உள்ளடக்கத்துக்குச் செல்

இயல் தமிழ் இன்பம்/தமிழன் கண்ட கல்விமுறை

விக்கிமூலம் இலிருந்து

16. தமிழன் கண்ட கல்வி முறை

இக்காலக் கல்வி முன்னேற்றம்

இன்று, மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல் முதலிய துறைகள் வளர்ச்சி பெற்றிருப்பதைப் போலவே கற்பிக்கும் (போதனா) முறையும் வளர்ச்சி பெற்றுள்ளது. புதிய புதிய முறைகள் பல தோன்றியுள்ளன. விளையாட்டு முறை, கிண்டர் கார்டன் முறை, மாண்டிசோரி முறை, தன்னோக்க முறை. தனிப் பயிற்சி முறை, ஆதாரக் கல்வி முறை என்றெல்லாம் அவைகட்குப் பெயரும் சூட்டியுள்ளனர். குழந்தைகளின் இன்னல்கள், உளவியல்பு முதலியவற்றை அறியாமல், குழந்தைகட்குப் புரிகிறதோ புரியவில்லையோ, அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, எப்படியேனும் திணிக்க வேண்டும் என்ற முறையில் அக்காலக் கற்பிக்கும் முறை அமைந்திருந்ததாம். அதை மாற்றி மேற்கண்ட முறைகள் வாயிலாக மாணவர் உள்ளத்திற்கேற்ப அவர்களே விரும்பிக் கற்கும் முறையில் கல்வியில் முன்னேற்றம் கண்டிருப்பதாக இக்காலத்தவர் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இவ்வளர்ச்சியை நோக்க, அக்காலக் கல்வி முறை பின்தங்கிய நிலையிலா - அல்லது வளர்ச்சி பெற்ற நிலையிலா - அல்லது வேறு எந்த நில்ையில் இருந்தது என்பதைக் காண்போம்.

அக்காலக் கல்வி முறை

அக்காலத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவதே பெரிய விழாவாக அவரவர்களின் குடும்ப நிலைக்குத் தக்கபடி கொண்டாடப்பட்டது. அந்த எழுத்தறிவிக்கும் விழாவை (அட்சராப்பியாசத்தை) இன்று எங்கே காண முடிகிறது? மேய்ப்பவனிடம் ஆடு மாடுகளை ஓட்டி விடுவதைப் போல வல்லவா இன்றைய பள்ளிப் பயிற்சி அமைந்து விட்டது? அன்றைய மாணவர்கட்கு இப்பொழுதிருக்கும் உரிமையும் கிடையாது - சோம்பலும் கிடையாது. மாணவர்கள் வைகறையிலேயே பள்ளிக்குச் சென்றுவிட வேண்டும். முதலில் வந்தவனுக்கு ஓரடி; இரண்டாவது வந்தவனுக்கு இரண்டடி. இப்படி அடிகளின் எண்ணிக்கை ஏறும். இதற்குப் ‘படியடி’ என்று பெயராம். இந்த அடி உடல் வருத்தும் அடியன்று; காலந் தவறாமையைக் கற்பிக்கும் மெல்லிய இனிய அடி. நண்பகல் உணவிற்கே மாணவர்கள் வீடு செல்ல அனுப்பப்பட்டனர். மற்ற நேரம் ஆசிரியர் வீட்டில்தான். ‘குருகுல’ முறையில் ஆசிரியருடனேயே உண்டு உறைந்து கற்றதும் உண்டு. ஆனால், இத்தகு குரு குலங்களில், இக்கால மாணவர் விடுதிகளில் காணப்படும் ‘சிகரெட்’ புகை மண்டலத்தைக் கண்டிருக்கமுடியாது.

அன்றைய ஆசிரியர் ஒவ்வொருவரும் பல்கலை வல்லுநராக இருந்தனர்; கணிதம், வானியல், சோதிடம், இலக்கியம், இலக்கணம், முதலியவற்றில் புலமை பெற்றிருந்தனர். இன்றைய ஆசிரியர்களைப்போல் அடிப்படைக் கல்வியைப் பொதுப்படையாகக் கற்றவர்கள் அல்லர். மணிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை அன்று இருக்கவில்லை. மளிகைக் கடையில் வேலை பார்ப்பவர்கள், வாங்க வருபவர்கட்குப் பொருள் கொடுக்கின்றனர். அதற்காகக் கடை முதலாளி அவர்கட்குச் சம்பளம் கொடுக்கின்றார். இந்த மளிகைக் கடைக்கும் பள்ளிக்கூடங்கட்கும் என்ன வேறுபாடு இருக்கப் போகின்றது? அக்கால முறை இதைப் போன்ற தன்று. மாணவர்களைப்பற்றிய எல்லாவற்றிற்கும் ஆசிரியரே பொறுப்பாளி. அவர்களின் வாழ்வு, தாழ்வு எல்லாவற்றிற்குமே ஆசிரியர் நேரடிப் பொறுப்பாளியாவார். மாணவர்களும் அவர்களுக்கு வேண்டிய தானியம் காய்கறிகள் (எண்ணெய், எருமுட்டை முதற்கொண்டு) அனைத்தையும் கொடுத்துதவினர்.

