உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னொரு உரிமை/பாசப்பிரிவினை

விக்கிமூலம் இலிருந்து

பாசப் பிரிவினை


கிழவர் தன் கால்களை லேசாக, வேண்டுமென்றே ஆட்டி அவளைத் தாலாட்டுகிறார். அந்தத் தாலாட்டோடு கூடவே பாட்டு ஒலிக்கிறது. ராகம் இல்லாத பாட்டு.

"செல்லக் கோபத்தை பொறுமையாக்கிப் பழகணும்பா! இதுக்குல்லாம் நீதாம்பா காரணம்... நீதான் என்னைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டே! வீட்ல அரிசி இருக்கோ இல்லையோ, எங்கேயாவது இரவல் அரிசி வாங்கி எனக்கு வேளா வேளைக்கி, ஆக்கிப்போட்டு எனக்குப் பசியே இல்லாமல் பண்ணிட்டே! முகத்தைப் பார்த்தே பசியறிந் தவள் நீ! இப்போ பசியறிந்தும், முகத்தைப் பார்க்க ஆளில்லாத நிலையில் கோபம் வரத்தான் செய்யும். என்னப்பா செய்யச் சொல்றே... கருணை செய்யுற இயற்கை இந்த வயித்தையும், இன்னும் அதிகமாய் குறைத்து கருணை பண்ணியிருக்கணும். இல்லன்னா நீயாவது அப்போவே... பசியில விட்டு எனக்குப் பயிற்சி கொடுத்திருக்கணும். மகனும், மருமகளும் கொடுக்கிற ஒரு வருடப் பயிற்சி நீ கொடுத்த நாற்பத்தஞ்சு வருஷப் பயிற்சிய ஒண்ணும் பண்ண முடியல! இதை இப்போ கோபமாச் சொல்லல... குறையாத்தான் சொல்றேன்."

அந்த முதுமைகள் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு சொல்வதுபோல் ஸ்பரிசங்களால் இயலாமை உணர்வுகளை எழுப்பிக்கொண்டே முடங்கிக் கிடந்தார்கள், சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் எடுபிடி ஆளாகச் சேர்ந்து தனிப் பட்ட முறையில் படித்து உதவி நிர்வாக அதிகாரியாக ‘ரிடயரானவர்’. மூன்று மகள்களையும் இரண்டு மகன்களையும், கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தவர். அவர்கள் இப்போது நலல நிலைமையில் இருப்பதைக் கண்குளிரப் பார்க்கிறவர். அவர்களால் இவருக்கு கண் தான் குளிர்ந்தது. வயிறு குளிரவில்லை. கிராமத்தில் கொஞ்சம் நில புலன் இருந்தது. கம்பெனியில் இருந்து விடுபட்டதும், பிள்ளைகளும் விடுபட்டார்கள். ஆகையால் கிழவர் மனைவியுடன், சொந்தக் கிராமத்திற்குச் சென்று குத்தகைப் பணத்தையும் பிள்ளைகள் அனுப்பிய பணத்தையும் வைத்து காலத்தைக் கடத்தினார்கள், காலத்தை அவர்கள் கடத்தினார்களே தவிர, அவர்களைக் காலம் கடத்தவில்லை. ‘அம்மா ... அப்பா மண்டையைப் போட்டதும், கிராமச் சொத்துக்களை விற்கலாம்’ என்று காத்திருந்த மகன் மகளுக்கு பொறுமை போய்விட்டது. கிராமியச் சொத்துக்கள் விற்கப்பட்டன. மகள்கள்—அம்மா காலமான பிறகும் அவளின் நினைவுச் சுவடுகள் நெஞ்சில் இருக்கவேண்டும் என்று நினைத்து தாய்க்காரியின் நகைகளை பிடுங்கி இப்போது தத்தம் நெஞ்சுக்கு மேல் காட்டிக்கொள்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன்பு இங்கே வந்தார்கள். தலைப் பிள்ளை தந்தைக்கு இன்பம் என்பார்கள், அது எப்படியோ கிழவருக்கு அது பொருந்தும். மகன் அருகிலேயே இருக்கப் போகிறோம் என்று சந்தோஷமாகத்தான் வந்தார். ‘மூத்தவள் ஒரு மாதிரியாச்சே’ என்று இழுத்த கிழவியை, இழுத்துக்கொண்டே வந்தார். மூத்த மருமகளை சும்மா சொல்லக்கூடாது. ஜாடை மாடையாகக் கூடத் திட்ட மாட்டாள். அவர்களைப் பார்த்ததும், சாமான்களை எடுத்து வீசியெறியக் கூட மாட்டாள். நல்லவள் தான் ஆனால் இவர்களிடம் பேசமாட்டாள். ‘சாப்பாடு போதுமா’என்று ஒப்புக்குக்கூட விசாரிக்கமாட்டாள். இவர்கள் வெளியே நின்றால், சினிமாவுக்காகப் புறப்பட்டு வெளியே  வருபவள் கூட உள்ளே போய்விடுவாள். அவ்வளவு அடக்கம், பின்வாசல் இருந்தது. அவள் 'அடக்கத்தை' பெர்மனண்டாக்கியது. இவர்களுக்கு தலைவலி, வயிற்றுவலி வந்தால்... உயிர்போவதுபோல் முதுமைக் காட்டேரி எட்டிப்பார்த்தால் அப்போதும் அடக்கத்தை விட்டுவிட மாட்டாள். டாக்டர் பார்க்க வேண்டிய விவகாரத்தை இவள் பார்க்கலாமா... அப்புறம் ஏதாவது ஏற்பட்டு இவர்கள் இறந்துவிட்டால்... டாக்டர் வருவாரா?

