இயல் தமிழ் இன்பம்/இன்சொல் இயம்பல்

விக்கிமூலம் இலிருந்து

2. இன்சொல் இயம்பல்

இன்சொல் என்பது மிகவும் விலை மலிவான-இல்லையில்லை-விலையே இல்லாத ஓர் அருட்கொடைப் பொருளாகும். இந்த மலிவான பொருளை மக்களுள் பெரும்பாலார் பெற்றிராதிருப்பது மிகவும் வியப்பாயுள்ளது. மலிவான பொருளுக்கு மதிப்பு இல்லை என்பது இவர்தம் எண்ணம் போலும்.

திருமூலர் மக்களைப் பார்த்துச் சொல்கிறார்: கடவுளுக்கு ஒரு பச்சிலை கொண்டுவந்து சாத்தலாமே. நமக்குப் பால் தந்து காக்கும் ஆவிற்கு ஒருவாய்ப் புல்லாவது கொடுக்கலாமே என்கிறார். நாங்கள் பச்சிலையும் வாய்ப்புல்லும் தேடிக்கொண்டு வந்து தருவது இயலாத செயல்-எங்களுக்கு இருக்கும் வேலையிலே இவற்றைத் தேடுவது எப்படி என்ற பதில் வந்ததுபோல் தோன்றிற்று. அடுத்துத் திருமூலர் தெரிவிக்கிறார்; இரவலர்க்கு-ஏழையர்க்கு ஒரு கைப்பிடி உணவாவது இடலாமே என்கிறார். யாங்கள் உண்பதற்கு முன்-சமையல் முடிவதற்கு முன் எவ்வாறு இடுவது என்ற பதில் வந்ததுபோல் தெரிந்தது. உண்பதற்கு முன் இடமுடியாவிடினும், உண்ட பிறகாவது இடலாமே என்கிறார். உண்டபின் தீர்ந்துபோய் விட்டதே-எவ்வாறு கொடுப்பது என்ற பதில் வந்தது போலும். அங்ஙனமெனில், உண்டு கொண்டிருக்கும்போதே, வந்து கேட்பவர்க்கு-ஒரு படி சோறு தரச் சொல்லவில்லை-ஒரு பிடி சோறாயினும் தர முடியுமே என்றார். அதற்கும் நல்ல பதில் எதிர்பார்க்க முடியவில்லை போலும். முடிவாக-இறுதியாகக் கூறுகிறார். பிறர்க்கு எந்த உதவியும் செய்ய இயலாவிடினும், இனிய சொல்லாலாவது பிறரைக் குளிரச் செய்யலாமே என்கிறார். திருமந்திரம் என்னும் தமது நூலில் ஒரு பாடலில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்,

“யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே” (252)

என்பது அவரது பாடல். எந்த உதவியும் செய்ய முடியாதவர்க்கு, பிறர்க்கு இன் சொல்லாவது இயம்பக்கூடிய இந்த உதவியை அறிமுகப்படுத்தி யுள்ளார். விலை கொடுத்து வாங்க வேண்டாத மலிவான பொருளை மக்கட்குப் பரிந்துரைத் துள்ளார் திருமூலர்.

உலகியலில் மக்களிடையே இன்சொல்லுக்கு எதிரான வன்சொல்லே பேரரசு புரிவதால், அறிஞர்கள் பலரும் மலிவான இன்சொல்லை வற்புறுத்தியுள்ளனர். உலகத்தை இன் சொல்லால் தவிர வன் சொல்லால் மகிழ வைக்க முடியாதென நல்லாற்றூர்ச் சிவப்பிரகாச அடிகளார் நவின்றுள்ளார்.

“இன் சொலால் அன்றி இருநீர் வியனுலகம்

வன் சொலால் என்றும் மகிழாதே” (18)