பள்ளிக்கூடம், திண்ணை, மரத்தடி முதலிய விடங்களில் நடத்தப்பட்டது. இப்பொழுது பள்ளியின் அமைப்பு, இப்படி இப்படி இருக்க வேண்டும்; அப்படி இருந்தால்தான் தொடங்குவதற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வரையறையும் கண்டிப்பும் அக்காலத்தில் இல்லை. இந்த வறட்டு முறையில் நம் ஏழை நாடு பின் தங்கியதால் மீண்டும் மரத்தடிக்கே வரத் தொடங்கிவிட்டது. தமிழன் முறையில் இயங்கும் தாகூரின் “விசுவ பாரதி” தலை நிமிர்ந்து நிற்கின்றது.

எழுத்தறிவித்தவன் இறைவன்

மற்றும், இக்காலத்தில் மாணவரிடம் வலிந்து புகுத்த வேண்டிய நிலையில் உள்ள சில நல்ல முறைகள் அக்காலத்தில் இயற்கையாகவே அமைந்திருந்தன. எடுத்துக் காட்டாக, இக்காலத்தில் பிள்ளைகள் நாட்டுக்கேற்ற குடிமக்களாக விளங்க வேண்டும் என்பதற்காகக் குடிமைப் பயிற்சியைப் (Citizenship) பாடமாக்கியுள்ளனர். பெண்கட்குச் சமையற்கலையைக் கூடப் பாடமாக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. பாடங்கள் வாயிலாக இவற்றைப் புகுத்த வேண்டிய (injection) நிலை அன்று ஏற்படவில்லை. பழக்க வழக்கங்களிலும் உடையிலும் நாட்டுக்கு அயலார்போல் வீட்டுக்கும் அயலாராய் இன்றைய படித்த இளைஞர்கள் இருப்பதுபோல் அன்று இருந்ததில்லை. “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்று போற்றிய காலம் அக்காலம். ஆசிரியரைப் பழிப்பதையும் எதிர்ப்பதையும் நாகரிகமாகக் கருதுவதே இக்காலக் கல்வி முன்னேற்றமாகும். கல்லூரி வேலை நிறுத்தம் அதாவது படிப்பு நிறுத்தம் அடிக்கடி நடைபெறுவதற்குக் காரணம் ஆசிரியனை இறைவனாகக் கருதும் மனப்பான்மை இல்லாததே யாகும்.

“நுணங்கு நூல் ஓதுதல் கேட்டல் மாணாக்கர்
வணங்கி வலங் கொண்டு வந்து”.

என்ற சிறு பஞ்ச மூலக் கருத்திற்கிணங்க மனப்பான்மை வளர்ந்தால் இந்த நிலை மாறும்.

அன்று திருமணம் முதலிய நல்ல நிகழ்ச்சிகளில் ஆசிரியர்க்கே முதலிடம் கிடைக்கும். இன்று அரசியல் தலைவர்கட்கும் உயர்தர அதிகாரிகட்குமே முதலிடம் கிடைக்கின்றது. அரசியலுக்கும் புதவிக்கும் கிடைக்குமிடம் இனியேனும் கல்விக்குக் கிடைக்குமென நம்பமுடியுமா?

கணிதச் சிறப்பு

இப்படியாகப் பழங்காலக் கல்வி முறையில் பல நல்ல நடைமுறைகள் இருந்ததல்லாமல், பாடத் திட்டத்திலும் சில சிறந்த பகுதிகள் இருந்தன, அவற்றுள் தலை சிறந்ததாகத் தமிழ்க் கணக்கைக் கூறலாம். தமிழில் என்ன இருக்கிறதென்று கேட்பவர்கள்கூட, தமிழ்க் கணிதத்தைச் சிறப்பித்துப் புகழ்கின்றனர். செய்யுள் நடைமுறையில் உள்ள “கணக்கதிகாரம்” என்னும் தமிழ்க் கணித நூல் இன்றும் வாழ்கிறது. நம் தமிழ்க்கணக்கில் ‘பின்ன’ வாய்ப்பாடு கூட உண்டு. இப்பொழுது சிலர் தாளில் போட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் சில பின்னக் கணக்குகளை, அப்போது பின்ன வாய்ப்பாட்டின் துணை கொண்டு மனக்கணக்காகவே போட்டு விடுவார்களாம்.

