இயல் தமிழ் இன்பம்/அமைதிச் சுவை

விக்கிமூலம் இலிருந்து

14. அமைதிச் சுவை

சில காட்சிகளின் நிலை

ஓரிடத்தில் ஒரு சில காட்சிகள் உள்ளன. அவற்றைக் கண்டவன் சொன்ன கருத்துகள் சில வருமாறு:

“யாரும் கொண்டு செல்லக்கூடிய அமைதியற்ற பெண் உள்ளாள்; குழந்தை அலறுகின்றது. விருப்பம் இல்லாத கன்னிப் பெண்ணைக் காளை ஒருவன் காம வெறி பிடித்துத் தொடர்கிறான்; அவன் தொடாதபடி அப்பெண் போராடித் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.

காதால் கேட்கப்படும் இசையை, ஓர் அழகிய இளைஞன் ஒரு மரத்தின் கீழே இருந்து கொண்டு இசைக்கிறான். அவன் இசைப்பாடலைத் தொடர்ந்து எழுப்ப முடியவில்லை; நிறுத்தி விடுகிறான். அம்மரத்தின் இலைகள் உதிர்கின்றன.

துணிவுள்ள ஓர் இளைஞன் தான் விரும்பிய பெண்ணை நெருங்கி முத்தமிடுகிறான். அவள் மறைந்து கொண்டாள்; அதனால் அவளை அவன் மேலும் காதலிக்க முடியவில்லை. பல்லாண்டு கழிந்ததும் அவள் அகவை முதிர்ந்து அழகற்றவளாகிவிட்டாள்.

இன்பம் ஊட்டிய மரக்கிளைகள் இலைகளை உதிர்த்து விட்டன; இளவேனில் காலச் சூழ்நிலைக்கு வழியனுப்பு விழாவும் (பிரிவு உபசாரமும்) நடத்தி விட்டன. இன்னியங்கள் இசைப்பவர்கள் களைப்பினால் இசையை நிறுத்தி விட்டார்கள். அவர்களின் இசை கேட்டுக் கேட்டுப் பழமையாகி விட்டது. காதலர்கள் சிலர், இளமை மாறிவிட்டதால், காதல் சுவையைத் தொடர்ந்து நுகர முடியாதபடித் தெவிட்டல் உண்டாகிவிட்டது.” காட்சிகள் சிலவற்றைக் கண்டவன் மேலே அறிவித்துள்ளவாறு கூறினானா? இல்லவேயில்லை - பின்வருமாறு தான் கூறினான் - என்ன கூறினான்?

“எவராலும் கொண்டு போக வியலாத அமைதியான பெண்ணும், நன்கு பேணி வளர்க்கப்படுகின்ற ஒலி எழுப்பாத குழந்தையும் உள்ளனர்: (Thou still unravished bride of quietness, Thou foster child silence).

விருப்பம் இல்லாத கன்னிப் பெண்ணை ஆண்மகன் காமவெறி பிடித்துத் தொடர்கிறான். அவன் தொடாதபடி அப்பெண் போராடித் தப்பித்துக் கொள்கிறாள். அவளை அவனால் தொட முடியவில்லை. (What mad pursuit? What struggle to escape)

காதால் கேட்க முடியாத இனிய இசை - உள் உணர்வால் உணரக் கூடிய - கற்பனையால் உணரக்கூடிய இனிய இசை. மரத்தின் கீழே இருக்கும் அழகிய இளைஞனே! இசைப் பாடலை நீ என்றுமே நிறுத்த முடியாது; தொடர்ந்து இசைத்துக் கொண்டேயிருப்பாய்! அந்த மரத்தின் இலைகள் என்றுமே உதிரமாட்டா!

(Heard melodies are sweet,
but those unheard
Are Sweeter; therefore,
ye soft pipes play on;
Not to the Sensual ear,
but more endeared,
Pipe to the spirit
ditties of no tone;
Fair youth, beneath the trees,
thou const not leave
Thy song nor ever can
those trees be bare)

துணிவான இளைஞனே! நீ விரும்பும் அந்தப் பெண்ணை அடைய வெற்றி இலக்கை (winning goal) நெருங்கி விட்டது போல் தோன்றினும், நீ அவளை முத்தமிட முடியாது. வருந்தாதே! அவள் மறைந்து கொள்ள மாட்டாள், அவளை நீ என்றும் காதலித்துக் கொண்டேயிருக்கலாம். அவள் இதே நிலையிலேயே இருப்பாள் - கிழவியாக மாட்டாள்; ஆதலின் அவள் அழகும் என்றும் நிலைத்திருக்கும்.

