உள்ளடக்கத்துக்குச் செல்

இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/அன்பிற்குக் காத்திருத்தல்

விக்கிமூலம் இலிருந்து



அன்பிற்குக் காத்திருத்தல்


மாலை நேரம் என்னை அழைக்கிறது. கொந்தளிக்கும் கடலில் இருளைக் கிழித்துக் கொண்டு செல்லும் கடைசிப் படகில் அமர்ந்திருக்கிற பயணிகளை மகிழ்ச்சியுடன் பின் தொடர்ந்து செல்வேன்.

அவர்களில் சிலர் வீடு நோக்கி திரும்புகிறவர்கள்; வேறு சிலர் நெடுந்தூரத்தில் தென்படும் கரையை நோக்கிச் செல்பவர்கள். ஆயினும் அனைவருமே கடலில் செல்லத் துணிந்து விட்டவர்கள்.

வீட்டை விட்டுக் கிளம்பிப், படகையும் தவறவிட்ட நானோ தனிமையில் கரையோரம் அமர்ந்திருக்கிறேன்.

தோல்விகளை வாரியெடுத்துக் கொண்டு, பகல் விடியும் பொழுது பலனளிப்பதற்காக இருளில் கண்ணீரும் கம்பலையுமாக இருளில் ஊன்றுவதற்காகச் செல்லும் அந்த அன்பிற்காகக் காத்திருக்கிறேன்.

எவனொருவன் தன் வாயிற் கதவை திறந்து வைத்து முன்னடி எடுத்து வைக்கிறானோ, அவன் வாழ்த்துகளைப் பெறுகிறான்.

-க.கொ

மயக்கமும் துயரமும் ஆட்சி செலுத்தாத ஒரு நிலப் பகுதியுள்ளது. இறப்பின் பேரச்சம் அங்கு அறவே கிடையாது. -க.பா


நற்பண்பும், நேயமும் எல்லையற்றவை. எல்லையற்ற பெரும் பரப்பில்தான் விடுதலையைப் பற்றிய முழு அறிவு கிட்டுகிறது. -சா

இரவின் மடியில் கமுக்கமான ஒரு மகிழ்ச்சி உள்ளது. என் நெஞ்சத்தில் அதை நிரப்பிக் கொண்டு, நாளெல்லாம் அதைச் சுமந்து செல்லவிடு. -எ

இறைவனைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.நீங்கள் எனது தந்தை என்பதை மட்டும் நானறிவேன். -ஆ

நண்பனே, வேனிற் காலத்தின் முதல் தென்றலாக நீ என்னிடம் வந்துள்ளாய். -ஈ

உலகத்தில் சிறந்தவற்றில் என் பங்கு உன் மூலமாகவே எனக்குக் கிடைக்கப் போகிறதென்பதை நான் அறிவேன்.

-க.கொ

அடிவானம் அத்தனையையும் திறந்து வைக்கிறது ஓர் உண்மை. எல்லையற்ற பரப்புக்கு அது நம்மை வழிநடத்திச் செல்கிறது. -சா

தன்னில் ஒரு பகுதியை காதலன் காதலியிடம் தேடுகிறான். -சா

தனித்து நிற்கும் பனிப் பகுதியிலிருந்து வெளியேறும் பறவைகளைப்போல், உனது பாடல்கள் இன்பமான சித்திரை மாதத்தில் தங்களுடைய கூடுகளை என் நெஞ்சத்தில் கட்டிடத் துடிக்கின்றன. மகிழ்ச்சியான அந்த வருங்காலத்திற்காக நான் காத்துதிருக்கிறேன். -க.கொ

ஒளியிழந்து கொண்டிருக்கும் பகல் பொழுதை இரவு முத்தமிட்டு அதன் காதுகளில் கிசுகிசுக்கிறது : "நான்தான் சாக்காடு உனது தாய், உனக்கு புதுப்பிறவி அளிக்க வேண்டியவன் நான்!” -ப.ப

படைக்கிறவன் என்கிற முறையில், மனிதன் எப்பொழுதும் வகை வகையான உருவங்களை உருவாக்குகிறான். அவனது துள்ளித் ததும்பும் மகிழ்ச்சியிலிருந்து அவை வெளிப்படுகின்றன.

