இயல் தமிழ் இன்பம்/பாரதிதாசன் ஊரும் பேரும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


13. பாரதிதாசன் ஊரும் பேரும்

1. யாதானும் நாடாமால் ஊராமால்

சுப்பிரமணிய பாரதியாருக்கு அணுக்கத் தொண்டரா யிருந்ததால் கனக. சுப்புரத்தினம் என்பவர் ‘பாரதிதாசன்’ என்னும் புனைபெயர் சூட்டிக் கொண்டார். இப்போது அவர் தமது பாடல் சிறப்பினால் பாவேந்தர் என்னும் சிறப்புப் பெயரால் வழங்கப் பெறுகிறார்.

1.1. மந்திர ஆற்றல்

சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) என்பவர் ஸ்காட்லாந்தில் பிறந்த ஆங்கில மொழி அறிஞர். இவர் பல பாடல் நூல்களும், உரைநடை நூல்களும், நெடுங்கதைகளும் எழுதிப் பெரும் புகழ் பெற்றவர். அந்த நாட்டில் ‘வால்டெர் ஸ்காட்’ என்னும் பெயரைச் சொன்னால் எந்த வீட்டுக் கதவும் திறக்குமாம்.

இதற்கு ஓர் ஒப்புமை கூறப்பட்டுள்ளது. அரேபிய இரவுக் கதைகளுள் (Arabian Nights) ஒன்றான ‘அலி பாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற கதையில், ‘திறந்திடு சீசம்’ (Open Sesam or Semamun) என்னும் மந்திர தொடரைக் கூறியதும் கதவு திறந்து கொள்ளுமாம். அந்தத் தொடரைப்போல, வால்டெர் ஸ்காட் என்னும் பெயரும் மந்திர ஆற்றல் பெற்றிருந்ததாம். (Life of Sir Walter Scott-Chapter II by Lockhart).

1.2. சிறப்பு

இதேபோல், தமிழகத்தில் எங்கே சென்று பாரதிதாசன் என்று சொன்னாலும், பாவேந்தர் பாரதிதாசனாருக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. (இதை யான் நேரில் கண்டதும் உண்டு.)

இவ்வாறாகப் பாவேந்தருக்கு எல்லா ஊர்களும் தம் ஊராய் இருக்கும் நிலையில், ‘பாரதிதாசன் ஊரும் பேரும்’ என்னும் கட்டுரைத் தலைப்பு தரப்பட்டுள்ளது. சுற்றி வளைக்காமல் சொல்ல வேண்டுமாயின், பாரதிதாசனாரின் ஊரின் பெயர் ‘புதுச்சேரி’ என்ற செய்தியே கிடைக்கும்.

2. ஊர்ப் பெயர்கள்

புதுச்சேரி பல பெருமைகளால் பெயர் பெற்ற ஊரெனினும், இந்தத் தலைப்பு, புதுச்சேரி என்னும் ஊரின் பேரைப் பற்றிய வரலாற்றை அதாவது ஊரின் பெயர்க் காரணத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. (இது யான் புரிந்து கொண்டது, தலைப்பு தந்தவர் கருத்து யாதோ?) புதுச்சேரி என்னும் ஊர்ப் பெயரின் பொருள் தெளிவாகப் புரிகிறது. ஆனால், இவ்வூருக்கு அயலவர் சிலர் இட்டுள்ள பெயர்களை நோக்குங்கால் ஒரு வகைக் குழப்பம் ஏற்படுகிறது.

2.1. டேனிஷ் ஒல்லாந்து

புதுச்சேரியை டேனிஷ்காரர்கள் ‘பொல செரே’ என்றும், ஒல்லாந்து (Holland) நாட்டினர் ‘புதேஷேயிரா’ என்றும் வழங்கினார்களாம்.

2.2. பிரெஞ்சு - ஆங்கிலம்

அடுத்து, - Poudichery என்பதில் உள்ள U என்னும் எழுத்து n என்பதுபோல் தெரியும்படி, புதுச்சேரியிலிருந்து கடிதம் பிரான்சுக்குப் போகவே, அங்கிருந்த தலைவர்கள் Pondichery எனக் கொண்டு பொந்திஷெரி எனச் சொல்லவும் எழுதவும் தொடங்கி விட்டனர். இந்தப் பெயர் பிரெஞ்சுக் கூடாரத்தில் நிலைத்துவிட்டது. பிரெஞ்சிலும் இலத்தீனிலும் இலத்தினின் வழிமொழிகளிலும் ‘Q’ என்பது ‘ஒ’ எனவே ஒலிக்கப் பெறும். இந்த O என்பது, ஆங்கிலத்தில் ஆ (Pot) எனவும், ஊ (Roof) எனவும், ஓ எனவும் (Old) எனவும் பலவிதமாக ஒலிக்கப் பெறும். இந்தப் பச்சோந்தித்தனத்தால், பொந்தி ஷெரி என்பதைப் பாண்டிச்சேரி (Pondicherry) என ஆங்கிலேயர் ஒலித்தனர். இப்போது ‘பாண்டி’ என வழங்கப்படுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது.

புதுச்சேரி பொந்தி ஷெரியாகவும் பாண்டிச்சேரியாகவும் பிறவிகள் (அவதாரங்கள்) எடுத்ததோடு நிற்காமல், மேலும் சில பிறவிகள் எடுத்துள்ளது.

2.3. பெரிப்புளுஸ் - தாலமி

பெரிப்புளுஸ் என்னும் பயண நூல் ஆசிரியர் ‘பொதுகே’ என்றும் புதுச்சேரியைக் குறிப்பிட்டுள்ளனர். புதுச்சேரியை அடுத்துள்ள ‘அரிக்கமேடு’ என்னும் அருகன் மேடே இவர்களால் இவ்வாறு குறிக்கப்பட்டதாம். இந்தப் பகுதியே அப்போது புதுச்சேரியாயிருந்தது; கப்பல் தங்கும் துறைமுகமாயிருந்தது. இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு.

பொதுகே, பொதுகா என்னும் பெயர்கள் உண்மையில் எந்த ஊரை இவ்வாறு குறித்தனவோ? இப்பெயர்கள் புதுச்சேரியைத்தான் குறித்தன எனில், பொருத்தமான பெயர்க்காரணம் தெரியவில்லை.

