இமயமலை எங்கள் மலை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

இமயமலை எங்கள் மலை

புது டில்லியில் இந்திய சர்க்காரின் காரியாலயம் ஒரு பெரிய சமுத்திரம். அந்தச் சமுத்திரத்தில் ஒரு பெரிய திமிங்கிலம் போன்றவர் ஸ்ரீயக்ஞசாமிஐயர். மாதச் சம்பளம் அவருக்கு இரண்டாயிரம் ரூபாய். பெரிய பங்களாவில் வசித்தார். பெரிய கார் வைத்திருந்தார். அந்தக் காரின் ஹாரன் போடும் பெரிய சத்தம், "இதோ, ராவ் பகதூர் யக்ஞசாமி வருகிறார் பராக்! பராக்!" என்று அலறுவது போலத் தொனிக்கும்.

யக்ஞசாமி ஐயரின் குமாரி ஹேமாவதி அறிவில் கலைமகளையும், திருவில் லக்ஷ்மியையும் நிகர்த்திருந்தாள். எஸ்.பி.சிவனுடைய கண்களுக்கு அவள், சௌந்தரிய தேவதையாக விளங்கினாள்.

எஸ்.பி.சிவன் மேற்படி இந்திய சர்க்கார் காரியாலயமாகிய சாகரத்தில் ஒரு சிறு மீனை நிகர்த்தவன். அதாவது டைப் அடிக்கும் குமாஸ்தா. சம்பளம் மாதம் ரூபாய் எண்பது. பஞ்சப்படி ரூபாய் பதினாறு. ஆனாலும் அவனுடைய வாழ்க்கை உற்சாகத்தைப் பார்த்தால் ஏதோ சமஸ்தானத்தின் பட்டத்துக்குரிய இளவரசன் என்று தோன்றும்.

சங்கீதம், நடனம், நாடகம், முதலிய கலைகளில் அவனுக்கிருந்த ஆர்வமே அத்தகைய வாழ்க்கை உற்சாகத்தை அளித்தது. புதுடில்லி அகில இந்திய ரேடியோவில் நடைபெறும் நாடகங்களில் அவன் அடிக்கடி ஏதாவது ஒரு பாத்திரமாக நடிப்பதுண்டு. வேறு எந்தப் பாத்திரமாகவும் நடிக்க முடியாவிட்டால் பல பேர் சேர்ந்து சிரித்தல், கை தட்டுதல் ஆகியவற்றிலாவது அவன் அவசியம் சேர்ந்து கொள்வான்.

யக்ஞசாமி ஐயரின் புதல்வி ஹேமாவுக்குச் சங்கீதம் வரும். புதுடில்லி ரேடியோவில் கர்நாடக சங்கீதத்தைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் நேரும் போதெல்லாம் ஹேமாவதியை அவசியம் அழைத்து விடுவார்கள். யக்ஞசாமி ஐயருக்கே, தம்முடைய மோட்டார் ஹாரனின் சத்தத்துக்கு அடுத்தபடியாக ஹேமாவின் குரல்தான் அதிகம் பிடிக்கும். தம் குமாரியின் சங்கீதக் கலைத் திறமையைப் பற்றி அவருக்கு அசாத்தியப் பெருமை. எனவே, ரேடியோக்காரர்கள் ஹேமாவைப் பாடுவதற்கோ, ஏதாவது கதம்ப நிகழ்ச்சியில் ஈடுபடுவதற்கோ அழைக்கும் போதெல்லாம் யக்ஞசாமி ஐயர் தாமே பெருமித மகிழ்ச்சியுடன் ஹேமாவதியை ரேடியோ நிலையத்துக்கு கொண்டு போய் விடுவார்.

ரேடியோவில் ஹேமாவதிக்குக் கச்சேரி என்றால் ஒரு வாரம் முன்னாலிருந்து வீட்டில் ஒரே ரகளையாயிருக்கும். ஹேமாவதி காலில் 'ஸிலிப்பர்' போடாமல் வெறுந்தரையில் நடக்கக் கூடாது; குளிர்ந்த நீர் சாப்பிடக் கூடாது; கொஞ்சம் தொண்டையைக் கனைத்துவிட்டால் போதும், உடனே டாக்டரை அழைத்துவரக் கார் பறக்கும். கழுத்தில் ஓயாமல் கம்பளி மப்ளரைச் சுற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். தப்பித் தவறி தும்மி விட்டால், "ஐயோ குழந்தை தும்முகிறாளே, ரேடியோக் கச்சேரி இருக்கிறதே!" என்று வீட்டில் எல்லோரும் தவித்துப் போவார்கள்.

இவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக ஹேமாவின் குரலைக் கவனித்துக் கொண்டு வந்த யக்ஞசாமி ஐயர், அவளுடைய உள்ளத்தைப் பற்றிக் கொஞ்சம் அலட்சியமாயிருந்து விட்டார்.

ரேடியோ நிலையத்தில் அடிக்கடி ஹேமாவதியும் எஸ்.பி.சிவனும் சந்திக்க நேரிட்டது. இந்தச் சந்திப்புகளின் காரணமாக, ஒருவருடைய இருதயத்தில் ஒருவர் இடம் பெற்றுவிட்டார்கள். விஷயம் முற்றி வளர்ந்து ஒருவரையொருவர் கலியாணம் செய்து கொள்வது என்று தீர்மானித்து விட்டார்கள்.

இந்தச் செய்தி புதுடில்லியிலிருந்த தென்னிந்திய சமூகம் முழுவதற்கும் தெரிந்த பிறகு, யக்ஞசாமி ஐயருக்கும் தெரிந்து விட்டது. உடனே அவர் ரௌத்ராகாரம் அடைந்து, "புதுடில்லி ரேடியோவும் கர்நாடக சங்கீதமும் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்; ஹேமாவதியை இனி அங்கு அனுப்புவதில்லை!" என்று முடிவு செய்து விட்டார்.

ஸ்ரீ எஸ்.பி.சிவனுக்கு இந்த விவரம் தெரிந்த போது அவன் வெந்நீரில் விழுந்த மீனைப் போல் துடிதுடித்தான். கடைசியாக ஒருவாறு ஐயரிடம் நேரிலேயே வந்து ஹேமாதியைத் தன் வாழ்க்கைத் துணைவியாக அருளும்படி கோரினான்.

யக்ஞசாமி ஐயர் அவனைப் பார்த்து, "நீ என்ன படித்திருக்கிறாய்?" என்று கேட்டார்.

"ஷேக்ஸ்பியர், மில்டன், கோல்ட்ஸ்மித், ஷெல்லி, காளிதாசன், கம்பன், டாகூர், பாரதி இவர்களுடைய கவிதைகளையெல்லாம் படித்திருக்கிறேன்" என்றான் சிவன்.

"அதைக் கேட்கவில்லை. எந்தப் பரீட்சை பாஸ் செய்திருக்கிறாய்?" என்று கேட்டார்.

"எஸ்.எஸ்.எல்.சி., இண்டர்மீடியட், பி.ஏ.யில் முதல் பார்ட், ஷார்ட் ஹாண்ட், டைப்ரைட்டிங் பரீட்சைகளில் பாஸ் செய்திருக்கிறேன்" என்றான் சிவன்.

"வெறும் அரட்டைக் கல்லியாயிருக்கிறாய்; சொத்து, சுதந்திரம், நிலம், புலம் ஏதாவது உண்டா?" என்று கேட்டார்.

"நிலம் புலன் ஏராளமாய் உண்டு. ஆயிரம் மைல் அகலம், இரண்டாயிரம் மைல் நீளம் உள்ள இமயமலை என்னுடையதுதான்!" என்று ஒரே போடாய்ப் போட்டான் சிவன்.

"என்னப்பா உளறுகிறாய்? இமயமலை உன்னுடையதா?"

"ஆம் ஐயா! மகாகவி பாரதியார் அப்படிப் பாடியிருக்கிறாரே, தெரியாதா? 'மன்னும் இமயமலை எங்கள் மலையே!' என்னும் வரகவி வாக்கு பொய்யாகுமா?"

"ஆமாம், 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று பாடிய அதே பாரதியார், 'இன்னறு நீர்க் கங்கை ஆறெங்கள் ஆறே' என்றும் பாடியிருக்கிறார். ஆகையால் கங்கை ஆற்றுக்கு நேரே போய் அதில் விழுந்து விடு!" என்றார் யக்ஞசாமி ஐயர்.

