இயல் தமிழ் இன்பம்/காட்சிக்கு எளிமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

4. காட்சிக்கு எளிமை


உலகில் செல்வர்கள் சிலர் செய்யும் ஆரவார - ஆடம்பரங்களைக் கண்டு, போதிய செல்வம் இல்லாதவரும் அந்தப் பாதையில் சென்று பின்னர் இடர்ப்படுகின்றனர். தம்மைப் பார்த்து உள்ளம் நாணும் ஏழைகட்காகவாவது செல்வர்கள் எளிமையாய் இருப்பது நல்லது.

செல்வர் சிலர், வாழ்க்கை நடைமுறையில் எளிமையாய் இல்லாவிடினும், தம்மை அணுகும் மக்களிடமாவது எளிமையாய்ப் பழகினால், அவர்கட்கு ஒரு வகையில் உள்ளம் நிறைவடையும்.

மேட்டுக் குடியினர், பிறர்க்கு எந்தப் பெரிய உதவியும் செய்யாவிடினும், வந்து காண்பவர்க்கு எளியவராய், விலை இல்லாத இன்சொல் பேசினாலே, வந்தவர் பெருமை கொள்வார் - பெருமை செய்வார். இது மன்னர்க்கும் பொருந்தும்.

இக்கருத்தினைப் பொருட்பாலில் இறைமாட்சி என்னும் தலைப்பில் உள்ள

“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்” (386)

என்னும் குறட்பா அறிவுறுத்துகின்றது. இறை எனப்படும் அரசனுக்கு இருக்க வேண்டிய மாண்புகளைக் கூறும் பகுதி இது.

காட்சிக்கு எளியன் என்னும் அணுத் தொடருக்குள் ஆழ்ந்த அகன்ற அருங் கருத்துகள் பல பொதிந்து கிடக்கின்றன. காட்சிக்கு எளியன் என்றதும், பிறருக்கு எளிதில் காட்சி கொடுப்பவன்-அதாவது-யாரும் வந்து எளிமையாய்க் காணக்கூடியவன் - எப்போதும் எந்த நேரத்திலும் வந்து எளிமையாய்க் காணக்கூடியவன் - எந்த இடத்திலும் வந்து எளிமையாய்க் காணக் கூடியவன் - என்னும் கருத்துரை நினைவுக்கு வரும்.

ஆனால், உலகியலில் பல தலைவர்களைச் சிலரே சென்று காணமுடியும்; எளிய பொது மக்கள் காணவே முடியாது. அன்றியும், குறிப்பிட்ட (Visiting Hours) நேரத்தில் மட்டுமே - குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே காண முடியும். இவர்கள் காட்சிக்கு அரியர் ஆவர். இவர்கட்கு எதிர் மாறான தலைவனே காட்சிக்கு எளியன் எனப்படுபவன்.

காட்சிக்கு எளியன் என்னும் சுரங்கத்தில் இன்னும் ஒரு புதிய பொருள் பொதிந்து கிடக்கிறது; அகழ்ந்து பார்த்தால் அகப்படும். கையில் கத்தி-கம்பு வைத்துக் கொண்டிருக்கும் கடுந் தெய்வங்களைப் போல் இல்லாமல் - உயிரைப் பறிப்பது போல் உருட்டி மிரட்டிப் பார்க்கும் உலுத்தர்களைப் போல் இல்லாமல், காந்தியடிகளைப் போலக் காண்பதற்கு எளிய தோற்றம் உடையவன் - அதாவது - காண வருவோர்க்கு நம்பிக்கை யளிக்கத்தக்க இனிய எளிய தூய தோற்றம் உடையவன் என்பதுதான் அந்தப் புதிய பொருள்; இத்தகையோனைக் காட்சிக்கு எளியன் எனல் முக்காலும் சாலும்.

காட்சிக்கு எளியன் என்னும் ஆழ்கடலுள் குளித்தால் மேலும் ஓர் ஆணி முத்து கிடைக்கலாம். அந்தத் தலைவன் அங்கே யெல்லாம் போகமாட்டான்; இங்கே மட்டுமே வருவான் என்றோ - தனக்கு உற்றவர் வீடுகட்கு மட்டுமே செல்வான்; வருந்தி யழைத்தாலும் மற்றவர் வீடுகட்கு வரமாட்டான் என்றோ - யாரும் சொல்ல முடியாது. கண்ட இடங்களுக்குச் சென்றால் தன் மதிப்பு குன்றிவிடும் - அல்லது தனக்குத் தீங்கு நேரும் என்றெல்லாம் அஞ்சி அவன் தயங்கமாட்டான்; எங்கும் செல்வான்; எல்லோரையும் காண்பான். அதாவது, எங்கோ, எப்போதோ அரிதாய்க் காணப்படுபவன் என்ற இழுக்குக்கு இடமின்றி, எங்கும் எளிதாய் அடிக்கடிக் காணப்படுவான் என்பதுதான் அந்த ஆணிமுத்து அனைய கருத்து.

மேற்கூறிய அனைத்துப் பண்புகளும் உடையவனே நூற்றுக்கு நூறு காட்சிக்கு எளியன் எனப் பாராட்டற்கு உரியன். எத்துணை இனிய கருத்து! எத்துணை உயர்ந்த குறள்!

