இயல் தமிழ் இன்பம்/ஆசிரிய இராமாயணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

15. ஆசிரிய இராமாயணம்

கண் வழிக் கள்வன்

மிதிலையில் அரச மாளிகையின் மாடியின் நின்றிருந்த சீதையும் தெருவில் சென்ற இராமனும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர்; ஒருவரிடம் ஒருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தனர். அன்றிரவு சீதை இராமனது உருவை எண்ணிக் காதலால் புலம்புகின்றாள்.

“தெருவில் சென்ற அவன் என் கண்ணின் வழியாக என்னுள் புகுந்து என் பெண்மையையும் நாணையும் திருடிக் கொண்டான். இவன் ஒரு புது வகைக் கள்வனாவான்” என்று கூறி வருந்தினாள்.

மேலும் தன்னை வருத்தும் திங்கன்ள நோக்கி, இருள் என்னும் பெயருடன் வந்து உலகை விழுங்கி எனை வருத்தும் கரு நெருப்பினிடையே தோன்றி யெழுந்த வெள்ளை நெருப்பாகிய திங்களே! அவருடைய (இராமருடைய) கருநிறத்திற்குத் தோற்று அலறிக் கொண்டிருக்கும் கடலை நீ தோன்றி அலைமோதச் செய்து வருத்துகிறாய்; என்னையும் வருத்துகிறாய்; ஆனால், திங்களே! நீ கொடியை அல்லை. நீ அமிழ்தத்துடன் தோன்றியதால் யாரையும் கொல்லமாட்டாய், மற்றும், திருமகளோடு கடலில் தோன்றியதால் என்னைச் சுடுவாயா? சுடாதே - என்கிறாள். பாடல்கள்:

மிதிலைக் காட்சிப் படலம்

“பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும்
என்வழி உணர்வும் எங்கும் காண்கிலேன்
மண்வழி நடந்து அடிவருந்தப் போனவன்
கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம்” (55)


“கொடியை அல்லை நீ யாரையும் கொல்கிலாய்
வடு இல் இன் அமுதத்தோடும் வந்தனை
பிடியின் மென்னடைப் பெண்ணோடு என்றால் எனைச்
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே” (77)

சீதையின் நிலை இஃதாக, இரவு முழுதும் சீதையை எண்ணி வருந்திக் கொண்டிருந்த இராமன், மறுநாள் வில்லை நாண் ஏற்றி முறித்துச் சீதையை மணக்கத் தகுதி பெற்றவனானான்.

ஆவலைத் தூண்டுதல்

சீதையால் காதலிக்கப் பெற்ற இராமன் வில்லை நாணேற்றி ஒடித்த நற்செய்தியைத் தெரிவிக்க நீல மாலை என்னும் தோழி சீதைபால் ஓடினாள்; சீதையை வணங்கினாள்; மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடினாள். இதைக் கண்ட சீதை, அவளை நோக்கி, உன் மகிழ்ச்சிக்குக் காரணமான செய்தியை விரைவில் சொல் என்று வினவினாள். நீலமாலை சொல்லத் தொடங்கினாள்:

நால்வகைப் படையைக் கடல்போல் மிகுதியாக உடையவன்; கல்வியில் சிறந்தவன்; தயரதன் என்னும் பெயரினன்; முகில்போல் வழங்கும் கையன். அவனுடைய மகன் மன்மதனினும் சிறந்த அழகுடையவன். பாடல்:

“கயரத துரகமாக் கடலன் கல்வியன்
தயரதன் எனும் பெயர்த் தனிச்செல் நேமியான்
புயல்பொழி தடக்கையான் புதல்வன் பூங்கணை
மயல்விளை மதனற்கும் வடிவு மேன்மையான்” (58)

‘இராமன் வில்லை முறித்தான்’ என மூன்று சொற்களால் செய்தியைத் தெரிவித்திட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், நீலமாலை சீதையின் ஆவலைத் தூண்டி மேலும் வளர்த்துகிறாள்:

மராமரம் போன்ற திண்ணிய தோளினன்; அரவணைத் திருமாலோ என ஐயுறும் ஆற்றலன்; இராமன் என்பது அவன் பெயர். அவன் தம்பியொடும் முனிவரொடும் மிதிலைக்கு வந்தான்:

“மராமரம் இவையென வளர்ந்த தோளினன்
அராஅணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான்
இராமன் என்பது பெயர் இளைய கோவொடும்
பராவரு முனியொடும் பதி வந்து எய்தினான்” (59)

ஓர் ஆண்மகன் மற்றோர் இளைஞனுடனும் முனிவர் ஒருவருடனும் ஊருக்குள் வந்தான் என்று சொல்வதன் வாயிலாக, சீதை தெருவில் கண்ட காட்சியை நினைவுறுத்தி மேலும் ஆவலைத் தூண்டுகிறாள்: சிவனிடமிருந்து வந்த அந்த வில்லைக் காணவந்தவன் நாணேற்றினான். விண்ணுலகமே அதிர்ந்தது!

“பூணியல் மொய்ம்பினன் புனிதன் எய்தவில்
காணிய வந்தனன் என்ன, காவலன்
ஆணையின் அடைந்தவில் அதனை ஆண்தகை
நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே” (60)

வில்லை நாண் ஏற்றினான் என்றால் போதுமா? அதனை வளைத்து முறித்தானா என்பது தெரியவேண்டுமே! மேலும் கூறுகிறாள்: ஒரு நொடி நேரத்தில் வில்லை எடுத்தான்; இதற்கு முன்பே எடுத்துப் பழகிய ஒரு பொறிபோல நாணேற்றி வளைத்து முறித்தான்:

“மாத்திரை அளவில் தான் எடுத்து முன்பயில்
சூத்திரம் இதுஎனத் தோளின் வாங்கினான்
ஏத்தினர் இமையவர்; இழிந்த பூமழை
வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே” (61)

தேவர்கள் பூமாரி பொழிந்தனராம். வில் இற்ற ஒலி கேட்டு அவையே நடுங்கிற்றாம். ஒரு தொடரில் சொல்ல வேண்டிய செய்தியை, சீதையின் ஆவலைத் தூண்டும் முறையில் பல தொடர்களில் கூறியதாக அமைத்துள்ள சுவையான இந்தப் பகுதி ஒரு கம்ப சூத்திரமோ!

ஆசிரிய இராமாயணம்

சீதையின் ஆவலைத் தோழி தூண்டும் இந்தப் பகுதி வால்மீகி இராமாயணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இது கம்பரின் சுவையான சொந்தப் படைப்பாகவே தோன்றுகிறது. கம்ப இராமாயணம் விருத்தப்பாவால் ஆனது. “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்” எனக் கம்பர் சிறப்பிக்கப் பெற்றுள்ளார்.

தமிழில் ஆசிரியப்பாவால் ஆன இராம காதை (இராமாயணம்) ஒன்று இருப்பதாகத் தெரிகிறது. தொல் காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியலில் உள்ள

“மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர் சொளப் பெறாஅர் (54)

என்னும் நூற்பாவின் உரையில், சுட்டி ஒருவர் பெயர் கொண்ட கைக்கிளைக்கு எடுத்துக்காட்டாக, நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர் ஆசிரிய இராமாயணப் பாடல் ஒன்றைத் தந்துள்ளார். அதன் கருத்தாவது:

விசுவாமித்திர முனிவர் காட்டில் தமது வேள்வியைக் காப்பாற்றிய இராமனோடு மிதிலைக்குச் சென்றிருந்த போது இராமன் சனகனது வில்லை நாணேற்றி முறித்தான். முதலிலேயே இராமனைக் கண்டு அவனிடம் தன் உள்ளத்தைச் செலுத்திய சீதை, மிக்க விசையுடன் நாணேற்றி வில்லை ஒடித்த இடி போன்ற ஒலியைக் கேட்டு, இடியே றுண்ட பாம்புபோல் வாட்டம் எய்திப் படுக்கையிலிருந்து எழுந்து, வில்லை ஒடித்தவர் நாம் முன்பு கண்ட இளைஞராக (இராமனாக) இருப்பாரோ-அல்லது வேறு யாராகவாவது இருப்பாரோ என்று மயங்கினாள் பாடல்