இதையெல்லாம் கதவுக்குப் பின்னாலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஹேமாவதி விம்மி விம்மி அழுதாள்.

அவள் தன்னுடைய மை தீட்டிய கண்களைத் துடைத்துத் துடைத்துப் பன்னிரெண்டு கைக்குட்டைகள் பாழாய்ப் போயின. ஆனாலும் என்ன பயன்! சிவன் கங்கையில் விழுவதை அவளால் தடுக்க முடியுமா? அல்லது அப்படி விழுந்தவனைக் காப்பாற்றத் தான் முடியுமா? அவளுக்கு நீந்தத் தெரியாதே! மேலும் கங்கை நீர் மிக்க குளிர்ச்சியாக ஜில்லென்று இருக்கும் என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அப்படிப்பட்ட குளிர்ந்த நீரில் கால் பட்டால் குரல் என்னத்துக்கு ஆகும்? கர்நாடக சங்கீதம் என்ன கதி ஆவது?

ஹேமாவதி தனக்குக் கிட்ட மாட்டாள் என்று நிச்சயமானதும், எஸ்.பி.சிவனுக்கு உண்மையிலேயே வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு விட்டது. யக்ஞசாமி ஐயர் சொன்னபடி செய்து விடுவது என்று அவன் தீர்மானித்தான். உத்தியோகத்தை சம்பளம், பஞ்சப்படி உள்பட ராஜினாமா செய்துவிட்டுப் புறப்பட்டான். கங்கையின் உற்பத்தி ஸ்தானமாகிய கங்கோத்ரிக்கே போய் விழுந்து உயிரை விடுவதென்று யாத்திரை தொடங்கினான்.

கங்கோத்ரிக்குப் போகும் வழியில் இமயமலைச் சாரலில் அவன் பிரயாணம் செய்யும்படி நேரிட்டது. வெள்ளிப் பனிமூடிய இமயமலையின் ஆயிரமாயிரம் சிகரங்களைப் பார்க்கப் பார்க்க, அவனுக்குக் கங்கையில் விழுந்து உயிரை விடுவதில் அவ்வளவு உற்சாகம் ஏற்படவில்லை. மேலும் கங்கோத்ரியில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடியதாலும் அதுவும் பனிக்கட்டியைப் போல் சில்லென்று இருந்த படியாலும் அங்கே கங்கையில் விழுவதற்கு அவன் இஷ்டப்படவில்லை.

"மன்னும் இமயமலை எங்கள் மலையே!" என்று பாரதியார் நமக்கெல்லாம் பட்டயம் எழுதி வைத்திருக்கிறார். அத்தகைய அற்புத மலைப் பிரதேசத்தை இன்னும் கொஞ்ச நேரம் சுற்றிப் பார்க்க விரும்பினான். அப்படிப் பார்த்துக் கொண்டே சில காலத்துக்கெல்லாம் அழகுக்குப் பெயர் போன காஷ்மீர தேசத்துக்குப் போய்ச் சேர்ந்தான்.

காஷ்மீரத்தைப் பார்த்த பிறகு உயிரை விடும் எண்ணம் அவனுடைய உள்ளத்தை விட்டு அடியோடு அகன்றது. இந்த உலகத்தில் பார்த்து அனுபவிக்க இவ்வளவு சௌந்தர்யங்கள் இருக்கும்போது, எதற்காக உயிரை விட வேண்டும்? ஹேமாவதியும் இந்தச் சௌந்தர்யங்களையெல்லாம் பார்த்து அனுபவிக்கத் தன்னுடன் இருந்தால் நன்றாய்த்தானிருக்கும்! அவளுக்குக் கொடுத்துவைக்கவில்லை; அவ்வளவுதான்! போயும் போயும் யக்ஞசாமி ஐயரின் பெண்ணாகப் போய்ப் பிறந்தாளே! என்ன துரதிர்ஷ்டசாலி!