தமிழ்க் கணிதத்தில் சிறு சிறு பின்னங்களுக்குக்கூடத் தனித்தனிப் பெயர்கள் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாகச் சில நோக்கலாம்:

– முந்திரி – முக்காணி
– அரைக்காணி – ஒருமா
– காணி – இருமா
– அரைமா – மும்மா

இப்படியே இன்னும் பல உண்டு. இவற்றையெல்லாம், கொறுக்கையூர் காரி நாயனார் இயற்றிய கணக்கதிகாரம் என்னும் நூலில் உள்ள,

இம்மிதான் சரைத் தரையெனவே வைத்திதனைச்
செம்மைதரும் கீழ்முந் திரிசெய்து - பின்னவை
மூன்றுபடி பத்திரட்டி முந்திரியே ஒன்றென்றார்
ஆன்ற அறிவி னவர்.
முந்திரி அரைக்காணி முன்னிரண்டு பின்னிரண்டாய்
வந்ததோர் காணிநான் மாவாக்கி - ஒன்றொடு
நாலாக்கிக் காலாக்கி நன்னுதலாய் காலதனை
நாலாக்கி ஒன்றாக நாட்டு.

என்னும் பாக்களானும் பிறவற்றானும் அறியலாம். 

அகராதிக் கலை

அடுத்து மற்றொரு கல்வித்திட்டத்தை இங்கே குறிப்பிடாமல் விடமுடியாது. அதாவது, இந்தக் காலத்தில் ‘லெக்சிகோகிராபி’ (Lexicography) என்று சொல்லப்படும் சொற்பொருள் விளக்கம் கூறும் அகராதி (Dictionary) கலை அந்தக் காலத்தில் விரிவான முறையில் கையாளப்பட்டு வந்தது. இன்று அகராதி தேவைப்படுகிறது. சிலருக்கோ அகராதியைப் பயன்படுத்தும் விதமே தெரியாது. மெத்தப் படித்தவர்களும் இன்று அடிக்கடி அகராதியின் உதவியை நாடவேண்டிய நிலையில் உள்ளனர். அன்று, கற்றவர்களோ அகராதிப் பொருள் முழுவதையும் மனத்தில் அமைத்து வைத்திருந்தனர். அந்தக் காலத்து அகராதி நூலுக்கு ‘உரிச்சொல்’அல்லது நிகண்டு என்பது பெயர். நிகண்டு. செய்யுள் நடையில் இருக்கும். அதனால் மனப்பாடம் செய்வதற்கு மிக எளிது. ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களும் (அர்த்தங்களும்) செய்யுளாகவே சொல்லப்பட்டிருக்கும்; ஒரே பொருளுக்குரிய பல பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, கடலுக்கு எத்தனை பெயர்கள் உண்டோ - காட்டிற்கு எத்தனை பெயர்கள் உண்டோ - அத்தனை பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த - நிகண்டுச் செய்யுட்களை மனப்பாடம் செய்து வைத்திருப்பவர்கள், புதுப்புதுச் சொற்களையமைத்துப் பாடல்கள் படைக்கலாம்; பிறர் இயற்றியுள்ள பாடல்களுக்கும் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே பொருள் புரிந்து கொள்ளலாம். இன்றுபோல் அகராதி மூட்டையைச் சுமக்கவேண்டியதில்லை. எத்துணை நன்மை!

இப்படி உதவும் எண்ணற்ற நிகண்டு நூல்கள் தமிழில் உண்டு - இன்றும் உள்ளன. இப்போது ஆங்கிலத்தில் ‘ஆக்சுஃபோர்டு’ டிக்ழ்சனரி (Oxford Dictionary) - அந்த டிக்ழ்சனரி-இந்த டிக்ழ்சனரி என்று தம்பட்டம் அடித்துத் திரியும் பலருக்குத் தமிழ் நிகண்டு நூல்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இன்னும் சொல்லப்போனால் நிகண்டு எனறால் பணத்துக்கு எத்தனை படி என்று கேட்பவர்களும் இன்று இருக்கக்கூடும். ஆனால் அந்தக் காலக் கல்வி முறையில் நிகண்டு என்னும் இந்த அரிய கலைச் செல்வம் நடைமுறையில் இருந்தது.