-சா

இறைவனே, என் தந்தையே, என்னிடமிருந்து பாவ மூட்டைகளை அகற்றிவிடு. -ஆ

நமது நெஞ்சத்தில் அன்பு சுரக்கும்போது, சிறிய தொரு பரிசு கூட நமக்கு முழு நிறைவளிக்கிறது.

-சா

எனக்கு வழிகாட்டியாக இருப்பதற்காகச் சாலை ஓரத்தில் காத்திருக்கும் உன்னை எங்கே தவறவிட்டு விடுவேனோ என்ற அச்சம் என்னை மற்றவர்களால் நடத்திச் செல்லப்படுவதிலிருந்து தடுத்து நிறுத்துகிறது. -க.கொ

சட்டதிட்டங்களிலிருந்து அன்பு வழிக்குக் கட்டுப்பாடிலிருந்து விடுதலைக்கு, அறநெறியிலிருந்து ஆன்மிக வழியில் மாந்த உள்ளுயிர் உலவிக் கொண்டிருக்கிறது. -சா

உணரக் கூடியதாக, தனக்குரியதாக, மாந்தத் தன்மை பொருந்தியதாக ஏதாவதொன்று எங்கெங்கெல்லாம் தென்படுகிறதோ, அங்கெங்கெல்லாம் பெண்ணின் உலகம் உள்ளது. -ஆ

நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரே பொருள் அன்பு தான். -சா

சம்மட்டி அடியன்று, தண்ணீரின் அலைப்பில் பிறக்கும் நாட்டியம்தான் கூழாங்கற்களுக்கு முழுமை அளிக்கிறது. -ப.ப

இரவு கலைந்திடும், இருட்டு மறைந்திடும். நம்பிக்கையுடனிரு: மனவுறுதியுடனிரு. -சா

துயர மொழிகளையும், மகிழ்ச்சி வாக்குகளையும் கொண்டு வருபவன் என் தலைவனே. இவற்றிடையே தோன்றும் பிணக்குகளையும் அவனே தீர்த்து வைக்கிறான். -க.பா

தனக்கென்று ஒவ்வொன்றையும் பெற்றுக் கொள்வதில் இல்லை மாந்தனின் நிலையான மகிழ்ச்சி. தன்னைக் காட்டிலும் மேம்பட்டவனிடம் தன்னையே அளித்து விடுதலில்தான் அந்த மகிழ்ச்சி கிடைக்கிறது. -சா

முழு உண்மையையும் வெளியிட நீ தயங்குகிற பொழுது, வெளிப்படையாகயிருப்பது எளிதுதான். -ப.ப

உறக்கத்திலிருந்து விழித்தெழு கலக்கத்திலிருந்து விடுபட்டுப் புதுவிடியலின் ஒளியைப் பாடலுடன் அடைந்திடு. -சா

ஊதாரித்தனமான வெளிப்பாடாக உனது அன்பை ஆக்கிவிடாதே. உண்மை இருக்கட்டும் அதில். ஏனெனில் உண்மை எளிமையாக இருக்க முடியும்.

-ஈ

மழைக்கால இந்த மாலைப் பொழுதில், காற்று அமைதியற்று இருக்கிறது.

