இயல் தமிழ் இன்பம்/பதப் புணர்ச்சியும் விகுதிப் புணர்ச்சியும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

22. பதப் புணர்ச்சியும்
விகுதிப் புணர்ச்சியும்

1. சொல் புணர்ச்சி

‘பதப் புணர்ச்சியும் விகுதிப் புணர்ச்சியும்’ என்னும் தலைப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது. பழந்தமிழ்-புதிய தமிழ் என்பதும், பழந்தமிழ்ச் செய்திகளைப் புதிய தமிழ்க் கட்டுரையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எனவே, தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களை நான் தொடப்போவதில்லை. அவற்றை அறவே மறந்து-அதாவது-அப்படியாக எந்த ஒரு நூலும் இல்லை என்பதாகக் கற்பனை செய்து கொண்டும் நான் சொந்தமாகப் புது இலக்கணம் படைப்பவன் என்பதாக எண்ணிக்கொண்டும் செய்தியைத் தொடங்குகிறேன். இது மட்டுமன்று; மொழியியல் என்னும் ஒன்று இருப்பதாகவும் எண்ணாமல் தொடங்குகிறேன்.

பதப் புணர்ச்சி என்பதைச் சொல் புணர்ச்சி என்றும், விகுதிப் புணர்ச்சி என்பதை இறுதிநிலைப் புணர்ச்சி என்றும் தமிழில் கூறலாம். சொல் (பதப்) புணர்ச்சி என்றால் எல்லா வகைப் புணர்ச்சிகளையும் தொட வேண்டி வரும். அதாவது-உயிரீற்றுப் புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி, வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி இன்ன பிறவற்றை எல்லாம் குறிப்பிடவேண்டும். இந்தப் புணர்ச்சிகளுள் சிலவற்றைப் பற்றி நெடுங்காலமாய் யான் எண்ணியிருந்த சில செய்திகளை இவண் தரக் கடமைப்பட்டுள்ளேன்.

புணர்ச்சி என்பது செயற்கையாகச் செய்து கொண்ட ஓர் ஏற்பாடு. இந்தச் சொல்லையும் அந்தச் சொல்லையும் இணைத்து எழுதும்போது, நடுவில் இன்னின்ன நிலைமைகள் ஏற்படலாம் என்று எண்ணி யாரும் தம் சொந்த முறையில் புணர்ச்சி இலக்கணம் வகுக்க வில்லை.

முதலில் எழுத்துகள், பின் எழுத்துகளால் ஆன சொற்கள், பின் சொற்களால் ஆன சொற்றொடர்கள் என்ற காரண காரிய முறை தொடக்கக் காலத்தில் இருந்ததில்லை. அதாவது, தொடக்கக் காலத்தில், மக்கள், அ....ம்....மா.....என எழுத்து எழுத்தாகப் பேசவில்லை; அம்மா... சோறு போடு எனச் சொல் சொல்லாகவும் பேசவில்லை. அம்மா சோறு போடு என இயற்கையான சொற்றொடராகவே பேசினர்.

ஏதோ குருட்டாம் போக்கில் மக்கள் மொத்தையாக - ஒலித் தொகுப்பாகப் பேசியவற்றிலிருந்து சொற்கள் பிரித்தெடுக்கப்பட்டன. பின், சொற்களிலிருந்து எழுத்துகள் பிரித்தெடுக்கப்பட்டன. நாளடைவில், எழுத்துகள் பற்றியும் சொற்கள் பற்றியும் சொற்றொடர்கள் பற்றியும் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.

1-2 தவறான புணர்ச்சி

எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யை எள்நெய் என்று குறிப்பிட்டனர். அது நாளடைவில், எள்நெய் - எள்நெய் எண்ணெய் - எண்ணெய் என்று சொல்லும் நிலை பெற்றது. பின்னர், எள் + நெய் என்பன போன்றவை சேர்ந்தால் எண்ணெய் என்பதுபோல் ஆகும் என்ற செயற்கையான விதி கிடைத்தது. விளக்கு எரிய ஊற்றும் எண்ணெயை, விளக்கு எண்ணெய் என்றனர். இது நாளடைவில், விளக்கு எண்ணெய் - விளக்கு எண்ணெய் - விளக்கெண்ணெய் - விளக்கெண்ணெய் என்று சொல்லப்படும் நிலையை அடைந்தது. இப்படி ஆகும் அமைப்புக்குப் புணர்ச்சி இலக்கணம் என்னும் பெயர் தரப்பட்டது. ஆனால், இந்த இலக்கணம் தவறான அமைப்பாகும்; எள் நெய் என்று சொல்வதும், விளக்கு எண்ணெய் என்று சொல்வதுமே தவறு இல்லாத பொருத்தமான வழக்காறாகும்.

1-3 பொருந்தும் புணர்ச்சி

முள் பொருந்திய தண்டை உடைய தாமரையை முள் தாள் தாமரை என்றனர். இது பின்னர் முட்டாள் தாமரை முட்டாட்டாமரை என்று ஒரு வகை இலக்கண விதிப்படி எழுதப்பட்டது. முட்டாட்டாமரை என்ற பெயர் உள்ள பொருள் எதுவும் இல்லை. முள் தாள் தாமரைதான் உள்ளது. இதுவே பொருத்தமானது.

கடல் தாவு படலம் என்பதனைக் கடறாவு படலம் என ஏதோ இலக்கணம் வகுத்து எழுதினர். இது தவறு. கடல் தாவு படலம் என்பதே பொருத்தம்.

தமிழ் வித்துவானும் தமிழ் முதுகலையும் (எம்.ஏ.வும்) படித்த ஒருவர் ‘இறுதி னிலை’ என்று எழுதினார். இது இவருடைய தவறு அன்று. இலக்கண ஆசிரியர்களின் தவறாகும். இலக்கண ஆசிரியர்கள், முதல் நிலை என்பது முத நிலை-முதனிலை என்றாகும் என விதி செய்தனர். இந்தத் தவறான முறையைப் பார்த்த அந்த ஆசிரியர் இறுதினிலை என்று எழுதினார். இப்படி எழுதலாமா என்று கேட்டதற்கு முதனிலை என்று எழுதும்போது, இறுதினிலை என்றுதானே எழுத வேண்டும்?- என்று அவர் கூறினார்.

இவ்விதமாக, இலக்கண விதிகள் என்னும் பெயரால் எழுதப்படும் புணர்ச்சி விதிகள் அனைத்தும் இயற்கையானவை அல்ல - செயற்கையானவையே. அவ்வளவு ஏன்? புணர்ச்சி விதிகள் என்பன எல்லாமே தவறான முடிவுகளே.

