இயல் தமிழ் இன்பம்/மெய்ப்பாடு-ஓர் அறிமுகம்

விக்கிமூலம் இலிருந்து

23. மெய்ப்பாடு-ஓர் அறிமுகம்

“மங்கை ஒருத்தி தரும் சுகமும்
எங்கள் மாதமிழ்க்கு ஈடில்லை” (பாரதிதாசன்)

“தேருந்தொறும் இனிதாம் தமிழ்போன்று
இவள் செங்கனிவாய்
ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம்
என தாருயிர்க்கே”
(தஞ்சை வாணன் கோவை-பொய்யாமொழிப் புலவர்)

“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு”(குறள் - 783)

“Who entertains the harmless day
with a well – chosen book or a friend”
(Charaeter of The Happy Life by Henry Wotten)

மேற்காட்டியுள்ள பாடல்கள் இலக்கிய இன்பச் சுவையின் சிறப்பினை விளக்குகின்றன. தேர்ந்த இலக்கியப் படைப்பாளர்கள், எந்தச் செயலையும் கலை நயம்பெறக் கூறுவதில் வல்லவர்கள். மகிழ்ச்சிக்கு உரிய செயல் மட்டுமன்று; துன்பத்திற்கு உரிய நிகழ்ச்சியாயினும் அதனைச் சுவைமிக விளக்குவர், எடுத்துக்காட்டுகள் சில காண்போமே:-

அகவை மிகவும் முதிர்த்த முதியவள் ஒருத்தி தன் வாழ்நாளைப் பழிக்கிறாள். நான் இவ்வளவு நாள் வாழ்ந்து கிழித்தது போதாதா? இன்னும் எத்தனை ஆண்டு காலம் என் தலைமேல் போட்டு வைக்கப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை; இந்தப் பாழாய்ப்போன சாவு எப்போது வருமோ எனப் புலம்புகிறாள். ‘முக்காலுக்கு ஏகாமுன்’ என்ற காள மேகத்தின் தனிப் பாடலுக்கு மாறாக, மூன்றாவது காலாகிய கோலின் துணைகொண்டே இரண்டு கால்களையும் இயங்கச் செய்கிறாள். எட்டி எட்டி அடி எடுத்து வைக்க வில்லை; அங்குலம்-அங்குலமாக நகர்கிறாள். உணவு இல்லாத பசி ஒரு புறம் வாட்டுகின்றது. தலைமயிர் வெள்ளை நூல் கற்றையை விரித்துப் போட்டாற்போல் இருக்கிறது. கண் தெரிந்தாலும் நடையில் சிறிதாவது முன்னேற்றம் இருக்கலாம்; கண்ணும் தெரியாது. கால்களின் வேலைக்கு உதவும் கோலே கண்களின் வேலைக்கும் உதவுகிறது. அதாவது, கோலே காலாக, கோலே கண்ணாகக் கொண்டு முற்றம் வரைக்குங் கூடப்போக முடியாதவளாக உள்ளாள். முதுமையால் ஏற்பட்ட தாழ்வு இது.

இவள்தான் இப்படியெனில், இவளுடைய மருமகள் பேரப் பிள்ளைகள் உட்பட்ட இவளது குடும்பத்தின் நிலை இன்னும் கொடிது. குழந்தைக்குப் பிற உணவுகளிலும் தாய்ப்பால் உணவே மிகவும் இன்றியமையாதது என்று செயற்படுத்தி வாழ்ந்த பழங்காலம் அது. தாய்ப்பால் குடிக்கும் பருவத்தில் போதிய தாய்ப்பால் கிடைக்கா விட்டாலேயே பிற உணவுப் பொருள்களை நாடுதல் மரபு. இந்த வீட்டுக் குழந்தைகட்கோ, வேறு உணவுப் பொருள் என்பது அறியாத ஒன்றாகும். எனவே, அவை தாய்ப்பாலையே நம்பித் தாயின் முலைகளிலிருந்து பால் குடிக்க வில்லை - பால் வந்தால் அல்லவா குடிக்கலாம் - பால் இருந்தால் அல்லவா வரும். எனவே, பால் வருமா எனத் தாயின் முலைகளைப் பிசைந்து பார்க்கின்றனர்; பால் வரவில்லை; எனவே, முலையை மென்று தின்பதுபோல் வாய்களை அசைத்துக் கொண்டிருக்கின்றனர். தாயின் இரண்டு பக்க இடுப்புகளிலும் பல சிறு பிள்ளைகள் அமர்ந்துகொண்டு இவ்வாறு செய்கின்றனராம்.