(Bold lover; never,
never canst thou kiss,
Though winning nearth goal—
Yet do not grieve;
She cannot fade,
though thou had not thy bliss,
For ever wilt thou love,
and she be fair!”)

இன்பூட்டும் மரக்கிளைகளே! உங்கள் இலைகள் உதிரமாட்டா! இலை தளிர்க்கும் இளவேனில் காலச் சூழ்நிலைக்கு வழியனுப்பு விழாவே (பிரிவு உபசாரமே) கிடையாது; என்றும் இளவேனிற் காலத்திலேயே நீங்கள் (மரங்கள்) இருக்க முடியும்.

(Ah happy, happy boughs!
that cannot shed
Your leaves, nor ever
bid the spring adieu;

மகிழ்ச்சியூட்டும் இன்னியங்கள் இசைப்பவர்கள் களைப்பின்றி எப்போதும் இசைத்துக் கொண்டேயிருப்பர்; இசை எப்போதும் புது இசையாகவே இருக்கும்.

(And happy melodist, unwearied,
For ever pipping songs for ever new)

எவ்வளவு மகிழ்ச்சியான காதல் - எவ்வளவு மகிழ்ச்சியான காதல்! காதலர்கள் என்றும் இளமையுடன் இருந்து குளிர்ந்த {Warm - வெதுப்பான) காதல் சுவையை நுகர்ந்து கொண்டேயிருப்பர்; துன்பமின்றித் தெவிட்டாமல் காதலிப்பர்.”

(More happy love!
more happy, happy love!
For ever warm
and still to be enjoyed,
For ever panting
and for ever young)

காட்சிகளைக் கண்டவன் இவ்வாறு கூறினான். அவன் இவ்வாறு கூறுவதற்கு ஏற்ப, என்றும் ஒரே மாதிரியாயிருந்த அந்தக் காட்சிகள் யாவை?

ஒரு கிரேக்கப் பாணியில் செய்யப்பட்ட ஒரு சாலின் பெரிய கொள்கலத்தின்) மேலே சுற்றி வரையப்பட்டுள்ள ஓவியங்களைப் பார்த்தே அவன் இவ்வாறு கூறினான். ஓவியத்தில் வரையப்பட்டவை, நிலை மாறாமல் என்றும் ஒரே அமைதி நிலையில் இருக்கும் அல்லவா?

ஒன்யான் சுவைகளுள் அமைதி

நகை (சிரிப்பு), அழுகை, இளிவரல் (இழிவு), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம் (வீரம்), வெகுளி (சினம்), உவகை (காமம்), அமைதி (சாந்தம்) என்பன ஒன்பது சுவைகள் (நவரசங்கள்) ஆகும். அமைதி என்பது, இன்பம் வரினும் துன்பம் வரினும், நிலை மாறாமல் என்றும் ஒரே நிலையில் இருப்பதாகும். இவ்வாறு பொது மக்கள் இருப்பது அரிது. மெய்யுணர்வினர் அருளாளர்கள்-முற்றத் துறந்த முனிவர்கள் - உயர்ந்த பண்பாளர்கள் ஆகியோரே இவ்வாறு என்றும் நிலை மாறாது அமைதியான ஒரே நிலையில் இருக்க முடியும். இந்த அமைதி நிலைக்கு-இந்த ஒரே மாதிரியான நிலைக்கு விளக்கம் தருவதற்கு ஒவியங்களே உவமையாக இருந்து உதவி செய்யும்.

ஜான் கீட்சு

இதை அறிவிக்கவே, ஜான் கீட்சு (John Keats) என்னும் ஆங்கில புலவர் இயற்றிய “Ode on A Greacian Urn” என்னும் தலைப்புடைய பாடல் பகுதிகள் பொருளுடன் மேலே தரப்பட்டுள்ளன.