அயல்நாட்டவர் இவ்வாறு பெயர்கள் வழங்க, தமிழர்கள், தஞ்சாவூரைத் தஞ்சை என்பதுபோல் புதுச்சேரியைப் புதுவை என மரூஉ மொழியாகச் சுருக்கிப் பேசுகின்றனர் - எழுதுகின்றனர். சுற்று வட்டாரங்களில் உள்ள படிக்காத பாமர மக்கள் இதைப் ‘பிச்சேரி’ என்கின்றனர்.

2.4. பொதுக்கம் - ஒதுக்கம்

புதுவை என்பதே பொதுகே எனப்பட்டது என்னும் ஓர் அறிஞரின் கருத்தைப் பேராசிரியர் ஒருவர் ஒப்புக் கொள்ளவில்லை. கலித்தொகை 88-ஆம் பாடலிலுள்ள

“::::புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம் போல”

என்னும் தொடரில் உள்ள ‘பொதுக்கம்’ என்பதற்கு, (கப்பல்கள் வந்து) தங்குமிடம், மறைவிடம் என்பதாகப் பொருள் கொண்டு, பொதுக்கம் என்பதிலிருந்தே ‘பொதுகே’ பிறந்திருக்க வேண்டும் என அந்தப் பேராசிரியர் கூறுகிறார். இது சொன்மைக்குப் (சொல் அளவில்) பொருந்துவதுபோல் தோன்றினும், பொருண்மைக்குப் பொருந்துவதாகத் தெரியவில்லை. தங்குமிடம் - மறைவிடம் என்றால் புதுச்சேரி மட்டுந்தானா? மற்ற துறைமுகங்கட்கும் இப்பெயர் பொருந்தாதா? அந்தப் பயணிகள் பல துறைமுகங்கட்குச் சென்றிருப்பார்களே. மேலும், உரையாசிரியர் நச்சினார்க்கினியர்,

“புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்” என்னும் தொடரைப் ‘புள்ளிக் களவன் புனல்சேர்பு ஒதுக்கம்’ எனப் பிரித்துக் கொண்டு, ‘ஒதுக்கம் என்னும் தொழிற் பெயர் ஆகுபெயர்’ என்று உரை வகுத்துள்ளார். எனவே, இந்தப் பெயர்க் காரணம் பொருந்துவதாகத் தெரியவில்லை.

அங்ஙனமெனில், பொதுகே, பொதுகா என்னும் பெயர்களின் போக்குதான் என்ன? நான் சொல்வது பொருத்தம் என எண்ணினால் ஏற்றுக் கொள்ளலாம்; இல்லையேல் தள்ளலாம். நான் சொல்லப்போவது முடிந்த முடிபு அன்று. வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தாற் போன்றதே எனது முயற்சி.

2.5 Ch. ஒலி

D என்னும் எழுத்து ஆங்கிலத்தில் ‘டி’ (டகர ஒலி) எனப்படும். இலத்தீன், பிரெஞ்சுமொழிகளில் ‘தெ’ (தகர ஒலி) எனப்படும் இந்த முறையில்தான் புது என்பது பிரெஞ்சில் Poudi எனப்பட்டது. நம்மக்கள் புதுச்சேரி என்பதைப் புதிச்சேரி எனத் திரிபாகக் கூறியதால், அவர்கள் du போடாமல் di போட்டனர். நம் ஊர்ப் பெயர்கள் பல, ஐரோப்பிய மொழிகளில் தவறாக எழுதப்படுவதன் காரணங்களுள் முதன்மையானது, நாம் கொச்சையாக ஒலித்து அறிவித்ததேயாகும்.

இந்த முறையில் du என்பது di ஆயிற்று. ‘ch’ என்பது, ஆங்கிலத்தில் Character (கேரக்டர்-பண்பு) என்பதில் ககர ஒலியும், charity (சாரிட்டி-அறம்) என்பதில் சகர ஒலியும் பெறுகிறது. இது போன்ற பச்சோந்தித்தனம் இலத்தீனிலும் பிரெஞ்சிலும் இல்லை, ch என்பது பிரெஞ்சு மொழியில் எங்கு வரினும் ‘ஷ்’ என ஷகர ஒலி மட்டுமே பெறும். எ. கா:- chat = ஷா (பூனை - t:Silent - ஒலி பெறா ஊமை எழுத்து). Dimanche-திமான்ஷ் (ஞாயிற்றுக் கிழமை) இதுபோலவே, Poudecheira (பு தெ ஷே யிரா) என ஃ ஆலந்து மொழியிலும் ch என்பது ஷகர ஒலி பெற்றுள்ளது. (பிரெஞ்சு மொழியில் ‘OU’ என்பது ‘உ’ என ஒலிக்கப்பெறும்).

ஆனால், ch என்பது இலத்தீன் மொழியில் எல்லா இடங்களிலுமே ககர ஒலியே பெறும். இதன் முன்னோடியான கிரேக்க மொழியிலும் இஃதே.

வீரமாமுனிவரைக் குறிக்கும் Beschi என்பது மற்ற மொழிகளில் பெஷி எனப்படும். இலத்தீனிலோ பெஸ்கியோ (Beschio) என ch ககர ஒலி பெறும். இலத்தீனில் Charus என்பதில் ‘க்காருஸ்’ (விலைமதிக்க வொண்ணாத) எனவும், Chimera என்பதில் ‘க்கிமெரா’ (ஒருவகைக் கற்பனை விலங்கு) எனவும் ch ககர ஒலி பெற்றிருப்பது காண்க.

கிரேக்கராகிய பெரிப்புளுஸ் ஆசிரியர்க்கு முன்னமேயே, யாராவது கடல் பயணம் செய்து, ஷகர ஒலியுடைய பிரெஞ்சு முறையில் Poducheri என எழுதியிருப்பின், அதைப் பார்த்த பின், ch என்பதற்கு இவர் ககர ஒலி தந்து ‘பொதுகே’ என்னும் ஒலிப்பில் எழுதியிருக்கலாம். இறுதி Ri (ரி) ஊமை எழுத்தாகும். இது சில ஐரோப்பிய மொழிகளில் நிரம்ப உண்டு. இதற்கு முன் யாரும் பயணம் செய்யவில்லை என்று உறுதியாகக் கூறமுடியாது. முறையான வரலாறு கிடைக்காத காலம் அது.