கணவனும் மனைவியும் படுக்கையறையில் தாராளமாக நடந்துகொண்ட பழங்காலம் அது. அதனால், ஒரு குழந்தை பால் மறப்பதற்கு முன்பே - அதாவது அக்குழந்தை பிறந்த பன்னிரண்டாவது மாதத்திலேயே அடுத்த குழந்தை பிறந்து விடுகிறது. பிறந்த குழந்தையைப் பால் குடிக்கவிடாமல் முன் குழந்தை போட்டி போட்டு அழுது அடம் பிடிக்கிறது. ஒரு வயதுக் குழந்தையோடு அதற்கும் முந்திய குழந்தையும் போட்டி போடுகிறது. பசி… பசி… பசி. எனவே பல குழந்தைகள் இடுப்பைச் சுற்றி அமர்ந்துகொண்டு தாயின் முலைகளை முற்றுகையிட்டுள்ளன. வளமான உடம்பு உடையவர்களிலும் வளமற்ற உடலினார்க்குக் குழந்தை மிகுதியாய்ப் பிறக்கும் என்னும் கருத்தும் ஈண்டு எண்ணத் தக்கது.

முதலிலேயே உடல் மெலிவு; துயரமோ மிகுதி - மிகுதி. மேலும் இவ்வாறு குழந்தைகள் பிசைந்து தின்பதால் சீர் அற்ற முலைகளுடன் தாய் பெரிதும் மனம் உடைந்து போனாள். என் செய்வது! உணவு என்ற பேரில் ஏதாவது ஆக்க வேண்டுமே. தோட்டத்துக் குப்பைக் கீரையின் நினைவு வந்தது. குப்பைக் கீரை வற்றாத ‘அமுத சுரபி’யாக நாள்தோறும் அடைக்கலம் தந்து வந்தது. கீரைச் செடிகள் பறிக்கப் பறிக்க மொட்டையாய் விட்டன. வறுமை வந்தும் ஏதாவது அளிக்கும் வள்ளல் போல, மொட்டையாகியும், அதிலிருந்து புதிதாய்க் கிளைத்து முற்றாமல் இருக்கின்ற இளங்கொழுந்துகளைப் பறித்து, வந்தாள், அடுப்பில் நீர் உலை வைத்து அதில் குப்பைக் கீரைக்கொழுந்துகளை இட்டு வேக வைத்தாள். கொழுந்து பஞ்சாய் விட்டது, உப்பு ஒரு கேடா? இருந்தால் தானே உப்பு போடலாம். உப்புக்கே வழியில்லை எனில், மோருக்கு எங்கே போவது? வெற்றுக்கீரைத் தண்ணீரே எல்லாருக்கும் உணவாகின்றது. உயர்ந்த உணவு மறக்கப்பட்டது.

ஆள்பாதி - ஆடைபாதி என்பார்கள். அவளது உடையோ அழுக்கேறிய உடை, அஃதும் உடம்பு முழுவதையும் மறைக்கமுடியாத அவை, குறை ஆடை, இக்காலத்தில் உடைவளம் இருந்தும், புதுநாகரிகக் கொடுமையின் பேரால் சிலர் அரைகுறையாய் உள்ளார்களே - அவள் நிலை இன்னதன்று. இல்லாத ஏழமையால் இந்த நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், எல்லாரையும் காப்பதாகக் கூறும் அவள் போற்றவா செய்வாள்? மாறாக, (பாழுந் தெய்வமே! உன் தலையில் ஓர் இடிவிழக் கூடாதா என்று சொல்லாமல் உள்ளத்தில் உன்னித்) தெய்வத்தைத் திட்டுகின்றாள். வாழ்க்கையில் ஓர் இன்பமும் துய்த்தவள் அல்லள். மற்றும், உன்னைக் கட்டிக்கொண்டு என்ன நலம் கண்டேன்? நல்ல துணிமணி உண்டா? நகை நட்டு உண்டா? ஆரவார உணவு உண்டா? என்றெல்லாம் கூறிக் கணவனைத் திட்டினாளா? அதுதான் இல்லை. ஐயோ! நம் கணவர் இந்தப்பாடு படுகிறாரே - அவர் நன்றாய் இருக்க வேண்டும் - என்று கணவன்மேல் அன்பு செலுத்துகிறாள். இதுதான் தலைக்கற்போ!

இந்தச் செய்தி, குமண மன்னனைப் புலவர் பெருஞ் சித்திரனார் பாடிய புறநானூற்றுப்பாடல் ஒன்றில் உள்ளது. பாடல் பகுதி வருக:

“வாழு நாளோ டியாண்டுபல உண்மையின்
திர்தல் செல்லா தென்னுயிரெனப் பலபுலந்து
கோல்கா லாகக் குறும்பல ஒதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்துயின்று

முன்றில் போகா முதிர்வினள் யாயும்
பசந்த மேனியொடு படரட வருந்தி
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்து தின வாடிய முலையள் பெரிதழிந்து,
குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
நீர் உலையாக ஏற்றி மோரின்று
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம்பழியாத்
துல்வா ளாகிய என்வெய் யோளும்
என்றாங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப” (159:1-15)

என்பது பாடல் பகுதி. குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடிய அடுத்த பாட்டிலும் இந்த நிலையைக் காணலாம்.