1.4 மூவகை விகாரங்கள்

மக்கள் சொற்றொடராகப் பேசுவர் என்னும் கருத்து முன்னரே சொல்லப்பட்டது. மக்கள் சொற்றொடராகப் பேசும்போது, முதலில் நிற்கும் சொல்லும் (நிலைமொழியும்), அடுத்து வரும் சொல்லும் (வரு மொழியும்) சேரும்போது இடையில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெள்ளி + கிழமை = வெள்ளி + க் + கிழமை = வெள்ளிக் கிழமை எனவும், திரு + அடி = திரு + வ் + அடி = திருவடி எனவும், அங்கே இல்லாத எழுத்துகள் புதிதாய்த் தோன்றுகின்றன. பொன் + தாமரை = பொற்றாமரை, நல் + நாடு = நன்னாடு என்பனவற்றில், சில எழுத்துகள் வேறு எழுத்துகளாய்த் திரிகின்றன. மரம் + வேர் = மரவேர், இளம் + நீர் = இளநீர் என்பவற்றில் எழுத்துகள் கெடு கின்றன. சொற்கள் புணரும்போது ஏற்படும் மாறுதல்கள் இன்ன பிற. குளம் + வெட்டினான் = குளம் வெட்டினான் என இயல்பாக இருப்பதும் உண்டு.

1.5 பேச்சே இலக்கணம்

செயற்கைப் புணர்ச்சி முறையில் எழுதினால், இவர் இலக்கணம் படித்தவர் - இலக்கணமாக எழுதுகிறார் என்பர். ஆனால், இவை எழுத்துத் தமிழ் அல்ல - அதாவது - இலக்கியத் தமிழ் அல்ல - இவை பேச்சுத் தமிழே.

எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் பேசப்படுகின்ற பேச்சுத் தமிழ் வழக்காறுகளே, இலக்கணம் உடையவை எனக் கருதப்பட்டு இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்றபடி, மக்கள் எழுதத் தொடங்கியபோது, எதைப் பேசினார்களோ - எவ்வாறு பேசினார்களோ அதையே அவ்வாறே எழுதினர். இதை இதை - இப்படி இப்படியே எழுதல் வேண்டும் எனப் பின்னர் அறிவுறுத்தினர். இதற்குப் புணரியல் (மயங் கியல்) அதாவது புணர்ச்சி யிலக்கணம் என்னும் பெயர் சூட்டப் பட்டது.

1.6 நன்மையும் நோக்கமும்

இந்தப் புணரியல் செய்யும் நன்மை - அதன் நோக்கம் என்ன? மக்கள் மேலும் மேலும் மாறுதலாக எழுதாமல், இந்த அளவோடாவது ஒரே மாதிரியாய் எழுத வேண்டும். அப்படி இல்லையேல், மொழி இன்னும் மாறிக் கொண்டே போய் வேறொரு மொழி போன்ற நிலையை அடைந்து விடும் - இதற்கு இடம் தரலாகாது - என்பதுதான் புணர்ச்சி இலக்கணத்தின் நன்மையும் நோக்கமும் ஆகும். ஒரே மாதிரியைப் பின்பற்றாததனால்தான், சோழ நாட்டு மொழியும் பாண்டிய நாட்டு மொழியும் தமிழ் என்னும் பெயரும், சேர நாட்டு மொழி மலையாளம் என்னும் பெயரும் பெற்று வேறு வேறு மொழிகளாய் விட்டன.

இதிலிருந்து அறியக் கூடியதாவது:- இனமும் நாடும் மேலும் மேலும் பிரியாதபடி ஒருமைப்பாட்டைக் காக்கும் தகுதி இலக்கணத்திற்கு உண்டு என்பதாகும்.

இப்பொழுது நடைமுறையில் இருக்கும் புணர்ச்சி விதிகளை மிகுதியாய் மாற்றினால், பழைய எமனா- புதிய எமனா என்று கேட்டதுபோல, பழைய தமிழ் - புதிய தமிழ் என மொழி இரண்டு மொழிகளாகப் பிரிந்துவிடும் இடுக்கண் (ஆபத்து) நேர்ந்து விடலாம்.

இது தொடர்பாக நாம் இப்போது செய்யக் கூடியதாவது:- இப்போது நடைமுறையில் இருக்கும் புணர்ச்சி விதிகளுள், வேண்டியவற்றையும் பொருந்துகின்றவற்றையும் வைத்துக் கொண்டு, வேண்டாதவற்றையும் பொருந்தாதவற்றையும் விட்டு விடலாம் என்பதே.

1.7 வேண்டாப் புணர்ச்சிகள்

வேண்டாதவை என்பன:- முதல் நிலை என்பதை முதனிலை என எழுதாமல் முதல் நிலை என்றே தெளிவாய் எழுதலாம். மானும் மயிலும் என்பதை, நிலைமொழி யீற்று ‘ம்’ என்பதைக் கெடுத்து மானு மயிலும் என்று எழுதாமல், மானும் மயிலும் என்றே தெளிவாக எழுதலாம். கள் மலர் என்பதைக் கண்மலர் என்றெழுதாமல், கள் மலர் என்றே தெளிவாய் எழுதலாம். முள்தாள் தாமரை என்பதை முட்டாட்டாமரை என எழுதாமல், முள் தாள் தாமரை என்றே புரியும்படி எழுதலாம்.

1-8 வேண்டும் புணர்ச்சிகள்

இதுபோல எல்லாப் புணர்ச்சி விதிகளையும் செய்ய வேண்டிய தில்லை. கல் +அடி என்பதை, கல் + ல் + அடி என மற்றொரு ‘ல்’ இரட்டிக்கச் செய்து கல்லடி என எழுதலாம். இது, தவிர்க்க முடியாத-ஓரளவு இயற்கையான பேச்சு வழக்காகும், தொடக்கக் காலத்தின் பேச்சு வழக்கே எழுத்து வழக்காக எழுதப்பட்டது என்பதை மீண்டும் நினைவில் கொள்ளல் வேண்டும்.

8-1 கல்லடி

இங்கே, தனிக் குற்றெழுத்தின் பக்கத்தில் மெய்யெழுத்து வந்துள்ள (கல்) நிலை மொழியின் முன், உயிர்எழுத்தை முதலில் கொண்ட (அடி) வருமொழி வருமாயின், இன்னொரு மெய்யெழுத்து இரட்டித்து வரும். இவ்விதியின் படி, கல் + அடி என்பது, கல் + ல் + அடி = கல்லடி என்றாயிற்று என விதி வகுத்திருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆங்கிலத்திலும் இந்த அமைப்பு உண்டு. Big (Bi - பி, g-க் = பிக்) என்னும் தனிக் குறிலின் பின் ஒற்று வந்த நிலைமொழியின் முன், e என்னும் உயிரெழுத்தை முதலாக est (Superlative Degree) என்னும் குறயீடு வரின், இடையே மற்றொரு ‘g’ என்னும் மெய் வந்து big + g + est = biggest என்றாகும் என்னும் விதிகிடைக்கிறது. Thin + n + er = Thinner, Cut + t + ing = Cutting எனப் பல எடுத்துக்காட்டுகள் ஆங்கிலத்தில் உள்ளன.

