உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/மனிதத்துவ சமுதாயம்

விக்கிமூலம் இலிருந்து
12. மனிதத்துவ சமுதாயம்


ண்மையிலேயே பெண், விடுதலை, பெண் உரிமை பெண் சுதந்திரம் - இதற்கெல்லாம் என்ன பொருள்?

இந்த நாட்டில் இன்று, பெண்ணுக்கு இல்லாத உரிமைகள் என்ன இருக்கின்றன? இந்த நாட்டில், இரண்டு தலைமுறைக்காலம்-இந்த சுதந்திர இந்தியாவில் பெண் அரசு நடக்கவில்லையா?

மாநிலத் தலைமை, மாவட்டத் தலைமை என்று பதவிப் பீடங்களில் பெண்கள் அமர்ந்திருக்கவில்லையா?

சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தில் பெண்ணைப் பள்ளிக்கே அனுப்பத் தயங்கினார்கள்.

சிறுமியாக மணம் செய்து கொடுத்தார்கள்.

பிள்ளை பெறுவதும் அடுப்படியுமே வாழ்க்கை என்று வரையறுத்தார்கள்.

கைம்பெண் என்று முடக்கினார்கள்.

வாழாவெட்டி என்று ஒதுக்கினார்கள்.

மலடி என்று தள்ளி வைத்தார்கள்.

இதெல்லாம் நியாயமான செயல்களாகவே கருதப் பட்டிருந்தன.

சமுதாயத்தின் ஓரத்தில், இழிவென்று அழுத்தப் பட்டவள் தாசி.

இன்று இவையெல்லாம் நியாயங்களில்லை என்று சட்ட பூர்வமாகத் தீர்க்கப்பட்டிருக்கின்றன. பெண்ணே ஆட்சி பீடத்தில் வந்து அமர்ந்து. தன்னை இரண்டாம் பட்சம் என்று ஒதுக்கிய இனத்தார்க்கு நியாயம் சொல்ல வந்துவிட்ட காலம். எனவே, இன்று ‘பெண்ணடிமை’ என்ற ஒரு காலம் நிலவுவதாகக் கொள்வது தவறு! அப்படி ஒரு நிலை சில விதிவிலக்குகள் நேர்ந்தாலும், அதற்குக் காரணம் ஆண் ஆதிக்கம் அல்ல. பெண் தன்னையே விமரிசனம் செய்து கொள்ள வேண்டும். தவறுகளை நீக்கித் திருத்திக் கொண்டு, கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு முன்னேற வேண்டும். இது ஒரு முடிவு.

எப்படி முன்னேறுவது?...

சாண் ஏறினால் முழம் சறுக்கும் வரலாறாக இருக்கிறது.

பெண் அரசாட்சி இருந்த நாட்களில்தான் பெண்ணின் மீதான அக்கிரமங்கள் அதிகமாயின.

மதுரா என்ன பெண், காவல் நிலையத்தில் காவலர்களால் பலாத்காரம்செய்யப்பட்டாள். இதற்கு நியாயம் கோரியபோது. ‘அவளும் இணங்கினாள்; எதிர்ப்புக் காட்டிய தடயங்கள் இல்லை’ என்று கிடைத்த பதில் சட்டத்தின் நிலைமையைத் தெளிவாக்கிற்று.

பழைய பெருமைகளைத் திருப்பிக் கொண்டுவர, இராஜஸ்தான் மாநிலத்தில் புருஷன் மரித்ததும் மனைவியர் கற்பரசிகளாகச் சிதையில் எரிக்கப்படுவது நிகழ்ந்தது. பழைய வழக்கங்கள் புதுப்பிக்கப்பட்டன.

‘கணவனை இழந்த பெண், பொட்டு வைத்துக் கொண்டு வருகிறாள்; அவளுக்கு உங்கள் வாக்குரிமைகளைக் கொடுப்பீர்களா?’ என்று கிராமவாசிப் பெண்களிடத்தில் பிரசாரம் செய்வது பலித்தது.