எதற்கு? பழைய காலத்துக் கட்டைகள் நாட்டு வைத்தியத்தில் பழக்கப்பட்டவை. சுக்கு, மிளகு, கேட்கும்போது கொடுப்பாள்- மகள் மூலமாக; மகன் மூலமாக. அவள் வருவாளா? வரலாமா? பெரியவர்கள் முன்னால் ஒரு சின்னவள் அடக்க ஒடுக்கம் இல்லாமல் வரத்தான் முடியுமா?

கிழவரும், கிழவியும் தங்களைச் செத்ததாக நினைத்துச் செயல்பட்ட மருமகளால் ஆரம்பக் காலத்தில் துணுக்குற்றார்கள். அவர் அவர்கள் அங்கே இல்லாததுபோல் செயல்பட்டாலும் அவர்களால் அவள் இல்லாததுபோல் நினைக்க முடியவில்லையே... ஆரம்ப காலத்தில் இவர்களும் வீட்டுக்குள் போய் எல்லோருடனும் சேர்ந்து டைனிங் 'டேபிளில்' சாப்பிட்டார்கள். ஒரு நாள் மகன், "ஒங்களுக்கு ஏன் சிரமம்? தள்ளாத வயசுல.... ஏன் கஷ்டப்பட்டு நடக்கணும்... சாப்பாடு... இனிமேல் அங்கே வந்திடும்" என்று சொன்னபோது மருமகள் ஒரு மர்மப் புன்னகையை மலரவிட்டாள். அப்புறம் சாப்பாடு லேட்டாக வரத் துவங்கியது. உள்ளே உள்ள டைனிங் டேபிளில் உட்கார்ந் திருப்பவர்கள், அதைக் காலி செய்த அரைமணி நேரத்திற்குப் பிறகே இவர்களின் காலி வயிறு நிரம்பும்.