1-8-2 காலடி

கால் + அடி = காலடி என்னும் புணர்ச்சியும் ஏற்கத்தக்கதே. கல்லடி என்பதில் கல் + ல் + அடி என ‘ல்’ இரட்டித்துள்ளது. கால் + அடி = காலடி என்பதில் ‘ல்’ இரட்டாததற்கு உரிய காரணம் என்ன? கல்லடி என்பதில், முதலெழுத்தில் ஒலி முயற்சி மிகுதியாகச் செலவழிக்கப்படவில்லை; அதனால், இரண்டாவது எழுத்தில் ஒலி முயற்சி அழுத்தம் பெறுகிறது; அதனால் ‘ல்’ இரட்டிக்கிறது. ஆனால் கால் + அடி என்பதில் முதலெழுத்தாகிய ‘கா’ என்னும் நெட்டெழுத்தின் ஒலிமுயற்சி மிகுதியாகச் செலவானதால், அடுத்த எழுத்தில் ஒலி முயற்சி குறைகிறது. அதனால் ‘ல்’ இரட்டாமல் கால் + அடி = காலடி என்றே ஒலிக்கப் படுகிறது. கடல் + ஓசை கடலோசை, அகலம் + ஆயிற்று = அகலமாயிற்று - எனத் தனிக் குறிலின் பக்கத்தில் இல்லாமல், தனி நெடிலுக்குப் பக்கத்திலும், ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் கொண்ட சொற்களின் பக்கத்திலும் உயிரை முதலாகக் கொண்ட வருமொழி வரின், நிலை மொழி ஈற்று மெய்யோடு வருமொழி முதலில் உள்ள உயிர் இணைந்து உயிர்மெய் எழுத்தாக ஒலிக்கும்.

பிரெஞ்சு மொழியிலும் இந்த அமைப்பு உண்டு. Comment allez vous என்னும் பிரெஞ்சுத் தொடரின் ஆங்கிலப் பெயர்ப்பு How are you என்பதாகும். Comment How, allez = are, Vous = you. நீர் எப்படி இருக்கிறீர்? என்பது இதன் பொருள். Comment என்பதைத் தனியாக ஒலிக்கும்போது ‘கொம்மான்’ என்றே ஒலிக்கவேண்டும். இறுதி t ஒலி பெறா ஊமை (Silent) எழுத்து. இந்த t என்பதே, Comment allez vous என்னும் தொடரில் வரும்போது ‘த்’ என்னும் தகர ஒலி பெறுகிறது. வருமொழியில் allez என a என்னும் உயிர் முதல் மொழி இருப்பதால், கொம்மான் தலே வு (Commen ta lez vous) என்று ஒலிக்கப் படுகிறது. (Comment = கொம்மான், allez = அலே, vous = வு. ஆங்கிலத்தில் ‘டி’ என்னும் டகரஒலி பெறும் t என்பது, பிரெஞ்சில் ‘தே’ எனத் தகர ஒலி பெற்று ஒலிக்கப்படும்).

1-8-3 பத்தடி

நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிர் இருப்பின், ஏதாவது ஓர் உயிர் கெடும். பத்து + அடி என்பன இணையின் பத்தடி என்றாகும். பத்து என்பதின் ஈற்றில் (த் + உ) ‘உ’ என்னும் உயிர் உள்ளது. அடி என்னும் வருமொழியின் முதலில் ‘அ’ என்னும் வரு மொழியின் முதலில் ‘அ’ என்னும் உயிர் உள்ளது. இரண்டு உயிர்கள் உடம்பு (மெய் எழுத்து) இன்றி ஒன்றா. ஆகலின், பத்து என்பதின் ஈற்று ‘உ’ கெட, பத்த் என்று நிலை மொழி உள்ளது. இதோடு ‘அ’ சேரும்போது (த்+அ=த) பத்தடி என ஆகிறது.

இந்த அமைப்பு ஆங்கிலத்திலும் உண்டு. No + one = என்பது, ஓர் 'O' கெட்டு None என்றாயிற்று. No + ever என்பது 'O' என்றும் உயிர்கெட Never என்றாயிற்று.

பிரெஞ்சிலும் இந்த அமைப்பு உண்டு. Je + ai (I have) என்பன இணையும்போது, je என்பதின் ஈற்றில் உள்ள ‘e’ என்னும் உயிர் கெட J’ai என்னும் உருவம் உண்டாகிறது. ‘e’ கெட்டது என்பதற்கு அடையாளம் ஆக j என்பதன் பக்கதில், என்னும் ‘எழுத்தெச்சக்குறி’ (Apostrophe) இடப்பட்டு J’ai என்றாயிற்று.

1.8.4 மணியொலி

உடம்பு (மெய்) இல்லாமல் இரண்டு உயிர்கள் இணைய முடியாது என்பது உண்மைதான். அவ்வாறு இணையின், இரண்டில் ஓர் உயிர் கெடும் எனக் கண்டோம். கெடுவது (பெரும்பாலும்) நிலைமொழி ஈற்று உயிர்தான். அப்படி ஓர் உயிர் கெடவில்லையாயின், இரண்டு உயிர் களையும் இணைக்க இரண்டிற்கும் இடையிலே ஏதாவது ஒரு மெய் வரவேண்டும். எ. கா.:- மணி + ஒலி = மண் இ + ஒலி = மண் இ + ய் + ஒலி = மணியொலி. இங்கே, நிலைமொழி ஈற்று இகர உயிரையும், வருமொழி முதலில் உள்ள ஒகர உயிரையும் உடம்படுத்த (இணைக்க) ‘ய்’ என்னும் மெய் இடையே வந்துள்ளது.

நிலா + ஒளி = நில் ஆ + ஒளி = நில் ஆ + வ் + ஒளி = நிலாவொளி. இங்கே நிலைமொழி ஈற்று ஆகார உயிரையும் வருமொழி முதலில் உள்ள ஒகர உயிரையும் இணைக்க ‘வ்’ என்னும் மெய் வந்துள்ளது. நாம் ஒலிக்கும் போது, நம்மையும் அறியாமல், ய் என்பதோ, வ் என்பதோ ஓடி வந்து இடையில் விழுகிறது.

இரண்டு உயிர்களை இணைக்க இடையிலே மெய் வருவது ஆங்கிலத்திலும் ஓரளவு உண்டு. ஒரு பூனை என்பதற்கு ஆங்கிலம் A cat என்பதாகும். இவ்வாறு ஒரு விலங்கு என்பதற்கு A animal என்று எழுதலாகாது. ஏனெனில், உயிர் எழுத்தாகிய, A என்னும் ஓரெழுத்து மொழிமுன், a என்னும் உயிர் முதல் வருமொழியாகிய animal வந்திருப்பதால், இடையிலே ‘n’ என்னும் மெய்யெழுத்து இட்டு An animal எனல் வேண்டும். a, e, i, o, u, என்னும் ஐந்தும் ஆங்கிலத்தில் உயிர் எழுத்துகள். (இலத்தீனில் ‘y’ என்பதும் சேர்த்து உயிர் ஆறாகும். ஆங்கிலத்திலும் copy முதலிய சில சொற்களில் y உயிரெழுத்தாக ஒலிக்கும்.)

