உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னொரு உரிமை/சின்ன மனிதர்கள்

விக்கிமூலம் இலிருந்து

சின்ன மனிதர்கள்


“ஸார், வாட்ச்மேன் ஸார்.”

மோகனா, இப்படி, முப்பது தடவையாவது கூப்பிட்டிருப்பாள். அவசர அவசரமாயும், அழுத்தந்திருத்தமாகவும், ஒவ்வொரு வார்த்தையையும் இடைவெளி விட்டு உச்சரித்ததும், அது இல்லாமல் உச்சரித்ததும், அழுத்தமாய் அழைத்ததும், சத்தமிட்டதும் அப்புறம் கத்தியதும் வீணாயின.

வாட்ச்மேன் வைரவன் அசையவில்லை. அந்தக் காலைப் பொழுதான எட்டு மணியிலும், மல்லாந்து கிடந்தான். வெள்ளை யூனிபாரத்தை மடித்து, அதையே தலையணையாக வைத்துக்கொண்டு, மேஜை விரிப்புத் துணியையே பாயாக்கி, படுத்துக் கிடந்தான், முப்பது வயதுதான் இருக்கும். ஆனாலும் முழுக் கிழவன் போல் தெரிந்நான்.

மோகனா, அவனை எப்படி எழுப்புவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள். சைக்கிள் காரனும், ஆட்டோ ரிக்ஷாகாரனும் மோதியதில் இடையில் அகப்பட்டு, காலைக் கோணலாக்கிய ஆறு வயது மகனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போக வேண்டும், அந்தக் கட்டை அவிழ்த்துவிட்டு, அடுத்த கட்டைப் போடுவார்கள். ஒன்பது மணிக்காவது ‘ஓபி’ வரிசைக்குப் போய்விட வேண்டும். இவ்வளவு பெரிய இடத்தையும் எப்போ பெருக்கி எப்போ துடைச்சு...

மோகனா, வேர்த்துப் போன தன் முகத்தை, வியர்வைபட்ட கரங்களாலோய துடைத்துக் கொண்டாள். வைரவனோ, கிராதிக் கம்பிகளுக்குள்ளே லாக்கப் திலகம் போல் தூங்கிக் கொண்டிருந்தான். அந்தக் கிராதகக் கிராதி கதவு, உட்புறம் சங்கிலி போட்டுப் பூட்டப்பட்டிருந்தது.

மோகனா வெளியே கம்புத் துடைப்பத்தை எடுத்து, தலைகீழாகப் பிடித்து, கம்பு முனையை கிராதிக் கம்பிகளுக்கு இடையே விட்டு, அவன் இடுப்பில் லேசாகத் தட்டினாள். உள்ளங்கால்களில் சற்று லேசாக அழுத்தினாள்.

வைரவன் கத்திக் கொண்டே உடலைப் புரட்டினான். பிறகு அவளை அடிக்கப் போவதுபோல் கை கால்களைத் துள்ளியாட விட்டபடி எழுந்தான். மோகனா பயந்து விட்டாள். சர்க்கார் ஆபீஸ் மவராசனை இப்படிச் செய்தது தப்பு என்பதுபோல் கைகளைப் பிசைந்தாள். ஆனால் வைரவன் முகத்தில் இருந்த கோபம் ஒளி வேகத்தில்—அதாவது வினாடிக்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் மைல் வேகத்தில்—போய், சிரிப்பும் அதே வேகத்தில் வந்து சுடர் விட்டது. சங்கிலிப் பூட்டைத் திறந்தபடியே பேசினான்.

“ஒன் முகம் அழகு மட்டுமல்ல மோகனா... ராசியான மொகம், ஒன் மொகத்துல விழிக்கனுமுன்னுதான் தூங்கிட்டு இருந்தேன். இதேமாதிரிப் போன வாரமும் தூங்கினேன் பாரு அப்போ நீ எழுப்புனே பாரு. அன்னிக்கி எல்லாக் கிராக்கியுமே எனக்குத் தள்ளுனாங்க. முப்பத் தாறு ரூபாய். இருபது ரூபாய் அதுக்கு அதுல ஒனக்குப் பத்து ரூபாய் எடுத்து வச்சிருக்கேன்...”

