இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்/4

விக்கிமூலம் இலிருந்து

4. ஈஸ்வர வாதமும் இயற்கை வாதமும்


வேத காலத்திற்கு பின் பொருள்முதல்வாதச் சார்புடைய மூன்று கொள்கைகள் உருவாயின. வேதயக்ஞங்களை எதிர்த்தவர்கள், ஐம்பூதக் கொள்கை, பிரக்ருதி கொள்கை, சுபாவவாதம் ஆகியவற்றை முன் வைத்தனர். உலக இயக்கத்திற்கு பூதங்களின் செயல்களே காரணம் என்றும், உலக இயக்கத்தை விளக்க கடவுளின் தலையீடு தேவையில்லை என்றும் கூறியவர்கள் லோகாயதர்கள். இவர்கள் முரணற்ற நாத்திகர்கள். ‘பிரக்ருதி’ என்ற மூலப் பொருளின் பரிணும மாற்றமே பிரபஞ்சத்தின் உருவாக்கத் திற்குக் காரணம் என்று சாங்கியவாதிகளின் கடைப்பிடி. அவர்கள் கடவுளின் செயலை மறுத்தார்கள். இவர்களது பண்டைக்கால தத்துவம் நிரீச்சுவர சாங்கியம் என்று எதிரி களால் அழைக்கப்பட்டது (நிரீச்சுவர= கடவுள் இல்லாத). இதனோடு சுபாவவாதம் என்றதோர் கொள்கையும் உருவாயிற்று. இதனைப் பல தத்துவவாதிகள் ஏற்றுக் கொண்டனர். பொருள்களின் குணங்களால் (சுபாவம்) உலக மாறுதல்கள் அனைத்தும் நிகழ்கின்றன என்பது சுபாவவாதத்தின் உள்ளடக்கம். இந்தக் கொள்கை, ஆரம்பத்தில் எந்தத் தத்துவத்தோடும் சார்புடையதாக இருக்கவில்லை. பின்னர் பொருள்முதல்வாத தத்துவங்களான லோகாயதம், சாங்கியம் இவற்றின் பகுதிகளாக இக்கொள்கை பொருந்திவிட்டது. கடவுளே மறுக்க இக்கொள்கையைப் பண்டையப் பொருள்முதல்வாதிகள் பயன்படுத்தினர்கள்.

‘சுவாவம்’ என்னும் கொள்கைதான் பண்டையத் தத்துவ வரலாற்றில் மத நம்பிக்கையையும், விஞ்ஞான ஆராய்ச்சியையும் பிரிக்கிற எல்லைக்கோடாகக் காணப்படுகிறது. இவை முரண்பட்டு, முரண்பாடுகள் வளர்ச்சியடைந்து தற்காலத்தில் விஞ்ஞானம், மத நம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. இதனை பெட்ராண்டு ரஸ்ஸல் என்னும் சிந்தனையாளர் நிலைத்த போராட்டம் (Pitched battle) என்று வருணிக்கிறார்.

மதங்களின் மிக முக்கியமான நம்பிக்கை, “இப்பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள இயற்கைக்கு அதீதமான சக்தி ஒன்றுதான் இவ்வுலகைப் படைத்தது” என்பதே. அச்சக்தியைத்தான் ‘கடவுள்’ என்று பக்திமான்கள் அழைக்கிறார்கள். இக்கடவுளை நம்பிக்கையால் மட்டுமே அறிய முடியும் என்று மதவாதிகள் கூறுகிறார்கள். சில தீர்க்கதரிசிகள் மூலம் கடவுள் தனது நீதியை வெளிப்படுத்துவார். இந்தியாவில் கடவுளே அவதாரம் எடுத்து தமது நீதியை நிலைநாட்டுவார் என்று நம்புகிறார்கள். பைபிளில் வருங்காலத்தில் நிகழப்போகும் நிகழ்ச்சிகளை தேவ தூதர்கள் அர்ச். ஜானுக்கு வெளிப்படுத்தியதாக “வெளிப்படுத்தின விசேஷம்” (Revelation)[1] என்று ஓர் அத்தியாயம் உள்ளது. அதில் தேவ தூதர்கள் நடத்தப் போகிற சம்பவங்களை திவ்ய வாசகனான யோவானுக்கு அறிவிக்கிறார்கள். சைவத்தில் அடியார்களுக்குச் சிவபெருமான் காட்சி கொடுத்தோ அல்லது கனவில் தோன்றியோ தம் விருப்பங்களைத் தெரியப்படுத்துவார் (பெரிய புராணம்). தற்காலக் கிராமத் தெய்வங்கள் கூட ஆராதனை கொண்டு ஆடுபவர்கள் மூலமாக தம் விருப்பங்களைத் தெரியப்படுத்துவதாக நம்பிக்கையுள்ளது. இவர்களுக்கு 'சாமியாடி, கோமரம்' என்ற பெயர்கள் உண்டு. இது போலவே பகவதி மனம் தெரிந்து சொல்லுகிற பூசாரிக்கு 'வெளிச்சப்பாடு' என்று பெயர்.

