இன்ப ஒளி/பதிப்புரை
நாடகம் என்பது ஒரு நாட்டின் கலையை, கலாச்சாரப் பண்பை, நாகரிக வளர்ச்சியைப் பிற நாட்டினருக்கு எடுத்துக் காட்டும் அளவுகோலாகும்.
அதுபோலவே...
நாடகம் எனப்படுவது ஒரு நாட்டில் அல்லது சமூகக் கோட்பாட்டில் இருக்கும், 'நல்லது—கெட்டது' ஆகியவற்றை விளக்கிக் காட்டுவது மட்டுமல்ல, அதற்கான பரிகாரத்தைத் தேடித் தருவதுமாகும்.
இது கலை. இந்தக் கலைக்கு, நமக்கு முன்னே வாழ்ந்த மூத்தவர்கள், 'கூத்து' என்று முடிசூட்டி முத்தமிழ் நாட்டை வலம்வரச் செய்தனர். அத்தகைய 'கூத்து' என்னும் துறையை பின்பற்றிய பின்வந்தோர், அதன் மூலமாக இனவுணர்ச்சி மங்கவும், இதிகாச புராணங்கள் தலைதூக்கவும், சுயபுத்தி சிதறவும் பெரிதும் பயன்படுத்தி வந்தனர்; அதிலே வெற்றியும் கண்டனர்.
ஆம்; மனித மனத்தைக் கவரும் சக்தி எதற்கு உண்டோ, அது கலையாகும் அந்தக் கலைக்குள் புகுத்தப்படும் கருத்து எதுவானாலும் அது மனித மனத்துக்குள் இலகுவாகப் புகுந்து, அந்தக் கருத்துக்கேற்ப நடக்கச் செய்துவிடும்.அப்படிப்பட்ட வில்லங்கமான—விபரீதக் கருத்துக்கள் கொண்ட—காட்சி நிறைந்த கூத்தினை நடத்தி, தன்மானத்தோடு வாழ்ந்த தமிழனைத் தரைமட்டமாக்கி, வைரம் பாய்ந்த நெஞ்சை தைரியமில்லாததாக்கி, எதற்கும், 'ஏன்’ என்று கேட்டு வாழ்ந்தவனை, அப்படிக் கேட்பது 'வீண்' என்று நினைக்கும்படியாகச் செய்த ஒரு காலத்தில் நாம் இல்லை.
அவ்விதம் செய்யப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு கட்டத்தில்தான் மாயக்கலையில் வல்ல மன்னன் – நமது அண்ணன், அதே நாடகக் கலையின் வாயிலாகத் தாழ்ந்து கிடந்த தமிழகத்தை உயர்த்தும் பணியை மேற்கொண்டார்.
எந்த ஒரு நாடகக் கலையின் மூலமாக நாட்டு மக்களின் சொல்—செயல் இரண்டையும் மாறுபடச் செய்தார்களோ, அதே கலையின் வாயிலாக இதே தாயகத்தை—தமிழகத்தை மீண்டும் விழிக்க வைக்க 'நாடகம்' சமைக்கத் துவங்கினார்.
இன்றளவும் உலக அரங்கில் போற்றப்பட்டு வருகின்ற ஷேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா போன்ற நாடக மேதைகளின் நாடகங்களில் எல்லாம் மனத்தைத் திருத்திப் பக்குவப்படுத்தும் துளிகளையே பரவலாகக் காண முடியும். ஆனால் அறிவுலக மேதை அண்ணா அவர்கள் தீட்டிய ஒவ்வொரு நாடகமும் மனித உள்ளங்களைத் திறக்கும் திறவுகோலாகும்.
நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சமூகப்பற்று போன்ற பல்வேறு துறைகளில் மக்களுக்குப் 'பற்று' வரும்படியாக நாடகத் துறையில் மறுமலர்ச்சியும், மக்கள் மனத்தில் புத்துணர்ச்சியும், பொதுவாகத் தமிழரங்கில் விழிப்புணர்ச்சியும் ஏற்படச் செய்த ஏந்தல் டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்களே யாவார்.
விழலுக்கு இறைக்கப்பட்ட நீரை வயலுக்குத் திருப்பி, மக்கள் வாழ்வுக்கு முதல் ஜீவனாக விளங்கியவர்.
நாடக இலக்கணப்படி யுக்திகளை மேற்கொண்டு, காட்சிக்குக் காட்சி நாடகத்தில் மட்டுமல்ல, நாட்டிலும் நல்ல திருப்பம் ஏற்பட வைத்த நாயகர் அவர்.
மொழி நமக்கு விழி என்றால், அவ்விழிக்குள் இருக்கும் ஒளி நாடகம்!
மக்களை வழிநடத்திச் செல்லும் மகத்தான சாதனம் இது.
இந்தச் சாதனத்தின் மூலம் தமிழகத்தின் ஜாதகத்தை மாற்றி அமைத்தவர் அமரர் அண்ணா. அவர்கள் சிருஷ்டித்த ஓரங்க நாடகங்கள் ஓராயிரம்; முழுமை நாடகம் ஒவ்வொன்றும் விலையில்லா மாணிக்கம்; இருளை அகற்றும் கைவிளக்கு. வருங்காலச் சந்ததிகள் கட்டாயம் நெஞ்சில் நிறுத்த வேண்டிய இமாலயச் சிகரம்!
ஆம்!
நாட்டுக்கென்று அவர் படைத்த அத்தனை நாடகங்களையும், கதை, கட்டுரைகளையும் புத்தக வடிவில் கொண்டு வர—உங்கள் கரங்களில், கண்களில் தவழவிட எங்களுக்கு முழு உரிமை வழங்கி இருக்கும் திருமதி. இராணிஅண்ணாதுரை அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி.
இதோ, அமரர் அண்ணா அவர்கள் சிருஷ்டித்த சரித்திரப் புரட்சி நாடகம்.
இது கைவிளக்கு மட்டுமல்ல; கலங்கரை விளக்கும்கூட!
படியுங்கள்; பயனடையுங்கள்!
–பூம்புகார் பிரசுரத்தார்.