நாட்களில், மனேகா, சஞ்சயின் மனைவி, தன் ‘சூரியா’ பத்திரிகையில், ஜனதா ஆட்சியாளரைப் பற்றியும் தலைவர்கள் பற்றியும் எத்துணை விரசமாக, அவதூறுகள் எழுத முடியுமோ அப்படியெல்லாம் எழுதினாள். மக்களின் மனங்களில் ஜனதா கட்சியினர் மீது தோன்றியிருந்த நன்மதிப்பைக் கரைக்கக்கூடிய அனைத்துச் சாகசங்களையும் மேற்கொண்டாள்.
மொரார்ஜி பதவியிலிருந்து இறங்க வேண்டியதாயிற்று. சரண்சிங் பிரதமரானார். அந்தக் கூட்டணி அரசும் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்தது.
1980இல் மீண்டும் பொதுத்தேர்தல் வந்தபோது, மக்கள் நேரு குடும்பம்தான் இந்த நாட்டை ஆளத்தகுதி பெற்றது என்று தோசையைத் திருப்பிவிட்டார்கள்! சஞ்சயும் மனேகாவும் இந்தச் சந்தர்ப்பத்தை முழு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு செய்த தீவிரப் பிரசாரத்தின் பயன் இந்த விளைவு.
“காங்கிரசை, இந்திரா நேரு காந்தியை, விலக்கி வேறு அரசு கொண்டு வந்தீர்களே, என்ன ஆயிற்று? இந்த நாட்டின் முடி சூடா ராணியும் அவர்தாம்” என்று வெற்றியைக் குவித்து விட்டார்கள்.
524க்கு 351 என்று காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று, சஞ்சயின் ஆணவத்தை இன்னமும் ஊக்கிவிட்டது.
இந்திராவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள், விசாரணைக் குழுக்கள், எல்லாம் கலைக்கப் பட்டன. சஞ்சய் முந்தைய நாட்களைக் காட்டிலும் சுவாதீனமாக உரிமைகளைக் கைக்கொண்டு, துணைப் பிரதமர் என்று மக்கள் குறிப்பிடுமளவுக்கு உரம் பெற்றான். இவனுக்கென்று ஒரு புகழ்பாடும் குழுவே இயங்கியது. இவன் நடவடிக்கைகள் இந்திராவின் உள் மனசைக் கலக்கும் வண்ணம் இருந்தன.
மூத்த தலைவர்கள் ஒடுக்கப்பட்டனர்; தருமம் சார்ந்த மரபுகள் பற்றிய வாய்ப் பேச்சும் கூட வழக்கொழிந்ததாயிற்று.
இந்திரா இந்த அனைத்து நடவடிக்கைகளையும் அநுமதிக்கும் கட்டாயத்துடன், அவன் செயல்களுக்கு நியாயம் சொல்ல வேண்டிய நிலையிலும் நின்றார்.
1980 ஜனவரியில் இந்திரா பதவிக்கு வந்தபின், வாரிசுக்கு ஓர் ஆண் என்று சஞ்சய்-மனேகாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ‘வருண்’ என்று பெயர் வைக்கப்பட்டது.
வாழ்க்கையின் இத்தகைய மத்தாப்பூச் சிதறல்கள், வானில் எழும்பிச் சென்ற வாணம்போல் வெடித்தது. 1980 ஜூன் மாதத்தில் உதிர்ந்து புகைந்து ஒன்றுமில்லாமலாகி விட்டது.
சுபாஷ் சக்ஸேனா என்ற விமானமோட்டியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு காலையில் சஞ்சய் கிளம்பிச் சென்றான். விமானமோட்டிச் சாகசம் செய்யும் விளையாட்டில் சஞ்சய் நிலைதடுமாறிக் கீழே வீழ்ந்து மாண்டான். குற்றமற்ற சக்ஸேனாவும் இந்த விபத்துக்கிரையானான். சஞ்சயின் இயல்பான முரட்டுத்தனமே இறுதியிலும் யமனாக வந்து முடித்தது.