வீட்டில் உணவு இல்லாமையால் குழந்தைச் சிறுவன் வீட்டை மறந்து வெளியிலேயே இருந்தான். எவ்வளவு நேரந்தான் பசியோடு வெளியில் இருக்க முடியும்? அம்மாவிடம் பால் குடிக்கலாம் என்று வந்து தாயின் பால் இல்லாத வற்றிய முலையைச் சுவைத்துப் பார்த்தான்; பால் வரவில்லை. கூழாவது சோறாவது இருக்குமா என்று உணவுக் கலங்களை (பாத்திரங்களை) யெல்லாம் முறையாகத் திறந்து திறந்து பார்த்தான்; ஒன்றும் இல்லை. உடனே பசி தாங்காமல் அழத் தொடங்கி விட்டான். அவனது அழுகையை நிறுத்தத் தாய் என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்க்கிறாள்: ‘அதோ புலி வருகிறது - நீ அழுதாயானால் அது பிடித்துக்கொண்டு போய்விடும்’ என்று சொல்லிப் பார்த்தாள் முடியவில்லை. அதோ நிலா பார் - எவ்வளவு அழகாயிருக்கிறது பார்’ என்று நிலாவைக் காட்டினாள் - அழுகை நிற்கவில்லை. ‘அப்பா இப்படித்தான் இருப்பார் என்று அப்பாபோல் நடித்துக் கோணங்கி காட்டுவாயே - அதுபோல் இப்போது காட்டு பார்க்கலாம்’ - என்று ஒரு போக்குக் காட்டிப் பார்த்தாள் - பயனில்லை. தாய் ஒன்றும் செய்வதறியாது சொல் லொணாத்துயர் உழந்தாள். இந்தக் கருத்தமைந்த புற நானுற்றுப் பாடல் பகுதியாவது:-

“இல்லுணாத் துறத்தலின் இல்மறந் துறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பால்இல் வறு முலை சுவைத்தனன் பெறா அன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள்ளில் வறுங்கலம் திறந்தழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தன ளாகி நுந்தையை உள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும்
வினவ லானா ளாகி நனவின்
அல்லல் உழப்போள்......” (160:17-26)

என்பது பாடல் பகுதி. இப்பாடல்களைப் போலவே வறுமையின் எல்லையைக் காட்டுகிற - குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் பகுதியைக் காண்போம்.

நீண்ட நாளாய் ஆக்குவதை (சமையலை) மறந்தே விட்ட - கொம்மைகள் உயர்ந்துள்ள அடுப்பிற்குள் ஆம்பி (காளான்) பூத்திருக்கிறது. பசி தாங்க முடியாமல், பால் இன்மையால் தோலோடு தோலாய் ஒட்டிச் சுருங்கிப் பால் வரும் கண்ணும் (துவாரமும்) அடைபட்டுவிட்டதாயின் பொல்லாத வெற்று முலைகளைச் சுவைத்துச் சுவைத்துப் பார்த்தும் பால் கிடைக்காமையால் ‘ஓ’ என அழுகின்ற குழந்தையின் முகத்தைத் தாய் நோக்கிக் கண்களை நீர் நிறைந்த குளமாக்கிக் கொண்டாள். பாடல் பகுதி வருக:-

“ஆடு நனி மறந்த கோடுயர் அடுப்பில்
ஆம்பி பூம்பத் தேம்பு பசி உழவாப்

பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறு அழூஉந்தன் மகத்துமுகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண் என்
மனையோள்......” (164: 1-7)

என்பது பாடல் பகுதி.

மேலே தந்துள்ள பாடல்களில் முதுமை - வறுமை ஆகியவற்றின் உயர் எல்லைகள் ஓவியப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன.

தன்னிலும் இளையவர்களைப்போல் தான் இயங்க முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையால், முதியவள் தன் வாழ்நாளைப் பழிக்கிறாள். குழந்தைகளும் தாயும் அழுவது, அவர்களின் வறுமையின் கொடுமையினைப் புலப்படுத்துகிறது.

முதுமையையும் வறுமையையும் புலவர்கள் சொல் ஓவியப்படுத்தியிருப்பது அவர்களின் புலமையின் வளமையை அறிவிக்கிறது. இத்தகு புலமைத் திறமையை ஒரு கலை என்று கூறலாம். இத்தகைய கலை அமைப்பு இல்லையேல், படிப்பவர்கள் பாடலை இன்புடன் சுவைத்துப் படிக்க இயலாது.

இது பாடல் கலை-அதாவது இலக்கியக் கலை மட்டும் அன்று; இதனை நாடகக் கலை என்றும் கூறலாம். இங்கே அறிவிக்கப்பட்டுள்ள முதியவள், குழந்தைகள், தாய் ஆகியோர் செயல்பட்டிருப்பதைப்போல் அப்படியே நாடகத்தில் நடித்துக் காட்டின், மக்கள் இலக்கியத்தைச் சுவைப்பது போலவே நாடகத்தையும் சுவைப்பர்.