ஆனால் இன்று போலில்லை. இரவு மணி பத்துக்கு மேலாகிவிட்டது. இன்னும் அவர்கள் சாப்பிட்டது மாதிரி தெரியவில்லை. சாப்பிடும்போது இப்படி பெரிய சத்தம் போட முடியாது. திடீரென்று உள்ளே சத்தம் கூச்சலானது போல் கேட்டது. சின்ன மகனும், பெரிய மகனும் தத்தம் மனைவியுடன் அணிவகுத்து எதையோ, கூக்குரலுடன் வாதிடுவதுபோல் கேட்டது. ‘அப்பா அம்மா... எனக்கு மட்டும் என்ன தலையெழுத்து’ என்பது போன்ற வார்த்தைகள் கிழவருக்குக் கேட்கவில்லை. கிழவிக்குக் கேட்டது. அவரது காலில் பதிந்த தன் முகத்தை லேசாக நிமிர்த்திக் கொண்டே கிழவி ஒரு சந்தேகத்தைக் கேட்டாள்;

“ஏங்க... கொஞ்சம் பசியை மறந்துட்டு நான் சொல்றதக் கேளுங்க... நாம செத்துட்டோமா?”

கிழவர் திடுக்கிட்டு பின்புறமாக மடித்து வைத்திருந்த கைப்பின்னலோடு தலையை நிமிர்த்தினார்.

“இல்ல உங்க செல்ல மகனுக, அப்பா அம்மான்னு கூப்பாடு போடுறது மாதிரி இரையுறாங்க. நாம செத்தால் தானே! இந்த மாதிரி வார்த்தைங்கல்லாம் அவங்க வாயில வரும்... அதனால கேட்டேன்!”

கிழவர் முணுமுணுத்தார்.

“ஒனக்கும் பசிக்க ஆரம்பிச்சுட்டா? ஆமாம் நீ மட்டும் மனுஷி இல்லையா?”

“ஏங்க... என்னைப் பார்த்துச் சொல்லுங்க. ஒருசமயம் ஒங்கம்மாவுக்கு சாப்பாடு போட செத்தே லேட்டா யிட்டுன்னு என்ன குதி குதிச்சிங்க? லேட்டுன்னா பத்து நிமிஷ லேட்டு. இப்போ நம்ம பிள்ளிங்க எப்படி உள்ளே குதிக்காங்கன்னு பாருங்க! குதிக்கிற குறிக்கோளே மாறுனப்போ... நீங்க காலம் மாறலன்னு சொல்றீங்க! ”

“கண்ணு கூசுது. விளக்கை அணைப்பா!”

“உங்க கண்ணு வெளிச்சத்தால கூசல... பசியால், சொருகுது.”

கிழவர் எதுவும் பேசவில்லை, கைப்பின்னலால், அம்பு முனைபோல் வடிவெடுத்த முழங்கை முனைகள் இரண்டையும் வைத்து கன்னங்களை இடித்துக்கொண்டார். பெரிய மகன் இப்போதெல்லாம் பேசுவதே இல்லை. பேரப் பிள்ளைகள் வருவதே இல்லை. வெளியே போகும்போது எப்போதாவது நின்ற இடத்தில் நின்றபடியே உள்ளே எட்டிப் பார்க்கும் பெரியவன், பெற்றோரை தான் பெருமையாய் வைத்திருப்பது போலவும், இந்தக் காலத்து மற்ற மகன் களைப்போல். தான் ஒன்றும் அப்படி உதவாத மகனாக உருவெடுக்கவில்லை என்றும் நினைப்பதுபோல், தோளை ஒரு குலுக்குக் குலுக்கிக்கொண்டு போகிறான். மதுரையில் இருந்து பத்து நாளைக்கு முன்பு வந்த சின்ன மகனும், அவன் மனைவி மக்கள் சகிதங்களும் ஒரு பத்து நிமிடம்கூட முகம் பார்த்துப் பேசவில்லை, இவள் சொல்றது மாதிரி காலம் கெட்டுப் போயிட்டோ ?

அந்த முதியவள் எழுந்து விளக்கை அணைத்தாள்.

உள்ளே குரலொடுங்கியது போலிருந்தது. பிறகு -பாத்திரச் சத்தங்கள் கேட்பது மாதிரி இருந்தது. சிரிப்பில்லை. ஒருவேளை சிடுசிடுப்பான மௌனமோ...