இந்திரா இந்தப் புத்திர சோகத்தில் உருக்குலைந்தார். அதுவரையிலும் இந்திராவைக் கணவரின் மரணம் மட்டுமே பாதித்திருந்தது. சஞ்சய், மகன். அவன் பிறருக்குத் தறுதலை என்றாலும். தாயின் வீழ்ச்சிக்கும் மீட்டெழுதலுக்கும் காரணமாக நின்று, அவளை மகனை எப்போதும் சார்ந்து நிற்கும் தாயாக்கிவிட்டான். அவனை அவளுக்கு இன்றி யமையாத பற்றுக் கோடாகச் செய்திருந்தான்.
ஒரே நாளில் தான் முதுமையின் இயலாமைக்குள் குறுகிவிட்டதாக உணர்ந்தார் இந்திரா.
அறிவுக் கண்களும், ஆய்ந்து தெளியும் ஆற்றலும் பிள்ளைப் பாச மாயையில் மறைக்கப்பட, ஏதோ ஓர் இழுப்புப் பாதையில் வந்துள்ளார்.
இனி, தன்னந்தனியாக அந்த செயல்களின் விளைவுகள் முட்டும் பாதையில் தடுமாற வேண்டும். பின்னே திரும்பிச் சீர் செய்ய முயல்வதும் இயலாத செயல்.
அதுகாறும் இந்திராவுக்கு வயதுக்குரிய இயல்பான நரை திரையாகிய முதுமைக்கோலம் கூடக் கம்பீரமானதொரு கவர்ச்சியையே அளித்து இருந்தன.
சஞ்சயின் மரணத்தினால் உற்ற சோகம் அவரை ஒரே நாளில் முதுமையின் எல்லா நலிவுகளுக்கும் ஆட்படுத்தி அழுத்தியது.
இரண்டு ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இல்லாத போதும், மீட்டு அதைப் பற்றிய பிறகும் என்னென்ன அரசியல் அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன. அவற்றுக்குப் பொறுப்பானவர் யார் என்று இந்திராவுக்குத் தெரியும். செக்கை விழுங்கிய பின் அதைச் சீரணம் செய்து வலிமை பெறும் யுக்திகளுக்கு சஞ்சய் இல்லை… யாருமே இல்லை… அவள் மகன் ராஜீவை அரசியலில் இழுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றாயிற்று.
சஞ்சயின் மனைவி, மனேகா இரண்டு மாதங்களாகாத பூங் குழந்தையின் தாய், இதை எதிர் பார்த்திருந்தாள். பெண்கள் விஷயத்தில் காளை “மைனராக”த் திரிந்த சஞ்சயை மனேகா திருமணம் என்ற பந்தத்தால் இணைந்து கொண்டதற்குக் காரணமே, நாளை அவன் பிரதமராக வரக் கூடும் என்ற பெரிய எதிர்பார்ப்புத்தான். இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால், அமெரிக்க ஆட்சி முறையைப் பின்பற்றி, இந்திரா ‘பிரஸிடென்ட்’ என்றும் சஞ்சய் ‘பிரதமர்’ என்றும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கலாம்; இல்லையே. இருந்த நிலையிலேயே அமைச்சரவையில் இடம் பெற்று, துணைப் பிரதமராகியிருக்கலாம். இதற்கெல்லாம் வழியே இல்லாமல் போய் விடவே மனேகா உள்ளுற ஏமாற்றமடைந்தாள். ஆனால், அதற்காக அமைதியாக கைம்பெண்-மருமகள் என்று முடங்கிவிடலாமா?
ஜனநாயகம் என்ற அரிய பெரிய தத்துவம், மாமி மருகி குடும்பப் பூசலாக முடங்கிப் போகும்படி, இந்தியத் துணைக் கண்டத்தின் எழுபது கோடி மக்கள் செல்லாக் காசுகளாகவே இயங்கினர் என்பது துர்ப்பாக்கியமே!