அசைந்தாடும் மரக்கிளைகளைக் கவனிக்கிறேன்; அனைத்துப் பொருள்களின் உயர்வையும் எண்ணிப் பார்க்கிறேன். -ப.ப

எல்லாவற்றிற்கும் மேல் நெஞ்சத்தில் நான் எண்ணி மகிழ்வதொன்று உண்டு. இவ்வுலகில் எல்லையற்ற காலம் என்னை வாழவைக்கப் போகும் அன்பைப் பற்றிய எண்ணம் தான் அது. -க.பா

உலகின் வளங்கள் யாவற்றையும் பயன்படுத்தி விட வேண்டும் என்பதிலேயே நம் எண்ணம் முழுவதும் ஒன்றி விடுகிற நிலையில், உண்மையான மதிப்பை அது இழந்து விடுகிறது. -சா

மாந்தனின் அளவற்ற மதிப்பை நமது ஆன்மிக ஆசான்கள் அனைவரும் அழுத்தமாகவே அறிவித்திருக்கிறார்கள். -ஆ

நாம் அறிந்து கொள்ள வேண்டியவற்றிலிருந்து நம்மைத் தனித்து நிறுத்துகிறது அறிவு. ஒருமித்து வாழ்வ திலிருந்து தனது குறிக்கோளை எட்டுகிறது அன்பு. -சா

குடும்பம் சார்ந்த நிலை, வாழ்க்கையின் இதர அலுவல்கள் என்று எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி உலகம் என்பது பெண்களின் உலகம் மட்டும்தான். -ஆ

மாலைப் பொழுதின் நிழல்கள் அழுத்தமாகவும், ஆழமாகவும் விழுகின்றன.

மேற்கு முகத்திற்கு உன் சாரளத்தைத் திறந்து அன்புக் கடலின் ஆழத்தில் ஆழ்ந்து போ. -க.பா

கடல்ச் சுற்றி சுழல்வது இங்கே. நாம் அடைய வேண்டிய மறு கரையும் இங்கே தான் - ஆம், நின்று நிலைத்திருக்கும் நிகழ்காலம், தூரத்தில் உள்ள எதுவுமில்லை- உள்ளது. -சா

மலரிதழின் முனையில் படிந்திருக்கும் பனித்துளி போல், உன் கண் இமைகளில் மகிழ்ச்சி தரும் நாணம் படிந்துள்ளது. -ஈ

உருவமில்லாத மகிழ்ச்சிப் படைப்பில் ஈடுபட வேண்டும்; உருவத்தை உருவாக்க வேண்டும்.

-சா

எண்ணற்ற விண்மீன்களில் ஏதோவொன்று முன்பின் அறியா இருளினூடே வாழ்க்கையில் வழிநடத்திச் செல்ல உள்ளது என நான் எண்ணுகிறேன். -ப.ப

அடைய வேண்டுமென்ற எண்ணமொன்றே அடைந்து விட்ட பொருள்களைவிட நம்மை உயர்த்துகிறது என்பதை அறிந்து கொள்கிறோம். -சா

பெண்ணே, உன் மென்மையான விரல்களினால் என் உடமைகளைத் தொட்டிட்டாய். இசை போன்று உன் கட்டளை பிறந்தது. -ப.ப

ஆழமான நமது அன்பில், அடைதலும், அடையாமலிருத்தலும் சமச்சீரிலேயே இழையோடிச் செல்கின்றன. -சா

நீ என் நெஞ்சத்தைக் கவர்ந்துவிட்டாய். என் நெஞ்சமும் தனது தலைசிறந்த செல்வத்தை உனக்கு வாரி வழங்க அணிமாக உள்ளது. -ஈ

தன் வாழ்வு எப்பொழுது முழுமை பெறுகிறது என்பது பற்றி மனிதன் உணர வேண்டும். எல்லையற்ற பரப்பில் தன் நிலைமை உண்ர வேண்டும்.