ஆங்கிலத்தில் an animal, an egg, an idea, an ocean, an umbrella என a என்பதையும், a, e, i, o, u, என்னும் உயிரெழுத்துக்களையும் இணைக்க இடையிலே N என்னும் மெய் வந்துள்ளமையைக் காணலாம்.

A union என்பனவற்றை இணைக்கும்போது An union என்று இடையில் N இட்டு இணைக்கலாகாது. இங்கே ‘U’ என்பது, umbrella என்பதில் ‘அ’ என்ற உயிர் போல் ஒலிப்பதுபோல் இன்றி, யூனியன் என யூ என்னும் (ய் + ஊ) மெய்யெழுத்தாக ஒலிப்பதால், A union என்று தான் எழுதல் வேண்டும்.

ஆனால், ஒரு மணி நேரம் என்னும் பொருளில் ‘An hour’ என்று எழுதுகிறார்களே - இங்கே வருமொழி முதலில் உயிர் இன்றி, ‘h’ என்னும் மெய்யல்லவா உள்ளது? - என்று வினவலாம். hour என்பதில் h என்பதற்கு ஒலிப்பே இன்றி, ‘அவர்’ என உயிர் முதல் வருமொழிபோல் ஒலிப்பதால் An hour என எழுதுகின்றனர்.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என்னும் மும்மொழிகளிலிருந்து தந்த எடுத்துக்காட்டுகளால் தெரிய வருவதாவது: புணர்ச்சி விதி என்பது, மக்களின் பேச்சு வழக்காற்றை ஒட்டியே எழுந்ததாகும் என்பது.

1-8-5 பொருந்துவனவும் பொருந்தாதனவும்

எனவே, கல்லடி, காலடி, பத்தடி, மணியோசை போன்ற எளிய புணர்ச்சி விதிகளை வைத்துக் கொள்ளலாம். முட்டாட்டாமரை, கடறாவு படலம் போன்ற வலிய புணர்ச்சிகளைப் பின்பற்றாமல் விடலாம். மற்றும், ஒன்பது + பத்து என்பன சேர்ந்து தொண்ணூறு எனவும், ஒன்பது + நூறு என்பன சேர்ந்து தொள்ளாயிரம் எனவும் ஆனதாகக் கூறும் பொருளற்ற புணர்ச்சி விதிகளை அறவே அகற்றி விடலாம். ஏனெனில், ஒன்பது பத்து - ஒன்பது பத்து என ஆயிரம் முறை கூறினும் தொண்ணூறு என்னும் தொகுப்பொலி கிடைக்காது. ஒன்பது நூறு - ஒன்பது நூறு எனப் பதினாயிரம் முறை கூறினும் தொள்ளாயிரம் என்னும் தொகுப்பொலி கிடைக்காது. அதே நேரத்தில், கல் அடி, கால் அடி என்பவற்றை, கல் அடி - கல் அடி = கல்அடி, கால் அடி - கால் அடி = காலடி என ஓரிரு முறை கூறினாலுமே கல்லடி, காலடி என்னும் தொகுப்பொலிகள் கிடைக்கின்றன. எனவே, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவற்றின் புணர்ச்சி விதிகளையும் நீக்கிவிடலாம்.

இவ்வாறாக, பொருந்தும் புணர்ச்சி விதிகளையும் இயற்கையாக வேண்டத் தகும் புணர்ச்சி விதிகளையும் கொள்ளலாம். பொருந்தாத - வேண்டாத புணர்ச்சி விதிகளைத் தள்ளலாம்.

1-9 பொருள் உள்ள புணர்ச்சிகள்

இதுகாறும் இரண்டு சொற்கள் புணரும்போது உண்டாகும் தோன்றல் திரிதல் கெடுதல் ஆகியமாறுதல்களைப் பார்த்தோம். இந்த மாறுபாடுகள் எந்தப் புதுப்பொருளையும் தரவில்லை. புதுப்பொருள்கள் தரும் மாறுதல்களும் உண்டு. அவற்றுள் சில காண்போம்:

1.9.1 நாலேகால்

நால் + கால் = நால் + உ + கால் = நாலுகால். நால் + ஏ + கால் = நாலே கால். இந்த இரண்டிற்கும் பொருள் காணுங்கால் வேறுபாடு உண்டு. நாலுகால் என்பது நான்கு கால்களைக் குறிக்கிறது. நால் என்பதின் ஈற்றில் உள்ள ‘உ’ என்பதைச் சார்த்துவரும் எழுத்து சாரியை - என்பர். இந்த ‘உ’ சாரியை, தமிழினும் தெலுங்கில் மிகுதி. இந்த ‘உ’ சாரியைக்குப் பொருள் இல்லை; மக்களின் ஒலி இறுதியில் இசைபோல் நீள்கிறது என்னும் ஒருசார் ஒலி இன்பத்தைத் தவிரவேறில்லை.

ஆனால், நால் + ஏ + கால் = நாலேகால் என்பதில், இடையில் உள்ள ‘ஏ’ என்பதற்குப் பொருள் உண்டு. நாலேகால் என்பதில், நான்கு காலுக்குக் குறைவும் இல்லை - மிகுதியும் இல்லை - நான்கே கால்கள் மட்டுமே என இந்த ‘ஏ’ தேற்றப்பொருளைத் (உறுதியைத்) தருகிறது. இதற்கு வேறொரு பொருளும் உண்டு. நால் + ஏ + கால் = 4x¼= 1 (ஒன்று) என்னும் பொருள் அது. இங்கே ‘ஏ’ என்பது, பெருக்கல் குறியின் வடிவாய் நின்று, பெருக்கல் பொருளைத் தருகிறது. மற்றும், 4+¼= 4¼ என்னும் பொருளும் இதற்கு உண்டு.

1-9-2 கம்பங் கூழ்

கம்பு + கூழ் = கம்பு + அம் + கூழ் = கம்பங்கூழ் என்பதில், கம்பு - கூழ் என்பவற்றின் இடையில் உள்ள ‘அம்’ என்பதைப் பொருள் அற்ற சாரியையாக எண்ணலாகாது. கம்பால் ஆன கூழ் என மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் ஆக இந்த அம் உள்ளது. இது பொருள் உளளது.

1-9-3 கருப்பஞ்சாறு

கரும்பு + சாறு = கரும்பு + அம் + சாறு = கருப்பு + அம் + சாறு = கருப்பஞ்சாறு, என்பதில், இடையில் உள்ள ‘அம்’ என்பது, கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட சாறு என ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனுமான பொருள் தந்து நிற்கிறது. (நீக்கல் பொருள் உருபு)

1.9.4 வேலங்கிளை

வேல் + கிளை = வேல் + அம் + கிளை = வேலங்கிளை என்பதில், இடையில் உள்ள ‘அம்’ என்பது, வேலமரத்தினது கிளை என ஆறாம் வேற்றுமையின் ‘அது’ உருபுப்பொருளிலும், வேலமரத்தில் உள்ள கிளை என ஏழாம் வேற்றுமை உருபும் (இல்) பயனுமான பொருளிலும் இருப்பதாகக் கொள்ளலாம். ஆக, அம் என்பது வேற்றுமை உருபாகவும் செயல்படுகிறது.