மூத்தமகன் ராஜீவைவிட, மனேகா இந்திய அரசியலில் முழுகிய அநுபம் பெற்றிருந்தாள். இளவரசனின் மனைவியாக, இந்தியாவின் வருங்காலப் பிரதமரின் துணைவியாக நாடு முழுவதும் சுற்றி அரசியல் தந்திரங்களில் நனைந்திருக்கிறாள். ஜனதா அரசைக் கவிழ்க்க, அவள் மேற்கொண்ட பொய்ப் பிரசாரத் தந்திரங்கள், வன்முறைத் தூண்டுதல்களில் பங்கேற்றது எல்லாம் இந்திராவுக்கும் தெரியும். இக் காரணங்களினாலேயே இந்திராவுக்கு அவளைத் தன் அந்தரங்கத்தில் இடம் கொடுத்து அரசியலில் துணை நிற்க அழைக்க விருப்பமில்லை. அவளை ஒதுக்கிவிடவே முன்நின்றாள். ஸோனியாவோ, என்றுமே அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை. கணவன் அரசியலுக்கு வருவதையே அவள் விரும்பவில்லை. பிரதமர் மாளிகையில் அமைதியான சின்னஞ்சிறு பூங்காவைப்போல் கணவன்-மனைவி இரு குழந்தைகள் என்று இல்லறம் நடத்திய குடும்பம் அது.
இப்போது தாய்க்கு உதவியாக அவன் அரசியலுக்கு வரத்தான் வேண்டி இருந்தது. பதவிசான ஒரு விமான மோட்டி, அநுபவமில்லாத அரசியலில் புகுந்து சுமை சுமக்க வேண்டியதாயிற்று.
ராஜீவை இந்திரா அமேதித் தொகுதியில் தேர்தலுக்கு நிற்கச் செய்தார். மனேகா பிடியை விடவில்லை.
‘சஞ்சய் மஞ்ச்’ என்ற தளம் அமைத்து அதன் சார்பாக ராஜீவை அமேதியில் எதிர்த்து, கணவன் விட்ட இடத்தைத் தான் பற்றிக் கொள்ளப் போட்டி இட்டாள்.
இத்தருணத்தில், இந்திரா, ஒரு சராசரி படிப்பறியாப் பாமர மாமியாரைப் போன்றே மனேகாவின் மீது மக்கள் வெறுப்புக் கொள்ளும் வண்ணம் பிரசாரம் செய்தார் எனலாம்.
அறியாமை மக்களின் அணிகலன் போல் நிறைந்த உத்தர பிரதேசம், பிரதமர்களை நாட்டுக்கர்ப்பணித்த இந்த உத்தரப் பிரதேசம், அறியாமை, மூடநம்பிக்கைகளிலும் முதலிடம் வகிக்கும் பிரதேசம். இதனாலேயே பெரும்பாலும் பாரதத்தின் பிரதமர்களை இங்கிருந்தே பெற்றோமோ?
பெரிய மைத்துனர் தேர்தலுக்கு நிற்கையில், கணவனை இழந்த விதவை, அவனுக்கு எதிராகத் தேர்தலுக்கு நிற்கலாமா?
அவள் கணவனை இழந்த பின்னரும், ‘சுமங்கலி’க்குரிய சின்னங்களை அணிகிறாள்…அதோடு, இரகசியமாகப் புகை பிடிக்கிறாள்! இது போன்ற பிரசாரங்கள், மருமகளைச் சுற்றி எழுப்பப் பட்டன. அவதூறுகள் வீசுவதில் மனேகா கைதேர்ந்தவளாயிற்றே? விடுவாளா? “ஒன்றுமறியாத மருமகளை பச்சிளங்குழந்தையுடன் வீட்டை விட்டுத் துரத்திய கொடுமைக்காரி. இந்தப் பாவிக்கா உங்கள் ஓட்டு!” பெண்ணரசாளும் ஒரு நாட்டில், பெண்ணின் மானம் பறிபோகிறது!
பிரசாரங்கள், எதிர்ப்புப்பிரசாரங்கள் எதுவும் மக்கள் மனங்களில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.