இரவு பதினொரு மணிக்கு பேத்தி பாமா, சாப்பாட்டுத் தட்டுக்களோடு வந்தாள். "இன்னைக்கு மட்டுமாவது அவன் கொண்டு போகப்படாதா... இந்த வீட்ல இந்த வேலைக்கும் நான் தானா" என்று அவள் கத்திக்கொண்டே வந்தது பாட்டிக்கு நன்றாகவே கேட்டது.

பாமா ஸ்விட்சைத் தட்டினாள். ஸ்டூலில் சாப்பாட்டுத் தட்டுக்களை வைத்தாள். பிறகு அவர்களை இரக்கமாகப் பார்ப்பதுபோல் பார்த்தாள். பீடிகை போட்டுப் பேச வேண்டிய விவகாரத்தை எடுத்த எடுப்பிலேயே சொன்னாள். அவளுக்கும் அவசரம். பின்பக்கத்து வீட்டில், ரவி இப்போதான் மொட்டை மாடிக்கு வந்திருக்கான். இவளுக்கும் கொல்லைப்புறப் பக்கம் கொஞ்சம் வேலையிருக்கு. பாமா பட்டென்று சொன்னாள்:

“சீக்கிரமா தூங்குங்க. அப்பா, ஒரு விஷயத்தை ஒங்க கிட்டே ‘கன்வே’ பண்ணச் சொன்னாங்க. அங்கிளும் டாடியும், நீண்ட நேர ‘வாருக்கு’ அப்புறம் ஒரு ‘டிஸிஸனுக்கு’ வந்துட்டாங்க. நீங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் மதுரைக்குப் போகணுமாம். யார் மதுரைக்குப் போறதுன்னு இதுலயும் ஒரு ‘வார்’ வந்தது. அப்புறம் தாத்தா அங்கிளோட போறதுன்னு முடிவாயிட்டு, ரெண்டுபேரையும் ஒருத்தரால பார்க்க முடியாதுன்னு அப்பா சொன்னதை அங்கிள் அரை குறையா ஒத்துக்கிட்டார். ஓ.கே... தாத்தா காலையில ஒன்பது மணிக்குப் புறப்படனுமாம். டிரஸ்கள எடுத்து வச்சுக்கனுமாம்...”

பாமா பேசியபோது, தட்டில் கைவைத்த பெரியவர், அசரீரியாய் ஒலிப்பது போலிருந்த அந்த வார்த்தைகளை உற்றுக் கேட்பதுபோல் தன் உடம்பையும், உட்கார்ந்த இடத்தையும் நெருக்கிக்கொண்டார். அந்த முதியவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. கணவனின் கையை, பலமாகப் பிடித்துக்கொண்டே திக்குமுக்காடிப் பேசினாள்:

“ஏம்மா! நீயாவது ஒன் அப்பனுக்காவது சித்தப்பனுக்காவது உறைக்கும்படியாய் கேட்கப்படாதா! இந்தத் தள்ளாத வயசில நாங்க ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு இருக்க முடியுமா? இந்த நாற்பத் தஞ்சு வருஷத்துல, நாலு நாளைக்கி மேல பிரிஞ்சதில்லம்மா...”

பாமாவுக்கு முதலில் சிரிப்பு வந்தது. ‘கிழடுங்களுக்கு, இன்னும் காதலா?’ பிறகு பாட்டியின் முகத்தையும், தாத்தாவின் கண்களையும் பார்த்தவளுக்கு, பத்து சதவீதம் மனிதாபிமானம் வந்தது. தோளைக் குலுக்கிக்கொண்டே பேசினாள்.

 "வர வர இந்த பேமிலி அபர்ஸே டர்ட்டியாய் மாறிட்டு. நான் இதுல இண்டர்பியர் பண்ண விரும்பல! வேணுமின்னால்... உங்களோட 'விஷ்ஷை' கன்வேய் பண்றேன்"

பாமா ஐ. நா. காரியதரிசிமாதிரி பேசிவிட்டு நகரப் போனாள். திடீரென்று கிழவர் இறுகிய குரலில் ஆணையிடுவது போல் பேசினார்.