இந்தக் கருத்து முற்ற முடிந்த முடிவு அன்று. இதை மறுக்கவும் செய்யலாம். மற்றும், பொதுகே. பொதுகா என்னும் பெயரால் புதுச்சேரியைக் கூறவில்லை - வேறு ஊரைக் குறிப்பிட்டிருக்கலாம் - எனத் தள்ளியும் விடலாம். (அங்ஙனமெனில், யான் வெள்ளைத் தாள்களை வீணாக்கியவனாவேன்)

3. மணக் குளம்

இப்போது சென்னையில் உள்ள பகுதிகள், ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன் பல சிற்றூர்களாக இருந்தவை. இதுபோலவே, புதுச்சேரிப் பகுதிகளும் பிரெஞ்சுக்காரரின் ஆட்சிக்கு முன் பல சிற்றூர்களாக இருந்தனவே. அவற்றுள் ஒன்று ‘மணக் குளம்’ என்பது. புதுவைக் கடற்கரைக்குச் சிறிது மேற்கே மணக்குள விநாயகர் கோவில் என ஒரு கோவில் உள்ளது. மணக்குளம் என்பது ‘மனுகுலம்’ என்பதன் திரிபு எனச் சிலர் கூறுவது பொருந்தாது. 3-1 கடவுளர் பெயர்

தீவனூர்ப் பிள்ளையார், மயிலம் சுப்புராயர், செஞ்சி ரங்கநாதர் என்பனபோல், மணக்குள விநாயகர் என்னும் பெயரும் ஊரின் பேரால் ஏற்பட்டதே. ‘மணல் குளம்’ என்னும் பெயருடைய பகுதியில் உள்ள விநாயகர் என்பதே இதன் பொருள்.

3.2. மணல்

மணல் என்னும் சொல்லில் தொடங்கும் ஊர்கள் பல உள. மணமேடு, மணக் குப்பம், மண வெளி, மணப் பாறை, மணக்கால் முதலியன அவை. இப்பெயர்களில் ‘ல்’ கெட்டு 'மண’ என்பது நிலைமொழியாய் உள்ளது. மணல்மேடு, மணல்பாறை என்பனவே, மணமேடு, மணப்பாறை எனப்படுகின்றன. மற்ற பெயர்களும் இவ்வாறேயாம்.

3-3. குளம்

குளம் என்னும் வருமொழியால் முடியும் ஊர்ப் பெயர்களும் பல உள. வாழைக் குளம் (புதுவையின் புற நகர்ப் பகுதி இது), பெரியகுளம், தெப்பக்குளம், தல்லாகுளம், சாத்தன்குளம், மூளைக்குளம், எர்ணாகுளம், கடம்பன் குளம், காயன்குளம், கோட்டிக்குளம், தாதன்குளம், மடத்துக்குளம், கூடங்குளம், பரம்பிக்குளம், தாமரைக்குளம், தேவிகுளம், கனக செட்டிகுளம், ஊமைச்சி குளம், மாங்குளம் - முதலியன அவை.

3-4. மணல்குளம்

இவ்வாறே மணல் என்பதும் குளம் என்பதும் சேர்ந்து, இடையில் உள்ள ‘ல்’ கெட, க் என்னும் வலிமிக மணக்குளம் என்னும் பெயர் உருவாயிற்று. புதுச்சேரி நகருக்குள் உள்ள சிறப்பான இடம் ஆதலானும், பழைய சிற்றூர் ஆதலானும் இதன் பெயர்க்காரணம் ஈண்டு இடம் பெற்றது. இனிப் புதுச்சேரி என்பதன் பெயர்க் காரணத்தைக் காண்பாம்.

4. புதுச்சேரி

4.1. புது: புதுப்பேட்டை, புதுப்பாளையம், புது வண்டிப்பாளையம், புதுக்குப்பம், புதுவூர், புதூர், புத்தூர், புதுக்கோட்டை, புதுக்காடு, புதுச்சத்திரம், புது நகரம், புத்துச்சேரி (கேரளம்) எனப் ‘புது’ என்னும் அடிச்சொல்லில் தொடங்கும் ஊர்கள் பல உள.

4-2. சேரி

கோட்டுச்சேரி, தெளிர் (தெள்ளுச்) சேரி, தலைச்சேரி, கலமசேரி, கூடுவாஞ்சேரி, கொக்கலாஞ்சேரி, கொரடாசேரிச் கங்கணஞ்சேரி, பார்ப்பினிசேரி, மட்டஞ்சேரி, வடக்காஞ் சேரி, வேளச்சேரி, புத்துச்சேரி (கேரளம்) எனச் சேரி, என்னும் வருமொழியில் முடியும் ஊர்கள் பல உள.

4-3. புதுமை

புதுச்சேரி என்பதில் உள்ள ‘புது’ என்பது, முற்றிலும் புதிதாய் உண்டாக்கப்பட்ட சேரி என்னும் கருத்தைக் குறிக்கவில்லை; பழமையாய் இருந்த பகுதி புதுமையாகச் சீர்திருத்தப்பட்டது என்னும் கருத்தைக் குறிக்கின்றது.

புதுச்சேரி நகரின் நடுவே கலவைக் கல்லூரி என்னும் ஒரு கல்வி நிறுவனம் ‘ப’ வடிவில் உள்ளது. இதன் நடுவே ஓர் அமைப்பு கட்டுவதற்காகத் தரையைத் தோண்டியபோது மண்டை ஓடுகளும் எலும்புகளும் அகப்பட்டன. (இதை நான் நேரில் பார்த்தேன்) இந்த இடம் முன்பு இடுகாடாய் இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் நகர் புதுமையாய் விரிவடைந்ததால், இந்த இடுகாட்டைப் பற்றிப் பொதுமக்கள் இன்று ஒன்றும் அறிந்திலர். யானும் என்னுடன் இருந்த நண்பர்களும் அப்போதுதான் அறிந்தோம். பிரெஞ்சுக்காரர் 17-ஆம் நூற்றாண்டிலேயே ஆட்சி மேற்கொண்டு நகரைப் புதிதாய் வடிவமைத்தனர். நெடுங்காலம் ஆனதால் இடுகாடு அறியாப் பொருளாயிற்று.