தாமரை மலர் தடாகத்தில் மலர்ந்திருக்கும். அது ஆடி அசைந்து கொண்டிருக்கும். நேரம் ஆக ஆக நிறம் மாறி இதழ் சுருங்கி வதங்கிப் பொலிவிழந்து குவியவும் செய்யும். பறித்துக் கொண்டு வந்து கையிலோ வேறிடத்திலோ வைத்திருக்கும் தாமரை மலரும் நேரம் ஆக ஆக நிலை மாறிப் பொலிவு இழக்கும். ஆனால் ஓவியத்தில் வரையப்பட்டுள்ள தாமரை மலரோ நிலை மாறாமல் என்றும் குவியாமல் மலர்ச்சியுடனேயே பொலிவு பெற்றுத் திகழும்.

தாமரை முகம்

மக்களின் மலர்ந்த முகத்திற்குத் தாமரை மலரை உவமையாகக் கூறுதல் மரபு. மக்களின் முகம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. மக்களுள் மிக உயர்ந்தவர்களின்-மக்கள் தன்மைக்கு அப்பாற்பட்ட மேல் நிலையில் உள்ளவர்களின் முகமோ, இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே மாதிரியாயிருக்கும். அதாவது, ஓவியத்தில் உள்ள தாமரை மலரேபோல் ஒரே நிலையில் இருக்கும். இதற்கு ஏதாவது ஓர் எடுத்துக் காட்டு கிடைக்குமா? காண்பாம்:

சித்திரத்துச் செந்தாமரை

உலகியலில் - ஒரு குடும்பத்தில், தந்தை தன் மூத்த மகனுக்கு முதலில் பாகப்பிரிவினை செய்து தந்த உடைமைகளுள் ஒரு பகுதியினைப் பின்னர் இளைய மகனுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறின், மூத்த மகனும் மூத்த மருமகளும் வாளா இருப்பார்களா? போர்க் கொடி உயர்த்துவர் அன்றோ? இந்த அளவுக்கே இது எனில், மூத்த மகனுக்குப் பாகமே இல்லை-எல்லாம் இளைய மகனுக்கே என்று தந்தை கூறின். என்ன நேரும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

உலகில் தந்தை தரும் சொத்தைவிட வேறு எந்த வசதியும் அற்ற மூத்த மகன் ஒருவன், எனக்கு வேண்டா-தம்பிக்கே கொடுத்து விடுங்கள் என்று செல்வானா?

தந்தை தனக்குத் தரினும்-தராவிடினும் இன்ப துன்பம் அற்ற ஒரே மன நிலையில் மூத்த மகன் இருப்பானா? உள்ளத்தைக் காட்டும் கண்ணாடியாகிய முகம் ஒரே நிலையில் இருக்குமா?

மூத்த மகன் ஒருவன், இத்தகைய சூழ்நிலையில் சித்திரத்தில் வரையப்பட்டுள்ள செந்தாமரையைப் போல ஒரு நிலையில் இருந்ததாகக் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளான். இராமாயணக் காப்பியத் தலைவனாகிய இராமனே அவன்.

இராவணனால் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சீதை, அசோகவனத்தில் இருந்தபோது, பழைய நிகழ்ச்சிகள் பலவற்றை எண்ணி வருந்துகின்றாள்: அவற்றுள் ஒன்று:-

முடி சூடிக்கொண்டு அரச பதவியை ஏற்றுக் கொள்க என்று தந்தை சொன்னபோது இராமனது முகம் எவ்வாறு இருந்ததோ, அவ்வாறே, அரசச் செல்வத்தைத் துறந்து காட்டிற்குப் போவாயாக என்று சொன்னபோதும் இருந்ததாம். இந்த அமைதி (சாந்த) நிலைக்குத்தான் சித்திரத்துச் செந்தாமரையை ஒப்பிட்டு நோக்கிச் சீதை வருந்தினாள் என்பதாகக் கம்பர் பாடியுள்ளார். (பாடல்: சுந்தர காண்டம்-காட்சிப் படலம்)

“மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்
இத்திருத் துறந்து ஏகு என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்” (20)

இந்தச் செய்தி படிப்பதற்கு மிகவும் சுவையாயுள்ள தல்லவா? அமைதிச் சுவைக்கு இதனினும் வேறு எடுத்துக் காட்டு வேண்டுமா என்ன!