‘பதவியில் இருப்பவர், பெண் மட்டுமல்ல; அவர் ஒரு கைம் பெண். இவர் தலைமையிலா ஆட்சி?’ என்ற வினா மக்களைச் சிந்திக்கச் செய்தது.

‘திருமண விழாவில் கச்சேரி செய்ய, பூவும் பொட்டும் இழந்த பெண்ணையா கூப்பிடுவார்கள்! சே!’ என்று தள்ள முடிந்திருக்கிறது.

‘இவளுக்கா உங்கள் வாக்குரிமைகள்? இவள் நடத்தை கெட்டவள்?’ என்று புழுதியை வாரி எறிந்தால், அவள் திறமை எதுவும் தெரியாது.

‘ஓ, இவளுக்கு இந்தப் பதவி எப்படிக் கிடைத்தது? அறிவினால் அல்ல; உடம்பினால்’ என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணில் வெற்றியின் காரணத்தை வெளிச்சம் போட முடிந்தது.

‘அதிகாரி ஆணாக இருந்தால், ‘ஸ்ஸ்… இன்று குழந்தைக்கு உடம்பு சரியில்லை… வீட்டுக்குச் சிக்கிரம் போக வேண்டும்’ என்று சொல்லித் தப்பித்து விடலாம். இளகிய நெஞ்சு சரி, ‘போங்கள்-போங்கம்மா’ என்று சொல்வார். ஆனால் இந்தக் குரங்கு மூஞ்சி இருக்கிறதே! இது கல்நெஞ்சு. ‘அப்ப குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இரு! வேலை என்று எதற்கு வரவேண்டும்! இன்று முழுதும் முடித்து விட்டுத்தான் போக வேண்டும்! எத்தனை மணி யானாலும் சரி!’ என்று சொல்லும். ‘புருஷன், பிள்ளை குட்டி என்று இருந்தால் தானே? இந்த முகரைக்குக் கல்யாணமே இல்லாமற் போய்விட்டது!’ என்று சினிமாவுக்குப் போக முடியாத அலுவலகப் பெண் கருத்தை வீசுவதைக் கேட்க முடிந்தது.

‘என்னடி பத்தினி மாதிரி நடிக்கிறாய்! உனக்கு எதிர் காலம் இல்லாமல் செய்துவிடமுடியும்’ என்று ஆண் ஆதிக்கமும்,

‘ஏய் என்ன மிரட்டுறே? உன்னை இந்த இடத்தில் இருந்து கிளப்பாமல் போனால்… நான்… நானில்லை?’ என்று சூளுரைக்கும் பெண் சக்திகளும் இதே ஆட்சியின் தருமத்தில் தான் வலிமை பெற்றிருக்கின்றன.

உரிமைகளும் தருமங்களும், அவரவர் ஒழுங்கு மீறும் வசதிகளுக்காகவே வாழ்கின்றன. அரசியிலிலிருந்து, அடுப்படி வரையிலும், இதே வசதிகள் நிலைநாட்டப் பெறுகின்றன. ஆனால் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, இழப்பு யாருக்கு?

குடிகார மருமகன், மாமியாராலோ, மனைவியாலோ எரிக்கப்படுவதில்லை. அவன் கோபுரத்தைக் குடிசையாக்கி இடித்து,கோமகளாக இருந்த மனைவியையும் உறிஞ்சி ஒன்று மில்லாமலாக்கினாலும், அவன் கட்டிய தாலிக்கு மஞ்சள் வைத்துக்கொண்டு வாழ்கிறாள்.

ஓர் ஆண் கருவை ஏந்துவதற்காக, பல பெண் கருக்களை அழிக்க அமிலம் அரிப்பதுபோல் எரிந்தாலும் பொறுத்துக் கொள்கிறாள். உதைபடுகிறாள்; இடிபடுகிறாள்; சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனாலும், ஆண்… ஆணாக மேன்மையின் உச்சியிலிருந்து இறங்கி விடவில்லை. இவளோ, இனி எந்தச் சிறுமையும் இதைவிடப் பாதிக்க முடியாது என்ற அளவில் மதிப்பில்லாமல் இழிந்திருக்கிறாள்.