1-9-5 குரங்கின் வால்

குரங்குவால், எலி, வளை என்பன, குரங்கினது வால், எலியினது வளை என ஆறாம் வேற்றுமைத் தொகையாக உள்ளன. குரங்கின் வால், எலியின் வளை எனினும் பொருள் அன்னவையே. ஆனால், இங்கே ‘இன்’ என்பது, ஆறாம் வேற்றுமை உருபாக உள்ளது. இதை வெற்றுச் சாரியை எனல் பொருந்தாது. குரங்கின் வால், எலியின் வளை என்பன ஆறாம் வேற்றுமை விரியாகும்.

1-9-6 மரத்தின்மேல் ஏறினான்

மரத்தின்மேல் ஏறினான், மரத்தின் கீழ் அமர்ந்தான் என்பனவற்றிலும் ‘இன்’ ஆறாம்வேற்றுமைப் பொருளில் உள்ளது. மரத்தினது மேல்பகுதியில் ஏறினான்; மரத்தினது கீழ்ப்பகுதியில் அமர்ந்தான் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். மரத்து என்பதில் உள்ள ‘அத்து’ என்பது சாரியை. இதைத் துணை உருபு என்றும் கொள்ளலாம். மரத்தின்மேல், மரத்தின்கீழ் என்பன ஆறாம் வேற்றுமை விரியாகும். மேல் ஏறினான், கீழ் அமர்ந்தான் என்பன ஏழாம் வேற்றுமைத் தொகையாகும். கண், கால், கடை, இடை, தலை, திசை, முன், பின், வலம், இடம், மேல், கீழ் உழை, உழி, உள், அகம் முதலியன இடப்பெயர்களாகும். (வேண்டுமானால், இவற்றை, ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணர்த்தும் சொல் உருபுகளாகக் கொள்ளலாம்)

1-10 ஆறாம் வேற்றுமை உருபுகள்

முருகன் வீடு, முருகன் வீடுகள் - என்பன ஆறாம் வேற்றுமைத் தொகை. இவற்றை விரிப்பின் முருகனது வீடு, முருகன் வீடுகள் என வரும். வருமொழியில் வரும் உடைமைப் பொருள் அஃறிணை ஒருமையாயிருப்பின் ‘அது’ உருபும், அஃறிணைப் பன்மையாயின் ‘அ’ உருபும் வரவேண்டும் என்பது விதி. வருமொழிப் பெயர் அஃறிணையாய் இல்லாமல், மகன், நண்பன் என்பனபோல் உயர்திணைப் பெயராயின், முருகனது மகன், முருகனது நண்பன் எனல் தவறு என்று சொல்லப்படுகிறது. எனவே, இவற்றை முருகனுக்கு மகன், முருகனுக்கு நண்பன் என நான்காம் வேற்றுமைப் பொருளுக்குக் கொண்டு செல்ல வேண்டுமாம். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்து வராது. எனவே, இதிலிருந்து தப்பிக்க, முருகனுடைய மகன், முருகனுடைய நண்பன் என ‘உடைய’ என்னும் சொல்லுருபு பயன்படுத்தப்படுகிறது. அல்லது, முருகன் வீடு, முருகன் நண்பன் எனத் தொகையாக எழுதப்படுகிறது.

1-10-1 சிக்கல்

இவ்வளவு சிக்கல் ஏன்? இங்கே ஒரு புதுத்தெளிவை ஏற்படுத்திக் கொள்ளலாம். உடைமைப் பொருள் உயர்திணையாயினும் அன்றிணையாயினும் இரண்டையும் பொதுவாகக் கருதி முருகனது வீடு, முருகனது மகன் என்று எழுதல்ாம். திருமண அழைப்பிதழ்களில் எனது மகன், எனது தம்பி என்பன போன்றனவே எழுதப்படுகின்றன்.

எனது மகன் என்றெழுதியிருந்த திருமண அழைப்பிதழ் ஒன்றை ஒருவர், திருத்தத்திற்காக என்னிடம் காட்டினர். நான், எனது மகன் என்பதை என் மகன் எனப் போட்டனுப்பினேன். எனது மகன் என முதலில் எழுதியவர் என்பதன் என்பதைப் பார்த்து விட்டு, எந்த மடையன் எனது மகன் என்பதை என் மகன் என்று போட்டான் என்று திட்டினாராம்.

1-10-2 ஆங்கிலத்தில்

இஃது இங்கனம் இருக்க, எனது மகன் என்று போடுவதையும் கூர் சீவிய இலக்கணக்காரர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள், ஆங்கிலத்திலும் ஆறாம் வேற்றுமையில் இது போன்ற சிக்கல் உள்ளதே - ஆங்கிலத்தில் மாறுதல் செய்ய ஒத்துக்கொள்வார்களா? - என வினவுகின்றனர். ஆங்கிலச் சிக்கலாவது:- மாணவனது அறை என்பதற்கு Student's Room என்று எழுதவேண்டும். மாணவர்களின் விடுதி என்பதற்கு Student’s Hostel என்று எழுதவேண்டும். அதாவது உடையவரைக் குறிக்கும் நிலை மொழி ஒருமையாயிருப்பின், ‘S’ என்னும் ஆறாம் வேற்றுமை உருபை ‘S’ என முன்னால் ‘எழுத்தெச்சக் குறி’ (Apostrophe) போட்டு எழுதவேண்டும். நிலைமொழிப்பெயர் பன்மையாயிருப்பின், S’ என S என்பதற்குப் பின்னால் ‘எழுத்தெச்சக் குறி’ போடவேண்டும். நாற்காலியின் கால்கள் என உடைய பொருள் அஃறிணையாயின் chair's legs என எழுதலாகாது. legs of the chair என உடைமைப் பொருளை முன்னும் உடைய பொருளைப் பின்னும் எழுதி இடையிலே of என்னும் ஆறாம் வேற்றுமை உருபை அமைத்தல் வேண்டும்.

தமிழில் உடைமைப் பொருள் அஃறிணையா உயர் திணையா - ஒருமையா பன்மையா என்று கருதப்படுகிறது. ஆங்கிலத்திலோ, உரிய பொருள் அஃறிணையா உயர் திணையா - ஒருமையா பன்மையா என்பது கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மாறுதல் செய்யாவிடினும், தமிழிலாவது செய்யலாமா - என அறிஞர்கள் ஆய்க.