- -சா


பொருளற்ற சொற்களின் தூசி உன்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

அமைதியில் உன் உள்ளுயிரைத் தூய்மைப் படுத்திவிடு. - -ப.ப


நடப்பவை யாவற்றையும் உண்மையாக்குவது நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மெய்மை ஒன்றே. - -சா

மெல்லிதாக ஒளி சிந்தும் இலைகளுடன் என் எண்ணங்களும் மங்கிய ஒளி வீசுகின்றன; இந்த ஒளி படுவதால் என் நெஞ்சம் இசை பாடுகிறது; வான வெளியின் நீல நிறத்தினுடே காலத்தின் இருண்மைக்குள் அனைத்துப் பொருள்களுடன் மிதந்து கொண்டிருப்பதில் என் வாழ்க்கை மகிழ்ச்சியடைகிறது. - -ப.ப


அழியாவரம் பெற்ற தான், தனது ஆன்மாவைக் கண்டறிய முன்பின் தெரியாத இலக்கை நோக்கி மாந்தன் மேற் கொள்ளும் பயணத்தின் வரலாறுதான் மாந்தனின் வரலாறு. - -சா

நமது முழுமையில் நாம் மகிழ்ச்சியடையும் போது, பயன்களை மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுப்பதும் இயல்பு தான்.

-ப.ப

இரவு இருமையாலே சூழப்பட்டிருக்கிறது, எனது அமைதி போல் உனது உறக்கமும் ஆழமானது. ஓ, காதலின் நோக்காடே, விழித்தெழு, காரணம் வாயிலைத் திறந்துவிட எனக்குத் தெரியவில்லை.

-க.கொ

மன உறுதிக்குச் சிறந்த பயன்தான் கிடைக்கிறது. ஆனால் அது கிட்டுவது கட்டுப்பாடு நிறைந்த உலகத்தில்லை, விடுதலை தவழ்ந்திடும் உலகத்தில்தான்.

-ஆ

உன் முகத்தைக் கண்டேன் என்று உணர்ந்தேன்; இருளில் எனது படகைச் செலுத்தினேன்.

--குறு

காதலே துன்பமாகிற எரியும் விளக்கை நீ கையி லெடுத்து வரும்பொழுது நான் உனது முகத்தைக் காண முடிகிறது. மகிழ்ச்சியின் உருவமே நீதான் என்று உணர்கிறேன்.

-ப.ப

விண்ணில் பறவைக் க்கூட்டங்கள்போல் என் மனத்தில் எண்ணங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் சிறகடிப்பு ஓசையை நான் கேட்கிறேன்.

- -ப.ப

வழிப்போக்கனே, துணைப் பயணியின் வாழ்த்துகள் உனக்கு இதோ. - -குறு

சேர்த்துக் கொண்டே போவது என்பது கைகூடுதல் அன்று என்பதை மாந்தன் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளொளிதான் அவனை உலகிற்கு அடையாளம் காட்டுகிறதே அல்லாமல் வெளித் தோற்றங்கள் அல்ல. - -சா

தனது நோவினால் ஏன் ஆன்மாவை முத்தமிடுகிறது உலகம். அதற்கு மாற்றாக எனது பாடல்களைக் கேட்கிறது அது. - -ப.ப

வையகத் தலைவன் தனது அரியணையின் நிழலைப் பரப்பாமல் விட்டு வைத்திருப்பது மாந்தனின் தான் என்ற நிலையைத்தான். அதற்கு உரிமை அளித்திருக்கிறான் அவன். - -சா

நெஞ்சமாகிய என் பாத்திரத்தை இந்த அமைதியான நேரத்தில் முக்கியிருக்கிறேன்; அன்பினால் அது தன்னை நிறைத்துக் கொண்டுள்ளது.

