இயல் தமிழ் இன்பம்/இன்னா செய்தார்க்கு ஒறுப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

5. இன்னா செய்தார்க்கு ஒறுப்பு

இந்தத் தலைப்பு, திருவள்ளுவரின் ஒரு திருக்குறள் பாடலின் முற்பகுதித் தொடர்புடையது.

திருவள்ளுவர் ஒரு வகையில் கடுமையான பேர் வழியாகக் காணப்படுகிறார். உலகில் மக்கள், பெரும்பாலும் தமக்குத் தீமை செய்தவர்க்குத் திரும்பத் தீமையே செய்வர். தீமை செய்தவர்க்கு அடி உதை கொடுத்தல், அவருடைய தொழிலையும் செல்வத்தையும் அழித்தல், அவர்களைப் பற்றித் தூற்றிப் பேசுதல், பழிக்குப் பழிவாங்குதல் முதலிய ஒறுப்புகளை (தண்டனைகளை) மக்கள் பதிலுக்குப் ‘பரிசு’ ஆகத் தருகின்றனர். இன்னா செய்தாரை ஒறுத்தல் அதாவது தண்டித்தல் உலக இயல்பாகத் தெரிகிறது. ‘இன்னா’ என்பதற்கு, இனிமை தராத துன்பம் என்பது பொருள்.

அறநெறி நூல் இயற்றிய வள்ளுவர் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன! தீமை செய்தவர்க்கு ஒறுப்பு தரவேண்டும் என்கிறார். வள்ளுவர் பரிந்துரைக்கும் ஒறுப்பு கடுமையானது; தீமை செய்தார்க்குத் தீமை செய்யப்பட்டவரால் கொடுக்க முடியாத அரிய பெரிய ஒறுப்பாகும். வள்ளுவர் அறிமுகப்படுத்தும் ஒறுப்பை அனைவராலும் அளிக்கவியலாது. அத்தகைய அரிய பெரிய ஒறுப்புதான் யாதோ?

துன்பம் செய்தவர் நானும்படியாக-வெட்கித் தலை குனியும்படியாகத் தரும் ஒறுப்புதான் வள்ளுவரின் பரிந்துரை. ஏச்சுப் பேச்சினால் நாணுவார்களா? அடி உதை கொடுப்பதால் தலை குனிவார்களா? அவர்கட்கு அழிவு செய்வதனால் நாணித் தலை வணங்குவார்களா? மாட்டார்கள். நாணித் தலை குனிவதற்கு மாறாகத் திரும்பவும் தீமை செய்வார்கள் - தீமையிலும் பெரிய தீமைகளைச் செய்வார்கள் - சினம் பொங்கி மேலும் அழிவு வேலை செய்வார்கள். எனவே, அவர்களைத் தலை குனியுமாறு செய்வதற்கு உரிய வழியும் வள்ளுவனார் சொல்லிக் கொடுத்துள்ளார்.

தீமை செய்தவர்க்குத் தரவேண்டிய ஒறுப்பாவது, அவருக்கு நன் முறையில் - நயமான முறையில் நன்மை செய்தலே யாகும் - என்பதுதான் வள்ளுவரின் கண்டு பிடிப்பு. இதை அறிவிக்கும் குறட்பா,

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்” (314)

வள்ளுவர் இந்த உலகத்தில் இருந்து கொண்டுதான் இவ்வாறு கூறியுள்ளாரா? தீங்குக்குத் தீங்கே புரியும் மக்கள் மந்தையின் நடுவில் இருந்து கொண்டுதான் இவ்வாறு கூறியுள்ளாரா? வள்ளுவர் இவ்வாறு பரிந்துரைத்துப் பல நூற்றாண்டு காலம் ஆகியும், மக்கள் இந்த வழியைப் பின்பற்ற வில்லையே - ஏச்சுக்கு ஏச்சு - பேச்சுக்குப் பேச்சு - அடிக்கு அடி - உதைக்கு உதை - அழிவுக்கு அழிவு - என்பனவே இன்றும் நடைமுறையில் உள்ளனவே. ஆம் - இன்றும் மக்களின் நடைமுறை இவ்வாறு இருப்பதால் தான், இந்தக் குறள் பாடலுக்கு இன்னும் பெருமை இருந்து கொண்டுள்ளது போலும்!