5. இனச்சேரி

இப்போது சேரி என்பது, தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பைக் குறிக்கும் பெயராகக் கருதப்படுகின்றது. உண்மை இஃதன்று. பலரும் சேர்ந்து வாழும் இடம் சேரி என்பதே சரியான பொருளாகும். ஆனால் ஓர் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வோர் இனத்தவரும் வாழ்ந்த ஒவ்வொரு பகுதியும், அவ்வவ் வினத்தின் பெயரால் சேரி ஒரு காலத்தில் பெயர் வழங்கப்பட்டது என்ற உண்மைதான் அது.

5.1 தெருப் பெயர்கள்

புதுவையில் உள்ள தெருக்களுள் பல சாதிகளின் பெயரால் குறிப்பிடப்பட்டன. எ.கா: சான்றோர்(சாணார்) வீதி, சிறிய பார்ப்பாரத் தெரு, பெரிய பார்ப்பாரத் தெரு, வேளாளர் தெரு, செட்டி தெரு, வைசியர் தெரு, செங்குந்தர் தெரு, வண்ணாரத் தெரு, வன்னியர் தெரு, யாதவர் தெரு முதலியன. புதுச்சேரி நகரில் கிறித்துவர் மிகுதியாயிருக்கும் பகுதி, இப்போதும் இந்துக்களால் ‘கிறிஸ்தவபுரம்’ எனக் குறிப்பிடப்படுவதுண்டு. இது போலவே, இசுமாலியர் மிகுதியாயிருக்கும் பகுதி முசுலீம் வட்டாரம் எனப்படுவதுண்டு. அரிக்கமேடு (அருகன் மேடு) உட்பட்ட புதுச்சேரிப் பெரும்பரப்பில் பண்டு கிரேக்கக் குடியேற்றம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு பல பிரிவினரும் சேர்ந்து வாழும் சேரியாகப் புதுச்சேரி உள்ளது. (இப்போது புதுச்சேரித் தெருக்களின் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன.) குறிப்பிட்ட ஓரினத்தார் மட்டும் மிகுதியாயுள்ள இடம் அந்த இனத்தின் பெயரால் சேரி எனப் பண்டு வழங்கப் பட்டிருப்பினும், இப்போது பலருக்குப் பறைச்சேரி மட்டுமே தெரியும். அதனால் சேரி என்பதை இகழ்ச்சியாக எண்ணும் மனப்பான்மை உண்டாகிவிட்டது.

5.2 இடைச்சேரி

இடையர்கள் மிகுதியாய் உள்ள பகுதிக்கு இடைச்சேரி என்ற பெயர் உண்டு. சீவக சிந்தாமணியின் 422, 423-ஆம் செய்யுள்கட்கு நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரைப் பகுதியில் இப்பெயரைக் காணலாம்.

“அங்ஙனம் சிதறின கோவலர் குழலும் கோடாலியும் அங்கே கிடக்கக் காட்டைச் சுழலப் போய், இடைச்சேரியில் மகளிர் நின்று சுழலும்படி, அவ்வேடர் கயிறு போல அத்தலையை நெகிழவிட்டாராயின் இத்தலையை நெகிழ விடார்” - என்பது உரைப்பகுதி. 422-ஆம் பாடலில் உள்ள ‘பள்ளி’ என்பதற்கு இடைச்சேரி என்னும் பொருள் தரப்பட்டுள்ளது. (கோவிந்தையர் இலம்பகம்).

5.3 பார்ப்பனச் சேரி

இது மட்டுமா? உயர் குலத்தார் என்று சொல்லும் பார்ப்பனர் வசிக்கும் இடம் ‘பார்ப்பனச் சேரி’ எனப்பட்டது. இப்பெயரை, நன்னூல் (பொதுவியல்-) 377-ஆம் நூற்பாவின் உரையில், பழைய உரையாசிரியராகிய மயிலைநாதர் குறிப்பிட்டிருப்பதிலிருந்து அறியலாம்:

“எயின நாடு, மற நாடு, பார்ப்பனச் சேரி, அரசர் பெருந்தெரு, வாணிக நகர் எனும் இவை உயர்திணைக்கண் பல விரவிப் பன்மையின் ஒரு பெயர் ஏற்றன”- என்னும் உரைப் பகுதியில் பார்ப்பனச் சேரியைக் காணலாம்.

5.4 புறஞ்சேரி

கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் மதுரையின் புறநகர்ப் பகுதியில் தங்கியிருந்த செய்தியைக் கூறும் காதைக்குச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ‘புறஞ்சேரி யிறுத்த காதை’ எனப் பெயர் தந்துள்ளார். அந்தச் சேரி, அறம் புரிகின்ற நல்லோர் தவிர, மற்ற தீயோர் இல்லாததாம்.

“அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்” (195-196)

என்பது பாடல் பகுதி. அறச்செயல் புரிவோர் இருக்கும் இடமும் புறஞ்சேரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “அறம்புரி மாந்தர் அன்றிச் சேரா” என்பதிலிருந்து, அறம்புரி மாந்தர் சேரும்சேரி என்பது பெறப்படும். எனவே, சேரி என்பதைத் தாழ்ந்ததாக எவ்வாறு கொள்ள முடியும்?

5.5 காலனி,பேட்டை

நாளடைவில் பல சாதியினரும் கலந்து வாழத் தொடங்கியதால், சேரி என்னும் தொகுப்புப் பெயர் மறைந்தது. குறிப்பிட்ட ஓரினத்தார் (பறையர்) மட்டும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்வதால், சேரி என்பது, அவர்களின் குடியிருப்பை மட்டும் குறிக்கும் பெயராய் விட்டது. இப்போது சேரி என்று சொல்ல நாணி, காலணி என்றும் பேட்டை என்றும் வழங்குகின்றனர். இப்போது ‘பறையர்’ என்று சொன்னால் அரசு ஒறுக்கும் அளவுக்கு நிலைமை முற்றி விட்டது.