- -ப.ப

தொலைவிலுள்ள குன்றுகளிடையே தங்களை மறைத்துக் கொண்டு ஆற்றின் நீரை நிரப்புகின்றன முகில்கள். - -ப.ப

விளக்குகளைத் தனித்திருக்கும் இரவின் விளக்குகளை, என் நெஞ்சமே, அணைத்துவிடு.உனது கதவுகளைத் திறந்து வைக்க ஆணை வருகிறது. ஏனெனில் பகலின் வெளிச்சம் எங்கேயோ இருக்கிறது. - -எ

அளவிட இயலாத உன் தனிமையினுடே உன்னை அழைத்திடும் காதலனிடம் உன் நெஞ்சத்தைத் தொலைத்து விட்டாயா? - -நா

விழித்தெழு, அன்பே, விழித்தெழு. என் வெறும் கிண்ணியை நிறைத்திடு; உன் இசையின் மூச்சுக் காற்றினால் இரவைக் கலக்கிடு. - -க.கொ

பல்வேறு உருவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இறைவனே மகிழ்ச்சியின் எதிரொளி.

உலகம் உருவானது அவனுடைய இச்சையினால் தான். - ஆ

இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றப் படுவதிலில்லை மனிதனின் விடுதலை. தனது நன்மைக்காக தான் எடுப்பதற்காான முயற்சியில்தான் உள்ளது அது. - சா

என் வழியே நான் நடந்து செல்லும் பாதையில் என் தண்ணிச் சாடியிலிருந்து நீரைத் தெளிக்கிறேன்.

என் வீட்டிற்கு நான் எடுத்துச் செல்லும் நீர் மிகச் சிறிதே. - ப.ப

நிகரற்றதில் முழுமை பெறுவதைத் தேடி அலைகிறது பொதுத்தன்மை. - சா

உனது வயல்களில் பூத்த மலர்கள்தான் உனது புன்னகை. உனக்கு உரிமையான மலைகளில் வளரும் பைன் மரங்களின் சலசலப்பே உனது பேச்சு. ஆனால் உனது நெஞ்சமோ நாம் யாவரும் தெரிந்து வைத்துள்ள பெண்ணே. - ப.ப

விண்ணின் முகத்தை இவ் உலகிற்குக் கொண்டு வந்த சிறப்புப் பெற்ற கள்ளங்படமற்ற இந்த வெள்ளை உள்ளத்தை, மாசு மறுவற்ற இந்தச் சின்னஞ்சிறு உயிரை, வாழ்த்துவாயாக!

- வ.பி


நம்மிடம் புதைந்துள்ள எல்லையற்றதாகிற மகிழ்ச்சியே நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. - சா

ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்கிறது செங்கதிர் வெளிச்சம்.

அதன் சேர்ந்த உடன் பிறந்தாளான மழையோ என் நெஞ்சத்தினிடம் பேசுகிறது. - ப.ப

அவனைக் கூடுவேன் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன். - க.பா

பகலில் பூத்த எனது மலர் மறக்கப்படும் தன் எழில் இதழ்களை உதிர்க்கிறது.

மாலை நேரத்தில் அது நினைவாகிற பொன் மயமான கனியாகப் பழுக்கிறது. - ப.ப

இரவின் மடியில் ஒரு கமுக்கமான மகிழ்ச்சி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியால் என் நெஞ்சை நிரப்பிக் கொள்கிறேன்; நான் முழுவதும் அதை எடுத்துச் செல்கிறேன்.

-எ

நினைவுகளின் அடியோசைகளை அமைதியுடன் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கும் இரவின் சாலையைப் போன்றவன் நான்.

-ப.ப

ஆழங்காண முடியாத கடலின் நெஞ்சத்திலிருந்து வெளிப்படுகிறது பொன்மயமான குரலொன்று. கண்ணீர் புகை மூட்டத்தினூடே உன் முகம் காண முயல்கிறேன் நான்.

-ப.ப

என் தலைவனின் அரசவையில் உண்மையின் ஒளி மட்டுமே சுடர் வீசுகிறது.

-க.பா

என்னைப் பொறுத்தவரை, மாலை வானம் ஒரு சாளரம், ஏற்றிய விளக்கு, அதன் பின்னே ஒரு காத்திருப்பு.

-ப.ப