வள்ளுவனார் ‘இன்னா செய்யாமை’ என்னும் ஒரு தலைப்பு இட்டுப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். பதிலுக்குத் துன்பம் செய்தால், நாம் தப்ப முடியாதபடி மேலும் துன்பமே பரிசாகக் கிடைக்கும். முற்பகலில் ஒருவர்க்குத் தீமை செய்யின், பிற்பகலிலேயே அந்தத்தீமை கொடிய வடிவெடுத்துத் திரும்ப நம்மை வந்தடையும். பதிலுக்குத் துன்பம் செய்யா திருத்தலே, தூய உள்ளத்தினரின் கோட்பாடாகும் - என்றெல்லாம் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார்.

“செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்” (313)
  
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்” (319)

“கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்” (312)

என்பன குறள்கள்.

திருவள்ளுவர் சான்றாண்மை என்னும் தலைப்பில் இது போன்ற ஒரு கருத்து வழங்கியுள்ளார். தமக்குத் துன்பம் செய்தவர்க்கும் இன்பமே - இனிமையே செய்யாவிடின், எவரும் சான்றோர் எனப் படுதற்குத் தகுதியாகார் என்பது கருத்து.

“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு” (987)

என்பது குறள், இன்னும் மேலே சென்றுள்ளார் பொய்யா மொழியார். ‘பண்புடைமை’ என்னும் தலைப்பில் அவர் கூறியுள்ள கருத்துகள் இரண்டினைக் காண்பாம். விளையாட்டாகவும் பிறரை இகழ்ந்து பேசுதல் துன்பத்திற்கு இடமாகும். பிறர் படும் துன்பத்தை உணர்ந்து இரங்குவோர் பகைவர்க்கும் உயர்ந்த பண்பான நற்செயல்களையே புரிவர். தம்மொடு நட்பு கொள்ளாமல் தமக்குத் தீமை செய்தவர்க்கும் நற்பண்புடன் நன்மை செய்யாதவர்கள் மிகவும் கடைப்பட்டவராவர். அதாவது - தாழ்ந்தவராகக் கருதப்படுவர் - என்பன தெய்வப் புலவரின் கருத்துகள்!

“நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி; பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு” (955)

“நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை” (998)

என்பன குறள் பாடல்கள்.

ஈண்டு ‘கருத்து ஒப்புமை காண்டல்’ என்னும் முறையில் ஏசு பெருமானின் கருத்து ஒன்றைக் காண்போமே. “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பதுதான் அந்தக் கருத்து. இதன் உட்பொருள் என்ன? ஒருவர் நமக்குத் துன்பம் செய்யின், பதிலுக்கு அவருக்குத் துன்பம் செய்யக்கூடாது என்பதாகும். ‘மறு கன்னத்தைக் காட்டு’ என்பது பொருள் பொதிந்த தொடர் - அதாவது - அவர் உன்னை அடித்ததாகவே கருதாதே - அவர் உன்னை அடிப்பதில் இன்பம் காண்கின்றார் என்றால், அவருக்கு இன்னொரு கன்னத்தை வேண்டுமானாலும் காட்டு - அடித்து அவா அடங்கட்டும் - ஆசை தீரட்டும். என்பது இதன் உட்பொருள் எனலாம்.