5.6 தொழில் அடிப்படை

தொழில் அடிப்படையில் ஏற்பட்ட சாதிப் பெயர்களில் உயர்வு-தாழ்வு இல்லை. பண் இசைப்பவன் பாணன். பறை கொட்டுபவன் பறையன். திருவிழாவில் கடவுள் திருமேனி தெருவில் உலா வரும்போது, முதலில் பறை மேளம் இடம் பெறுகிறது; அடுத்து நாயன (நாதசுர) மேளம் இடம் பெறுகிறது. இதில் உயர்வு-தாழ்வு என்ன? வண்ணான் - பரியாரி என்பன தாழ்வாம். வண்ணான் எனினும் சலவைத் தொழிலாளி எனினும் பொருள் ஒன்றே. உடையை வண்மை (தூய்மை) செய்பவன் வண்ணான். மலையாளத்தில் மண்ணான் என்பர். மண்ணுதல் என்றால் தூய்மை செய்தல். பரிகாரம் என்றால் மருத்துவம். பரிகாரி = மருத்துவன். இப்பெயர் கொச்சையாகப் பரியாரி எனப்படுகிறது. இது உயர்ந்த பெயர். மீனவர் என்ப தனினும் செம்படவர் என்னும் பெயரே சிறந்தது. மீனவர் என்றால் மீன் பிடிப்பவர். செம் படகர் என்பதே செம்படவர் என்றாயிற்று. செம் படகு ஓட்டுபவர் செம்படகர். படவு என்பது தமிழில் கொச்சை உருவம். படவ என்பது தெலுங்கில் எழுத்து மொழி. செம் படவ(க)ர் என்பதில் குறைவேயில்லை. இப்பெயர்கள் எல்லாம் பிற்காலத்தில் செயற்கையாகக் குறைவுப் பெயர்களாக ஆக்கப்பட்டன. சேரி என்பதும் இன்னதே என்பதற்காக இவ்வளவு எழுத வேண்டியதாயிற்று.

இவ்வாறாகப் பல சேரிகளைச் சேர்ந்த பல இனத்தவரும் சேர்ந்து வாழ்வதால்-அதாவது, புதிய முறையில் பல சேரியினரும் சேர்ந்து வாழ்வதால், இவ்வூர் புதுச்சேரி என்னும் அழகிய பெயரால் வழங்கப்படுகிறது.

6. தென் புதுவை

இங்கே புதுச்சேரி தொடர்பான மற்றொரு சிக்கல் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரான புதுச்சேரியைச் சுப்பிரமணிய பாரதியார் தமது குயில் பாட்டில்,

“செந் தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகரின்
மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை” (6, 7)

எனத் ‘தென் புதுவை’ என்று குறிப்பிட்டுள்ளார். வடக்கே ஒரு காசி யிருப்பதால் தெற்கே இருப்பதைத் தென் காசி எனவும், தெற்கே ஒரு பழநி இருப்பதால் வடக்கே உள்ளதை வட பழநி எனவும் குறிப்பிடுவதுபோல், வடக்கே ஒரு புதுவை இருப்பதால் இது தென் புதுவை எனப்பட்டதா? ‘தென்' என்பதற்குத் தெற்கு, இனிமை, அழகு என்ற பொருள்கள் உண்டு. இப் பொருள்களுள் எதை உள்ளத்தில் கொண்டு பாரதியார் தென்புதுவை எனக் கூறியிருப்பார்?

6.1 பட்டறிவு

பொறுத்தருள் வேண்டும். இங்கே அடியேனது சொந்தப் பட்டறிவு நிக்ழ்ச்சி ஒன்றைக் குறிப்பிட ஒப்புதல் அளிக்க வேண்டுகிறேன்:

1940-ஆம் ஆண்டு மயிலம் கல்லூரியில் யான் விரிவுரையாளனாயிருந்தபோது ஒருநாள், எல்லப்ப நாவலர் இயற்றிய அருணைக் கலம்பகம் என்னும் நூலை நடத்திக் கொண்டிருந்தேன். ஒரு பாடலில் ‘தென் அருணை’ என்னும் தொடர் இருந்தது. திருவண்ணாமலைக்கு, அருணகிரி அருணாசலம் முதலிய பெயர்களும் உண்டு. அருணாசலம் என்பதன் மரூஉ மொழியே அருணை என்பது. தென் அருணை என்பதற்கு, அழகிய அருணை-இனிய அருணை-தெற்கே உள்ள அருணை என்றெல்லாம் பொருள் செய்யலாம் என்று நான் கூறினேன். உடனே, என்னிலும் அகவையிலும் உருவத்திலும் பெரிய மாணாக்கர் ஒருவர், ‘அப்படியென்றால், வடக்கே ஓர் அருணை இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘வடக்கே ஓர் அருணை இருப்பதால்தான் இதனைத் தென் அருணை என எல்லப்ப நாவலர் குறிப் பிட்டுள்ளார்’ என யான் கூறியதும் மாணக்கர் அமைதியானார். இந்தியாவின் வட கோடியில் ஓர் அருணாசலப் பிரதேசம் இருப்பதை இன்று பலரும் அறிவர்.

6.2 ஸ்ரீ வில்லி புத்துர்

இனித் தென் புதுவைக்கு வருவோம்: புதுச்சேரி மாநிலப் புதுவைக்குத் தெற்கே இரண்டு புதுவைகள் உள்ளன. ஒன்று: பெரியாழ்வார் திருமொழியிலுள்ள பாடல் பகுதி ஒன்று ஈண்டு நோக்கத் தக்கது.

