இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்/3
“வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றிவிட்டது” என்று கார்பே என்னும் இந்திய ஆய்வாளர் கூறுகிறார், வேதகாலத்தில் ‘சர்வ வல்லமையுள்ள கடவுள்’ என்ற கருத்தே தோன்றவில்லை. “கண்ணால் காணாததை நம்பாதே” என்பது போன்ற கருத்துக்கள் தோன்றி விட்டன. வேதயக்ஞச் சடங்குகளைப் பல கடவுளர்களுக்குச் செய்து செழிப்பும், செல்வமும் பெற விரும்பிய இனக்குழு மக்களுக்கு லோகாயதர்கள் வருணன், அக்கினி போன்ற தெய்வங்கள் இல்லை என்று சொல்ல இக்கருத்துக்கள் எழுந்தன. இவையே நாத்திகம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. இது சர்வ வல்லமையுள்ள கடவுளை மறுப்பதாக ஆகாது. நமது வரலாற்று முற்காலத்தைப் பற்றி நாம் அறிய அறிய, அக்காலத்தின் ஒரு கட்டத்தில் ‘கடவுள்’ என்ற கருத்தே இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.
கார்பே, ரிக்வேதச் செய்யுள் ஒன்றைச் சான்றாகக் காட்டுகிறார். ‘இந்திரன் என்றோர் தெய்வமில்லை’ என்ற கருத்துடைய இச்செய்யுளின் பொருளைப் புரிந்து கொள்ளாமல் இதனை நாத்திக வாதம் ரிக் வேதகாலத்திலேயே தோன்றிவிட்டது என்ற தம் முடிவுக்குச் சான்றாக கார்பே காட்டுகிறார். உண்மையில் இது இந்திரனைப் புகழ்ந்து கூறுகிறது ஒரு செய்யுளாகும். இந்திரனைக் குறை கூறுவதென்பது இந்திரனது இருப்பில் நம்பிக்கையிருந்தால்தானே சாத்தியம்?
இந்தச் சந்தேகம் ‘ஒரு கடவுள்’ என்ற கொள்கைக்கு வழிவகுத்ததா, அல்லது ‘கடவுள் இல்லை’ என்ற கொள்கைக்கு வழிவகுத்ததா என்பதே கேள்வி. வரலாற்று முற்காலக் கடவுளர்களை’ப் பற்றிய நம்பிக்கை மறுக்கப்பட்டு, ‘ஒரே கடவுள்’ என்ற கொள்கை பிறந்தது. ஆகவே இந்த சந்தேகங்கள் முற்கால பல தெய்வ வணக்கத்தை மறுக்கவே பிறந்தது. எனவே இக்கருத்துக்கள் ஆத்திக முற்கால கருத்துக்கள். இவை நாத்திகமன்று.
வேதச் சிந்தனைகள் வளர்ச்சி பெற்று ‘ஒரு கடவுள்’ கொள்கை தோன்றியது. இதற்குக் காரணம் இனக்குழு அமைப்புகள், அழிந்தும், அழிக்கப்பட்டும் அரசுகள் தோன்றியதே. அரசு மக்களை ஒரு வர்க்கத்திற்கு வன்முறையால் பணிய வைக்கும் கருவி. அது மக்கள் மனத்தைப் பணியவைக்கச் சமயங்களைத் துணையாக நாடிற்று. மனத்தில் 'பல கடவுளர்' (Polyheism) பக்தி இருந்ததை ஒரே கடவுளாக மாற்ற அது தத்துவத் துறையில் முயற்சி செய்தது. இது ஒன்றேதான் ஒரு கடவுள் வணக்கம் தோன்றக் காரணம் என்று நான் கூறவில்லை. அரசுகள் தோன்றிய பகுதிகளில், ஒரே கடவுள் வணக்கமும் தோன்றியது.