"நீ ஒண்ணும் கன்வே பண்ணாண்டாம்... எப்படி நடக்க நினைக்காங்களோ... அப்படி நடத்தட்டும் விளக்கை அணைச்சுட்டுப் போம்மா! இனிமேல் இந்த விளக்கும் எதுக்கு ?"

பாமா விளக்கை அணைத்தாள். 'கன்வே' பண்ணத் தான் ஓடினாள். கொல்லைப்புற பக்கம் மொட்டை மாடி ரவிக்கு.

மௌனம் உறைபனியாய் மூட்டங் கொடுத்தது. கிழவி, கணவருடன் ஒட்டி உட்கார்ந்துகொண்டாள். அவள் கண் முன்னால் தனக்கு நடந்த கல்யாணம், முற்றுப்பெறாத முதலிரவு, பிறந்தகம் போகும்போது கணவனுடன் ஜோடியாக ஊருக்குள் நடக்க வெட்கப்பட்டு சற்றுப் பின் தங்கி நடந்தது. பெரியவனைப் பெற்றுப் போட்டதும் எட்டிப் பார்த்த அவரிடம் வெட்கப்பட்டது. பிள்ளைகள் வயசாகி வருவதை கணவர் சவனிக்கவில்லை என்று அடிக்கடி வாதிட்டது. அத்தனையும் மொத்தமாகவும், தனித் தனியாகவும் வந்து, அவளை வாதை செய்தன. கிழவர் பேசாது கன்னத்தில் கை வைத்தபடி, மோவாய்க் கூரையைப் பார்க்க, உடல் பனியால் உருகியது போல், உள்ளம் அக்கினியால் எரிவதுபோல் இருந்தார். அந்த மூதாட்டியால் தாள முடியவில்லை. நீண்ட நேர கோர மௌனத்தைக் கலைத்தாள்.

“ஏன்... பேசாம உட்கார்ந்திருக்கிங்க... ஏங்க! ஒங்களத்தான். என்னை விட்டுட்டுப் போகப் போறீங்களா? ஒங்களுக்கும் சம்மதமா, பதில் சொல்லுங்க... ஒங்களத்தான்!”

கிழவர், தள்ளாடி எழுந்து அறையின் மூலையில் கால்கள் நீட்டி கைகளைப் பரப்பி சாய்ந்துகொண்டார்—அப்போதே, மனைவியிடமிருந்து விலகியிருக்க பழகுபவரைப்போல். பிறகு, சிரித்தாரா அழுதாரா என்று அடையாளம் காண முடியாத குரலில் பதிலளித்தார்.

“என்னப்பா செய்யுறது... புருஷன் பெண்டாட்டி விவாகரத்துல... பிள்ளைங்க கஷ்டப்படும். இங்க என்னடான்னா... பிள்ளிங்க கஷ்டப்பட்டு நமக்கு விவாக ரத்து. செய்து வைக்காங்க!”

“அய்யோ! பெரிய பெரிய வார்த்தையா பேசுறீங்களே! ஒவ்வொரு வீட்ல பெத்தவங்களுக்கு அறுபதாம் கல்யாணம் நடத்தி பிள்ளிங்க அழகு பாக்கும். ஆனால் நாம் பெத்த பிள்ளிங்க... அட கடவுளே! இதுக்கா ரெண்டு மகன்களப் பெத்தோம்...”

“ரெண்டுபேர மட்டும் பெத்ததுக்கு சந்தோஷப்படுப்பா, மூணு நாலுன்னு பெத்திருந்தால் நம்ம உடம்ப கூறு போட்டு எடுத்துட்டுப் போகனுமுன்னு தீர்மானிச்சிருப்பாங்க! உம்... எல்லாம் நன்மைக்கே.”