“செற்றம் இலாதவர் வாழ்தரு தென்புதுவை
விட்டு சித்தன் சொல்
கற்றிவை பாட வல்லார் கடல்
வண்ணன் கழலிணை காண்பார்களே” (3-3-10)

என்பது பாடல் பகுதி. தென் புதுவை = ஸ்ரீ வில்லிபுத்தூர். விட்டு சித்தன் = பெரியாழ்வார். (ஸ்ரீ வில்வி) புத்தூர் = புது ஊர். எனவே, இது மரூஉ மொழியாகப் புதுவை எனப்பட்டது. பெரியாழ்வார் இந்தப் புதுவையைத் தென் புதுவை என்று கூறியிருப்பது மிகவும் பொருத்தம். இதற்கும் தெற்கே எந்தப் புதுவையும் இல்லை. இது, புதுச்சேரி மாநிலப் புதுவைபோல் பெருவரவிற்றாகப் பேசப்படுவதில்லை. இனி மற்றொரு புதுவையைக் காண்போம்.

6-9. சடையன் புதுவை

தலைநகர்ப் புதுச்சேரியின் தெற்கே தஞ்சை மாவடத்தில் ஒரு புதுவை உள்ளது. இங்கே தான் சங்கரன் என்பவரும், அவர் மகன் சடையன் (சடையப்ப வள்ளல்) என்பவரும், சடையனின் மகன் சேதிராயன் என்பவரும் வாழ்ந்ததாகத் தனிப் பாடல்கள் கூறுகின்றன. இலங்கைத் தமிழ் மன்னன் பரராச சிங்கன் பாடிய தான பாடல் ஒன்று வருமாறு: 6.3.1 சங்கர புதுவை

“இரவு நண்பக லாகிலென்
பகல் இருளறா இரவாகிலென்
இரவி எண்டிசை மாறிலென்
கடல்ஏழும் ஏறிலென் வற்றிலென்
மரபு தங்கிய முறைமைபேணிய
மன்னர் போகிலென் ஆகிலென
வளமை யின்புறு சோழமண்டல
வாழ்க்கை காரண மாகவே
கருது செம்பொனின் அம்பலத்திலோர்
கடவுள் நின்று நடிக்குமே
காவிரித் திருநதியிலே ஒரு
கருணை மாமுகில் துயிலுமே
தரு வுயர்ந்திடு புதுவையம்பதி
தங்கு மானிய சேகரன்
சங்கரன் தரு சடையன்
என்றொரு தருமதேவதை வாழவே!”

என்பது பாடல். இது, பெருந்தொகை என்னும் தொகை நூலில் 1135-ஆம் பாடலாக உள்ளது. இந்தப் பாடலில் சங்கரனும் அவர் மகன் சடையனும் இடம் பெற்றுள்ளனர். இனிச் சடையன் மட்டும் இடம் பெற்றுள்ள இரண்டு தனிப் பாடல்களைப் பார்ப்போம்:

“மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
கைகழுவ நீர்போதுங் காவிரி - பொய்கழுவும்
போர்வேல் சடையன் புதுவையான் இல்லத்தை
யார்போற்ற வல்லார் அறிந்து”

(சடையன் சோழ மன்னனிடத்தில் அலுவல் பார்த்ததும் உண்டாதலால் போர்வேல் சடையன் எனப்பட்டான்.)

“புரந்தர தாரு புதுவைச் சடையன்
இருந்த வியலூர் தெற்குமேற்கு - பரந்தபொன்னி
ஆற்று நீரால் விளையுமப்பாற் கிழக்காகி
மாற்று நீரால் விளையு மாம்”.

6.3.2 சேதிராயன் புதுவை

இனிச் சடையன் மகன் சேதிராயனைப் பற்றிய பாடல் வருமாறு:

“காவிரியைச் சோணாட்டைக் காராளர் தம்மரபை
நாவலரைக் காவலரை நல்லோரை - பூவலயம்
உள்ளத் தகும்புதுவை ஊரைச் சிறப்பித்தான்
பிள்ளைப் பெருமாள் பிறந்து”

என்பது பாடல். சடையனுக்குப் பிறந்த பிள்ளைப் பெருமாள் சேதிராயன் என்பவன். இவன் ‘புதுவைச் சேதிராயன்’ என்னும் பெயராலும் வழங்கப்படுவான்.

6.4 வெண்ணெய் நல்லூர்

மேலுள்ள பாடல்களில் அறிவிக்கப்பட்டுள்ள சங்கரன், சடையன், புதுவை, காவிரி, சோழமண்டலம் என்னும் பெயர்களை நோக்குங்கால், இந்தப் புதுவை என்பது தஞ்சை மாவட்டத்துப் புதுவையே யாகும் என்பது தெளிவு. கம்பர் தம் இராமாயண நூலின் பாயிரத்தில்,

நடையின் நின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்தது இராமாவ தாரப்பேர்த்
தொடை நிரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே” (10)

என்று சடையனுக்கும் வெண்ணெய் நல்லூருக்கும் தொடர்பு காட்டியுள்ளார். இது, தஞ்சை மாவட்டத்திலுள்ள வெண்ணெய் நல்லூராகும்.

சிலர், கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் தஞ்சை மாவட்டமாகிய காவிரி நாட்டைச் சேர்ந்தவரல்லர்; அவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் - திருக்கோவலூர் வட்டத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவர்; அவர் கம்பரை ஆதரித்தது அவ்வூரில்தான் - என வன்மையாக அடித்துப் பேசுகின்றனர். இக்கொள்கை சரியன்று. சடையன் காவிரியோடும் சோழ மண்டலத்தோடும் பாடல்களில் தொடர்பு படுத்தப்பட்டிருப்பதால், அவன் தஞ்சை மாவட்டத்து ஊர்க்காரனே யாவான்.

எனவே, தஞ்சை மாவட்டத்துப் புதுவையும் (புதுச்சேரியும்), திருநெல்வேலி அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் என்னும் புதுவையும், தலைநகர்ப் புதுச்சேரிக்குத் (புதுவைக்குத்) தெற்கே உள்ளவை என்பது பெறப்படும்.

6.5 புதுச்சேரிச் சடையன்

ஒரு சிலர் கம்பரை ஆதரித்த சடையன் தென்னார்க்காடு மாவட்டத்துத் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவனே என அடித்துப் பேசுவது போல, ஒரு சிலர், புதுவைச் சடையன் என்பது, புதுவை மாநிலத் தலைநகர்ப் புதுச்சேரியாகிய புதுவையைச் சேர்ந்தவனே என அடித்துப் பேசுகின்றனர்.