ஆனால் அங்கே புது டில்லியில் ஸ்ரீ யக்ஞசாமி ஐயருக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிருஷ்டமாக அடித்துக் கொண்டிருந்தது. எல்லைப்புற மாகாணத்தின் வரவுசெலவுக் கணக்கு மிக்க மோசமாயிருந்தபடியால், அதைப் பரிசீலனை செய்து ஒழுங்கு படுத்துவதற்காக ஸ்ரீ யக்ஞசாமி ஐயரை மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் விசேஷ உத்தியோகஸ்தராக இந்திய சர்க்கார் நியமித்தார்கள். ஸ்ரீ யக்ஞசாமி ஐயர் குடும்பத்துடன் ராவல்பிண்டிக்குப் போய்ச் சேர்ந்தார்.

மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளம், ஐந்து மாதம் வாங்கிய பிறகு, எல்லைப்புறமெங்கும் கலகம் மூண்டது. ஹிந்துக்களைப் பூண்டோ டு ஒழிக்கக் கங்கணங் கட்டிக் கொண்டு மலைச் சாதியார் துராக்கிரஹப் போர் துவங்கினார்கள். "உயிர் போனாலும் பாதகமில்லை; சம்பளம் பென்ஷன் எல்லாம் போய் விடுமே" என்று யக்ஞசாமி ஐயர் கவலை அடைந்தார். அதிக நாள் கவலைப்படுவதற்குள்ளே ராவல்பிண்டியை நோக்கிக் காட்டுமிராண்டிகள் படையெடுத்து வருவதாகத் தெரிந்தது. தன் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு ஸ்ரீ யக்ஞசாமி ஐயர் தம்முடைய சொந்தக் காரில் அவசரமாகப் புறப்பட்டார். வழி தெரியாமல் தட்டுத் தடுமாறி, பல அபாயங்களுக்குத் தப்பித்துக் கடைசியில் பெட்ரோல் இன்றி வண்டியை ஓரிடத்தில் நிறுத்த வேண்டியதாயிற்று. நல்ல வேளையாக வண்டி நின்ற இடத்துக்குப் பக்கத்தில் காஷ்மீரத்தின் எல்லையிருந்தது. எவ்வளவோ கஷ்டங்களுக்கு உள்ளாகிப் பல மலைத்தொடர்கள் கால் நடையாக ஏறிக் கடந்து, காஷ்மீர் நாட்டில் புகுந்தார். இதற்குள் கையில் கொண்டு வந்திருந்த பணம், குடும்பத்தார் அணிந்திருந்த நகைகள் எல்லாம் தீர்ந்து விட்டன.

கடைசியாக, இவர்களைப் போல் ஆயிரக்கணக்கில் காஷ்மீரத்துக்குள் புகுந்த அகதிகளின் கோஷ்டியில் சேர்ந்து ஸ்ரீ நகரை நோக்கிப் பிரயாணமானார்கள்.

ஸ்ரீநகருக்குச் சமீபமாக இந்தக் கூட்டம் வந்து சேர்ந்தபோது, அகதிகளுக்கு தொண்டு செய்யும் படையில் சேர்ந்திருந்த எஸ்.பி.சிவன், ஸ்ரீயக்ஞசாமி ஐயரையும், அவர் குடும்பத்தாரையும் சந்தித்தான். முதலில் அவர்களை அவன் இனம் கண்டு கொள்ளவில்லை. அவ்வளவாக அவர்கள் இளைத்து 'மெலிந்து' அழுக்கடைந்த கந்தல் துணிகளை அணிந்து காட்சி அளித்தார்கள்.

"மிஸ்டர் சிவன்! எங்களைத் தெரியவில்லையா?" என்று ஸ்ரீயக்ஞசாமி ஐயர் ஈனஸ்வரத்தில் கேட்ட பிறகுதான் அவனுக்கு அவர்களை அடையாளம் தெரிந்தது.

"அப்பனே! நாங்கள் எல்லோரும் உயிரோடு திரும்பி ஊருக்குப் போகப் போவதில்லை. ஹேமாவதி ஒருத்தியையாவது நீ காப்பாற்றி அழைத்துக் கொண்டு போ!" என்றார் யக்ஞசாமி ஐயர். மேலும் அவர், "புதுடில்லி போனதும், ஒரு நல்ல நாள் பார்த்துக் கலியாணம் செய்து கொள்ளுங்கள்! தீர்க்காயுளுடன் சௌக்கியமாயிருங்கள்!" என்றும் சொன்னார்.