நேருவின் பெயரன்; இந்திராவின் மகன்-வாரிசு… அவனை விட்டு ஒரு கைம்பெண் மருமகள் ஆட்சி செய்ய ஓட்டுப் போடலாமா? ராஜீவ் வெற்றி பெற்றான்.
இந்திராவின் பிற்காலம் எப்படி இருந்தது?
சமதர்மக் கோட்பாடுகள், குடிமக்களுக்காகவே குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பெறும் மக்களரசு, என்ற இலட்சியங்கள் அவருடைய வாழ்க்கையில் வேர்பிடிக்கவே வழியில்லை. நேரு குடும்பத்துக்காக இந்தியா-மக்கள்-ஆட்சி என்று சஞ்சய் அடித்தளமிட்டான். அதற்காகவே மொரார்ஜியின் ஆட்சிக் காலத்தில் எதிர்ப்பைத் தூண்டி விட , குறுகிய சமய அடிப்படைத் தீவிரவாதிகளை ஊக்கி விட்டான்.
காலிஸ்தான்-பஞ்சாப் பிரச்னை தீராத தலை வேதனையாயிற்று. வங்கத்திலே எழுந்த மலையக மாநிலப் பிரச்னை; அஸாம் எழுச்சி என்று அரசியல் முட்படுக்கையாயிற்று. பதவி முட்கிரீடமாயிற்று. எனினும் இந்திரா மிகுந்த தீரத்துடன் சமாளித்தார்.
சர்வதேச அரங்கில் கவனம் செலுத்தினார். சமாதானம், கூட்டுச் சேராக்கொள்கை அணி என்று முன்னின்று தன் சீரிய தலைமையை மீண்டும் உறுதியாக்கிக் கொள்ள முனைந்தார். ஆசிய விளையாட்டுக் களத்தை பாரதத்தில் அமைத்து, இளைஞர்களுக்குப் புதிய வேகமும் உற்சாகமும் அளிக்க முயன்றார், ஒருபுறம் உள்நாட்டுப் பிரச்னைகள் நெருக்குகின்றன; வறுமை, விலைவாசியேற்றம் பண வீக்கம்…
கும்பி கூழுக்கு அழும்போது, ஆசிய விளையாட்டு என்று கோடிக்கணக்கில் பணத்தை விரயம் செய்கிறாளே என்று எப்போதும் குறைகூறியவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அரசியல் அரங்கில் கட்சித் தாவல்களும், ஆட்சிக் கலைப்புகளும், அடிபிடி சண்டைகளும், குத்துக் கொலைகளும் நித்திய தருமங்களாயின. என்றாலும் இந்திரா இழுத்துப் பிடித்தார்.
காலிஸ்தான் பிரச்னையை, இந்திரா, ராஜீவ், அருண்சிங் வசம் ஒப்படைத்தார். சாமதான பேத முயற்சிகள் பலனற்றுப் போயின. கொள்ளையும் கொலையும் குண்டுவெடிப்புமாக, தீவிரவாதிகள் மதம் பிடித்துத் திரிந்தார்கள். சமயம்கோயில் என்ற அரண்களில் கொக்கரித்தார்கள். வேறு வழியின்றி, கடைசி முறையைக் கையாள வேண்டியதாயிற்று. குருத்வாரத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளின் துப்பாக்கி, வெடிமருந்து போன்ற நவீனமான கொலைச்சாதனங்களை வெளிப்படுத்த இந்திய ராணுவம் பொற்கோயிலில் புக வேண்டியதாயிற்று.
சீக்கியரின் புனிதத்தலம், அமிருதசரஸ் பொற்கோயில். அதில் இந்திய ராணுவம் புகுந்து சரணார்த்திகளைக் கொலை செய்யலாமா? வெளிநாடுகளிலிருந்து கொண்டு, தீவிரவாதிகளை, பொருளாலும் பிரசாரத்தாலும் ஊக்கி விட்ட சக்திகள், இப்போது இதே காரணத்தைக் காட்டி, இந்திரா எதிர்ப்பு வெறியைத் தூண்டிவிட்டன.