யான் இந்த இருசாராரிடமும் வாதாடிப் பார்த்தேன். சடையன், காவிரியோடும் சோழ நாட்டோடும் பல பாடல்களில் தொடர்புறுத்தப்பட்டிருப்பதல்லாமல் சோழ மன்னனோடும் தொடர்புறுத்தப்பட்டிருப்பதால், பாடல்களில் கூறப்பட்டுள்ள வெண்ணெய் நல்லூரும் புதுவையும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தனவே எனச் சொல்லிப் பார்த்தேன். அவர்கள் ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.

இலங்கையில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் சடையன் கப்பல் கப்பலாய் அரிசி அனுப்பியதால், இலங்கை மன்னன் பரராச சிங்கன், காவிரியோடும் சோழமண்டலத்தோடும் தொடர்புறுத்திச் சடையனைப் புகழ்ந்து பாடியுள்ளான். தென்னார்க்காடு மாவட்டத் திருவெண்ணெய் நல்லூரில் சடையன் இருந்திருந்தால் கப்பல் கப்பலாய் இலங்கைக்கு அரிசி அனுப்பியிருக்க முடியாது; காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவனா யிருந்ததாலேயே கப்பல் கப்பலாய் அரிசி அனுப்ப முடிந்தது.

எனவே, புதுவைச் சடையன் என்பதிலுள்ள புதுவை என்பது, தலைநகர்ப் புதுச்சேரியைக் குறிக்க வாய்ப்பேயில்லை. இந்த நிலையில், புதுவை மாநிலப் புதுவைக்குத் தெற்கே இரண்டு புதுவைகள் இருக்க, புதுவை மாநிலப் புதுவையைப் பாரதியார் தென்புதுவை என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் சிக்கலாகவும் குழப்பமாகவும் உள்ளது.

ஸ்ரீ வில்லிபுத்தூரைப் புதுவை என்பது அவ்வளவாகப் பொருந்தாததும் சிறுவரவினதுமாகும். ‘புதுவைச் சடையன்’ என்று கூறும் பாடல்களையும் பாரதியார் அவர் காவச் சூழ்நிலையில் அறியாதிருந்திருக்கலாம். அல்லது சடையனைத் தென்னார்க்காடு மாவட்டத்துத் திருவெண்ணெய் நல்லூரான் என்று எண்ணியிருக்கலாம். அதனால் அவ்விரண்டு புதுவைகளையும் பாரதியார் சுட்டாமல் புதுச்சேரி மாநிலப் புதுவையையே சுட்டியிருக்கலாம். அங்ஙனமெனில், இந்தப் புதுச்சேரிக்கு வடக்கே ஒரு புதுச்சேரி இருந்திருக்கவேண்டுமே?

6.6 செங்கைப் புதுச்சேரி

இது குறித்துப் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு. ஒருநாள், இந்தியாவின் தலைமை அமைச்சராய் இருந்த திருமதி இந்திராகாந்தி செங்கற்பட்டு மாவட்டச் சுற்றுப் பயணத்தின்போது, புதுச்சேரிப் பகுதிக்கும் சென்றதாக வானொலி அறிவிக்கக் கேட்டேன். பாரதியார் செங்கற்பட்டு மாவட்டத்தை அடுத்துள்ள சென்னையில் நெடுங்காலம் தங்கியிருந்ததால், செங்கற்பட்டு மாவட்டப் புதுச்சேரியை அறிந்திருக்கலாம். அது வடக்கேயிருப்பதால் புதுச்சேரி மாநிலப் புதுச்சேரியைத் தென் புதுவை எனக் குறிப்பிட்டிருக்கலாம். இல்லையேல், தென் புதுவை என்பதற்கு அழகிய-இனிய புதுவை என்று பொருள் கூறுவதைத் தவிர வேறு வழியில்லை.

7. இனச் சுட்டு இன்மை

இங்கே தொல்காப்பியரும் நன்னூலாரும் அறிவித்துள்ள ஒரு கருத்து உள்ளத்தை உறுத்தாமல் இல்லை. தொல்காப்பியர் கிளவியாக்கத்தில்,

“இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்கொடை
வழக்கா றல்ல செய்யு ளாறே” (18)

எனவும் பவணந்தியார் நன்னூல் பொதுவியலில்

“பொருள்முத லாறாம் அடைசேர் மொழியினம்
உள்ளவும் இல்லவும் ஆம் இரு வழக்கினும்” (50)

“அடை மொழி இனமல்லதும் தரும் ஆண்டுறின்” (51)

எனவும் கூறியுள்ளபடி நோக்கின், தென் புதுவை என்பதிலுள்ள ‘தென்’ என்பதை, இனச் சுட்டு இல்லாப் பண்பாக-இனச்சுட்டில்லா அடையாகக் கொள்ளலாம்.

ஆனால் இந்தக் கருத்து எனக்கு மனநிறைவு அளிக்கவில்லை. ஒருகால், இடப் பெயர்கள் அல்லாத வேறு பெயர்கட்கு முன் உள்ள பண்பு - அடைமொழிகள் இனச்சுட்டு இல்லாதனவாயிருக்கலாம். இடம் தொடர்பான பெயர்கட்கு முன்னால் வரும் திசைப் பெயர்களை இனச்சுட்டு உள்ள பெயர்களாகவே கொள்ளல் வேண்டும்.

தொல்காப்பியரையும் பவணந்தியாரையும் யான் மறுக்கிறேன். இனச்சுட்டு இல்லாத பண்புகளே - இனச்சுட்டு இல்லாத அடைமொழிகளே இல்லை - எல்லாம் உலக வழக்கு-செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிலும் இனச் சுட்டு உள்ளவையே என்பது அடியேனது கருத்து.

8.1 ஒத்துக்கு மத்தளம்

உரையாசிரியர்கள், செஞ்ஞாயிறு - வெண்டிங்கள், வட வேங்கடம் - தென்குமரி என்னும் பூச்சாண்டிகளைக்காட்டித் தொல்காப்பியருக்கும் நன்னூலாருக்கும் ஒத்துக்கு மத்தளம் அடித்துள்ளனர்.