“ஆள்வினை முடித்த அருந்தவ முனிவன்
வேள்வி போற்றிய இராம னவனொடு
மிதிலை மூதூர் எய்திய ஞான்றை
மதியுடம் பட்ட மலர்க்கண் சீதை
கடுவிசை வில்ஞாண் இடியொலி கேளாக்
கேட்ட பாம்பின் வாட்டம் எய்தித்
துயிலெழுந்து மயங்கினள் அதா அன்று மயிலென
மகிழ்...”

என்பது பாடல் பகுதி. இப்பாடல், புறத்திரட்டு என்னும் தொகை நூலில் சேர்த்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலும் முழுமையாகத் தரப்படவில்லை. நீல மாலை என்னும் தோழி சீதையின் ஆவலைத் தூண்டிப் பின்னர் இராமன் வில் ஒடித்த செய்தியைச் சீதைக்குத் தெரிவித்ததாகக் கம்பர் பாடியுள்ளார். இந்த ஆசிரியப் பாடலோ, வில் ஒடித்த ஒலியைச் சீதை தானே கேட்டதாகத் தெரிவிக்கிறது. இவ்வாறு சிறுசிறு வேற்றுமையுடன் பல்வேறு இராம காதைகள் இருக்கும் போலும்.

இந்த ஆசிரியப்பா இராமாயணத்தை மு. இராகவையங்கார் ‘பழைய இராமாயணம்’ எனக் குறிப்பிட்டு உள்ளார். இந்த ஆசிரியப்பாவை நோக்கக் கம்பரின் நன்கொடை மிகவும் சுவையானதன்றோ!

இப்படி ஆசிரியப்பாவால் ஆன ஓர் இராமாயணம் உண்டு என்பதற்கு வலுவூட்ட மற்றும் ஓர் ஆசிரியப்பா இராமயணப் பாடலைக் காண்பாம்!

தொல்காப்பியம் - புறத் திணையியலில் உள்ள

“கட்டில் நீத்த பாலினானும்” (76.16)

என்னும் பகுதிக்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரையில் பரதனைப் பற்றிய செய்தி வருகிறது. அதாவது?

“கட்டில் நீத்த பாலினானும் = அரசன் அரச உரிமையைக் கைவிட்ட பகுதியானும். அது பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி.

(உ-ம்)

“கடலும் மலையும் நேர்படக் கிடந்த
மண்ணக வளாகம் நுண்வெயில் துகளினும்
நொய்தா லம்ம தானே இஃதெவன்
குறித்தன னெடியோன் கொல்லே மெய்தவ
வாங்குசிலை இராமன் தம்பி யாங்கவன்
அடிபொறை யாற்றி னல்லது
முடிபொறை யாற்றலன் படிபொறை குறித்தே”

இஃது அரசு கட்டில் நீத்த பால்.” என்பது நச்சினார்க்கினியரின் உரைப் பகுதி. இராமனுடைய தம்பியாகிய பரதன், இராமனின் அடிகளைச் (பாதுகைகளைச்) சுமப்பதைத் தவிர, மண்ணுலகைக் காக்கும் சுமை தொடர்பான முடியைத் தலையில் சுமக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டானில்லை - என்பது இப்பாடலின் கருத்து.

இந்தப் பாடல் நேரிசை ஆசிரியப்பா. இப்படியாக, ஆசிரியப்பாவால் ஆன இராமாயணம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது என்ற செய்தி அறியக்கிடக்கிறது.

இந்த ஆசிரியப்பா இராமாயணத்தை மு. இராக வையங்கார் ‘பழைய இராமாயணம்’ எனக் குறிப்பிட்டிருப்பதால், இது கம்ப இராமாயணத்திற்கும் முற்பட்டதாய் இருக்கலாம் போலும்.