“அய்யோ... அப்படிச் சொல்லாதிங்க! ஒங்களை விட மாட்டேன்! உயிர் போனாலும் விடமாட்டேன்! நீங்க இந்த வீடு கட்டுறதுக்காக கார்ப்பரேஷன்காரங்களோட கால் கையை எத்தன தடவை பிடிச்சிருப்பிங்க... ரெண்டுபேருமா கிராமத்தில் இருந்து வந்து குடிசை போட்டு வீட்டு. வேலையைக் கவனிச்சோம்! இந்த வீட்ல இருந்து உங்களை யாராலயும் அனுப்ப முடியாது!”

"பைத்தியக்காரி! கொத்தனாருக்கு வீடு சொந்த மில்லாதது மாதிரி நாம உருக்கொடுத்த பிள்ளிங்களும், நம்மை உறவுல கொத்தனாராக்கிட்டாங்க! பெத்த மகனே துரத்தும்போது, கட்டுன வீடாப்பா பெரிசு... பைத்தியக்காரி!"

"அய்யோ ! நீங்க சொல்றதைப் பார்த்தால்...முடியாது. நானே அந்தப் பயலுவகிட்ட பேசப்போறேன்! இந்த வயசில எங்களைப் பிரிக்காதிங்கடான்னு அதட்டப் போறேன்! மருமகள்காரிங்க காலைப் பிடிச்சு மடிப்பிச்சை கேக்கப்போறேன்! அதையும் பார்த்துடலாம்."

"யதார்த்தமாய் பேசுப்பா! நாம ரெண்டு பேரும் சேர்ந்து கூச்சல் போட்டால் ஒருவேளை அவங்க என்னை உன் கிட்ட இருந்து பிரிக்காமல் இருக்கலாம், அப்புறம் என்ன நடக்கும்? மருமகள் காரி நம்மை சுமையா நினைப்பாள். பேரப்பிள்ளைங்க முனங்கும். நம்ம ரெண்டுபேரோட நெஞ்சில எல்லாருமே மிதிப்பாங்க. நாம ரெண்டுபேருமே மானஸ்தங்க... தள்ளாத வயசுல நம்மை பிரிக்கப்படாதுன் அவங்களுக்கே உறைக்கலன்னா, நாம எதுக்கு வாழணும்? அப்படி வாழ்ற வாழ்க்கையை, எங்கே வேணுமுன்னாலும் வாழலாம்! நாம என்ன வாழவா செய்யுறோம், சாவுக்காக காத்திருக்கோம்! நாம பிரியுறதும் ஒருவேளை நன்மைக்குத் தான்னு வச்சுக்கோ? நீ சாகும்போது நானோ, நான் சாகும்போது நீயோ, எப்படியோ துடிக்க வேண்டியதிருக்கும். இனிமேல் அந்தச் சிரமமில்லை பாரு!"

"அய்யோ இனி மேல் பேசாதிங்க... பேசாதிங்க."

"நான் பேசுனேன்னால்... எல்லாம் நன்மைக்கேன்னு சொல்லத்தான். உதாரணத்திற்கு இன்னும் ஒண்ணு சொல் றேன் கேளு. இப்போ லைட்டை பாமா அணைச்சிட்டாள். இருட்டாய் இருக்கது நல்லதாய் போச்சு இப்போ விளக்கு எரிந்து அந்த வெளிச்சத்துல ஒன் முகத்தை பார்க்கேன்னு வச்சுக்கோ... என்னால தாங்க முடியுமாப்பா" “அப்பிடின்னா சின்ன மகனோடு மதுரைக்குப் போற துன்னு தீர்மானம் பண்ணிட்டிங்களா? போங்க! நல்லா போங்க. நாற்பத்தஞ்சு கால தாம்பத்யத்த உதறிட்டு... சும்மா போங்க! அந்தக் காலத்திலேயே நாம கல்யாண வருஷத்தை கொண்டாடுனதை மறந்துட்டுப் போங்க. நான் ஒன்றும் அழுகிடமாட்டேன்! வேணுமுன்னால், இப்பவே அங்கே போய் மகனோட இருங்க! உம் போங்க! தலைவலி, வயிற்றுவலி வரும். நான் இங்க இருந்தபடியே சுக்கை இடிக்கேன். ஒங்களுக்கு சுகமாயிடும். போங்க, இப்பவே போங்க! உங்களுக்கோ எனக்கோ ஏகாவது ஆச்சுதுன்னா லட்டர் வரும். சந்தோஷமாய் படிப்பேன். நீங்களும் அப்படியே படிக்கலாம். போங்க உம் சீக்கிரம்...”

கிழவரிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த முதியவளும், சிறிதுநேரம் பேசாதிருந்தாள். கோர இருட்டும், மெளடீகச் சூழலும், அவளைப் பயமுறுத்தின. தாம்பத்ய கால வாழ்வில் சேமித்த அனுபவங்கள் அவற்றின் இனிமை யான நினைவுகள் எல்லாவற்றையும் பறிகொடுத்தது போன்ற பரிதாபத்தில் அவள் துடித்தாள். புதிய உணர்வு களை காலியிடத்தில் சேமிக்க நினைத்தவள்போல் பேராசைப்பட்டாள். கணவரின் மெளனம் அவள் உள்ளத்தில் ஓலமிட்டது. “என்னங்க... என்னங்க” என்றாள் பதிலில்லை.

மெல்ல எழுந்தாள். கட்டில் கால் இடறி கீழே விழுந்தாள். நல்லவேளையாக அடி பலமில்லை. அடிப் பலமில்லாத அந்த முதியவள் இருந்தபடியே கால்களை முடத்தி போல இழுத்துக்கொண்டு கைகளை ஊன்றி ஊன்றி கணவர் இருந்த மூலையைப் பார்த்துத் தவழ்ந்தாள். தாழ்ந்துபோன வளாய், தவழ்ந்த அந்த முதிய குழந்தை மூலைக்குச் சென்று கணவரின் தோளில் கை போட்டபடி “என்னங்க... என்னங்க” என்றாள். அவள் கைகளில் ஈரம்பட்டது. ஏதோ ஒன்று கழுத்தை கட்டுவதுபோலிருந்தது. தன்னை மார்போடு சேர்த்து அணைப்பது போலிருந்தது. அப்புறம் விம்மல் சத்தம் "வருத்தப்படாதப்பா... நாம எண்ணங்களா லேயே தொடர்பு வச்சுக்கலாம். எண்ணங்களாலேயே வாழலாம்." என்ற வார்த்தைகள் விட்டு விட்டு கண்ணீரில் தோய்ந்து காதில் கரைந்து ஓலமாக வெளிப்பட்டது.

கிழவி கணவரை பலங்கொண்ட மட்டும் அழுத்திப் பிடித்துக்கொண்டாள். பாசங்கொண்ட மட்டும் ஒட்டிக் கொண்டாள். அவர் கண்ணீரைத் துடைக்கப் பார்த்தாள். பாழும் கைகள் அவர் தோளில் இருந்து எழ விரும்பவில்லை. அவரை மார்போடு அணைக்கப்போனாள். அவர் மார்பில் சாய்ந்த உடலுக்கு நிமிர மனமில்லை. கிழவர் அவள் தோளில் வாய் தேய்த்து புலம்பினார். குழந்தையான கிழவி தாயாகி நிஜமான ஒரு ஜீவனுக்கு தாயான ஞானச் செருக்கோடு "காலையில் கடவுள் கண்ணைத் திறக்கானான்னு பார்க்கலாம்." என்று கிட்டத்தட்ட ஐநூறு தடவை சொல்லியிருப்பாள்.