செஞ்ஞாயிறு - வெண்டிங்கள், வடவேங்கடம் - தென்குமரி என்பன இனச் சுட்டு உள்ளனவே என்பது அடியேனது கருத்து. இதற்கு உரிய விளக்கமாவது:-

விண்வெளியில் உள்ள கோடிக்கணக்கான கோள்களுள் கண்கட்குப் பெரியனவாய்த் தெரிவனவும் நமக்கு நன்மை பயப்பனவாயும் உள்ள கோள்கள் ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டே. இவற்றுள் ஞாயிறு செந்நிறம் உடையது போலவும், திங்கள் வெண்ணிறம் உடையது போலவும் தெரிவதால் முன்னது செஞ்ஞாயிறு எனவும், பின்னது வெண் திங்கள் எனவும் இனச் சுட்டுள்ள அடைமொழிகளைப் பெற்றுள்ளன. செஞ்ஞாயிறு இல்லையெனில் திங்களை வெண் திங்கள் எனவும், வெண் திங்கள் இல்லையெனில் ஞாயிறை செஞ்ஞாயிறு எனவும் கூறியிருக்க மாட்டார்கள். வேறு ஞாயிறுக்கு மாற்றாகச் செஞ்ஞாயிறு எனவும், வேறு திங்களுக்கு மாற்றாக வெண் திங்கள் எனவும் கூறவில்லை. இவ்விரண்டுமே ஒன்றுக்கு ஒன்று மாற்றாகும்.

8.2 எல்லைகள்

அடுத்து, வடவேங்கடம் - தென்குமரிக்குச் செல்லலாம். தெற்கே ஒரு வேங்கடம் இருப்பதால் வடவேங்கடம் என்றும், வடக்கே ஒரு குமரி இருப்பதால் தென்குமரி என்றும் கூறவில்லை. தமிழ் நாட்டின் வடக்கு எல்லை வேங்கடம் - தெற்கு எல்லை குமரி என நாட்டிற்கு எல்லைகள் கூறப்பட்டுள்ளன. வடவேங்கடம் என்பதில் உள்ள ‘வட’ என்பது வேங்கடத்திற்கு அடைமொழி. தென்குமரி என்பதிலுள்ள ‘தென்’ என்பது குமரிக்கு அடைமொழி. இவை எல்லைகளைக் குறிக்கும் அடை மொழிகளாகும். வடக்கும் தெற்கும் ஒன்றுக்கு ஒன்று மாற்றுதானே.

9. இடப்பெயர்கள்

இந்த அடிப்படையுடன் தென் புதுவைக்கு வருவோம். எந்த இடம் தொடர்பான பெயருக்கு முன்னும் உள்ள ‘தென்’ என்பது தெற்கு என்னும் பொருளையே தருவதை அறியலாம். சில காட்டுகள்;-

தென் காசி, தென் கயிலாயம், தென் கோடு, தென் பரதம், தென் பல்லி, தென் பாண்டி, தென்பார், தென் பாரதம், தென்பால், தென்பாலி, தென்புலம், தென் புலத்தார், தென் மலை, தென் மதுரை, தென்முனை, தென் வரை, தென் திசை, தென்னகர், தென்னம் பொருப்பு, தென்னுலகு, தெனாது, தென்னவன், தென் கிழக்கு, தென் மேற்கு, தென் மூலை, தென் பக்கம், தென் கோடி, தென் கடல், தென்னார்க்காடு, தென் அருணை முதலியனவாம்.

மேலே, இடப்பெயருக்கு முன் தென் என்பது தெற்கு என்னும் பொருள் தந்து நிற்பதைக் காணலாம். இந்த முறையில் நோக்குங்கால் தென் புதுவை என்பதற்குத் தெற்கே உள்ள புதுவை என்றே பொருள் கொள்ளல் வேண்டும்.

பாரதியார் கூறியுள்ள தென் புதுவை என்னும் தொடருக்கு இப்பொருள் கூற, செங்கற்பட்டு மாவட்டப் புதுச்சேரியே துணை செய்ய முடியும்.

10. பாரதியாரின் குறைபாடு

தென்புதுவை என்பதற்கு அழகிய-இனிய புதுவை எனப் பொருள் கூற முடியுமாயினும், பல புதுவைகள் இருக்கும் நிலையில், பாரதியார், எந்தத் தெளிவும் இன்றித் தென்புதுவை எனக் கூறியிருப்பது குறைபாடுடையதே. செங்கற்பட்டு மாவட்டப் புதுச்சேரியை மையமாக வைத்துப் பாரதியார் தென்புதுவை எனக் கூறினார் என்னும் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள், அழகிய-இனிய புதுவை என்று பொருள்பண்ணுவதைத் தவிர வேறு வழி இல்லை.

இது காறுங் கூறியவற்றால், பாரதிதாசனின் ஊரும் பேரும் பற்றிய விவரங்கள் ஓரளவு புலனாகும்.

கருத்து வழங்கிய கருவூலங்கள்

Life of Sir Walter Scott — by Lokhart
அரேபிய இரவுக் கதைகள் - அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
கலித்தொகை-88 - நச்சினார்க்கினியர் உரை
பெரிப்புளுஸ் - கிரேக்க ஆசிரியர்
சிவக சிந்தாமணி - 422, 423 - நச்சினார்க்கினியர் உரை
நன்னூல் - 377 - மயிலைநாதர் உரை
சிலப்பதிகாரம் - புறஞ்சேரி யிறுத்த காதை-195, 196
சுப்பிரமணிய பாரதியாரின் குயில் பாட்டு - 6, 7.
அருணைக் கலம்பகம் - எல்லப்ப நாவலர்
பெரியாழ்வார் திருமொழி - 3-3-10
பரராச சிங்கன் பாடல்
தனிப் பாடல்கள்
கம்ப ராமாயணம் - பாயிரம் - 10
தொல்காப்பியம் - கிளவி யாக்கம் - 18
நன்னூல் - பொது வியல் - 50, 51
உலக வழக்காறுகள்