எலும்புந் தோலுமாயிருந்த உடம்பைக் கந்தல் துணியினால் மறைக்கப் பிரயத்தனம் செய்து கொண்டு பல நாள் எண்ணெய் காணாத கூந்தலுடன் தலை குனிந்து நின்ற ஹேமாவதியைப் பார்த்துச் சிவன் திடுக்கிட்டான். அவனுடைய உள்ளம் ஆயிரம் சுக்கலாக உடைந்தது. உடைந்த சுக்கல்களை ஒன்று சேர்த்துச் சரிப்படுத்திக் கொண்டு, நிலைமை எப்படி தலைகீழாக மாறிவிட்டது என்பதைப் பற்றி ஒரு கனம் சிந்தித்துப் பார்த்தான்.

முன்னொரு காலத்தில் தக்ஷன் பரமசிவனுக்குப் பார்வதியைக் கலியாணம் செய்துகொடுக்க மறுத்ததற்காகத் தவம் செய்ததும், அப்போது எஸ்.பரமசிவனுக்கு நினைவு வந்தது.

அதே சமயத்தில் காலதேச வர்த்தமானங்களைத் தெரிந்து கொண்டு, உருவிலியான மன்மதனும் சில புஷ்ப பாணங்களைப் போட்டு வைத்தான்.

ஆனால் எஸ்.பரமசிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரிக்கவில்லை. ஒரு தடவை எரிந்து போன மன்மதனை மறுபடியும் எரிக்க முடியாதல்லவா?

யக்ஞசாமி ஐயரைப் பார்த்து, "ஐயர்வாள்! புதுடில்லி போகும் வரையில் காத்திருப்பானேன்? எங்களுக்குச் சொந்தமான இமயமலைப் பிரதேசத்திலேயே கலியாணத்தை நடத்தி விடுவோமே! சாக்ஷாத் பரமசிவனுக்கும், இமவானுடைய குமாரிக்கும் அந்தக் காலத்தில் இமயமலைச் சாரலிலேதானே திருமணம் நடந்தது" என்றான் சிவன்.

அவன் விருப்பப்படியே சௌந்தரியலக்ஷ்மி குடி கொண்ட ஸ்ரீநகரில் அவர்களுடைய திருமணம் நூறு ரூபாய் செலவில் நடந்தேறியது.

எத்தனையோ பொருள் நஷ்டம் தமக்கு நேர்ந்திருந்த போதிலும், ஹேமாவதியின் கலியாணத்துக்காகத் தாம் செலவழிக்க எண்ணியிருந்த ரூபாய் நாற்பதயிரம் மிச்சந்தானே என்று எண்ணி யக்ஞசாமி ஐயரும் சந்தோஷப்பட்டார். மேற்படி சம்பவங்கள் எல்லாம் ஆறு மாதத்துக்கு முந்தி நடந்தவை. எனவே சென்ற வாரத்துத் தினப் பத்திரிகைகளில் வெளியானபின் வரும் செய்தி எனக்கு வியப்பை அளிக்கவில்லை.

"காஷ்மீர் மீது படையெடுத்து வந்த எதிரிகளோடு போராடுவதற்காக முதலில் சென்ற படையின் தலைவர் கமாண்டர் எஸ்.பி.சிவன், தீரச் செயல்கள் பல புரிந்து பிறகு காயமடைந்து விழுந்தார். இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்!"

தன்னுடைய குலதனமான இமயமலையை எதிரிகள் வந்தடையாமல் பாதுகாப்பதற்கு ஸ்ரீ எஸ்.பி.சிவன் தீவிரமாகப் போராடியதில் வியப்பில்லைதானே? ஆண்டவன் அருளினாலும், ஹேமாவதியின் மாங்கல்ய பலத்தினாலும் கமாண்டர் பரமசிவன் சிக்கிரம் குணமடைந்து ஹேமாதியுடன் நெடுங்காலம் வாழ்வாராக!

"https://ta.wikisource.org/w/index.php?title=இமயமலை_எங்கள்_மலை&oldid=484356" இலிருந்து மீள்விக்கப்பட்டது