இவர்களை J.G ஃப்ரேஸர் என்னும் பண்பாட்டு மானிடவியல் அறிஞர் (Temporary Gods) ‘தாற்காலிக்க கடவுளர் என்று அழைப்பர். சாதாரண மனிதர்களாக வாழும் இவர்கள், ஊட்டு, கொடை, விழா நேரங்களில் சாமியேறப் பெற்றவர்களாக தங்கள் தன்மையை இழக்கிறார்கள். இவை யாவும் நம்பிக்கையே. சாமியாடிகள் தங்கள் உடலில் சிறிது நேரம் சாமி புகுந்து கொள்வதாக எண்ணுகிறார்கள். பக்திமான்கள் அதனை நம்புகிறார்கள்.

வைஷ்ணவ ஆழ்வார்கள், குருமார்களுடைய செயல்களைத் திருமால், கனவில் தோன்றி வழிப்படுத்துவதாக அவர்களுடைய ‘வரலாறு’ போன்ற புராணக் கதையான ‘குரு பரம்பரை’ கூறும். பக்தியின் ஆற்றலால், வழிபாட்டுக்குரிய தெய்வங்களோடு நேரில் பேசுகிற சாமியார்கள்மீது பெருமதிப்பு வைக்கும் நாடு இது. இவ்வாறு பேசுவது, கனவு காண்பது, காட்சிகள் இவை யாவும் கடவுளர்களின் பிரியத்துக்குரியவர்களுக்கே நிகழும். வேறு யாருக்கும் தெரியாது. கடவுள் வெளிப்படுத்திய நிலையான உண்மைகளே, சமய நூல்களில் காணப்படுகின்றன என்று மதச்சார்பாளர்கள் நம்புகிறார்கள். மதஸ்தாபகர்களுக்கு எல்லாம் இப்படியொரு வாழ்க்கை நிகழ்ச்சியுண்டு என்று அவ்வம்மதவாதிகள் நம்புகிறார்கள். இதனை ஆகமம், நூல் என்று சமயக்கணக்கர் வாதங்களைக் கேட்ட காதையில் மணிமேகலை கூறுகிறது.

விஞ்ஞானத்தின் அடிப்படைக் கருதுகோள் இந்த நம்பிக்கைகளுக்கு விரோதமானது. அதன் முக்கியமான சிந்தனைகள் வருமாறு:

இவ்வுலகம் அடிப்படையில் பொருளால் ஆனது. பொருள்களிலேயே உள்ளார்ந்து இருக்கும் நியதிகளால் பொருள்-இயக்கம் தோன்றுகிறது. ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற கடவுளை நம்புவோரின் கூற்றை அணுக்கள் தங்களுடைய சக்தியாலேயே அசைகின்றன, அவனது தலையீடு அவசியமில்லை என நவீன அணுவியல் ருசுப்பிக்கிறது. பலிகளாலும், காணிக்கைகளாலும், ஜபங்களாலும், பிரார்த்தனைகளாலும் மாற்றமுடியாத விஞ்ஞான விதிகளுக்குட்பட்டு பிரபஞ்ச இயக்கம் நிகழ்கிறது. இதனால் மனிதன் விஞ்ஞான விதிகளின் கையில் ஒரு பந்து போல எவ்வித சுதந்திரமும் அற்றவன் என்பது பொருளல்ல. ‘விஞ்ஞான விதிகளை மனிதன் அறிய முடியும்; அறிந்து அவ்வறிவால் பொருள்களின் இயக்கத்தை நெறிப்படுத்த இயலும்’ என்று விஞ்ஞானம் வெளிப்படுத்தியுள்ளது. இன்று எத்தனை சக்திகள் மனிதன் விஞ்ஞான விதிகளை அறிந்ததால் அவனுக்குப் பணி புரிகின்றன?