மோகனா அவனிடம் எதுவும் பேசவில்லை. சுருங்கிப் போன இரும்புக் கிராதிகளின் இடைவெளியில் நுழைந்து துடைப்பத்தை எடுப்பதற்காகக் குனியப் போனாள். துடைப்பத்தோடு எழுந்தபோது, அவள் தலை வைரவனின் மோவாயில் இடித்தது. மோகனா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். “ஏன் ஸார்... இப்படி ரோதனை செய்யுறே?” என்று கேட்க நினைத்தாள். முடியவில்லை. அவள் அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த மூன்று மாத காலமாகக் கிடைக்கும் உபத் திரவம் இது. வைரவன் பெரிய உபகாரம் செய்தவன்போல் பேசினான்.

”நாளைக்குக் கதவுப் பக்கமாவே படுக்கேன். ஒன் கை யாலேயே எழுப்பிவிடு. என்ன மோகனா நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டுப் போறேன். நீ என்னை மதிக்காம...”

துடைப்பத்தோடு ஆபீஸர் அறைக்குள் போகப் போனவள், அவனை மதிப்பவள்போல் நின்றாள். “என் மனசு... ஒனக்கு ஏன் புரியமாட்டக்கு.” என்று அவன் மீண்டும் பேசியபோது, அவன் மதிப்பிற்குரியவன் அல்ல என்பதுபோல், மடமடவென்று உள்ளே போனாள். நேற்று ஆறு மணிக்கு ஆபீஸர் போன பிறகு, இப்போதுகூடச் சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறியை நிறுத்துவதற்கு ஒரு ஸ்விட்சை மேல்நோக்கி அவள் கரம் நகர்த்தியபோது, அவள் புறங்கையில் பாதியிடத்தை அழுத்தியபடி வைரவனின் கை டியூப்லைட் சுவிட்சைத் தட்டிவிட்டது. அவள் கையையும் விடாமல், தன் கையையும் எடுக்காமல், வைரவன் வசந்தமாகப் பேசினான்.

”இதுதான் பொருத்தம் என்கிறது. ஒங்கிட்டே வரப் :படாதுன்னுதான் நினைச்சேன். அதுக்காக லைட் போடாமல் இருக்க முடியுமா! அந்த ஸ்விட்சைப் போட் டால் இந்தக் கை ஷாக்கடிக்குது... சும்மா சொல்லப்படாது மோகனா. ஒன் கை இலவம் பஞ்சு மாதிரி இருக்குது.”

மோகனா தன் கையை வெடுக்கென்று எடுத்த பிறகும். வைரவன் ஸ்விட்ச் போர்டையே மெய்மறந்து தடவிக்கொண்டிருந்தான். ஓர் ஆணி பட்டு கைவிரல் ஒரத்தில் லேசான வலி ஏற்பட்டபோதுதான் அவன் கண்விழித்துப் பார்த்தான் மோகனா அங்கே இல்லை. பக்கத்து அறையில் துடைப்பச் சத்தம் கேட்டது. அங்கே ஓடினான்.

“மோகனா எனக்கு ஒரு காப்பி வாங்கிட்டு வர்றியா?”

சரி என்பதுபோல், அவள் துடைப்பத்தைக் கீழே போட்டுவிட்டு. கைகளை முந்தானைச் சேலையில் துடைத்த போது வைரவனுக்கு அன்பு அதிவேகமாய்ப் பிறப்பெடுத்தது.

“நீயும் ஒரு காப்பி குடிக்கணும். அப்போதான் நானும் குடிப்பேனாம். என்ன சரியா?”

சரியில்லை என்பதுபோல் மோகனா கீழே கிடந்த துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, இன்னொரு அறைக்குள் போனாள். ஒட்டடைக் கம்பை வைத்து டியூப்லைட்டில் படிந்த தூசியைத் தட்டிய அவள் முதுகோடு முதுகாக அவன் சாய்ந்து, அவள் கைபிடித்த கம்பிற்குமேல் தன் கையைப் பற்றிவிட்டு, “அதோ தூசி இருக்கு பாரு... அதோ சிலந்தி வலை இருக்கு பாரு ஒனக்கு எட்டாத இடத்துல இருக்குதோ, சரி... நீ அப்பிடியே நிற்பியாம். நான்...” என்று அவள் மேல் சாயப்போனான்.