1-11 புதுப்பித்தல்

இது காறும் சொல்புணர்ச்சி தொடர்பாக யான் கூறிய சில புதிய செய்திகளைப் புதிய தமிழில் சேர்ப்பதாக யான் எண்ணவில்லை. வழிவழி வரும் தமிழிலேயே இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் என்றே கருதுகிறேன். உரையாசிரியர்கள் புதிய புதிய கருத்துகளையும் எடுத்துக் காட்டுகளையும் சேர்த்துச் சேர்த்துச்சூடு ஆற விடாமல் செய்து தமிழைப் புதுப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால், இதை, தெனாலி ராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக ஆக்க முயன்றதுபோல், பழைய தமிழைப் புதிய தமிழாக ஆக்குவதாகக் கொள்ளலாகாது. ஒரு விட்டில் முன்னமேயே இருக்கும் பொருள்களோடு, மேலும் சில பொருள்களை வாங்கி வைத்து, வீட்டு வாழ்க்கையை அழகுடையதாகவும் வளமுடையதாகவும் ஆக்குவது போன்றதே இது. பழைய வீட்டை இடித்துப் புது வீடு கட்டுவது போன்றது அன்று இது.

2. விகுதிப் புணர்ச்சி

மேலே, இதுவரையும், சொல்லோடு சொல்புணரும் சொல் புணர்ச்சிகள் சில சொல்லப்பட்டன. இனி, சொல்லோடு இறுதி நிலை (விகுதி) புணரும் புணர்ச்சி விதிகள் பற்றிச் சில காண்பாம்:-

2-1 கள் விகுதி

கருத்து, குறிப்பு என்னும் ஒருமையுடன் ‘கள்’ என்னும் பன்மை விகுதி சேரின், இடையிலே ‘க்’ மிகுந்து கருத்துக்கள், குறிப்புக்கள் எனச் சிலர் எழுதுகின்றனர். அதாவது, வன்றொடர்க் குற்றியலுகரத்தில் வலி மிகும் என்ற அடிப்படையில் இவ்வாறு எழுதுகின்றனர். யானும் முன்பெல்லாம் இவ்வாறே எழுதினேன். இப்போது ‘க்’ மிகுக்காமல், கருத்துகள் - குறிப்புகள் என்றே எழுதுகிறேன்.

வன்றொடரின் முன் ஒரு சொல் வருமொழியாக வந்தாலேயே ஒற்று மிகவேண்டும்; விகுதி சேர்ந்தால் மிக வேண்டா - என்பது சிலரின் கருத்து. கள் என்பதும் பன்மைப் பொருள் தரும் ஒரு சொல்லேயாயினும், விளக்கு - முடுக்கு என்பவற்றோடு கள் சேர்த்து விளக்குக்கள் - முடுக்குக்கள் என்று சொல்வது, இயற்கையாயின்றி என்னவோபோல் - செயற்கையாய்த் தெரிகிறது. விளக்குகள் - முடுக்குகள் என்று சொல்வதே இயற்கையாய் - அழகாய் இருக்கிறது. இதை ஒத்துக்கொள்ள முடியாது - க் மிக்கே தீரவேண்டும் எனில், இயல்பாயும் இருக்கலாம் - மிக்கும் இருக்கலாம் - இதனை விகற்பமாகக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.

2-2 எனல்

“பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்” (குறள் - 196)

என்னும் குறளில், முதலில் உள்ள ‘எனல்’ என்பதற்கு ‘என்று சொல்லாதே (சொல்லற்க)’ என்பது பொருள். இறுதியில் உள்ள ‘எனல்’ என்பதற்கு ‘என்று சொல்லுக’ என்பது பொருள். இங்கே ‘அல்’ என்பது வியங்கோள் வினைமுற்று விகுதி. எனல் என்பதை உடன்பாட்டுப் பொருளில் சொல்லும் போது, (என் + க) என்க என்பது போல் என் + அல் = எனல் என்றாகிறது. எதிர்மறைப் பொருளில் சொல்லும்போது, என் + அல் என்பவற்றின் இடையே ஏதோ ஓர் எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டதாகச் சிலர் கூறுவர். இது பொருந்தாது. அதட்டிப் பேசும் ஒலிக்குறிப்பு இங்கே எதிர்மறைப் பொருள் தருவதல்லாமல், ‘அல்’ என்னும் விகுதியில் அன்மைப் பொருளும் மறைந்திருப்பதாகக் கொள்ளல் வேண்டும்.

2-3 புணர்ந்து கெடுதல்

புணர்ந்து கெடுதல் என்பது எண்ணத்தக்கது. சில இடங்களில் விகுதி புணர்ந்து கெட்டது எனக் கூறுவர். இது பொருந்தாது. புணர்வது ஏன்? பின் கெடுவது ஏன்? செய், உண் என்னும் முன்னிலை ஏவல் ஒருமை வினை முற்றில், ‘ஆய்’ என்னும் விகுதி புணர்ந்து பின் கெட்டதாகக் கூறுவர். அந்தோ இவர்கள் எளியர்! முதலில் புணர்வதும் பின் கெடுவதும் ஏன்? இங்கே விகுதியின்றிப் பகுதியே ஏவலைச் செய்கிறது. இன்னும் கேட்டால், செய்வாய் என்பதனினும் ‘செய்’ என்பதில், ஏவல் அழுத்தம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

மற்றும் உண் என்பது, ஐ விகுதி புணர்ந்து கெட்டு முதல் நீண்டு ‘ஊண்’ என்றாயிற்று எனவும், திரை என்பதில் ‘இ’ விகுதி புணர்ந்து கெட்டதாகவும் உரையாசிரியர்கள் சிலர் கூறுவது மிகவும் இரங்கத்தக்க நிலையாகும்.

வியங்கோளில் இக்காலத்தில் ‘அல்’ விகுதி பயன் படுத்தப்படுவதில்லை. வாழ்க போல் வாழிய என்பது உண்டு. வாழியர் என்னும் வழக்கு குறைந்துவிட்டது. அதாவது, ‘இயர்’ என்னும் வியங்கோள் விகுதி அருகி விட்டது.

2-4 அல்ல

இந்த வேலையைச் செய்த வினைமுதல் அவன் அல்லன், அவள் அல்லள், அவர் அல்லர், அது அன்று, அவை அல்ல என்று எழுதவேண்டும் என்கின்றனர். அதாவது பால் விகுதிகள் போட்டு எழுதவேண்டும். ஆனால், பலர், அவன் அல்ல - அவர் அல்ல - அது அல்ல - அவை அல்ல என்றே எழுதுகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், அவன் இல்லை, அவள் இல்லை, அவர் இல்லை, அது இல்லை, அவை இல்லை என்று கூறும் ‘இல்லை’ என்ற பொதுச் சொல்போல அல்ல என்பதைக் கொள்ளல் வேண்டும்.

2-5 எல்லாரும்

நாங்கள் எல்லேமும் படித்தோம், நீவிர் எல்லீரும் படிப்பீர், அவர்கள் எல்லாரும் படிப்பார்கள் என, தன்மைப் பன்மையை எல்லேமும் என்பதாலும், முன்னிலைப் பன்மையை எல்லீரும் என்பதாலும், படர்க்கைப் பன்மையை எல்லாரும் என்பதாலும் குறிப்பிடவேண்டும் என்கின்றனர். இப்போது பலர் நாங்கள் எல்லாரும், நீங்கள் எல்லாரும், அவர்கள் எல்லாரும் என்றே எழுதுகின்றனர். தன்மைப் பன்மையின் ‘ஏம்’ விகுதியையும், முன்னிலைப் பன்மையின் ‘ஈர்’ விகுதியையும் இவர்கள் விட்டுவிட்டனர். எதிர் காலப் போக்கில், ஆர் விகுதி ஏற்ற எல்லாரும் என்பதே நிலைத்து விடும்போல் தெரிகிறது.