இந்தத் துறையில், நாடகத்தையும், இலக்கியத்தையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் எனலாம். இலக்கியத்தினும் நாடகமே முந்தியது. தொடக்கக் காலத்தில் அதாவது எழுதப்படிக்கத் தெரியாத காலத்திலேயே - எழுத்து கண்டு பிடிக்காத காலத்திலேயே கூத்து அதாவது நாடகம் வழக்கத்தில் இருந்தது. பின்னர், நடித்த நாடகங்கள் எழுதப்பட்டன. பின்னர், எழுதப்பட்ட நாடகங்கள் நடிக்கப்பட்டன. இங்ஙனமாகப் பாடலும் நடிப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருந்தன.

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்” (குறள் - 706)

என்றபடி, அகத்தில் (மனத்தில்) உள்ளதை முகத்தில் தெரியும் குறிகளால் அறிவதன்றி, மற்ற மெய்யுறுப்புகள் செய்யும் செயலினாலும் அகத்தில் உள்ளதை அறிந்து கொள்ளலாம். அதாவது, அகத்தில் உள்ளதை, மெய்யில் (உடம்பில்) தெரியும் குறிகளாலும் செயல்களாலும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அகத்தில் உள்ளதை மெய்யின் செயல்பாடு கொண்டு அறிந்து கொள்வதற்கு மெய்ப்பாடு (மெய்+பாடு = மெய்யில் படுவது - தெரிவது) என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

புறநானூற்றுப் பாடலில், முதியோர் பல புலந்தாள், குறும்பல ஒதுங்கினாள், கண்துயின்றாள், மூன்றில் போக முடியாதாள் எனக் கூறப்பட்டிருப்பன முதுமையால் ஏற்பட்ட மெய்ப்பாடுகளாகும்.

புலவரின் மனைவி தொடர்பாகக் கூறப்பட்டுள்ள பசந்த மேனி, படர் அட வருந்தி, வாடிய முலையள், பெரிது அழிந்து, முற்றா இளந்தளிர் கொய்து, உப்பு இன்று, நீர் உலையாக, மோர் இன்று, அவிழ்ப்பதம் மறந்து, அடகு மிசைந்து, மாசொடு, குறைந்த உடுக்கையள், அறம் பழியா, துவ்வாள் என்பன வறுமை காரணமாக ஏற்பட்ட மெய்ப்பாடுகளாகும்.

‘நீர் உலையாக ஏற்றி’ என்பது, பாலையோ - மோரையோ உலையாக ஏற்றும் பண்டைய பழக்கம் ஒன்றை அறிவிக்கிறது. வேறு இல்லாமையால் நீரையே உலையாக ஏற்றினாள். பால்-மோர் இல்லாவிடினும், அரிசி களைந்த நீரையாவது, சோறு வடித்த கஞ்சி நீரையாவது, ஏற்றுவதும் உண்டு இதனை,

“தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலினூங்கு இனிய தில்” (1065)

என்னும் குறளாலும் அறியலாம். பாலோ-மோரோ, வடித்த கஞ்சி நீரோ - எதுவும் இன்றி எந்தப் பசையும் இன்றித் தெளிந்த நீர் உலையிலே ஆக்கிய எளிய உணவாயினும், தன் உழைப்பால் கிடைத்ததை உண்ணலினும் இனிய உணவு வேறொன்றும் இல்லை என்பது இக்குறட்பாவின் கருத்து.

அடுத்த பாடலும் இன்னதே. இல் உணாத் துறத்தல், இல்லம் மறந்து உறைதல், வறு முலை சுவைத்தல், பெறாமை, வறுங்கலம் திறத்தல், அழுதல், மறப்புலி உரைத்தல், மதியம் காட்டுதல், தந்தையின் செவ்வி காட்டுதல், அல்லல் உழத்தல் - என்பன வறுமை காரணமாக ஏற்பட்ட அழுகை நிலை - வறுமை காரணமாக ஏற்பட்ட மெய்ப்பாட்டுச் செயல்கள்.

இத்தகைய மெய்ப்பாடுகள் பற்றித் தொல்காப்பியர் தம் தொல்காப்பிய நூலின் பொருளதிகாரத்தில் ‘மெய்ப் பாட்டியல்’ என ஒரு தனி இயலே அமைத்து விளக்கியுள்ளார்.

மெய் என்பதற்கு மெய்ம்மை - பொருண்மை எனப் பொருள் கொண்டு, உள்ளத்தில் உள்ள உண்மை (மெய்ம்மை) நிகழ்ச்சி வெளியார்க்குத் தெரியும்படி வெளிப்படுதல் மெய்ப்பாடு எனச் சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.

தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய பேராசிரியர் என்பவர், “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல்” என மெய்ப்பாடு என்பதற்கு விளக்கம் அளித்துள்ளனர். இவரும் இவர் போன்ற சிலரும், ‘மெய்’ என்பதற்கு உடம்பு எனப் பொருள் கொள்ளாமல், உள்ளத்தில் நிகழும் உண்மை-மெய்ம்மை நிகழ்ச்சி என்ற மாதிரியில் பொருள் கொண்டுள்ளனர்.