மோகனாவால் இதற்குமேல் தாங்க முடியவில்லை—கட்டிய புருஷன் பாயிலும், நோயிலுமாய்க் கிடப்பது உண்மைதான். இந்த வேலை போய்விட்டால் பிச்சை எடுத்துத்தான் பிழைக்க வேண்டும் என்பதும் உண்மைதான். அதுக்காக? மோகனா நெருப்புத் தணலாய்க் கேட்டாள்.

“நான் ஏற்கனவே நொந்துபோனவள். என்னை ஒங்க தங்கையாய் நினையுங்க. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்...”

வைரவன் கடகடவென்று சிரித்தான்.

“பத்து வருஷத்துக்குப் பிறகு இப்படிச் சொன்னால். ஒருவேளை நான் அப்படி நினைக்கலாம். அது கூட முடியாது. ஏன்னா ஒன் உடம்பு இருக்கே அது அச்சுமாதிரி உடம்பு!  இந்தச் சிவப்பும் இந்தத் தோரணையும் எப்பவுமே மாறாது. எந்தக்காலத்துலயும் ஒன்னைப் பார்க்கிறவன் கண்ணுலதான் சுருக்கம் ஏற்படுமே தவிர ஒன் முகத்துலயோ, வவுத்துலயோ ஏற்படாது. ஆக மொத்தத்துல-ஒன்னை நான் எப்பவுமே சிஸ்டர்னு நினைக்க முடியாது.

“அப்போ ஒங்க சிஸ்டர் அழகா இருந்தால்?”

மோகனா, துடைப்பத்தில் தூசியைத் தட்டிவிடுவது போல் அந்தத் தரையில் அதைக் கடாசியடித்தாள். வைரவன் வெளியே வந்து பெஞ்சில் உட்கார்ந்து ஒரு சிகரெட்டை உறிஞ்சினான். மோகனா பேசிய பேச்சில் அந்த சிகரெட்டே தன்னை உறிஞ்சுவது மாதிரியான ஒரு பிரமை. அவளை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம் என்பது மாதிரியான சிந்தனையுடன், புகைந்துகொண்டிருந்தான்.

மோகனா அந்த அலுவலகத்தின் நாலாயிரம் சதுர அடி பரப்பையும் பெருக்கி முடித்து, ஒரு வாளி நிறையத் தண்ணி ரைக் கொண்டுவந்து ஒரு கலர்த் துணியை அதில் நனைத்து, குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடியே மொஸைக் தரையைத் துடைத்துக்கொண்டே போனாள். திடீரென்று வைரவ னிடம் இருந்து ஒரு அதட்டல்.

“ஏய் மோகனா! மொலைக் தரையைத் துடைக்கிற லட்சணமா? நூறு ரூபாய் மொத்தமா வாங்கத் தெரியுது. இந்தத் தரையை எப்படித் துடைக்கணுமுன்னு தெரியலியே! அதோ பாரு, தரையில ஈரம் படல. இதோ பாரு, நீ மெழுகுன லட்சணம். ஒரே தூசி தும்பு.” ஒழுங்காய் வேலை பார்க்கணுமுன்னால் பாரு! இல்லன்னா தீர்த்துக்கட்டிடுவேன். நீயல்லாம் முன்னப்பின்ன மொசைக் தரையைப் பார்த்திருந்தால்தானே!”

வைரவன், அவளை விட்டுப் பிடிக்க நினைத்தவன்போல் வெளியேறினான். அந்தச் சமயத்தில் மோகனாவுக்குத் தன் ஒட்டு மொத்தமான வாழ்க்கை அவலங்கள் அனைத்தும் முன் வந்தனவே தவிர, வைரவனின் உருட்டல் மிரட்டல் மட்டும் தனித்து வரவில்லை. கிராமத்தில் நொடித்து, நகரத்திற்குக் கணவனோடு வந்தது, கட்டிலில் கிடக்கும் கணவன், அவன் மீள்வானா என்ற பயம். காலொடிந்த பையன், அவன் கால் தேறுமா என்ற சந்தேகம். இது போதாதென்று இந்த வைரவன்...

