இயல் தமிழ் இன்பம்/உயிர் அன்பு ஒருமைப்பாடு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

3. உயிர் அன்பு ஒருமைப்பாடு

உயிர் நேயம் என்பது உயிர்களிடத்தில் செலுத்தும் நேயம். அதாவது அன்பு எனப் பொருள்படும். இதைச் சிலர் ‘ஆன்ம நேயம்’ என்பர். தமிழில் ‘உயிர் அன்பு’ எனலாம். மேலோடு நோக்கின், உயர்திணையாகிய மக்களிடம் - மக்கள் உயிரியிடம் செலுத்தும் அன்பு என்பது பெறப்படும். சிறிது ஆழ்ந்து நோக்கின், அஃறிணையாகிய-ஓரறிவு உடைய உயிர்கள் எனப்படும் மரம் செடி கொடி புல்பூண்டு முதல் ஆறறிவுடைய மாந்தர் வரை அனைத்து உயிர்களிடமும் செலுத்தும் அன்பு என்னும் கருத்து கிடைக்கும்.

உயிர்ப்பது அதாவது சுவாசிப்பது உயிர். ஆன்மா என்னும் வட சொல்லின் வேர்ச் சொல்லாகிய ‘ஆன்’ என்பதற்கும் ‘உயிர்த்தல்’ என்பதுதான் பொருளாகும். பெரும்பாலும் பல்வேறு உயிர்கட்கும் உயிர்ப்பு. சுவாசிப்பது உண்டு. மர இனங்கள் (தாவரங்கள்) மக்கள் வெளியிடும் கரியகத்தை (கரியமில வாயுவை) உட்கொண்டு, உயிரகத்தை (பிராண வாயுவை) வெளியிடும் செய்தி ஈண்டு எண்னத்தக்கது. அதானல், மர இனங்களையும் உயிர்ப் பொருளாகச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

மக்கள் ஒருவர்க்கு ஒருவர் அன்பு செலுத்தல் வேண்டும் என்னும் கருத்தோடு, பறவை-விலங்கு முதலிய அஃறிணை உயிர்களையும் கொல்லலாகாது-கொன்று-தின்னலாகாது என்ற கருத்தும் உயிர் அன்பில் (ஆன்ம நேயத்தில்) அடக்கப்படும்.

மர இனமான தாவரங்கட்கும் பல உணர்வுகள் உண்டு. அவற்றுள்ளும் ஆண்பெண் உண்டு. எல்லா மர இன உயிரிகளும் காதல் புரிகின்றன. அவற்றிலிருந்து கிடைக்கும் தானியங்கள்-பருப்பு வகைகள்-கொட்டைகள் முதலியனவும் உயிருள்ள பொருள்களே. அவற்றை விதைத்தால் முளைத்து வளர்கின்றன வாதலின், அவற்றை உண்பதும் உயிர்க் கொலையே என்பது, ஒரு காலத்தில் வாழ்ந்த துறவியர்கள் சிலரின் கடுமையான கோட்பாடாக இருந்தது. அதனால் அவர்கள் காய் கனிகளின் தசைப் பகுதியை மட்டும் உண்டு, உள்ளிருக்கும் கொட்டைகளைப் போட்டு விடுவார்களாம். பச்சை இலைகளைப் பறித்தால், அவற்றையுடைய மரஞ்செடிகட்கு ஏதாவது நோக்காடு இருக்கலாம் என எண்ணித் தாமாகக் கீழே விழுந்த உலர்ந்த சருகுகளைக் கடுமையான துறவியர் உண்டு வந்தனர் என்று சொல்வதும் உண்டு.

இச் செய்திகளை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு நோக்குங்கால், மர வகைகளைப் பற்றிக் கவலைப்படா விடினும், மக்கள் தமக்குள்ளேயாவது ஒருவரை ஒருவர் துன்புறுத்தாமல், ஒருவர்க்கு ஒருவர் அன்பு செலுத்தி வந்தாலேயே போதும்போல் தோன்றுகிறது. எந்த உயிரையும் கொல்லாமலும் கொன்று தின்னாமலும் வாழ்பவனை எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

“கொல்லான் புலாலை மறுத்தனைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்” (260)

என்பது திருக்குறள் பாடல். கைகூப்பித் தொழும் என்பது கற்பனை நயம் செறிந்த தொடராகும்.

உயிர்கள் எல்லாமே தன்னலம் உடையவை. உயிரிகளே ஒன்றை ஒன்று கொன்று தின்பதைக் காண்கிறோம். சிங்கம் புலி-கரடி போன்றவை, மர இனம் அல்லாத பிற உயிரிகளைக் கொன்று தின்கின்றன. மாடு-மான்-யானை போன்றவை மர வகைகளை மட்டும் உண்கின்றன. இந்த அமைப்பின் காரணம் புரியவில்லை. ஆனால், மாந்தரோ இரண்டையும் விட்டாரிலர்; இதையும் ஒரு கை பார்க்கின்றனர்-அதையும் ஒரு கை பார்க்கின்றனர். மக்களுள் மரவகை உணவு மட்டும் உண்பவர் மிகவும் குறைவானவரே.

ஒருவர் இன்னொருவரை நோக்கி, தழைகளையும் இலைகளையும் தின்பதற்கு நாம் என்ன ஆடா-மாடா? என்று கேட்டார். அதற்கு மற்றவர், ஆடுமாடுகளைக் கொன்று தின்பதற்கு நாம் என்ன சிங்கம் புலி கரடியா? - என்று வினா எதிர் வினா விடை விடுத்தார். மாந்தர் மாந்தரையே கொன்று தின்னும் காலம் இருந்தது - இடங்கள் இருந்தன. இப்போது இது இல்லை. நாம் அறியாத காடு - மலைப் பகுதிகளில் தீவுகளில் எங்கேனும் இந்த நிலைமை இப்போதும் இருக்குமோ என்னவோ!