ரசாயன விஞ்ஞானத்தை மனிதன் படைத்திருக்கும் காரணத்தால், விவசாயத்திற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள், நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக்கூடிய பல மருந்துப் பொருள்களையும், நோயைக் குணப்படுத்தக்கூடிய பல ஒளஷதிகளையும் இயற்கையில் இருந்து படைத்துள்ளான். அறுவை வைத்தியம் எவ்வளவு முன்னேற்றமடைந்துள்ளது என்று இன்று சொல்ல வேண்டியதில்லை. இதற்குக் காரணம் உயிரியல் விதிகளையும், உயிர் ரசாயன விதிகளையும், வேறு விஞ்ஞானப் பிரிவுகளின் விதிகளையும் மனிதன் அறிந்து பயன்படுத்துவது தான். விறகைத் துளைத்துத் தீயை உண்டாக்கிய மனிதன், குளிர்காயத் தீயின் உஷ்ணத்தைப் பயன்படுத்தினான். இன்று பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்றுள்ள உற்பத்தித் தொழில்களுக்கு வெப்பம் அளிக்க நிலக்கரியைப் பூமியின் அடியில் இருந்து தரைமட்டத்திற்குக் கொண்டு வருகிறான். பாறை எண்ணெயைத் தரையின் அடிப்பாகத்தில் இருந்து மேலே கொண்டு வருகிறான். நிலக்கரியும் பாறை எண்ணெயும் இருப்பது மனிதனுக்கு எப்படித் தெரியும்? இவை இருக்கும் இடங்களில் உள்ள பிசாசுகள், தம்மை ஆராதிக்கும் சாமியாடிகளுக்கு வந்து காட்சி கொடுத்துச் சொல்லிச் சென்றனவா? தரையியல் (Geology) தரையியல் ரசாயனம் (Geo chemistry)ஆகிய விஞ்ஞானங்களின் வளர்ச்சியே நிலக்கரி, உலோகங்கள், மண்ணெண்ணெய் முதலியன எத்தன்மையுடைய பாறைகளில் காணப்படும் என்ற விதிகளைத் தோற்றுவித்தன. இவ்விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி மனிதன் பூமியின் உட்குடலைத் தோண்டித் தனக்குத் தேவையான பொருள்களைப் பெறுகிறான். ஃபிஸிக்ஸ் (பெளதீகம்) என்னும் விஞ்ஞானத்தின் விதிகளை அறிந்து இப்பொருள்கள் இருக்கும் இடத்தையும், அளவையும் தெளிவாக அறியலாம்.

வெடி அதிர்வுகளே, அண்மைக் காலத்தில் உலோக தாதுக்கள், நிலக்கரி, மண்ணெண்ணெய் போன்ற பொருள்களின் இருப்பிடத்தை அறியப் பயன்பட்டது. தற்போது பல வகைக் கதிர்களின் (Rays) பிரதிபலிப்பினால் பூமியினடியில் உள்ள பொருள்களை அறிய முடிகிறது. ஓரிரு உதாரணங்களே நான் கொடுத்துள்ளேன். விஞ்ஞான-தொழில் நுணுக்கப் புரட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான சான்றுகளை அடுக்கிக்கூற முடியும். மனிதன், இயற்கை விதிகளை அறிந்து கொள்வதால், இயற்கையை தனது நலனுக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளுகிறான் என்ற உண்மையை விளக்கப் பல நூற்றுக்கணக்கான நூல்களே வெளி வந்துள்ளன.

இவ்விஞ்ஞானிகள் இயற்கையை அறியப் பயனபடுத்தும், அறிதல் முறை, நேர்காணல், சோதனை, தொடர் சிந்தனை, கருதுகோள் அமைப்பு, பின்னும் நிரூபணச் சோதனை ஆகிய சிந்தனைப் பகுதிகள் அடங்கிய விஞ்ஞான ஆய்வு முறையாகும். இங்கு நம்பிக்கைகள், கடவுளைக் கண்டவர்கள் கூறியது, ஆப்த வாக்கு (பெரியோர் கூற்று) என்பதற்கெல்லாம் இடம் இல்லை.

இவ்விரண்டு போக்குகளுக்கும் பண்டைக்கால முதலே போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியத் தத்துவ சிந்தனையில் ‘கடவுட் கொள்கை’ ‘சுபாவக் கொள்கை’ இரண்டிற்கும் நடைபெற்றுள்ள போராட்டங்களை இங்கு காண்டோம்.