இது ஏன்? ஏன்?

ஆதியிலிருந்து பார்த்தால், இவள் சிறுமைக்கெல்லாம் காரணமாக இருப்பது இவள் பிள்ளை பெறும் இயல்பு; கருப்பை. இதிலிருந்து இவள் விடுதலை பெற்றாலே, ஆணுக்குச் சமமாக அல்லது மேலாகவே தன் ஆற்றல்களை நிரூபிக்க முடியும்.

அவன் போகத்துக்கு எந்த விலையும் கொடுக்க வேண்டியிருப்பதில்லை. இவளோ, பிள்ளையை ஏற்றாக வேண்டி இருக்கிறது.

அவனுக்காக அதைச் சுமக்க வேண்டி இருக்கிறது; இதற்கு ஓர் ஒழுங்கு, கல்யாணம், கற்பு, கைம்மை, அது இது என்று சமூக நிர்ப்பந்தங்களை ஏற்றாக வேண்டி இருக்கிறது. தன் வயிற்றில் வைத்து அந்தக் கருவைப் பாலித்தால் மட்டும் போதாது. அவன் நிராகரித்தாலும், இவள், தான் வாழவும் உழைத்து, அந்தச் சந்ததி வாழவும் உழைக்க வேண்டிய கட்டாயத்தைக் ‘குடும்பம்’ என்ற அமைப்பு அவளைப் பதப்படுத்துகிறது.

எனவே, குடும்பம், கல்யாணம், கருப்பை ஆதிக்கம் என்ற பிணைப்புகளில் இருந்து விடுதலை பெறுவதே பெண்ணுக்கு உகந்த, ‘விடுதலையாகும்… இது ஒரு முடிவு.’

இன்றைய பெண்ணியத்தில் பல முகங்களைக் காண்கிறோம்.

எது உண்மை?

எல்லா முகங்களும் உண்மை போலிருக்கின்றன: ஆனால் முழுதும் அப்படியே என்று நம்ப முடியாமலும் இருக்கிறது.

ஆக,பெண்ணே, நீ இன்று எந்த வடிவில் இயங்குகிறாய்?

உன்னை, இந்நாட்களின் மின்னனு இயல் சாதனங்கள், எத்தனையோ வடிவங்களில் காட்டுகின்றன.

தன்னை, தன் உருவமாறுதலை, ஒருவர் புகைப் படங்களில் நன்கு உணர முடியும். கண்ணாடியை விட, காட்சிப் படங்கள், மனங்களில் பதிந்து போகின்றன.

இந்த வலியுறுத்தப்படும் வடிவங்கள் ... பிம்பங்கள், என்ன சொல்கின்றன?