மெய் என்பதற்கு உடம்பு எனப் பொருள் கோடலே பொருத்தமானது. ஒருவரால் உள்ளத்தில் உணரப்பட்ட நிகழ்ச்சி மெய்யில் அதாவது வெளி உடம்பில் வெளிப்பட்டுத் தெரிவதே மெய்ப்பாடு எனப் பொருள் கோடலே அமைவுடையதாகும்.

மெய் மயக்கம்

இலக்கணத்தில் மெய்யெழுத்துகளின் மயக்கம் பற்றி கூறுவது மெய்ம் மயக்கம் எனப்படும். இங்கே மயக்கம் என்பது கலத்தல் - கூடுதல் என்னும் பொருளது. இது இங்ஙனமாக, சிலர் மெய் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுவதில் மயக்கம் அடைந்துள்ளனர். மெய் என்றதும், அவர்கட்கு உண்மை என்னும் பொருள் வருகிறதே தவிர, உடம்பு என்னும் பொருள் வருவதில்லை.

உடம்பு மெய்யானது இல்லையாம் - பொய்யானதாம் - அழியக் கூடியதாம். விளக்கை அவித்தலை விளக்கைப் பெரிதாக்குதல் என்று கூறும் மங்கல வழக்குப்போல, பொய்யான உடம்பை மெய் என்று கூறுதல் ஒரு வகை மங்கல வழக்கு என்பர் சிலர்.

மற்றொரு சாரார் பின்வருமாறு கூறுகின்றனர்:- இந்த உடம்பு பொய்யானதாம். ஆனால், மெய்யான இறைவன் இந்த உடம்புக்குள்ளே இருப்பதால், உடம்பு தானி ஆகு பெயராய் ‘மெய்’ எனப்பட்டதாம்.

இவர்கள் அனைவரும் ஓர் உண்மையை மறந்துவிட்டனர். உடல் என்ற பெயரும் உடம்பு என்ற பெயரும் எவ்வாறு ஏற்பட்டதோ அவ்வாறே மெய் என்ற பெயரும் ஏற்பட்டது என்பதை அவர்கள் எண்ணினாரல்லர். உடல், உடம்பு என்னும் பெயர்கள் வந்ததற்கு இயல்பான காரணம் ஒன்றும் கூற முடியாதது போலவே, மெய் என்பதற்கும் இயல்பான காரணம் கூற முடியாது. பொய் - மெய் என்ற அடிப்படையில் வலிந்து செயற்கையான காரணமே கூற முடியும்.

ஓரிடத்தில் வாழ்ந்தவர்கள் உடல் என்றனர். இன்னோரிடத்தில் இருந்தவர்கள் உடம்பு என்றனர். வேறோரிடத்தில் வசித்தவர்கள் மெய் என்றனர். அனைவரும் பிற்காலத்தில் கலந்து கொண்டபோது, மூன்று சொற்களையும் ஒரே பொருள் உடையனவாய் அறிந்து ஏற்றுக்கொண்டனர். ஒரு பொருள் பல் பெயர்கள் ஏற்பட்ட வரலாறு இன்னதே.

இங்கே திருவள்ளுவரின் உதவியை நாடிப்பார்ப்போம். தன் எதிரே இருக்கும் பொருளை அவ்வாறே காட்டுகிற கண்ணாடியைப் போல், உள்ளத்தில் உள்ள உணர்வை அப்படியே முகம் அறிவிக்கும் என்னும் கருத்துடைய

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்”

என்னும் குறட்பா ஈண்டு எண்ணத்தது. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்னும் முதுமொழியின் கருத்தும் இன்னதே.

இங்கே முகம் என்பது மெய் (உடம்பின் பகுதி); நெஞ்சம் கடுத்தது (அகத்தின் அழகு) என்பது (மெய்யில் தெரியும்) பாடு ஆகும். படுவது பாடு, படுதல் = தோன்றுதல் – தெரிதல்.

எனவே, மெய்ப்பாடு என்பதற்கு இவ்வாறு பொருள் கொள்ளுதலே பொருத்தமானது.

மேலே தொடக்கத்தில் காட்டப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடலில், முதியவள் ஒருத்தியின் முதுமை காரணமாக அவள் உள்ளத்தில் எழுந்த இழிவுணர்ச்சி (தாழ்வு மனப்பான்மை) அவளுடைய உடல் - உறுப்புகளில் ஏற்பட்ட மாறுதல்களால் அறியப்பட்டதைக் கண்டோம். இந்த மெய்ப்பாட்டிற்கு, முதுமை காரணமாக வந்த ‘இளிவரல்’ என்று பெயராம். இளிவரல் என்றால் இழிவாம்.