ஒரு சிறிது படிப்போ, பட்டமோ, பதவியோ, பணமோ வந்து விட்டாலே, தங்களைப் பெருமக்கள் என்று தாங்களே தவறாக எடை போட்டுக் கொண்டு, பலரோடு பழகாமல், பேசாமல், தனியிடத்தில் தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக் கொள்கின்ற அற்பர்களுக்காக இந்தக் குறள் இயற்றப் படவில்லை. இந்தப் பதர்கள் எக்கேடு கெட்டால் என்ன? இவர்தம் செயலால் ஆவதோ, அழிவதோ ஒன்றும் இல்லை. மன்பதையோடு (சமுதாயத்தோடு) இரண்டறக் கலந்து பழகாத இந்த மர மண்டைகள் செத்தவர்க்கு நிகர். செத்தவர் எவ்வாறு வந்து பழகமுடியும்? இவ்வாறு குறுக்கு வழியில் சுருக்கப் பெருமக்கள் ஆக முயல்கின்ற இன்னோர்க்காகவே,

“சிறியரேம் மதிக்கும் இந்தச் செல்வம் வந்துற்ற ஞான்றே
வறியபுன் செருக்கு மூடி வாயுளார் மூக ராவர்
பறியணி செவியுளாரும் பயிறரு செவிட ராவர்
குறியணி கண்ணுளாரும் குருடராய் முடி வரன்றே”

(பிறரை ஏறெடுத்துப் பாராமையால் குருடர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால் செவிடர்; பிறரிடம் பேசாமையால் ஊமையர்) - என்ற குசேலோபாக்கியானப் பாடலும்,

“பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடின்
உருத்தெரி யாமலே ஒளி மழுங்கிடும்
மருத்து உளவோ எனில் வாகடத் திலை
தரித்திரம் என்னுமோர் மருந்தில் தீருமே”

என்ற தனிப்பாடலும் எழுந்தன போலும். ஆனால், இக்குறள் எழுந்தது, நாட்டு மக்களின் தலையெழுத்தை விதிக்கின்ற நாட்டுத் தலைவனுக்காகவே யாம். மேலும் இக்குறள் எழுந்தது இந்தக் குடியரசுக் காலத்தில் அன்று; எல்லாம் வல்ல முடியரசர் காலத்தில். அங்ஙனமெனில், இக்காலை எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.

வேந்தன் எளியவனாய் இருக்க வேண்டும் என்றால் இளித்த வாயனாய் இருக்க வேண்டும் என்பதன்று; கடு கடுப்பு சிடுசிடுப்பு, விரம்-வேகம் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்; தன்னை நாடியவரிடம் இருக்கக்கூடாது. அதியமான் என்னும் அரசனை ஒளவையார் பாடியுள்ளார். ‘யானைப் பொம்மையுடன் விளையாடுவதைப் போலச் சிறுவர்கள் தன்னுடன் விளையாடித் தன் கொம்புகளை நீரில் கழுவுமளவிற்குக் காட்டி நிற்கும் ஒரு பெரிய யானையைப் போல, அதியமான் தன்னைச் சேர்ந்தோரிடம் இனிமையாய்ப் பழகுவானாம்; அதே யானை மதம் பிடித்துத் திரிந்தாற் போலத் தன் பகைவரிடம் அவன் நடந்து கொள்வானாம்’ என்பது ஒளவையார் பாடலின் கருத்து. இதனை,

“ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே”

என்னும் புறநானூற்றுப் பாடலால் அறியலாம். இப்படிப் போல, சங்க நூல்களில் இன்னும் பலப்பல எடுத்துக் காட்டுகள் உள. எனவே, மன்னன் தன்னை நாடி வந்தோர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாயிருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்தான், மக்களின் குறைகளையும், முறைகளையும் நேரில் அறிந்து போக்கவியலும்.

அடுத்து, கடுஞ்சொல்லன் ‘அல்லனேல்’ என்றார் வள்ளுவர். ஏன், ‘இன்சொல்லன்’ என்றிருக்கலாமே. இல்லை - இன்சொல்கூட வேண்டியதில்லை; கடுஞ்சொல் இல்லாதிருந்தால் போதும். அரசன் சில குற்றங்களைக் கண்டிக்கும் போது இன்சொல் கூறமுடியாமற் போகலாம். ஆனால் கடுஞ்சொல்லின்றி நடுநிலையில் நடந்து கொள்வது நன்று.

இந்தக் குறளினை இக்கால முறைக்கு வைத்துப் பார்ப்போம். இப்போது பொதுமக்கள் அரசாங்கத்துக்கு ஒருகுறை எழுதித் தெரிவித்தால், அது பல கைக்கு மாறிப் பதிலுருவத்தில் மக்களின் கைக்கு வரப் பல நாட்கள் - பல திங்கள்கள் ஆகலாம். அந்தத் தாள்கட்டு ‘சிவப்பு நாடா’வால் கட்டப்பட்டுக் கிடக்கும். இதற்குத் தான் ‘சிவப்பு நாடா முறை’ என்பது பெயர். இந்நிலை கூடாது. மக்கள் வேண்டுகிற குறைகளையும் வெளியிடுகின்ற முறைகளையும் அரசன் நேரில் அறிந்து உடனுக்குடன் ஆவணபுரிய வேண்டும் - அதாவது ‘சிவப்பு நாடா முறை’ ஒழிய வேண்டும் என்பது போல வள்ளுவர் அன்றே கூறியுள்ளார். இப்போது அரசியலார் இதில் கண் செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

முடியரசுக் காலத்திலேயே அரசனது கடமையைச் சுட்டிக் காட்டிய வள்ளுவரது துணிவு பாராட்டத்தக்கது; மன்னன் கடுஞ்சொல் இன்றிக் காட்சிக்கு எளியனாக இருந்து சிறக்க வேண்டும் - நாடு நலம் பெற வேண்டும் என்ற வள்ளுவரது விருப்பம் வரவேற்கக் கூடியது; அவரது பரிந்துரையான இந்த அறிவுரை ஆட்சித் தலைவர்கள் பின்பற்றக்கடவது. வாழ்க வள்ளுவம்!