ரிக்வேதம் 1,000 செய்யுள்கள் கொண்ட ஒரு தொகை நூல். ஒவ்வொரு செய்யுளின் காலமும் இன்னும் ஆராய்ச்சியால் அறியப்படவில்லை. ஆயினும் வேதப்பாடல்களின் உள்ளடக்கத்தைக் கவனித்தால் அவற்றின் வளர்ச்சிமுறைப் போக்கை நம்மால் அறிய முடியும். வேதங்களின் துவக்க காலத்தில் பல்வேறு இயல்புகள் உடையதாக நம்பப்பட்ட பல்வேறு தேவதைகள் வணக்கத்திற்குரியனவாக இருந்தன. இவற்றிற்கு ஆன்மீக முக்கியத்துவம் இல்லை. பண்டமாற்று விவகாரம் போல சில கொடைகளை மனிதர்கள் தெய்வங்களுக்குக் கொடுத்து, சில வரங்களைப் பெற முயன்றார்கள். மாபெரும் ஆற்றல், இத்தேவதைகளுக்கு இருந்ததாக அவற்றை வணங்கும் மக்கள் நம்பவில்லை. இவ்வேதங்களிலேயே, இத்தேவதைகள் முக்கியத்துவம் இழந்து ஒரு தெய்வ நம்பிக்கை தோன்றுகிற கட்டத்தைக் குறிக்கும் பாடல்களும் உள்ளன. ‘ஒரே கடவுள்’ நம்பிக்கை ரிக்வேதச் செய்யுள்களிலேயே முழு உருவம் பெற்றதா என்ற கேள்வி முக்கியமானதல்ல. ரிக்வேதத்தில் இந்த மாற்றத்துக்குரிய முன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிற நிலைமைகளே வேதப் பாடல்களின் உள்ளடக்கத்தின் வளர்ச்சிப்போக்கு குறிப்பிடுகிறது. இது குறித்து வின்டர் நிட்ஸ் கூறுகிறார்: “மிகவும் உயர்ந்த, மிகவும் வலிமையுடைய இந்திரன் என்னும் தெய்வத்தின் மீது வேதகால மக்கள் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். அது போன்ற பல தெய்வங்களின் மீதும் நம்பிக்கைக் குறைந்தது. இதனால் யக்ஞங்கள் புரிவது, தேவதைகளைத் தங்களோடு விருந்துண்ண அழைப்பது போன்ற சடங்குகளின் மீது நம்பிக்கை தளர்ந்தது. இந்த யக்ளுங்களேயெல்லாம், சர்வ வல்லமை படைத்த ஒரு தெய்வத்துக்காகச் செய்து வரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை புதிதாகத் தோன்றியது. எனவே ‘பிராஜாபதி’ (மனிதனைப் படைத்தவன்) என்ற கருத்து உருவாகியது. படைப்பாளி என்ற கருத்தின் உதயமே, ஒரு கடவுள் வணக்கத்தின் துவக்கம். இவருக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டன; பிராமணஸ்பதி, பிருகஸ்பதி, விஸ்வகர்மன் முதலிய பெயர்களில் அவர் இயல்புத் தொகுப்பான கடிவுள் எனக் கருதப்பட்டார். இயற்கைத் தெய்வங்கள், அவருடைய பல அம்சங்களாகக் கருதப்பட்டன. ரிக் வேதத்திலேயே இதற்குச் சான்றுகள் உள்ளன.
அவரை இந்திரர் என்றும், மித்திரர் என்றும், வருணர் என்றும், அக்னி என்றும் அழைக்கிறார்கள். அவரை கருட் மாத் என்றும் பெயர் சொல்லுகிறார்கள். ஒரே ஒருவருக்குத் தான் கவிகள் பல பெயர்களைக் கொடுத்திருக்கிறர்கள் - அக்னி, யமன், மதாரீஸ்வன்.
இத்தகைய ஒரு கடவுள் கொள்கை பின்னும் வளர்ச்சி யடைந்து ரிக்வேதத்தின் பிற்காலச் செய்யுள்களில் ‘பிரம்மம்’ என்ற கருத்தாக உருவாயிற்று. இது குணங்களற்றது. தெளிவற்றது. ஆயினும் இது ஒன்றே உண்மை. இதினின்றும் தோன்றிய மாயையில் பிரம்மம் பிரதிபலிப்பதால்தான் பிரபஞ்சம் தோற்றம் கொள்கிறது. இக்கொள்கை ஒரு கடவுள் கொள்கையின் வளர்ச்சிநிலை.
இதனை ஒரு கடவுள் கொள்கையாக ராமானுஜர் மாற்றினார். குணமற்ற பிரம்மத்திற்கு நற்குணங்களை ஏற்றி அவர் சகுணப் பிரம்மம் என்ற கருத்தைப் படைத்தார். ‘ஒரு கடவுள்’ என்ற கொள்கையை மறுக்கவே நாத்தி கம் தோன்றியது. பின்னர் தோன்றிய பிரம்மம், ஒரே கடவுள் என்ற கொள்கைகளே மறுக்கவும் நாத்திகம் தன் வாதங்களை வளர்த்துக் கொண்டது.