மற்றும் அப்புறநானூற்றுப் பாடல்களால் வறுமை காரணமாக ஏற்பட்ட அழுகையை அறிந்தோம். இந்த மெய்ப்பாட்டிற்கு, வறுமை காரணமாக வந்த ‘அழுகை’ என்பது பெயர். இவ்வாறு பல மெய்ப்பாடுகள் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி அவை பற்றிக் காண்பாம்.

தொல்காப்பியர் பொருளதிகாரம் - செய்யுளியலின் முதல் நூற்பாவில், மெய்ப்பாடு செய்யுளின் உறுப்புகளுள் ஒன்றாகும் என்று கூறியுள்ளார். தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் மெய்ப்பாட்டை அறிமுகம் செய்துள்ள முறை திருத்தமாயில்லை. எடுத்த எடுப்பிலேயே,

“பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான்கு என்ப” (1)
“நாலிரண் டாகும் பாலுமா ருண்டே” (2)

என்று கூறியுள்ளார். முப்பத்திரண்டு (எண்ணான்கு) பொருளாம். அவை பதினாறிலும் (நானான்கு) அடங்குமாம். அந்தப் பதினாறும் எட்டில் (நாலிரண்டு) அடங்குவதும் உண்டாம்.

தொல்காப்பியர் இவ்வாறு கூறியிருப்பது, கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது. பஞ்ச பாண்டவர் எத்தனை பேர் என்பதை விளக்க வந்த ஒருவர், பஞ்ச பாண்டவர் கட்டில் காலைப் போல மூன்று பேர் என்று சொல்லி இரண்டு விரல்களைக் காட்டி ஒன்று என எழுதிப் பின் அதையும் அழித்து விட்டாராம். இந்த மாதிரியில், தொல்காப்பியர் முப்பத்திரண்டைப் பதினாறாக்கிப் பின் பதினாறை எட்டாக்கியுள்ளார். ஆனால் இதற்குங் கீழ்க் குறைக்கவில்லை. அடுத்து மூன்றாவது நூற்பாவில் எட்டு என்னென்ன என்று அறிவித்துள்ளார்.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”

என்பது நூற்பா. முப்பத்திர்ண்டு, பதினாறு என்று கூறிய இடங்களில் ‘மெய்ப்பாடு’ என்னும் சொல்லைப் பயன்படுத்தாமல், எட்டைக் கூறிய இடத்தில்தான் மெய்ப்பாடு என்னும் சொல்லை அறிமுகம் செய்துள்ளார். எட்டு இன்னது - இன்னது என எட்டுப் பெயர்களைக் கூறி விளக்கியவர், முப்பத்திரண்டு எது எது - பதினாறு எது எது எனப் பேச்சு - மூச்சு காட்டினாரிலர். அதனால், உரையாசிரியர்கள் மண்டையை உண்டத்துக் கொண்டு, முப்பத்திரண்டுக்கும், பதினாறுக்கும் குறிப்பாகப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளனர். இனி உரையாசிரியர்களின் வழி நின்று முப்பத்திரண்டையும் எட்டையும் காண்பாம்.

எட்டு வகை மெய்ப்பாடுகளுள் முதலில் கூறப்பட்டுள்ள ‘நகை’ என்பதை எடுத்துக் கொள்வோம். நகை என்றால் சிரிப்பு. (1) குழந்தை குழறிக் குழறிப் பேசுகிறது. (2) அதைக் காதால் கேட்கிறோம். (3) உள்ளத்தில் இன்ப உணர்ச்சிக் குறிப்பு தோன்றுகிறது. (4) அதனால் வாய் விட்டுச் சிரிக்கிறோம். இங்கே நகை என்னும் மெய்ப்பாடு தொடர்பாக நான்கு நிலைகளைக் காண்கிறோம். அதாவது: சிரிப்புக் காரணமான பொருள் அல்லது செயல் - அதைக் காணுதல் அல்லது கேட்டல் - அதனால் உள்ளத்தில் உண்டாகும் உணர்வு - அதனால் வெளியில், அதாவது உடம்பில் காணப்படும் மாற்றங்கள். இவ்வாறு எட்டு மெய்ப்பாடுகட்கும் நான்கு நான்கு வீதம் பெருக்கிப் பார்த்தால் (8x4=32) முப்பத்திரண்டு மெய்ப்பாடுகள் கிடைக்கின்றன. இந்தக் கணக்கு பேராசிரியரின் உரைவழிக் கிடைப்பதாகும்.

இளம்பூரணர் என்னும் தொல்காப்பிய உரையாசிரியரின் 32 என்னும் கணக்கு வேறு மாதிரியானது - மிகவும் எளியது. தொல்காப்பியர், நகை முதலாகிய மெய்ப்பாடுகள் எட்டும் நான்கு நிலைக்களன்கள் வழியாகத் தோன்றும் - அதாவது, ஒவ்வொன்றும் நான்கு நான்கு வகைப்படும் என்பதாக (8x4=32) முப்பத்திரண்டு கொண்ட பட்டியல் பின்னால் தந்துள்ளார். இளம்பூரணர் இந்த முப்பத்திரண்டை எடுத்துக் கொண்டுள்ளார்.