என்பது அவரது நன்னெறி நூலின் ஒருபாடல் பகுதி. இன் சொல் இயம்பாவிடினும், நாயை அவிழ்த்து விட்டு விரட்டாமல் இருந்தால் போதும்-என்று ஒருவர் சொல்வது காதில் ஒலிப்பதுபோல் கற்பனையின் தெரிகிறது. சிலர் வீடுகளில் வரவேற்பாளர் நாய்தான். வீட்டின் ஓரமாகத் தெருவில் சென்றாலுமே அந்த வரவேற்பு கிடைக்கும். இவர்களிடம் இன்சொல்லை எவ்வாறு எதிர்பார்ப்பது? சிலர் வீடுகட்குச் செல்பவர்கள், நாய் இருக்கிறதா?-என்று ‘பயபக்தியுடன்’ கேட்டுவிட்டு, நாய் இல்லை என்ற பதில் வந்த பின்னரே உள்ளே காலடி எடுத்து வைப்பது மரபாயுள்ளது. நாயைக் கட்டி வைத்துவிட்டோம்-அஞ்சாமல் வரலாம்-என்ற பதில் வந்த பின்னரும், குலை நடுக்கத்தோடு உள்ளே மெள்ள-மெள்ளச் செல்பவர்களும் உண்டு, ஈண்டு, “ஆசு இல் தெருவில் நாய் இல் வியன்கடை (271) என்னும் குறுந்தொகைப் பாடல் பகுதி எண்ணத்தக்கது.

இன்சொற்கள் இருக்க அவற்றைப் பயன்படுத்தாமல், சிலர் வன் சொற்களைக் கொதிக்கக் கொதிக்கக் கொட்டுவது எதற்கு என்று காரணம் தெரியாமல் திருவள்ளுவர் திகைக்கிறார். கனிந்த சுவையான் இனிய கனிகள் இருக்க அவற்றை உண்ணாமல், முற்றாத-இனிப்பு ஏறாத துவர் உள்ள காய்களைப் பறித்துத் தின்பவர்க்கும் இந்த வன்சொலாளர்க்கும் வேறுபாடு இல்லை என எண்ணிப் பார்க்கிறார் வள்ளுவர். அந்த எண்ணத்தின் வெளியீடாக,

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” (100)

என்ற குறட்பா எழுந்தது. திருவள்ளுவர் இதற்கு ‘இனியவை கூறல்’ என்னும் தனித் தலைப்பு தந்து பத்துப் பாக்கள் செலவழித்துள்ளார். அவற்றுள் ஒன்று தான் மேற்கூறிய பாடல்.

உள்ளம் மகிழ்ந்து ஒன்று உதவ இயலாவிடினும், முகம் மலர்ந்து இன்சொல் வழங்குவது எவ்வளவோ மேலானது என்பது வள்ளுவர் கருத்து.

“அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்” (92)

இது குறள்

சிலர் ஒருவகையான இன்சொல் இயம்புவார்கள்: தம்பி சாப்பிடு என்றால் எதுவும் சாப்பிடாது; தம்பி கையில் எது இருந்தாலும் கேட்டால் கொடுத்து விடும் - என்ற மாதிரியில் இன்சொல் கூறி, இருப்பதைப் பறித்துக் கொண்டு, வாய்ப்பேச்சால் குளிப்பாட்டி அனுப்பி விடுவார்கள்.

இன்னும் சிலர், வந்திருப்பவரைப் பார்த்து ‘இவன் எப்போது எழுந்து போய்த் தொலைவான்’ என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருப்பார்கள். வந்தவர் ஒரு விதமாக விடைபெற்று வெளிவாயிற்படியண்டை போன பிறகு, காஃபி சாப்பிடாமல் போகிறீர்களே - என்ன சாப்பிடுகிறீர்கள்? சர்க்கரை போடலாமா? டிக்கேழ்சன் லைட்டா இருக்கவேண்டுமா? காஃபி பிடிக்காவிடின், ஆர்லிக்சாவது - போர்ன் விட்டாவாவது சாப்பிடலாமா? எதுவும் பிடிக்காவிடின் வெறும் பாலாவது சாப்பிடலாமா? - என்று அடுக்கிக் கொண்டே - நகர்ந்து கொண்டே வழியனுப்புவார்கள். இவர்கள் எப்படி ஏமாற்ற முயன்றாலும், எப்படியாவது வாங்கிப் பருகிவிட்டுச் செல்லும் பேர்வழிகளும் உண்டு, காஃபி சாப்பிடுகிறீர்களா-என்று ஒப்புக்காவது கேட்கும் பண்பும் ஒருவகையில் பாராட்டுக்கு உரிய இன்சொல்லே.