மோகனா என்ன செய்வது என்று புரியாமல், தரையில் படவேண்டிய துடைப்பத்தைத் தலையில் வைத்தபடியே குத்துக்காலிட்டு இருந்தபோது, வாட்ச்மேன் வைரவனும் எஸ்டாபிளிஷ்மெண்ட் கிளார்க் ரமணனும் உள்ளே வந்தார்கள். மோகனாவுக்குச் சம்பள பில் போடுபவன் இந்த ரமணன். கண்ணாடி அறைக்குள் போய் உட்கார்ந்த ரமணன் அவளைத் தன் பக்கம் வருமாறு சைகை செய்தான். அவளும் புடவையை இழுத்துவிட்டு, அந்த அறைக்குள் போனபோது, ரமணன் வாட்ச்மேனை நோட்டம் விட்டான். பின்னர் அதிகாரமும், அன்பும் கலந்த தோரணையில் பேசினான்.

“வைரம், பக்கத்து ஆபீசுல போய் டி.ஏ. பில் வாங்கிட்டு வர்யா... நீ மதுரைக்கு டூர் போனதுக்கு பில் போடணும் பாரு.”

“கழுத பணம் கிடக்கட்டும் சார்! அதோட அந்த ஆபீஸ்காரங்க இன்னும் வந்திருக்கமாட்டாங்க.”

“அதுவும் சரிதான்... எப்பா ஒரே தலைவலி. போய்க் காப்பி வாங்கிட்டு வா!”

“ஏய் மோகனா, சாருக்குக் காப்பி வாங்கிட்டு வா!”

“பெருக்கற வேலையை ஏன்யா கெடுக்கிறே? அவளைக் காப்பி வாங்க அனுப்பினா அப்புறம் டெப்டி டைரக்டர் வர்றபோது துடைப்பமும் கையுமா நிப்பா! நீயே போயிட்டு வா! ஒனக்கும் ஒரு காப்பி அங்கேயே குடிச்சுட்டு நிதானமா வா!”

இப்போது ரமணன் குழைந்து குழைந்து பேசினான்.

“மோகனா ஓங்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்றதுக்குத்தான், அவனை வெளியே அனுப்பினேன். நீ சரியாய் வேலை செய்யலியாம்! ஒன்னை நிறுத்திடணுமாம். இன்னைக்கே வைரவன் கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுக்கப்போறானாம். டோன்ட் ஒர்ரி... அவன் எதுக்காக அப்படி மிரட்டறான்னு எனக்கு நல்லாவே தெரியும். பட்... அவன் புகாரை நான் கிடப்புல போடவும் முடியாது!”

“சார்... இந்த வேலை மட்டும் போயிட்டா நாங்க ஒரு வேளை சாப்பிடறதுகூட...”

“ஒன்னை நான் அப்படி விட்டுடுவேனா? எல்லா விஷயத்தையும் விவரமாப் பேசலாம் , நாளைக்குக் கோடம்பாக்கம் தியேட்டர்ல பதினொரு மணிக்கு வந்துடு. அவன் என்ன கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கான், நீ அதுக்கு எப்படி பதில் சொல்லணும்னு நான் விளக்கமாச் சொல்றேன். சரியா பதினொரு மணிக்கு வந்துடு... குட்மார்னிங் சார்...!”

மோகனா, திகைத்து நின்றபோது டெப்டி டைரக்டர் ஜான்சன் வந்துவிட்டார். நாற்பது வயதுள்ள அவரை சபாரி டிரெஸ் நாற்பத்தைந்தில் தூக்கிப்போட்டது. ரமணனிடம் மிடுக்காகக் கேட்டார்.

“டூர் பேப்பர்ஸ் ரெடியா... கோயம்புத்தூர் கான்ட் ராக்ட் பைல், ஆடிட் பைல் எடுத்து வச்சிட்டியா மிஸ்டர்?”

“இதோ எடுத்து வச்சுக்கிட்டே இருக்கேன் சார்!”

“இன்னுமா எடுக்கலே? வாட் எ மேன் யூ வார்... ட்ரெயின் கிளம்ப இன்னும் அரை மணி நேரம்தான் இருக்குது.”

“ஜஸ்ட் அஞ்சு நிமிஷம் சார்!”

“இந்தம்மா யாரு?”