முப்பத்திரண்டு பதினாறாக ஆன விவரமாவது: குழந்தை குழறிப் பேசுதல் - அதைக் காதால் கேட்டல் என்னும் இரண்டையும் சிரிப்பின் காரணம் என ஒன்றாக்கிக் கொள்ளல் வேண்டும். அடுத்து, உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக் குறிப்பு - அதனால் வெளியில் உடம்பில் தோன்றும் மாற்றம் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கிக் கொள்ளல் வேண்டும். இவ்விதமாக நான்கை இரண்டாகச் சுருக்கினால், (8+2=16) பதினாறு என்ற பதில் கிடைக்கும்.

நகை என்னும் மெய்ப்பாடு தொடர்பாக நான்கு கூறுகள் கண்டோம். நான்கை இரண்டாக்கினோம். இரண்டை ‘நகை’ எனச் சுருக்கமாக ஒன்றாக்கினால், மெய்ப்பாடுகள் நகை முதலாக உவகை ஈறாக எட்டு வகைப்படும் என்ற முடிவு கிடைக்கும்.

இவ்வாறாக ஐம்பொறிகளால் பொருள்கள் அறியப்படுவதும் அதனால் உடம்பில் தோன்றும் குறிகளும் மெய்ப்பாடாகும் என்ற கருத்து மிகவும் எளிமையாகப் பெறப்படும். இதனால் தான், செய்யுளியலில், செய்யுளின் ஓர் உறுப்பாகிய மெய்ப்பாட்டை விளக்க வந்த தொல்காப்பியர்,

“உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளான்
மெய்ப்பா முடிப்பது மெய்ப்பாடாகும்”(204)
“எண்வகை இயல்நெறி பிழையா தாகி
முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே” (205)

எனக் கூறிப் போந்தார்.

பண்ணை

மெய்ப்பாட்டியலின் முதல் நூற்பாவிலேயே, மெய்ப்பாட்டை அறிமுகம் செய்யத் தொடங்கிய ஆசிரியர் தொல்காப்பியர், இந்த மெய்ப்பாடுகள் பண்ணையில் தோன்றுவன என்னும் பொருளில்,

“பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப”

என்று கூறியுள்ளார். பண்ணை என்பதற்குப் பேராசிரியர் தரும் விளக்கமாவது:- “முடியாடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலானோர், நாடக மகளிரின் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டு” என்பது. இதற்கு இளம்பூரணர் தரும் பொருளாவது: “விளையாட்டு ஆயம்” என்பதாகும். இதற்குத் தொல்காப்பியர் கூறியுள்ள பொருள் விளையாட்டு என்பது.

“கெடவரல், பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு” (22)

என்பது, தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - உரியியல் நூற்பா. கெடவரல் என்பது ஒருவகை விளையாட்டு. பண்ணை என்பது ஒருவகை விளையாட்டு.

பண்ணை என்பது ஒரு விளையாட்டு எனச் சொல்லதிகாரம் - உரியியலில் கூறிய தொல்காப்பியர் அடுத்த பொருளதிகார - மெய்ப்பாட்டியலில், பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்” என மெய்ப்பாடுகள் பண்ணையில் தோன்றுவதாகக் கூறியிருப்பது குழப்பமும் வியப்புமாயுள்ளது. இதனினும் ‘விளையாட்டு ஆயம்’ (விளையாடும் கூட்டம்) என இளம்பூரணர் கூறியிருப்பது ஓரளவு நன்று. இதனினும், ‘நாடக மகளிரின் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டு’ எனப் பேராசிரியர் கூறியிருப்பது மிகவும் நன்று.

இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியதாவது: பலர் கூடி ஆடலும் பாடலும் செய்யும் நிகழ்ச்சியும் தொல்காப்பியர் காலத்தில் ‘விளையாட்டு’ எனப் பெயர் வழங்கப்பட்டது என்பதாகும். மேலும் அறியவேண்டியது: பலர் கூடி ஆடல் பாடலுடன் நடத்தும் நாடகத்தில் இந்த எட்டு மெய்ப்பாட்டுப் பண்புகளையும் காணலாம் என்பதாகும்.

ஆடல் = கூத்தாகிய நாடகத் தமிழ். பாடல் இசைத்தமிழ். கூத்தைக் காணும்போதும் இசையைக் கேட்கும் போதும் எட்டு மெய்ப்பாடுகளின் சுவடுகளை அறியலாம்.

ஒரு நாள் ஒரு திரையோவியம் (சினிமா) பார்த்துக் கொண்டிருந்தபோது, கதைத் தலைவனும் (Hero) வில்லனும் போரிடும் காட்சி நடந்துாெண்டிருந்தது. வெற்றியும் தோல்வியும் மாறி மாறித் தாவியும் ஊசலாடிக் கொண்டும் இருந்தன. ஒரு நேரம், வில்லன் கதைத் தலைவனைக் கொன்று விடுவான் போன்ற கட்டம் வந்தது. அப்போது பெண்கள் பகுதியிலிருந்து, வில்லனைக் குறிப்பிட்டு ‘அவனை விளக்குமாற்றால் அடியுங்கடி - அவனைப் பழந்துடைப்பக் கட்டையால் அடியுங்கடி’ என்ற குரல்கள் எழுந்தன. பெண்டிர் சிலர் இவ்வாறு குரல் எழுப்பினர்.