வள்ளுவப் பெருந்தகையும் ஏசு பிரானும் கூறியுள்ள ஒத்த கருத்தில் ஒருவகைச் சிக்கல் எழலாம். அஃது என்ன? தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யின், மேலும் தீமை செய்வார் என அஞ்சி நன்மை செய்து அடி பணிகிறான் - இவன் ஒரு கோழை என்று தீமை செய்தவரோ பிறரோ கருதலாம். கருதிவிட்டுப் போகட்டுமே! தம்மால் எதிர்க்க முடியாதவரிடத்தில் அடங்கிப் போவது நன்மைதானே! மற்றும், தம்மால் எதிர்க்க முடிந்தவரிடத்தும் அதாவது தம்மினும் வலிமை யற்றவரிடத்தும் அடங்கி ஒழுகின், எவ்வளவோ பெரியவர் தம்மினும் தாழ்ந்தவரிடத்தும் அடங்கி ஒழுகுகிறாரே - எவ்வளவு பண்புடைமை! என்று உலகம் போற்றும். இங்கே, ‘சான்றாண்மை’ என்னும் தலைப்பில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகள் நுணுகி நோக்கி மகிழ்தற்கு உரியன. அவை வருக. வல்லார்க்கு வலிமை எனப்படுவது பணிவுதான்; அப்பணிவு, சான்றோர் தம் பகைவரைத் திருத்த உதவும் படைக்கல மாகும். ஒருவரது சால்புடைமையை அறிவதற்கு ‘உரைகல்’ எது எனில், தமக்கு நிகர் அல்லாதவரிடத்தும் தோல்வியை ஒத்துக்கொள்ளும் அடக்கம்தான். இவை வள்ளுவரின் கருத்துகள்.

“ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை” (985)

“சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்” (986)

இந்த அறிவுரையை இடத்திற்கு ஏற்றாற்போல் செயல்படுத்தல் வேண்டும். மிகவும் கொடிய முரடன் ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனிடம் மறு கன்னத்தைக் காட்டின், அவன் காட்டுபவனை நோக்கி, ‘என்னடா, விடைக்கிறாயா’ என்று சொல்லிச் சினங் கொண்டு, மற்றொரு கன்னத்தையும் ‘பொளி பொளி’ என்று பொளிந்து தள்ளிப் பொத்தலாக்கி விடுவான். எனவே, பிறர்க்குப் பணிதல் என்னும் படைக் கலத்தையும் எண்ணிப் பார்த்துப் பயன் படுத்தல் வேண்டும்.

இந்தக் கருத்துகளை யெல்லாம் உள்ளத்தில் வைத்துக் கொண்டு உலகியலுக்கு வருவோமாயின், சில எடுத்துக்காட்டு கிடைப்பதும் மிகவும் அரிதாகும். ஏசுபிரான் தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் பொறுத்தருளும் படிக் கடவுளை வேண்டினார். கவுதமப் புத்தர், தம்மைத் தாழ்த்தியோரைப் பதிலுக்குத் தாழ்த்தத் தம்மாணாக்கர்கள் முயன்றபோது, அவ்வாறு செய்தல் தகாது என்று தடுத்துவிட்டார். திருக்கோவலூரை ஆண்ட மெய்ப்பொருள் நாயனார், தம்மைக் கத்தியால் குத்திய முத்தநாதன் என்பவனைப் பாதுகாப்பாக ஊர் கடக்கக் கொண்டுபோய் விடும்படித் தம் ஏவலர்க்குக் கட்டளையிட்டது பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு வரலாறு. இவ்வாறு சிலவே காண்பிக்க முடியும்.

இன்றைய உலகிற்கு வருவோமாயின், புனைந்து எழுதுகிற கதைகளிலும் காப்பியங்களிலும் நாடகங்களிலும் வேண்டுமானால் இவ்வாறு சில எடுத்துக்காட்டுகளைக் காணலாமே தவிர, மக்கள் மந்தைக்கு நடுவே நடை முறையில் காணுதல் அரிது.

வள்ளுவர் கூறியுள்ளபடி, இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்யாததனால்தான் அந்தக் குறளுக்குப் பெரிய மதிப்பு இருக்கிறது. இனி அந்தக் குறளுக்கு வேலையில்லாத படி - தேவையில்லாதவாறு மக்கள் நடைமுறையில் இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றும் காலம் எக்காலமோ-அக்காலம் நற்காலமாகும் - பொற்காலமுமாகும்.