சீக்கிய தருமமே, தீவிரமான இராணுவக் கொள்கையின் அடிப்படையில் தோன்றியதாகும். கச்ச, கங்கி, கிர்பான் என்று கச்சையணிந்தும் முடிவளர்த்தும், கையில் இருப்புக் கடா அணிந்தும் வாளேந்தியும் தருமயுத்தப் போராளியாகவே தங்களை விளக்கிக் கொள்ளும் சமயம் அது.
தங்கள் சமயத்தின் புனித இடமாகிய குருத்வாரத்தில், இராணுவத்தைப் புகச் செய்து தாக்குதல் நடத்தியதற்காக முதலில் அந்தப் படைத்தளபதி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
அடுத்த குறி இந்திராவின் மீது வைக்கப்பட்டது.
பாதுகாப்புப் படையில் இவர் உயிரைப் பாதுகாப்பதற்கென்று ஆயுதந்தாங்கி இருந்த மெய்க்காப்பாள வீரனே இந்தக் கொலைச் செயலை ஏற்றான். இறுதிவரையிலும் மரணபயம் என்பதே இல்லாமல், யாரோ சீக்கியனை மெய்க்காப்பாளர் பணியில் அநுமதிக்கலாமா என்று கேட்டதற்கும், நகைத்த பெருமாட்டி இந்திரா, ‘இவன் சீக்கியன் என்று அஞ்சுவதா? இவன் என்னைக் கொலை செய்வானா…!’ என்று இலேசாகச் சிரித்த அந்த மாதரசியை பாதுகாப்புக் கவசச் சட்டை அணிந்திராத நேரம் பார்த்து பாதுகாக்கும் நேரத்திலேயே கொன்றான்.
ஏறக்குறைய ஜோன் ஆஃப் ஆர்க் நங்கையைப் போலவே உயிரைக் கொடுத்தார்.
இந்தப் படுகொலை இளகாத நெஞ்சங்களையும் உலுக்கியது. என்றாலும், இந்த முடிவை நியாயப்படுத்தியவர்களும் இல்லாமலில்லை. “அவளே விரித்தவலையில் அவள் வீழ்வாள். தீவிரவாதிகளான பிந்த்ரன் வாலாவையும் அவன் சகாக்களையும் அவள்தானே ஊக்கினாள்?’ என்று கூறியவர்களும் இந்நாட்டில் இருந்தார்கள்.
இந்திரா சகாப்தம் முடிந்தது.
பிறந்ததிலிருந்து போராடப் பிறந்த ஒருபெண், கல்வி, திருமணம், குழந்தைகள், இல்வாழ்வு எல்லாமே சவால்களாக அமைய, தீரத்துடன் எதிர்ப்பட்டதை ஏற்றுப் போராடிய ஒருபெண்ணரசி, இறுதியிலும் தன் தீர முத்திரையைப் பதித்துவிட்டே சென்றாள்.
“பெண் ஆயிரம் இருந்தாலும் பலவீனமானவள்;
அவளால் ஆட்சிப் பொறுப்பில் உறுதியுடன் இயங்க முடியாது… தந்தை, கணவன், மகன் என்ற சார்புகள் அவளுக்கு இன்றியமையாத துணைகள்…
சார்புகள் இல்லாமல் உணர்ச்சிகளை வென்று அவளால் வீட்டுக்கு வெளியே எந்த ஓர் அறிவு சார்ந்த பொறுப்பையும் நிர்வகிக்க முடியாது. துறவு அவளுக்கு உகந்த தல்ல; அவளுடைய மென்மை, உழைப்பு, தியாகம் ஆகிய அருங்குண இயல்புகளும், கணவன், குழந்தைகள் என்ற சிறு உலக எல்லைகளுள் முடங்கும் போதுதான் ஏற்றம் பெறுகின்றன. சமுதாயம், அரசியல் ஆகிய களங் களில் அவள் தனித்துக் தலைமைப் பொறுப்பை ஏற்று இயங்கத் தகுதியில்லாத வளாகிறாள்…” என்றெல்லாம் காலங்காலமாக நிறுவப் பெற்ற ஓர் ஓரவஞ்சனைக் கருத்தை இந்திராவின் வாழ்க்கை பிரதிபலிப்பது மிகவும் வருந்தத்தக்க உண்மை.