2-6 விகுதி மேல் விகுதி

‘உண்’ என்பது, ‘நீ உண்’ எனத் தன்வினைப் பொருளும், ‘உண்பி’ என்பது, (அவனை) உண்ணச்செய் எனப் பிற வினைப்பொருளும் தருகின்றன. நட, நடப்பி போன்றனவும் இன்னவே. இங்கே ‘பி’ விகுதி சேர்ந்து தன்வினையைப் பிறவினையாக்குவது சுவையாயுள்ளது. ஆங்கிலத்தில் இவற்றை, Make him eat, Make him walk என்பர். Make என்னும் ஒரு சொல்லின் வேலையை, தமிழில் ‘பி’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியாகிய விகுதியே செய்து விடுகிறது. உண்பிப்பி என விகுதிமேல் விகுதி வரும் சொல், நீ உண் - நீ அவனை உண்ணச் செய் - என்ற பொருளைத் தராமல், நீ அவனிடம் (சமையல்காரனிடம்) சொல்லி விருந்தினரை உண்ணச்செய் என்ற பொருளைத் தருவது சுவைமேல் சுவையாயுள்ளது. ஆனால், உண்பிப்பி, நடப்பிப்பி என விகுதிமேல் விகுதி இட்டு வழங்குவது இக்காலத்தில் அருகிவிட்டது.

பழங்கால வழக்குகளாகிய என்றிசினோர், என்மனார், என்மர் என்பனவற்றிலுள்ள விகுதிகளைப் பயன்படுத்தி எழுதுவது பெரும்பாலும் இப்போது இல்லை.

2-7 உடுக்கை

சில சொற்களில் இரண்டு விதமான விகுதிகள் இருப்பதுண்டு. உடுக்கை என்பதற்கு உடுத்தல் என்று பொருள் கொள்ளின் ‘கை’ விகுதியும், உடுக்கப்படும் உடை எனச் செயப்பாட்டு வினைப்பொருள் கொள்ளின் ‘ஐ’ விகுதியும் இருப்பதாகக் கொள்ளப்படுகின்றன.

கால விகுதிகள்

ஒரு வினை முற்றில் முதல் நிலையாகிய பகுதியின் வேலை வினை அதாவது செயல் இன்னது என்பதை அறிவிப்பது. இடையில் உள்ள இடை நிலையின் வேலை காலத்தை அறிவிப்பது. இறுதியில் நிற்கும் விகுதியின் வேலை வினைமுதலை (வினை செய்தபொருளை) உணர்த்துவது. செல்கிறான் என்பதில், செல் என்னும் பகுதி செல்லுதல் என்னும் செயலையும், கிறு என்னும் இடைநிலை நிகழ்காலத்தையும், ஆன் என்னும் விகுதி செய்கிறவன் ஓர் ஆண்மகன் என்னும் வினை முதலையும் அறிவிக்கின்றன. சில வினை முற்றுகளில், இடைநிலை செய்யும் காலம் காட்டும் வேலையை விகுதிகளே செய்து விடுகின்றன.

2-8-1 கும்டும்

உண்கு - உண்கும் - கு, கும் எதிர்காலம் காட்டுகின்றன. சென்று - சேறும் - று, றும் முறையே இறப்பும் எதிர்வும் காட்டுகின்றன. வந்து - வருதும் - து, தும் முறையே இறப்பும் எதிர்வும் அறிவிக்கின்றன. உண்டு - உண்டும் - டு, டும் இறந்த காலம் அறிவிக்கின்றன. இவ்விகுதிகள் இப்போது அருகிவிட்டன.

2-8-2 செய்யும் முற்று

‘உம்’ விகுதி ஏற்ற செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலமும் எதிர்காலமும் காட்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இது எதிர்காலம் காட்டும் என்பதே பொருத்தம். எப்போதும் நிலையாயுள்ளதைக் குறிக்கும் பொருளிலும் இது வரும். எ. கா: தண்ணீர் குளிரும்; நெருப்பு சுடும்.

2-8-3 செய்யும் பெயரெச்சம்

வேலை செய்யும் பையன், என்பதில் உள்ள செய்யும்’ என்னும் பெயரெச்சத்தின் விகுதியாகிய ‘உம்’ என்பதும் எதிர்காலம் காட்டும்.

செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றும் இன்னதே. மலையாள மொழியில் ஒரே வினைமுற்று உருவம் எல்லாப் பாலுக்கும் வருவது போன்றது இது. அவன் வரும், அவள் வரும், அது வரும், அவை வரும் என நான்கு பால்கட்கும் பொதுவாய் நிற்கும் இந்த நிலை, இலக்கணம் கல்லாதார்க்குக் குழப்பம் விளைவிக்கும். எனவே, இந்த அமைப்பை நீக்கவும் செய்யலாம்.

2-9 வினையெச்ச விகுதிகள்

இறுதியாக வினையெச்ச விகுதிகளை நோக்கிச் சென்று பயணத்தை முடிக்கலாம். அவன் ஊணை விழுங்கா உறுபசி நீக்கினான் - என்பதில் உள்ள ‘விழுங்கா’ என்பது எதிர் மறைபோல் சொன்மைக்குத் தெரிகிறது. ஆனால், அதற்குப் பொருண்மையில் ‘விழுங்கி’ எனப் பொருள் கொள்ளல் வேண்டும். எதிர்மறைபோல் இருப்பதற்கு உடன்பாட்டுப் பொருள் கொள்வது பற்றிச் சிலர் வியப்படைகின்றனர். இதற்குச் ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் என்று பெயர் கூறுவர்.

2-9-1 வினையெச்ச வாய்பாடுகள்

வினையெச்சத்திற்குச் செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர், செயற்கென முதலிய வாய்பாடுகள் உரியனவாகச் சொல்லப்பட் டுள்ளன. இவற்றின் இறுதியில் உள்ள, உ, பு, ஆ, ஊ, என, அ, இன், இய, இயர் என்பன முறையே இவற்றின் விகுதிகளாகும். உ, பு, ஊ முதலிய விகுதிகளைப் போல ‘ஆ’ என்பதும் வினையெச்ச விகுதியாகும். இது, மாடுகள் மண்ணைத் தின்னா என்பதில் உள்ள தின்னா என்பதன் ஈற்றில் உள்ள ‘ஆ’ என்னும் எதிர்மறை வினைமுற்று விகுதி போன்ற தன்று. செய்யா என்றால் செய்து - விழுங்கா என்றால் விழுங்கி என்னும் பொருள் தரும் உடன்பாட்டு வினையெச்ச விகுதியாகும். செய் + பு = செய்பு, செய் + ஊ = செய்யூ என்பனபோல், செய் + ஆ = செய்யா எனக் கருத்து கொள்ளல் வேண்டும்.