காலையில் கதிரவன் கண்ணைத் திறந்தான். கட்டிப் போட்டிருந்த பசு மாடு கண்ணைத் திறந்தது. வீட்டின் ஜன்னல் கண்கள் திறந்தன. கோழிகளின் கண்களும், மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் அனைத்தும், அனைவரும் கண்கள் திறக்க, அந்தத் தெருவே கண் திறந்தது. ஆனால் கடவுள்-

அவன் கண் திறந்தானோ இல்லையோ, வாசலில் வாடகைக் காராக வந்து நின்றான். ஒருவர் மரணத்திற்கு இன்னொருவர் ஒப்பாரி வைத்தது போல், இரவு முழுக்க பிடித்த பிடி விடாமல் தழுவிய தழுவல் வழுவாமல், பின்னிய விரல்கள் பின்னியபடி மூலையில் சாய்ந்திருந்த அந்த முதிய அன்னப்பறவைகளில் ஒன்றை மதுரை மகன் "ராத்திரி சாப்பிடலியா? ரெடியாயிட்டிங்களா?" என்றார். சாப்பி டாததற்கு காரணத்தை அறியுமுன்னாலேயே அவர் 'ரெடிக்கு' வந்துவிட்டார்.

வாசலில் நின்ற காரில் மருமகள் ஏறிவிட்டாள். பேரனும், பேத்திகளும் யார் ஒரப்பக்கம் உட்கார்வது என்று சண்டையிட்டு, அப்புறம் ஒரு வழியாக உட்கார்ந்தார்கள். மூத்தவர் மனைவி சிரிப்பைச் சிந்தியபடியும். பாமா மொட்டை மாடியை நோக்கிய கோணல் பார்வையுடனும் நின்றார்கள். பெரிய மகன் அப்பாவைக் கைத்தாங்கலாகப் பிடித்து, காரின் முன்னிருக்கையில் உட்கார வைக்கிறார். மதுரை மகன், “அவரு... பின்னால உட்காரட்டும்” என் கிறார். அப்பாவை எடுத்துக்கொள்ளச் சம்மதித்தவன் சொல்லை மதிக்க வேண்டும் என்பதுபோல், மூத்தவர் தன்னைப் பிறப்பித்தவரை மீ ண் டு ம் கைத் தாங்கலாக பிடித்து பின்னால் வைக்கிறார். கார் புறப்படப் போவதை டிரைவர் எல்லோரையும் வட்டப் பார்வையாகப் பார்த்து விட்டு சாவியைத் திறக்கிறார். பாமா மொட்டைமாடி ரவியை பார்வையால் பிரிய விரும்பாதவள்போல், அங்கே பார்த்தபடியே, இங்கே-இந்தக் காருக்குள் இருப்பவர்களை நோக்கி டாட்டா காட்டுகிறாள்.

கிழவர் சப்தமும் ஒடுங்கி, சப்த நாடிகளும் ஒடுங்கி, தேரில் வைத்த பிணம்போல் பேச்சற்று இருக்கிறார். பின்னால் திரும்பி மனைவியைப் பார்க்க விரும்புகிறார். பிறகு வாயை மூடி, கண்களைக் கசக்கி அப்புறம் அசைவற்று இருக்கிறார்.

கார் புறப்படுகிறது-இழவு வீட்டுச் சங்குபோல் ஒரு ஒலியை எழுப்பிக்கொண்டு.

அறையே சிறையாக, ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்து, தள்ளாத குறையாக காருக்குள் திணிக்கப்பட்ட கணவரையே பார்த்த கிழவி, போகிற காரையே பார்க்கிறாள். அந்தக் காருக்குப் பின்னால் தான் ஒடுவதுபோன்ற உணர்வு, அதன் முன்னால் அடிபட்டு விழுந்து கார் நிறுத்தப் பட்டது போன்ற பிரமை. திடீரென்று அவளுக்கு இன்னொரு நினைவு.

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, அதோ அந்தக் காரில் போகிறவர், வாலிப மிடுக்கோடு மேளதாளத்துடன் காரில் இருந்து இறங்குகிறார். இவள்—அந்தக் காமாட்சி மாடி ஜன்னல் வழியாக, “அவனைப்” பார்த்து வெட்கத்தால் தலை குனிகிறாள்.

ஆனால் இப்போது?