சில இடங்களில், என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டாலேயே - ‘போச்சு’ - ஒன்றும் கொடுக்க மாட்டார்கள்-என்பது பொருள். உண்மையில் கொடுப்பவர் என்றால், கேட்காமலேயே காஃபி வந்து விடுமே. சிலர் காஃபி சாப்பிடுகிறீர்களா என்று கேட்டால், சீக்கிரம் எழுந்து போங்கள் என்று பிடித்துத் தள்ளுவதாகப் பொருள் கொண்டு, மரியாதையாக அந்த இடத்தை விட்டு அகன்று விடல் வேண்டும். இவர்களின் பேச்சு மறைமுகமான - வஞ்சகமான வன்சொல்லாகக் கருதப்படும்.

ஒரு சிலர் வந்தவரை நோக்கி, “ஏம்பா, நீ செய்வது ஒன்றும் பிடிக்கவில்லை - இப்படி எல்லாமா பேசுவது - இப்படி எல்லாமா நடந்து கொள்வது? ‘ச்சே-ச்சே’ - இது சரியில்லை” - என்று எதன் தொடர்பாகவோ கடிந்து பேசுவார்கள். பேச்சின் இடையிலே, உள்ளே இருப்பவரை அழைத்து, ‘தம்பிக்குக் காஃபி கொண்டு வந்து கொடு’ என்பார்கள். வந்தவர் எனக்குக் காஃபி வேண்டியதில்லை என்று சொன்னால், வீட்டிற்கு உடையவர், ‘பார்த்தாயா. பார்த்தாயா? ஏன் காஃபி வேண்டியதில்லை? நம் வீட்டிற்குவரின் கட்டாயம் காஃபி சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, உள்ளேயிருந்து காண்பி வந்துவிடும். ‘இந்தா-இந்தக் காஃபியைப் பிடி - கட்டாயம் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் - என்று கட்டாயப்படுத்திப் பருகச்செய்வர்.

முதலில், சிலர், உண்மையாக ஒன்றும் தராமல் இனிமையாகப் பேசி வாய்ச் சொல்லாலேயே காஃபி கொடுப்பதாக நடித்து அனுப்பி விடுவார்கள் என்பதை அறிந்தோம். இன்னாரின் அகம் வேறு-முகம் வேறு. அடுத்தாற்போல், எதற்காகவோ வன்மையாகக் கண்டித்துப் பேசியவர், உண்மையிலேயே உள்ளம் உவந்து கட்டாயப்படுத்தியாவது சாப்பிடச் செய்துள்ளார். இதனால் என்ன தெரிகிறது? வஞ்சக உள்ளம் உடையவர் பேகம் இன்சொல்லினும் உண்மையான அன்புள்ளம் உடையவர்கள் பேசும் வன்சொல்லே இனிமையானது என்னும் கருத்து தெரிய வருகிற தல்லவா? இதைத்தான் சிவப்பிரகாச அடிகளார் தமது நன்னெறி நூலில்,

“மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க” (2)

என்று கூறியுள்ளார். முகம் மலர்ந்து நோக்குவதோடு அகமும் உண்மையாக உவந்து இன்சொல் இயம்பவேண்டும் என்று அறிவித்துள்ளார் வள்ளுவர்.

“முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொலினதே அறம்” (93)

என்பது திருக்குறள் பாடல்.

பிறர் நம்மிடம் இன்சொல் பேசினால்தான் நமக்கு மகிழ்ச்சியா யிருக்கிறது. இதுபோல் நாமும் பிறரிடம் இன்சொல் பேசினால்தானே அவர்கட்கும் மகிழ்ச்சியாயிருக்கும் என்பதை உணராமல், சிலர் பிறரிடம் வன்சொல் பேசுவது எதற்காக? என்று வருந்துகிறார் வள்ளுவனார்.

“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது” (99)

என்பது குறள் வன்சொல். வழங்கும் பொருளா என்று கேட்பதுபோல் தெரிகிறது.

ஒருவர் தம்மை அணி (அலங்காரம்) செய்து கொள்வதற்குப் பொருள் செலவு செய்து விலைமிக்க ஆடை அணி கலன்கள் வாங்க வேண்டிய தில்லையே! தம்மை அணி செய்வதற்குப் பணிவுட்ன் கூடிய இன்சொல்லே மலிவானதும் மிகவும் உயர்ந்ததும் ஆன அணிகளாகும் என்பது வள்ளுவம்!

“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி, அல்ல மற்றுப் பிற” (95)

என்பது அந்த வள்ளுவம்.

எனவே, மக்கள் ஒருவர்மேல் ஒருவர் இன்சொல் மழை பொழிந்து அதில் நனைந்து குளிர்ந்து நன்கு மகிழ்வார்களாக!