சுபாவவாதம், விஞ்ஞானத்திற்கு அடிப்படைக் கருதுகோள். இது ஈஸ்வரவாதத்தின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் முரண்பட்டு மோதிக் கொள்ளுகிறது. இதனை இந்திய தத்துவ வரலாற்றில் ஈஸ்வர வாதத்திற்கும் சுபாவ வாதத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டமாகக் காணலாம். ஸ்வேதாஸ்வதார உபநிஷதம் என்னும் நூலில் சுபாவவாதத்தை எதிர்க்கும் வாதங்கள் உள்ளன. இவ்வுபநிஷதம் ‘பானையைக் கண்டதும் செய்பவன் உண்டென்று யூகிப்பது போல, உலகத்தை அறிந்ததும், இதைப் படைத்தவன் உண்டென்று அறிய வேண்டும்’ என்று படைப்பாளியான கடவுள் உண்டென்று கூறுகிறது. இவ்வாறு வாதிப்பதற்கு, அவர் காலத்தில் இக்கூற்றை மறுத்த சுபாவவாதம் என்னும் கருத்தை மறுக்கவேண்டியதாயிற்று. இதன் தர்க்க உருவம், இயக்கத்திற்கு இயற்கைச் சக்திகள் காரணமா, அல்லது இயற்கைக்கு அதீதமான சக்திகள் காரணமா என்ற வாதமாக இருந்தது.

நடுக்காலத்தில் சுபாவவாதத்தை, ‘நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கிடையாது’ என்ற பொருளில் தத்துவவாதிகள் பொருள் கொண்டார்கள். அல்லது காரணம் மட்டுமே உண்மை விளைவு மாயை என்று சில தத்துவங்கள் கூறின. காரணம் அல்லது விளைவு உண்மையல்ல என்று வேறு தத்துவங்கள் கூறின. இதனே உபநிஷதங்கள் ‘யதிருச்சா’ (யதேச்சை) என்ற பெயரால் அழைக்கின்றன. காரணமின்றித் தாமாகவே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அல்லது எந்த நிகழ்ச்சிக்கும் காரணம் காண இயலாது என்று யதிருச்சாவாதிகள் வாதித்தனர். இங்கும் கடவுளின் தலையீடு இன்றியே உலக நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன என்ற கருத்து உள்ளது.

இவ்விரண்டு கொள்கைகளும் நேர்முரணானவை. சுபாவவாதத்தை இயற்கை வாதம் என்றழைக்கலாம். இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணம் உண்டு. அவற்றை மனிதர் அறிலாம். இக்காரணங்கள் இயற்கையில் உள்ளார்ந்து உள்ளன. ஒரு நிகழ்ச்சிக்குக் காரணம் கடவுள் என்று நம்பினால் அறிவு ஸ்தம்பித்துப் போய்விடும். பொருள்களின் இயற்கையே அவற்றின் மாறுதல்களுக்குக் கார சுபாவவாதம். யதிருச்சவாதம் என்பது உன் நிகழ்ச்சிகளனைத்தும் தான்தோன்றியாக இயற்கையிலோ, இயற்கைக்கு வெளியிலோ ஒரு நிகழ்ச்சிக்குக் காரணத்தைத் தேடுவது அவசியமில்லை என்று வாதிப்பதுதான் யதேச்சை வாதம். இரண்டும் கடவுள் அல்லது தேவர்களின் தலையீட்டை எதிர்க்கின்றன. இரண்டும் நாத்திகச் சிந்தனை உடையவை. ஆயினும் நேர் எதிர் சிந்தனைப் போக்குடையவை.

இவ்விரண்டின் வேறுபாட்டை மிகத் தெளிவாக குணரத்னா கூறுகிறார் (இவர் நடுக்கால ஜைன தத்துவவாதி). “இயற்கை வாதிகள் (சுபாவவாதிகள்) கீழ் வருமாறு கூறுகிறார்கள்: பொருள்களின் மாற்றங்கள் அவற்றில் உள்ளார்ந்திருக்கும் தன்மைகளால் (சுபாவம்) நிகழுகின்றன. ஒவ்வொன்றும் உருப்பெறுவது சுபாவம் என்னும் இயற்கைப் போக்கின் செயல்பாட்டினலேயே. உதாரணமாக களிமண், சட்டியாக மாறுகிறது. துணியாக மாறுவதில்லை. நூலிழையில் இருந்து துணி உண்டாகிறது. சட்டி உண்டாவதில்லை. ஒழுங்கான இந்நிகழ்ச்சிகளுக்கு சுபாவமே காரணமாகும். உலகில் நிகழும் எல்லா மாற்றங்களும் சுபாவத்தினால் நிகழ்கின்றன என்று அறியலாம். அதனால் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:


முள்ளைக் கூர்மையாக்கியவர் யார்?
விலங்குகளிலும், பறவைகளிலும் பற்பல வேறுபாடுகள் இருப்பது எதனால்?
சுபாவம் என்பதால் இவை அவ்வாறுள்ளன. யாரும் முள்ளைக் கூர்மையாக்கவோ, விலங்கு பறவைகளே வேறுபட்ட தன்மைகளோடு படைக்கவோ இல்லை.
இலந்தை மரத்தின் முட்கள் கூர்மையாக இருக்கின்றன. சில முட்கள் நேராகவும், சில முட்கள் கோணலாகவும் உள்ளன.
ஆனால் பழம் உருண்டையாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் யார் அவ்வத்தன்மை உடையதாகச் செய்தார்கள்.