 "இது புதுசா பெருக்கறதுக்குப் போட்டிருக்கிற லேடி ஸார்"

"ஐ ஸீ... இந்தாம்மா! இங்க வா, உன் பேரு என்ன? நீ இருய்யா ! அது பேசட்டும்."

"மோகனா சார்!"

"மிஸ்டர் ரமணன்! நீங்க இப்போ அஸிஸ்டென்ட் டைரக்டர் வீட்டுக்குப் போறீங்க. அப்படியே இங்கே அவரை டிஸ்கஷனுக்குக் கூட்டிட்டு வர்றீங்க... டூர் போறதுக்கு முன்னால் அவர்கிட்ட சில அந்தரங்க சமாசாரங்களைப் பேசணும்!"

ரமணன், போய்விட்டான். எள்ளும் சொள்ளுமாய் இருந்த ஜான்சன் எலுமிச்சம்பழம்போல் ஒரு குளிர்ப்பதனப் பார்வையை வீசினார்.

"இப்படி வா மோகனா... ஏன் பயப்படுறே! ஆபீஸ்லே ஒனக்கு ஏதாவது பிரசினையா?"

"எனக்கு வேலை காயமாகணும். யாரு பேச்சையும் கேட்காமல் அய்யா என்னை இந்த வேலையில வச்சிருக்கணும்."

"நீ சொல்றதைப் பார்த்தால் வாட்ச்மேன் ஏதும் கலாட்டா பண்ணுறானோ? ஏன் பேசமாட்டேங்கேற! டோன்ட் ஒர்ரி. அவனை வேற இடத்துக்கு மாத்தப் போறேன்!"

"அதெல்லாம் தேவையில்லீங்க ஐயா இந்த வேலையி லிருந்து என்னை நீக்காமல் இருந்தாப் போதும்." கூனிக் குறுகியபடி நின்றாள். பாவம் டெப்டி டைரக்டர் ஜான்சனுக்கு மனசும் கேட்கவில்லை, கையும் கேட்கவில்லை. "இனிமேல் உன் கவலையை என் கிட்டே விட்டுவிடு. உன் னோட எதிர்காலத்துக்கு நான் பொறுப்பு." என்று சொன்னபடியே அவளருகே போய்த் தோளில் கை போடப் போனார். அப்போது பார்த்து “குட்மார்னிங்” என்று சொல்லிக்கொண்டு, ஒரு பேட் மார்னிங் டைப்பிஸ்ட் பெண் உள்ளே வந்தாள். ஜான்சன் சமாளித்துக்கொண்டார்.

மோகனா மறுநாள் காலையில் வழக்கம்போல் அலுவலகம் வந்தபோது, வாட்ச்மேன் வைரவன் ஒரு நாற்காலியில் வீராப்புடன் உட்கார்ந்திருந்தான். அவளையும், சுவர்க்கடிகாரத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அவள் துடைப்பத்தை எடுத்துப் பெருக்கப்போனபோது, இவன் வாயெடுத்துப் பேசினான்.

“ஏழரை மணிக்குப் பெருக்கறதுக்கு இப்ப வந்தா எப்படி? நேத்து மேஜையைத் துடைக்காமல் போயிட்டே. இன்னையிலிருந்து பாத்ருமையும், டாய்லெட்டையும் கழுவி விடணும்!”

“அதுக்குத்தான் வேற ஆளு இருக்குதே!”

“அதைப்பற்றி ஒனக்கென்ன? உன்னால முடியுமா முடியாதா? எனக்கு இப்பவே தெரியணும்.”

“மோகனா அவனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள்.”

“இந்தாப் பாருய்யா வாட்ச்மேன்... நான் மட்டும் மனசு வச்சால் உன்னை அடுத்த வாரமே இந்த ஆபீஸை விட்டுத் துரத்த முடியும். என்னை அழிச்சுக்கிட்டே உன்னையும் அழிக்க முடியும். நான் ரெண்டையும் விரும்பல. ஆனா இப்ப ரெண்டுல ஒன்னைத் தீர்மானிக்க வேண்டியது ஒன்னோட பொறுப்பு. என்ன சொல்றே? எனக்கு இப்பவே தெரியணும்.”

வைரவன் வாயடைத்துப்போனான்.