பெண்னே! நீ பெருமை மிக்கவள்! உனக்கு விடுதலை உண்டு! நீ பட்டாம்பூச்சி! தாய்! உலகத்தை ஆக்குபவளும் அழிப்பவளும் நீயே! நீ சுவாசினி! நீ பட்டுச் சேலைகளால், சரிகைப் போர்வைகளால், உன் பூவிலும் மெல்லிய மேனியை அலங்கரித்துக் கொள்ளும்போது, அவை பெருமை பெறுகின்றன. மருதோன்றிச் சாயங்கள், செயற்கைப் பரிமளங்கள் வண்ண வண்ண வாசனை மலர்கள், வெள்ளிக் கொலுசுகள் முத்துவடங்கள் எல்லாமே உன்னால் பெருமை மிக்க சாதனங்களாகின்றன.! உன் செவிகளும் நாசியும் துளைக்கப்பட்டு அணி பணிகளுக்கு விளக்கம் அளிக்கும் போது நீ உலகை ஏற்றம் புரியச் செய்கிறாய்! உன்னால் ஏழை ஆண் வாழ்கிறான். நீ கை வைத்து அழுத்தும் பல்வேறு சோப்பு, அழுக்கு நீக்கும் கரங்கள், உலகத்து மாசுகளைத் துடைக்கும் வல்லமை பெறுகின்றன. அதனால் கிடைக்கும் ஆணின் பாராட்டினால், நீ சுவர்க்கத்தையே மண்ணுலகில் படைத்து விடுகிறாய்! நீ கையாளும் பாத்திர பண்டங்கள் புதிய விளக்கம் பெறுகின்றன! நீ ஊதாரியாக இல்லாமல் சிக்கனம் கடைப்பிடிப்பவள். போதை மருந்துகளும் குடியும், குடும்ப நலன்களை உறிஞ்சினாலும், நீ அவற்றை மீட்க உயிரையும் கொடுக்கும் பெருந்தகை அல்லவோ? நீ இருக்கும்போது தான் ஆணை வாழ வைக்கிறாய் என்றில்லை! இறந்த பின்னும் வாழ வைக்கிறாய்! அதற்காகவே எரியூட்டப் பெற்றாலும், நானே தவறி விபத்தில் மாட்டிக் கொண்டேன், அவர் குற்றமற்றவர் என்று நினைவு தப்புமுன் வாக்குமூலம் கொடுத்துவிட்டுக் கண் மூடுகிறாய்! மக்கள் பெருக்கத்துக்குத் தன் இனமே காரணம் என்று, உன் இனக்கருவை உவந்து அழித்துக் கொண்டு உலக நலம் பேணுகிறாய்! சமுதாயம், நாடு என்று சகல விளைவுகளுக்கும் நீயே காரணம் என்று விளக்கம் தருகிறாய்! உன் உடம்பு, பெருமை பெற்றது; ஆற்றல் பெற்றது. அறிவு; ஆக்கம்… நீ பலவீனமானவள்; ஓர் ஆண் உன்னைக் காப்பாற்ற வேண்டும்! இத்தகு விளக்கங்கள் தொடர்ந்து, பிம்பங்களின் வாயிலாக, சின்னஞ்சிறு உள்ளங்கள் ஈறாக, முதிர்ந்த முனி உள்ளங்கள் வரை உணர்த்தப் படுகின்றன.

இதனால், யாருக்கு என்ன பயன்?

பொருள்… வாணிபம்,… அரசுக்கு, தனிநபருக்கு, நிறுவனங்களுக்கு ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு, பொருள்… இலாபம்… செல்வாக்கு, வன்முறை, அழிவு எல்லாம் எல்லாமாக, ஒரு நச்சுவட்டம்… இதிலிருந்து விடுதலை பெறுவதே இன்று பெண் விடுதலை மட்டுமல்ல-மானிட சமுதாய விடுதலை. அவள் தன்னைப் பற்றிய இத்துணை மாயக்கருத்துக்களில் இருந்து, விடுபட வேண்டும். அவள் தன்னுணர்வினையே சார்புக் கொடியாக, இருந்த நிலையிலிருந்து தள்ளிவந்து தன்னிலிருந்து தான் பிரிக்கப் பட்ட கொடுமையை உணரவேண்டும்.

அவள் மனைவி, சகோதரி, மைத்துனி, மாமியார், நாத்தி என்ற கடமை நிலைகளில் இல்லாமல், மனிதப்பிறவி என்ற நிலையில் தன்னை உணர்ந்து கொள்ள வேண்டும். கருப்பை ஆற்றல், உலக இயக்கத்துக்காக, இயற்கை அளித்துள்ள ஒருதன்மை - அறிவு, சிந்திக்கும்ஆற்றல் தனக்கு இருக்கிறது. தனக்கு கருப்பை செயல்பாடு ஒன்றுதான் உள்ளது - என்ற உணர்விலிருந்து விடுபட வேண்டும். ஆணும் பெண்ணும் இசைந்து ஒழுங்கு பாலிக்கும் போதுதான் பூரணமான மனிதத்துவம் எய்திய சமுதாயத்தைப் படைக்க முடியும்’ ஒருவரை மற்றவர் ஆதிக்கத்துக்குட் படுத்துவதனால், அது சாத்தியமல்ல என்பதை உணர வேண்டும். இந்த இலட்சியத்தை நோக்கி ஆணும் பெண்ணும் முன்னேறுவோமாக!