தம் இறுதிக் காலங்களில் வினைவிதைத்து விட்டுச் சென்ற மகனின் செயல் விளைவுகள் நாட்டு மக்களைப் பாதித்ததும், அதனால் அவர் மனம் புழுங்கி வெளிக்காட்ட முடியாமல் உள்ளூரப் போராடியதும் வெளிப்படையான உண்மைகளே.
இறுதியாக அவர் வடக்கு ஆப்பிரிக்க டூனிஷய நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, இரண்டு முழு நாட்களுக்கும் குறைவான அந்த ஓய்வும்கூட அவருக்கு நிம்மதியை அநுபவிப்பதாக இல்லை; மனதை அழுத்திக் கொண்டிருந்த பளுவை அவரால் மறைக்கவோ மறக்கவோ இயலவில்லை என்ற உண்மையை அந்நாளில் அந்நாட்டின் இந்தியத் துரதராக இருந்தவர் அந்த நாட்களைப் பற்றி எழுதுகையில் குறிப்பிடுகிறார். உள்நாட்டுப் பிரச்னைகள், தீவிரவாதிகளின் கழுத்துப் பிடிகளிலிருந்து சற்றே நிம்மதியாக மூச்சுவிடும் ஆறுதுலை எதிர்நோக்கியே அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். என்றாலும், அவரால் எந்த ஓர் இனிமையான, மாறுதலான சூழலையும் அநுபவிக்க முடியவில்லை, ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கி இருந்தார் என்பதையே அறிகிறோம்.
இறுதிக்காலம் வரையிலும் தனக்குள்ளே தான் சாதிக்க நினைத்ததை நம்பிக்கையுடன் செயல்படுத்த முனைந்த மிக அரிய பெண்மணி இந்திராகாந்தி. இந்நாட்டில் ஒரு புதிய பெண்மையை வரலாற்றாக்க முனைந்து பழைய மேலாதிக்க மரபுகளின் முரண்பாடுகளில் குலைந்தாலும் தம் இறுதி வரையிலும் அவற்றின் சாதக பாதகங்களைச் சுமந்து போராடினார்.
இந்திரா, மாறிவரும் இந்தியப் பெண்மைக்கு, போராடும் பெண்மைக்கு ஒரு வலுவான முன் மாதிரி என்றால் தவறில்லை. கஸ்தூரிபாவின் மரபுப் பெண்மையிலிருந்து வெளி வந்து, தன்னை இனம் கண்டுகொள்ள முயன்று, வெற்றியை முழுமையாகக் காணமுடியவில்லை எனினும், இந்திரா, இந்தியப் பெண்மையின் வரலாற்றில் தனக்கென்று ஓர் இடம் தேடிக்கொண்ட அரிய பெண்மணியாவார்.
1. ‘Indira Gandhi Return of the Red Rose’ by K.A. Abbas, 1968. Hind Pocket Books.
2. ‘Indira Reader’ with R. Venkataraman’s Foreward, Cheif Editor, Dr. K. Venkatasubramanian, Published by Tata Macgrove Publishing Company Ltd. 1985.
3. ‘Indira Gandhi’ A Profile in Courage by Trevor Drieberg, Vikas Publication, 1972.
4. ‘Rajiv Gandhi, The end of a dream’ by Minhaz Merchant, Viking, 1991.
5. ‘Dear to behold’ by Krishna Hutheesing.
6. ‘Indiragandhi’s legacy to Indian Nation’ Documentation edited by Dr. Raj K. Nigam, Govt of India Publications.
7. ‘Indian Elections since Independence’ Vol III Published by Election Archives.
8. ‘A respite in Tunisia’ Hindu dated oct. 30-10-94 article by Sri Joseph Kallukaran, Former Indian Ambassador in Tunisia.