செய்து என்னும் பொருளிலுள்ள செய்பு, செய்யா, செய்யூ என்பனவற்றின் இறுதியில் உள்ள பு, ஆ, ஊ என்னும் விகுதிகளே இறந்த காலம் காட்டுகின்றன. செய என்பதில் ‘அ’ விகுதி நிகழ் காலம் காட்டும். செயின், செய்யிய, செய்யியர் என்பவற்றில் உள்ள இன், இய, இயர் என்னும் விகுதிகள் எதிர் காலம் காட்டும். இவற்றுள், செய்து, செய, செயின் என்னும் வாய்பாடுகளே இன்று பெருவாரியாகப் பின்பற்றப்படுகின்றன. செய்யா, செய்யிய என்பன செய்யுளில் ஓரளவு பின்பற்றப்படுகின்றன. செய்பு, செய்யூ, செய்தென, செய்யியர் என்பன வழக்கில் அருகி விட்டன.

2-9-2 செய வாய்பாடு:- நிகழ்காலம்

‘செய’ என்னும் வாய்பாடு நிகழ் காலம் காட்டும் எனப்பட்டது. அவன் படிக்கக்கண்டேன் - என்ற இடத்தில் ‘படிக்க’ என்னும் செய வாய்பாடு நிகழ்காலம் காட்டுகிறது. காணும்போது அவன் படித்துக்கொண்டிருந்தான். அதனால் இது நிகழ்காலமாகும்.

2-9-2-1 காரணப் பொருள் - இறப்பு

நீர் பாய்ச்ச நெல் விளைந்தது என்பதில் உள்ள ‘பாய்ச்ச’ என்னும் செய வாய்பாடு, காரணப்பொருளில் உள்ள வினை யெச்சம் எனப்படும். நீர் பாய்ச்சிய காரணத்தால்தானே நெல் விளைந்தது? நீர் பாய்ச்சிய பின் நெல் விளைந்ததால், ‘பாய்ச்ச’ என்பது இறந்த காலப் பொருளுடையது என்றும் கூறலாம்.

2-9-2-2 காரியப் பொருள் - எதிர்வு

நெல் விளைய நீர் பாய்ச்சினார் என்பதில் உள்ள ‘விளைய’ என்னும் செய வாய்பாடு, காரியப் பொருளில் உள்ள வினையெச்சம் எனப்படும். நெல் விளைந்தாக வேண்டிய காரியத்திற்காகத்தானே நீர் பாய்ச்சப்பட்டது. இனி எதிர் காலத்தில் நெல் விளைவதற்காகத்தானே நீர் பாய்ச்சினார்கள்? எனவே, ‘விளைய’ என்பது எதிர்கால வினையெச்சப் பொருளில் உள்ளது.

2-9-3 செய்யி வாய்பாடு

வினையெச்ச வாய்பாடு தெரிவித்தவர்கள், 'இ’ என்னும் விகுதியில் முடியும் வினையெச்ச வாய்பாடு பற்றி ஒன்றும் கூறவில்லை. இது இறந்த காலம் குறிப்பதாகும். ஓடிப் போனான், விழுங்கி விட்டான், வருந்தி இருந்தான் - என்பவற்றில் உள்ள ஓடி, விழுங்கி, வருந்தி என்பன ‘இ’ என்னும் விகுதி கொண்ட இறந்த கால வினையெச்சங்களாகும். இவற்றை, ஓடு + இ = ஓடி, விழுங்கு + இ = விழுங்கி, வருந்து + இ = வருந்தி எனப் பகுதியும் விகுதியுமாகப் பிரிக்கலாம். எனவே, இவற்றிற்குச் ‘செய்யி’ என்னும் வாய்பாடு என்று பெயர் சூட்டலாம். செய் + இ = செய்யி. ஆ ஊ சேர்த்து செய்யா, செய்யூ என்னும் வாய்பாடு அமைத்தவர்கள் செய் + இ = செய்யி என்ற வாய்பாட்டை அமைக்காதது வியப்பாயுள்ளது.

உகரம் கடதற ஊர்ந்து இயல்பாயும், ஏனை எழுத்து ஊர்ந்து இகரமாய்த் திரிந்தும், நெடிலீற்று முதனிலை முன்னர் யகரம் வரத் தான் கெட்டும், இறந்த காலம் பற்றி வரும்-என்று தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையர் கூறியுள்ளார்.

‘உ’ என்பது ‘இ’ எனத் திரிந்தது என்று சொல்வது பொருந்தாது. ஓடி, ஆடி, வருந்தி, திருந்தி, மயங்கி, தயங்கி என்பன போன்ற ‘இ’ ஈற்று இறந்த கால வினையெச்சங்களின் இறுதியில் உள்ள ‘இ’ என்பதை நீக்கிவிடின், ஓடு, ஆடு, வருந்து, திருந்து, மயங்கு, தயங்கு எனக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களையே காண முடியும். இவற்றின் இறுதியில் உள்ள ‘உ’ என்பது ‘இ’ ஆகத் திரியவில்லை. இந்தக் குற்றியலுகரங்கள் கெட, நிற்கின்ற ட், த், க் என்ற மெய் மேல் ‘இ’ ஏறி ஓடி, திருந்தி, தயங்கி என இறந்தகால வினையெச்சங்கள் உருவாயின.

செய் என்பதோடு பு, ஆ, ஊ என்பன சேரின் செய்பு, செய்யா, செய்யூ என்னும் இறந்த கால வினையெச்சங்கள் உருவாகின்றன. செய் என்பதோடு ‘உ’ சேரவேண்டுமாயின், கொய்து, கண்டு, சென்று என த் (த்+உ = து), ட் (ட்+ உ = டு), ற் (ற்+உ = று) என்னும் இறந்த கால இடை நிலைகள் ‘செய்' என்பதற்கும் 'உ' என்பதற்கும் இடையே வரும்.

செய்பு, செய்யா, செய்யூ என்பன போல, ‘இ’ என்னும் விகுதி சேர்த்து (செய் + இ =) ‘செய்யி’ என்னும் வாய்ப்பாட்டைப் புதிதாக உருவாக்கலாம்.

கொய், பெய் போன்ற வினைச் சொற்களின் அடிப்படையில் வாய்பாடு அமைக்காமல், ‘செய்’ என்பதன் அடிப்படையாகக் கொண்டு வாய்பாடு அமைத்திருப்பதின் காரணம், எல்லாத் தொழிலும் செய்யப்படுவது ஆதலின், என்க - எனவே, செய் என்பது வினைச்சொற்களின் பொதுப் பேராட்சியாக (பிரதிநிதியாக) ஆக்கப் பெற்றது. போய், ஆய், உடீஇ, நிலைஇ என்பன சிறு வரவினவாதலின் வாய்பாடு சொல்லப்படவில்லை.