இதிலிருந்து அறிவதாவது:- மெய்ப்பாடு நடிகர்களிடமிருந்து காட்சியைக் காண்பவர்களிடமும் ஏற்பட்டுவிட்டது என்பதாம். இத்தகைய ஒன்றிய மெய்ப்பாட்டு நிலைமைக்குத் தான் ‘ஒத்துணர்ச்சி’ (Sympathy) என்னும் பெயர் உளவியலில் தரப்பட்டுள்ளது.

சாவு வீட்டிற்குச் சென்றவர்கள் வீட்டினரின் துயரத்தைக் கண்டு தாமும் துயரப்படுவது உடல் உறுப்புகளால் துயரத்தை வெளிப்படுத்துவது ஒரு வகை மெய்ப்பாடு தான். ஆனால் இதை ஒரு கலை என்று கூறவியலாது. நாடகம் காண்பவர்களும் தமது உணர்வை ஒத்துப் பெறுமாறு நடிகர்கள் நடிக்கும் நடிப்பினை மெய்ப்பாட்டுக் கலை எனலாம். இதுபோலவே, நூலாசிரியர்கள், நூலில் கருத்தை அறிவிக்கும் கவர்ச்சியான முறையினால், நூலைப் படிப்பவர்கள் ஒத்துணர்ச்சி பெறுமாறு எழுதுவதும் மெய்ப்பாட்டுக் கலை எனப்படும்.

கூட்டம் என்னும் பொருளும் உடைய பண்ணையில் தோன்றிய எண்ணான்கு பொருள் எனத் தொல்காப்பியர் கூறியிருப்பதால், நாடகத்தின் உயிர் நாடி மெய்ப்பாடு எனக் கூறலாம். தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் ‘இவற்றின் பிரிவை நாடக நூலில் காண்க’ என்று கூறியுள்ளார். உரையாசிரியர்கள் இருவரும் செயிற்றியனார் இயற்றிய செயிற்றியம் என்னும் நாடக நூற் செய்திகள் சிலவற்றைத் தம் உரையிடையே அறிவித்துள்ளனர்:

மெய்ப்பாடு இரண்டு நிலைக்களங்களின் அடிப்படையில் தோன்றும். காட்டாக அச்சம் என்ற மெய்ப்பாட்டை எடுத்துக் கொள்ளலாம். அஞ்சுதற்கு உரிய புலி போன்றவை ஒரு நிலைக்களன். அவற்றைக் கண்டு அஞ்சுபவர் மற்றொரு நிலைக்களன். இதனை அறிவிக்கும் செயிற்றிய நூற்பா,

“இருவகை நிலத்தின் இயல்வது சுவையே”

என்பது. செயிற்றியனார் ‘சுவை’ என்று கூறியிருப்பது ஒருவகை மிரட்சியைத் தருகிறது. அஃதாவது:- சுவை என்பது, வடமொழியில் உள்ள ‘ரசம்’ என்னும் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். நவரசம் என்னும் வடமொழிச் சொல்லாட்சிதான் ஒன்பது சுவை எனப்படுகிறது. நவரசங்களுள் ஒன்றாகிய சாந்தம் (அமைதி, நடுநிலை) என்பதில் உடலில் எந்த மாற்றமும் இல்லையாதலின் அதை நீக்கி மெய்ப்பாடு எட்டு எனப்பட்டது - எனச் சிலர் கூறுகின்றனர்.

அதாவது, மெய்ப்பாடுகள் எட்டும் வடமொழியிலிருந்து தொல்காப்பியரால் எடுத்து அறிவிக்கப்பட்டதாக அன்னாரால் கூறப்படுகிறது. இக்கருத்தைத் தமிழ் அறிஞர்கள் . சிலர் மறுத்து, தமிழிலிருந்து (சுவை) ரசம் என்னும் பெயரில் மெய்ப்பாடுகள் வடமொழியில் அறிமுகப் படுத்தப்பட்டன எனத் தக்க சான்றுகள் காட்டி நிறுவுகின்றனர். மற்றும், தொல்காப்பியருக்கு முன்பே, தமிழில் மெய்ப்பாடு பற்றிக் கூறும் நூல்கள் இருந்தன என்பதை,

“பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான்கு என்ப்”

என்னும் நூற்பாவில், ‘என்று கூறுவர்’ என்னும் பொருள் உடைய ‘என்ப’ என்னும் சொல் அறிவிக்கும். மெய்ப் பாட்டின் சுருக்கமான அறிமுகம் இந்தக் கட்டுரை.

***