ஒவ்வொரு பொருளின் உருவாக்கத்திற்கும் காரணம் சுபாவமே என்ற முடிவு தவிர்க்க முடியாதது. குணரத்னா, யத்ரிச்சா வாதத்தை விளக்கிப் பின்வருமாறு கூறுகிறார்:

நிகழ்ச்சிகள் காரணமின்றி நடைபெறும் என்று யதேச்சை வாதிகள் கூறுகிறார்கள். காரண காரியத் தொடர்ச்சியெதுவும் இன்றி உலக நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும், நிகழ்ச்சிகள் யதேச்சையாக நிகழ்வதாகக் கூறுபவர்கள் யதேச்சை வாதிகள். உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் காக்கை உட்காரப் பனம்பழம் விழுவதுபோல நடக்கின்றன. தற்கால இந்தியத் தத்துவவாதிகள் சுபாவவாதத்தை ‘இயற்கைவாதம்’ என்றும், யதேச்சை வாதத்தை விபத்துவாதமென்றும் அழைக்கிறார்கள். இவ்விரு வாதங்களும் காரணம் பற்றிய கருத்தில் வேறுபடுகின்றன. ஆனால் கடவுளுக்கு உலக நிகழ்ச்சிகளில் எவ்விதத் தலையீடும் இல்லை என்றே கூறுகின்றன.

சாந்தராக்ஷிதர் என்ற பெளத்தரும், குணரத்ன என்ற ஜைனரும் சுபாவ வாதத்தையும், விபத்து வாதத்தையும் எதிர்த்து வாதாடினர்கள். அவர்களின் வாதங்களின் பரபக்க வாதமாக இவை இரண்டும் இருந்தன. இவ்வெதிரிகளின் வாதங்களில் இருந்து சுபாவவாதம், விபத்துவாதம் இரண்டின் தத்துவ உள்ளடக்கத்தை அறிந்து கொள்கிறோம். இக்கொள்கைகளில் சுபாவவாதத்தை பிரஹாஸ்ப தீயர்கள் என்ற லோகாயதிகள் தங்கள் வாதங்களுக்குத் துணைக்கொண்டார்கள். அவர்கள் கூறியதாவது:

தீயின் தன்மை சுடுதல்.
நீரின் தன்மை குளிர்ச்சி.
காற்று இரண்டும் இல்லாதது.
இவ்வேறுபாடுகளை உண்டாக்கியது யார்?
அவற்றின் சுபாவத்தால் அவை அவ்வாறிருக்கின்றன.

சாங்கியர்களும் சுபாவவாதச் சார்புடையவர்களே. தற்கால இந்தியத் தத்துவவாதியான கோபிநாத் கவிராஜ் கூறுவதாவது: “நிமித்த காரணம்” என்று உலகப் பரிணாம இயக்கத்திற்கு கடவுளைக் காரணமாக்காமல் பொருள் தனது இயற்கையால்தான் பரிணாம மாற்றம் அடைகிறது என்று கூறுவதால் சாங்கியவாதிகள் சுபாவ்வாதிகளே.”

ஈஸ்வர வாதத்திற்கும், சுபாவ வாதத்திற்கும் நடைபெற்ற தத்துவப் போராட்டம், மிகப் பண்டைக் காலத்தில் மதத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் நிகழ்ந்த போராட்டமாகும். முதன்முதல் சுபாவவாதம் எந்தத் தத்துவப போக்கோடும் தொடர்பு கொள்ளாமல் சுதந்திரமான கருத்ததாக இருந்தது. பொருள்முதல்வாதிகள், தங்கள் கொள்கைகளை வலுப்படுத்திக்கொள்ள இக்கொள்கையைத் தங்கள் தத்துவ உள்ளடக்கத்தோடு இணைத்துக் கொண்டார்கள். சுபாவவாதம் என்பது நாத்திகம் மட்டுமன்று, பொருள்கள் மாற்றம் அடைவதற்குக் காரணம் அவற்றின் சுபாவமே என்ற விஞ்ஞான கருத்தும் அதில் உள்ளது. இதுவே விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் என்று கூறலாம்.

  1. II யோவான்-பக். 333, இந்திய வேதாகமச் சங்க வெளியீடு. பரிசுத்த வேதாகமம்.