தனியொரு மாந்தர் பிறர் உதவியின்றி உலகில் வாழ முடியாது. ஒருவர்க்குக் குறைந்தது குடும்பத்தின் உதவியாவது தேவை. ஒரு குடும்பத்திற்கு ஊரின் உதவி தேவை. ஓர் ஊருக்கு நாட்டின் உதவி தேவை. ஒரு நாட்டிற்கு உலகத்தின் உதவி தேவை. எனவே, குடும்ப ஒருமைப்பாடு - ஊர் ஒருமைப்பாடு - நாட்டு ஒருமைப்பாடு - உலக ஒருமைப்பாடு என்பன முறையே தேவையாகும்.

இந்த அடிப்படையில், தன்னுயிர் போலவே மன்னுயிரையும் காத்து உலகத்தோடு ஒன்றி வாழ்தல் உயிர் அன்பு(ஆன்மநேயம்) எனப்படுகிறது. தமக்குத் துன்பம் நேரின் தாம் வருந்துவது போலவே, பிற உயிர்களும் துன்பம் நேரின் வருந்தும் என்பதைத் தம் சொந்தப் பட்டறிவால் உணர்ந்து, பிற உயிர்களின் நன்மையிலும் கருத்து செலுத்தல் வேண்டும். பிற உயிர்களின் துன்பத்தைத் தமக்கு வந்த துன்பம் போல் எண்ணி, அவ்வுயிர்கட்கு வேண்டிய நலம் செய்யாவிடின், ஆறறிவு பெற்றிருப்பதால் - கல்வி கேள்வி யறிவும் பெற்றிருப்பதால் என்ன பயன் இருக்க முடியும்? - என்று வினவுகின்றார் வள்ளுவர்;

“தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்” (318)

“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை” (315)

என்பன குறள்கள்

மிகுதியான மலப்போக்கினால் மலத்தோடு மலமாய் மயங்கிக் கிடந்த ஒருவனைக் கவுதமப் புத்தர் எடுத்துத் தூய்மை செய்து காப்பாற்றினார் என்பது நடந்த வரலாறு. பெரு நோய் பிடித்தவனைத் தொட்டுப் பிடித்து அவனுக்கு ஆகவேண்டிய உதவிகளை அண்ணல் காந்தியடிகள் புரிந்தார் என்பதும் உலகறிந்த வரலாறு. இஃதன்றோ உயிர் அன்பு-ஆன்மநேயம்!

தாம் வேறு - உயிர் அன்பு வேறு என்று சொல்ல முடியாமல், தாமே உயிர் அன்பின் மொத்த உருவமாய் விளங்கிய வடலூர் இராமலிங்க வள்ளலார், பசித்தவரைப் பார்க்கப் பொறாமல், இலவசமாக உணவளிக்க அறச்சாலை அமைத்து உதவினார். வாடிய பயிரைக் கண்டாலும் அவர் வாடினாராம். பசியில் வருந்தி வீடு தோறும் சென்று இரந்தவரைக் கண்டு பதைத்தாராம்; பிணியினால் வருந்தியவரைக் கண்டு உள்ளம் துடித்தாராம்; மானம் ஒரு பக்கம் இழுக்க - ஏழமை ஒரு பக்கம் இழுக்கச் செய்வது அறியாது உள்ளம் சோர்ந்து இளைத்தவரைக் கண்டு தாமும் உள்ளம் இளைத்துச் சோர்ந்து போனாராம்.

“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துவோர் என்
நேருறக் கண்டுளம் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

என்பது வள்ளலாரின் அருட்பா. புத்தரும், ஏழைகளையும் நோயாளிகளையும் அகவை முதிர்ந்து தளர்ந்தவர்களையும் கண்டு ஆழ்ந்த எண்ணத்தில் ஈடுபட்ட செய்தியை வரலாறு அறிவிக்கிறது.

பார்த்தார் சுப்பிரமணிய பாரதியார். உலகத்தில் ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனினும் இந்த உலகத்தையே அழித்து விடவேண்டும் எனக் கனல் கக்கினார்:

“தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்
சகத்தினை அழித்திடுவோம்”

என்று கொக்கரித்தார். மற்றும், பெரியோர்கள் பலர் இந்தக் கோட்பாட்டைப் பல கோணங்களில் நின்று அறிவித்துள்ளனர். கடவுளுக்கு உணவு படைக்கின் அது உயிர்களைச் சென்றடையாது; உயிர்கட்கு உணவிடின் அது கடவுளுக்கும் ஏற்புடைத்தாகும்-என்பது திருமூலர் கருத்து;

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க் காகாது
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே” (1857)

என்பது திருமூலரின் திருமந்திரப் பாடல்.

“அப்பா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்”

என்றார் வடலூர் வள்ளலார்.

“எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே”

என்றார் தாயுமானவர் (பராபரக்கண்ணி)

“நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” (85)

என்றருளினார் திருமூலர்.

“தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்” (399)

என்றறிவித்தார் வள்ளுவனார்.

ஆக, இவ்வாறெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ள உயிர் அன்பு (ஆன்மநேயம்) ஏட்டளவில் இருந்தால் போதுமா? இப்போது, ஒரே உலகக் கொள்கையாகிய உலக ஒருமைப்பாடு பேசப்படுகிறது. இந்தக் கொள்கை வெற்றி பெறின், உயிர் அன்பு ஒருமைப்பாடு வெற்றி பெற்றதாகப் பொருள் கொள்ளலாம். கடவுள் நெறி அதாவது சமயநெறி வற்புறுத்துவதும் இந்த உயிரன்பு ஒருமைப்பாடே யாகும்.