அடுத்தபடியாக, வாழ்க்கைக்குப் பயன்படும் பல அறிவு ரைகளைக்கூறும் ‘சதகம்’ என்னும் ஒருவகை நூலும், இன்ன பிற சிற்றிலக்கியங்களும் பின்னர்ப் படிப் படியாகப் பேரிலக்கிய-இலக்கண நூற்களும் கற்பிக்கப்பட்டன. உரைநடை (வசன) நூல்கள் இல்லாமல் செய்யுள் நூல்களே இருந்த அக்காலத்தில்-எல்லாக் கலையும் செய்யுள் வாயிலாகவே கற்ற அக்காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு நிகண்டு, சதகம் முதலிய நூல்களைக் கற்பது மிகவும் எளிதாக இருந்தது. ‘கோழி முட்டையிடும்; முட்டை வெள்ளையாக இருக்கும். பசு பால் கொடுக்கும்; பால் வெள்ளையாக இருக்கும்’ என்பன போன்றவற்றைப் படிப்பு என்னும் பெயரில் இன்று படிப்பவர்க்கு நிகண்டு முதலிய நூல்கள் சிம்ம சொர்ப்பன’ மாகத்தான் இருக்கும். பழைய முறைக் கல்வி கற்ற நம் பாட்டனார்கள், ‘பால் வெள்ளையாய் இருக்கும்’ என்பது ஒரு படிப்பா என்று சொல்லிச் சிரிப்பதை நாம் வெட்கப்படாமல் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

புறவினைச் செயல்கள்

மற்றும், ஆசிரியர் மாணவர்களைக் கோயிலுக்கும், திருவிழாவிற்கும் அழைத்துச் செல்லுதல், விழா நாட்களிலும் கொண்டாட்ட நாட்களிலும் கோலாட்டம், பாட்டு, நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தச் செய்தல், வேலை செய்வித்தல், முதலிய உற்சாகமான செயல்கள் அக்காலத்தில் பின்பற்றப் பட்டு வந்தன. இவை போன்றவற்றை இக்காலத்தினர் ‘புறவினைச் செயல்கள்’ (Extra curricular Activities) என்று ஆடம்பரமாக (படாடோபமாக) அழைக்கின்றனர். இப்படி இன்னும் பல சிறப்புக்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே, வாழ்க்கைக்குப் பயனளிக்கும் கலையறிவு, நூலறிவு, நல்ல உழைப்பு, நல்ல பழக்கவழக்கங்கள் எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை முதலியவற்றையே அக்காலக் கல்வி புகட்டியது. இன்றைய ஐரோப்பியக் கல்வி, ஆடம்பர வாழ்க்கை, பெரிய மேதை போன்ற செருக்கு மனப்பான்மை, கையூட்டு, உடலுழைப்பில் வெறுப்பு இவற்றைத் தானே உண்டாக்கியுள்ளது? ஆசிரியர் மாணவர் பிணைப்பும் மளிகைக்கடைத்துறை போல் ஆகிவிட்டதல்லவா? இப்பொழுது எளிய வாழ்க்கை, சமூகத்தொண்டு, குடிமைப் பயிற்சி, முதலியவற்றின் வாயிலாகப் பழைய நிலைமைக்குக் கல்வித் தரத்தைக் கொண்டுவர வேண்டும் என்று.. கரடியாகக் கத்துகின்றனர். அன்று தமிழன் கண்ட கல்வியின் தரம் தாழ்ந்து விடவில்லையே!

குறையும் நிறையும்

ஒரு குறைபாட்டை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இன்றுள்ள குழந்தை உள நூலும் (Child Psychology) கல்வி உளநூலும் (Educational Psychology)அன்று எந்த நாட்டிலும் தோன்றியிருக்கவில்லை. அதனால் சிலகுறைபாடுகள் பயிற்றலில் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டு வந்தாலும் “கொள்வோன் கொள்வகையறிந்து அவன் உளங்கொள” நூல் சொல்லிக் கொடுக்கப்பட்டது என்பதற்கு, பதின் மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நன்னூல் பாயிரம் சான்றாக நிற்கின்றது. அது வருமாறு:

“ஈதல் இயல்பே இயம்புங்காலைக்
காலமும் இடமும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி யிருந்து தன்தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்
கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப”

இது, பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழன்கண்ட கல்வி முறையாகும். இந்த நன்னூல் பாயிரப்பாடலின் பொருள் அறிந்தவர்கள், இந்த நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியாயிருக்கும் பயிற்றுமுறை, ஏற்கனவே நம் நூல்களில் சிறந்த முறையில் பேசப்பட்டுள்ளது என்பதை நன்கு உணர்ந்து தெளிவு பெறுவர். இப்படியாக இன்னும் எத்தனையோ சிறந்த கல்விக்கொள்கைகள் பழந் தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ளன.